அத்தியாயம் 14

வலீமா விருந்தை ஊரிலுள்ள ஒரு மண்டபத்தை ஏற்பாடு செய்து இருதரப்பு சொந்தபந்தங்களையும் அழைத்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார் நவ்பர் பாய்.

இன்று வெள்ளை நிறத்தில் பூ வேலைப்பாடுகளோடு முத்துக்களும், கற்களும் பதிந்த நீண்ட கவுனைதான் ஷஹீ அணிவதாக இருக்கிறாள். காலையிலையே குளித்து விட்டு முடியை உலர்த்திக் கொண்டவள் பாலர் பெண்களின் வசமாக அவள் சிந்தனையில் நேற்று நடந்த சம்பவங்களும் நிழலாடியது.

     

வெளியே ரஹ்மானுக்கு ராகிங் நடந்து கொண்டிருக்கும் பொழுது ரஹ்மானின் அறைக்கு அழைத்து வரப்பட்டாள் ஷஹீ. ரஹ்மானின் அறை அவள் நினைத்ததை விட கொஞ்சம் பெரியதாகத்தான் இருந்தது.

சந்திரமுகி படத்துல வர்ற மாதிரியே ஒரு பெரிய கட்டில். பெரிய பலகையிலான அலுமாரி. முகம் பார்க்கும் கண்ணாடி கூட நிலைக் கண்ணாடியாக தரையை தொட்டுக்கொண்டிருந்தது. அதன் முன்னால் அமர்வதற்காக ஒரு பென்ச். அதுவும் புதிதாக இருந்தது. துணிகளை மாட்ட ஒரு ரேக். புதிதாக ஒரு கதிரையும், மேசையும் படிப்பதற்காக போடப்பட்டிருந்தது. மேசையில் மூடி போட்டு மூடக்கூடிய பிளாஸ்டிக் தட்டில் பழங்கள். அந்த அறைக்கு பொருத்தமே இல்லாமல் ஒரு இரும்பு பீரோ. அவ்வளவுதான் அந்த அறையில் இருந்த பொருட்கள். அட்டாச்சு பாத்ரூம் புதுசா கட்டினார்களாம் ஹாஜரா சொன்னாள். அறை பெரிதாக ஒன்றும் அலங்கரிக்கப்பட்டிருக்கவில்லை கட்டில்ல மட்டும் பூ தூவப்பட்டிருந்தது.

அவளுடைய அலங்காரங்களை கலைக்க உதவிய ஹனாவும், ஹாஜராவும் ஷஹீ குளித்து விட்டு வரும்வரை ரஹ்மானுக்கு நடக்கும் சிறப்பு பூஜையை பார்வையிட சென்றார்கள்.

வாசல் முற்றத்தில் இளசுகள் மாத்திரம்தான். பெரியவர்கள் அனைவரும் பின் முற்றத்தில் நாளை சாப்பாட்டுக்கான உணவுகளை தயார் செய்வதையும், அதை பற்றிய பேச்சு வார்த்தையிலும் இருந்தனர். இளசுகளோடு ஒன்றாமல் தனியாக இருந்தது முபாரக் மட்டும்தான். அவன் வாசல் கதவோடு நின்றிருக்க வராந்தாவில் ஜன்னலிலிருந்து பெண்கள் வெளியே நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தனர்.

அவன் பார்வை அடிக்கடி ஹானாவை தொட்டு மீள, ஹாஜரா அவனை முறைத்துக்கொண்டிருந்தாள். ஆனால் ஹானாவின் பார்வையோ அவன் புறம் திரும்பவே இல்லை. கொஞ்சம் குழம்பிய முபாரக் தன்னோடு பேசியது ஹனாவா என்று கண்டு பிடிக்க என்ன செய்யலாம் என்ற யோசனையில் விழுந்திருந்தான்.

முபாரக் அடிக்கடி ஹானாவை பார்ப்பதை பொறுக்க முடியாமல் அவனருகில் வந்த ஹாஜரா “கூல் ட்ரிங்க்ஸ் சாப்பிடுறீங்களா?” என இன்முகமாக கேட்டாள்.

முபாரக் கதவோடு நின்றிருக்க உட்பக்கமாக நிற்பதால் ஹாஜாராவை வெளியே இருந்தவர்களின் கண்களுக்கு தெரியவுமில்லை. உள்ளே இருந்தவர்களின் கவனத்தை இவர்கள் கவரவுமில்லை.

அவளின் முகத்தை கூட பாராமல் அதை வாங்கிக் கொண்டவன் ஒரு மிடர் குடிக்க எரிச்சலில் கண்கள் சிவந்து,  தொண்டை எரிய இருமலானான். அன்னாசி பழச்சாற்றில் மிளகாய் பொடியை அள்ளிப் போட்டு கொடுத்திருந்தாள் ஹாஜரா.

அவளை நன்றாக முறைத்தவன் கிளாஸை அவள் கையிலையே கொடுக்க “ஐயோ என்னங்க ஆச்சு? இப்படி கத்துறீங்க ஐஸ்கட்டி ரொம்ப போட்டு குளிர் ஜாஸ்தியாகி பல்லு கூசிருச்சா?” கோர்வையாக சொல்லி நக்கலடித்தவள் பொய்யாய் அனுதாப்பட முதல் முறையாக அவளின் முகபாவங்களை ரசிக்க ஆரம்பித்தவன் தலையை உலுக்கிக் கொண்டு வெளியே சென்று தண்ணீர் பருக்கலானான்.

“இந்த வீட்டுக்கு வந்தா ஒன்னு உப்பு போட்ட டீ. இல்ல காபி சாப்ட்டா லூஸ்மோசனாகிடுது. மொளகா பொடி கூல் ட்ரிங்க்ஸ். என் மச்சானுக்கு ராகிங் பண்ணாலும் பண்ணாங்க அவன் அனுபவிக்க வேண்டியதெல்லாம் என் தலையில் வந்து விடியாது” அப்பொழுது கூட ஹாஜராவின் மேல் சந்தேகம் கொள்ளாது முணுமுணுத்தான் முபாரக்.

“சைட்டா அடிக்கிற சைட்டு மகனே! கண்ணை நொண்டி புடுவேன். திரும்ப யாரையாவது பாக்குறத கண்டா அடுத்து என்ன போட்டு கொடுப்பேன்னு எனக்கே தெரியாது” கருவிய ஹாஜரா உள்ளே சென்றாள்.

ராகிங் எல்லாம் முடிந்த பின் வெளியே இருந்த டப்பில் குளித்த ரஹ்மான் பாஷித் கொடுத்த வெள்ளை லுங்கியையும், டீஷர்ட்டையும் அணிந்து கொண்டவன் உள்ளே வர அக்பர் குடும்பத்தோடு பேகம், மற்றும் முபாரக் அவனிடம் விடை பெற்று செல்ல காத்திருக்க, அக்பருக்கு, முபாரக்குக்கும் ஸலாம் கொடுத்தவன் விடை கொடுத்தான்.

அவனது அறையில் அவன் பானு. என் பானு, என் பானு என்று ஒரு நாள் கூட சொல்ல மறந்திருக்க மாட்டான் இன்று உண்மையிலயே அவன் பானு அவனிடம் வந்து சேர்ந்து விட்டாள். அறையினுள் செல்வதா? வேண்டாமா? என்று ஒரு தடுமாற்றம். சுடிதாரில்லையே அவளை பார்த்து பழகிய கண்கள் இன்று அவளை முதன் முறையாக நைட்டியில் பார்க்க போவதை மூளை நிஜாபகப்படுத்தி இருக்க, இதழோரம் மலர்ந்த மெல்லிய புன்னகையை கஷ்டப்பட்டு மறைத்தவன் அமைத்தியாக அமர்ந்திருந்தான்.

அறையினுள் ஹனா,ஜமீலா, ஹாஜரா பேசுவது கேட்டது. மூவரும் வெளியே வருவது போல் தெரியவில்லை. டிவியின் ரிமோட்டை கையில் எடுத்தவன் ஏதோ ஒரு சேனலை வைக்க மணி பன்னிரண்டை தொட்டிருந்த வேளை  கருப்பு வெள்ளையில் சிவாஜியும், சரோஜாதேவியும் காதல் கீதம் பாடிக்கொண்டிருந்தனர்.

அது வேறு அவனின் கற்பனையை தட்டி எழுப்ப, பானுவோடு டூயட் பாடிக்கொண்டிருந்தவனை ஷம்ஷாத் அழைத்து அறைக்கு செல்லுமாறு கூற பெண்கள் மூவரும் அறையிலிருந்து வெளியே வருவது கூட தெரியாமல் டூயட் பாடியத்தில் அசடு வழிந்தவன் மாமியின் கன்னங்களை கிள்ளி விட்டு கொஞ்சியவாறே அறையினுள் நுழைந்தான்.

தன்னுடைய அறை என்பதால் கதவை தட்டிக்கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணமெல்லாம் வரவில்லை. பட்டென்று உள்ளே நுழைந்தவன். சட்டென்று கதவை சாத்தி தாழ்பாளிட அவனைக் கண்ட அதிர்ச்சியில் நிலை கண்ணாடியின் முன் அமர்ந்திருந் ஷஹீ எழுந்தவாறே பேந்த பேந்த முழிக்கலானாள்.

கதவில் சாய்ந்து, கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு அவளைத்தான் ஆழந்து நோக்கினான் ரஹ்மான். நீண்ட பாவாடையும், பிளவுசும், அதுக்கும் மேட்சிங்காக துட்டாவும் போட்டிருந்தவள் இரவில் பூத்த பலர் போல  குளித்து விட்டு ப்ரெஷ்சாக இருந்தாள். கூந்தலை ஒழுங்காக துவட்டவில்லை போலும் நீர் சொட்டிக்கொண்டிருந்தது. மயில் தோகை போல் நீண்டு விரிந்த கூந்தல் எங்கே மறைத்து வைத்திருந்தாள்? ஆனால் முகத்தில் தான் பயம் அப்பட்டமாக தெரிந்தது. கோழி குண்டு கண்களை உருட்டியவாறே அவனை மருண்ட பார்வை பார்த்தவளை காணும் பொழுது வாய் விட்டு சிரிக்க தோன்ற வாய் மூடி சிரித்தான்.

“நீ கற்பனையில் மிதந்து வந்தா, இங்க புல்லா கவர் பண்ணி கிட்டு நிக்கிறா. ஆனாலும் உனக்கு டூயட்டெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்” மனசாட்ச்சி காரி துப்ப அதை கண்டு கொள்ளாதவன் அவள் முகத்தையே பார்த்தவாறு அவள் அருகில் மெதுவாக அடியெடுத்து வைத்தான்.

அவனின் ஒவ்வொரு எட்டுக்கும் உள்ளுக்குள் குளிர் பரவி, உடல் நடுங்க, எச்சில் கூட்டி விழுங்கியவாறே அவனை பாத்திருந்தவள் அசையாது சிலையாகி நிற்க, அவளை தாண்டி சென்றவன் அலுமாரியை திறந்து ஒரு போர்வையை கையில் எடுத்து அதை கட்டிலுக்கு அருகே விரிக்க, அவன் தாண்டி சென்றதும் பிடித்து வைத்திருந்த மூச்சை இழுத்து விட்டவள், அவன் செய்வதை புரியாது பாத்திருந்து அவன் கட்டிலின் மீதிருந்த தலையணையை எடுத்து கீழே போடவும்

“என்ன பண்ணுறீங்க?” அவன் கையிலிருந்த தலையணையை பறித்தவாறே கேட்டாள் பானு.

“தூங்க போறேன் பானு” ரஹ்மானும் அவளை சாதாரணமாக பார்த்தவாறேதான் சொன்னான்.

“ஏன் இவ்வளவு பெரிய கட்டில்ல உங்களுக்கு இடம் பத்தலயா?” முறைப்புடனே கேட்க

“இல்ல… உனக்குத்தான் என்ன பிடிக்காதே! நான் மேல தூங்கினா… எங்க நீ கீழ தூங்குறேன்னு சொல்லிடுவியோன்னுதான் நானே கீழ தூங்கப்போனேன். அப்பொறம் பழிவாங்கதான் கீழ படுக்க சொன்னிங்கனு சொல்லுவ எதுக்கு வம்பு நானே கீழ தூங்குறேன்”  கட்டிலில் இருந்த மற்றுமொரு தலையணையை எடுக்க மறுபுறம் நகர்ந்தான் ரஹ்மான்.

ஷஹீக்கு ஏதோ போல் ஆகிவிட்டது. கொஞ்சம் நேரத்துக்கு முன்னால் “நான் கீழே தூங்குறேன்” என்று சொல்லலாமா? அவள் மனதில் ஓட்டிப் பார்த்தை ஒட்டுக் கேட்டது போல அச்சு பிசகாமல் சொல்கிறான். அந்த சந்திரமுகி கட்டிலை பார்த்தவள் கையையும், காலையும் பாபப்ரபேனு நீட்டிக்கொண்டு படுத்தாலும் ஒன்னும் ஆகாது. இதுலயே தூங்கலாம். கீழ படுத்தே பழக்கம் இல்ல. இதுல படுத்து தூக்கம் வரலைனா? காலைல எழுப்பும் பொழுது உடம்பு வலிக்கும். எதுக்கு வம்பு பேசாம அவர் வரும் முன் கட்டில் ஏறி படுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

இதுதான் அவள் திட்டமாக இருக்க, பெண்கள் வெளியேறிய உடன் ரஹ்மான் உள்ளே வருவான் என்று எதிர்பாத்திருக்கவில்லை.

அவனை வழி மரித்தவள் “கட்டிலதான் இவ்வளவு இடம் இருக்கே வந்து தூங்குங்க, நான் ஒன்னும் உங்க மேல கையையோ! காலையோ போடா மாட்டேன்” என்றவள் கீழே இருந்த தலையணையை எடுத்துக்கொண்டு கட்டிலில் ஏறி படுத்துக்கொள்ள அவள் பாவாடை விலகி கால் கொஞ்சமாக தெரிய லெக்கின்ஸ் அணிந்திருப்பது ரஹ்மானின் கண்களில் பட்டது.

“அடிப்பாவி… ரொம்பவே உசாராதான் இருக்க நீ” உள்ளுக்குள் சிரித்துக்கொண்டவன்

“பானு… ஒரு பிரச்சினை?”

“இப்போ என்ன? லைட் ஆப் பண்ணி படுக்க பயமா இருக்க?” அவனுக்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டிருந்தவள் தலையை திருப்பி கேட்க

“இல்ல.. நைட்ல டிஷர்ட் எல்லாம் போட்டு கொண்டு தூங்க மாட்டேன். தூக்கம் வராது கழட்டிடவா?”

மறுபுறம் திரும்பியவள் “நல்ல வேல ஜட்டியோடதான் தூங்குறேன்னு சொல்லல” தனக்குள் முணுமுணுத்தவள் “நான் தான் இந்த பக்கம் திரும்பி இருக்கேனே! என்னவோ பண்ணிக்கோங்க, அப்படியே லைட்டையும் ஆப் பண்ணிடுங்க” பெரிய மானதாக விட்டு கொடுப்பதை போல் பேசியவள் கண்களை இறுக மூடிக்கொண்டு தூங்க முயற்சி செய்தாள். 

வீட்டார் மற்றும் ஹிதாயாவை தவிர வேறு யாருடனும் சகஜமாக பேசிடாத ஷஹீ தன்னை அறியாமளையே ரஹ்மானை தன்னுடைய உறவாக கருத ஆரம்பித்திருந்தாள். முதலிரவை நினைத்து அச்சம் கொண்டிருந்தவளுக்கு ரஹ்மானின் சாதாரண பேச்சு தைரியத்தை கொடுத்திருக்க அவனோடு வாக்கு வாதத்தில் ஈடுபட்டவள் எப்பொழுது தூங்கினாள் என்று தெரியாமளையே தூங்கியும் போய் இருந்தாள்.

ஆனால் ரஹ்மானால் தான் தூங்க முடியவில்லை. அவன் அறையில் அவன் பானு நடப்பவை யாவும் கனவல்ல நிஜம் என்று அறிந்திருந்தாலும் தூங்கி விழித்தால் எங்கே அவள் மாயமாய் மறைத்து விடுவாளோ! என்ற அச்சம். தனக்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டிருப்பவளின் வரி வடிவத்தையே பாத்திருந்தவன் அவள் நீண்ட கூந்தல் தன் புறம் இருக்கவும் மெல்ல வருட ஈரலிப்பை உணர்ந்தவன் 

“இப்படி தலையை துவட்டாம தூங்குறாளே சளி பிடிக்காதா? இவ்வளவு நீண்ட முடிய வச்சிக்கிட்டு காலைல குளிச்சு காலேஜ் போக சிரமா இருக்காதா? இதுல முடி தெரியாம பின்னி துப்பாட்டாக்குள்ள மறச்சி வக்கிரா இப்படியே போனா சளி புடிக்குமே!” அடுத்த கவலையில் விழுந்தான் ரஹ்மான்

தலையை துவட்டிக் கொண்டிருந்தவள்தான் அவன் அறையில் நுழைவதைக் கண்டதும் திகைத்து அதையும் மறந்து நின்றுவிட்டாளே! அவள் தூங்கி விட்டாள் என்று உறுதி செய்தவன் அவள் தலையை துவட்டி விடலானான்.

மறுநாள் அதிகாலையிலையே கண்விழித்தான் ரஹ்மான். தன் மேல் சுகமாய் படுத்திருந்த மனைவியை பார்த்ததும் இதழில் புன்னகை பூத்தது. மேலும் அவளை தன்னுள் இறுக்கிக் கொண்டவனுக்கு அவள் நேற்றிரவு தூக்கத்தில் புரண்டு வந்து தன் மேல் கையை போட்டது ஞாபத்தில் வர

“வீர வசனமெல்லாம் பேசுறா கண்ணு முழிச்சா என்ன பண்ண போறாளோ” ஏனினில் அவள் கால் அவன் மேல் தான் இருந்தது.

தூக்கம் வராமல் இருந்தவனுக்கு பானுவின் சிந்தனை தான். “கீழே தூங்குறேன்” என்றதும் அமைதியாக தலைசாய்ப்பால் என்றுதான் நினைத்தான் ரஹ்மான். ஆனால் அவனுடன் வாயாடி அவனையே கட்டிலில் தூங்க சொல்லி இருக்கிறாள் என்றால் அவள் தன்னை சகோதரனின் எதிரியாக வெறுக்கிறாளே ஒழிய கணவனாகவோ! காதலை சொன்னதற்காகவோ வெறுக்கவில்லை. கொஞ்சம் குழம்பிப்போய் இருக்கிறாள்.

முதலில் தன்னை அவள் புரிந்து கொள்ள வேண்டும், தான் அவள் மீது வைத்திருக்கும் காதலை உணர வேண்டும். அதன் பின் அவள் என்னை காதலிக்க வேண்டும் அதற்கு பிறகுதான் வாழ்க்கையை தொடங்க வேண்டும். அவளே சகஜமாக பேசும் பொழுது அவள் மனதை தொடுவது சிரமமில்லை என்று உணர்ந்தவன் நிம்மதியாக புன்னகைத்து கண்களை மூடிக்கொள்ள அவள் உருண்டு வந்து அவன் மேல் கையை போட அவள் கையே தலையணை போல் கன்னத்தில் வைத்துக்கொண்டவன் உறங்கிப்போக எப்பொழுது கட்டிக்கொண்டு தூங்கினார்கள் என்று அவனுக்கும் தெரியவில்லை.

மெதுவாக துயில் கலைந்த ஷஹீ “தலையணை ஏன் இப்படி கல்லு மாதிரி இருக்கு” என்றவாறே முகம் புதைக்க ரஹ்மானின் மார்பு ரோமங்கள் முகத்தில் உரச வித்தியாசத்தை உணர்ந்தவள் பட்டென்று கண்களை திறந்து பார்த்தாள்.

முதலில் தான் எங்கு இருக்கிறோம்? கனவு காண்கிறேனா என்று குழம்பியவள் நேற்று நடந்த திருமணமும், அதன் பின் நடந்தவைகளும் ஞாபக அடுக்கில் காட்சிகளாக விரிய கணவன் முகத்தை ஏறிட்டாள்.

ரஹ்மானோ அவன் இடத்தில் ஒருகையை தலைக்கு கொடுத்து தலையணையில் தூங்கிக் கொண்டிருக்க அவன் முழங்கை மடிப்பில் தலை வைத்து அவன் நெஞ்சோடு உரசிக்கொண்டு கழுத்தில் கை போட்டு, காலையும் அவன் மேல் போட்டு  அவனை ஒட்டியவாறே அவள் இருக்க, மூச்சே நின்று விடும் போல் இருந்தது. திடுக்கிட்டு விலக முயற்சி செய்தவள் முடியாமல் தடுமாறினாள்.

அவள் கூந்தல் ரஹ்மானின் மடித்திருந்த கைக்குள் மாட்டிக் கொண்டிருந்ததென்றால், பாவாடை அவன் மேல் இருக்க அதில் அவன் கையை வைத்திருந்தான். அவன் மட்டும் கண்களை திறந்தால் டோடல் டேமேஜ்.

“ஷஹீ வீட்டுல நாலஞ்சி தலைகாணியை கட்டிபுடிச்சு தூங்குறவளெல்லாம் வசனம் பேச கூடாதுனு சொல்லுறது இதுக்குத்தான். இப்போ பாரு தூக்கத்துல போய் உன் புருஷனையே கட்டி புடிச்சி இருக்க, அவன் கண்ணு முழிச்சா என்ன நினைப்பானோ!”

கையை போட மாட்டேன், காலை போட மாட்டேன் என்று விட்டு, அவன் சமத்தாக அவன் இடத்தில் தூங்கிக் கொண்டிருக்க இவள் சென்று உரசிக்கொண்டு இருக்கிறாள். “நல்ல வேலை நன்றாக தூங்குகிறான்” தனக்குள் சொல்லிக் கொண்டவள் மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு காலை எடுத்தவள், கைக்குள் மாட்டியிருந்த கூந்தல் முடியை எடுக்க முயற்சி செய்யலானாள்.

ரஹ்மானோ அவள் படும்பாட்டை ஓரக் கண்ணால் ரசித்துக்கொண்டிருந்தானே ஒழிய அவளுக்கு உதவாமல் மேலும் அவள் புறம் உருண்டு அவள் மேல் கையை போட்டுக்கொண்டு அணைத்துக்கொள்ள மூச்சு விடவும் மறந்தவளாக கண்களை இறுக மூடிக்கொண்டாள் ஷஹீரா.

“அல்லாஹ் இப்போ என்ன பண்ணுறது? மொத நாளே இந்த சோதனைனா…காலம் பூரா என்ன செய்றது?”

“ஷஹீ மொதலல்ல இன்னைக்கு பிரச்சினைல இருந்து வெளிய வா” மனம் கூவ என்ன பண்ணலாம் என்று சிந்தித்தவள், கண்களை மூடியவாறு தனக்குள் பேச மூடியிருந்த இமைக்குள் சுழலும் அவள் கண்களை முத்தமிடும் ஆவல் தோன்ற ரஹ்மான் அவளை மெதுவாக நெருங்கலானான். ஆனால் அதற்குள்

“கண்ணு முழிச்சா… நீங்கதான் என் மேல கை போட்டீங்கனு பழியை தூக்கி அவர் மேல போட்டுடலாம். நல்ல ஐடியா” வாய் விட்டே முணுமுத்தவள் ரஹ்மான் கண் முழிக்கும்வரை காத்திருக்கலாம் என்று அவனை பார்க்க அவனோ! அவளை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான்.

“குட் மோர்னிங் பொண்டாட்டி. எப்படி? எப்படி? கையையும் காலையும் நீங்க போட்டுட்டு நான் போட்டானு பழி சொல்ல போறீங்களா! இது கூட நல்ல கதையா தான் இருக்கு” என்றவன் அவளின் நெற்றியோடு முட்டி நிற்க, அவளோ அவன் கைகளுக்குள் பந்தமாக அடங்கி இருந்தாள். 

மூக்கும் மூக்கும் உரசிக்கொள்ள மெல்லிய அதிர்வலை அவள் உடலில் பாய ஆரம்பித்தது. அவன்  மூச்சுக்காற்றை அவள் சுவாசித்துக்கொண்டிருக்க, முத்தமிடுவானோ என்று ஷஹீயின் மூளை கேள்வி எழுப்ப, கண்களை சச்சார் போல் விரித்து கணவனை பார்த்தவளுக்கு அந்த அதிகாலை பொழுதிலும் வியர்க்க ஆரம்பித்தது.

அவனோ அந்த எண்ணம் எல்லாம் இல்லாமல் குறும்பாக சிரித்தவாறு அவளுக்கு இருக்கும் குறும்புக்காரியை ரசித்துக்கொண்டிருந்தான். அவளை காப்பதற்காகவே கதவு தட்டுப்பட அதை தொடர்ந்து ரஸீனாவின் குரலும், ஷம்ஷாத்தின் குரலும் வெளியே கேட்டது. ரஹ்மானின் கைகள் தளர்ந்ததும் கதவை திறக்க சிட்டாக பறந்தாள் ஷஹீ.

அதன் பின் அவளுக்கு நிற்க கூட நேரமில்லாம       குளிக்க, சாப்பிட என நேரம் செல்ல பாலர் பெண்கள் வசமானவள் அவர்களிடம் முகத்தை கொடுத்து விட்டு கண்களை மூடி அமர்ந்து விட்டாள்.

ஆனால் அவள் மனதில் எழுந்த பெரிய சந்தேகமே! ரஹ்மான் உண்மையில் தன்னை காதலிக்கிறானா? இல்லையா? பழிவாங்கத்தான் இந்த கல்யாணமா என்பதே!

காதலை சொல்ல வந்து, அது பிரச்சினையாகி, கல்யாணம் வரை வந்தது என்னவோ உண்மைதான். தூரத்திலிருந்தே பாத்திருப்பானே ஒழிய ஒருநாளும் பேச முயற்சி செய்ததில்லை. அதுவும் போகட்டும். கல்யாணம் தான் ஆகிருச்சே காதலிக்கும் பெண்ணே மனைவியாய் கிடைத்தால் முத்தமிடும் எண்ணம் கூடவா வராதா?

அதுவும் காலையில் அவ்வளவு நெருக்கத்தில் இருந்த பொழுதும் விலகி இருக்கிறான் என்றால் காதல் இல்லையோ! அவனை காதலிக்காத போதே அந்த அணைப்பும், நெருக்கமும் உடலில் மின்சாரம் பாய்வதை போலிருந்தது. இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் உடலில் சிலிர்ப்பு ஏறியது. ஆனால் காதலிக்கிறேன் என்று சொல்லும் அவனுக்கு ஒன்றும் தோணவில்லையோ! பழிவாங்கத்தான் இந்த திருமணமா? பழிவாங்கத்தான் எல்லாமே என்றால் என்ன செய்ய காத்திருக்கிறான்? ஒன்றும் புரியவில்லை.

“பழிவாங்க போகிறவன் தான் உன்னை அடித்ததாக உன் நாநாவோடு சண்டை போட்டானா?  இல்லை அவனை அடிப்பேன், உதைப்பேன், கொல்லுவேன் என்று கிளம்புவானா?” ஆழ்மனம் கேள்வி எழுப்ப

“பெண்களை அடிப்பது மட்டும் பிடிப்பதில்லையோ என்னவோ!”

“அப்போ மனதளவில் காயப்படுத்தினால் பரவாயில்லை என்கிறாயா? நீ அவனை எத்தனை முறை திட்டி இருப்பாய் அப்பொழுது கூட அமைதியாக இருந்தவன் பழிவாங்கதான் எல்லாம் செய்கிறான் என்று இன்னும் நம்புவது அபத்தம்” மனம் தெளிவாக எடுத்துரைக்க ஒரு முடிவுக்கு வரமுடியாமல் குழம்பினாள் ஷஹீரா.

பாலர் பெண்கள் ஷஹீராவை தேவதை போல் அலங்கரித்திருக்க, அந்த வெள்ளை கவுனில் கையில் இளம் சிவப்பு பூச்செண்டோடு இன்னும் அழகாக இருந்தாள். இன்றும் தலையை மறைத்துதான் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கண்ணுக்கு விஷேசமான மேக்கப் செய்தார்களாம். வித்தியாசமாக மிளிர்ந்தாள் அவள்.

ரஹ்மான் நீல நிற கோட் சூட் அணிந்திருந்தான். அவன் பாஷிதின் அறையில் தயாராகி வர ஷஹீ வாசல் சோபாவில் வெள்ளை துணி விரிக்கப்பட்டு அமர்ந்திருக்க கண்களை விரித்துப்பார்த்தவன் மனதுக்குள் புகைப்படம் எடுத்துக்கொண்டான்.

தேவதை அவள் ஒரு தேவதை

அழகிய பூ முகம் காணவே ஆயுள் தான் போதுமோ

காற்றிலே அவளது வாசனை

அவளிடம் யோசனை கேட்டு தான் பூக்களும் பூக்குமோ

நெற்றி மேலே

ஒற்றை முடி ஆடும்போது

நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும்

பார்வை ஆளை தூக்கும்

கன்னம் பார்த்தால்

முத்தங்களால் தீண்ட தோன்றும்

பாதம் ரெண்டு பார்க்கும் போது

கொலுசாய் மாற தோன்றும்

அழகாய் மனதை பறித்து விட்டாளே!

கோட் சூட்டில் தன்னையே பாத்துக்கொண்டிருப்பவனை ஏறிட்டு கண்களாளேயே என்னவென்று வினவினாள் ஷஹீ

“சூப்பர்” கையாலையும் உதடு குவித்தும் பதில் சொன்னவன் பறக்கும் முத்தமொன்றையும் அனுப்ப செவ்வானமாய் சிவந்தாள் பானு.

“சைட் அடிக்கறத ஏன்னு  கேட்டா ஓவரா பண்ணுறான்” கணவனை  முயன்று முறைத்தவள் பாஷித் கேமராவோடு வர நேராக அமர்ந்து கொண்டாள்.

பாஷித் அவர்களை ஒன்றாக நிற்க சொல்லி புகைப்படம் எடுக்க, வீட்டாரும் சேர்ந்து எடுத்துக்கொண்டனர்.

ரஹ்மானின் முகத்தில் மகிழ்ச்சி மட்டுமே! கன்னம் வலிக்கும் அளவுக்கு இளித்துக் கொண்டிருப்பவனை அடிக்கடி யோசனையாக பார்கலானாள் ஷஹீ. 

உண்மையிலயே சந்தோச படுகிறானா? நடிக்கிறானா? என்ற ஆராய்ச்சி பார்வைதான் அது. ஆனால் அவள் கணவனின் மனநிலை அப்பட்டமாக அவன் முகத்தில் தெரிவதை கண்கூடாக பார்த்தும் குழம்பும் அவள் மனதை அடக்க வழிதெரியாமல் தவிக்க நேரமானதால் இருவரும் கை கோர்த்து வண்டியில் ஏறி மண்டபத்துக்கு கிளம்பி சென்றனர்.

மண்டபம் முழுவது, இளம் சிவப்பும் சிவப்பும் கலந்த பூக்களாலும் பச்சை இலை கொண்டும் அலங்கரிக்கப்பட்டிருக்க, மண்டபத்தின் நடுவே சிறு மேடை அமைக்கப்பட்டு மணமக்கள் அமர்வதற்காக அரியணை போடப்பட்டிருந்தது. அரியணை வெள்ளை நிறத்தில் இருக்க பின்னால் இருந்த சுவர் முழுவதும் பூ அலங்காரம் கண்ணை கவர்ந்தது. மணமக்கள் அமரவைக்க முன்பாகவே மணப்பெண் தோழிகளாக சிறு குழந்தைகள் ஒரே மாதிரியான கவுன் அணிந்து அணிவகுத்து நிற்க ஜமீலாவின் இரண்டு வயது செல்ல மகள் ஜெசிலாவும் குட்டி பொம்மையாக அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தாள்.

மண்டபம் இரண்டு மாடிகளை கொண்டதாக இருக்க பெண்கள் மாடியிலும் ஆண்கள் கீழ்தளத்தில் என்று ஏற்பாடு செய்து சாப்பாடு உண்பதற்காக மேசைகள் போடப்பட்டு வருபவர்களை வரவேற்று அமரவைத்து குடிக்க குளிர்பானமும் வழங்கப்பட்டது.

மேசையில் பிரியாணிக்கான கறிகள் யாவும் வைக்கப்பட்டிருக்க, அனைவரும் அமர்ந்த உடன் பிரியாணி பரிமாறப்பட்டது.

ரஹ்மான் சிறிது நேரம் அமர்ந்திருந்தவர் ஆண்கள் இருக்கும் பகுதிக்கு சென்று வந்தவர்களோடு பேசி அவர்கள் விடைபெறும் வரை இருந்தவன் மேலே வர மணமக்களுக்கான உணவு மேசை தயாராக இருந்தது. 

நேற்று போல் இன்றும்  மணமக்கள் உறவினர்களோடு அமர்ந்து உணவு உட்கொள்ள நெருங்கிய சொந்தங்களும், நண்பர்களும் மாத்திரம் மண்டபத்தில் இருந்தனர்.

வளமை போல் கேலி கிண்டலோடுதான் மணமக்கள் உணவூட்ட அதை புகைப்படமாக்கி மகிழ்ந்தனர். அதன் பின் குடும்பம் சகிதமாக மணமக்களோடு போட்டோ எடுத்துக்கொண்டார்கள்.

பேகம், முபாரக் அக்பர் குடும்பத்தோடு மறு வீட்டு விருந்துக்கு அழைப்பு விடுத்து விட்டு மண்டபத்திலிருந்தே விடைபெற்று செல்ல, பரிசு பொருட்களை பாஷித் ஒரு வேனில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி இருக்க, ரஹ்மானின் குடும்பமும் மண்டபத்திலிருந்து மணமக்களோடு வீடு திரும்பினார்.  

சான் ஏறினால் மூலம் சறுக்குவது போல் ரஹ்மான் பானுவை நெருங்க எடுக்கும் முயற்சி எல்லாம் சரக்குலானது.