விருந்தெல்லாம் முடிய பெண்கள் ஒவ்வொரு பக்கமாக அமர்ந்து கதையடித்துக் கொண்டிருந்தனர். ஷஹீயின் மருதாணி ஓரளவாக காய்ந்த பின் சகஜமாக அமரலானாள் அவள். அதன் பின் அவள் அறையில் இளம் பெண்கள் மட்டும் ஒன்று கூடி கேலி கிண்டலோடு அரட்டையில் இறங்க ஹாஜரா அவளை வித விதமாக போட்டோ எடுத்து யாரும் அறியாமல் ரஹ்மானுக்கு அனுப்பி வைத்தாள்.
“அழகா இருக்கா..” என்று அவனிடமிருந்து பதில் வரவும்
“மைனி உன் போட்டோ அனுப்பவாம்” என்று அவனுக்கு குறுஞ்செய்தியை தட்டி விட்டவள் காத்திருக்க,
சிரிப்பது போல் எமோஜி அனுப்பியவன் கையேடு சில புகைப்படங்களையும் அனுப்பி இருந்தான்.
அவனுக்கு தெரியும் பானு கேட்டிருக்க மாட்டாள் என்று. ஏன் போட்டோ அவனுக்கு அனுப்பியது கூட தெரியாது அதுக்குதான் இந்த சிரிப்பு எமோஜி. ஆனால் அவள் பார்க்கட்டும் என்றுதான் போட்டோ அனுப்பி இருந்தான்.
ரஹ்மானின் புகைப்படங்களை பார்க்கும் படி வைத்து விட்டு தன்னுடைய அலைபேசியை பானுவின் கையில் கொடுத்த ஹாஜரா மருதாணியிட ஹிதாயாவிடம் தன் கையை நீட்டி இருந்தாள்.
புகைப்படத்தை கண்டு முதலில் திகைத்தவள் நன்றாக பார்க்கவும் பழைய படி டிரஸ் பண்ணி இருந்தான். தாடி மட்டும் முகத்துக்கு பொருந்தாமல் இருந்தது. அது வாட்சாப் என்றதும் தாடியை ட்ரிம் பண்ண சொல்லி குறுஞ்செய்தி அனுப்பி விட்டு என்ன பதில் அனுப்புவானோ என்று மனம் பதை பதைக்க நகத்தை கடித்தவாறு காத்திருந்தாள்.
அலைபேசியில் குறுஞ்செய்தி வந்ததாக சத்தம் வரவும் அதை படித்தவனின் இதழோரம் மெல்லிய புன்னகை மலர்ந்தது. ஹாஜரா தாடியை பார்த்து எப்போதும் புகழ்பவள் அதனால் கண்டிப்பாக அது ஹாஜரா அனுப்பி இருக்க வாய்ப்பில்லை. கண்டிப்பாக பானுவாகத்தான் இருக்கும் என்று எண்ணியவன்
“என் பொண்டாட்டி சொன்னா கேக்காம இருப்பேனா? உடனே பண்ணிடுறேன். காலேஜ் போறப்போ இருந்த மாதிரி ஓகே வா?” என்று பதில் அனுப்பி இருந்தான்.
அதை பார்த்து போன் நழுவ மருதாணி கைகளால் சிரமப்பட்டு பிடித்தவள் அவனுக்கு எப்படித் தெரியும் அது நான் என்று ஹாஜராவின் மீது பார்வையை செலுத்தியவள் இன்பாக்சின் மேலே பார்க்க அவளுடைய புகைப்படங்கள் சில அனுப்பப்பட்டிருந்தது.
“இது எப்போ எடுத்தது? அல்லாஹ்… இப்போ தான்” தானே கேள்வி கேட்டு பதிலையும் சொல்லிக்கொண்டவள் “அழகாத்தான் இருக்கு” சேர்த்து சொன்னாள்.
“என்ன பதிலையே காணோம்?” மீண்டும் ரஹ்மானிடமிருந்து குறுஞ்செய்தி வர, என்ன சொல்வது என்று முழித்தாள்.
“கால் பண்ணவா?” என்று இன்னொரு மெஸேஜ் வர, உடனே “வேணாம் வேணாம்” என்று பதில் அனுப்பினாள்.
சில நிமிட மௌனத்தின் பின் “சரி அப்போ நாளைக்கு மீட் பண்ணலாம்” என்று மெசேஜ் அனுப்பியவன் ஆஃப்லைன் சென்று விட உண்மையில் காதலித்திருந்தால் பேசத்தான் ஆசைப்படுவான் ஏன் பேசாமல் வைத்து விட்டான் என்று ஷஹீக்கு குழப்பம்தான் மிஞ்சியது.
ஆனால் ரஹ்மானோ ரொம்ப சந்தோசமாக இருந்தான் முதல் முறையாக அவளாகவே ஒன்றை செய்யும் படி ஏவி இருக்கிறாள். மறுத்து விடுவானா? மருதாணியிட்ட கையேடு டைப் செய்வதும் கடினம்தான் அதே போல் அனைவரின் முன் போனில் உரையாடுவதும் முடியாத காரியம். அவளோடு ஓரிரண்டு வார்த்தையாவது பேச வேண்டும் என்று எண்ணியே கால் பண்ணவா என்று கேட்டான். அந்த நேரம் பார்த்து அஸ்ரப் வரவும். நாளை தனது வீட்டில். தனது அறையில் தன் மனைவியாக சந்திக்க போகிறதை நாளை சந்திக்கலாம் என்று சுருக்கமாக கூறி அலைபேசியை வைத்தவன் அவன் பானு இட்ட கட்டளையை செய்ய ஓடி இருந்தான். ஆனால் என்றும் போல் அவன் செயல் அவன் பானுவுக்கு குழப்பத்தைத்தான் கொடுத்திருந்தது.
“யாராவது பாடுங்கப்பா… அப்போ தான் நான் மருதாணி போடுவேன்” ஹிதாயாவின் மருதாணி டிசைனைக் கண்டு தனக்கும் போடுமாறு ஒவ்வொருத்தராக கையை நீட்ட முதுகு வலிக்கும் வரை போட்டுக் கொண்டிருந்தவள் கடுப்பில் சொல்ல
“இது நல்லா இருக்கு” தனியாக ஒரு கதிரையில் அமர்ந்திருந்த ஷஹீயும் ஹாஜராவின் அலைபேசியை மேசையின் மீது வைத்தவாறே சொல்ல, அவள் கண்களில் முபாரக்கின் எண் வாட்சாப் இன்பாக்சில் இருப்பது விழுந்தாலும் கருத்தில் பதியவில்லை. யார் முதலில் பாடுவது? நீ பாடு, நான் பாடு என கொஞ்சம் நேரம் அறைக்குள் சத்தமாக இருந்தது.
“எல்லாரும் சேர்ந்து பாடுங்க பா…” கத்திய ஹிதாயா அனைவரையும் முறைத்து விட்டு மருதாணி கோனை மேசையில் வைத்தவள் கையைக் கட்டிக்கொண்டாள்.
“சரி சரி நான் பாடுறேன்” என்ற ஹாஜரா பாட ஆரம்பிக்க அவளோடு சேர்ந்து மற்றவர்களும் பாட ஆரம்பித்திருந்தனர். அந்த நேரம் பெண்களுக்கு உணவுப் பரிமாறும் வேலையை முடித்து விட்டு கை, கால் முகம் கழுவாவென பின் பக்கம் சென்ற முபாரக் ஹாஜராவின் குரலைக் கேட்டு அப்படியே நின்று விட்டான்.
ஷஹீயின் அறையின் ஜன்னல்கள் பின்பக்கமாக இருப்பதால் இவர்களின் அரட்டை அவன் காதில் விழுந்ததுதான். இளம் பெண்கள் ஏதோ பேசுகிறார்கள் என்று இருந்தவன் வேலையை முடித்துக்கொண்டு முகம் கழுவ செல்ல குரல் கேட்டு அவள் தான். அவளே! தான். யார் அவள்? தன் வீட்டுக்கே வந்திருக்கிறாள் என்றால் தன்னை நன்கு அறிந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் போக யோசிக்காமல் ஜன்னலை திறந்து பார்க்க பதினைந்து பெண்கள் கூடி இருக்கும் இடத்தில் அவள் யார் என்று எப்படி கண்டு பிடிப்பது? இவனை கண்டதும் பாட்டும் நின்றது.
“என்ன அநாகரிகமாக ஜன்னலை திறந்து எட்டி பாக்குறீங்க?” ஹனா கத்த, ஒருநாளும் இல்லாமல் நாநா நடந்துகொள்ளும் விதம் புரியாமல் ஷஹீ பதட்டமடைந்தாள்.
ஹிதாயாதான் “எங்க சத்தம் கொஞ்சம் அதிகம் தான் நாநா மெதுவாகவே பாடுறோம்” என்றாள்.
முபாரக்குக்கும் ஒரு மாதிரி ஆகி விட்டது. தங்கையின் அறைக்கே கதவை தட்டி விட்டு அனுமதியோடுதான் செல்வான் பெண்கள் மட்டும் இருக்கும் பொழுது அநாகரீகமாக ஜன்னலை திறந்து பார்த்தால் என்ன நினைப்பார்கள்?
அவனை கண்டு அதிர்ச்சியடைந்த ஹாஜரா பேச்சற்று முழிக்க கையில் மருதாணி வைத்தருந்ததையும் மறந்து கையை பிசைந்து போட்டிருந்த டிசைனை களைத்து எல்லாவற்றையும் ஒன்று சேர்த்துக் கொண்டிருந்தாள்.
“அத சொல்லத்தான் திறந்தேன். இவ்வளவு பேர எதிர் பார்க்கல. கொஞ்சம் சத்தத்தை குறைங்க” ஜன்னலை பாதி சாத்தியவன் முகத்தை திருப்பி வானை பார்த்தவாறு கூறி அவ்விடத்தை விட்டு அகன்றான். ஆனாலும் ஹனாவின் குரலை கேட்டபின் அவன் மனதில் அவனோடு பேசியது ஹனாவாக இருப்பாளோ! என்ற சந்தேகம் தோன்றியது.
போகும் போது ரஸீனா நல்ல முறையில்தான் பேசி விடை பெற்றாள். ஜமீலாவும் நாளை சந்திக்கலாம் என்று கன்னத்தில் முத்தமிட்டு விடை பெற சின்ன குட்டியும் புது மாமியை முத்தமிடலானாள்.
இரவு பன்னிரண்டு மணிவரை ஆட்டம் போட்ட ஹனாவும், ஹாஜராவும் நாளை சந்திப்பதாக சொல்லிக்கொண்டு ரஸீனா குழுவோடு கிளம்பிச்சென்றனர்.
நிகாஹ் நாளும் அழகாக விடிந்தது. பேசியபடி இன்று அஸருக்கு பின் மஸ்ஜிதில் நிகாஹ். அதன் பின் மணமகளை அழைத்து சென்று மணமகன் வீட்டில் விட வேண்டும். ஷஹீயின் வீட்டில் இருப்பது இரண்டு ஆண்களே! இருவரும் பள்ளிக்கு சென்றாக வேண்டும். நிகாஹ் முடிந்த கையேடு மணமகளை அழைத்து செல்லவும் வேண்டும் என்ன செய்வது? பரபரப்பாக சூழல வேண்டிய நேரம்.
ஷஹீயின் வீடோ புதிதாக நிறம் பூசப்பட்டு கல்யாணத்து தயாராகி நிற்க, அக்பர் மற்றும் பேகத்தின் தாய், தந்தை வழி சில சொந்தங்களும் மஸீஹாவின் உறவுகளும் வருகை தந்திருந்தனர். அஸர் தொழுகைக்காக அதன் சொல்லும் முன்பாகவே அக்பரும், முபாரக்கும் பள்ளிக்கு சென்று விட்டனர்.
வாழ்க்கையில் முதல் தடவையாக பாலருக்கு சென்று தன்னை அழகு படுத்திக் கொண்டிருந்தாள் பானு. மணப்பெண்ணை அலங்கரிக்கவும் அவர்களே வருகிறார்கள். லெஹெகாதான் அணிகிறாள்.
இங்கே ரஹ்மான் வீட்டி ஆண்கள் அனைவரும் தயாராகி அஸர் தொழுகைக்காக பள்ளிக்கு செல்ல, அத்தோடு தொழுகையின் பின் நிகழும் நிகாஹ்வுக்காக வருகை தருவோருக்கு கொடுப்பதற்காக தயார் செய்த உணவுகளை வேனில் ஏற்றிக்கொண்டிருந்தனர்.
கிட்டத்தட்ட நூறு பேருக்கு அழைப்பு விடுத்திருக்க, அதற்கேத்தது போல் உணவுகளை பாக்கெட் செய்து எடுத்து செல்வது இலகுவானது என்று ரஹ்மான் கூற அவ்வாறே ஏற்பாடானது.
எல்லாம் சரியாக உள்ளனவா என்று சரிபார்த்து வண்டியை பாஷித் பூட்டிக்கொண்டிருக்க உள்ளே ரஸீனா, ஜமீலா மற்றும் மஹ்ரமான பெண்களுக்கு ஸலாம் சொல்லிக்கொண்டிருந்தான் ரஹ்மான். அதன் பின் ஆண்கள் மஸ்ஜித்தை நோக்கி புறப்பட்டு சென்று அஸர் தொழுகையில் கலந்து கொண்டனர்.
தொழுகைக்கு பின் நிகாஹ் ஆரம்பமானது. பானுவுக்கு மஹருக்காக கொடுக்கப்படும் நகை சபையில் வைக்கப்பட்டிருந்தது. கிட்டத்தத்தட்ட ஆறு லட்சம் பெருமதியான நகைகள் மாலை. காப்பு, காதணி, கணையாழி என அங்கே அனைத்தும் இருந்தன.
ரஹ்மான் வெள்ளை நிறத்தில் போர்மல் ஷார்ட் அதுக்கு பொருத்தமான நிறத்தில் கால்ச்சட்டை மற்றும் வெள்ளை தொப்பி அணிந்திருந்தான். முகத்தில் அப்படி ஒரு புன்னகை அதில் டான் டானா வெக்கம் வழிய அவனை ஓட்டிக்கொண்டிருந்தான் அஸ்ரப்.
காதி வந்து அமரவும் அந்த இடம் அமைதியாக மஸ்ஜிதின் இமாம், ரஹ்மான், அக்பர், நவ்பர், முபாரக் என அனைவரும் அமர்ந்திருக்க மற்றவர்கள் அவர்களை சூழ்ந்து நின்றிருந்தனர்.
முபாரக்தான் பானுவை ரஹ்மானுக்கு நிகாஹ் செய்து கொடுக்க போவதாக சொல்ல முதலில் இமாம் துஆக்களை ஓத ஆரம்பித்தார். ரஹ்மானின் கையை பிடிக்க சொன்ன இமாம் முபாரக்குக்கு பின் வருமாறு அரபியில் கூற சொல்லிவிட்டு தமிழாக்கத்தையும் கூறினார்.
“எனது சகோதரி ஷஹீரா பானு என்ற பெயருடைய மணமகளை ஆறுலட்சம் பெறுபதியுடைய தங்க நகைகள் மஹராக பெற்று குறித்த இருவர் சாட்ச்சியாகவும், சபையோர் சாட்ச்சியாகவும் ஹலால் மனைவியாக நிகாஹ் செய்து தந்தேன்”
முபாரக் சொல்லி முடித்ததும் ரஹ்மானை பார்த்து பின்வருமாறு அரபியில் கூற சொன்னவர் தமிழிலும் கூற சொன்னார்.
“தற்பொழுது கூறப்பட்ட ஷஹீரா பானு என்ற மணப்பெண்ணை ஆறு லட்சம் பெறுமதியான தங்க நகை மாஹர் கொடுத்து சபையோர் சாட்ச்சியாகவும் குறித்த இருவர் சட்சசியாகவும் எனது ஹலால் மனைவியாக நிகாஹ் செய்து கொண்டேன்”
அதன் பின் சூரத்துல் பாத்திஹா ஓதப்பட்டு, மணமக்களின் வாழ்க்கை சிறக்க இமாம் துஆ கேட்க சபையோர் ஆமீன் சொன்னார்கள். சலாவத்தும் ஓதப்பட்டது.
அடுத்து நிகாஹ்வை பதிவு செய்ய காதி பத்திரங்களை முன் வைக்க முதலில் ரஹ்மான் கையொப்பமிட, அதன் பின் முபாரக் கையொப்பமிட்டான். அவர்களை தொடர்ந்து சாட்ச்சிகள் கையொப்பமிட்டனர்.
மஹர் நகைகள் முபாரக்கின் கையில் ஒப்படைக்கப்பட்டபின் ரஹ்மான் அனைவருக்கும் ஸலாமும் கொடுத்ததோடு நிக்காஹ் இனிதே நிறைவானது.
ரஹ்மானின் வீடு மூன்று அறைகளை கொண்ட அந்த காலத்து பழைய வீடு. பெரிய வாசல், சின்ன வராந்தா. பெரிய சமையலறை முன்னும், பின்னும் பெரிய முற்றம். வீட்டை சுற்றி மதில் சுவர் கட்டப்பட்டிருக்க சுவர் முழுவதும் வண்ண விளக்குகள் ஏற்றப்பட்டு அந்த தெருவுக்கே அது கல்யாண வீடு என காட்ச்சி அளித்துக்கொண்டிருந்தது.
வண்டியை வாசலிலையே நிறுத்தி மணப்பெண்ணை வண்டியிலிருந்து இறக்கி வீட்டார் அழைத்து செல்ல ஜமீலா ஆழம் சுற்றி வரவேற்றாள். வெற்றிலை மஞ்சள் வைத்து ஒரு தட்டு, தேசிக்காய், பால் இவ்வாறு நான்கு தட்டுக்கள் கொண்டு ஆழம் சுற்றப்படும். இவ்வாறு செய்வது தங்கள் ஐதீகம் ஒழிய இஸ்லாமிய கலாச்சாரத்தில் சொல்லப்படவில்லை. ஊர் கண்ணே மணமகள் மேல் இருக்கும் என்பதற்காக செய்வதாக சொல்வார்கள்.
இன்றும் ஷஹீரா லெஹெங்கா தான் அணிந்திருந்தாள். சிவப்பு நிறத்தில் அவள் அணிந்திருந்த லெஹெங்கா அவளுக்கு கண கச்சிதமாக பொருந்தியிருந்தது. தலையை மறைத்து செய்யப்பட்டிருந்த தலை அலங்காரமும் கையில் வைத்திருந்த பூங்கோத்தும் அவளை தேவதையாக காட்ட உண்மையில் ஊர் கண் முழுவதும் அவள் மேல்தான். பக்கத்து வீட்டில் உள்ளவர்கள், எதிர் வீட்டில் உள்ளவர்கள் என்று அனைவரும் தங்கள் வீட்டிலிருந்தவாறே எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
பானுவுக்கு சர்வமும் நடுங்க ஆராம்பித்தது. வீட்டில் தயாராகி அமர்ந்திருக்கும்வரை எந்த உணர்வும் இருக்கவில்லை. வண்டியில் ஏரியதிலிருந்து ஒரு வித பதட்டம் தொற்றிக்கொண்டு அடிவயிற்றில் சொல்ல முடியாத பயப்பந்து உருளத் தொடங்க வேர்த்து வழிய ஆரம்பிக்க போட்டிருக்கும் மேக்அப் கலையுமென யாரோ வண்டியின் ஏசியை அதிகரிக்கும் படி கூற முகத்தில் குளிர் காற்று அடித்தாலும் உள்ளுக்குள் ஒருவித சூடு பரவிக்கொண்டிருப்பதை நன்றாக உணர்ந்தாள்.
ஆழம் சுற்றி முடியும் வரை உள்ளுக்குள் சிறு நடுக்கம், வியர்வை, இனி இதுதான் என் வீடா? இங்கே தான் இருக்கணுமா? என்ற சிந்தனை வேறு மனதில் உலவ முகத்தில் புன்னகை கூட வர மறுத்தது. மருண்ட பார்வைதான். அவளை அழைத்துக்கொண்டு சென்று வாசலில் போட்டிருந்த ஷோபாவில் அமர்த்த வெள்ளை விரிப்பு விரித்து, ஷோபாவுக்கும் பூ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
அவள் அமர்ந்த அடுத்த நொடி குழந்தைகள் அன்னைகளின் அலைபேசியை வாங்கி அவளை புகைப்படம் எடுக்கும் வேலையில் இறங்கி இருக்க, ஹாஜரா வந்து பானுவுக்கு குடிக்க ஏதாவது வேணுமா என்று கேட்க தொண்டைக்குள் இதமாக ஏதாவது இறங்கினால் நன்றாக இருக்கும் என்று தோன்றினாலும், இருக்கும் நடுக்கத்தில் குடிக்கும் பொழுது உடையில் சிந்தி விடுமோ என்று பயந்தே மறுத்து விட்டாள்.
மஸ்ஜிதிலிருந்து ஆண்கள் வர அக்பர், முபாரக், ரஹ்மான், நவ்பர் மற்றும் பாஷித் மட்டும் உள்ளே வந்தனர். உள்ளே வந்த ரஹ்மானின் பார்வை பானுவை தவிர வேறு எங்கும் செல்லவில்லை. அவளோ! தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.
பாஷித் புகைப்படங்களை எடுக்க, ஏற்கனவே இமாம் கூறியது போல் பானுவின் முன் உச்சி முடியை விரலால் பிடித்து இன்றிலிருந்து இவள் என் மனைவி என்று துஆ ஓதிய பின் மஹர் நகைகளில் மாலையை மட்டும் அணிவித்தான்.
அதன் பின் இருவரையும் ஒன்றாகா நிற்க வைத்து, அமர்த்தி என பாஷித் புகைப்படங்களை எடுத்துத்தள்ள, ரஹ்மான் போதும் என்ற பின்தான் விட்டான்.
ரஹ்மானின் அருகில் புதுவித படபடப்போடு நின்றிருந்தாள் பானு. போட்டோ எடுத்து முடிந்ததும் அவளை அமரவைத்து அவனையும் அமரும் படி சொல்ல கொஞ்சம் இடை வெளி விட்டு அமர்ந்து கொண்டான் ரஹ்மான். அய்நா இருவருக்கும் குளிர்பானம் கொண்டு வந்து கொடுக்க, பானுவின் கையிலிருந்த மலர்ச்செண்டைக் கண்டு தானே இரண்டு குவளைகளையும் பெற்றுக் கொண்ட ரஹ்மான் ஒன்றை அவளுக்கு கொடுக்க அவனை பாராது வேண்டாம் என்று தலையசைத்து மறுத்தாள் பானு.
“வந்ததிலிருந்தே ஒன்றும் சாப்பிடல சாப்பிடுமா” என்று யாரோ சொல்ல யோசனைக்குள்ளான ரஹ்மான் “என்ன பிரச்சினை” என்று அவள் முகம் பார்த்து நிற்க,
“ட்ரேஸ்ல கொட்டிடும்” தலை குனிந்தவாறே சொல்ல புன்னகைத்தவன் பாஷித்தை அழைத்து காதில் ஏதோ சொல்ல அவன் சென்று ஒரு ஸ்ட்ரோவை கொண்டு வந்து கொடுக்க அதை குளிர்பான குவளையில் இட்டவன் குடிக்குமாறு சொல்லி தானே குவளையை ஏந்திக்கொண்டிருந்தான். பானுவும் நன்றி கலந்த பார்வையோடு அதை பருக்கலானாள்.
அப்பொழுதுதான் கணவனானவனை நன்றாக பார்த்தாள். ட்ரிம் செய்த தாடியில் அம்சமாக புன்னகைத்துக்கொண்டிருந்தான் ரஹ்மான்.
வாசலில் அவர்கள் அமர்ந்திருக்கும் சோபாவை தவிர மற்ற எல்லாவற்றையும் அகற்றி பாய் விரித்து அனைவரையும் அமரவைத்திருக்க, இளசுகள் வாய் பிளந்து இவர்கள் அந்நியோன்யத்தை பாத்திருக்க, பெண்கள் கண்டும் காணாதது போல் அமர்ந்திருந்தனர்.
ரஹ்மானின் அலைபேசி அடிக்கவே அதை எடுத்க்க அஸ்ரப் என்றதும் எதற்கு அழைக்கிறான் என்று புரிந்தது.
“போட்டோ எடுத்ததும் வெளிய வந்துடு மவனே! இல்ல உள்ள வந்து தூக்கிடுவோம்” என்று மிரட்டித்தான் உள்ளே அனுப்பி இருந்தான். ஆண்கள் அனைவருக்கும் முற்றத்தில் டென்ட் போடப்பட்டு பூப்பே முறையில் உணவு பரிமாறவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, போட்டோ எடுத்த பாஷித் வெளியே வருவதை பார்த்த பின்தான் அஸ்ரப் அழைப்பு விடுத்தான். செல்லாவிடில் உள்ளே வந்து விடுவான் என்று புரிய பானுவிடம் வெளியே இருப்பதாக சொல்லி ரஹ்மான் எழுந்து சென்று விட்டான்.
ரஹ்மான் அருகில் இருக்கும் வரை உள்ளுக்குள் இருந்த நிம்மதி அவன் எழுந்து சென்ற நொடியிலிருந்து காணாமல் போக, ஷஹீராவுக்கே அவளை நினைத்து ஆச்சரியமாக இருந்தது.
சாப்பாடு சஹன் முறைதான் பரிமாறப்பட்டது. ஆறு ஆறு பேராக கீழே அமர்ந்து ஒன்றாக சாப்பிடுவது. நாளை தான் வலீமா சாப்பாடு பிரியாணி. ஆதலால் இன்று மங்கா கறியும், கலிய, இறைச்சி, பருப்பு, புளிக்கறி எனும் அவியலோடு நெய் சோறு பரிமாறப்பட்டதோடு இனிப்புக்காக கஸ்டட் புடிங் வைக்கப்பட்டிருந்தது. ரஹ்மானின் வீட்டின் பின் முற்றத்தில் தான் சமைத்திருந்தார்கள். நாளை வலீமா சாப்பாடு ம் வீட்டில்தான் தயார் செய்வார்களாம் அதற்கான ஏற்பாடும் நடந்து கொண்டிருந்தது.
ரஹ்மானும் அணிந்திருந்த வெள்ளை ஷர்ட்டின் கையை முழங்கை வரை மடித்துக்கொண்டு சஹனை அங்கும் இங்கும் தூக்கிக் செல்வது பானுவின் கண்களுக்கு பட “கல்யாண மாப்பிளைக்கு சரியான வேல” தனக்குள்ளே சொல்லி சிரித்துக்கொண்டாள்.
ரஹ்மானுக்கு, பானுவுக்கு உள்ளே சாப்பாட்டு மேசையில் உணவு பரிமாறப்பட்டது. அவர்களோடு அய்நா, ஷம்சாத், ஜமீலா, ஹாஜரா என வீட்டு பெண்கள் அமர்ந்துண்ண அவர்கள் சொல்லும் முன்பாகவே சோற்றை பிசைத்து பானுவின் புறம் நீட்டி இருந்தான் ரஹ்மான்.
அதை எதிர்பார்க்காதவளோ என்ன செய்வதென்று தடுமாற “சாப்பிடுமா… இன்னைக்கு மட்டுமில்ல எதனாலும் ஊட்ட சொல்லு” அய்நா சிரித்தவாறே பானுவின் தட்டை அப்புறப்படுத்த முழிக்கலானாள் பானு.
“ரெண்டு பேரும் ஒரே தட்டுல சாப்பிடுங்க” என்ற ஷம்ஷாத் ரஹ்மானின் தட்டில் மேலும் பதார்த்தங்களை வைக்க
வேறு வழியில்லாமல் அவன் ஊட்டியதை பெற்றுக்கொண்ட ஷஹீயின் மனதில்
“இப்பொழுது அதே தட்டில் கை வைப்பதா? வைக்க வில்லையானால் ரஹ்மான் ஊட்டி விட்டு கிட்டே இருப்பானா?” என்று சிந்தனை ஓட அவன் கை அவள் வாயின் புறம் நீண்டிருந்தது.
அவனுக்கு நன்கு தெரியும் தன் காதலை அவளுக்கு எவ்வாறு புரிய வைக்க வேண்டும் என்பது. அதற்கு அவள் அருகில் இருந்தால் போதும். பானு அவன் மனைவி யாரும் அதை செய் இதை செய் என்று சொல்ல தேவை இல்லை எல்லா உரிமையும் அவனுக்கு இருக்கு. அந்த தைரியத்தில் தான் அவளுக்கு ஊட்டி விட்டதே! ஆனால் அவளிடம் அதை எதிர் பார்க்க முடியாதே! ஆனால் அது ஹாஜாராவின் கண்ணில் பட
“என்ன மைனி நீங்க.. இது நியாயமா? நானா நாங்க சொல்லாமலையே உங்களுக்கு ஊட்டிவிட்டாரில்ல. நீங்களும் ஊட்டிவிடணுமா இல்லையா? நாங்க அனுமதி கொடுக்கணும்னு எதிர்பாக்குறீங்களா?” கிண்டலாகவே கேக்க
“அதான் கல்யாணம் பண்ணி எழுதியே கொடுத்தாச்சே! இன்னும் என்ன எங்க முகத்தை பாத்து கிட்டு ஒருவேளை நாங்க இங்க இருக்கிறதுதான் பிரச்சினையோ!” ஜமீலாவும் சேர்ந்துகொள்ள பானு செய்வதறியாது சோற்றை பிசைந்து கொண்டிருக்க, ரஹ்மான் அவளை ஓரப்பார்வை பார்த்தவாறே ரகசியமாக புன்னகைத்தவன்
“நீங்க எல்லாரும் கண்ண மூடினாதான் ஊட்டி விடுவாளாம்” என்றவன் பானுவை பார்த்து வாய் மூடி சிரித்தான்.
“அல்லாஹ் அப்படியெல்லாம் இல்ல” என்றவள் உடனே ஊட்டி விட்டிருந்தாள்.
“இவன் இப்படிதான்மா அவன் காரியம் நடக்க எதுவேனாலும் சொல்வான். நம்பாத” ஷம்ஷாத் என்னமோ சாதாரணமாகத்தான் சொன்னாள். ஆனால் ஷஹீயின் மனதில் அவள் தான் சீக்கிரம் கல்யாணம் செய்து கொள்வோம் என்று கேட்டதை மறந்து, நாநாவை பழிவாங்கதான் காதல் என்றதும், இந்த கல்யாணம் எல்லாம் என்று நொடியில் ஞாபகம் வர முகம் சுருங்கினாள்.
கல்யாணத்தின் உச்ச கட்டம் கல்யாண ராகிங். இது ஒரு கலாச்சாரமாகவே சமூகத்தில் மாறி வருவதைக் கண்டு பள்ளியில் ஜும்மா பயானில் கூட இமாம் அவர்கள் “இல்லாத ஒன்றை ஏன் செய்கிறீர்கள்” வலியுறுத்தி கூறி இருந்தாலும். “கல்யாணமாப்பிளையை வச்சி செய்யாமல் விடமாட்டோம்” என்று இளவட்டங்கள் ஒன்று கூடி ராகிங் செய்வார்கள்.
அதில் உச்ச கட்டம் என்னவென்றால் தனக்கு இவன் என்னவெல்லாம் செய்தான் என்று குறிப்பெடுத்து வைத்தது போல் ஒவ்வொருவரும் அதையே பதிலடியாக செய்வதுதான். கல்யாணமாகாத இளைஞ்சர்கள் தனக்கு வரும் பொழுது பார்த்துக்கொள்ளலாம் என்றும், கல்யாணம் ஆனவர்கள் அதான் நம்ம டர்ன் முடிஞ்சிருச்சே என்றும் கல்யாண மாப்பிளையை பாடாய் படுத்துவார்கள்.
சில கல்யாண மாப்பிள்ளைகள் முதலிரவுக்கு இல்லாமல் கடத்தப்பட்ட சம்பவங்கள் ஏராளம். அதன் பின் வீட்டார் போன் செய்து திட்டாத குறையாக பேசித்தான் மாப்பிளையை வரவழைக்க வேண்டி இருந்தது. அதனால் எது செய்தாலும் வீட்டில் வைத்து செய்து கொள்ளுங்கள் என்றதும் முதலில் ஒரு பழைய டீ ஷர்ட்டும், பேண்ட்டும் அணிந்துகொண்டான் ரஹ்மான்.
முதலில் முட்டை குளியல்தான். தலையிலும், முகத்திலும் குறிபார்த்து அடிக்க கல்லுபோல் நிற்க வேண்டிய சூழ்நிலை. தக்காளி, இலையால் செய்த மாலை, குழந்தைகள் பிறந்த நாளன்று போடும் கோர்ன் தொப்பி, எல்லாம் அணிவிக்கப்பட்டு போட்டோ எடுத்து உடனே தங்கள் பேஸ்புக்கில் போட்டும் விட்டிருந்தனர்.
“சேத்தை வாரி அடிக்கலாம்னு இவன் சொன்னான் என்ன அடிக்க விடலால இல்ல அதனால நீ தப்பிச்ச” யாரோ ஒரு நண்பன் சொல்ல
“ஏன் மொளகா பொடி. ஜஸ்ட்டு எஸ்கேப் மாப்பி” இன்னொருவன் சொல்லி சிரிக்க