இன்று அஸருக்கும் பின்னால் பள்ளியில் பானுவுக்கு ரஹ்மானுக்கு நிகாஹ் நடைபெற இருக்கிறது. ஊரிலுள்ள ஆண்கள் அனைவருக்கும் பள்ளிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதோடு, உறவினர்கள், நண்பர்கள் என்று ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி அது. பள்ளியில் நடைபெறுவது பதிவுத்திருமணம். அதை வீட்டில் கூட செய்யலாம். பள்ளிவாசல் ஆண்கள் அனைவரும் கூடும் பொது இடமானதால் அதிகமான இடங்களில் பள்ளிவாசலில் நடைபெறுவது வழைமையானது.
சிலர் நிக்காஹ் எனும் பதிவுத் திருமணத்தை முதலில் செய்து தங்கள் வசதிக்கேற்ப திருமணம் எனும் நிக்காஹ் அதாவது ஊரைக்கூட்டி விருந்து வைத்து மணமக்களை சேர்த்து வைப்பதும் உண்டு.
அதிகமானோர் அஸர் தொழுகையின் பின் நிக்காஹ் செய்தபின், மணமகளை அழைத்து சென்று மணமகனின் வீட்டில் விட பள்ளியிலிருந்து திரும்பிய மணமகன் மணமகளின் உச்சந்தலை முடியை விரலால் பிடித்து இன்றிலிருந்து இவளை என் மனைவியாக ஏற்றுக்கொண்டேன் என்று ஒரு துஆவை ஓதுவார். அதன் பின் மஹரை மணமகளுக்கு கொடுப்பார். அது தங்க நகையாயின் அணிவிப்பர்.
இரவில் மணமகனின் வீட்டில் நெருங்கிய சொந்தங்களுக்கும், மணமகள் வீட்டாருக்கும் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். அதன் பின் தங்களுடைய வசதியை பொறுத்து அடுத்தநாள் ஊரை கூட்டி வீட்டில் அல்லது ஒரு மண்டபத்தை ஏற்பாடு செய்து கல்யாண விருந்து {வலீமா} கொடுக்கப்படும். வலீமா விருந்து மணமகன் கொடுக்க வேண்டிய விருந்தாகும்.
அவ்வாறுதான் ரஹ்மான் பானுவின் நிகாஹ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று அஸருக்கு பின்னால் மஸ்ஜிதில் நிக்காஹ் ஏற்பாடு செய்யப்பட்டு நாளை மதியம் ஊரிலுள்ள கல்யாணமண்டபத்தில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் இந்த நாளுக்காக ரஹ்மான் எவ்வளவு போராடினான் என்பது அவன் மாத்திரமே அறிவான். பானுவை சந்தித்து விட்டு வீடு திரும்பியவனை வாசலிலையே வழிமறித்தாள் ரஸீனா. அவளுக்கு தெரியும் மகன் பானுவைதான் பார்த்து விட்டு வருகிறான் என்று. இருந்தாலும் மனம் கேளாமல் நிறுத்தி விசாரிக்கலானாள்.
“எங்க போயிட்டு வர?”
“இது என்ன உம்மா கேள்வி? நான் எங்க போறேன்னு, வரேன்னு இதுவரைக்கும் நீங்க கேட்டதே இல்லையே! இன்னைக்கென்ன புதுசா கேக்குறீங்க?” அன்னை அறிந்துதான் கேற்கின்றாள் என்று தெரிந்தே பதில் சொன்னான் ரஹ்மான்.
“நீ எங்க போயிட்டு வரேன்னு எனக்கு தெரியும். அந்த வீட்டு பொண்ணு நமக்கு வேணாம்” ரஸீனா உறுதியாக தன் முடிவை சொல்லி விட்டு வீட்டுக்குள் செல்ல அன்னையின் கையை பிடித்து சோபாவில் அமர்த்தியவன்
“ஏன் வேணாம்? சரியான காரணம் சொல்லுங்க?” அன்னையின் முகத்தையே பாத்திருந்தான் பிடிவாதமாக.
“இங்க பாரு ரஹ்மான். அல்லாஹ்வின் கிருபையால் பணவசதியில் எங்களுக்கு எந்த குறைவும் இல்ல. வரப்போகும் மருமகள் கொண்டு வருவதை எதிர்பார்த்து நானும் இல்ல எங்க குடும்பமும் இல்ல. அது உனக்கும் நல்லாவே தெரியும். வீட்டுக்கு வர்ரவளால வீட்டுல பிரச்சினை இல்லாம இருக்கணும். இன்னும் கல்யாணமே ஆகல. வரும் முன்னே ஆயிரத்து எட்டு பிரச்சினை. இதுல கல்யாணமும் ஆனா?” கேவிக்குரியோடு நிறுத்தினாள் ரஸீனா.
“அப்போ ஊர் சொல்லுறத கேட்டு எனக்கு நடந்த எல்லாத்துக்கும் பானுதான் காரணம்னு சொல்லுறீங்க? அப்படித்தானே” அன்னையை நேரடியாகவே கேட்டான் ரஹ்மான்.
ரஹ்மானுக்கு இப்படி ஆகிருச்சு, அப்படி ஆகிருச்சு என்று புலம்பும் ரஸீனா என்றுமே! பானுவால் தான் என்று நேரடியாக குற்றம் சாட்டவில்லை. வதந்தியால் குழம்பியிருந்தவள் கொஞ்சம் நாளாக ஒரு மாதிரியாக புலம்பினாலும் பானுவின் பெயரை கூறவே இல்லை. கல்யாணத்தை தள்ளி போட சொல்லுவாள் என்று நினைக்க இப்படி அவன் உயிரிலும் மேலாக நினைக்கும் பானுவையே வேண்டாம் என்று அன்னை சொல்வாள் என்று ரஹ்மான் நினைக்கவே இல்லை.
“எங்க யாருக்குமே இந்த கல்யாணத்தில் இஷ்டமில்லை” அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாது இவ்வாறு பதில் சொன்னாள் ரஸீனா.
பெண்ணை திருமணம் செய்து வைக்கத்தான் வலி என்பவர் தேவை ஆணுக்கு அது தேவை இல்லை. அதை சொல்லாமல் மறைமுக மிரட்டல் விடுத்தான் ரஹ்மான்.
“நீ இஷ்டப்பட்டா போதுமா? கல்யாணம் நடந்துடுமா?அவ நமக்கு வேணாம். ஊர் சொன்ன மாதிரி ஏதாவது நடந்திடும். அதுவுமில்லாம அவ வாப்பாவை பத்தி வேற தப்பு தப்பா பேசுறாங்க” சற்று குரலை உரத்தினாள் ரஸீனா.
“நீங்க என்ன சொன்னாலும் நான் பானுவைதான் கல்யாணம் பண்ணிக்கொள்வேன். அவ வாப்பாவை பத்தி ஊரு இன்னைக்கி நேத்தா பேசிச்சு? எல்லாம் தெரிஞ்சிதானே பொண்ணு பாக்க போனீங்க? நான் கல்யாணத்த நிறுத்த சொன்னப்போ அவளுக்கு சப்போர்ட் பண்ணி ரெண்டு மாசமா என் பையன நினைச்சிருப்பா அது இதுன்னுனு பேசீனீங்களே! இப்போ நீங்களே வாக்கு கொடுத்து அவ மனசுல எதிர்பார்ப்பை வளர்த்து விட்டுட்டு கல்யாணத்த நிறுத்தினா அந்த பாவம் உங்கள சேராதா? நீங்களே கல்யாணம் பண்ணி வைக்கிறதுதான் உங்களுக்கே பெருமை. இல்லனா என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும்” கோபத்தின் உச்சியில் இருந்தாலும் காரியம் நடக்க வேண்டியதால் பொறுமையாகவே பேசினான் ரஹ்மான்.
“என்ன செய்வ? போய் பொண்ணு கேட்டு தனியா கல்யாணம் பண்ணிக்க போறியா? சம்பாதிக்கிறல்ல” எங்கே மகன் தன்னை மீறி பானுவை திருமணம் செய்து கொள்வானோ! என்ற பயம் வேறு நெஞ்சில் ஏறி அமர்ந்து கொள்ள கண்களும் கலங்கி தொண்டையடைத்து குரல் கமர சொன்னாள் ரஸீனா.
அன்னையின் குரல் நெஞ்சை உருக்கினாலும் அவளின் முகம் பாராமல் “சீ..சீ.. அப்படியெல்லாம் செய்ய மாட்டேன். பானுவுக்கு நல்ல மாப்பிளையை பார்த்து நானே கல்யாணம் பண்ணி வச்சிட்டு கண்காணாத இடத்துக்கு போய்டுவேன். அவ நல்லா வாழ்த்த பாத்து நம்ம பையன் வாழ வேண்டிய வாழ்க்கைனு ஏங்குவீங்கல்ல. அப்போ புரியும் எனக்கு நடந்ததுக்கெல்லாம் அவதான் காரணமா இல்ல, விதிதான் காரணமான்னு. நானே பானுகு ஏன் மாப்புள பாக்குறேன்னு யோசிக்கிறீர்களா? என்ன விட எல்லாத்துலயும் உயர்ந்தவனா பார்க்கத்தான்” என்றவன் அறைக்குள் சென்று விட்டான்.
நவ்பர் பாய் அன்னையும் மகனும் சோபாவில் அமரும் போதே வந்து விட்டார். அவர்களின் உரையாடலை செவிமடுத்தவர் மகன் ஒரு முடிவோடுதான் இருக்கின்றான் என்று புரிந்து கொண்டு அவன் உள்ளே சென்றதும் ஒன்றும் அறியாதவர் போல் வீட்டினுள் வர ரஸீனா தன் புலம்பலை ஆரம்பித்தாள்.
“இங்க பாரு ரஸீ… நாம பொண்ணு பாத்து அவனை கல்யாணம் பண்ண சொன்ன விஷயமில்லை இது. அவனாவே பாத்தா பொண்ணு. அவன் முடிவுல அவன் உறுதியாதான் இருப்பான். அவன் கோபமும் பிடிவாதமும் உனக்குத் தெரியாததில்ல. அவன் மனச உன்னால மாத்தவும் முடியாது. ஊரு பேசுறதுக்கு பயந்து பேசின கல்யாணத்த நிறுத்தினா.. நாளைக்கு வாக்கு தவறிட்டாங்க என்ற பேச்சு வந்துடும். அன்னைக்கும் அந்த பொம்பள புள்ள வாழ்க்கையை நினைச்சுதான் பேசினேன். இன்னைக்கும் அதேதான். கல்யாணம் நின்ன கவலைல்ல அது பாட்டுக்கு ஏதாவது பண்ணிக்கிட்டா பலி சொல் வேறு வந்திடும். இப்போ இப்படி பேசிட்டு போற மகன் அந்த புள்ளைக்கு ஏதாவது ஆகிருச்சுனா என்ன மாதிரி முடிவெடுப்பானோ தெரியாது பாத்துக்க” அவர் வேறு தன் பாட்டுக்கு கொளுத்திப்போட்டு விட்டு போக கலங்கி நின்றாள் ரஸீனா.
காலையில் வீட்டிலிருந்து கிளம்பும் ரஹ்மான் வீடு வர இரவனது. மூன்று வேலை சாப்பாடும் வெளியில் சாப்பிட ஆரம்பித்திருந்த ரஹ்மான். டீ கூட வீட்டில் சாப்பிட வில்லை. ரஸீனா அழைக்க அழைக்க செருப்பை மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பிவிடுபவனை என்ன செய்வதென்று புரியாமல் ஜமீலாவிடம் முறையிட அவள் வேறு அலைபேசி அழைப்பெடுத்து ரஹ்மானை திட்ட அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தவன் ஒரு வார்த்தையேனும் பதில் சொல்லாது துண்டித்து விட்டான்.
இவ்வாறு அவன் வீட்டில் மௌன யுத்தம் தொட பானுவின் வீட்டில் ரஹ்மானின் வீட்டிலிருந்து வரும் செய்திக்காக காத்துக்கொண்டிருப்பார்கள் என்றறிந்தவன் முபாரக்கை அழைத்து வீட்டில் நடக்கும் பிரச்சினையை தெளிவாக சொன்னவன் கொஞ்சம் நாள் பொறுமையாக இருக்கும் படியும், இந்த விஷயம் பேகத்துக்கோ, பானுவுக்கோ தெரிய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டான்.
ரஹ்மானின் பிடிவாதம் ரஸீனா அறிந்ததுதான். ஆனால் பானுவின் மேல் வைத்த காதலின் அளவைத்தான் புரிந்து கொள்ள வில்லை. எவ்வளவு கோபமாக இருந்தாலும் அன்னையோடு கொஞ்சாமல் அவன் நாட்கள் இருந்ததே இல்லை. இன்று அவளோடு பேச மறுக்கிறான். அவள் சமைத்ததை உண்ண மறுக்கிறான். அப்படி என்ன காதல் இது? முதன் முறையாக காதல் மீதும், பானுவின் மீதும் வெறுப்பு வர தன்னிலையில் பிடிவாதமாக இருந்த ரஸீனா ரஹ்மான் திடீரென நாற்பது நாட்கள் ஜமாத்தில் போவதாக பாஷித் கூற அதிர்ச்சியடைந்தாள்.
மூன்று நாட்கள் ஜமாத்தில் போவதற்கே அன்னையை பிரிய வேண்டுமே என்பவன். வெளியூரில் வேலை கிடைத்தால் அன்னையையும் அழைத்து கொண்டு தான் செல்வேன் என்பவன் நாற்பது நாட்கள் தன்னை பாராது இருக்க முடிவெடுத்து விட்டான் என்றால் அவன் நிலையிலிருந்து இறங்கி வரவே மாட்டான் என்று புரிந்தது. வேறு வழியில்லாது ரஸீனாதான் இறங்கி வரவேண்டியதாகிற்று.
நவ்பர் பாயிடம் சென்றவள் “எப்போ பேகம் வீட்டுக்கு போய் கல்யாணத்த பத்தி பேச போறீங்க? இப்படியே இருந்தா என்ன அர்த்தம்?” அவளால் கணவனை மட்டும் தான் அதட்ட முடியும் தோளுக்கு மேல் வளர்ந்த இரண்டு மகன்களும் அவள் சொல்வதை கேட்பதில்லை. கட்டிக்கிட்ட பாவத்துக்காக நவ்பர் மட்டும் ரஸீனா எது சொன்னாலும் மெளனமாக இருக்க யார் மேலையோ இருக்கும் கோபமெல்லாம் அவர் தலையில் தான் விடியும்.
“எங்கயோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறு ஆத்தா..” மனதுக்குள் சொல்லிக் கொண்டவர் “அதான் நீயே சொல்லிடல்ல ரஸீ… நாளைக்கே போறேன். போய் அக்பர் கிட்ட பேசுறேன். பேசி கல்யாணத்துக்கு நாள் குறிக்கிறேன். யார் யாருக்கு சொல்லணும்னு நீ ஒரு லிஸ்ட் போட்டு வை. அப்படியே ஜமீலாக்கும் போன் பண்ணி வசீம் மாப்புள யாருக்கெல்லாம் சொல்லணும்னு நினைக்கிறாருனு கேளு. ரஹ்மான் ப்ரெண்ட்ஸ், பாஷித் பிரெண்ட்ஸ்,எனக்கு தெரிஞ்சவங்கனு இன்னும் ஆட்கள் கூடும்” அவர் பேசிக்கொண்டே போக
“முதல்ல போய் பேசிட்டு வாங்க, போகும் போது ரஹ்மானையும் கூட்டிட்டு போங்க. அவன் சொல்லுற படியே செய்ங்க” கூடுதலாக எந்த குழப்பமும் வரக்கூடாதென்று கூறினாள் ரஸீனா.
இரவில் வீடு வந்த ரஹ்மானை வாசலிலையே பிடித்த பாஷித் ரகசிய குரலில் “வாழ்த்துக்கள் நாநா நான் கொடுத்த ஐடியா வேலை செஞ்சிருச்சு. கல்யாணம் பேச நாளைக்கு போறோம்” என்று கட்டிக்கொள்ள
“நிஜமாவா” என்று தம்பியை கட்டிக்கொண்டவனை தள்ளி நிறுத்திய பாஷித்
“எங்க சாவி? பைக் சாவி? கல்யாணத்த நடக்க உதவி செஞ்சா பைக்கை தறதா சொன்னியே!” அந்த இருளிலும் கண்கள் பளபளக்க கேட்க்கும் தம்பியை பார்த்து சிரித்த ரஹ்மான்
“புதுஷாவே வாங்கித்தரேன் டா…”
“இல்ல, எனக்கு இதுதான் வேணும். என்ன தொடக்கூட விடமாட்டள இப்போ பாரு உன் கண்ணு முன்னாடியே கடத்திக்கொண்டு போறேன்” என்றவன் சாவிக்காக பிடிவாதமாகவே நின்றான்.
“அத நான் என்ன வேணா பண்ணிக்கிறேன். நீ ப்ரோமிஸ் பண்ணா மாதிரி சாவிய கொடு” முறைக்க ஆரம்பித்திருக்க
சாவியை கொடுத்த ரஹ்மான் “இப்போ ஓட்டி எங்கயாச்சும் விழுந்து தொலைக்காத, ஏற்கனவே பிரச்சினை ஓடிக்கிட்டு இருக்கு, காலைல போ” என்றவாறே உள்ளே செல்ல பாஷித் அதை காதில் வாங்காமல் நாநாவின் வண்டியின் அருகில் நின்றிருந்தான்.
மருந்தின் வீரியத்தால் தூங்கியவாறே இருந்ததால் வீட்டில் நடப்பவைகள் எதுவும் ஷஹீ அறிந்திருக்கவில்லை. விழித்திருந்த பொழுது ரஹ்மானின் சிந்தனைதான் கல்யாணத்தை பற்றி வீட்டில் பேசி இருப்பானோ! என்ன சொல்வார்களோ! திருமணத்துக்கு சம்மதம் சொல்வார்களா? மறுப்பார்களா?
நான்கு நாட்கள் செல்ல நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்திருக்க ஷஹீயின் உடலும் கொஞ்சம் கொஞ்சமாக தேறிக்கொண்டிருந்தது.
முபாரக் வேறு அவளின் முகத்தை கூட பாராது என்ன பேசினாலும் பேகத்தோடு மாத்திரம் பேசிச் செல்கிறான். தான் ரஹ்மானோடு பேசியதுதான் கரணம் என்று ஷஹீ நினைத்துக்கொண்டிருக்க, தங்கையை அடித்த குற்ற உணர்வில் தான் அவள் முகம் பார்க்க மறுக்கின்றான் என்பது அவன் மட்டும் அறிந்த உண்மை.
ரஹ்மானோடு பேசி ஒரு வாரமாகிற்று இன்னும் எந்த பதிலும் சொல்லவில்லை. “மீண்டும் அலைபேசி தொடர்பை ஏற்படுத்துவோமா? ஒருவேளை வீட்டில் மறுத்து விட்டார்களோ! அதனால் தான் அமைதியாக இருக்கின்றானோ! அது என்ன வீட்டில் மறுத்தால் அமைதியாக இருப்பதா? உறுதியாக சொல்ல வேண்டாமா? என்னைத்தான் கல்யாணம் செய்து கொள்வேனென்று” ஷஹீயின் மனம் அலைக்கழிக்க ரஹ்மானோடு பேசுவதா? வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தாள்.
அன்னைக்காகத்தான் இந்த திருமணம் என்று சொல்லிக் கொள்பவளின் ஆழ் மனம் என்றோ ரஹ்மானை நேசிக்க ஆரம்பித்திருந்ததை அவள் உணரவில்லை. அதனால் தான் அவன் பதிலை எதிர்பார்த்து காத்திருந்து கோபமும் கொள்கிறாள். அதை உணரும் பொழுது அவனது காதலை ரஹ்மான் பானுவுக்கு உணர்த்தி இருப்பானோ!
அந்த நேரத்தில் தான் ரஹ்மான் அழைத்து முபாரக்குக்கு வீட்டில் நடக்கும் பிரச்சினையை சொல்லி இருக்க பேகத்திடம் வந்தவன் ஷஹீயின் காதில் விழும் படி ரஹ்மானின் அன்னை சுகயீனமாக இருப்பதாகவும் இரண்டொரு நாள் தாண்டி வருவதாகவும் கூறிச் செல்ல நிம்மதியடைந்தாள் ஷஹீ.
சொன்னது போலவே நவ்பர் பாயும் ரஹ்மானும் ஒரு மாலை வேளையில் வர அக்பரும் அந்த நேரத்தில் வீட்டில் இருக்க முபாரக்கும் அமர்ந்து கல்யாண விஷயங்களை பேசலாயினர்.
நிகாஹ்வுக்கு முன் தினம் ஷஹீயின் வீட்டில் ஷஹீக்கு மருதாணி இடும் விழா. அது ஒரு இரவில் நடக்கும் விழா என்பதாலும், பெண்கள் கலந்து கொள்ளும் விழா என்பதாலும் ரஹ்மானின் வீட்டுப் பெண்கள் இஷா தொழுகைக்கு பின்னால் வருவதாக சொல்லி இருந்தார்கள். அவர்களுக்கு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மஹரிப்பை நெருங்கும் பொழுதே வீட்டில் வண்ண விளக்குகள் ஏற்றப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருக்க, மஹ்ரிப் தொழுகைக்கு பின்னால் குளித்து கூந்தலை காயவிட்டுக் கொண்ட ஷஹீரா இஷா தொழுத பின் இளம் சிவப்பு நிறத்தில் மெகந்திக்காக வாங்கிய லெஹெங்காவை அணிந்து மிதமான ஒப்பனையில் உறுத்தாமல் நகை போட்டிருந்தாள்.
வசதி உள்ளவர்கள் மெஹந்தி விழாவை பெண்கள் அனைவரையும் அழைத்து ஒரு மண்டபத்தில் ஏற்பாடு செய்வார்கள் ஷஹீயை போன்ற சாதாரண குடும்பத்தில் உள்ளவர்கள் சொந்தபந்தங்களோடு வீட்டிலில்தான் விழா எடுப்பர்.
இதில் மணமகனின் வீட்டார் வந்துதான் மருதாணி இட வேண்டும் அல்லது வயதில் முதிந்த ஒரு பெண்மணிதான் முதலில் வைக்க வேண்டும் என்ற எந்த சாத்திர சம்பிரதாயங்களும் இல்ல. ஆனாலும் சிலர் மரியாதைக்காக இவ்வாறு செய்கின்றனர்.
ஷஹீக்கு மருதாணி இட ஹிதாயாதான் வந்திருந்தாள். வித விதமான டிசைன்களில் மருதாணி இடுவதில் ஹிதாயா கைதேர்ந்தவள்.
செயற்கையான, இரசாயணங்கள் கலந்த மருதாணியால் செய்யப்பட்ட கோன்கள் மலிவாக சந்தையில் கிடைக்கும் இந்த காலத்தில் ஷஹீ இயற்கையான இலைகளை பறித்து அதற்கு இன்னும் இயற்கையான மூலிகைகளை மாத்திரம் சேர்த்து காய வைத்து, பவ்டேர் செய்து, அளவாக நீர் சேர்த்து கோன் தயாரித்து வைத்திருந்தாள்.
நன்றாக சிவக்கும் மருதாணி இலைகள் முபாரக் கொண்டு வந்து கொடுத்ததும் முகம் மலர்ந்தவள் கூடவே அலைபேசியையும் தர யோசனையாக நாநாவை ஏறிட்டவளை பேசும் படி செய்கை செய்தவாறு அகன்றான் முபாரக்.
யார் அழைத்தார்கள் என்று யோசனையாகவே காதில் வைக்க மறுமுனையில் ரஹ்மான் பலதடவை “பானு பானு” என்று அழைத்திருந்தான். அவன் பானு என்று அழைத்ததும் தன்னையறியாமல் முகம் மலர்ந்தவள் அமைதியாகவே இருக்க
“பானு” அவன் குரல் காதுக்குள் ஒலித்தது.
“ம்ம்ம்” என்பதை தவிர ஷஹீயிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
“மருதாணி கோன் வாங்கலாம்னுதான் பாத்தேன். மச்சான்தான் நீயே செய்றதாக சொல்லிட்டான். அதான் எங்க மரத்துலயே பறிச்சு கொடுத்தனுப்பினேன். நல்லா சிவக்கும். நல்லா சிவந்தா தான் மனைவி கணவனை ரொம்ப லவ் பண்ணுறதா சொல்லுறாங்க. அதெல்லாம் உண்மையா?”
ரஹ்மானின் பானுவுக்குத்தான் இந்த உணர்வெல்லாம் புதிது. ஆனால் அவனுக்கு அவன் பானுவோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான். அதனால் எந்த தடுமாற்றம்னும் இல்லை போலும் உற்சாகமாகவே பேசலானான்.
அவன் குரலில் என்றுமில்லாத பரவசம் நெஞ்சம் நிரப்ப, அவன் கேட்ட கேள்வியில் மருதாணியின் நிறுத்துக்கே சிவந்தவள் என்னவென்று பதில் சொல்வாள். அவள் அவனை காதலிக்கிறாளா? என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. காதலிப்பாளா? என்று கேட்டால் தெரியவில்லை. ஆனால் இல்லை என்ற பதிலை மட்டும் சொல்ல மனம் அனுமதியளிக்கவில்லை. ஆமாம் என்றால் அவள் அவனை காதலிப்பதாக ஒத்துக்கொள்ள நேரிடும். இல்லை என்று பொய் சொல்ல முடியாது உண்மையில் மருதாணி சிவக்குமே! அதற்கு பதில் சொல்லாது
“நிறையவே அனுப்பி இருக்கீங்க? மரத்தையே காலி பண்ணீங்களா?” அவனின் உற்சாகமான பேச்சும் அவளை பேசத்தூண்டி இருக்க சொன்னவள் சிரித்தாள்.
அவள் சிரிப்பில் லயித்தவன் “அக்கா கல்யாணம் அன்னைக்கு மாப்புள வீட்டுல உள்ளவங்க எல்லாம் வந்து எங்க வீட்டுலதான் மருதாணி போட்டுக்கிட்டாங்க. பத்தாம நைட்டு போய் கதவைத் தட்டி கடைய திறக்க வச்சி வாங்கிட்டு வந்தேன். அந்த அனுபவம் தான். நீயே பண்ணுறதுனு வேற சொல்லி இருக்கேன். பாத்துமா சிவக்கலனா என்ன உண்டு இல்லனு பண்ணிட போறாங்க, சிவக்குரதுக்கு வெத்தல, பாக்கு, சுண்ணாம்பு, எல்லாம் போடணுமா?” அவன் குரலில் அளவில்லா சந்தோசம் நிரம்பி வழிந்தது.
“அத அப்படியே உங்க உம்மமா கிட்ட இடிச்சி கொடுங்க பாவம் மனிசி பல்லு வேற இல்ல” அவன் பேச்சில் எங்கோ ஒளிந்திருந்த அவள் குறும்பும் தலைத்தூக்க அவனோடு வாயாடலானாள் ஷஹீ.
அவள் கிண்டல் பண்ணுவதை புரிந்து கொண்டு சத்தமாக சிரித்தவன் “இல்ல தேயிலை எல்லாம் மருதாணியில் கலப்பங்களாமே அப்போ நல்லா சிவக்குமாமே!” தன் சந்தேகத்தை விடாது கேட்டு வைக்க,
“அதெல்லாம் ஒன்னும் வேணாம். நான் பாத்துக்கிறேன்” என்றவள் “அப்போ நான் வைக்கவா?” என்று மெதுவாக கேட்க ரஹ்மானை ரஸீனா அழைப்பதும் அலைபேசி வழியாக கேட்காது “ம்ம்” என்றவன் அலைபேசியை துண்டித்திருந்தான். பேசும் போது நன்றாகத்தான் பேசுகிறான். அன்று பேசி சென்ற பின் ஒரு அலைபேசி அழைப்பு கூட இல்லை. உண்மையிலயே என்னை காதலிக்கிறானா? இல்லை பழிவாங்கத்தான் இவ்வளவும் செய்கிறானா? புரியாமல் குழம்பினாள் பானு.
ஆனால் அவள் அறியாதது அவளோடு பேசி பழக அவனும் ஆசைதான். அலைபேசி ஒன்றை வாங்கிக் கொடுத்திருக்க முடியும். இந்த தடவை முபாரக் மறுத்திருக்கவும் மாட்டான். அல்லது அவன் அலைபேசிக்கே அழைத்து பேசி இருக்க முடியும் அதையும் மறுத்திருக்க மாட்டான் ஆனால் பானு பழிவாங்கத்தான் கல்யாணம் செய்ய முடிவு செய்தாயா என்று கேட்டதில் ரஹ்மான் தான் அருகில் இருந்தே தன் காதலை உணர்த்த வேண்டும் என்ற முடிவோடு இருந்தான்.
மஹ்ரிப் தொழுகைக்கு பின்னால் வந்த ஹிதாயா ஷஹீயோடு சேர்ந்து இஷாவை தொழுதவள் அவள் லெஹென்காவை அணிந்த பின் ஒப்பனை செய்ய உதவியும் செய்ய பேகம் வந்து இருவரையும் சாப்பிடுமாறு பணித்தனர். ஷஹீ பசிக்கவில்லை என்றதும்
“கொஞ்சமாலும் சாப்பிடு டி.. அப்பொறம் மருதாணி வச்ச பின்னால ரஹ்மான் நாநா ஒன்னும் வந்து ஊட்டி விட மாட்டாரு. அதெல்லாம் நாளைக்குத்தான்” ஷஹீயின் காதில் கிசுகிசுப்பாக சொல்லி சிரிக்க புதிதாய் வந்த வெட்கத்தை மறைக்க தோழியை முறைத்தவாறே அவள் முதுகில் ஒரு அடி கொடுத்தவள்
“ஏன் நீ எனக்கு ஊட்டி விட மாட்டியா?” தோழியிடம் கேட்டாலும் ஏனோ மனம் சொன்னது கண்டிப்பாக அவன் அவளுக்காக எதுவேனாலும் செய்வானென்று.
“ஊட்டலாமே” என்று கண்ணடித்து சிரித்தாள் ஹிதாயா.
ஷஹீயின் இடது கையின் முழங்கைக்கு கீழாக முழுவதும் ஹிதாயா மருதாணி இட்டு முடித்த போதுதான் ரஹ்மானின் வீட்டிலிருந்து வருகை தந்திருந்தனர்.
பெண் பார்க்க வந்திருந்த அனைத்து பெண்களோடு இன்னும் சில பெண்களும் வந்திருக்க ஜமீலா தன் இரண்டு வயது பெண் குழந்தையோடு வந்திருந்தாள். பெண் பார்க்க வந்த போது இருந்த மகிழ்ச்சி ரஸீனாவின் முகத்திலும், ஜமீலாவின் முகத்திலும் இல்லை. ஆனாலும் முயற்சி செய்து சந்தோசமாக இருப்பதாக காட்டிக்கொண்டிருந்தார்கள்.
அவர்களைக் கண்டு வரவேற்கும் விதமாக ஷஹீ எழுந்து நிற்க அவளை அமரும் படி கூறிய ஷம்ஷாத் நலம் விசாரிக்க பதில் சொல்லியவாறே அமர்ந்த ஷஹீ ஜமீலாவின் குழந்தையை கொஞ்சலானாள்.
ஹனாவுக்கும் திருமணம் பேசப்பட்டிருந்தது. ஹாஜரா வந்ததிலிருந்து கண்களால் முபாரக்கை தேடியலைந்தவள் அவன் வீட்டில் இல்லை என்றதும் ஷஹீயின் மீது கவனமானாள்.
ஹாஜராவும், ஹனாவும் சேர்ந்து ஷஹீயின் வலது கைக்கு மருதாணியிட கால்கள் இரண்டுக்கும் ஹிதாயா போட்டு முடித்தாள்.
அதற்குள் ஷஹீக்கு வாங்கிய துணிமணியிலிருந்து, நகை நட்டுவரை அனைத்தையும் மாப்பிளை வீட்டாருக்கு கடை பரப்பி இருந்தாள் மஸீஹா. அவளும் பெருமைதான் பாடினாளே ஒழிய குறை ஏதும் கூறவில்லை. அவள் தான் பார்த்து பார்த்து தேர்வு செய்திருந்தாள். அந்த பொறுப்பை பேகம் மஸீஹாவுக்கு கொடுத்திருந்தாள். அவள் குணம் அறிந்தே பொறுப்பை அவளிடம் கொடுத்து விட பிரச்சினை எதுவும் உருவாகவில்லை.
பேகம் எதிலும் குறை சொல்லும் படி வைத்திருக்கவில்லை. ஆர்வமே இல்லாமல் பார்த்த ரஸீனா கூட திருப்தியாக உணர அங்கே இருந்த சூழ்நிலை கொஞ்சம் அவளின் மனநிலையை மாற்றி இருக்க ஷஹீயோடு சகஜமாக ஓரிரண்டு வார்த்தை பேச ஆரம்பித்திருந்தாள்.
நாளையிலிருந்து வீட்டில் தங்களோடு வந்து இருக்க போகும் பெண். இப்படி முகத்தை திருப்பிக்கொண்டிருப்பது நல்லதில்லை என்று அவள் மனமே இடித்துரைத்திருக்க மகன் என்று வரும் பொழுது அவனுக்கு ஏதாவது ஆபத்து வருமோ! என்றஞ்சியே தாயுள்ளம் கலங்கி நின்றது. ஆனால் இங்கு வந்து ஷஹீயின் முகத்தை பார்த்த பின் எல்லாம் பின்னுக்கு தள்ளப்பட்டு நடந்ததற்கும், நடப்பவைகளுக்கும் இந்த சிறு பெண் என்ன செய்ய முடியும் என்றுதான் என்ன தோன்றியது.
பெண்கள் அனைவரையும் விருந்துண்ண அழைக்க ஷஹீக்கு என்று ஜமீலா கேட்க, ஹிதாயா தான் ஊட்டுவதாக சொல்ல எங்க மைனிக்கு நாங்க ஊட்டுவோம் என்று ஹாஜரா ஒரு செல்ல சண்டையை ஆரம்பித்து ஷஹீக்கு உணவூட்டலானாள்.
நாட்டுக்கோழி கறியும், கலியா, மாசி பொரியல். உருளைக்கிழங்கு கறியோடு நெய் சோறு பரிமாறப்பட்ட சாப்பிட்ட பின் இனிப்புக்காக முந்திரி, கருப்பட்டி தேங்காய் பால் போட்டு செய்த சவ்வரிசி கஞ்சி பரிமாறப்பட்டது.