என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -2

அத்தியாயம் -2(1)

அன்று ஞாயிறு என்பதால் தாமதமாக எழுந்து காலை உணவும் தாமதமாக உண்டு கொண்டிருந்தாள் அனன்யா. அவந்திகா டிவி யில் ஏதோ நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருக்க, வேறு பாட்டு ஏதாவது வை என சொல்லிக் கொண்டிருந்தாள் தங்கை.

உடனே அவள் கேட்ட சேனைலை மாற்றி வைத்தாலும் பெரியவளின் முகம் வாடிப் போய் விட்டது.

“அதான் பார்க்கணும்னா சொல்ல வேண்டியதுதானே, மனசுக்குள்ளேயே வச்சுக்கிட்டா யாருக்கு தெரியும்? மாத்திக்க” என அனன்யா சொல்லவும் உடனே முகம் மலர்ந்தவளாக அவளுக்கு பிடித்த நிகழ்ச்சிக்கு மாற்றம் செய்து கொண்டாள் அவந்திகா.

“ம்மா… எப்படி இருக்கா பாரு, கல்யாணம் பண்ணினா அங்க போய் எப்படி சமாளிப்பாம்மா?” என கவலையாக கேட்டாள் அனன்யா.

அந்தக் கவலை பாக்யாவுக்கும் இல்லாமல் இல்லை. அதற்காக கல்யாணத்தை தள்ளி போடவா முடியும்?

“வாய வச்சுகிட்டு சும்மா இரு, கல்யாணம் ஆனா மாறிக்குவா” என்ற பாக்யா, அவரது கணவரின் அண்ணனுக்கு அழைத்தார்.

இரு நாட்களுக்கு முன் அவர் மூலமாகத்தான் ஒரு பையன் வீட்டிலிருந்து அவந்திகாவை பெண் பார்த்து விட்டு சென்றிருந்தனர். ஏதாவது விவரம் சொன்னார்களா எனக் கேட்டார் பாக்யா.

அவரே பேசுவதாகத்தான் இருந்தார். அவந்திகாவின் ஒல்லியான உடலமைப்பை காரணம் காட்டி வேண்டாம் என சொல்லியிருக்கின்றனர். வேண்டுமானால் அனன்யாவை பெண் கொடுங்கள் என கேட்கின்றனராம்.

பாக்யாவுக்கு கண்கள் கலங்கி விட்டன. கோவமாக வேறு வந்தது.

“வேற இடம் பார்க்கலாம் மாமா” என வருத்தத்தோடு சொன்னார்.

“அவந்திகாவுக்கு வேற இடம் பார்க்கலாம், அனன்யாவுக்கு இதை முடிக்கலாமே ம்மா? பேசி வச்சிக்கிட்டோம்னா பெரிய பொண்ணு கல்யாணம் முடிஞ்சதும் இந்த கல்யாணத்தை வச்சுக்கலாம். உடனே எதுவும் சொல்லாம யோசிச்சு சொல்லு” என சொல்லி கைப்பேசியை வைத்து விட்டார்.

தளர்ந்து போனவராக ஏதோ யோசனையில் இருந்த அம்மாவிடம் என்னவென விசாரித்தாள் அனன்யா. பெரிய மகள் முன் பேச விருப்பம் இல்லாமல் ஒன்றுமில்லை என அப்போதைக்கு சொல்லி விட்டார். யாருக்கும் பசி இல்லை என்பதால் மதிய சமையல் தாமதமாக செய்து கொள்ளலாம் என நினைத்து அவந்திகா மாவு அரைத்துக் கொண்டிருக்க வெளியில் அமர்ந்து பேப்பர் திருத்திக் கொண்டிருந்தார் பாக்யா.

அம்மாவின் அருகில் பாடப் புத்தகத்தோடு அமர்ந்த அனன்யா மெல்ல அவரிடமிருந்து விஷயத்தை வாங்கி விட்டாள்.

உடனே தன் பெரியப்பாவுக்கு அழைத்தவள் இந்த இடம் வேண்டாம் என அவர் மறுக்க முடியாத படி சொல்லி விட்டாள்.

 பாக்யா கோவமாக பார்க்க, “அவங்களுக்கு அக்கா வேணாம்னா போகட்டும், அவளை வேணாம்னு சொல்லிட்டு என்னை கேட்பாங்களா? என்ன நினைச்சிட்டு இருக்காங்க? அங்க போய் நான் எப்படி நல்லா இருப்பேன்? அக்காவுக்கு கஷ்டமா இருக்காதா? முதல்ல இப்ப கல்யாணம் பண்ணி வையின்னு கேட்டேனா நான்?” என கோவப்பட்டாள்.

“எரிச்சல் பண்ணாம உள்ள எழுந்து போடி!” என சிடு சிடுத்தார் பாக்யா.

அம்மாவின் மனநிலை புரிந்த காரணத்தால், “ஏம்மா கவலை படுற, இன்னும் ஆறு மாசத்துல படிச்சு முடிச்சிட்டேன்னா நான் வேலைக்கு போயிடுவேன், அக்காவுக்கு மட்டும் வேற நல்ல இடம் பார்க்கலாம்” என பொறுமையாக சொல்லி உள்ளே சென்றாள்.

அவந்திகா நேரடியாக கேட்டுக் கொள்ளவில்லை என்றாலும் தன்னை வேண்டாம் என சொல்லி விட்டார்கள் என்பது அறிந்து வாடிப் போய் விட்டாள்.

“உன் அருமை தெரியாதவங்க போனா போறாங்க. மாடல்ஸ் எல்லாரையும் பார்த்திருக்கியா? டயட் எக்ஸர்சைஸ் அப்படி இப்படின்னு கஷ்ட பட்டு ஜீரோ சைஸுக்கு மெனேக்கெடுறாங்க, உனக்கு இயற்கையாவே அப்படி இருக்கு, அவ்ளோதான். மத்தபடி நீ ஹெல்தியாதான் இருக்க, புரிஞ்சுதா?” என அக்காவுக்கு சமாதானம் சொன்னாள்.

அவந்திகாவின் மனம் அப்படி எளிதில் சமாதானம் கொள்ளவில்லை. அவளுக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என பெரிதான எதிர்பார்ப்புகள் இல்லை, ஆனால் அம்மாவின் கவலை கூடிப் போகுமே என அவரை நினைத்துதான் வருத்தம் கொண்டாள்.

சோர்வாகத்தான் நேரம் நகர்ந்து கொண்டிருந்தது.

தன் அத்தையை காண வேண்டும் என நினைத்துக் கொண்டேதான் இருக்கிறான் அசோக். ஆனால் நேரம்தான் அமைய மாட்டேன் என்றது. அவரை சந்தித்து வந்து கிட்டத்தட்ட ஒரு மாதமாகியிருந்தது.

யாருமில்லாமல் தனிமையில்தான் பார்த்து பேச நினைத்தான். ஆனால் ஞாயிற்றுக் கிழமையை விட்டால் இன்னும் தள்ளிப் போகும் என்ற நிலை ஏற்படவும் அன்றே கிளம்பி விட்டான்.

கண்ணப்பன் மாப்பிள்ளை வீட்டினருக்கு அழைத்து அனன்யாவுக்கு இப்போது திருமணம் செய்வதாக இல்லை என சொல்லி விட்டார். அவர்களுக்கு திருமணத்தை உடனே நடத்த ஏதோ நெருக்கடி, பிடித்தபடி பெண் அமையாமல் போக அனன்யாவை எப்படியாவது பேசி முடிக்க நினைத்தனர்.

ஆகவே நேரடியாக பாக்யாவிடமே பேச எண்ணி வந்து விட்டனர். திண்ணையில் அமர வைத்துதான் பேசிக் கொண்டிருந்தார் பாக்யா. இல்லை சரி வராது என அவர் சொன்னாலும் அவரை சம்மதிக்க வைத்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிரமாக இருந்தனர். பாக்யாவும் யோசித்த வண்ணம் அமைதி காத்தார்.

அவருக்கு பயம், இத்தனை வருட சம்பாத்யம், சில வருடங்கள் அவந்திகா வேலை பார்த்த போது சேமித்த பணம் என அதை வைத்துதான் நகை சேர்த்திருந்தார். இனி அனன்யாவுக்கு என சேர்க்க எத்தனை வருடங்கள் ஆகுமோ? தான் நன்றாக இருக்கும் போதே இரு பெண்களுக்கும் திருமணம் நடக்க வேண்டும் எனதான் நினைத்தார். ஆகவே சின்ன மகளை பேசி சம்மதிக்க வைக்கலாமா என யோசித்துக் கொண்டிருந்தார்.

அந்த நேரம் பார்த்து வந்தான் அசோக். வந்தவர்கள் யாரென அவனுக்கு சொன்னவர் அவனை யாரென அறிமுகம் செய்வது என திணறலாக பார்த்தார். வெளி ஆட்களிடம் தன் உறவை சொல்ல பிரியப் படுவானோ இல்லையோ என்ற தயக்கம்.

தயங்காமல் தன்னை அவரின் அண்ணன் மகன் என அறிமுகம் செய்து கொண்டான் அசோக். பாக்யாவுக்கு நெகிழ்வாக இருந்தது. அவனிடமும் அவர்கள் பேசினார்கள். அனன்யா போலவே அவனுக்கும் இதில் பிடித்தமில்லை, என்ன சொல்லி இவர்களை வெளியேற்றுவது என நினைத்து அவன் எதுவும் சொல்வதற்கு முன் அனன்யாவே வெளியில் வந்தாள்.

“இங்க பாருங்க, எனக்கு அந்த பையனை பிடிக்கலை. அன்னைக்கு பொண்ணு பார்க்கிறப்போ அவர் கூட இன்னொருத்தர் வந்தாரே… அவரோட சித்தப்பா பையன்னு நினைக்கிறேன், அவரை பிடிச்சிருக்கு, வேணும்னா அவரை கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றாள்.

பாக்யாவுக்கு கோவத்திலும் இயலாமையிலும் முகம் சிவந்து போய் விட்டது. அசோக் கூட என்ன இப்படி பேசி விட்டாள் என அதிர்ச்சியும் அதிருப்தியுமாக பார்த்திருந்தான். வந்தவர்கள் ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டே எழுந்தவர்கள், “இந்த பொண்ணு சரி பட்டு வராதுங்க எங்களுக்கு” என்றனர்.

“அதேதாங்க எங்களுக்கும், அந்த பையன் உங்க குடும்பம் சரி பட்டு வராது” என்றாள். என்ன செய்ய பேச என கையை பிசைந்து கொண்டு நின்றார் பாக்யா.

“நான் பேசிக்கிறேன், நீங்க உள்ள போங்க” என அசோக் சொல்லியும் அங்கேயேதான் நின்றாள்.

விளக்கெண்ணெய் குடித்தது போலாகி விட்டது வந்தவர்களின் முகங்கள். எதுவும் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பி விட்டனர்.

மகளை உள்ளே இழுத்து சென்று அவளின் தோள் பட்டையில் வலிக்க கிள்ளினார் பாக்யா. எப்போதும் பெண்களை இப்படித்தான் கண்டிப்பார், சில சமயங்களில் இரண்டு நாட்கள் வரை வலி இருக்கும். இப்போதும் வலி உயிர் போனாலும் தாடை இறுக பொறுத்துக்கொண்டு கல் போல நின்றிருந்தாள் அனன்யா.

பார்த்திருந்த அவந்திகா அம்மாவை விலக்கி விட, “தள்ளிப் போடி நீ, கொஞ்சமாச்சும் அடக்க ஒடுக்கம் இருக்கா? வந்தவங்க என்ன நினைச்சிருப்பாங்க, ஒரு ஆம்பள பையன் உள்ள போன்னு சொல்றான் அவனுக்கு மரியாதை இல்ல, அப்படியே நிக்கிறா, திமிரு ரொம்ப கூடிப் போச்சு. இவளே இவளுக்கு கெட்ட பேர் தேடிக்கிறாடி” என ஆத்திரத்தோடு சொன்னார்.

அத்தை பேசுவதெல்லாம் தெளிவாகவே காதில் விழ இந்த சமயம் உள்ளே செல்வதா வேண்டாமா என அசோக்கிற்கு தெரியவில்லை.

“விடும்மா அவளை, பாவம் வலிக்கும்” என்ற அவந்திகாவின் குரல்தான் கேட்டது. அதற்கு மேல் அசோக்கிற்கு மனம் கேட்கவில்லை.

“அத்தை” என அழைத்துக் கொண்டே உள்ளே சென்றான்.

அவனை கண்ட பிறகுதான் மகளை விட்டார் பாக்யா. வேகமாக தேங்காய் எண்ணெய் எடுத்து வந்த அவந்திகா தங்கையின் கன்றி சிவந்து விட்ட தோள் பட்டையில் தடவி விட்டாள்.

அசோக்கின் முன்னிலையில் அவமானமாக உணர்ந்த அனன்யாவின் முகம் கறுத்து போயிருக்க கண்களில் இரு சொட்டு கண்ணீர் அவளை மீறி விழுந்தது. உடனே கண்களை துடைத்து அழுகையை கட்டுப் படுத்திக் கொண்டு உர் என முகத்தை வைத்துக்கொண்டாள்.

“என்ன அத்தை இது? அவங்ககிட்ட பொறுமையா சொல்லாம இப்படி ஏன் செய்றீங்க?” எனக் கேட்டான் அசோக்.

பாக்யா பதில் சொல்லும் முன், “எங்கம்மா என்ன வேணா செய்வாங்க, உங்களுக்கு என்ன?” என கோவப்பட்டாள் அனன்யா.

“பார்த்தியா அசோக், இப்படி இருந்தா என்ன செய்ய நான்? எனக்கப்புறம் இதுங்களுக்கு யார் இருக்கா? அவளுக்கு அமையலைன்னா என்ன இவ சரின்னு சொன்னா இவ கவலையாவது தீரும்தானே? யாரையும் எடுத்தெறிஞ்சு பேசுற நிலையிலயா இருக்கிறோம்? கொஞ்சமும் புரிஞ்சுக்காம இருந்தா என்ன செய்வேன்?” எனக் கேட்டவருக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வர தள்ளாடி தரையில் அமர்ந்து விட்டார்.