Advertisement

எங்கே எந்தன் இதயம் 03

சக்திவேல் குளித்து முடித்து உணவு மேசையில் அமர்ந்திருக்க, இன்னும் அவன் மனைவி அறையை விட்டு வெளியே வரவில்லை. கண்ணம்மா, “சாப்பாடு எடுத்து வைக்கவா தம்பிஎன்று இரண்டு மூன்று முறை கேட்டுவிட்டு பின்னும் கூட, அசையாமல் தலையசைத்து மறுத்துவிட்டு அமர்ந்திருந்தான் அவன்.

மேலும் அரைமணி நேரம் கடந்த பின்னும் இதே நிலை நீடிக்க, கண்ணம்மா பொறுக்க முடியாமல் வேதவள்ளியின் அறைக்குள் நுழைந்தார். கையில் இருந்த நகத்தை கடித்து துப்பியபடி அவள் அமர்ந்திருக்க, “வேதாம்மாசக்தி தம்பி சாப்பிடாம உட்கார்ந்து இருக்கும்மாஎன்று கவலையுடன் கூறினார் கண்ணம்மா.

சும்மா இரு கண்ணம்மா. இத்தனை நாள் நான் எடுத்து வச்சு தான் சாப்பிட்டாரா உங்க தம்பி. பசிச்சா சாப்பிடுவாங்க. நீ போஎன்று அவள் முகத்தை  திருப்பிக் கொள்ள

தப்பு கண்ணு. சாப்பிட உட்காரும்போது இப்படி செய்யக்கூடாது. இத்தனை நாள் நீ கூட இல்ல, இன்னைக்கு அப்படியா? விட்டுப் போற உறவா கண்ணுஎன்று உரிமையுடன் கண்ணம்மா அறிவுரை கூற,

எனக்கு மனசு வரல கண்ணம்மா. நீ எடுத்து வைஎன்றவள் கட்டிலில் சாய்ந்துவிட்டாள்.

இப்படி பண்ணாத வேதாம்மா. சக்தி தம்பி கோவம் உனக்கு தெரியாதா. உனக்காக தான் காத்திட்டு இருக்கு.” என்று மீண்டும் தயங்கி நின்றார் கண்ணம்மா.

அவரின் நச்சரிப்பு தாளாமல் வேதவள்ளி எழுந்து அறையை விட்டு வெளியே வர, உணவு மேசையில் அமர்ந்திருந்தவனை காணவில்லை. அவன் அமர்ந்திருந்த இடத்தில் அவனது அலைபேசியை அவன் விட்டுச் சென்றிருக்க, தான் பேசியது நிச்சயம் அவன் காதில் விழுந்திருக்கும் என்று புரிந்தது அவளுக்கு.

ஆனால், குற்றவுணர்வுக்கு பதிலாக எரிச்சல் உணர்வே மேலோங்க, “ஏன் நான் பேசினா கேட்டுக்க மாட்டாரா?” என்று அதுவேறு கோபம்.

அவன் அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்தவள் மேசையின் மீது தலையை சாய்த்துக் கொள்ள, “தம்பி எங்கே வேதாம்மா?” என்றபடியே வந்த கண்ணம்மா, “நீ பேசுனது எதுவும் காதுல விழுந்திருக்குமோ?” என்று தவித்து நிற்க

நான் தப்பா எதுவும் பேசல கண்ணம்மா. என் வலி இதைவிட பெருசு. நீங்க சாப்பிடுங்கஎன்றவள் அதற்குமேல் அங்கே நிற்காமல் நகர்ந்து பால்கனிக்கு வந்துவிட்டாள்.

பால்கனியில் இருந்த இருக்கையில் அமராமல், கம்பிகளாக இருந்த பால்கனியின் சுவற்றில் சாய்ந்தபடி தரையில் அவள் அமர்ந்துவிட, அடுத்த ஐந்து நிமிடங்களில் சக்திவேலனின் அலைபேசியுடன் வந்து நின்றார் கண்ணம்மா.

அந்த அலைபேசி ஒலியெழுப்பிக் கொண்டிருக்க, “இது அடிச்சுட்டே இருக்கு கண்ணுஎன்றவர் அலைபேசியை அவளிடம் நீட்ட, அலைபேசியில் பெரிய மீசையுடன் சிரித்துக் கொண்டிருந்தது அவள் தந்தை தான். உடன் அவரின் மருமகனும் நின்றிருக்க, இருவர் முகத்திலும் மலர்ந்து விரிந்ததை போல் ஓர் புன்னகை.

அந்த புன்னகையில் மனம் வாடியவள் அலைபேசியை அமைதியாக்கி அருகில் வைத்துக்கொள்ள, அடுத்த இரண்டு நிமிடங்களில் மீண்டும் அழைப்பு. இந்த முறை சக்திவேலனின் தந்தையிடம் இருந்து

எடுப்பதா? வேண்டாமா?’ என்று அவள் பட்டிமன்றம் நடத்தி முடிப்பதற்குள் அழைப்பு முடிந்து போயிருந்தது. சட்டென அவள் ஆசுவாசமாக மூச்சுவிட, அவன் தந்தை சொக்கநாதன் விடாமல் மீண்டும் அழைத்தார்.

இத்தனை முறை தொடர்ந்த அழைப்பில் அவளுக்கும் பதற்றம் தொற்றிக் கொள்ள, “எங்கே போய் தொலைஞ்சாங்க இவங்கஎன்று கணவனை கருவியபடி அவள் தாமதிக்க, அதற்குள் இன்னும் இருமுறை அலைபேசி அடித்து ஓய்ந்திருந்தது.

அதற்குமேல் தாமதிக்காமல் வேதவள்ளி அழைப்பை ஏற்க, “அய்யா சத்திஎங்கேயா இருக்க. சொல்லாம கொள்ளாம இதென்ன புது பழக்கம் தம்பி?” என்று தவிப்பும், கலக்கமுமாக ஒலித்தது சொக்கநாதனின் குரல்.

அவர் பேச்சில் வேதவள்ளிக்கு கண்ணீர் துளிர்க்க, பட்டென தனது கையால் வாயை மூடிக் கொண்டாள் அவள்.

அதற்குள், “தம்பிபேசுய்யாஎன்று எதிர்முனை மீண்டும் பேசிட, ம்ஹூம் வாயைத் திறக்கவில்லை வள்ளி.

என்னய்யா கோபம் என்மேல. உங்க பேச்சுக்கு மீறி நான் எதுவும் செய்யலையே சாமி. இந்த அப்பன்கிட்ட பேசக்கூட முடியாத அளவுக்கு நான் என்னய்யா தப்பு செஞ்சேன்என்று அவர் கலங்க, இங்கே லேசான சத்தத்துடன் கேவினாள் மருமகள்.

ஆனால், அந்த ஒற்றைக் கேவல் சத்தத்தில் தனது மருமகளை கண்டு கொண்டார் சொக்கநாதன். “தாயி…” என்று பதட்டத்துடன் அழைக்க, அதற்குமேல் தாளாமல் சத்தமாக அழுதுவிட்டாள் மருமகள்.

யாரு வேதாவா? வள்ளியம்மாவா?” என்று பின்னணியில் இருந்து சில குரல்கள் காதில் விழ, வாயைத் திறக்கவே இல்லை வேதவள்ளி.

அம்மாடி பேசுடாஎன்று சொக்கநாதன் துடிக்க

வள்ளியம்மாஅப்பா பேசுறேன்டாஎன்ற குரலில் உயிர் துடித்து அடங்கியது வேதவள்ளிக்கு. ஆனாலும், அந்த மனிதரிடம் பேசும் எண்ணமில்லை அவளுக்கு.

அவளது வைராக்கியம் அவளை கட்டிவைக்க, எதிரில் பதறி நின்றவர்களுக்கு பதில் என்று எதையும் கொடுக்காமல் அழைப்பைத் துண்டித்துவிட்டாள் அவள்.

சொக்கநாதன் விடாமல் மீண்டும் மீண்டும் அழைத்து கொண்டேயிருக்க, அவரிடம் பேசும் துணிவில்லாமல் அலைபேசியை அணைத்து வைத்துவிட்டாள் இறுதியாக.

கிட்டதட்ட இருபது நிமிடங்கள் கழித்து அலைபேசி அமைதியடைய, அதற்கு இணையாக அழுகையைத் தொடங்கி இருந்தாள் வேதவள்ளி. யாருமில்லா தனிமை அழுவதற்கு நல்ல துணையாகிப் போக, தடுக்க ஆளில்லாத துணிவில் அழுது கொண்டிருந்தாள் அவள்.

ஆனால், அப்படியெல்லாம் விட முடியாது என்று அறிவிப்பது போல் சில நிமிடங்களில் கணவன் வந்து நிற்க, அவனைக் காணவும் எரிச்சலுடன் கண்களைத் துடைத்துக் கொண்டாள் மனைவி.

அவள் அழுகையை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல், “என் போன் எங்கே?” என்று அதட்டலாக சக்திவேலன் கேட்க, அருகிலிருந்த அலைபேசியை எடுத்து அவன் கைகளில் கொடுத்தாள் வேதவள்ளி.

அலைபேசியை கையில் வாங்கியவன், பக்கவாட்டில் இருந்த பொத்தானை அழுத்த, அப்போதுதான் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்ததை கவனித்தான்.

தரையில் அமர்ந்திருந்தவளை முறைத்தபடியே, அவன் அலைபேசியை உயிர்ப்பிக்கவும், அலைபேசி அலறவும் சரியாக இருந்தது. அழைத்தது அவன் தந்தை தான். நேற்றிலிருந்து அவருக்கு அழைத்துப் பேசாதது நினைவு வரவும்,  அழைப்பை ஏற்று, “சொல்லுங்கய்யா” என்றான் சக்திவேலன்.

“தம்பி… தம்பி இப்போ வேதாம்மா பேசுச்சேய்யா.” என்று அவர் பதட்டத்துடன் பேச,

“ஏன் இப்படி கிடந்து குதிக்கிறிங்க. உங்க உடம்பு இருக்க நிலைமை நியாபகம் இருக்கா. நிதானிச்சு பேசுங்க” என்று சக்திவேலன் அதட்ட,

“இல்லையா… வேதாம்மா” 

“இங்கேதான் இருக்கா. உங்ககிட்ட பேச வேணாமுன்னு போனை அமர்த்தி போட்டுட்டு உட்கார்ந்திருக்கா. போதுமா” என்று உள்ளதை உள்ளபடியே அவன் உரைத்திட, வேதவள்ளி அவனை உறுத்து விழித்தாள்.

ஆனால், சொக்கநாதனோ, “அந்த புள்ளைக்கும் கோபம் இருக்கும்ல சத்தி.” என்று மருமகளுக்கு வக்காலத்து வாங்கிட, 

“இருக்க வேண்டியது தான் அய்யா…” என்றதுடன் முடித்துக் கொண்டான் சக்திவேலன்.

“நீ எப்படிய்யா அங்கன. உனக்கு வேதாம்மா பத்தி தெரிஞ்சு தான் இருந்ததா. எங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமேய்யா.” என்று பெற்றவர் மகனின் வேதனையை மனதில் கொண்டு பேச,

“என் பொண்டாட்டி இருக்க இடம் எனக்கு எப்படிய்யா தெரியாம இருக்கும்.” என்று அதிராமல் கேட்டு நின்றான் மகன்.

“தெரிஞ்சும் ஏன் சாமி இப்படி தனியா கிடக்கணும்”

“என் பொண்டாட்டிக்கு என்னோட வாழவே விருப்பமில்லையே. என்னை வேற என்ன  சொல்லுதீக”

“என் மருமக அப்படி சொல்லுச்சா சத்தி”

“பின்ன, நான் பொய் சொல்லுவேனா ஐயா”

“நீ என் மருமக கிட்ட போனைக் கொடு”

“நீங்க போன் அடிச்சுட்டே இருக்கவும், போனை அமர்த்தி போட்டுட்டு சட்டமா உட்கார்ந்திருக்கா. அவகிட்ட என்ன பேசப் போறீங்க நீங்க.”

“நீ கொடுய்யா. நான் பேசணும்”

“நீங்க அவகிட்ட பேச ஒன்னும் இல்ல ஐயா. மரியாதை தெரியாதவகிட்ட எங்க ஐயா பேச வேணாம். அவ என்னோட வாழ வரமாட்டேன்னு சொல்லிட்டா. நான் என் புள்ளையை தூக்கிட்டு வண்டி ஏறுறேன். நான் பெத்த புள்ளையாவது எனக்கு நிலைச்சு இருக்கட்டும்.”

“சத்தி வேண்டாம்ய்யா. அவசரப்பட்டு நீயா ஏதும் செஞ்சு வச்சிடாத. ஏற்கனவே ரணப்பட்டு கிடக்குற பிள்ளை. நீயும் நோகடிச்சுடாத தம்பி.”

“என்னை என்னதான்ய்யா செய்ய சொல்றிங்க”

“நீ என் மருமககிட்ட போனை கொடு சத்தி” என்று முடிவாக தந்தை உரைத்துவிட, அவர் பேச்சை மீறி பழக்கம் இல்லாதவன் வேதவள்ளியிடம் அலைபேசியை நீட்டினான்.

அதை கையில் வாங்கி பேசும் துணிவு இல்லாமல், வேதவள்ளி மறுப்பாக தலையசைக்க, கையில் இருந்த அலைபேசியை அவள் பார்த்திருக்கும்போதே, பட்டென தரையில் வீசிவிட்டான் சக்திவேல். அலைபேசி நான்கைந்து பாகங்களாக சிதறிப்போக, புதிதாக வெளிப்படும் அவன் கோபத்தை தாங்க இயலாதவளாக கண்களை மூடிக்கொண்டு அழுது கரைந்தாள் வேதவள்ளி.

அவளையோ, அவள் கண்ணீரையோ கண்டு கொள்ளாதவனாக சக்திவேல் வேகமாக அங்கிருந்து விலகிச் சென்றுவிட, அவன் சென்றபின்பும் நீண்ட நேரம் அழுது கொண்டிருந்தாள் வேதவள்ளி.

இந்த கோபக்கார கணவன் பெரிதாக அச்சப்படுத்திப் பார்த்தான் அவளை. கோபக்காரன் தான் அவள் அறிவாள். ஆனால், அவளிடம்…

என்னவோ மிக மோசமாக தோற்றுக் கொண்டிருப்பதாக தோன்றியது அவளுக்கு. இதில் சக்திவேல் சொன்னபடி பிள்ளையை தூக்கிச் சென்று விடுவானோ என்று அதுவேறு சேர்ந்து கொண்டது இப்போது. 

அவள் பிள்ளையை தூக்கி கொடுத்ததெல்லாம் வீம்புக்கென தான். எப்படியும் தன்னை காயப்படுத்த மாட்டான் என்ற நம்பிக்கையில் தான். ஆனால், இப்போது நிகழ்வதெல்லாம் அவள் நம்பிக்கையை குலைக்கும் வண்ணமே இருக்க, உண்மைக்கும் சக்திவேலனைக் கண்டு அஞ்சி நின்றாள் வேதவள்ளி.

அவள் அச்சத்திற்கு காரணமானவனோ, இன்னும் உக்கிரம் குறையாமல் தான் நடமாடிக் கொண்டிருந்தான் மகளின் அறையில். குளித்து முடித்து அயர்வு தீரும்படி அழகாக உறங்கி கொண்டிருந்தவளை பார்த்திருந்தாலே அவனுடைய சஞ்சலங்கள் குறைவது போன்ற உணர்வு சக்திவேலனுக்கு.

மெல்ல கைகால்களை அசைத்தபடி, சோம்பலாக அவன் மகள் கண்விழிக்க, தூர நின்றே அவளை ரசித்துக் கொண்டிருந்தான் தந்தை. ஆனால், எல்லாம் சில நொடிகள்தான்.

தனது கோலிக்குண்டு கண்களால் அறையைச் சுற்றிப் பார்வையைச் செலுத்திய மகள் தேடிய முகம் கிடைக்காமல் போகவும் தனது அழுகை கச்சேரியைத் தொடங்கிவிட்டாள்.

பெற்றவன் பதறிப் போனவனாக மகளை கைகளில் தூக்கிக்கொள்ள, ம்ஹூம்… அழுகை நிற்கவே இல்லை. மாறாக, அவன் கையில் இருந்து நெளிந்து இறங்க முற்பட்டு இன்னும் பெரிதாக அவள் சத்தம் கூட்ட, பயந்தவனாக மகளை மீண்டும் கட்டிலில் கிடத்திவிட்டான் சக்திவேல்.

குழந்தையின் அழுகுரல் கூட கேட்கவில்லையா இவளுக்கு? என்ன பிள்ளை வளர்க்கிறா? என்று சட்டென கோபம் பொங்கிவிட, வேகமாக அவள் இருந்த இடத்தை நோக்கி சக்திவேல் விரைய, இன்னமும் அழுது கொண்டு தான் இருந்தாள் மனைவி.

“பாப்பா அழறா பாரு. எழுந்து போ” என்று சக்திவேல் அதட்ட, அவனை கண்டுகொள்ளாதவளாக தனக்குள் கரைந்து கொண்டிருந்தாள் வள்ளி.

அதில் சினம் கொண்டு, “வள்ளி” என்று கணவன் அதட்டலுடன் அவள் கையைப் பிடித்து எழுப்பி நிறுத்திட, அவன் மகளை போலவே அச்சத்துடன் விழி விரித்தாள் மனைவி. அந்தநேரம் மகளுக்கும், மனைவிக்கும் பெரிதாக வித்யாசம் தெரியவே இல்லை சக்திவேலுக்கு. அதற்குமேல் எங்கே அவன் கோபம் கொள்வது.

மனைவியின் கண்களில் வடிந்து கொண்டிருந்த கண்ணீரை மென்மையாக துடைத்து, அவள் நெற்றியில் முத்தம் வைக்க மட்டுமே முடிந்தது அவனால்.

வள்ளி அவனின் இந்த செய்கையில் அனிச்சையாக நகர முற்பட, விடாமல் பிடித்து தன்னுடன் நிறுத்திக் கொண்டான் சக்திவேல்.

“நிறைய பேசணும். நிறைய சண்டை போடணும். நிறைய நிறைய மன்னிப்பு கேட்கணும். தெரியுது. ஆனா, இப்போ நேரமில்ல. உன் பொண்ணு அழுதுட்டு இருக்கா அங்கே. முதல்ல அவளைப் பாரு” என்று நிதானமாக அவள் காதருகில் அவன் உரைக்க, 

“நீங்க பாருங்க. பொண்ணை தூக்கிட்டு போறேன்னு சொன்னிங்க.”

“முதல்ல என் மாமன் பொண்ணைத்தான் தூக்கணும். அவளை தூக்கினா, என் பொண்ணு தன்னால என்கிட்டே வருவா. அவ ஒருத்தி என்னோட வந்தா, எனக்குன்னு ஒரு குடும்பமே வரும்.” 

“நான் உங்களோட வரமாட்டேன்.”

“அப்புறம் பேசுவோம். முதல்ல உன் மகளை பாரு”  என்று சக்திவேல் அழுத்திக் கூறவும், மகள் மீண்டும் அழவும் சரியாக இருக்க, கணவனை மறந்து மகளைத் தேடி ஓடினாள் வள்ளி.

மகள் அவள் முடியை அவளே பிடித்திழுத்தபடி அழுது கொண்டிருக்க, சட்டென ஒரு செல்லக்கோபம் அன்னைக்கு. 

“எப்பவும் இதே வேலையா போச்சு மீனு” என்று பிள்ளையின் கையில் லேசாக ஒரு அடி வைத்தாள் அவள். அதில் இன்னும் முறுக்கிக்கொண்டு மகள் உதட்டைப் பிதுக்கி அழுகையின் சுதி கூட்ட, “அச்சோ… என் தங்கப்பிள்ளை அழாதடி குட்டிம்மா” என்று மகளை கையில் அள்ளிக்கொண்டாள் அன்னை.

அன்னையின் மார்பில் சாய்ந்து கொள்ளவும், அழுகையை மறந்து குதூகலித்த மகள் அன்னையின் முகத்திலும், அவள் இதழ்களிலும் முகத்தால் மோதி, ஆங்காங்கே முத்தமிட, அந்த காட்சியை கதவோரம் நின்றபடி, ஏக்கத்துடன் பார்த்திருந்தான் சக்திவேல்.

எதேச்சையாக திரும்பிய வேதவள்ளியின் கண்களில் ஏக்கம் நிறைந்த அவன் முகம் தென்பட, என்னவோ ‘தவறு செய்கிறோமோ’ என்று குழம்பி நின்றாள் மனைவி.

Advertisement