அத்தியாயம் 9

அதிர்ச்சியில் இருந்து மீளாதவளாக சூர்யா கேட்டாள். “கேஸ் முடிஞ்சு போச்சா?”

“எஸ் அப்படித்தான் சிவராமன் சார் சொல்றாங்க, உடனே அவங்க ஆபீசுக்கு வர சொல்லி இருக்காங்க. அண்ட் கான்பூர் எதுக்கு போகணும்னு ஆபிஸ் வாங்க சொல்றோம்னு  சொன்னார். “

குழப்பமாக பார்த்து.., “மேம்? எனக்கு ஒன்னும் புரில, நாம இந்த கேஸ் பாக்கறது சீக்ரெட்டாத்தான? அப்போ அவங்க ஆபீசுக்கே வர சொல்றாங்கன்னா.. “, இழுத்தாள்.

“ஐ ஹவ் த சேம் டவுட். ஆனா இங்க கொலை ஆகி ரெண்டு மாசம் ஆனதால யாருக்கும் சந்தேகம் வராதுன்னு அவர் நினைசிருக்கலாம். பட் எதுக்கும் இருக்கட்டும்னு நம்ம டிபார்ட்மென்ட்-லேர்ந்து ரெண்டு ரிப்போர்ட் இன்னிக்கு கமிஷனர் ஆபீஸ் போக வேண்டி இருக்கு.  அந்த வேலையா போறா மாதிரி நாம போறோம்”

“…”, சூர்யா இன்னமும் குழப்பத்தில் இருந்தாள்.

ஷானு சூர்யாவைப் பார்த்து, “போன்ல பேசும்போதே  சிவா சார்.. கோர்வையா பேசல, விட்டு விட்டுத்தான் பேசினார். அநேகமா அவருக்கே இது ஷாக்கிங் நியூஸா இருக்கலாம். காரணம் மர்டரர் சரண்டர் ஆயிட்டானாம்”

ஷானுவின் இந்த பதிலில், “வாட்…? மேம்…?” என்று எதிர்வினையாற்றிய சூர்யாவிற்கு..

….’அப்போ அந்த நகரி-ல செத்துப்போன பொண்ணு இந்தக் கொலைகளைப் பண்ணலையா?

…. இந்த RBI லேடி சோனு பின்னால சுத்தினது, அவங்களை சந்தேகப்பட்டது… மால்-ல அப்படி ஒரு ட்ராமா பண்ணி CCTV ஃபுட்டேஜ் வாங்கினது எல்லாம் வேஸ்ட்டா?

… அப்போ துல்கர் சொன்ன மத்த கொலைகள்?

… அதெல்லாமும் இந்த ஆளே பண்ணினானா?

எல்லாத்துக்கும் என்ன காரணம்?’ மூளைக்குள் சரசரவென கேள்விகள் எழுந்தன. ஆனால் எதை முதலில் கேட்பதென்று தெரியவில்லை.

கொஞ்சம் தெளிந்தும், “யூ ஆர் ஷுர் மேம்?”, என்றுதான் அவளால் கேட்க முடிந்தது.

ஒரு பார்வை நிமிர்ந்து அவளை பார்த்து, “சிவா சார் சொன்னா அது உண்மையாத்தான் இருக்கும்”, என்ற ஷானுவிடம் சிறிய ஒப்புதலின்மை இருந்தது.

“பட்  மேம். நாம இவ்ளோ வேலை பாத்து அத்தனையும் வேஸ்ட்டா…”

“ச்சே சே  சூரி..  எந்த ஒரு விஷயமும் வேஸ்ட் கிடையாது, எல்லாமே ஒரு எக்ஸ்பீரியன்ஸ். ஒவ்வொரு கேசும் நமக்கு ஏதாவது புதுசா கத்துகொடுத்துட்டே தான் இருக்கும்.”

“ஓகே மேம்”

“லெட்ஸ் மூவ்”

பதினைந்து நிமிடங்களில் கடற்கரையை ஒட்டி அமைந்திருந்த சிவராமனின் அலுவலகத்தில் இருவரும் ஆஜராகி இருந்தனர். பெரிய மேஜைக்கு அப்பால் சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்த அவரது முகம் இயல்பை விட இறுக்கமாக இருந்தது.

“உக்காருங்க”, என்றவர் கை மணிக்கட்டில் இருந்த வாட்சில் மணிபார்த்து, “ஒரு அர்ஜெண்ட் மீட்டிங் இருக்கு. ஜஸ்ட் பத்து நிமிஷம். வெயிட் பண்ணுங்க.”, ஷானுவைப் பார்த்து சொன்னார்.

“ஸார். துல்கர்..”, என்று சூர்யா ஆரம்பிக்க அவளை ஒரு தீப்பார்வை பார்த்து, “வெயிட் பண்ணுங்க, என்றார் சிவராமன். அவரின் அந்த பார்வையில் சூர்யாவின் முதுகுத் தண்டுவடம் சில்லிட்டது கூடவே ‘என்ன தப்பு பண்ணிட்டோம்? ஏன் சார் கோவமா பாக்கறாரு?’ என்று எண்ணங்களில் குழப்பமும்.  மேற்கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்து விட்டாள்.

அவர் இருக்கையை விட்டுச் சென்றதும்.. பெண்கள் இருவருக்கும் பேசிக்கொள்ள ஏதுமில்லாததால் வெறுமையாக அமர்ந்திருந்தனர். அந்த பெரிய்…ய கட்டிடத்தின் ஒவ்வொரு செங்கல்லும் இது அதிகார மையம் என்ற உணர்வை கடத்திக் கொண்டு இருந்தன. மொட மொட காக்கி அணிந்த காவலர்களின், டக் டக் டக் எனும் ஷூக்களின் சப்தங்கள் நான் நான் நான் என்று தங்கள் இருப்பை மற்றவர்களுக்குப் பறையறிவிப்பதாக தோன்றியது.

இருவரையும் அதிகமாக சோதிக்காமல் சொன்னபடி பத்தே நிமிடத்தில் வந்த சிவராமன், அவரது இருக்கையில் அமர்ந்ததும், தொலைபேசியில் சில எண்களை.. (அநேகமாக எக்ஸ்ட்டென்ஷன் எண்களாக இருக்கும்..) அமுக்கி, “அதுல்கர்.. என் ரூமுக்கு வாங்க”, என்று விட்டு, “டீ ?”, என்று எதிரே உட்கார்ந்திருக்கும் இருவரிடமும் கேட்டார். கொஞ்சம் இறுக்கம் தளர்ந்திருந்தார்.

“எஸ் சார்”, ஷானு, “ம்ம்” மையமாய் தலையசைத்து சூர்யா. சிவராமனின் அந்த ஒரு பார்வையின் தீவிரத்தால் ஏற்பட்ட விதிர்ப்பு இன்னமும் அவளது நரம்பில் ஓடிக்கொண்டிருந்தது.

பக்கவாட்டு அலமாரியில் இருந்த பிளாஸ்க் எடுத்து, நான்கு பீங்கான் கோப்பைகளை டேபிளில் வைத்தார். துல்கருக்கும் சேர்த்து என்பது புரிந்தது. அந்நான்கு கோப்பைகளில் தேநீர் ஊற்றி, இரண்டை இவர்கள் புறம் நகர்த்தி, “எடுத்துக்கோங்க”, என்றார். அவரது குரல் சாதாரணமாக இருந்தாலும் முகம் திரை போடப்பட்டிருந்தது. அதிலிருந்து எதையும் யூகிக்க முடியவில்லை. ஒரு சவாலான வழக்கு முடிந்ததற்கான எந்த ஒரு உணர்வையும் பிரதிபலிக்காமல் சலனமற்று இருந்தார்.

டீயை எடுத்து இரண்டு மிடறு விழுங்கி, “தென்.. அந்த அமைச்சர் பையன் மர்டர் கேஸ்-ல ஒரு பெர்சன்.. கான்பூர்-ல சரண்டர் ஆகி இருக்கான். கொலைக்கு காரணம் முன் பகை-ன்னு சொல்றாங்க. இது தவிர வேற ஏதாவது கேஸ்கள்-ல அவனுக்கு சம்மந்தம் இருக்கான்னு விசாரிச்சிட்டு இருக்காங்க. நம்ம விசாரணைக்கு கோ-ஆபரேட் பண்றதா சொல்லி இருக்காங்க.”, டேபிளில் இருந்த பேப்பர் வெயிட் அவரது கையில் சுழன்றது. ஆனால் எதிரே இருந்த ஷானுவின் கண்களை தவிர்த்தார். “சோ கேஸ் க்ளோஸ்ட்.”

“ஸார்.. அப்போ இந்த நகரி-ல செத்துப்போன பொண்ணு…?”

“அது ஏதோ ஆக்சிடென்ட்..”

“பட் நீங்க சொன்ன தொடர் கொலைகள்.. அதோட லிங்க்ஸ் எல்லாம் அப்படியேதான் இருக்கு இல்லியா? அப்பறம் எங்களை நீங்க நாக்பூர் போறதுக்கு ரெடியா இருக்க சொன்னீங்க .”, ஷானு அவர் முகத்தை  கூர்மையாக பார்த்துக் கேட்டாள்.

அவசரமாக “நோ. இப்போ நீங்க கான்பூர் போக வேண்டிய அவசியமில்ல”, என்று சொல்ல.. சிறு திகைப்புடன் நோக்கிய ஷானுவையும் சூர்யாவையும் பார்த்து.. “அது கொஞ்ச நேரம் முன்னால உங்கள அங்க அனுப்பலாம்னு இருந்தேன். இப்போ வேண்டாம்னு தோணுது”, என்று மழுப்பலாக  சொன்னார். ஷானு புருவம் சுருக்கி அவநம்பிக்கையாய்ப் பார்க்க, சூர்யாவோ அவரை ஆராய்ச்சிப்பார்வை பார்த்தாள்.

இருவரும் பதில் சொல்லாமல் பார்த்தவாறே இருக்க, சிவராமன் சில நொடி இடைவெளி விட்டு பேச்சைத் தொடர்ந்தார்.

“லுக் ஷானு, நடந்த கொலைகள்  எல்லாத்துக்கும் ஒரு மோட்டிவ் இருக்கு. நாமதான் அதை தொடர் கொலைகள்ங்கிற கண்ணோட்டத்தோட பாத்ததா எனக்கு தோணுது. அண்ட் எல்லா கேஸ்லயும் யார் கொலை பண்ணினாங்கன்னு ஏற்கனவே கண்டு பிடிச்சிட்டாங்க. அப்டிங்கும்போது நாம எதுக்கு அதை மறுபடி தோண்டனும் ?” இவ்வாறு சிவராமன் பேசும்போதே துல்கர் வந்தான்.

சூர்யா சிவராமனிடம், “நோ ஸார், எனக்கு உங்க பதில் ஒத்துக்கறா மாதிரி இல்ல.” என்க..

“எல்லாமே பிக்சர் perfect. நாமதான் எல்லாத்தையும் இழுத்து குழப்பிட்டு இருந்தோம்”, துல்கர் அவளை மறுத்தான். சூர்யா புருவமுயர்த்தி கூர்ந்து அவனை ‘ஏன்?’ என்பதுபோலப் பார்த்தாள். அவன்தான் இப்படியொரு கோணத்தில் இந்த தொடர் கொலைகளை ஆராய்ந்து சந்தேகப்பட்டவன், அப்படியிருக்க இப்போது மாற்றி சொல்லுமளவு என்ன வந்தது?

இவளது மனவோட்டத்தைப் படித்தவன் போல துல்கரின் அழுத்தமான கண்கள் எதிர்த்துப் பேசாதே என்ற செய்தியைக் கடத்தியது. சூர்யாவின் மனதில் ‘ஏன்’ போய் ‘என்ன சொல்ல வருகிறான்? ஏன் பேசக்கூடாது?’ என்ற குழப்பம் தொக்கி நின்றது.

இவர்களது பார்வைப் பரிமாற்றத்தை கவனிக்காத ஷானு, “பட் ஸ்டில் ஐயாம் நாட் கன்வின்ஸ்ட்”, முதல் முறையாக அவள் பெரிதும் மதிக்கும் சிவராமனின் கருத்தில் இருந்து மாறுபட்டாள்.

ஷானுவின் பேச்சைக் கேட்டகில் சற்றே பொறுமையிழந்த சிவராமன், “லுக் உங்கள கன்வின்ஸ் பண்றது என் வேலையில்ல, முதல்ல சந்தேகப்பட்டோம், இப்போ நா தெளிவாயிட்டேன் டிராப் பண்ணுங்கன்னு சொன்னா பண்ண வேண்டியதுதான?”, சிடுசிடுத்தார்.

துல்கர் அவனது தீநீர் கோப்பையை சற்றே எட்டி கையில் எடுத்துக் கொண்டான். அப்படி எடுக்கும்போது, வேண்டுமென்றே தன் கையில் இருந்த அலைபேசியை சூர்யா மற்றும் ஷானுவின் பார்வையில் படும்படி, மேஜையில் அவர்கள் அருகே தள்ளினான்.

சிவராமனிடம் பேசிக் கொண்டிருந்த ஷானுவிற்கும், துல்கரின் பார்வையைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த சூர்யா இருவருக்கும்.. துல்கரின் இந்த செய்கையில் கவனம் சிதற, அவர்கள் இடையே வந்த அலைபேசியை பார்த்தார்கள்.

அதன் திரையில் ஷானுவின் மகன் பரத் சிரித்துக் கொண்டிருந்தான்.

முதலில் பரத்தை பார்த்ததும் ஷானுவின் முகம் மென்னகை பூசியது. பின்னர் சில மைக்ரோ நொடிகளே தேவைப்பட்டது போலீஸ்க்காரிக்கு விஷயம் புரிய.

மூளை, ‘பரத் போட்டோ எப்படி துல்கர்கிட்ட? இல்லையே அவன் எடுத்தா சொல்லிட்டு இல்ல எடுப்பான்?. அதுவுமில்லாம பரத் நெத்தில சிந்தூரம்..? இன்னிக்கு காலைலதான ‘அஞ்சிலே ஒன்றைப் பெற்றான்’ பாட்டு  சொல்லிக் கொடுக்கும்போது வச்சு விட்டேன்? இது வேற யாரோ எடுத்திருக்காங்க.. அதுவும் இன்னிக்கு எடுத்ததா இருக்கனும்.. ஓஹ்!  அவனைக் கடத்திட்டங்களா? நோ நோ. வாய்ப்பில்ல, பரத் காணாம போயிருந்தா இந்நேரம் எனக்குத் தகவல் வந்திருக்கும். இது வெறும் மிரட்டல். எங்க பார்வைல உன் பையன் இருக்கான்-னு காமிக்கறத்துக்காக இதை அனுப்பியிருக்காங்க’ என்று முழுக் கோலமும் போட்டு விட்டது. இதயம் ரத்தத்தை வேகமாக பம்ப் செய்து வெளியே அனுப்பி உள் வாங்கியது.

அந்த அலைபேசி திரையில் சில நொடிகள் தெரிந்த பரத் காணாமல் போய்  அடுத்து துல்கரின் அம்மாவும் அவனது மாமா மகளும் ஒரு வீட்டு வாசலில் இருந்த கடையில் சின்ன குடுவை போன்ற மண் பாத்திரத்தில் லஸ்ஸி குடிப்பது போல போட்டோ வந்தது.

ஷானுவும் சூர்யாவும் அதிர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்து பின் சிவராமனிடம் திரும்பி பேச வாய் திறக்க…, சிவராமன் தன் உள்ளங்கையில் நல்ல சிகப்பு மார்க்கரில் “உஷ்…! “ என்று எழுதியிருந்ததை இருவர் கண்ணிலும் படுமாறு விரித்துக் காண்பித்தார்.

அதில் ஷானுவும் சூர்யாவும் சட்டென வாயை மூடிக்கொண்டனர். சிவராமன் இடது கையின் ஆள்காட்டி மற்றும்  நடு விரல்களை அவரது கண்களில் வைத்துப் பின் டேபிளில் இருந்த அலைபேசியைக் காண்பித்து ‘தொடர்ந்து அலைபேசியைப் பார்’ என்று தெரிவித்து, இருவரின் கவனத்தையும் மீண்டும் அதில் திருப்பினார். கூடவே துல்கரிடம் பேச ஆரம்பித்தார்.

“துல்கர் நீயே சொல்லு இவங்களுக்கு.. அந்த கேஸ் எதுவும் ஒன்னோடொன்னு தொடர்பில்லாததுன்னு..”, என்று சிவராமன் பேசும் அதே நொடியில்….

ஷானு + சூர்யா பார்த்துக் கொண்டிருந்த அலைபேசியில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நுழையும் கணேஷ் போட்டோவாகத் தெரிந்தான். பீஜ் நிறத்தில் அவன் அணிந்திருந்த ப்ளேசர்.. அதனுள்ளே இருந்த சிறு கட்டம்போட்ட அடர்நீல சட்டை, கணேஷின் பிரத்யேகமான ஸ்டைலான.. காலரை சுற்றியிருந்த லேசாக தளர்த்திய அடர் நிற டை என்று அஃபிஷியல் லுக்-கீழ் இருந்தான். இந்த ஆடை ஷானு அவனது போன பிறந்த நாளுக்காக பரிசளித்தது. அதிர்ச்சியில் ஷானுவின் புலன்கள் அனைத்தும் வேலை நிறுத்தம் செய்து கண்கள் அலைபேசியில் தெரிந்த கணேஷின் பிம்பத்தை வெறித்தன. சூர்யாவுக்கும் இது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.  

“ஆமா மேம், அண்ட் இதை நம்ம ஏன் கன்ப்ஃயுஸ் பண்ணிகிட்டோம்னே தெரில, சோ வி ஷுட் ட்ராப் தி கேஸஸ்”, துல்கர்.

அடுத்ததாக பேசியின் தொடுதிரையில் சூர்யாவின் அப்பாவும் அவளது ஒரே தங்கையும் தெரிய, பதற்றத்தில் சூர்யா இருக்கையில் இருந்து எழப்போக.., அதை யூகித்திருந்த துல்கர் நொடியில் அவளது தோளைப் பிடித்து அமர்த்தினான். அவனது தொடுகையில் திரும்பிய சூர்யா துல்கரை மிரண்டு ஒருவித பயத்தோடு பார்த்தாள். 

மருட்ச்சியான அவளது பார்வையில், குடும்பத்தினருக்கான சூர்யாவின் பாசமும் பயமும் தெரிந்தது. அவளது உடலின் நடுக்கம் தோளைப் பிடிந்திருந்த துல்கரின் கைக்கு புரிய.. அழுத்தமாக ஒரு முறை பிடித்து தளர்த்தி, நான்கு விரல்களால் தட்டி சூர்யாவை  ஆசுவாசப்படுத்தினான். 

சூர்யா ஏதோ பேச முற்ப்பட, டேபிளில் கிடந்த அலைபேசியை துல்கர் எடுத்துக் கொள்ள கையை நீட்டினான். துல்கரின் புறங்கையில் “bugged“, என்ற வாசகம் மின்னியது. ஆனால் அலைபேசியை எடுத்துக்கொள்ள வில்லை. அது அங்கேயே இருந்தது.

OMG !! ஐ ஜி ஆபீஸ்ல .. பக்!’, சூர்யாவின் MV.

‘ஒரு சீனியர் மோஸ்ட் ஆபிசரோட ஆக்டிவிடீஸ் ட்ராக் பண்றாங்களா?’, நினைத்தது ஷானு .

‘நம்ம எல்லார் ஃபாமிலியும் யாரோ கண்காணிச்சிட்டு இருக்காங்க, அவங்கல்லாம் கிட்நாப் ஏதாவது பண்ணிட்டாங்களா? யாரு இந்த கும்பல்?’, சூர்யா. 

.. அதனால்தான் துல்கரும் சிவராமன் சாரும் அவங்க பேசறதை..  நானோ சூர்யாவோ கவனிக்கலேன்னாலும் நிப்பாட்டாம பேசிட்டே இருக்காங்களா?’ என்று ஷானுவின் தலைமை செயலகம் (மூளை) கேள்வி கேட்டது.

இருவரும் மொத்தமாக வியர்த்திருந்தார்கள்.

“தண்ணீ?”, என்று கேட்டு தண்ணீர் பாட்டிலை அவளிடம் நகர்த்தினார் சிவராமன். அதன் மூடியில் போட்டோவில் உள்ள யாவரும் நலம் என்பதை குறிக்கும்படியாக “ஆல் ஆர் சேஃப்“, என்று எழுதி இருந்தார். அதை பார்த்ததும் ஷானு ‘நிச்சயமா அவங்க சேஃப் தான?’, என்று கண்களால் கேட்டாள். அவளுக்கே தெரிந்துதான் இருந்தது ஆனாலும் அதை உறுதி செய்ய கேட்க..,  சிவராமன் சின்ன தலையசைவில் ‘ஆமாம்’, என்று பேசியில் போட்டோவில் இருப்பவர்கள் இதுவரை பத்திரமாக இருபதை தெரியப்படுத்தினார்.

அந்த ஒற்றை தலையசைவில் இருவரும் கொஞ்சம் அமைதியாயினர். ஆனாலும் படபடப்பு இருந்தது.

அடுத்ததாக டேபிளில் கிடந்த துல்கரின் பேசியில்..,

சிவராமன் அந்த போட்டோக்கள் எடுக்கப்பட்ட நேரத்தை சுட்டிக் காண்பித்தார். அதில் இருந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்ட நேரம் தோராயமாக.. ஆர்பிஐ சோனுவின் வீட்டை சூர்யா அத்துமீறி நுழைந்த இருபதாவது நிமிடத்தை ஒட்டி காண்பித்தது.

“சார் நீங்கதான் கேஸ் பாரு சொன்னீங்க இப்போ ட்ராப் பண்ணுன்னு சொல்லறீங்க, நீங்க சொல்றாமாதிரியே விட்டுடறேன் ஸார்”, ஷானு.  ஒட்டுக்கேட்கும் கருவிக்காக இவர்களின் பேச்சு தொடர்ந்தது.

வெளியே பேசுவது போல தோன்றினாலும் ஷானு.. தனது அலைபேசியில் “எப்படி ஒரே நேரத்துல திருவனந்தபுரம், பரத் படிக்கற ஸ்கூல், சூர்யா வீடு இருக்கிற திண்டிவனம், துல்கரோட ஊரான லக்னோ-ன்னு எல்லா இடத்துலேர்ந்தும் போட்டோ எடுத்து அனுப்பி இருக்காங்க?” என்று தட்டச்சு செய்து மற்ற மூவருக்கும் காண்பித்தாள்.

ஷானு தனது அலைபேசியில் இருந்து எந்த ஒரு தகவலையும் அவர்களுக்கு அனுப்பவில்லை, வெறுமே தட்டச்சு செய்து மட்டுமே காண்பித்தாள். காரணம் அநேகமாய் இவர்களது அலைபேசிகள் ஹேக் செய்யப்பட்டிருக்கக்கூடும், என்ற எண்ணம்.

சிவராமனும், ‘மே பி மாஃபியா  ‘, என்று அவளைப்போலவே தட்டச்சு செய்து காண்பித்தார். ஆனால் அவராலும் தெளிவான பதிலை சொல்ல முடியவில்லை என்பது அவரது ‘மே பி’ யில் தெரிந்தது.

சிவராமன், “சரி அப்போ நீங்க போலாம்”, என்று ஷானுவிடம் சொல்லி துல்கரை பார்த்து சமிக்ஞை செய்தார்.

ஒரு பெருமுச்சுடன் எழுந்த ஷானு + சூர்யாவை சில அடி இடைவெளிவிட்டு துல்கர் தொடர்ந்தான். அவர்கள் அனைவருக்கும் தாங்கள் தேடிய எதிரி தனியாள் அல்ல. ஒரு பெரிய குழு. ஆள் பலமும், தொழில் நுட்ப சாமர்த்தியமும் கொண்ட ஒரு அமைப்பு. நோக்கத்திற்காக சாகத் தயாராக இருக்கும் நபர்களைக் கொண்ட திட சித்தம் உள்ளவர்கள் இருக்கும் அமைப்பு. அது இப்போது தங்களுக்கு  எதிராக காய் நகர்த்த ஆரம்பித்துள்ளது என்பது தெள்ளெனப் புரிந்தது.

அந்த கட்டிடத்தை விட்டு வெளியேறி படிகளில் இறங்கிய ய ஷானுவிற்கு முகம் வெளுத்துப் போய் கைகள் சில்லிட ஆரம்பித்திருந்தது. சூர்யாவோ அவளது டி ஷர்ட் முதுகோடு ஒட்டிக்கொள்ளும் அளவுக்கு முற்றாக வியர்த்திருந்தாள். இருவரின் வயிற்றிலும் பயப்பந்து உருண்டது.