🙂 தோழமைகள் அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் 🙂
உறவு 2
ஒரு வாரம் கடந்திருந்தது..
திவலையூர்:
அன்று இரவு தங்கள் அறையில் சங்கரி மெத்தையை சரி செய்து கொண்டிருக்க,
குமரவேல், “ஓ மனசுக்குள்ளார என்ன கொடயுது?” என்று கேட்டார்.
“மாமா”
“ஹ்ம்ம்.. சொல்லு”
“சொல்லி ஒன்னுமாவ போறதில்லனுட்டுதே சொல்லல”
“அப்ப விசயம் பெருசுதேன்”
“ஒங்க மனசயு பாரமாக்க வேணாமிட்டுதே” என்று இழுத்து நிறுத்தினார்.
குமரவேல் உதட்டோர கீற்றுடன், “காரணம் கேக்கலியே.. ஆவுதோ ஆவலயோ! ஒனக்குள்ளாற ஒழப்பி வெசனப்படுறதுக்கு என்னாண்ட சொன்னாக்க, மனசாறுமேதே கேக்கேன்.. சொல்லுத்தா” என்றார்.
“அது”
“அதியன் மதி கல்யாணத்துல ஒனக்கு விருப்பம் இல்லயா?”
“ஆத்தி! என்ன வார்த்த சொல்லிபுட்டீக! எனக்கு விருப்பம் இல்லனுட்டு சொல்லுதீகலே!”
“தப்பா எதுவு சொல்லலத்தா.. இந்த கல்யாணம் முடிவான தொட்டு எதயோ நெனச்சி தவிக்கற.. அதத்தே அப்புடி கேட்டுபுட்டேன்.. சொல்லு”
“என்னத்த சொல்ல! எல்லாருக்கும் மதி ஆச மட்டுதே கண்ணுக்கு தெரியுது! அதியன் மனச ஆரும் பாக்கலயே!”
புருவ சுளிப்புடன், “அதியனுக்கு விருப்பம் இல்லங்கயா?” என்று கேட்டார்.
“ஏ கலியாணம் முடியவுட்டு கேக்கதேன?”
“ப்ச்.. என்னத்தா!”
“பொறவென்ன? ஆராச்சும் அவென் மனசுல என்ன இருக்குனுட்டு கேட்டியளா? அவென் சம்மதத்ததேன் கேட்டியளா?”
“அதியன் மனசுல ஆரும்..” என்று சிறு பதற்றத்துடன் கேட்டவரின் பேச்சை இடையிட்ட சங்கரி,
“வெச்சா குடுமி! அடிச்சா மொட்ட!” என்றார்.
பின் கணவரின் பார்வையில், “பொறவென்ன மாமா! ஒன்னு தாமதமா கேக்கது இல்லனாக்க அவுசரப்படுறது.. ஏ மவன் மனசுல ஆருமில்ல.. அதுக்காண்டி இந்த கலியாணத்துல அவெனுக்கு சம்மதம்னு அர்த்தமாகிபுடாதே” என்றார்.
பின், “மதி ஆச பட்டுட்டா.. அதேன பெருசாகி போச்சிது.. அண்ணே பொண்ணு மருமவளா வாரது அக்காக்கும், தங்கச்சி பொண்ணு மருமவளா வாரது பெரிய மாமாக்கும், பேரனே பேத்திய கட்டிக்கிடுததுல மாமாக்கும் சந்தோசம்.. ஒங்க அக்காவ சொல்லவே வேணாம்.. பொறந்த வீட்ட ஆட்டிபடைக்க மவ ஒடமப்பட்டவளாவது கசக்குமா!
நா ஒத்துகிடுதேன்.. அப்பன் இல்லாத பொண்ணு, நாமதே சிறப்பா செய்யோனு.. ஆனா திரியாமதே கேக்கேன்.. மதிக்காக அதியன் வாழ்க்கய பணயம் வெக்கது நாயமா?” என்று கேட்டார்.
குமரவேல் அதிர்ச்சி கலந்த படபடப்புடன், “என்ன வார்த்த சொல்லுதத்தா!” என்றார்.
“நெசமாதே கேக்கேன் மாமா”
“மறுக்கா இப்புடி சொல்லாதத்தா”
“அட.. போங்க மாமா”
“என்ன நீயி! செரி, எத வெச்சி இப்புடி சொல்லுற?”
“அவென் மொகத்துல கலியாண கலையே இல்ல மாமா”
லேசாக ஆசுவாசமடைந்தவர், “இம்புட்டு தானா! ஒத்த நிமிசத்துல எம்புட்டு பயத்த காட்டிபுட்ட! அவன் என்னிக்கு நவநீ மாதிரி கலகலப்பா பேசி இருக்கியான்?” என்றார்.
“சின்னதுல கலகலப்பா இருந்தவந்தே.. வளர வளர தன்ன பாத்துதே மத்த பிள்ளைக கத்துப்பாங்கனுட்டு தன்னத்தானே இப்புடி செதுக்கிக்கிட்டான்.. ஆனா நா சொல்லுதது நெசம் மாமா”
“இந்தா! திரும்ப ஆரம்பிக்காத” என்றவர் மனைவியின் பார்வையில், “மதினி கண்ணுக்கு ஆம்புடாததா ஒனக்கு ஆம்டுச்சி?” என்று கேட்டார்.
“அக்கா என்னிக்கு அவன நெருக்கத்தில் கெவனிச்சு இருக்காவ? சின்னதுல இருந்தே அத்த கிட்டக்கதே அவனுக்கு ஒட்டுதல் சாஸ்தி”
“அண்ணே அப்புடிலா வுடுற ஆள் இல்ல.. நீயா எதயா ரோசிச்சி என்னியவு கொழப்பாத”
“ஹ்ம்க்கும்.. கொழப்புதாவ.. சூசுவானு இருந்தவ கைய புடிச்சி இழுத்துபுட்டு, பேச்சப்பாரு!”
“நா ஒன்ன தொட கூட இல்லியே! செத்த கிட்டக்க வந்தாக்க மொத்தமாவே இழுத்துப்பேன்”
“கெழவனுக்கு ஆசய பாரு!”
“ஆருடி கெழவன்! ரெண்டு நாளு மின்ன குறுக்க ஒடச்சிபுட்டேன்னு பாட்டு பாடினது நீதேன!”
தனது வெட்கத்தை கோப போர்வையில் மறைத்தவர், “மாமா!” என்று வரவழைத்த கோப குரலில் அழைத்தார்.
“என்ன?”
“எம்புட்டு முக்கிமானத பேசிகிட்டு இருந்தே!”
“இதுவு முக்கியம்தேன!”
சங்கரி நிஜமாகவே முறைக்க,
“செரி.. செரி.. கோமிக்காத” என்றார்.
“இத்தினி வருசத்துல ஆரயு நா தப்பா பேசிதே இருக்கேனா! இல்ல எதயு ஆராயாமதே சொல்லி இருக்கேனா?”
“அதுவு செரிதே.. நீ ரோசிக்காம வாய் வுட மாட்ட.. ஆனா.. ப்ச்” என்றவர் யோசனையுடன் அறையினுள் நடக்க ஆரம்பித்தார்.
“பெரிய மாமாக்கு மொத தங்கச்சி பாசம் கண்ண மறச்சி இருக்கும்.. பொறவு, அதியன கெவனிச்சு இருப்பாவதே, ஆனா குடும்ப அமைதிக்காக அவுக அமைதியா இருக்காக..” என்றவர்,
“அறைய அளக்கத வுட்டுபுட்டு வந்து படுங்க” என்றார்.
குமரவேல் கவலையுடன் பார்க்க, “நாம வெசனப்பட்டு ஆவப்போறது ஒன்னுமில்ல.. பேசவு முடியாது.. அதியன் நெனச்சா மாட்டுதே..” என்று பாதியில் நிறுத்திய சங்கரி, “ஆனா அவெ குடும்பத்துக்காக தன்ன பலிகொடுக்க முடிவெடுத்துட்டான்” என்றார்.
“பெரிய வார்த்தலா சொல்லாதத்தா.. மதி நம்மூட்டு பொண்ணுதேன!”
“நம்மூட்டு பொண்ணு, நல்ல பொண்ணுதே.. இல்லிங்கல.. ஆனா, ஒங்க மனசதொட்டு சொல்லுங்க மாமா.. கூட்டு குடும்பத்தில் மூத்த மருமவளா இருக்க மதி கொணம் செரியா?
‘எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே..
அவர் நல்லவர் ஆவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே’
இந்த பாட்டு நம்ம மதிக்கு பொருந்தும்.. இங்கன அன்னை மட்டுமில்ல மொத்த குடும்பமும் இப்புடி வளத்துவுட்டு இருக்கோம்.. கலியாணத்துக்கு பொறவு அவள அதியன் மாத்துவியாந்தே, ஆனாக்க தொட்டதுக்கெல்லா வாக்குவாதம் வந்தாக்க, வாழ்க்கையே வாதத்துல போய்புடுமே! நிம்மதி எங்கன இருக்கும்? நெறஞ்ச அன்புதே எங்கன இருக்கும்? அவென் மனசுலயு கலியாண கனவு இருந்து இருக்குதேன! எல்லோரும் சேந்து அத மொத்தமா கொன்னுபுட்டிகளே!” என்று முடித்தபோது அவரையும் மீறி அவரது குரலும் கண்களும் லேசாக கலங்கியது.
சட்டென்று மனைவி அருகே அமர்ந்து தோளோடு அணைத்து அரவணைத்தவர், “ரொம்ப ரோசிக்காத.. அதியன் அப்புடியெல்லா வுட்டுபுட மாட்டான்.. மதிய மாத்தி சந்தோஷமாதே வாழுவியான்.. ஓ மவன் மேல நம்பிக்க இல்லியா?” என்றார்.
“சந்தோசமா இருந்தா செரிதே.. தினமு அதத்தே வேண்டுதேன்.. நல்லதே நெனப்போம், நல்லதே நடக்கட்டும்”
“ஹ்ம்ம்.. நல்லதே நடக்கும்” என்று ஒருவரை ஒருவர் தேற்றிக் கொண்டு படுத்தாலும் இருவரின் மனதிலும் அதியன் நெடுமாறன் பற்றிய கவலை இருந்தது.
சங்கரி கூறியது சரியே என்பது போல் மொட்டை மாடி தனிமையில் நிலவை வெறித்தபடி அதியன் நெடுமாறன் நின்றிருந்தான். இதுவரை எந்த பெண்ணையும் ஆர்வமாக கூட பார்த்திறாதவனின் மனதினுள் சில கல்யாண கனவுகள் இருந்தன.
தனது மனைவி பொறுப்பும் முதிர்ச்சியும் கொண்ட, குடும்பத்தை அனுசரித்து போற பெண்ணாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் திகட்ட திகட்ட காதலுடன் வாழ வேண்டும். மற்றவர்களுக்கு தான் அதிகம் பேசாதவனாக, சற்று அடாவடியான ஆளாக இருந்தாலும் தன்னவளிடம் அப்படி இல்லாமல், அவளுக்கே அவளுக்கான வேறு முகத்துடன் இருக்க வேண்டும். கூட்டு குடும்பத்தில், மற்றவர்களுக்கு மத்தியில் இருக்கும் போது பார்வையாலேயே பேசிக்கொள்ளும் அளவிற்கு இருவருக்கும் நடுவில் அன்யோன்யம் இருக்க வேண்டும். இவ்வாறன தனது கனவுகள் மதியிடம் சாத்தியப்படுமா என்ற ஆராய்ச்சியுடன் நின்றிருந்தான். அவனுக்கே தெரிந்தது தான், அவனது எதிர்பார்ப்பு ஒன்று கூட நிறைவேற போறது இல்லை என்று.
சங்கரி கூறியது போல் அவன் நினைத்தால் இந்த திருமணத்தை நிறுத்த முடியும் தான் ஆனால் அதன் பிறகான குடும்ப ஒற்றுமை மற்றும் நிம்மதியை கருத்தில் கொண்டே, தனது வாழ்க்கையை பணையம் வைக்கும் முடிவிற்கு வந்து விட்டான்.
முடிவு எடுத்துவிட்டாலும் அதை செயல் படுத்துவது அவ்வளவு சுலபம் இல்லையே! அதற்கு தனது மனதை திடபடுத்த வேண்டும் என்பதையும் அறிந்து தான் இருந்தான். கூடவே தனது எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தன்னாலான முயற்சியை எடுக்க வேண்டும் என்றும் நினைத்தான்.
“அதியா” என்ற தந்தையின் குரலில் வேகமாக திரும்பியவன், “ஒறங்கலயாப்பா?” என்றபடி அவரிடம் சென்றான்.
“அதயே நானு கேக்கலாமில!”
“நா சும்மனாக்க வந்து நிக்கேப்பா”
“ஒன்னு கேக்கட்டா அதியா?”
“என்னப்பா இது!”
“தாமதமாதே கேக்கேன்.. ஆனா இப்பவு ஒன்னு கெட்டு போவல..” என்றவர் தவிப்பும் தயக்கமுமாக, “ஒனக்கு..” என்று ஆரம்பிக்க,
“இந்த கல்யாணத்தில் சம்மதம்பா” என்று முடித்து இருந்தான்.
அவனது கையை பற்றியவர் லேசாக கலங்கிய தவிப்பு நிறைந்த விழிகளுடன் அவனை நோக்க,
“ஒங்கள எனக்கு புரியாதாப்பா! நம்ம மதிப்பா.. அது மட்டுமில்லயே! நெறய ரோசிக்க இருக்குதுவே! மதி ஆச இருக்கட்டும்.. மதி கொணத்துக்கு அடுத்த வூட்டுல கட்டி கொடுத்து, ப்ச்.. செரமம்தே.. நம்மூட்டு பொண்ணு நல்ல பொழச்சாதேன நமக்கு நிம்மதி! அதே அவ இங்கனவே இருந்தா, நாம பாத்துகிடுவோம்தேன..
என்னதேன் அத்தக்கு நீங்களு நானு மதிய பாத்துபோனு நெனப்பு இருந்தாலு, தனக்கு பொறவு மவளோட நெலம என்னவோனு சின்ன ஒதறல் இருக்கும்தேன! அதே அசலா இல்லாம இருந்தாக்க நிம்மதியா இருப்பாக..
எல்லாத்துக்கு மேல முக்கியங்கறது.. அத்த ஒங்கள நம்பி கேக்கறச்ச, என்னிய நெனச்சி ஒத்த நிமிசம் நீக ரோசிச்சி இருந்தா கூட, ஒங்க ஒறவுல சின்ன விரிசலு உழுந்திருக்கும்.. இப்புடி எல்லா ரோசிச்சிதே நீக முடிவு எடுத்து இருப்பீக..” என்றான்.
தனது பிடியை இறுக்கி அவனது கூற்று சரியே என்று கூறாமல் கூறியவரின் மனம் மகனின் புரிதலில் உவகை அடைந்தது.
சின்ன சிரிப்புடன் அவரது கையை தானும் இறுக பற்றியவன், “நம்மூருக்கே தீர்ப்பு சொல்றவரு நீக.. நம்மூட்டுல ஒங்க முடிவு எப்புடி தப்பாகுப்பா? என்னிய நெனச்சி வெசனப்படாதீக.. நா ரோசிக்கறதே வேற.. மதிய மாத்துதது செரமம்தே ஆனா முடியாதது இல்ல.. அதுக்கு ஆவன ரோசிக்கறன், அம்புட்டுதேன்.. நிம்மதியா ஒறங்குக” என்றான்.
“நீயு ஒறங்கு”
“செத்த நேரஞ்செண்டு போறன்”
“செரிப்பா” என்றவர் மகனின் கன்னத்தை லேசாக தட்டிவிட்டு சென்றார்.