நவநீதன், “அண்ணே அந்த புள்ள மனச மட்டும் பறிகொடுக்கலையோ!” என்றான்.

இவன் திரும்பி பார்க்கவும், “இல்ல.. ஒங்க பேச்சு வெச்சிதேன் கேட்டேன்” என்றான்.

“ஹ்ம்ம்.. அந்த புள்ள வேறு ஒருவனுக்கு முந்தி விரிக்க மாட்டேன்னு உசுர விட போய்டுச்சு.. எம்புட்டு நெஞ்சழுத்தம் இருந்தாக்க ‘வூட்டுல பிரச்சன, அதான் கொழந்த எதுவு தங்கலயே! கெட்ட கனவா நெனச்சு மறந்துபுடு.. நா ஆத்தா சொல்லுற பொண்ண கட்டபோறேனுட்டு’ சொல்லுவியான்!” 

“இன்னு ரெண்டு அப்பு வெச்சி இருக்கணு அண்ணே..” 

“முதுகெலும்பு இல்லாத சொங்கி பய.. இவன போய் எப்புடி நம்புச்சோ! கல்யாணத்துக்கு பொறவு என்னத்த பொழைக்க போவுதோ!” 

“அந்த புள்ளயோட தலயெழுத்து! ஆனா அவென் சேக்காளி ரொம்பதேன் துள்ளுறியான்.. ஒருநா ஏ கைவரிசைய காட்டதேன் போறேன்” 

“நவநீ!” 

“அண்ணே.. அவென்…” 

“அவென் சேக்காளிக்காக பேசுதே செய்வியான்” 

“அதுக்கு! ஒங்கள பேசுவானா? அவனுக்கு இருக்கு” 

“இந்த கொணத்த மாத்துனுட்டு சொல்லுதத மட்டு கேக்கேவே மாட்டியால! என்னிக்கு பெரிய பிரச்சனய இழுத்துட்டு வார போறியோ!” 

“இத வுடுணே.. ஓ சேக்காளி ஜவுளிகட திறப்பு விழா எப்புடி போச்சி?” 

மென்னகையுடன், “நல்ல போச்சி.. எல்லாருக்கும் உடுப்பு எடுத்தாந்திருக்கேன்” என்றான்.

“மொத போனியே கல்லா கட்டிபுடுச்சினு சொல்லு” 

சிரிப்புடன் தலை அசைத்தபடி வீட்டின் முன் வண்டியை நிறுத்தினான்.

இருவரும் சேர்ந்து ஆடைகள் அடங்கிய பைகளை கொண்டு சென்று பூஜை அறையில் வைத்து கடவுளை வணங்கினர்.

முதல் ஆளாக, “மாமா” என்று ஆசையாக அழைத்தபடி அதியன் நெடுமாறனின் பெரிய அத்தை மகளான நிறைமதி வந்தாள்.

நவநீதன் பைகளை எடுக்கப் போக, அதியன் நெடுமாறன், “இங்கனவே இருக்கட்டும்.. பொறவு பாத்துக்கிடலாம்” என்றதும், “செரிணே” என்றபடி வெளியே வந்தான்.

அங்கே வந்த அன்னை ஜெயலட்சுமியிடம், “தாத்தா உண்டாவளாமா?” என்று கேட்டான்.

“ஆச்சு ப்பா.. அப்பா சித்தப்பா ஒன்னாதேன் உண்டாக.. செத்த நேரமின்ன அவுக கெளம்பவு தாத்தா படுக்க போனாக” 

“மாமா” என்று நிறைமதி சிணுங்கலாக அழைக்க,

“சொல்லு மதி” என்றான்.

“என்ன உடுப்பு எடுத்தாந்தீங்க? தாவணியா பொடவயா? பையெல்லா அங்கனவே வெச்சிபுட்டீங்க!” 

“ஒனக்கு நந்து தென்றலுக்கு தாவணிதேன்.. மத்தவங்களுக்கு பொடவ” 

முறைப்புடன், “அவளுகளுக்கு ஏ எடுத்தாந்தீங்க?” என்று கேட்டவளை புருவம் சுருக்கி அவன் பார்க்க,

சட்டென்று பார்வையை இயல்பாக்கி, “கட்டிக்க போறவளு மத்தவளுகளு ஒன்னா?” என்றாள்.

“ஒன்னிய நா கல்யாணம் கட்டினாலு நந்துக்கு நா அண்ணேங்கிறதோ, தென்றலுக்கு மாமன்கிறதோ மாறிபுடுமா?” 

அவனது குரல் மற்றும் பார்வையில் சற்றே பயம் கொண்டவள், “இருந்தாலு” என்று மெல்லிய குரலில் இழுத்து நிறுத்தினாள்.

“ஒனக்காவ ஏ பழக்கத்த மாத்திக்கிட முடியாது.. வெளங்குச்சா?” 

கலங்க பார்த்த விழிகளை அடக்கியவள் கோபத்தை சற்றே வெளிபடுத்தும் குரலில் “பழக்கத்த மாத்த முடியாதுனுட்டு உடுப்ப ஏ உள்ளாறவே வெச்சி இருக்கிய? எனக்கு புடிச்சத எடுத்த பொறவுதேன அவளுவ எடுப்பாளுவ” என்றாள்.

“மூத்த மருமவளாக ஆசைப்பட்டா அதுக்கான கொணத்தையும் வளத்துக்கணும்” 

“அத்த!” கோபமும் இயலாமையுமாக அவள் சிணுங்க,

“மொத சின்ன புள்ளயாட்ட சிணுங்குறத நிப்பாட்டு” என்றான்.

‘சின்ன புள்ளதேன’ என்று சொல்ல வந்த ஜெயட்சுமி வாயை மூடிக்கொண்டார்.

ஆனால் அவளது அன்னை காயத்ரியோ, “சின்னது தொட்டு வந்த பழக்கம்.. சட்டுன்னு மாத்துனா அவுளுக்கு செரமம்தேன! பையதேன் மாத்தட்டுமே! நீ கோமிக்காம பதமா எடுத்து சொல்லு, கத்துக்கிடுவா.. என்னடீ?” என்றார்.

அவள் வேகமாக தலையை ஆட்ட, மென்னகையுடன் அவளது தலையை வருடிய ஜெயலட்சுமி அவனிடம், “நந்துவு தென்றலு ஒன்னு சொல்லாதுக” என்றார்.

“தூளி கெட்டி தரவா?” என்று முறைப்புடன் தான் கேட்டான். 

“மொத உண்ண வாப்பா.. கொள்ள சோலி கெடக்குமே!” என்று அவனது சித்தி சங்கரி நிலைமையை சீராக்க அவனை அழைத்தார்.

அதை புரிந்து கொண்டவன் நவநீதனை பார்வை பார்த்தபடி உணவுண்ண செல்ல, அவனும் சென்றான்.

நிறைமதி, “மாமா கோவமா போறாக” என்று கூற,

ஜெயலட்சுமி புன்னகையுடன், “செரியகிடுவான்.. நீ உடுப்ப பாரு” என்றதும் விரிந்த புன்னகையுடன் பூஜை அறை நோக்கி ஓடினாள்.

மகளின் மகிழ்ச்சியைப் பார்த்த காயத்ரி, “அதியன செத்த பொறுமயா போவ சொல்லு ஜெயா” என்றார்.

“கேட்கணுமே!” 

“ஓ மவன்தேன?” 

“அத்தை மடி மெத்தையடினுட்டு நீதேன வளத்த! நீயே சொல்லுறது!” 

“செரி வுடு.. அண்ணே கிட்ட பேசிகிடுதேன்.. நீ அதியன கவனி” என்றபடி கண்ணை உருட்ட, 

“சங்கரி என்னிக்கு கோள்மூட்டி இருக்கா! என்னாத்துக்கு பயப்புடுத!” 

“என்னவோ கல்யாண பேச்சு எடுத்ததுல இருந்து மனசு நெல கொள்ளமாட்டிக்குது” 

“என்ன பேசுத! யாரு, என்ன பண்ணிட போறாவ! கண்டதையு ரோசிச்சு மனசு கொழப்பிக்காத” என்றபோது,

“அத்த இந்த தாவணி எனக்கு நல்லா இருக்கா?” என்றபடி நிறைமதி வந்தாள்.

“ஒனக்கென்னடி ராசாத்தி! எந்த உடுப்பும் ஏ மருமவளுக்கு அம்சமாதே இருக்கும்.. செரி நீயு அம்மாவும் பொடவய பாருங்க.. நா ஓ மாமன போய் பாக்குதேன்” என்றபடி நகர்ந்தார்.

“என்ன சங்கரி தம்பி செரியா உண்கலையா?” 

“செரியாதேன் உண்டான் க்கா” 

“பொறவு எப்புடி, அதுக்குள்ளார மோர் சாதம் உண்குறான்?” 

“அது ஒன்னுமில்ல பெரியம்மை.. நீங்க மதிக்கு தூளி கெட்டி கொஞ்சிட்டு வாரதுக்குள்ளார நாங்க உண்டே முடிக்க போறோம்.. அம்புட்டுதேன்” 

அவர் நவநீதனை முறைக்க, அவன் பல்லை காட்டி சிரித்தபடி, “சும்மா.. சோக்கு” என்றான்.

“ஒன்னிய பொறவு கவனிச்சிகிடுதேன்” என்றவர் மகனிடம், “மதிக்கு இனிமே பொடவயே எடு தம்பி.. தாத்தாவு அப்பாவு நெருக்கத்துல கல்யாணம் வெக்கனுமிட்டு பேசிட்டு இருந்தாவ” என்றார்.

அதியன் நெடுமாறன் அமைதியாக தலையசைத்தான்.

அவனிடம், ‘முழு மனசோடதேன் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னியா?’ என்று கேட்க சங்கரியின் உள்ளமும் நாவும் துடித்தது தான் ஆனால் இரண்டையும் அடக்கிக் கொண்டு எப்பொழுதும் போல் அமைதியாக இருந்து கொண்டார்.

 

அதியன் நெடுமாறனின் குடும்பம்:
வழி வழியாக ஊர் தலைவராக இருக்கும் பண்ணையார் குடும்பம் தான் இவர்களது. நெல்லையப்பன் உமையாள் தம்பதியருக்கு கந்தவேலை அடுத்து காயத்ரி, குமரவேல் மற்றும் மஞ்சுளா என்று நான்கு பிள்ளை செல்வங்கள்.

கந்தவேல் மற்றும் காயத்ரிக்கு ஒரே குடும்பத்தில் பெண் எடுத்து பெண் கொடுத்தனர். அதில் கூடுதலாக ஜெயலட்சுமியும் காயத்ரியும் பள்ளி கால நெருங்கிய தோழிகள்.

கந்தவேல் ஜெயலட்சுமி தம்பதியர்களுக்கு மூத்தவன் அதியன் நெடுமாறனை அடுத்து ஆதிரை செல்வி என்ற மகள் இருக்கிறாள். அவளை அம்பாசமுத்திரத்தில் கல்யாணம் செய்து கொடுத்திருக்கின்றனர். அவளுக்கு அதுல்யா என்ற 2 வயது மகள் இருக்கிறாள்.

ஜெயலட்சுமியின் அண்ணன் பத்மநாதன், நிறைமதி பிறந்த ஒரு வருடத்தில் விபத்தில் இறந்துவிட, அன்றில் இருந்து காயத்ரி மற்றும் நிறைமதியின் வாசம் இங்கே தான்.

குமரவேல் சங்கரி தம்பதியருக்கு நவநீதன் அடுத்து நந்தினி என்ற தங்கை இருக்கிறாள். நவநீதன் தனது தந்தையை போல் அண்ணனுக்கு துணையாக தொழில் செய்ய, நந்தினி பொறியியல் இறுதியாண்டு படித்து கொண்டிருக்கிறாள்.

மஞ்சுளா கந்தவேலின் நெருங்கிய நண்பனான ராஜனை தான் திருமணம் செய்து இருக்கிறார். அவர்களுக்கு இளந்தென்றல் மற்றும் இளம்பரிதி என்று இரு பிள்ளைகள். இளந்தென்றல் இந்த ஆண்டு தான் படிப்பை முடித்து இருக்க, இளம்பரிதி பத்தாம் வகுப்பு படிக்கிறான். இவர்கள் வீடு அடுத்த வீடு தான் என்பதால் கிட்டத்திட்ட அனைவருமே கூட்டு குடும்பம் போல் தான் இருப்பர்.

சிறு வயதில் இருந்தே நிறைமதிக்கு செல்லம் அதிகம். தந்தை இல்லாத குழந்தை என்று பாசத்தையும் செல்லத்தையும் அதிகம் கொடுத்ததோடு, எந்த விஷயமாக இருந்தாலும் பிள்ளைகள் மத்தியில் அவளை முன் நிறுத்தியே எதையும் செயல்படுத்துவர். இதை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்தது உமையாள் மற்றும் அதியன் நெடுமாறன் மட்டுமே ஆனால் இன்று வரை மாற்றம் வந்ததே இல்லை. வயோதிகம் மற்றும் கொரோனா தாக்கம் காரணமாக உமையாள் இறைவனடி சேர்ந்துவிட்டார்.

குறிப்பு: ‘திவலையூர்’ என்ற பெயரும் ஊரும் எனது கற்பனையே! நிஜத்தில் தேடாதீர்கள் தோழமைகளே. திவலை என்ற சொல்லிற்கு மழைத்துளி, மழை என்று பொருள். ஒரு செழிப்பான ஊரிற்கு மழையை குறிக்கும் பெயரை வைக்க நினைத்து இப்பெயரை சூட்டினேன். 

முக்கிய குறிப்பு: பையனுக்கு annual exams நடந்துட்டு இருக்குது.. ஸோ அது முடியும் வரை வாரத்திற்கு இரண்டு அப்டேட் தான் வரும் தோழமைகளே.. அதுவும் இந்த வட்டார வழக்கு எழுதுவது கொஞ்சம் சிரமமாக தான் இருக்கிறது.. அதனால் வேறு அதிக நேரம் தேவை படுகிறது.. ஸோ exam முடிந்த பிறகும் டெய்லி அப்டேட்லாம் வாய்ப்பே இல்லை.. வாரத்திற்கு மூன்று அப்டேட்ஸ்.. அட்ஜஸ்ட் தோழமைகளே. மார்ச்15 வரை புதன் மற்றும் சனிக்கிழமை அப்டேட்ஸ்.. அதன் பிறகு செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமை அப்டேட்ஸ்.

உறவு உயிராக காத்திருப்போம்…