முதலாம் ஆண்டு பெண்கள் ஆசிரியர் அறையில் சாருவர்தினி தனது தோழி வித்யா அருகே அமரவும், அவள், “உன்னை ப்ரின்சி வர சொன்னாராம்” என்று சாதாரணமாக கூறினாலும் அவளது கண்கள் ரகசிய கிண்டலுடன் சிரித்தது.
“ப்ச்.. வித்தி!”
“என்ன!”
“நீயே இப்படி சிரிச்சா எப்படி! கடுப்பாகுது”
“சரி சரி.. முதல்ல சாப்பிடு.. ஒரு மணிக்கு வர சொல்லி இருக்கார்.. பியூன் வந்து சொல்லிட்டு போனார்”
“ஹே! என்ன இது?” என்றபோது சக ஆசிரியர் ஒருவர், “எப்பவும் அப்படி என்ன தான் ரகசியம் பேசுவீங்களோ?” என்றார்.
சாருவர்தினி அமைதியாக இருக்க, வித்யா தான், “அதுவா மேடம்! நீங்க கட்டி இருக்க சரீ எங்க வாங்கி இருப்பீங்கனு பேசிட்டு இருந்தோம்” என்றபடி தோழியின் உணவு பெட்டியை திறந்து வைத்து, தானும் உண்ண ஆரம்பித்தாள். சாருவர்தினியும் உண்ணத் தொடங்கினாள்.
“இதை நம்பனும்!”
“பிலீவ் மீ பேபிமா” என்று அவள் நகைசுவை நடிகர் வடிவேல் போல் கூறியதில் மென்னகைதவர், “நீ இருக்கியே!” என்றார்.
பின், “ஆமா சாருவை ப்ரின்சி கூப்பிட்டாராமே! என்ன விஷயம்?”
“அது எனக்கு எப்படி மேடம் தெரியும்?”
“தெரிந்தா மட்டும் சொல்லிடுவியா?”
“உங்களுக்கு சொல்லாமயா?”
“ஹ்ம்ம்.. அது எப்படி தான் அதிகம் பேசாத சாருவும், வாயை மூடாத நீயும் இப்படி க்ளோஸ் பிரெண்ட்ஸ்ஸா இருக்கிறீங்களோ!”
“எதிர் துருவம் ஈர்க்கும்.. நட்புக்கும் பொருந்தும் மேம்”
“உன்னோட பிசிக்ஸ் வச்சு தான் சொல்லனுமா!”
“சரி உங்க மேக்ஸ்(maths) வச்சு சொல்றேன்.. பிளஸ் அண்ட் மைனஸ் சேர்வது இயல்பு தானே!”
“இதில் யாரு பிளஸ் யாரு மைனஸ்?”
“நான் மை..” என்ற வித்யாவின் பேச்சை இடையிட்ட சாருவர்தினி, “எல்லோருக்குள்ளேயும் பிளஸ், மைனஸ், ரெண்டும் இருக்கும்.. ஸோ நான் மைனஸா இருக்கும் போது இவ பிளஸ்.. இவ மைனஸா இருக்கும் போது நான் பிளஸ்” என்றாள்.
அவர் மெல்லிய புன்னகையுடன், “கடைசி வரை இப்படியே ஒருத்தரை ஒருத்தர் விட்டு கொடுக்காம இருங்க” என்றார்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் உணவை முடித்துக் கொண்டு சாருவர்தினி முதன்மை ஆசிரியர் அறை நோக்கி சென்றாள்.
அனுமதி பெற்றுக்கொண்டு உள்ளே சென்றவளை வரவேற்றது முதன்மை ஆசிரியர் அல்ல, கல்லூரியின் உரிமையாளன் அமுதினியன்.
இதை எதிர்பார்த்தே வந்திருந்தவள் அவனை தீர்க்கமாக பார்த்தாள்.
அவனோ வசீகர புன்னகையுடன், “நீ பி.எச்.டி முடிக்கத் தான் காத்திருந்தேன்.. அதுவும் ஒரு மாசம் கழிச்சு தான் பேச கூப்பிட்டு இருக்கிறேன்” என்றான்.
“இப்பவும் எதுவும் மாறிடலையே சார்! ஸ்டுடென்ட்ஸ்கு முன்னுதாரணமா இருக்க வேண்டிய நானே காதல் கீதல்னு சுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை.. இன்னைக்கு கூட ஒரு ஸ்டுடென்ட்கு அட்வைஸ் செஞ்சேன்”
“ப்ரோஃபஷன் வேற பெர்சனல் வேற சாரு”
“எனக்கு நெருக்கம் இல்லாதவங்க என் பெயரை சுருக்குவது எனக்கு பிடிக்காது சார்”
“ஓகே பைன்.. ஒரே ஒரு கேள்வி கேட்க தான் உன்னை கூப்பிட்டேன்”
அவள் ‘என்ன’ என்று கேட்கவில்லை என்றாலும், “உனக்கு என்னை சுத்தமா பிடிக்காதா? ஐ மீன், என்னை வெறுக்கிறியா?” என்று கேட்டான்.
“உங்க மேல் எனக்கு எந்த விதமான உணர்வும் இல்லை சார்.. நீங்க இந்த காலேஜ் சேர்மேன்.. நான் இங்கே வேலை பார்க்கும் ப்ரோஃபஸர்.. அவ்ளோ தான்”
“எஸ்.. என் பரென்ட்ஸ் கூட்டிட்டு பொண்ணு பார்க்க வரேன்.. உன் அப்பா உனக்கு பார்த்து இருக்கும் மாப்பிள்ளையா என்னை நினைச்சுக்கோ”
“ஆனா இது அரேஞ் மரேஜ் இல்லையே!”
“அரேஞ் மரேஜ் தான்.. அதாவது நான் அரேஞ் செய்ற மேரேஜ்.. என்னை பொறுத்தவரை லவ் மரேஜ்.. உனக்கு அரேஞ் மரேஜ்.. கல்யாணத்துக்கு அப்புறம் என்னை காதலி” என்று கூறி கண் சிமிட்டினான்.
தன்னை தொந்தரவு செய்யாமல், கிட்டத்திட்ட ஐந்து வருடங்களாக தனக்காக காத்திருபவனை சட்டென்று வருத்த மனம் வரவில்லை என்றதோடு அவனது இந்த அதிரடியை எதிர்பார்க்காதவள் சில நொடிகள் பேச்சற்று தான் போனாள்.
“புரியுது.. மத்தவங்க கிட்ட விளக்கம் சொல்ற நிலையில் உன்னை வைக்க மாட்டேன்”
“தேங்க்ஸ்”
“எனக்கு உன்னோட தேங்க்ஸ் வேணாம்”
‘திரும்ப முதல்ல இருந்தா!’ என்பது போல் பார்க்க,
புன்னகையுடன், “அதான் கல்யாணத்துக்கு அப்புறம் காதலினு சொல்லிட்டேனே! இது வேற” என்றான்.
இப்பொழுதும் அவள் ‘என்ன?’ என்று கேட்கவில்லை.
“சின்ன ஸ்மைலோட ஆல் தி பெஸ்ட் சொல்லலாமே”
அவன் கேட்ட விதத்தில் முதல் முறையாக அவனைப் பார்த்து லேசாக சிரித்தபடி, “ஆல் தி பெஸ்ட்” என்றாள்.
“தேங்க்யூ”
“நான் கிளம்பவா?”
நெஞ்சை முட்டும் மகிழ்ச்சியுடன், “எஸ்” என்றவனின் முகம் என்றும் இல்லாத அளவில் புன்னகையில் பிரகாசித்தது. தனது சிறு புன்னகையும், வாழ்த்தும் தான் அதற்கு காரணம் என்று தெரிந்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல் சிறு தலை அசைப்புடன் கிளம்பினாள்.
திவலையூர்:
அரிசி ஆலையின் கிடங்கிற்குள் சென்ற அதியன் நெடுமாறன், சென்ற வேகத்தில் தயங்கி பேசியவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்து இருந்தான்.
இவன் அடித்த வேகத்திற்கு அவன் சற்று தள்ளி போய் விழ, அவனது நண்பன் அவனை தூக்கியபடி, “கை வெக்கிற சோலி வேணா.. பேச தான கூப்பிட்டிய!” என்றான்.
பாய்வது போல், “அடிங்க!” என்ற அதியன் நெடுமாறன், “மாத்து வாங்கியவனே கம்முன்னு இருக்கியான்.. நீ என்னலே சலம்புத! இங்கன யாரும் சோலியத்து ஓ சேக்காளிய சாத்தல.. வெளங்குச்சா!” என்றவனின் கோபத்தில் நண்பனின் தலை தானாக ‘சரி’ என்பது போல் ஆடியது.
மற்றவனிடம், “தெகிரியம் இல்லாதவன் என்னத்துக்குல விரும்புற! எம்புட்டு நெலமையிலயும் மனசுல நெனச்சவள கை வுடாதவந்தேன் ஆம்பள.. ரெண்டு வூட்டுக்கும் ஆவாதுனு தெரியாமலா பழகின! ஆத்தா அப்பன கேட்டா அந்த புள்ள கூட..” என்று வார்த்தைகளை அடக்கியவன் அவனை உருத்துப் பார்த்தான்.
“எந்தில” என்று மிரட்டியவன், அவன் எழுந்ததும், “என்னாண்ட ஏன்ல கேட்குத! போய் அந்த புள்ளட்ட மாப்பு கேளு” என்றான்.
வேகமாக, “இன்னிக்கே கேக்கேன் சின்னையா” என்றான்.
“நாளைக்கு ஓ அய்யன் கிட்ட பேசுதேன்.. கெளம்பு”
“ரொம்ப நன்றி சின்னையா”
“அத நீயே வெச்சிகல.. அந்த புள்ள மொகத்துக்கா பாக்கேன்.. செத்த நாளு ஏ கண்ணுல ஆம்புட்டுதாத” என்று கோபத்தை அடக்கிய குரலில் கூற, அது கூட சீறலாக தோன்ற அவன் விட்டால் போதுமென்று நண்பனை இழுத்துக் கொண்டு ஓடிவிட்டான்.
அவர்கள் கிளம்பியதும், “மதிய சாப்பாட்டுக்கு மேல பார்த்துக்கிடலாம்” என்றபடி தனது சிறிய தந்தை மகனான நவநீதனுடன் கிளம்பினான்.
வீட்டிற்கு செல்லும் வழியில் மற்ற வேலைகளை பற்றி பேசியபடியே சென்றனர்.