உறவு 1
சென்னை:
வகுப்பு முடிந்து அந்த வேதியியல் ஆய்வகத்தில் இருந்து மாணவர்கள் கிளம்பி இருக்க, ஒருவன் மட்டும் தேங்கி இருக்க, அவன் முன் கைகளை கட்டியபடி தீர்க்கமான பார்வையுடன் அவனது வேதியியல் பேராசிரியர் சாருவர்தினி நின்றிருந்தாள்.
“மேம்!”
“எப்போதும் நெஞ்சை நிமிர்த்தி பேசுவியே!”
“பானு ஏதும் சொன்னாளா மேம்?”
“இந்த தயக்கமும், சின்னதா டென்ஷனும் ஏன்?”
“மேம்!”
“ஸோ, உனக்கே நீ செய்றது தப்புன்னு தெரியுது!”
சட்டென்று நெஞ்சை நிமிர்த்தியபடி, “நான் தப்பு செய்யலை மேம்” என்றான்.
“ஒரு பொண்ண காதலிக்கச் சொல்லி டார்ச்சர் செய்றது தப்பு இல்லையா?”
“டார்ச்சர்லாம் செய்யலை மேம்.. பெரிய வார்த்தை பேசாதீங்க” என்று கோபத்தை அடக்கிய குரலில் கூறினான்.
இதுவே வேறு விரிவுரையாளரோ பேராசிரியரோ கூறி இருந்தால் எகிறி இருப்பான். அது தான் அவன் குணம் என்றதோடு அந்த பொறியியல் கல்லூரி உரிமையாளரின் உறவினன் என்ற செருக்கும் சேர்ந்து அவன் சற்று அடாவடியான ஆள் தான். பேசியது அவனது மதிப்பிற்குரிய ஆசிரியர் என்பதால் மட்டுமே இந்த பொறுமை.
மாணவர்களின் அபிமான பேராசிரியரான சாருவர்தினியோ நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே! என்று கூறும் ரகம். எதிரில் இருப்பர் கத்தி பேசியோ, ஆவேசம் கொண்டாலுமே, தனது கோபத்தை தீர்க்கமான பார்வை மற்றும் அழுத்தமான பேச்சிலும் நிதானமாகவே வெளிபடுத்துவாள்.
“அப்படி இல்லாமையா முதல் மார்க் வாங்குறவ இந்த இன்டெர்னல் ஃபெயில் ஆகி இருக்கிறா?”
“..”
“என்ன பதிலைக் காணும்?”
“மேம்! இப்பவும் சொல்றேன், நான் டார்ச்சர் செய்யலை”
“அது உன்னை பொறுத்தவரை.. ஆனா அவளுக்கு அப்படி இல்லையே! விருப்பம் இல்லைனு சொல்றவளை திரும்பத் திரும்ப காதலிக்கச் சொல்றது அவளை பொறுத்தவரை டார்ச்சர் தான்”
“மேம்! உங்களுக்கு எப்படி புரியவைக்க! அவளுக்கும் என்னைப் பிடிக்கும்”
“லுக் அசோக்.. பிடித்தம் வேற.. காதல் வேற.. அஸ் அ பிரெண்டா அவளுக்கு உன்னை பிடித்து இருக்கலாம்.. ஆனா அது காதலா மாறனும்னு இல்லையே!”
“மேம்.. அவளுக்கு பிடித்தத்திற்கு மேல் என்னைப் பிடிக்கும்”
“ஸோ பிடித்தத்திற்கும் காதலுக்கும் நடுவில்.. காதலுக்கு கொண்டு போக அவ தயங்குறாளா இருக்கும்.. மே பி உன் குணம், பேக்-கிரௌண்ட் பற்றி யோசித்து விலக நினைக்கலாம்.. தப்பில்லையே!”
“அது எப்படி மேம் விட முடியும்? அவளுக்கு என்னைப் பிடிக்கலைனா வேற, ஆனா பிடித்து இருக்கும் போது!”
“அது எப்படி தான் காலேஜ் வந்ததும் காதலிக்க ஆரம்பிக்கிறீங்களோ! கெத்து காமிக்கவா?”
“நான் செகண்ட் செமிஸ்டரில் தான் ப்ரொபோஸ் செய்து இருக்கிறேன்”
“அதில் என்ன பெருமை!”
“நீங்க வேற மேம்! அவனவன் காலேஜ் வந்த முதல் நாளே ப்ரொபோஸ் செய்றான்”
“ஆமாமா எவ்ளோ வேகமா காதல் வருதோ அதை விட வேகமா பிரேக்-அப் ஆகிடுது” என்று அவள் நக்கலுடன் கூற,
அவன் மென்னகையுடன், “நீங்க சொல்றதும் சிலது.. சரி கொஞ்சம் நிறைய இருக்குது தான் ஆனா உண்மையான காதலும் இருக்குது மேம்.. அதெல்லாம் புரிஞ்சுக்க நீங்க காதலிச்சு இருக்கணும்” என்று கிண்டலாக முடித்தான்.
அவளது முறைப்பில், “சாரி மேம்.. கொஞ்சம் அதிகமா பேசிட்டேன்.. சாரி.. ஆனா ஒன்னு மேம், கெத்துக்காக காதலிக்கிற ஆள் நான் இல்லை.. அவளுக்கு என்னை கொஞ்சம் கூட பிடிக்கலைனா நிச்சயம் நான் விலகி இருப்பேன்.. அண்ட் நான் அடாவடிகாரனா இருந்தாலும் என் வீரத்தை பொண்ணுங்க கிட்ட காட்டியது இல்லை” என்றான்.
“ஸோ உன்னோட காதல் உண்மை காதல்னு சொல்ற.. அப்போ அமைதியா காத்திரு.. உண்மையான காதல், தான் விரும்பும் நபரை காயப்படுத்தாது.. லைஃபில் செட்டில் ஆகிட்டு, ஐ மீன் பைனல் இயரில் கேம்பஸ் இன்டெர்வியூவில் செலெக்ட் ஆகிட்டு அவளிடம் போய் பேசு.. அதாவது, அந்த நேரம் அவ மனசில் வேற யாரும் இல்லைனா போய் பேசு.. அப்பவும் உன் மேல் பிடித்தத்தை மீறிய விருப்பம் இருந்தும் அவள் மறுத்தா, உன் பரென்ட்ஸ் கூட்டிட்டு போய் அவ வீட்டில் பேசு.. இப்போ நீ படிக்க வேண்டிய நேரம்.. அவளையும் படிக்க விடு”
“இடையில் அவ வேற யாரையும் காதலிச்சிட்டா?”
அவளது ஆழ்ந்த பார்வையில், “புரியுது மேம்.. என் மேல் காதல் இருக்கும் பட்சத்தில் வேற யாரையும் அவ காதலிக்க மாட்டா.. அப்படி வேற யாரையும் காதலிச்சுட்டா..” என்று பாதியில் நிறுத்தினான்.
அவனது புஜத்தில் தட்டியவள், “அவ கூட பழகவே கூடாதுனு சொல்லலை ஆனா காதலை கொண்டு வராதே.. எதிர்மறையோ நேர்மறையோ! இப்பவே எதையும் யோசிக்காத.. படிப்பில் கவனத்தை செலுத்து” என்றாள்.
மூச்சை இழுத்துவிட்டு மென்னகைத்தவன், “தேன்க்யூ மேம்” என்று கூறி அவளது புன்னகையை பதிலாக பெற்று வெளியேறினான்.