காலையில் கண்விழிக்கும் போதே சுமித்ராவிற்கு தலை பாரமாக இருந்தது.இரவு முழுவதும் கண்விழித்திருந்தவள் விடியலின் தொடக்கத்தில் தான் கண்ணயர்ந்தாள்.அதன் காரணமாக தலைவலிக்க தொடங்கிவிட்டது,இருந்தும் வேலைக்கு செல்ல வேண்டுமே என்று தனக்குள் சொல்லிக் கொண்டு எழுந்து தன்னை சுத்தப்படுத்தி வந்தவள் வேலைக்கு செல்ல தயாரானாள்.
சுமித்ராவின் உடல் மட்டும் தான் இங்கு இருந்தது மனது பிருத்திவியை பற்றிய சிந்தனையிலேயே இருக்க,இந்த நேரம் எங்கு இருப்பான்,இன்று தனக்காக வழியில் காத்துக் கொண்டு இருப்பானா என்று நினைத்தவளுக்கு தனது மனதின் போக்கை நினைத்து ஆச்சிரியமாக இருந்தது.நேற்றுவரை அவனை வேண்டாம் என்று ஒதுக்கியது என்ன இப்போது அவனை எதிர்பார்ப்பது என்ன நினைத்தவளுக்கு தன் மனதின் செயலை எண்ணி குழப்பமாக இருந்தது.
அதே மனநிலையுடன் வேலைக்கு கிளம்பி வீட்டை விட்டு வெளிவந்தவள் தன் தொழிற்சாலையை நோக்கி நடக்க கண்கள் அவளையும் அறியாமல் நேற்று பிருத்திவி நின்றிருந்த இடத்தை காண அங்கு அவனில்லை.அவன் இல்லாதது மனதில் சிறு சுணக்கத்தை ஏற்படுத்தியது.ஏன் நேற்று சாப்பிடாம கூட நிக்க தெரிஞ்சுது,இன்னைக்கி ஏன் வரமுடியாதாமா..ரொம்ப தான் என்று மனதில் பிருத்திவியை திட்டியபடியே தொழிற்சாலைக்கு சென்றாள்.
அவளது மனம் நிறைந்தவனோ ஹோட்டல் அறையில் நல்ல உறக்கத்தில் இருந்தான்.நேற்று சுமித்ராவிடம் மனதில் உள்ள அனைத்தையும் கொட்டிவிட்டு வந்தவனுக்கு மனது மிகவும் லேசாக உணர,வெகு நாட்களுக்கு பிறகு எந்தவித உளைச்சலைகளும் இல்லாமல் நல்ல உறக்கம் கிட்டியது.
இங்கு சுமித்ராவோ சற்று நேரம் வேலை செய்வது பின் சிறிது நேரம் ஏதோ யோசனை செய்வதுமாக இருந்தாள்.அவளது மனதின் போக்கு அவளுக்கே புரியாமல் இருந்தது.முதலில் பிருத்திவியிடம் பேசாமல் இருப்பது தான் நல்லது என்று நினைத்திருந்தவளுக்கு திடீர் என்று பிருத்திவி தன்னை திருமணம் செய்ய கேட்டது அதிர்ச்சியாக தான் இருந்தது.ஆனால் அவன் தன்னை விரும்பி தான் கல்யாணம் செய்ய நினைக்கிறானா என்பதற்கு அவளுக்கு பதில் கிடைக்கவில்லை.
இதில் காலை அவனது வரவை மனது எதிர்பார்க்க தொடங்க தன்னையும் அறியாமல் அவனை திட்டியபடி வந்தாள்.ஆனால் சற்று நேரம் தன்னை நிதானித்தவளுக்கு தான் அவனை எதற்காக திட்டுகிறோம் அவனை எனது மனம் எதிர்பார்க்க தொடங்குகிறது எதனால் என்று தனக்குள் கேள்விகளை எழுப்ப நீ இன்றளவும் பிருத்திவியின் மீதுள்ள நேசத்தை மறக்கவில்லை என்று கூறியது மனம்.ஒருகட்டத்தில் மனதின் சுழற்சி அவளுக்கு தலைவலியை கொடுக்க தனது மேஜையின் மேல் கைகளை தலைக்கு முட்டுக் கொடுத்து உட்கார்ந்துவிட்டாள்.
சுமித்ரா வந்ததில் இருந்து அவளை கவனித்துக் கொண்டிருந்த நல்லசிவத்திற்கு அவளின் மனநிலை ஓரளவிற்கு புரிந்தது.தாய்,தந்தையை இழந்து தனிமையில் வாடுபவளுக்கு இப்போது தேவை நல்ல துணை.கார்மேகம் இருந்திருந்தால் இந்த நேரம் சுமித்ராவிற்கு திருமணம் முடித்திருப்பான் என்று தன் நண்பனில் நினைவில் ஆழ்ந்தவர்,பின் தெளிந்து இப்போது சுமித்ராவிற்கு ஒரு தந்தையாக இருந்து தான் தான் அவளுக்கு ஒரு நல்வழி காட்ட வேண்டும் என்று தீர்மானித்தவர்,தனது பணியாளை அழைத்து சுமித்ராவை அழைத்துவரும் படி பணிந்தார்.
தன் மேஜையின் மீது கைகளில் தலை வைத்தபடி அமர்ந்திருந்த சுமிர்தாவிற்கு மனது ஒருநிலையில் இல்லை பிருத்திவி ஏற்படுத்தி சென்ற சுழல் அவளை உள்ளுக்குள் இழுப்பதாக இருக்க இது சரியா இல்லை தவறா என்று அவளுக்கு புரியவில்லை.தன்னை சலனப்படுத்திவிட்டு சென்றவனை மனதிற்குள் திட்ட தான் முடிந்தது.இவ்வாறு சுமித்ரா தனக்குள் போராடிக் கொண்டிருக்கும் போது தான் அவளை நல்லசிவம் அழைப்பதாக பணியாள் கூற அப்போது தான் நல்லசிவத்தின் நினைப்பே அவளுக்கு வந்தது.
தாய்,தந்தை மறைவிற்கு பின் தன்னை பாதுகாப்பாக வழி நடத்திய ஒரே ஜீவன் அவர் தான்.அவர் இல்லை என்றால் தன்னிலை என்னவாயிருக்கும் என்று நினைத்தவளுக்கு நெஞ்சிற்குள் குளிர் தான் எடுத்தது.அவரது உதவியை தன் வாழ்நாள் முழுதும் அவளாள் மறக்க இயலாது.அவ்வாறு இருக்கையில் இப்போது பிருத்திவி கூறியதை அவரிடம் கூறினால் அவர் என்ன நினைப்பார் என்று நினைத்தவளுக்கு மனக்குழப்பத்துடன் பயமும் பிடித்துக் கொண்டது.
தனது அலுவலக அறையில் அன்றைய வேலைகளின் கோப்புகளை பார்த்துக் கொண்டிருந்தார் நல்லசிவம்.அப்போது அவரிடம் அனுமதி கேட்டு சுமித்ரா உள்ளே வர,
“வாம்மா…உட்காரு….”என்று தன் முன் இருக்கும் இருக்கையில் அமருமாறு பணிந்தார்.அவள் அமர்ந்தவுடன்,
“என்னமா என்ன முடிவு பண்ணியிருக்க…”என்று கேட்க,சுமித்ரா அவர் என்ன கேட்கிறார் என்று புரியாமல் விழித்தாள்.அவள் விழிப்பதைக் கண்டு புன்னகைத்தவர்,
“என்னமா நான் என்ன கேட்கிறேனு உனக்கு புரியலையா…”என்று கேட்க,அதற்கு சுமித்ரா இல்லை என்பதாக தலையாட்டினாள்.
“சரிமா…நேரிடையாவே கேட்கிறேன்…..உன் கல்யாணத்தை பத்தி என்ன முடிவு எடுத்துருக்க…”என்று கேட்க,சுமித்ரா ஒரு நிமிடம் அதிர்ந்துவிட்டாள்.இது இவருக்கு எவ்வாறு தெரியும் யோசித்தவளின் கண்முன்னே சிரித்தபடி பிருத்திவியின் உருவம் தோன்றி மறைந்தது.அவனை??? என்று மனதிற்குள் திட்டியவள் சிவத்தின் முன் பேசுவதற்கு தடுமாற,
“என்னமா ஏன் இப்படி தடுமாறுற…எனக்கு அந்த தம்பி வந்தப்பவே தெரியும்…நான் தான் உனக்கு விருப்பம் இருந்தா பார்க்கலாம் இல்லைனா விட்டுலாம்னு இருந்தேன்…”என்றவர் மேலும்,
“என்ன இருந்தாலும் உனக்கு அப்பா ஸ்தானத்தில இருந்து நான் தான் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்…இந்த நேரம் உன் அப்பா இருந்திருந்தா உனக்கு கல்யாணம் முடிச்சிருப்பான்….நான் தான் தவறவிட்டுடேன் போல…”என்று கூற,
“என்ன அங்கிள் நீங்க இப்படி எல்லாம் பேசுறீங்க…நான் கல்யாணம் அப்படி ஒண்ணைபத்தி நினைக்கவே இல்லை….நீங்க தப்பு பண்ணல..ப்ளீஸ் அங்கிள் அப்படி எல்லாம் சொல்லாதீங்க எனக்கு கஷ்டமா இருக்கு…”என்று கண்கள் கலங்க கூறியவளை வாஞ்சையாக பார்த்தார் நல்லசிவம்.
இன்றும் அவரின் கண்களுக்கு தனது முதல் பிறந்தநாளின் போது புது உடை அணிந்து வந்து அவர் முன்னே சாக்லேடை நீட்டும் குழந்தையாகவே தான் சுமித்ரா தெரிந்தாள்.அவளின் பிறந்தநாளின் போது எப்போதும் முதல் சாக்லேட் அவளின் தந்தைக்கு என்றால் அடுத்த சாக்லேட் நல்லசிவத்திற்கு தான் கொடுப்பாள் இல்லை ஊட்டிவிடுவாள் என்று தான் சொல்லவேண்டும்.பெண் குழந்தை இல்லாத நல்லசிவத்திற்கு சுமித்ரா என்றால் சற்று பிரியம் அதிகம்.
மாசுமறுவற்ற வட்ட முகமும்,மருண்ட விழிகளும் சுமித்ராவைக் கண்டாலே நல்லசிவத்திற்கு இவளை போல ஒரு பெண்பிள்ளை எனக்கு ஏன் இல்லை என்று தோன்றும்.சில நேரங்களில் கார்மேகத்திடம் இதற்காக செல்லமாக சண்டையும் போடுவார்.சுமித்ராவை நானே தத்தெடுத்துக் கொள்கிறேன் உனக்கு அவளை வளர்க்க தெரியலை என்று.அவ்வாறு சண்டை போடும் போது எல்லாம் கார்மேகம்,
“அவ உனக்கும் பொண்ணு தான் டா…”என்று கூறுவார்.சுமித்ராவிற்கு வெளி உலகம் தெரிய வேண்டும் என்பதற்காக கார்மேகத்திடம் சண்டையிட்டு அவளை சென்னையில் கல்லூரி சேர்த்தது.முதலில் மகளின் பிரிவில் சற்று கலங்கிய கார்மேகம் கூட முதல் வருட விடுமுறையில் சுமித்ராவின் மாற்றத்தைக் கண்டு மிகவும் மகிழ்ந்து தான் போனார்.அவரே நல்லசிவத்திடம்,
“டேய் நீ சொன்னது சரிதான்டா வெளியூர் போனதுக்கு அப்புறம் நம்ம சுமி ரொம்ப மாறிட்டா டா…இப்பெல்லாம் தனியா வெளில போறா எதுக்கும் பயப்படாம இருக்கா…”என்று மகள் இருந்த ஒருமாதமும் அவள் புராணம் தான் படித்தார்.நல்லசிவத்திற்கு கூட சுமித்ராவின் மாற்றத்தில் மகிழ்ச்சி தான் எங்கே தந்தையை பிரிந்ததில் வருத்தப்பட்டுக் கொண்டு இருப்பாளோ என்று நினைத்தவருக்கு சுமித்ராவின் இந்த மாற்றம் நிறைவை கொடுத்தது.
கார்மேகமத்தின் இழப்பிற்கு பிறகு சுமித்ரா மிகவும் ஒடுங்கி தான் போனாள்.நல்லசிவம் எவ்வளவோ முயன்றும் அவரால் அவளை ஓரளவிற்கு மேல் சுமித்ராவை வெளி கொண்டு வர முடியவில்லை.இதில் நல்லசிவத்தின் மனைவியும் இறந்தபின் அவருமே மனதும்,உடலும் சோர்வுடன் தான் இருந்தார்.அதனால் அவர் சுமித்ராவை கவனிக்க தவறிவிட்டார்.
பிருத்திவியிடம் பேசியவருக்கு அப்போது தான் சுமித்ராவிற்கு திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணமே வந்தது.அதிலும் பிருத்திவி சுமித்ராவை திருமணம் செய்ய விரும்புவதாக கூற அவரும் அவனை பற்றி சென்னையில் தனக்கு தெரிந்தவர் மூலம் விசாரித்துவிட்டு அவன் கூறுவது அனைத்தும் உண்மை என்று தெரிந்த பின் தான் சுமித்ராவிடம் பிருத்திவியை பேசவே அனுமதித்தார்.தன் மனதில் உள்ளதை மறைக்காமல் பேசும் பிருத்திவியை அவருக்கு பிடித்தும் இருந்தது.அதனால் பிருத்திவி வந்ததிலிருந்து சுமித்ராவின் முகத்தில் வந்த மாறுதல்களை கண்டு கொண்டவருக்கு மனதிற்குள் மகிழ்ச்சி தான்.இருந்தும் இருவரும் பேசி நல்ல முடிவை எடுக்கட்டும் என்று தான் முடிவை அவர்களிடம் விட்டுவிட்டார்.
இன்று காலையில் இருந்து சுமித்ராவை கவனித்தவருக்கு அவளது குழப்ப மனநிலை நன்கு புரிய அவளிடம் தானே பேச முடிவெடுத்துவிட்டார்.
“அங்கிள்…ப்ளீஸ் நீங்க எதுவும் நினைக்காதீங்க…நான் கல்யாணம் அதை பத்தியெல்லாம் யோசிக்கவேயில்லை….”என்று முன்பு கூறியதையே கூற,அவளைக் கண்டு மென்மையாக புன்னகைத்தவர்,
“நீ யோசிக்கலனா என்னமா நான் யோசிக்கிறேன்….நானும் உனக்கு அப்பா தான்…என்னை நம்பி தான் என் நண்பன் உன்னை விட்டுட்டு போயிருக்கான்…அவனோட இடத்துல நான் தான் இருந்து உனக்கு எல்லா நல்லது கெட்டதும் செய்யனும்…”என்று கூறிவிட்டு அவளின் முகத்தை பார்க்க,அதில் குழப்பமே தெரிந்தது.அவளது தலையை ஆதரவாக தடவியவரே,
“என்னமா…எது உன் மனச இப்படி குழப்புது….எதுவா இருந்தாலும் என்கிட்ட தைரியமா சொல்லு…ஆனா அதுக்கு முன்னாடி உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லுறேன் கேட்டுக்கோ…”என்று ஏதோ புதிர் போல கூற அவளும் சரி என்பதாக தலையாட்டினாள்.
“எனக்கு அப்புறம் இந்த தோட்டம் என் பசங்க கைக்கு போயிடும்…அவங்க இரண்டு பேரும் பொறுப்பு எடுத்தா இதை என்ன செய்வாங்கனு என்னால சொல்ல முடியலை…”என்றவர் மேலும்
“என்னமா அங்கிள் ஏன் இப்படி திடீர்னு சொல்லுறேனு பார்க்குறியா…”என்று கேட்க அதற்கு சுமித்ரா ஆமாம் என்று தலையாட்டவும்,
“எனக்கு அப்புறம் இந்த தோட்டத்தை என் புள்ளைகளால பார்த்துக்க முடியாதாம் அதனால இந்த தோட்டத்தை வித்து வர பணத்தை எங்க இரண்டு பேருக்கும் சரி பாதியா போட சொல்லுறானுங்க…நானும் என் பொண்டாட்டி இருந்த வரை அவனுங்க கூட போராடடி இதை விக்காம பார்த்துக் கிட்டேன்…ஆனா அவளும் போனதுக்கு அப்புறம் என்னால அவனுங்க கூட போராட தெம்பு இல்லைமா….இருந்தும் நான் உயிரோட இருக்குற வரை நான் இதை விக்க போறது இல்லைனு அவனுங்க கிட்ட தீர்மானமா சொல்லிட்டேன்…நான் இறந்ததுக்கு அப்புறம் இந்த தோட்டம் உங்களுக்கு வரும்னு பத்திரமும் எழுதி வச்சுட்டேன்…அதனால அவனுங்களும் இப்ப அமைதியா இருக்கானுங்க….”என்றவர்,சுமித்ராவை பார்த்து,
“அதனால தான்மா சொல்லுறேன்….நீ இந்த இடம் உனக்கு நிரந்தரம்னு இருக்காத…நானே இதை உன்கிட்ட சொல்லனும் தான் இருந்தேன்…ஆனா….”என்று ஏதோ கூறவரும் முன் அவரது கைகள் நடுங்க தொடங்க,சுமித்ரா பயந்து போனாள்.
“அங்கிள்…அங்கிள்…என்னாச்சு…”என்று பதட்டமாக அவள் அவரை பிடித்து இருக்கையில் அமர வைத்தவள் அருகில் இருந்த தண்ணீர் டம்பளரை கொடுத்து குடிக்க செய்தாள்.அவரது நெஞ்சை பொறுமையாக நீவி விட்டவள் கண்கள் கலங்க தொடங்கியது.மனதில் இதே நிலையில் தானே அன்று தன் தந்தையும் இருந்திருப்பார் அதே போல் இன்று அங்கிளுக்கும் ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம் பிடித்துக் கொண்டது.
“ஒண்ணுமில்லடாமா…இன்னக்கி பிபி மாத்திரை போட மறந்து போயிட்டேன்…அதான்…நீ ஏன் இவ்வளவு பயப்படுற…”என்று அவளது கைகளை தட்டிக் கொடுத்த நல்லசிவம்.தனது மேஜையின் அடியில் இருந்து பிபி மாத்திரையை எடுத்து போட்டுக் கொண்டார்.சிறிது நேரம் பிடித்தது மனிதருக்கு மீண்டும் இயல்புக்கு திரும்ப.அதுவரை சுமித்ராவிற்கு உயிர் போய் உயிர் வந்தது என்று தான் கூற வேண்டும்.
தன்முன்னே கலகத்துடன் அமர்ந்திருந்த சுமித்ராவைக் கண்டவருக்கு தான் மனதில் எடுத்த முடிவு சரி என்றே பட்டது.இந்த பெண்ணிற்கு எப்படியாவது நல்ல வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் மனதில் உறுதி பிறந்தது.தன்னை சற்று சமன் செய்து கொண்டவர்,
“இப்ப சொல்லுமா உனக்கு பிருத்திவியை பிடிச்சிருக்கா…”என்று கேட்க,சுமித்ராவோ சற்று முன் நடந்த நிகழ்வில் இருந்து வெளிவரவில்லை என்பது அவளது முகமே காட்டிக் கொடுக்க அதை உணர்ந்த நல்லசிவமும்,
“எனக்கு ஒண்ணும் இல்லைமா…சாதாரண படபடப்பு தான்…அதுவும் என் மேல தான் தப்பு நான் இன்னைக்கி மாத்திரை போட மறந்துட்டேன்…அதனால தான்…அவ்வளவு சீக்கிரம் எனக்கு ஒண்ணும் ஆகாதுமா…நீ தேவையில்லாம பயப்படாத…நீ இப்ப உன்னை பத்தி மட்டும் யோசி…”என்று கூறிவிட்டு அவளையே பார்க்க,
“எனக்கு என்ன சொல்லுறதுனே தெரியலை அங்கிள்…”என்று ஏதோ தெளிவில்லாமல் பேச,
“ஏன்மா உனக்கு பிருத்திவியை பிடிக்கலையா….அந்த தம்பியை பிடிக்கலைனா விடுமா நான் உனக்கு வேற மாப்பிள்ளை பார்க்குறேன்மா….இதுவரைக்கும் உன்னை பத்தி யோசிக்காம இருந்துட்டேன்..ஆனா இனி அப்படி இருக்கக் கூடாது அது நான் என் நண்பனுக்கு செய்யுற துரோகம்…”என்று கூற,
“இல்லை இல்லை அங்கிள்…எனக்கு பிருத்திவியை பிடிக்காமா இல்லை…எனக்கு பிடிச்சு தான் இருக்கு…ஆனா…”என்று படபடவென்று தன் மனதில் உள்ளதை கூறியவளுக்கு சற்று நேரம் கழித்து தான் அவள் கூறியதே புரிய,தயக்கத்துடன் நல்லசிவத்தைக் காண அவரோ அவளை கண்டு புன்னகைத்தார்.அப்போது தான் அவளுக்கு புரிந்தது அவர் தன் மனதில் உள்ளதை வர வைப்பதற்கே பேசியிருக்கிறார் என்று.அதில் மேலும் தயக்கத்துடன் முகத்தை குனிந்தவறே அமரந்திருக்க,
“என்னப்பா உனக்கு இப்ப சந்தோஷம் தான…என் பொண்ணு கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டா…”என்று கூற,அதுவரை தரையை பார்த்துக் கொண்டு இருந்த சுமித்ரா நிமிர்ந்து பார்க்க நல்லசிவம் பின்னே பார்க்குமாறு செய்கை செய்ய வேகமாக திரும்பி பார்க்க,அங்கே கதவில் சாய்ந்தபடி கைகளை கட்டிக் கொண்டு நின்றிருந்தான் பிருத்திவிதேவ்.
சுமித்ரா பிருத்திவியைக் காண அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.இருவரின் பார்வையும் ஒருவரில் ஒருவர் கலந்து போனது,அதே போல் அவர்களின் இதயமும் ஒன்று சேரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று கூறியது அவர்களின் விதி.