ஒரு வருடம் கழித்து

                                குட்டி திரு என்று அழைக்கப்பட்ட ருத்ரன் தவழ்ந்து கொண்டே வாசல் நிலைப்படி அருகே சென்றிருக்க, அங்கே மரக்கதவு திறந்து இருந்தாலும், புதிதாக ஒரு இரும்பு கதவு போடப்பட்டு இருக்க, அது மூடி இருந்தது. அந்த இரும்பு கதவை கெட்டியாக பிடித்துக் கொண்டவன் தானாகவே எழுந்து நிற்க முயற்சிக்க இது எப்போதும் நடப்பது தான்.

                             மெதுவே எழுந்து நின்றவன் வாசலை காட்டி “ப்ப்பா.. ப்பா..” என்று எச்சில் கூட்டிகொண்டே கூற, எச்சில் தெறித்தது அவன் வாயிலிருந்து. துர்கா இதற்குள் அவனுக்கு பருப்பு சாதத்தை பிசைந்து எடுத்துக் கொண்டு கிச்சனிலிருந்து வெளியே வர, அவளை பார்த்தவன் இன்னும் சத்தமாக அழைக்க தொடங்கினான்.

                           துர்கா சிரித்துக் கொண்டே வந்து அவனை தூக்கி கொள்ள பார்க்க “ம்மா.. ப்ப்பா..பா..” என்று வாசலை காட்டி அழத் தொடங்கினான் அவன்.

                        “அடேய்.. உன் அப்பா வருவார்டா.. நீ சாப்பிடு வா..” என்று அவனை தூக்கி கொண்டு வந்து வீட்டின் நடுவில் அமர்த்த மீண்டும் தவழ ஆரம்பித்தான் ருத்ரன். அவன் இடுப்பில் இருந்த வெள்ளிக் கொடியை பிடித்து இழுத்து அவன் வாயில் ஒரு வாய் சோற்றை துர்கா திணிக்க, விழுங்கவே இல்லை அவன்.

                          உணவை “ப்பூ..” என்று அவள் முகத்திலேயே துப்பியவன், அப்படி ஒரு சத்தம். அவன் கத்தியதில் பயந்து துர்கா அவனை பிடித்திருந்த பிடியை விட, மீண்டும் தவழ்ந்தவன் வாசலுக்கே சென்றுவிட்டான். துர்கா “இவனை..” என்று அலுத்துக் கொண்டே அவளும் சென்று வாசலில் அமர்ந்து விட்டாள்.

                       வாசலை காட்டி “அப்பா வந்துவிடுவார்..” என்று கூறி, என்னென்னமோ செய்து அவள் போராட, இரண்டு வாய்க்கு மேல் வாங்கவில்லை அவன். அவள் பிடித்தால் கத்துபவன் அவள் விட்டுவிட்டால் அந்த ஹாலில் ஒரு இடம் விடாமல் வளம் வந்தான்.

                        டைனிங் டேபிளுக்கு அடியில், ஸோஃபாவிற்கு அடியில் என்று ஒளிந்து கொள்வது போல் மறைந்தவன் அவளை எட்டிப்பார்த்து சிரிக்க, கடுப்பானது துர்காவுக்கு. இது திருவின் பழக்கம். அவன் தான் மகனோடு இப்படி ஒளிந்து விளையாடுவது. மகன் இப்போது சாப்பிடாமல் விளையாட அழைக்க, துர்கா திருவை மனதில் திட்டிக் கொண்டவள் அவனை வெளியே இழுத்து மீண்டும் உணவை அவன் வாயில் திணிக்க

                        அப்படி ஒரு அழுகை அவனிடம். சரியாக அந்த நேரம் திரு வாசலுக்கு வர, அவனை பார்த்ததும் சத்தம் இன்னும் பெரிதானது. துர்கா இரும்புக்கதவை திறந்தவன் விரைந்து சென்று பிள்ளையை தூக்கி கொள்ள, துர்கா கீழேயே அமர்ந்திருந்தாள் இன்னும்.

                         திரு அவள் அருகில் அமர, அவன் கையிலிருந்த ருத்ரனை துர்கா முறைக்கவும் மீண்டும் அழுதான் அவள் மகன். திரு மகனிடம் “ஒண்ணுமில்லடா.. ஒன்னும் இல்ல.. அம்மாவை அடிச்சிடவா..” என்று அவளை அடிப்பது போல் தோளில் தட்ட, குதூகலித்து சிரித்தான் அவன்.

                       துர்கா அவன் சிரிப்பில் கடுப்பானவளாக அவன் கன்னத்தை கிள்ளிவிட, மீண்டும் அவன் அழுகையை தொடங்கும் முன் திரு அவன் கன்னத்தில் முத்தமிடவும் அழுகை நின்று போனது. திரு இப்போது துர்காவை முறைக்க “முதல்ல உங்க பிள்ளைக்கு சாப்பாடை ஊட்டுங்க.. இந்த வயசுல என்னை அடிச்சா சிரிப்பியாடா நீ.. எவ்ளோ கொழுப்பு..” என்று மகனை அவள் திட்ட

                      மீண்டும் அவளை பார்த்து ருத்ரன் சிரிக்கவே செய்தான். திரு உணவுக்கிண்ணத்தை கையில் வாங்கி கொண்டவன் ருத்ரனிடம் பேசிக் கொண்டே அவன் வாயில் திணிக்க, சமத்தாக வாங்கி கொண்டான். துர்கா மீண்டும் கடுப்பானவளாக அவனை கிள்ளிவிட கையை எடுக்க திரு இடது கையால் அவள் கையை பிடித்துக் கொண்டவன் “ஏய் ரௌடி.. போய் கெளம்புடி.. சும்மா என் பையனை அழ வைக்காத.. ” என்றுவிட,அவன் கையை விடவும் திருவின் கன்னத்தை அழுத்தமாக கிள்ளிவிட்டு ஓடிவிட்டாள் துர்கா.

                        அவள் தயாராகி வருவதற்குள் திரு ருத்ரனுக்கு உணவை ஊட்டி முடித்திருக்க, அவனை துர்காவிடம் கொடுத்தவன் தான் குளிக்க சென்றான். துர்கா தன் மகனுக்கு உடம்பு துடைத்துவிட்டவள் அவன் உடையை மாற்றிவிட அவன் கண் முழுவதும் அந்த குளியலறை கதவு மேல் தான் இருந்தது.

                       அவன் முகத்தை திருப்பி மையிட்டவள் “போதுண்டா.. உன் அப்பா ஓடிட மாட்டாரு… ராத்திரி என்கிட்டதான வரணும்… வா..” என்று அவனை மிரட்ட, அதற்குள் திரு வந்துவிட்டான்.

                     திரு வந்ததும் ருத்ரன் கையை நீட்ட, திரு அவனிடம் பேசிக் கொண்டே உடையை மாற்றி கொண்டான். அதன்பின்னே அவன் ருத்ரனை கையில் தூக்கி கொள்ள, அந்த குட்டி குடும்பம் அவர்கள் வீட்டிலிருந்து கிளம்பியது.

            வாசலில் நின்றிருந்த தன் காரின் முன்பக்கம் துர்கா அமர்ந்ததும் அவளிடம் பிள்ளையை கொடுத்தவன் தானும் மறுபுறம் வந்து ஏறிக் கொண்டு வண்டியை எடுத்தான். அது அவர்களின் சொந்த கார். இந்த இரண்டு ஆண்டுகளில் திரு இன்னும்கூட முன்னேறி இருக்க, மேலே இருந்த ஒற்றை அறையை இடித்துவிட்டு அங்கும் சற்று தாராளமாகவே ஒரு வீட்டை கட்டிவிட்டு இருந்தான்.

                     வள்ளி இன்னமும் இவர்களின் மேல்வீட்டில்தான். இப்போது திருவின் ஏற்பாட்டில் வட இந்திய கோவில்களுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தார் அவர். அவருக்கு மகிழ்ச்சிக்கு ஒரு குறையும் இல்லாமல் போக, வேண்டுதல் எல்லாம் தன் பேரனுக்காகவே.

                            இவனின் தொழிலிலும் நல்ல முன்னேற்றம் கொண்டிருக்கவே, எண்ணெய்க்கடையை பார்த்துக் கொள்ள படித்த பெண்கள் இருவரை அமர்த்தி இருந்தவன் சரத்தை அவர்களுடன் விட்டிருந்தான். அவன் வாழ்வு அவன் நினைத்தே பார்க்காத வகையில் மாறி இருக்க, இன்று சொந்தம், சொத்து, செல்வாக்கு, என்று அனைத்திலும் இந்த சமூகத்தின் மதிக்கத்தக்க மனிதனாக மாறி இருந்தான்.

                            மூவரும் வடபழனி ஆண்டவரை சந்திக்கவே இப்போது கிளம்பி இருந்தார்கள். மிகவும் முக்கியமானவர் அல்லவா. அவர்களின் உறவை அழகாக அமைத்து கொடுத்த அந்த கந்தபெருமானுக்கு நன்றியை உரைத்துவிட்டு, மூவரும் அங்கே ஒரு ஓரத்தில் அமர்ந்து கொள்ள திரு, துர்கா இருவருக்குமே பழைய நினைவுகள்.

                           அன்று இதே கோவிலில் கண்ணீருடன் வீணடிக்க கொண்டு சென்ற தங்கள் திருமண நாளை எண்ணிக் கொண்டிருந்தாள் துர்கா. திருவும் அதேதான் எண்ணமிட்டான் அந்த நேரம். துர்கா அவன் கையை அழுத்தமாக பிடித்துக் கொள்ள, திருவும்  அதே அழுத்தத்தை கொடுக்க சிறிது நேரம் அப்படியே இருந்தவர்கள் வீட்டிற்கு கிளம்பினர்.

                          வீட்டிற்கு வந்து இரவு உணவையும் முடித்துக் கொள்ள திரு ருத்ரனை தூக்கி கொண்டு அறைக்கு சென்றுவிட, ருத்ரனுக்கு தூக்கம் சொக்கியது. அவன் துர்காவை தேடி அழ, துர்கா என்று குரல் கொடுத்து விட்டான் திரு.

                         துர்காவும் அவன் கூப்பிடும்போதே அந்த அறைக்குள் வந்தவள் ருத்ரனை கையில் வாங்கி கொள்ள , அன்னையிடம் தாவியவன் அவள் தோளில் முகம் புதைத்துக் கொண்டான். “இதுக்கு மட்டும் நான் வேணுமா… உன் அப்பாகூடவே தூங்க வேண்டியது தானே..” என்று அப்போதும் அவனை திட்டிக் கொண்டே மடியில் போட்டவள் கையில் இருந்த பால் பாட்டிலை அவன் வாயில் வைக்க கைகளால் தள்ளிவிட்டான் அவன்.

                           திரு நக்கலாக சிரித்தான் துர்காவை பார்த்து. துர்காவின் பிள்ளைக்கு துர்காவை போலவே பால் பிடிக்காது. ஒரு பிஸ்கட் குழைத்து கொடுத்தால் கூட சுடுநீரில் கொடுத்தால் உண்டுவிடுபவன் பாலை தொட மாட்டான். ஆனால் அவனை அப்படியே விடாமல் இரவில் மட்டும் அவனுக்கு பாலை புகட்டிய படுக்க வைப்பாள் துர்கா.

                          ஆனால் அதற்கு அவள் படும் பாடு திரு மட்டுமே அறிந்தது. திரு துர்கா பிரசவ காலத்தில் தன்னை படுத்தி வைத்ததை நினைத்தே சிரித்துக் கொள்வான் அந்த நேரங்களில். இப்போதும் அவன் சிரித்துக் கொண்டிருக்க,

                     துர்கா பாலை புகட்டி முடிக்கும்போதே மகன் உறங்கிவிட்டான். அவனை படுக்கையின் ஓரத்தில் கிடத்தியவள் தானும் அவனுடன் படுத்துக் கொள்ள திரு மனைவியின் அருகில் படுத்தவன் அவள் இடையில் கையை கொடுத்து அணைக்க, அவன் கையின் மேல் பட்டென்று அடித்தவள் “கையை எடுங்க..” என்றாள் இரக்கமே இலலாமல்.

                 திரு அவளை கண்டு கொள்ளாமல் அவளை தன் புறம் திருப்பிக் கொள்ள “நான் கேட்டதுக்கு ஒத்துக்கல இல்ல.. எதுவுமே கிடையாது இனி.. போங்க..” என்று அவனை தள்ளிவிட அவள் முயற்சிக்க, திரு அவளை தன் மேல் இழுத்து போட்டுக் கொண்டான்.

                  இப்போது அவன் மேல் முழுவதுமாக அவள் படுத்திருக்க, “என்னடி வேணும் உனக்கு..” என்று புதிதாக கேட்பது போல் கேட்டான் திரு.

                      துர்கா உனக்கு தெரியாதா என்பது போல் அவனை பார்க்க, “பயமா இருக்குடி.. எவ்ளோ வலி.. நமக்கு இவன் போதுமடி…” என்று எப்போதும் போல அவன் ஆலோசனைகளை அள்ளிவிட,துர்கா அவனை முறைத்துவிட்டு கீழே இறங்க முயல, அவளை விடாமல் கட்டிக் கொண்டான் திரு.

                                   அவன் மேலும் இறுக்கவும் துர்கா “எனக்கு சேப் டேட்ஸ் இல்ல.. தள்ளிப் போங்க.. அப்புறம் என்னை சொல்லக்கூடாது..” என்றாள் கரகரத்த குரலுடன். அவளும் ஒருவருடமாக கேட்டுக் கொண்டிருக்க அவன் மறுத்து கொண்டே இருக்கிறான். இன்று அவர்களின் திருமண நாள் அதுவும் அவன் மறுக்கவும், சட்டென கண்ணீர் வந்துவிட்டது அவளுக்கு.

             திரு அவளை தனக்கு கீழ் கொண்டு வந்தவன் அவள் மீது படர்ந்து, அவள் கண்ணீரோடு கூடிய கண்களில் முத்தமிட்டான்.. அடுத்து கன்னம், கழுத்து என்று அவன் இறங்க துர்கா அதிர்ச்சியாக பார்க்கவும் “இந்த அழுமூஞ்சிய பார்க்க முடியல.. பெத்துக்கலாம்… ” என்றுவிட்டான் அவன்.

                 துர்கா மகிழ்வோடு அவனை கட்டிக் கொள்ள “அப்படி என்னடி பிடிவாதம் உனக்கு.. ருத்ரன் போதாதா..” என்று திரு கேட்க

                   “எனக்கு வேணும்..” என்று பிடிவாதமாக பிணைத்துக் கொண்டாள் அவள். நிறைவாக அவர்கள் விலகியபோது திரு அவள் கன்னத்தில் முத்தமிட்டவன் “தேங்க்ஸ் துர்கா.. திருமண நாள் வாழ்த்துக்கள்டி..” என்று கிசுகிசுப்பாக கூற

                      “அப்பா… ரொம்ப சீக்கிரம் சொல்லிட்டீங்க..” என்று சலித்துக் கொண்டாள் அவள். திரு அவளை முறைத்தவன் “நானாவது உனக்கு வாழ்த்து சொன்னேன்.. நீ ஒரு பாயசம் கூட போடலடி எனக்கு.. ” என்று கூறவும்

                  “இவ்ளோ நேரம்..” என்றவள் அவன் பார்வையில் வாயை மூட “ஹேய்.. நான் நிஜமாவே பாயாசம்தாண்டி கேட்டேன்..”என்று அவன் சிரிக்க, அவனை அடிக்க தொடங்கினாள் அவள். அந்த இரவு நேரத்தில் அவர்களின் சிரிப்பு கிண்கிணி நாதமாக அந்த அறையை நிறைக்க,அங்கு முழுவதுமே ஆனந்தம் தான்.