இருள் வனத்தில் விண்மீன் விதை -4
அத்தியாயம் -4(1)
மித்ராவின் குடும்பத்தில் சடங்கு சம்பிரதாயங்கள் என சில பழக்க வழக்கங்கள் இருந்தன. தலைமுறை தலைமுறையாக இன்றளவும் கடை பிடிக்க பட்டு வருகிறது. அனைத்தையும் குறையில்லாமல் மகளை செய்ய வைத்தார் வைஜெயந்தி.
திருமண தேதி குறித்தது முதல் மித்ராவின் வீடு களை கட்ட ஆரம்பித்திருந்தது.
அதிகாலையிலேயே குளித்து பூஜையறையில் இருந்தாள் மித்ரா. தன் வாழ்வு சிறக்க வேண்டுமென மனமுருக வேண்டி பூஜை செய்து கொண்டிருந்தாள்.
முறையுள்ள உறவு முறைகள் நலங்கு செய்து பெண்ணுக்கு பிடித்தது போல விருந்து வைப்பது அவர்களில் வழக்கம். அதற்காக அவளுடைய பெரிய மாமி குடும்பத்தோடு வந்திருந்தார்.
“வீட்லேயே சமைச்சு எடுத்து வரலாம்னா சூடா சாப்பிடுறது போல ஆகுமான்னு கேட்கிறார் உங்கண்ணன். அதான் இங்கேயே செய்யலாம்னு வந்திட்டோம், எங்க மித்து, சாமி கும்பிடுறாளா?” எனக் கேட்டார் மித்ராவின் மாமி.
ஜெயந்தி ஆம் எனவும், “எல்லாம் முறையா செய்றாதானே, வேற குடும்பத்து பையன் வேற, அந்த அம்மாதான் துணையிருக்கணும்” என்ற மாமி, இரண்டு குச்சி பைகளோடு சமையலறை சென்றார்.
சமைக்க தேவையான அனைத்தும் வாங்கி வந்திருந்தவர் துரிதமாக சமையல் வேலையை தொடங்கினார்.
பூஜை முடித்து வந்த மித்ரா மாமியை வரவேற்றாள். அவர் கலந்து தந்த பாலை பருகிக் கொண்டே அறைக்கு வந்தவளை சர்வாவின் அழைப்பு குதூகலப் படுத்தியது.
“என்ன மாப்ள ஸார், இந்த குளிருக்கு இழுத்து போர்த்திக்கிட்டு தூங்காம என்ன செய்றீங்க?” என்றாள்.
“இந்த மாப்ளயோட துணைவியார் அதிகாலைலேயே எழுந்திருப்பாங்களே, அதான் நானும் எழுந்திட்டேன், சொல்லு மித்ரா இன்னிக்கு என்ன ஸ்பெஷல்?” எனக் கேட்டான்.
மாமியின் வரவை பற்றி சொன்னாள், மாமியின் கை சாப்பாடே அவளுக்கு பிடிக்காது என்பதையும் சொன்னாள்.
“பேருக்கு சாப்பிட்டிட்டு கிளம்பு, நாம வெளில சாப்பிட்டுக்கலாம்” என்றான்.
“இனிமே வெளில சாப்பிட கூடாதுன்னு அம்மா சொல்லிட்டாங்க, கல்யாணம் வரை விரதம் இருக்கேன்னு சொல்லியிருக்கேன்ல?”
“வெஜிடேரியன் ஓட்டலுக்கு போலாம்”
“ம்ஹூம், பூண்டு வெங்காயம் கூட சேர்க்காம அம்மா எனக்காக ஸ்பெஷல் சாப்பாடு செய்றாங்க, அதைத்தான் சாப்பிடுறேன். கல்யாணம் முடியட்டும், அப்புறம் நீங்க எங்க கூப்பிட்டாலும் வருவேன்” என்றாள்.
“கல்யாணம் ஆனதும் நீ என் கஷ்டடிதான், வர மாட்டேன்னு நீ சொன்னா விட்ருவேன்னு நினைச்சியா? கையை கால கட்டியாவது தூக்கிட்டு போவேன்”
“அதுக்கென்ன அவசியமாம், கண்ண காட்டினா போதாதா மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி உங்க பின்னாலேயே வர மாட்டேனா?” என காதல் பொங்க கூறினாள்.
“பேசியே மயக்குறியே மித்ரா, எங்க வீடியோ கால்ல வாயேன்” அவனும் ஆசை வழிய பேசினான்.
“தலை காய வச்சியா மித்து, என்ன செய்ற உள்ள?” வைஜெயந்தி குரல் கொடுக்கவும், “அம்மா கூப்பிடுறாங்க, அப்புறமா பேசலாம்” என சொல்லி அழைப்பை துண்டித்தாள் மித்ரா.
கைப்பேசியை தொப் என படுக்கையில் வைத்த சர்வா சங்கடமாக கண்களை மூடி தலையை உயர்த்திக் கொண்டான். மூச்சு முட்டுவது போலிருந்தது. மித்ராவுக்கு தான் யாரென தெரியப்போகும் காலம் நெருங்கி விட்டதே.
இதுவரை அவளுடனான திருமணத்தை குறி வைத்திருந்தான், இப்போது அது கை கூட, அடுத்து அவளை எப்படி சமாளிப்பது என மருகிப் போகிறான்.
திருமணம் முடிந்த கையோடு தேனிலவு செல்வதாக சொல்லி விட்டு அவளை இங்கிருந்து அழைத்து சென்று விட வேண்டும், தன்னுடைய இடம் சென்ற பின் பொறுமையாக அவளிடம் பேசலாம் என முடிவு செய்து கொண்டான். புரிந்து கொள்வாளா என்ற கேள்விக்கு பதில் தெரியவில்லை.
வேறு வழி தெரியாமல் இறங்கி விட்டான். அவனுடைய வாழ்க்கையில் அவன் எடுத்த மிகப்பெரிய ரிஸ்க் இது, நான் வேண்டுமென்றால் காரணத்தோடு அவளை கைப் பிடிக்கலாம், ஆனால் அவள் அப்படியில்லை, என் மீது கொண்ட உண்மையான அன்பால் என்னை மணந்து கொள்ளப் போகிறாள், என்னையும் என் நோக்கத்தையும் சரியான முறையில் புரிந்து கொள்வாள் என அவனுக்கு அவனே சமாதானம் சொல்லிக் கொண்டான்.
திருமண வேலைகளின் போது ராஜனுக்கு சர்வாவை சந்திக்கும் சந்தர்ப்பங்கள் நிறைய வாய்த்தன. துவக்கத்தில் இருவருக்குமே சகஜமாக பேச தயக்கமாகத்தான் இருந்தது. போக போக மகளுக்காக ராஜனே தயக்கம் உடைத்து இறங்கி வந்தார். சர்வாவும் வீம்பு கொள்ளாமல் இயல்பாக பேசினான்.
பழக பழக அவனை அவருக்கும் பிடித்து விட்டது. மகளின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என மனம் மகிழ்ந்து போனார்.
ஒரு நாள் மிருதுளாவின் வீட்டிலிருந்து மித்ராவுக்கு முறை செய்ய வந்து சென்றனர். மிருதுளாவுக்கு இந்த திருமணத்தில் பெரிதாக விருப்பமில்லை, அவளின் மாமியாரும் குத்திக் காட்டிப் பேசுகிறார். ஆனால் தங்கையிடம் தெரிந்த உற்சாகம் ‘நன்றாக இருந்தால் சரிதான்’ என்ற மன நிலையை அவளிடம் உண்டாக்கியது.
திருமண ஆடைகள் எடுக்க கோவை செல்ல திட்டமிட்டிருந்தனர். ராஜனுக்கு வேறு வேலைகள் இருக்க சஞ்சயாலும் கல்லூரியில் விடுப்பு எடுக்க முடியவில்லை.
ஆகவே வைஜெயந்தி தன் இரு மகள்களோடு மருமகன் இந்திரஜித்தை துணைக்கு அழைத்துக் கொண்டு புறப்பட்டார். சர்வாவும் சென்றிருந்தான். மிருதுளாவின் மகனை அவளது மாமியாரிடம் விட்டிருந்தாள்.
ஆடையகம் சென்று சில மணி நேரங்கள் நன்றாகத்தான் சென்றது. தனது கல்லூரித் தோழி லிசியை அங்கே காணக் கூடுமென நினைத்திருக்கவில்லை சர்வா. தன்னை அவள் கண்டு விடக் கூடாதென பதற்றம் கொண்டான்.
அவன் யாரென தெரிவது ஒரு பக்கம், அவள் வெறும் தோழி மட்டும் அல்லவே. அவளின் தற்போதைய நோக்கம் அவனுக்கு தெரிந்திருக்க இந்த நேரம் ஏதாவது அவள் பேசி வைத்தால் மொத்தமும் பாழாகிப் போகுமே என்ற கவலை அவனிடம்.
அவனது கவனமின்மையை உணர்ந்த மித்ரா, “என்ன சர்வா, என்ன யோசிக்கிறீங்க?” எனக் கேட்டாள்.
இயல்பான சிரிப்பை உதிர்த்தவன், “ஒண்ணும் செட் ஆகலைனா வேற கடை போகலாமா?” என்றான்.
“இங்கேயே கலெக்ஷன்ஸ் நல்லாதான் இருக்கு” என அவள் சொல்லி விட அவனால் மறுப்பு கூற முடியவில்லை.
“என்னங்க அவர் பார்வையே சரியில்லை, ஏதோ கள்ளத்தனம் தெரியுதுதானே?” சர்வாவை குறித்து தன் கணவன் இந்திரஜித்திடம் ரகசியமாக சொன்னாள் மிருதுளா.
“உளறாத, அவர் பாவமா உட்கார்ந்திருக்கார். அரை நாளா கடையை திருப்பி போட்டுட்டு இருக்கா உன் தங்கச்சி, உங்கம்மா அவளுக்கும் மேல இருக்காங்க, இவங்களுக்கு நீ பரவாயில்லை போல, பாவம் மனுஷன் தலைவலில அவஸ்தை படுறார், அதான் அடிக்கடி தலையை புடிச்சுக்கிறார்” என்றான் இந்திரஜித்.
‘ஓ அப்படியும் இருக்குமோ!’ என நினைத்தாள் மிருதுளா.
“வர்றீங்களா டீ சாப்பிட்டு வரலாம்” என இந்திரஜித் நட்பாக அழைக்க, ‘ஆபத்பாந்தவன்டா நீ’ என மனக் குரலில் சொன்ன சர்வா உடனே ஒத்துக் கொண்டான்.
இருவரும் லிஃப்டில் நுழைந்த தருணம் எதேச்சையாக அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தாள் லிசி. இந்திரஜித்தின் கவனம் அவளிடம் இல்லை, ஆனால் சர்வாவின் பார்வை அங்கேதான் இருந்தது. சர்வாவின் இதயம் எகிறி வெளியில் விழாதது அதிசயம், அந்தளவு பதற்றம் அவனிடம்.
அவனை கண்டு கொண்டதன் அடையாளமாக முகம் மலர்ந்த லிசி லிஃப்ட்டை நோக்கி அடியெடுத்து வைக்க லிஃப்டின் கதவு மூடிக் கொண்டது.
“என்ன லிசி?” எனக் கேட்டான் உடன் வந்திருந்த அவளது அண்ணன்.
“சர்வாவை பார்த்தேன் ண்ணா” என்றாள்.
அவனை பற்றி அண்ணனிடம் சொல்லியிருக்கிறாள், ஆகவே, “அவர் ஏன் இங்க வரப் போறார்? வேற யாரையோ பார்த்து குழம்பியிருப்ப, இல்லைனா உன் மனநிலைக்கு யாரை பார்த்தாலும் அவரை போலவே தெரியுதோ என்னவோ” என்றான் அவன்.
“போ ண்ணா!” என சின்ன வெட்கத்தோடு சொன்னவளுக்கு அண்ணன் சொன்னது போலதான் இருக்க வேண்டும் என்றே தோன்றியது.
லிசி கடைக்குள் இருக்கும் வரை, தான் அங்கு செல்வது ஆபத்து என்பதை புரிந்திருந்தான் சர்வா.
இந்திரஜித் சந்தேகப் படாதவாறு கைப்பேசியில் யாருக்கோ என்னவோ குறுஞ்செய்தி அனுப்பி வைத்தான்.
அடுத்த சில நிமிடங்களில் லிசியின் அண்ணனை யாரோ ஒருவன் வந்து இடித்தான், அவன்தான் இடித்து தள்ளி விட்டதாக வம்பு செய்து சண்டை போட்டான். மன்னிப்பு கேட்ட லிசியின் அண்ணனை அவதூறாக பேசினான்.
லிசியின் அண்ணனுக்கும் கோவம் வந்தது, லிசிதான் அங்கே இருக்க வேண்டாம் என முடிவு செய்து அண்ணனை இழுத்துக் கொண்டு கடையை விட்டு வெளியேறிச் சென்றாள்.
தேநீர் அருந்திக் கொண்டிருந்த சர்வாவின் கைப்பேசி மேசையில் இருந்தது. குறுஞ்செய்தி வந்ததற்கு அடையாளமாக அது சத்தம் போட எடுத்துப் பார்த்தவன் நிம்மதி பெருமூச்சு விட்டான்.
“என்னங்க சர்வா எதாவது பிராப்ளமா?” எனக் கேட்டான் இந்திரஜித்.
“இல்லையே ஏன் கேட்குறீங்க?”
“இல்லை… ஏதோ டென்ஸ்டா இருந்தீங்க, ஃபோன் பார்த்திட்டு ரிலாக்ஸ் ஆகிட்டீங்களே அதான் கேட்டேன்”
“அது… அஃபிஷியல் மேட்டர், டீ நல்லாருக்கே இங்க, எப்பவும் இங்கதான் வருவீங்களா?” பேச்சை மாற்றினான் சர்வா.
“ஹையோ அத ஏன் கேட்குறீங்க, மிருதுளா தனியா வந்தா கூட பரவாயில்லை, இந்த மித்து இருக்காளே… பழகின இத்தன நாள்ல உங்களுக்கே தெரிஞ்சிருக்கணுமே, அப்படி என்ன கிரைடீரியா வச்சுத்தான் ட்ரெஸ் செலக்ட் பண்ணுவாளோ? ட்ரெஸ்னு இல்லைங்க எதா இருந்தாலும் இப்படித்தான். இவங்க ரெண்டு பேருக்கும் டிரைவர் வேலை பார்க்க வசமா சிக்கிடுவேன் நான். இங்கன்னு இல்லை இவங்க ஷாப்பிங் போற எல்லா இடத்துலேயும் பக்கத்துல எங்க எப்படி டைம் பாஸ் பண்ணலாம்னு எனக்கு அத்துப்படி” என்றான்.
‘ரொம்ப பேசுறான் இவன்!’ மனதில் சலித்துக் கொண்டான் சர்வா.
“மித்து சீக்கிரமா செலக்ட் பண்ணினது அவ லைஃப் பார்ட்னரையாதான் இருக்கும். சொல்லுங்க என்ன பிளான் பண்ணி அவளை கவுத்தீங்க? நீதான் குன்னூர்லேயே அழகின்னு சொல்லியா? ஏன்னா மிருதுளாவுக்கு அவ அழகை புகழ்ந்தா போதும், சுலபமா என் காரியம் ஆகிடும்” என்ற இந்திரஜித் வாய் விட்டு சிரித்தான்.
சிரிப்பு வரா விட்டாலும் வலிய சிரிப்பை வரவழைத்துக் கொண்டான் சர்வா.
சர்வாவின் கைப்பேசிக்கு யாரோ அழைத்தார்கள். கையில் எடுத்தவன் ‘லிசி தி ஏஞ்சல்’ என திரையில் பெயர் ஒளிர்வதை கண்டு விட்டு சட்டென அழைப்பை அமைதியடைய செய்தான்.
“யாரு சர்வா, பேசுங்க” என்றான் இந்திரஜித்.
“ஸ்பேம் கால்” என சமாளித்தான் சர்வா.
லிசி விடாமல் இரண்டாவது முறை அழைக்கவும் எழுந்து கொண்டவன் கைப்பேசியோடு தள்ளி சென்று விட்டான்.
“சர்வா… எங்க இருக்க இப்போ?” என சத்தமாக கேட்டாள் லிசி.
“சென்னைலதான் இருக்கேன் லிசி, என்ன விஷயம் ஏன் கேட்கிற?” என சர்வா பேசிக் கொண்டிருக்க, அவனருகில் நின்று கொண்டிருந்தவன் அவனை ஒரு மாதிரியாக பார்த்து வைத்தான்.
‘என்ன?’ என புருவங்கள் உயர்த்தி திமிராக சர்வா கேட்ட தொனியில், “அல்வா கொடுக்கிற பசங்களையா எங்கேருந்ததான் இந்த பொண்ணுங்க தேடி புடிக்குங்களோ!” என முணு முணுத்த வண்ணம் அவன் விலகி சென்று விட்டான்.
“கோயம்புத்தூர்ல உன்னை மாதிரியே ஒருத்தரை பார்த்தேன்” என்றாள்.
“அப்படியா, இன்ட்ரெஸ்டிங், எங்க ஒரு ஃபோட்டோ எடுத்து அனுப்பேன், நானும் பார்க்கிறேன்” என்றான்.
“இல்லை மிஸ் பண்ணிட்டேன் அவரை. அத விடு, உன்கிட்ட பேசணும்னு ஒரு நாள் வந்து கேட்டேன், அவசரமா ராஜஸ்தான் போறேன், வர மூணு மாசமாகும், வந்த பிறகு பேசலாம்னு சொன்ன, ஏழு மாசத்துக்கு மேல ஆகிடுச்சு, ரெண்டு மூணு தடவ நான் கால் பண்ணினப்பவும் பேசாம பிஸின்னு மெசேஜ் பண்ணின. எப்ப சென்னை வந்த? என்கிட்ட சொல்லவே இல்லை நீ. நெக்ஸ்ட் வீக் நான் சென்னை வந்திடுவேன், உன்னை பார்க்க என்னிக்கு வரட்டும்?” எனக் கேட்டாள்.
எதற்காக இவள் தன்னை பார்க்க விரும்புகிறாள் என அவனுக்கு அனுமானம் இருந்தது. இப்போது கைப்பேசியிலேயே சொல்லி விடலாமா அல்லது நேரில்தான் சொல்ல வேண்டுமா என அவனுக்கு குழப்பம்.