இருள் வனத்தில் விண்மீன் விதை -15

அத்தியாயம் -15

ராஜனின் வீட்டில் அவரது உறவினர்கள் குழுமியிருந்தனர். 

“என்னதான் நம்ம பொண்ணு ஆசை பட்டு நம்மள மீறி போயிருந்தாலும் அப்படியே விட்ர முடியுமா? நம்ம குல பொண்ணுங்களுக்கு நாமதான் காவல். அங்க எப்படி இருக்கு, ஒண்ணும் பிரச்சனை இல்லையேன்னு ஆராஞ்சு தெரிஞ்சுக்கணுமா இல்லயா?” என சொல்லிக் கொண்டிருந்தார் அவர்களின் குலப் பெரியவர். 

மற்றவர்களும் அதை ஆமோதிப்பது போல நின்றனர். எந்தவிதமான முன் அறிவிப்பும் இல்லாமல் மித்ராவின் புகுந்த வீட்டுக்கு செல்வது என முடிவு செய்தனர். 

ராஜனுக்கும் மகளை பற்றிய கவலை இருக்கத்தான்  செய்தது, இருப்பினும் தான் போய் மகளை பார்ப்பது சரி, அனைவருடனும் எப்படி செல்வது என தயக்கத்தோடு பதில் சொல்லாமல் மௌனமாக நின்றிருந்தார். 

அறிவுடைநம்பியும் ருக்மணியும் ராஜனின் வீட்டுக்கு வருகை தந்தனர். கூட்டத்தை கண்ட இருவரும் குழப்பமாக ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அவர்களை ராஜன் வரவேற்கவும் மற்றவர்களுக்கும் யாரென புரிந்தது. 

தன்னுடைய உறவினர்கள் மித்ராவின் நலனை உறுதி செய்து கொள்ள விரும்புவதை கூறினார் ராஜன். 

சர்வா, மித்ரா இருவருக்கும் திருமண வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருப்பதை சொன்ன நம்பி, “எல்லாரும் வந்து அவங்கள வாழ்த்தணும்” எனக் கேட்டுக் கொண்டார். ருக்மணியும் அவர்களை முறையாக அழைத்தார். 

அவர்களின் பெரியவர் முன்னால் வந்தார். 

“நடக்க கூடாத ஒண்ணு நடந்து போச்சு, அதுக்குன்னு எங்க பொண்ணை அப்படியே விட்ர மாட்டோம். நீங்க எவ்ளோ பெரிய இடமா இருந்தாலும் கவலையில்ல, மித்ராக்கு ஏதாச்சும்னா சும்மா விட மாட்டோம்” என்றார். 

இதென்னடா தேவையில்லாமல் ஏன் இப்படி பேசுகிறார் என சங்கடமாக பார்த்திருந்தார் ராஜன். 

ஆனால் நம்பி கோவம் கொள்ளாமல் அழகாக கையாண்டார். 

“மித்ரா எங்க குடும்பத்துக்கு வந்ததை எப்பவோ நடந்த தப்ப சரி செய்ய எங்களுக்கு கிடைச்ச வாய்ப்பாதான் நாங்க பார்க்கிறோம். செண்பகம் அம்மாக்கு கிடைக்க வேண்டிய அத்தனையும் மித்ராவுக்கு கிடைக்கும், நீங்க எல்லாரும் எப்ப வேணும்னாலும் அங்க வரலாம், ஆனா ஒருபோதும் மித்ராவுக்கு நீதி கேட்கன்னு அங்க வரவேண்டிய சூழ்நிலை வராது” என்றார் நம்பி. 

“நானும் ஒரு காலத்துல வேற குடும்பத்து பொண்ணுதாங்க, இவருக்கு மனைவியாகி நாப்பது வருஷம் ஆகுது. வர்ற பொண்ண எப்படி வச்சுப்பாங்கன்னு என்னை பார்த்தே நீங்கள்லாம் தெரிஞ்சுக்கலாம். மித்ராவை நினைச்சு யாரும் கவலை படாதீங்க” என்றார் ருக்மணி. 

அவர்களின் தன்மையான பேச்சிலும் பணிவிலும் திருப்தி அடைந்த பெரியவர் திருமண வரவேற்புக்கு வருவதாக சம்மதம் சொன்னார். 

ஒருசிலர் இன்னும் சமாதானம் ஆகவில்லைதான், ஆனால் பெரியவர் சொல்லி விட அவரின் வார்த்தைக்கு மரியாதையளித்து அமைதி காத்தனர். 

மிருதுளாவின் புகுந்த வீட்டினர் மட்டும் இருக்க, மற்றவர்கள் கிளம்பி விட்டனர். நம்பிக்கும் அவரது மனைவிக்கும் விருந்து ஏற்பாடானது. 

“உங்ககிட்ட கேட்காம நாள் குறிச்சிட்டோம், வசதி படுமோ என்னவோன்னு நெருடலோடதான் வந்தோம். தப்பா எடுத்துக்க கூடாது, உங்க மாப்ள இப்பவே தேதி சொல்லுங்கன்னு அவ்ளோ அடம். வேற வழியில்லாம குறிச்சிட்டோம், அந்த நாள் உங்களுக்கு ஓகேதானே? எதுவா இருந்தாலும் ஓபனா சொல்லுங்க, உங்க வசதிதான் ரொம்ப முக்கியம்என்றார் நம்பி

எதுவாக இருந்தாலும் கறாராக பேசும் தன் மாமனார் மாமியாரை அர்த்தமாக பார்த்தாள் மிருதுளா

எங்களுக்கென்ன மடில கனமா, கூழை கும்பிடு போட?” மருமகளின் குத்தல் பார்வைக்கு வாய் திறந்து பட்டென பதில் சொல்லி விட்டார் மிருதுளாவின் மாமியார்

நம்பியின் முகம் கறுத்துப் போக, மற்றவர்கள் சங்கடமாக பார்த்தனர்

யாரும் யாருக்கும் கூழை கும்பிடு போட வரலைங்க. பொண்ண பெத்து வளர்த்து ஆளாக்கி எங்க வீட்டுக்கு வாழ அனுப்பி வச்சிருக்காங்க. குடும்பத்தை தழைக்க செய்ற மருமகளை பெத்தவங்களுக்கு நியாயமா என்ன மரியாதை தரணுமோ முக்கியத்துவம் தரணுமோ அதைத்தான் நாங்க செய்றோம். இதை செய்றதால நாங்க உயர்ந்து போயிடல, இது எங்க கடமை, பொண்ணு எடுக்கிறவங்க எல்லாரோட கடமையும் கூட இதுதான்உறுதியான குரலில் சொன்னார் ருக்மணி

மிருதுளாவின் மாமியாரின் முகம் விழுந்து விட்டது

ஏங்க எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் ஏதும் இருந்தா என்கிட்ட இருக்க மாமியாரை கொடுத்திட்டு இவங்கள எடுத்துக்கலாமா?” கணவனிடம் சின்னக் குரலில் கேட்டாள் மிருதுளா. அவனோ என்ன பதில் சொல்வதென விழித்தான்

விருந்தை முடித்துக் கொண்ட பின்னர், அந்தக் காலத்தில் நம்பியின் முன்னோர்கள் வழிப்பட்ட தெய்வம் இருக்கும் கோயிலுக்கு செல்ல முடியுமா எனக் கேட்டார் ருக்மணி

வைஜெயந்தி யோசனையாக கணவரை பார்த்தார்

அதனால என்னங்க? கோயிலுக்கு யார் வேணும்னாலும் போலாம், பக்கம்தான், அரை மணி நேரத்துல போயிடலாம்என்ற ராஜன் உடனே அதற்கான ஏற்பாடுகளை செய்தார்

நம்ம கோயிலுக்கு இவங்க ஏன் வரணும்? எல்லார்கிட்டேயும் கலக்காம நீங்களா ஏதாவது செய்யாதீங்கஎன இடையிட்டார் மிருதுளாவின் மாமனார்

கடவுளை எல்லாம் என்னோடது உன்னோடதுன்னு சொந்தம் கொண்டாடிக்க முடியாதுங்க. கடவுளை வழிபடறதுக்கு தூய்மையான மனசு ஒண்ணுதான் தகுதி, யாருங்க என்னங்க தடை சொல்வாங்க?” எனக் கேட்டார் ருக்மணி.

மேலும் தன் பெற்றோரை ஏதாவது பேச வைத்து இரவில் மனைவியிடம் யார் வாங்கிக் கட்டி கொள்வது என பயந்து போன இந்திரஜித் அவர்களை உள்ளே அழைத்து சென்று விட்டான்.  

எதற்கு இந்த வம்பு என அவர்களின் குல பெரியவருக்கே அழைத்து கோயிலுக்கு செல்ல அனுமதி பெற்றுக் கொண்டார் ராஜன்

என்ன திடீர்னு? இது நம்ம பேசிக்கவே இல்லியே?” என தனிமையில் மனைவியிடம் கேட்டார் நம்பி

எனக்கும் முன்னாடியே இப்படி யோசனை இல்லைங்க, திடீர்னுதான் தோணிச்சு. அந்த சாமுண்டீஸ்வரியம்மா நம்மள கூப்பிடும் போது நாம போய்தானே ஆகணும்?” என்றார் ருக்மணி

வர வர நீயும் என் பெரியப்பா போலவே பேசுறஎன்றார் நம்பி

அடுத்த ஒரு மணி நேரத்தில் ராஜனின் குலதெய்வ கோயிலில் இருந்தனர் அனைவரும்

நம்பியின் முன்னோர்கள் வழிபட்ட விக்ரஹம் பாதுகாப்பாக பெட்டியில் இருந்தது. திருவிழா சமயங்களின் போதும் வேறு சில விஷேசங்களின் போதும்தான் விக்ரஹம் வெளியில் எடுக்கப்படும். அதுவரை அந்த பெட்டியைத்தான் பூஜிப்பார்களாம்

இத்தனை தூரம் வந்தும் அம்மனின் திருமுகத்தை காண முடியவில்லையே என ஏமாற்றம் சூழ கணவரை பார்த்தார் ருக்மணி

சில பழக்க வழக்கம் ஏதோ காரணத்துக்காக காலம் காலமா கடைபிடிக்கிறோம், சட்டுன்னு மீற முடியாதுங்களேஎன சங்கடமாக சொன்னார் ராஜன்

அதனால என்ன? எங்களாலதான் எங்கம்மாவை பார்க்க முடியலை, அவங்க எங்களை பார்த்திட்டுத்தான் இருப்பாங்கஎன சமாதானமாக சொன்னார் நம்பி. அம்மன் இருந்த பெட்டியையே மனமுருக வேண்டிக் கொண்டனர்

வழிபாட்டை நல்ல விதமாக முடித்துக் கொண்டு அன்று மாலையே சென்னைக்கு புறப்பட்டு விட்டனர் நம்பி தம்பதிகள்

தங்கைக்கு அழைத்த மிருதுளா ருக்மணியின் புகழை பக்கம் பக்கமாக பேசினாள்

அவங்க ரொம்ப ஸ்டபர்னா இருக்க மாதிரி இருக்கும், அவங்களோட என்னால ஈஸியா பழக முடியலை, நீ என்னன்னா இப்படி ஆஹா ஒஹோன்னு அள்ளி விடுற?” என்றாள் மித்ரா

ரொம்ப நியாயமா இருக்காங்க. யாரை பத்தியும் இப்படிதான்னு ஜட்ஜ் பண்ணாம பழகு மித்ரா, அப்போதான் அவங்களோட உண்மையான குணத்தை புரிஞ்சுக்க முடியும்என அறிவுரை சொல்லி பேச்சை முடித்தாள் மிருதுளா

வீடு வந்த சர்வா வெளியில் செல்லலாம் என மனைவியை அழைத்தான்.

சினிமா, மால்லாம் நான் வரலை. பீச்ல கூட ஒரே கூட்டமா இருக்கு. சென்னைல எங்க பார்த்தாலும் கூட்டம், எங்கேயும் வரலைஎன்றாள் மித்ரா

எங்கல்லாம் வர பிடிக்கலையோ அதை மட்டும் சொல்லு, வெளிலேயே வரலைனா என்ன அர்த்தம்?” என்ற சர்வா வற்புறுத்தித்தான் அவளை வெளியில் அழைத்து சென்றான்

ஒரு மணி நேர கார் பிரயாணத்தில் எங்கு செல்கிறோம் என பலமுறை கேட்டு விட்டாள். பதில் தராமல் கண்கள் சிமிட்டி சிரிக்க மட்டும் செய்தான்

கடற்கரை ஒன்றுக்கு வந்தான். பெரிதாக ஆட்களே இல்லை. சரி, கூட்டமில்லாத கடற்கரைக்கு அழைத்து வந்திருப்பதாகத்தான் நினைத்துக் கொண்டாள்

யாரோ ஒருவன் அவனிடம் ஓடி வர இவனும் அவனை நோக்கி சென்றான். ஏதோ பேசிக் கொண்டனர். சில நிமிடங்களில் படகு வந்தது

என்ன இதுல போக போறோமா?” என வியப்பாக கேட்டாள். அப்போதும் ஒன்றும் சொல்லாமல் அவளை வரச் சொல்லி கை நீட்டினான். மித்ராவுக்கு உற்சாகமாகி விட்டது

சிறு பிள்ளையின் குதூகலத்தோடு அவன் கையை பிடித்துக்கொண்டாள். லைஃப் ஜாக்கெட் அணிந்து கொண்ட பின்னர் விசைப் படகில் ஏறிக் கொண்டனர். அதில் சவாரி செய்யும் போதே அவளுக்கு கரை புரண்ட உற்சாகம். சற்று நேரத்தில் மீன் பிடிக்கும் கப்பல் ஒன்று தென்பட்டது. அதை இந்தப் படகு நெருங்கவும் கப்பலில் இருந்து ஏணி போன்ற அமைப்பை எடுத்துப் போட்டனர்

இருளத் துவங்கியிருந்த அந்த நேரத்தில் விழிகளை விரித்துக் கொண்டு அவனை பார்த்தாள்

வா மித்ராஎன சொல்லிக் கொண்டே எழுந்தவன் அவள் எழ கை நீட்டினான்

கப்பலில் ஏறிக் கொண்டனர். படகை ஓட்டி வந்தவனும் அந்த படகை கப்பலில் ஏற்றி விட்டு ஏறிக் கொண்டான். அவர்கள் லைஃப் ஜாக்கெட்டை கழட்ட அனுமதிக்கவில்லை கப்பலில் தலைமை பொறுப்பில் இருந்தவன்

கப்பலில்தான் ஏறி விட்டோமே என சர்வா சொல்ல, “ஏதாவது வம்பாச்சுன்னா எங்களுக்குத்தான் பிரச்சனை, ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்கஎன அவன் சொல்ல சர்வாவும் சரியென விட்டான்

மரப் படிக்கட்டுக்கள் மூலமாக கப்பலின் உச்சியை வந்தடைந்தனர்

மித்ராவுக்கு இயற்கையை ரசிக்க மிகவும் பிடிக்கும். கோவையிலிருந்து குன்னூருக்கு வரும் போதும் போகும் போதும் இரு மருங்கிலும் காட்சி தரும் பசுமையை குளுமையை முழுமையாக ஆழ்ந்து அனுபவிக்கும் போது கிடைக்கும் இன்பத்தை எந்த வெளிநாட்டு சுற்றுலாத் தளமும் தந்து விடாது என்பது அவளின் எண்ணம்

சர்வாவுடன் பழகிய காலத்தில் அவனிடமே இதை சொல்லியிருக்கிறாள்

கடல் கூட இயற்கைதான் மித்ரா, அலை வந்து கால உரசுர கடலை விட இப்படி அளக்க முடியாத ஆழத்தை அமைதியா மூடி மறைச்சிருக்க இந்த அலை இல்லாத கடல் உனக்கு இன்னும் பிடிக்கும்னு தோணிச்சு, அதான் இங்க அழைச்சிட்டு வந்தேன்என்றான் சர்வா

உண்மைதான், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தண்ணீர். மேலே ஆகாயம், சூரியன் கிட்டத்தட்ட இந்த கடலுக்குள் மூழ்கி விட்டது. உப்புத் தன்மையோடு வீசும் குளிர்ந்த காற்று மித்ராவுக்கு புதிய அனுபவம்

ரொம்ப அழகா இருக்கு!” கண்களை மூடி ரசித்து சொன்னாள்