இருள் வனத்தில் விண்மீன் விதை -2

அத்தியாயம் -2(1)

சௌந்திரராஜன் இரவில் உணவருந்திய பிறகு அரை மணி நேரம் நடப்பதை வழக்கமாக்கி வைத்திருந்தார். எப்போதாவது மித்ராவும் அவருடன் இணைந்து கொள்வது வழக்கம்தான் என்பதால் இன்றும் அவள் அவருடன் செல்வதில் அவளின் பெற்றோருக்கு வித்தியாசமாக எதுவும் தோன்றவில்லை.

நடக்க ஆரம்பித்த ஐந்து நிமிடங்களில் “லவ் மேரேஜ் பத்தி என்ன நினைக்குறீங்கப்பா?” என மகள் கேட்கவும் திகைத்து விட்டார் சௌந்திரம்.

அப்பாவின் முகத்தை காண முடியாமல் தவிப்பாக அவள் நிற்கவுமே என்னவாக இருக்கும் என ஊகித்துக் கொண்டவருக்கு சில நிமிடங்கள் பேச்சு வரவில்லை.

 சாக்லேட் ஃபேக்டரி செல்கிறாள், பொறுப்பாக இருக்கிறாள், இரண்டு வருடங்களில் திருமணம் செய்யலாம் என்றெல்லாம் யோசித்து வைத்திருந்தவருக்கு இப்போது அதிருப்தி உண்டானது.

ஆனாலும் இப்படி இல்லாமலும் இருக்கலாம் என சிறு நம்பிக்கை கொண்டு, “நான் நினைக்க என்ன இருக்கு மித்துமா? நம்ம குடும்பங்கள்ல இதெல்லாம் வழக்கம் இல்லையே” என்றார்.

அடுத்து இந்த உரையாடலை எப்படி எடுத்து செல்வது என அவளுக்கு தெரியவில்லை. அவர் நடக்க ஆரம்பிக்கவும் அவளும் அமைதியாக நடந்தாள்.

 அந்த தந்தைக்குத்தான் மிகுந்த மனப் போராட்டம், எதுவோ சொல்ல வந்த மகளை பேசும் இலகுத் தன்மை கூட அளிக்காமல் இப்படி வாயை மூட வைத்திருக்க கூடாது என குற்ற உணர்வாகவும், எப்படி அவளுக்கு புரிய வைப்பது என்ற யோசனையோடும் நடந்து கொண்டிருந்தார்.

அப்பாவிடம் சொல்லித்தானே ஆக வேண்டும் என்ற நினைவோடு மீண்டும் தைரியத்தை திரட்டிக் கொண்டவள் சர்வா பணி செய்யும் எஸ்டேட் பெயரை சொல்லி, “அங்க மேனேஜரா இருக்கார் ப்பா சர்வானந்த்” என்றாள்.

ஒன்றும் சொல்லாமல் அவர் நடந்து கொண்டே இருக்க, சர்வா பற்றிய விவரங்களை கட கட என சொன்னவள், “என்னை பொண்ணு கேட்டு வரலாம்னு இருக்காருப்பா, வர சொல்லட்டுமாப்பா?” எனக் கேட்டாள்.

பிள்ளைகளிடம் கோவப்பட்டு பழகியிராத சௌந்திரம் மகளை முறைத்தார்.

“ரொம்ப நல்லவர்ப்பா, உங்களுக்கும் பிடிக்கும், பேசி பாருங்க ப்பா” என கெஞ்சலாக சொன்னாள்.

“யாருமில்லாத ஒருத்தர், ஆறு மாசமாதான் இங்க இருக்காருங்கிற, எனக்கு அப்படி ஒன்னும் இம்ப்ரெசிவ்வா இல்லை மித்ரா, உங்கிட்ட பேச பழக வேணாம்னு நீயே சொல்லிடு, உனக்கு தயக்கமா இருந்தா நான் சொல்றேன்” என்றார்.

ஓரளவு இப்படித்தான் அப்பா ஏதாவது சொல்வார் என எதிர்பார்த்திருந்தவள், “ஒரு முறை அவரை மீட் பண்ணிட்டு சொல்லுங்க ப்பா” என்றாள்.

மகள் விட மாட்டாள் என புரிந்ததால், “வீட்டுக்கெல்லாம் வர சொல்லாத, நானே அவர் வேலை பார்க்கிற இடத்துக்கு போறேன்” என்றார்.

மித்ராவின் முகம் ஒளிர, “தேவையில்லாம நம்பிக்கை வைக்காத மித்து” என எச்சரிக்கை செய்தார்.

சர்வாவை தவிர வேறு யாரையும் மணக்க மாட்டேன் என பிடிவாதம் செய்தால் கண்டிப்பாக அப்பா ஒத்துக் கொள்வார் என அடி ஆழ் மனதில் நம்பியவளோ அப்பாவின் பேச்சுக்கு சரி என்பதாக தலையாட்டிக் கொண்டாள்.

“நான் பேசிக்கிறேன், அம்மாகிட்ட இப்ப எதுவும் சொல்லாத” என்றவர் வீட்டை நோக்கி நடக்க, “என்னிக்கு ப்பா பார்க்க போறீங்க?” என உற்சாகமாக கேட்டாள்.

மகளை திரும்பி பார்த்தவர், “நாளைக்கு மதியானம் மேல போனா அந்த பையன்கிட்ட பேச முடியும்தானே?” என அவரும் கேள்வி கேட்டார்.

“பேசலாம்னுதான் நினைக்கிறேன் ப்பா, எதுக்கும் கேட்டுட்டு கன்ஃபார்ம் பண்றேன் ப்பா” என உற்சாகமாக சொன்ன மகளை இறுக்கமான முகத்தோடு பார்த்தார்.

“எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ப்பா அவரை” உள்ளே போன குரலில் அவள் சொல்லவும் எதுவும் சொல்லாமல் வேகமாக நடந்து விட்டார்.

வீடு வந்த பின் சர்வாவிடம் பேசினாள் மித்ரா. அப்பா பேச வரும் நேரம் அவனுக்கு சரியாக வரும்தானே என கேட்டு உறுதி படுத்திக் கொண்டாள்.

தன் தந்தையிடம் எப்படி பேச வேண்டும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அவள் ஏதோ சொல்லிக் கொண்டிருக்க, அமைதியாக கேட்டுக் கொண்டான்.

“உங்க மீட்டிங் முடிவுல அப்பா ஓகே சொல்லிடனும், சொல்ல வைக்கணும் நீங்க” என்றாள்.

“மகளுக்கு புடிச்ச பையன், நல்லவன், மகளோட சாய்ஸ் கரெக்ட்டாதான் இருக்கும் அப்படிங்கிற யோசனையோட உன் அப்பா வந்தா கண்டிப்பா ஓகே சொல்லிடுவார் மித்ரா. இது நடக்க கூடாதுங்கிற மைண்ட் செட்டோட வந்தா…”

அவன் பேசிக் கொண்டிருக்கையிலேயே இடையிட்டவள், “பேசி நீங்கதான் கன்வின்ஸ் பண்ணனும், அப்பாம்மா சரின்னு சொல்லாம எல்லாம் நம்ம கல்யாணம் நடக்காது” என்றாள்.

அவன் தன் கோவத்தை கண்டனத்தை அமைதி வழியாக கடத்தினான்.

 “இல்லை சர்வா, நான் தப்பான அர்த்தத்துல சொல்லலை, உங்களை தவிர யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். அப்பா சரின்னு சொல்லாம போனா கல்யாணமே பண்ணிக்காம இருந்துப்பேன்” என்றாள்.

இப்போதும் அவன் மௌனியாகவே இருக்க, “நான் என்ன சொல்லணும்னு எக்ஸ்பெக்ட் பண்றீங்க? என் வீட்ல கண்டிப்பா ஓகே சொல்லிடுவாங்க. சீக்கிரம் நம்ம கல்யாணம் போதுமா?” எனக் கேட்டாள்.

“நாளைக்கு உன் அப்பாகிட்ட பேசிட்டு அப்புறம் உங்கிட்ட பேசுறேன்” என்றவன் அழைப்பை துண்டித்து விட்டான்.

சௌந்திரராஜனுக்கு மகள் விரும்பும் பையனை பரிசீலனை செய்யும் எண்ணம் துளி கூட கிடையாது. மகளை காயப்படுத்தாமல் விவரம் வெளியில் கசியாமல் இந்த விஷயத்தை முடித்து வைக்க நினைத்துதான் சர்வானந்தை காணச் சென்றார்.

அவர் நினைத்தது போல இல்லை அவன். மித்ரா தனக்கு கிடைத்தே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். தன்னை மீறி மகள் ஏதும் செய்து விட மாட்டாள் என்ற உறுதி சௌந்திரராஜனுக்கும் இருக்க அதனை அவனிடமே கூறி விட்டு திரும்பி விட்டார்.

சர்வா மூலமாக மித்ராவுக்கும் இந்த பேச்சுவார்த்தை பற்றி தெரிந்து போனது. அப்பாவிடம் எடுத்து சொல்லலாம் என நினைத்து அவள் பேச நினைக்க, அவர் முந்திக் கொண்டார்.

“நம்மளும் நம்ம சொந்த பந்தமும் எவ்ளோ கட்டுக்கோப்பா இருக்கோம்னு நான் சொல்லித்தான் உனக்கு தெரியனும்னு இல்லை மித்துமா” என ஆரம்பித்தவர், அரை மணி நேரம் மகளை வாய் திறக்க விடாமல் பேசினார்.

பேச நினைத்த அனைத்தும் மறந்து போன நிலையில் அப்பாவின் பேச்சில் குற்ற உணர்வு துளிர் விட்டிருக்க அமைதியாக நீர் நிறைந்த விழிகளோடு அவரின் முன் அமர்ந்திருந்தாள்.

“எம்பொண்ணு மேல எனக்கு நம்பிக்கை இருக்கு” என அழுத்தமான குரலில் சொல்லி அங்கிருந்து சென்று விட்டார் அவர்.

இரவில் சர்வா அழைக்கும் போது தெளிந்திருந்தவள் நடந்ததை அவனிடம் சொன்னாள்.

அவன் ஒன்றும் சொல்லாமல் இருக்க, “இப்படி சைலண்டாயிருந்தா என்னன்னு நினைக்க? ஏதாவது பேசுங்க” என்றாள்.

“நீதான் பேசணும் மித்ரா. உங்கப்பா ரொம்ப சாமர்த்தியமா உன்னை லாக் பண்றார். அத உடைக்க போறியா இல்லை தெரிஞ்சே அந்த லாக்ல சிக்க போறியான்னு நீதான் சொல்லணும்” என்றான்.

“உடனே அப்பா சம்மதிக்க மாட்டாங்கதான். வெயிட் பண்ணலாம், நான் பேசி பேசியே அப்பாவை மாத்துவேன். நீங்க இப்படி எரிச்சல் படாம கொஞ்சம் எனக்கு ஆதரவா இருங்க”

“நான் ஒன்னும் எரிச்சல் படல, உங்கப்பாதான் நமக்கிடையில புகுந்து ஏதோ பிளே பண்ண பார்க்கிறார், ஜாக்கிரதையா இரு”

“எவ்ளோ நாளா எங்கப்பாவை தெரியும் உங்களுக்கு? அவரை பத்தி இப்படிலாம் தப்பா பேசாதீங்க” கண்டிப்போடு சொன்னாள்.

“எப்படி பேசிட்டேன் இப்போ? இல்லாத எதையுமா?” அவன் காட்டமாக கேட்கவும் அவளுக்கும் கோவம் அதிகமானது.

சண்டையில் முடிந்தது அந்த இரவு. இத்தனை மாதங்களாக அக்கறையாக அன்பாக பேசியது பழகியது எல்லாம் மாயையோ, இவனது நிஜமான குணம் இந்த கோவம்தானோ என உள்ளுக்குள் பயந்து போனாள். பின் அவளாகவே இல்லியில்லை எங்கே தான் கிடைக்காமல் போய் விடுவேனோ என்ற பயம் அவருக்கும் இருக்கத்தானே செய்யும், நானும் பொறுமையாக பேச சொல்கிறேனே, அதனால் விளைந்த கோவமாக இருக்கும் என தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டாள்.

எந்த நொடியிலும் அவனை பற்றி வேறு விதமாக அவளால் சிந்திக்கவே முடியவில்லை. குறுகிய காலமே என்ற போதிலும் அவன் மீது அவள் கொண்ட அந்த தீவிரக் காதல் அவனுடன் எப்படி இணைவது என்பதை நோக்கியே அவளை செலுத்திக் கொண்டிருந்தது.

அடுத்த நாள் விடிந்தும் கூட இருவரும் பேசிக் கொள்ள முனையவில்லை.

காலை உணவின் போது கணவருக்கும் மகளுக்கும் இடையில் ஏதோ இருக்கிறது என உணர்ந்து கொண்டார் வைஜெயந்தி. சரியாக சாப்பிடாத மித்ராவிடம், “என்னடி உடம்புக்கு ஏதுமா?” என விசாரித்தார்.

இல்லை என்பதாக தலையாட்டியவள் உடனே, “ஆமாம்மா, வயிறு சரியில்லை” என சொல்லி எழுந்து கொண்டாள்.

“ஏன் முன்னாடியே சொல்லலை? ஓம தண்ணி தரவா?” எனக் கேட்ட அம்மாவுக்கு மறுப்பாக தலையாட்டி விட்டு சாக்லேட் ஃபேக்டரிக்கு புறப்பட்டு விட்டாள்.

மகள் சென்ற திசையை பார்த்துக் கொண்டிருந்த ராஜனிடம், “என்னங்க எனக்கு தெரியாம என்ன நடக்குது உங்களுக்குள்ள?” என விசாரித்தார் வைஜெயந்தி.

தானே பார்த்துக் கொள்ளலாம் எனதான் ராஜன் முதலில் நினைத்திருந்தார். இப்போது அப்படி முடியாது என தோன்ற, மனைவியின் ஆதரவும் அவசியம் என புரிந்து உண்மையை சொன்னார். கேட்டவருக்கு தாள முடியாத அதிர்ச்சி. தளர்வாக அமர்ந்து விட்டார்.

“ரொம்ப நாள் பழக்கம் இல்லை, அந்த பையனுக்கும் இங்க இல்லை பூர்வீகம், யாரு என்னன்னு தெரியலை, அவனுக்கே தெரியாது போல. மித்து மனசை ஈஸியா மாத்தலாம்னு நினைச்சேன், கொஞ்சம் கஷ்டம்தான் போல” மனைவியை அதிகம் பயமுறுத்தாமல் கொஞ்சமாக பயமுறுத்தினார்.

“சீக்கிரம் வேற பையன் பாருங்க, கல்யாணத்தை முடிச்சிடலாம்” என பதற்றமாக சொன்னார் வைஜெயந்தி.

“அதான் தப்பு ஜெயா, உடனேன்னா அவளுக்கு எப்படி இருக்கும்? நம்மள மீறி எதுவும் நடக்காது. நீ அவகிட்ட பேசு, மிருதுளாவை வரவச்சு அவளையும் பேச சொல்லு. அந்த பையன் விலகிக்கலைன்னா இங்கேருந்து கிளம்ப வைக்க என்ன வழின்னு பார்க்கிறேன்”

“என்னங்க… என்ன செய்ய போறீங்க?” பதறினார் வைஜெயந்தி.

“இதென்ன சினிமாவா மிரட்டல் அடிதடின்னு இறங்க? அதெல்லாம் செஞ்சா மித்து நம்மள மதிக்கவே மாட்டா. நாமதான் செய்றோம்னு அவனுக்கே தெரியாம அவனை இங்கேருந்து அனுப்பி விடுறேன், நீ சாப்பிடு” என்றவர் வெளிக் கிளம்பி விட்டார்.

அன்றைய இரவே மிருதுளா வந்து சேர்ந்தாள். மித்ராவின் அம்மாவும் அக்காவுமாக அவளுக்கு மூளை சலவை செய்யும் வேலையில் இறங்கியிருந்தனர்.

“லவ் நம்மளை மீறி வர்ற உணர்வு. என்னை மீறி நடந்தது இது. நான் என்ன பண்ண? அவர் நல்லவரா என்னை நல்லா பார்ப்பாரா அதை மட்டும் பார்க்கலாம்தானே? நீயெல்லாம் எனக்கு சப்போர்ட்தான் பண்ணுவேன்னு நினைச்சேன் க்கா” என்றாள் மித்ரா.

“எப்படி சப்போர்ட் பண்ணுவேன் மித்ரா? என் வீட்ல என்ன சொல்வாங்கன்னு நினைச்சு பார்த்தியா? சஞ்சய்க்கு லைஃப் என்னாகும்னு யோசிச்சியா? அவ்ளோ செல்ஃபிஷ் ஆகிட்டியா நீ?” கோவப்பட்டாள் மிருதுளா.