இருள் வனத்தில் விண்மீன் விதை -12
அத்தியாயம் -12(1)
காலையில் காய்ச்சலில் அவதிப்பட்ட சர்வா இரவில் சரியாகி விட்டான். சிறு சோர்வு மட்டும்தான்.
அவனுக்கு உணவு பரிமாறி தனக்கும் வைத்துக்கொண்ட மித்ரா, “அவகிட்ட ஏதோ அட்ராக்ஷன் இருந்துச்சுன்னு சொன்னீங்களே, பழகின அத்தனை நாள்ல ஒரு நாள் ஒரு பொழுது கூடவா உங்களை நான் அட்ராக்ட் பண்ணல?” எனக் கேட்டாள்.
அவனுக்கு தொண்டையிலேயே உணவு சிக்கிக் கொண்டது.
தண்ணீரை அவன் பக்கமாக நகர்த்தி வைத்தவள், “குடிச்சிட்டு பதில் சொல்லுங்க” என கராறாக சொன்னாள்.
அவன் பாவமாக பார்க்க அவளோ விடுவதாக இல்லை.
“பாரு மித்ரா, அப்போ எனக்கு இருபத்திரெண்டு வயசு, அப்ப இருக்க மெண்டாலிட்டியே இப்பவும் எப்படி இருக்கும்? அந்த முதல் லவ்வே பிஸிகல் அட்ராக்ஷன் மட்டும் வச்சு ரிலேஷன்ஷிப்ப ஏற்படுத்திக்க கூடாதுங்கிற பெரிய பாடத்தை எனக்கு கத்து கொடுத்திருக்கு. உன்னை தேடி நான் வந்தப்போ நிறைய சிக்கல்ல இருந்தேன், அஃப்கோர்ஸ் இப்பவும் என் நிலைமை அதுதான். வயசு கூட கூட அதுக்கு தகுந்த மெச்சூரிட்டியும் எனக்கு வந்திருக்கு” அதுவரை அமைதி காத்தவள் அவனது இறுதி வாக்கியத்தில், ‘அப்படியா?’ எனும் பார்வை பார்த்தாள்.
தண்ணீரை பருகிக் கொண்டவன், “அப்படித்தான்னு நம்புறேன். ஏன்னா முன்னாடி அவ்ளோ ஆஃப் பாயில் நான்” என்றான்.
எங்கேயும் எந்த இடத்திலும் தன்னை தாழ்த்தி பேசியதே இல்லை அவன். பணக்கார குடும்பத்தில் பிறந்த மிடுக்கும் சிறிய செருக்கும் அவனுடன் ஒட்டிப் பிறந்தவை. கட்டிய மனைவியை சமாளிக்க அவனே தலை கீழாக மாற ஆரம்பித்து விட்டான்.
“ம்ம்… நான் கேட்டதுக்கு நேரடியான பதில் என்னன்னு சொல்லிட்டு அப்புறம் உங்க சொந்த கதை சோக கதையை சொல்லுங்க” என்றாள்.
“லிசி கூட உன்னை கம்பேர் பண்ணிக்காத” என்றான்.
“சொல்லும் போது கூட அவ பேர்தான் முன்னால வருது, இல்ல?” கண்களில் வலியோடு கேட்டாள்.
கண்களை இறுக மூடி தலையை மறுப்பாக ஆட்டிக் கொண்டவன், “இனி அவ பேரையே உச்சரிக்கல, போதுமா?” என்றான்.
“எம்மேல எந்த இன்ட்ரெஸ்ட்டும் இல்லைனு டைரக்ட்டா சொல்றது விட்டுட்டு ஏதேதோ சொல்லிக்கிட்டு” புலம்பிக் கொண்டே சாப்பிட்டாள்.
“நாம பழகின சமயத்துல உன்னை ரசிச்சு பார்க்கிற மன நிலைல நான் இல்லை மித்ரா, அதுக்குன்னு அப்படியே இருந்திட மாட்டேன். நேத்து நீ குளிக்கும் போது உள்ள வந்தேனே… வெளில வந்த பிறகுதான் இன்னும் ரெண்டு ஸ்டெப் முன்னாடி எடுத்து வச்சிருக்கலாம் மிஸ் பண்ணிட்டேனேன்னு தோணிச்சு” என்றான்.
“தோணும் தோணும் ஏன் தோணாது? என்னை பலவந்த படுத்தி ஏதாவது செஞ்சிருக்கலாம்னு கூட தோணியிருக்கும் அப்படித்தானே?”
“சேச்ச…” என்றவன் கையை தன் தலைக்கு மேலாக உயர்த்தி, “அந்த அளவுக்கு போய்டாத, அதுக்கும் கொஞ்சம்… ம்ஹூம்… ரொம்ப கீழ் லெவல்லதான்… உன் அழகு மொத்தத்தையும் கண் குளிர பார்த்திருக்கலாம்னு மட்டும்தான் யோசிச்சேன். டச் பண்ணக்கூட நினைக்கல” என்றான்.
“அப்படி நினைச்சவர் எதுக்கு எனக்கு ட்ரெஸ்…” கோவமாக ஆரம்பித்தவள் மெல்லிய குரலில், “மாத்தி விட்டீங்க?” எனக் கேட்டாள்.
“நீ கேட்கிறதெல்லாம் வச்சு பார்க்கும் போது உனக்கு வேற மாதிரி தாட்ஸ் இருக்கும்னு நினைக்கிறேன், என்ன உன் விருப்பம் நான் உன்னை பார்க்கணும் டச் பண்ணனும் இன்னும்…” அவளது முறைப்பில் மேலும் பேசாமல் வாயை மூடிக் கொண்டான்.
சாப்பிட்டு முடிக்கும் தருவாயில், “என்னை இங்க அழைச்சிட்டு வந்தாச்சு, அடுத்து என்னை வச்சு என்ன செய்யணும்?” எனக் கேட்டாள்.
“தெரியலை தாத்தாகிட்ட கேட்டு சொல்றேன்” என்றான்.
“அவர் சொல்றதெல்லாம் நான் செஞ்சு உங்க அண்ணன் பையன் குணமானதுக்கு அப்புறம் அடுத்து என்ன செய்யணும் நான்?”
“நீ என்ன இங்க வேலை பார்க்கவா வந்திருக்க? வாழ வந்திருக்க”
“எப்படி வாழறது? காரியத்துக்காக நீங்க கட்டிக்கிட்ட மாதிரி உங்ககிட்ட தாலி வாங்கிகிட்ட நானும் கடமைக்காகன்னு வாழறதா?”
“பெரியவங்க பேசி வச்சு நடக்கிற கல்யாணங்கள்ல புருஷன் பொண்டாட்டி எப்படி வாழறாங்களோ அப்படியே நாமளும் வாழலாம்”
“அவங்களுக்கு பேசி புரிஞ்சுக்க டைம் இருக்கும்”
“நமக்கு டைம் இல்லைனு யார் சொன்னா? உன் மனசுல நான் எப்பவோ வந்திட்டேன், நான் யாருங்கிறத வேணும்னா மறைச்சிருக்கலாம், மத்தபடி என் குணத்தை மறைக்கல, உன்கிட்ட பழகினப்போ என்னவோ அதுதான் நான். அநாதை சர்வாவுக்கு ஒரு குடும்பம் இருக்குங்கிறதால என்னை பிடிக்காம போயிடுமா உனக்கு?”
“உங்க மனசுல நான் இல்லையே”
“மனைவியா ஏத்துகிட்டப்புறம் என் மனசுலேயும் நீ நிறைஞ்சு போக எவ்ளோ நாள் ஆகப் போகுது?” என அவன் கேட்க, வேறெங்கோ விரக்தியாக பார்த்தாள்.
“திடீர்னு சைலன்ட் ஆகிட்ட, ஸ்பீக் அவுட் மித்ரா”
“என்னை தவிர வேற ஆப்ஷன் இல்லைல உங்களுக்கு?”
“ஏன் இருக்கணும்? என் கண்ணுக்கு அழகா தெரியுற, இப்போ உன் அறிவு பல்பு மங்கி எரிஞ்சாலும் பேஸிக்கா நீயும் புத்திசாலிதான், நேத்து நைட் நடந்த சம்பவத்தை நினைச்சு பார்த்தா அடடா எவ்ளோ வேகமா செயல் பட்டுட்டோம் நிறுத்தி நிதானமா ரசிச்சிட்டே செஞ்சிருக்கலாம்னு ஃபீல் பண்ண வைக்கிற அளவுக்கு போதை தர்ற பொண்டாட்டி நீ, நீ மட்டும்தான் எனக்கு ஒரே ஆப்ஷன்ங்கிற நிலை நானே தேர்ந்தெடுத்தது, நோ ரெக்ரெட்ஸ் அட் ஆல்” என்றான்.
அவள் வேக மூச்சுகளோடு அவனை பார்த்திருக்க, “கோவ படாத, உன் மன நிலை எனக்கு நல்லா புரியுது, லவ் மேகிங்ல நீ ஒரு அடி எடுத்து வைக்காம நான் அரை அடி கூட எடுத்து வைக்க மாட்டேன்” என்றான்.
அவள் எரிச்சல் கொள்ள, “பயப்படாத, நீ ஒரு அடி எடுத்து வச்சா போதும், அப்புறம் மத்ததெல்லாம் நான் பார்த்துப்பேன்” என குறும்பு சிரிப்போடு சொன்னான்.
“உங்க வீட்ல என்னென்னவோ பிரச்சனைனு சொல்லிட்டு இப்படி பேசுறீங்க?”
“என்ன நீ, வீட்ல பிரச்சனை அதான் வேற மாதிரி உன்னை யோசிக்க முடியலைன்னா அதுக்கும் குத்தம் சொல்ற, சரின்னு இப்படி பேசினா அதுக்கும் கோவிக்கிற, என்னதான் செய்றதாம் நான்?”
“டேப்லெட்ஸ் போட்டுட்டு போய் தூங்குங்க”
தலையாட்டிக் கொண்டவன் நாளையிலிருந்து அவன் அலுவலகம் செல்லலாம் என எண்ணியிருப்பதை சொன்னான்.
“வீட்ல எல்லாரும் ரொம்ப ஃப்ரெண்ட்லி, நான் போலாம்தானே?” எனக் கேட்டான்.
“இல்லை கூடவே இருங்க” என்றாள்.
என்ன சொல்ல என அவன் பார்க்க, “முடியாதில்ல, அப்போ இப்படி பெர்மிஸன் கேட்கிற மாதிரியெல்லாம் ஆக்ட் கொடுக்க வேணாம்” என்றாள்.
“அவசியம்னா கண்டிப்பா இருப்பேன். இங்க உனக்கு செட் ஆகுற வரைக்கும் ஆஃபிஸ் போகல போதுமா?” என அவன் சொன்னதை எதிர் பார்த்திராதவள் திகைப்பாக பார்த்தாள்.
“கோடி கோடியா சொத்து இருந்தும் தம்புடி பிரயோஜன படாதுன்னு எப்பவோ புரிஞ்சிக்கிட்டேன் மித்ரா. பணக்காரனா வாழறது பணக்காரனா சாகுறது விட குடும்பத்துக்காக வாழறதும் குடும்பத்துக்காக சாகறதும் பெருமைதானே? உன்னை இங்க அழைச்சிட்டு வரனும்னு எட்டு மாசம் பிஸினசை கவனிச்சு பார்க்கல நான். மத்த எல்லாரும் என் ஃ பேமிலி மெம்பெர்ஸ், அவங்களுக்காகவே அவ்ளோ பெரிய ரிஸ்க்னா, நீ…” என்றவன் அவளை தீர்க்கமாக பார்த்தான்.
அவளும் ஆவலாக பார்க்க, “நீதான் என்னோட இன்பம் துன்பம் வெற்றி தோல்வி எல்லாத்திலேயும் என் கூட நிக்க போறவ, உன்னை சார்ந்துதான் நான் இருக்க போறேன், என்னோட ஆதாரமே நீதான். அப்போ உனக்காக இன்னும் எவ்ளோ நாள் வேணும்னாலும் ஆஃபிஸ் பக்கம் எட்டிப் பார்க்காம இருப்பேன்” என்றான்.
“சர்க்கரை தடவி பேசுறதுன்னு சொல்வாங்களே அதானே இது?”
“எனக்கு தெரியாது” என்றவன் சிறு யோசனைக்கு பின், “மனசிலேருந்து பேசுறதுன்னு சொல்வாங்கல்ல? அப்படி வச்சுக்க” என்றான்.
“மனசு மண்ணாங்கட்டி! அதெல்லாம் இருக்கா உங்ககிட்ட?”
“அதை நீதான் ஆராய்ச்சி பண்ணி கண்டு பிடிக்கணும். பொறுமையா ஆராஞ்சுக்க, குன்னூருக்கே திரும்ப போகணும்னுங்கிற உன் எண்ணத்துல இப்போ சின்னதா மாற்றம் வந்திருக்குதானே?”
“நீங்களா நினைப்பீங்களா?”
“உன்னோட பேசின வரைக்கும் அப்படித்தான் தோணுது”
“அங்க மட்டும் வா வான்னா கூப்பிடுறாங்க, அதான் துரத்தி விட்டுட்டாங்களே. பெத்தவங்களும் ஆதரிக்கல, கட்டினவன் உண்மையா இல்லை, என் நிலைமை என் எதிரிக்கு கூட வரக்கூடாது” என்றாள்.
ஆயாசத்தோடு பெருமூச்சு விட்டவன், “தூங்கலாம் மித்ரா” என்றாள்.
“ம்ம்… ரொம்ப நாள் வேணாம் அட்லீஸ்ட் ரெண்டு மூணு நாளைக்கு வீட்ல இருங்க. உங்க சாமியாடி தாத்தா சித்தப்பாலாம் பார்த்தா பயமா இருக்கு. உங்க பெரியம்மா பத்தி பெருமை பெருமையா அளந்து விடுறீங்க, என்னைய மேலும் கீழும் பார்க்கிற பார்வையே கதி கலங்க வைக்குது. உங்கம்மா என்னைத்தான் பார்க்கிறாங்கன்னு நினைச்சு நானும் பார்த்து லேசா சிரிச்சா அப்புறம்தான் அவங்க கவனம் வேறெங்கேயோ இருக்குன்னு தெரியுது. ஆளாளுக்கு ஒவ்வொரு விதமா இருக்காங்க. பத்து பேர் வாழறதுக்கு வீட்ட கட்டுங்கன்னா நூறு பேர் வாழ கட்டி வச்சிருக்கீங்க, எங்க என்ன இருக்குன்னு கூட சரியா புரியலை”