அத்தியாயம் -11(2)
மீண்டும் அவனது கையை தட்டி விட்டவள், “கட்டின தாலி ஒண்ணுதான் நம்ம ரெண்டு பேருக்கும் இடைல ஏதோ இருக்குன்னு எனக்கு சொல்லிட்டு இருந்துச்சு, அதையும் வாங்கிட்டீங்க, நான் யாரு இப்போ உங்களுக்கு?” என அழுகையும் சீற்றமுமாக கேட்டாள்.
பற்களை நெறித்து தலையில் அடித்துக் கொண்டவன் காப்போர்டில் இருந்த தாலிக் கயிறை எடுத்து வந்து அவளது கழுத்தில் போட்டு விட்டான்.
“நீ யாருன்னு சொல்லணுமா? எனக்கு பிடிச்சவ, பிடிக்காதவ, என் உயிரை வாங்க வந்தவ, இந்த ஜென்மம் போதாதுன்னு இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்து வந்தாலும் நிழல் மாதிரி என் கூடவே வந்து என்னை சித்திரவதை பண்ண போற பொண்டாட்டி பூதம் ராட்சசி.. எல்லாம்… எல்லாமே நீதான்… நீ மட்டும்தான் போதுமா?” என்றான்.
அவள் முறைத்துக் கொண்டிருந்தாள். “என் புள்ளன்னு சொன்னா எப்படி சொல்லலாம்னு கேட்ருக்கலாம், சண்டை போட்ருக்கலாம், அட ரெண்டு அடி கூட வச்சிருக்கலாம், அதையெல்லாம் விட்டுட்டு என் கூட எவளையோ சம்பந்த படுத்தி பேசுவியா? நல்லா தெரிஞ்சுக்க… நடிச்சு ஏமாத்திட்டேன்னு குத்தம் சுமத்த பட்ட நான் நீதான் என் வைஃப்னு நல்லா தெளிவாதான் இருக்கேன்.
உண்மையா லவ் பண்ணினேன்னு பீத்திக்கிற நீதான் என்னை உன் ஹஸ்பண்ட்டா நினைக்க மாட்டேங்கிற. நீ சம்மதிச்சா ஒரு புள்ளய நாம பெத்துக்கலாம், இல்லைனா காலம் முழுக்க இப்படியே இருந்திட்டு போறேன். ஆனா இன்னொருத்திக்கு என் வாழ்க்கைல இடம் இல்லை” என்றான்.
அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள். “என்னடா இப்படி சொல்றானே கொஞ்ச நாள் ஆனதும் ‘நீ உனக்கு பிடிச்ச வாழ்க்கைய அமைச்சுக்கம்மா’ன்னு டாடா காட்டி அனுப்பி வைப்பான்னு மட்டும் கணக்கு போடாத. எனக்கு சொன்னதுதான் உனக்கும்… என்னை தவிர வேற எவனுக்கும் உன் வாழ்க்கைலேயும் இடமில்லை” அதிகாரமாக சொன்னான்.
கோவமாக ஏதோ சொல்லப் போனவளை கை காட்டி தடுத்தவன், “ஒரு நாள்ல ஏழரை வருஷத்துக்கு உண்டான அளவுக்கு சிறப்பா செஞ்சு விட்டுட்ட. தயவுசெஞ்சு படு” எரிச்சலோடு அதட்டினான்.
அவளுக்கும் அவனை பார்க்க பாவமாக இருக்க அமைதியாக நின்றாள். அவளை கடந்து சென்று படுத்து விட்டான் அவன்.
அவளும் படுத்த பிறகு தலை மாட்டில் இருந்த மின் விளக்கின் ஸ்விட்ச்சை அணைத்து அறையை இருட்டாக்கினான்.
நடந்தவற்றை நினைத்து பார்த்தவளுக்கு அவளது மனநிலை மீதான குழப்பமே மிஞ்சியது. தாலியை கேட்டு வாங்கிக் கொண்டேன் என்றால் இவனோடு வாழத்தான் ஆசை படுகிறேனா? இன்னொருத்தி இருக்கிறாள் என சொல்லியும் அவனருகில் வெட்கமின்றி படுத்துக் கிடக்கும் நான் என்ன ஜென்மம்? கண்களை துடைத்துக் கொண்டு புரண்டு படுத்தாள்.
இவனோடு வாழ்க்கையில் சேர்வது பற்றித்தான் எத்தனை எத்தனை கனவுகள்? எப்படி போராடி இவனை மணந்து கொண்டேன், இதோ அவனுடைய உரிமையை ஊர் உலகத்துக்கு எல்லாம் பறை சாற்றி விட்டு கைக்கெட்டும் தூரத்தில் படுத்திருக்கிறான். என் மனமோ மகிழ்ச்சியையும் நிம்மதியையும் இழந்து பயத்தையும் குழப்பத்தையும் துணையாக வைத்துக்கொண்டு அல்லாடி நிற்கிறதே.
என்னை பிடிக்காமல் மணந்தான் என்பதை நினைத்து வருந்தவா? வேறொருத்தியைத்தான் இவனுக்கு பிடிக்கும் என்பதை நினைத்து துன்ப படவா? இவன் சொல்லும் அனைத்தையும் பழைய மித்ரா போலவே கண் மூடித் தனமாக நம்பி இவனோடு வாழ்வதா? இவனை உதறி விட்டு எனக்கான பாதையை வேறு வழியில் அமைத்துக் கொள்வதா?
மித்ராவால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. ஏதோ ஒரு நொடியில் உறங்கிப் போனாள்.
அடுத்த நாள் காலையில் மித்ரா நன்றாக இருக்க, சர்வாவுக்குத்தான் நல்ல காய்ச்சல். அவனது அனத்தல் சத்தத்தில்தான் கண் விழித்தாள் மித்ரா.
கீழே செல்லப் போனவளை பலஹீனமான குரலில் அழைத்தான். “ஒழுங்கா வேற ட்ரெஸ் போட்டுக்க, இப்படியே போவியா?” என கடுப்பாக சொன்னான்.
இரவில் அவன் போட்டு விட்ட கை இல்லாத கவுன்தான் அணிந்திருந்தாள். வெளிர் நிற கவுன் அவளை அவனுக்கு வெளிச்சமிட்டு காட்டிக் கொண்டிருந்தது.
ஒடுங்கி நின்றவள் அவனை பார்த்தாள். புது மனைவியை ரசிக்கவோ கிறங்கவோ முடியாத நிலையில் இருந்தவன் பார்வையோ அவளது கண்களை சந்தித்துக் கொண்டிருந்தது. கண்ணியமானவன் என பெருமை படவா, என் மீது ஆசையே இல்லை என ஏமாற்றம் கொள்ளவா என அவளிடமே அவளது உள்ளம் கேட்க, பதில் தராமல் ஏமாற்றம் சூழ நின்றாள்.
“என்ன யோசனை?” எனக் கேட்டான்.
“நான் ட்ரெஸ் சேஞ்ச் பண்ற வரைக்கும் எப்படி பொறுத்துப்பீங்க? உடம்பு ரொம்ப காயுது” என்றாள்.
“எனக்கு ரொம்ப நேரமா காயுது, ராப்பகல்னு பார்க்காம நல்லா தூங்குற நீ. அந்த வயரலெஸ் போன் கைல கொடுத்திட்டு ட்ரெஸ் மாத்த போ” என்றான்.
“எழுப்பி விட்ருந்தா எழுந்திரிச்சுக்க போறேன்” என முணு முணுத்தாலும் அவன் சொன்ன படியே செய்தாள்.
பெரியம்மாவிற்கு அழைத்து அவன் விவரம் சொல்ல, சுரேந்தரை அழைத்துக் கொண்டு வந்து விட்டார் ருக்மணி. உடனடியாக குடும்ப மருத்துவர் விஸ்வநாதன் வரவழைக்கப் பட்டார்.
எங்கு சென்றாய் என்ன சாப்பிட்டாய் என மருத்துவர் கேள்வி கேட்க தயக்கமாக பார்த்தான். மித்ராவை தவிர மற்ற இருவரையும் வெளியில் காத்திருக்க சொன்ன மருத்துவர், “இப்போ சொல்லு சர்வா” என்றார்.
“நைட்ல ஸ்விம்மிங் பூல்ல ரொம்ப நேரம் இருந்திட்டேன் அங்கிள்” என்றான். சரியாக அதே நேரம் அடுக்கடுக்காக தும்மினாள் மித்ரா.
அவனை கிண்டலாக பார்த்தவர், “இனிமே ஹெட் கேப் போட்டுட்டு தண்ணில விளையாடுங்க ரெண்டு பேரும்” என சொல்லிக் கொண்டே அவனது நெற்றிக் காயத்தை ஆராய்ந்தார்.
“ரொம்ப டீப்பா இருக்கே, இதனால கூட இருக்கலாம் ஃபீவர்” என்றவர் நெஞ்சில் ஸ்டெத் வைத்து பரிசோதனை செய்தார். அவன் வலியில் முகம் சுளிக்கவும் அவனது மார்புப் பகுதியையும் ஆராய்ந்து பார்த்தார்.
“நெத்தியிலதானே உன் சித்தப்பா காயப்படுத்திட்டார்னு சொல்லிக்கிட்டாங்க, இது எப்படி ஆச்சு சர்வா?” என விசாரித்தார்.
சர்வா ஓரப் பார்வையால் மித்ராவை முறைக்க, அவனது பார்வைக்கு தவறான அர்த்தம் கற்பித்தக் கொண்டவரோ குரலை செருமி, “சரி சரி, என்னன்னு நோண்டி கேட்டு உன்னை எம்பாரஸ் பண்ணல. ஆனா இனிமே பார்த்து நடந்துக்கோங்க” என்றார்.
“நான் வேணும்னே செய்யல அங்கிள், இவர்தான்…” தன்னிலை விளக்கம் கொடுக்க வந்தவள் சர்வாவின் கண்டிப்பு பார்வையில் வாயை மூடிக் கொண்டாள். காய்ச்சல் குறைய அவனுக்கு ஊசி போட்டு விட்டவர் மித்ரா தும்மியதால் அவளையும் பரிசோதித்து மருந்துகள் எழுதினார்.
பின் மித்ராவையும் வெளியே போக சொன்னவர், “அந்த பொண்ணுக்கும் ஏதாவது காயமா? வெட்க பட்டுட்டு சொல்லாம இருக்காத, எதுக்கும் ரெண்டு பேரும் கார்த்தாயினியை ஒரு முறை வந்து பாருங்க” என்றார். கார்த்தாயினி அவரது தர்ம பத்தினி, மகளிர் நலன் மற்றும் மகப்பேறு மருத்துவர்.
“நீங்க தப்பு தப்பா புரிஞ்சுக்காதீங்க அங்கிள். என்னை பேச விடாம நீங்களே கேள்வி கேட்டு பதிலையும் நீங்களே சொல்லிக்கிறீங்க, ஒழுங்கான மருந்ததானே எழுதியிருக்கீங்க?” என்றான்.
“உன்னை போல ஆயிரம் பேரை பார்த்தவன் நான், நீ பொறந்ததிலிருந்து உன்னை பார்க்கிறேன்டா ஆர்வக்கோளாறு” என்றவர் அவனை நோக்கி குனிந்து சின்ன குரலில், “அந்த விஷயத்துல டவுட்ஸ் ஏதும் இருந்தா கூச்ச படாம கேளு” என்றார்.
அவன் கைகளை குவித்து கும்பிட, “ஹ்ம்ம்… இப்போ உனக்கு ரொம்ப தேவையான அட்வைஸை ஓசியில கொடுக்கிறதால இப்படித்தான் அலட்சியம் செய்ய தோணும். நாளைக்குள்ள இம்ப்ரூவ் ஆகலைனா நான் இங்க வர மாட்டேன், நீதான் என்னை தேடிட்டு வரணும். பட் தேவையிருக்காதுன்னு நினைக்கிறேன், டேக் ரெஸ்ட்” என சொல்லி புறப்பட்டு விட்டார்.
விடிந்த பிறகு அவனது பழைய கதையை வைத்து ஒரு வழி செய்ய காத்திருந்த மித்ராவிடமிருந்து அவனுடைய காய்ச்சல் அவனை காபந்து செய்தது. பொறுப்பாக அவனுக்கு சிசுருஷைகள் வேறு செய்தாள்.
நன்றாக உணர்ந்தாலும் அவளின் இந்த சுமூகமான போக்கை நீட்டிக்க நினைத்து படுத்தே கிடந்தான் சர்வா.
அவர்களின் உணவு அறைக்கே வர, வெளியில் செல்லவே இல்லை மித்ரா. அவ்வப்போது யாராவது வந்து பார்த்து சென்றனர்.
மதியத்துக்கு மேல் தன் அப்பாவிடம் பேசி விட்டு பால்கனியில் நின்றிருந்தாள் மித்ரா. எதேச்சையாக இவன் பக்கமாக திரும்பியவளை தன்னிடம் வரும்படி அழைத்தான்.
அவனிடம் வந்தவளை தன்னருகில் அமர வைத்துக்கொண்டான்.
“அஞ்சு வருஷத்துக்கு முன்ன நான் ஒரு ஆக்சிட்டென்ட் பண்ணிட்டேன்” என ஆரம்பித்தான்.
சர்வா கல்லூரி இறுதி வருடத்தில் இருந்த போது அவனுடைய புதிய காரில் ஈ சி ஆர் சாலையில் நண்பர்களோடு உற்சாகமாக பயணித்துக் கொண்டிருந்தான். ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் திடீரென சாலையை கடக்க இவன் சமாளித்து காரோட்டினாலும் ஒரு சிறுவனுக்கு தலையில் அடி பட்டு விட்டது.
அவனும் அவனது நண்பர்களும் அச்சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுவனுக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்ய இரத்தம் தேவைப்பட்டது. அரிய வகை இரத்தம் என்பதால் எளிதாக கிடைக்கவில்லை. கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் விவரத்தை பகிர்ந்திருந்தனர்.
உடனடியாக வந்து சேர்ந்தாள் லிசி. அவள்தான் இரத்த தானம் செய்து அந்த சிறுவன் உயிர் பிழைக்க காரணமானவள். தவறு சிறுவன் மீதுதான் என்ற போதும் தன்னால் இப்படி ஆகி விட்டதே மிகவும் வருந்திக் கொண்டிருந்தான் சர்வா. ஏதாவது அசம்பாவிதம் ஆகியிருந்தால் காலம் முழுக்க அவனுக்கு குற்ற உணர்வாகிப் போயிருக்கும். அப்படியாகி விடாமல் காபற்றிய லிசி அவனுக்கு தேவதையாகத்தான் தெரிந்தாள்.
அவனுடைய கல்லூரியில் வேறு டிபார்ட்மெண்டில் இரண்டாவது வருடம் படித்துக் கொண்டிருந்தாள் லிசி. அன்றைய தினம்தான் அவள் அவனுக்கு அறிமுகம்.
பின்னரும் இரண்டொரு சந்தர்ப்பங்களில் அவர்கள் சந்திக்க நேரிட்டது. எதிர் பாலின ஈர்ப்பு இருவருக்குமே இருக்க, அவன்தான் முதலில் காதலை சொன்னது, உடனடியாக ஏற்றுக் கொண்டாள் லிசி.
இருவருமே நல்லவர்கள் என்ற போதும் எண்ணங்களால் கருத்துக்களால் ஒருமிக்கவில்லை. அதிக பொஸஸிவ் குணம் கொண்ட லிசியை சமாளிக்க கூடிய பொறுமையும் பக்குவமும் அப்போது அவனிடம் இல்லை.
பழக ஆரம்பித்த மூன்றே மாதங்களில் இது சரியாக வராது என்பதை புரிந்து இருவரும் பேசி பிரிந்து விடலாம் என பரஸ்பரமான முடிவுக்கு வந்தனர். அதன் பின்னரும் எதிரிகள் போல பாவித்துக் கொள்ளாமல் நல்ல நண்பர்களாக அவர்களின் பயணத்தை தொடர்ந்தனர்.
காலம் கடந்துதான் சர்வாவை தவற விட்டு விட்டோம் என்பதை உணர்ந்தாள் லிசி. அவனிடம் பேசி தங்கள் உறவை புதுப்பிக்கலாம் என அவள் முயன்ற போது சர்வா அவனது குடும்பத்தில் நடக்கும் இன்னல்களுக்கான தீர்வை தேட ஆரம்பித்திருந்தான்.
லிசிக்கு மீண்டும் அவன் மீது காதல் என்பதை மட்டும் சொல்லாமல் மற்றவற்றை மனைவியிடம் சொல்லி விட்டான் சர்வா.
அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த மித்ராவின் கையை எடுத்து வருடிக் கொடுத்தவன், “லிசிக்கும் எனக்கும் இடைல இருந்தது வந்த வேகத்துலேயே திரும்பி போயிடுச்சு. அது முடிஞ்சு அஞ்சு வருஷம் ஆகுது, நமக்குள்ள ஓரளவுக்கு எல்லாம் சரியானதுக்கப்புறம் உன்கிட்ட சொல்லலாம்னு இருந்தேன்” என்றான்.
“ஆனாலும் அவளை லவ் பண்ணியிருக்கீங்கதானே? அவதானே உங்களுக்கு ஃபர்ஸ்ட் லவ்” என்றாள்.
“ஃப்யூச்சர் பத்தி யாருக்கும் முன்னாடியே தெரியாதே மித்ரா. தெரிஞ்சிருந்தா அப்பவே உன்னை தேடிக்கிட்டு வந்திருப்பேன். இப்போ லிசி கூட வெறும் ஃப்ரெண்ட்ஷிப் மட்டும்தான். உனக்கு பிடிக்காதுன்னு தெரியும், நேர்ல பார்த்து பேசி இனிமே அவளை ஒரேயடியா எங்கிட்டேருந்து தள்ளி வச்சிடுறேன்” என்றான்.
எதுவும் சொல்லாமல் எழுந்து கொண்டவள் மீண்டும் பால்கனி போய் நின்று கொண்டாள். கோவமாக அவள் ஏதும் பேசி விடாததே நல்ல அறிகுறிதான் என நினைத்து நிம்மதியடைந்து கொண்டான் சர்வா.