அத்தியாயம் -10(2)

இப்போதும் சத்தம் கேட்டுக் கொண்டிருக்க, உள்ளே நீரில் மூழ்கிய தாமரையாக அவளை கண்ட காட்சிதான் அவனது நினைவிலாடியது.

‘இன்னும் ரெண்டு அடி அவளை நோக்கி எடுத்து வச்சிருந்தா…’ என நினைத்தவன் தலையை உலுக்கி, “அடங்குடா சர்வா!” என தன்னைத் தானே கண்டித்துக் கொண்டான்.

இன்னிசையாக தொடர்ந்து கொண்டே இருந்த தண்ணீரின் சத்தத்தில் குளியலறை பக்கமாக திரும்பியவன் தலையை இட வலமாக ஆட்டி புன்னகைத்துக் கொண்டான்.

மனம் இதமாக உணர ஆரம்பித்த பின்னர்தான் குளிப்பதை நிறுத்தினாள் மித்ரா. அவனுடன் பேசிக் கொண்டே ஆடைகள் எடுத்து வர மறந்திருந்தாள்.

குளியலறை கதவை லேசாக திறந்து, “ட்ரெஸ் மாத்தணும் நான், நீங்க கொஞ்சம் வெளில போறீங்களா?” எனக் கேட்டாள்.

“நீ உள்ள போய் எவ்ளோ நேரமாச்சுன்னு தெரியுமா? மதியமும் ஏதும் சாப்பிடல, இனி ட்ரெஸ் மாத்திட்டு எப்ப சாப்பிடுவ?” எனக் கேட்டுக் கொண்டே தன்னுடைய பாத் ரோப் எடுத்து நீட்டினான்.

அவள் வாங்க மறுத்து தலையை உள் இழுத்துக் கொள்ள, “நம்ம ரூம் மித்ரா இது, உன்னை கம்ஃபர்ட்டா வச்சுக்க வேண்டியது என் பொறுப்பு, சும்மா சும்மா வெளி நடப்பு செய்றது என்னால ஆகாத காரியம், இத போட்டுட்டு வந்து சாப்பிடு, அப்புறம் உனக்கு என்ன ட்ரெஸ் போடணுமா போட்டுக்கோ” என்றான்.

சாதாரண பசி குளித்த பின் அகோர பசியாக மாறியிருக்கவும் மறுக்காமல் அவன் கொடுத்ததை வாங்கிக் கொண்டாள்.

பாத் ரோப் முட்டி வரை இருந்ததால் அசௌகர்யமாக உணராமல் இயல்பாகவே அவன் முன் வந்தாள்.

அவள் கேட்டது அனைத்தும் வந்திருந்தது. வயிறு நிறைய சாப்பிட்டாள். அவளை வேடிக்கை பார்த்திருந்தவன், “உனக்கு அளவு தெரியலைன்னு நினைக்கிறேன், அப்புறம் நீதான் சிரம படணும், போதும் சாப்பாடு” என்றான்.

‘நீ சொல்வதை என்ன நான் கேட்பது?’ என்ற வீம்போடு இன்னொரு முறை சாதம் வைத்து சாப்பிட்டாள்.

அவளை கடிய முடியாமல் தாடையில் கை வைத்து பார்த்திருந்தான். ஒரு வழியாக சாப்பாட்டு கடையை சாத்தியவளுக்கு வயிறு அளவுக்கு அதிகமாகவே நிறைந்து விட்டதில் என்னவோ போலதான் இருந்தது.

அமைதியாக வந்து படுத்து பார்த்தாள், உட்கார்ந்து பார்த்தாள், நெஞ்சை நீவிக் கொண்டாள். நன்றாக மூச்சை இழுத்து விட்டவன், “ட்ரெஸ் மாத்திட்டு வா, நடக்கலாம்” என்றான்.

“வாமிட் பண்ணினா சரியாகியிடும்னு நினைக்கிறேன்” என்றவளை முறைத்தான்.

“உங்களாலதான்” என அவனிடமே கோவப்பட்டாள்.

“ஆமாம், நான்தான் உன் வாய்ல சாப்பாட்டை திணிச்சேன்”

“உங்க வாயை வச்சிட்டு சும்மா இருக்க வேண்டியதுதானே, நீங்க என்ன சொன்னாலும் ஏறுக்கு மாறாதான் செய்ய தோணுது. இனிமே என்கிட்ட எதுவும் சொல்லாதீங்க” என்றாள்.

அவளது பெட்டியிலிருந்து கைக்கு கிட்டிய சுடிதாரை எடுத்துக் கொடுத்தவன், “அப்புறம் சண்டை போடு, இப்போ வா” என்றான்.

“ஏன் உங்க வீட்ல ஃபார்மல் ட்ரெஸஸ்தான் அலவ்டா?”

“உனக்கு பிடிச்சதை போட்டுக்கலாமே”

“அப்ப இத வச்சிட்டு நைட் ட்ரெஸ் எடுங்க” என்றவள் அவனது பொறுமை பறி போகும் பார்வையை ரசித்துக் கொண்டே, “ரொம்ப நல்லா பார்த்துக்கிறேன்னு என் அப்பாகிட்ட மூச்சுக்கு முந்நூறு தரம் சொன்னீங்க, கஷ்டமா இருக்கோ?” என சீண்டலாக கேட்டாள்.

“இல்லைனு சொல்ல மாட்டேன், போக போக பழகிட்டா…”

அவன் சொல்லி முடிக்கும் முன், “பழகுறதுக்கு ஒரே மாதிரியாவா இருக்கும் நான் கொடுக்கிற கஷ்டம், டிசைன் டிசைனா இருக்கும். போதும்டா சாமின்னு நீங்களே கொண்டு போய் என் வீட்ல விடுறீங்களா இல்லையான்னு பாருங்க” என்றாள்.

“பார்க்கலாம்” என்றவன் இரவுக்கு உடுத்தும் மேக்சியை எடுத்துக் காண்பித்து, “இது ஓகேவா?” எனக் கேட்டான்.

வீம்புக்கு இப்படியெல்லாம் செய்தாலும் நிஜத்தில் இவள் இப்படி இல்லையே. இதற்கு மேல் அவனை வாட்ட மனம் வராமல் அதுவே சரியென சொன்னாள்.

இன்னும் பெட்டியை குடைந்து கொண்டிருந்தவனிடம், “அதான் ஓகே சொல்லிட்டேனே இன்னும் என்ன செய்றீங்க?” எனக் கேட்டாள்.

“ஒரு வேலை செஞ்சா ஒழுங்கா செய்ய வேணாம்?” எனக் கேட்டவன் அவள் உடுத்த தேவையான மற்றதையும் எடுத்துக் கொடுக்க முகத்தை எங்கு போய் மறைப்பது எனத் தெரியாமல் கண்களை மூடிக் கொண்டாள்.

“எடுத்து கொடுத்தது போதுமா, போட்டும் விடணுமா?” என அவன் தீவிர தொனியில் கேட்டான். கண்களை மூடிய படியே அவனுக்கு முதுகு காட்டி அமர்ந்து கொண்டாள்.

“என்னை கஷ்ட படுத்த நல்லா பெருசா யோசி, சில்லியா இருந்தா இப்படித்தான் கன்னம் சிவக்கும், அடி வயிறு சில்லுன்னு போகும், பாதத்தை தரையில வைக்க முடியாத அளவுக்கு பட படப்பாகும். யாருகிட்ட விளையாடுறோம்ன்னு தெரிஞ்சு செய். ஆளப் பாரு அறுந்த வாலு! ட்ரெஸ் போட்டுட்டு கூப்பிடு” என சொல்லி அலுவலக அறைக்கு சென்று விட்டான்.

முணு முணுப்பாக அவனை திட்டிக் கொண்டேதான் ஆடை மாற்றிக் கொண்டாள்.

லிஃப்ட் வழியாக நான்காவது தளத்தில் இருந்த மொட்டை மாடிக்கு அழைத்து சென்றான். செயற்கை விளக்குகளால் நல்ல வெளிச்சம் இருந்தது. அந்த பங்களாவின் மிகப்பெரிய மொட்டை மாடி, வெற்றுத் தளமாக இல்லாமல் பூங்காவனம் போல காட்சி தந்தது.

நடைப்பாதையின் இரண்டு பக்கங்களும் இளஞ்சிவப்பு வண்ண மலர்கள் அவளின் கவனத்தை கவர்ந்திழுத்தது.

“ரெய்ன் லில்லி” என பூக்களின் பெயரை சொன்னான்.

ஐந்தடிகளுக்கு பிறகு வேறு வகையான வண்ண மலர்கள். மாடியின் நடுவில் பெரிய நீச்சல் குளம் காணப் பட்டது.

“அண்ணிக்கு கார்டனிங்ல நல்ல இன்ட்ரெஸ்ட், கீழேயும் பெரிய தோட்டம் இருக்கு, அதை நாளைக்கு பகல்ல பாரு. இங்கேயும் அவங்க கை வண்ணத்தை விட்டு வைக்கல. பிரதீப்க்கு முடியாம போயும் கூட இதை பராமரிக்கிறத விடல அவங்க” என விவரம் சொல்லிக் கொண்டே நடந்தான்.

காதில் வாங்கிக் கொண்டாலும் பதில் பேசாமல் அவனை கவனிக்காதது போலவே அவனை விட்டு தள்ளியே நடந்து சென்றாள்.

“மெய்யப்பன் சித்தப்பா பொறந்ததிலிருந்தே அப்படித்தான். பெரியப்பாக்கு கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடியே பாட்டி தவறிட்டாங்க. தாத்தாதான் பொண்ணு பார்த்து பெரியப்பாக்கு ருக்மணி பெரியம்மாவை கட்டி வச்சார். எங்கப்பாவுக்கு கல்யாணம் பண்ணி வச்சது எல்லாம் பெரியம்மாதான். சித்தப்பாவை கூட அப்படி பார்த்துப்பாங்க” என குடும்பக் கதை சொன்னான்.

“சுரேந்தர் அண்ணாவும் பிரகல்யா அண்ணியும் லவ் பண்ணி வீட்ல உள்ளவங்க சம்மதத்தோடு மேரேஜ் பண்ணிக்கிட்டவங்க. நேத்ரன் அண்ணா பெங்களூருல இருக்கான், அவனும் லவ் மேரேஜ்தான்” என்றான்.

“நீங்க மட்டும் லவ் மேரேஜும் இல்லாம அரேஞ்டு மேரேஜும் இல்லாம நாடக கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க, அப்படித்தானே?” நக்கலாக கேட்டாள்.

தன்னை சண்டை போட தூண்டுகிறாள் என்பதை புரிந்து கொண்டவன், கொஞ்சமும் கோவம் கொள்ளாமல் , “நாடக கல்யாணம்னு எப்படி சொல்லுவ மித்ரா? வேணும்னா தெய்வீக கல்யாணம்னு சொல்லு” என்றான்.

“ஆமாமாம் நீங்களே சொல்லிக்க வேண்டியதுதான்!”

“இல்லயா? முருகன் வேஷம் போட்டுட்டு போயிதான் வள்ளியை கல்யாணம் பண்ணினார்”

“ஏது ஸார்வாள் லைஃப்லேயும் தெய்வானை போல யாரும் இருக்காங்களா?” எனக் கேட்டுக் கொண்டே அவள் முன்னோக்கி நடந்து கொண்டிருக்க திகைத்துப் போனவன் அப்படியே நின்று விட்டான்.

அவன் நடக்கும் அரவம் கேட்காமல் போகவும் அவளும் நின்று திரும்பிப் பார்த்தாள்.

அவனது பேயறைந்தது போலான முகத்தை கண்டவள் கண்களை சுருக்கி யோசித்தாள். ஏதோ விளங்குவது போலிருக்க அதை எதிர் கொள்ளும் வலிமை அற்றவளாக அதே சமயம் இப்போதே தெளிவு படுத்திக் கொள்ளும் எண்ணத்தோடு, “என்ன?” எனக் கேட்டாள்.

அவளுக்கு உண்மையாக இருப்பேன் என தெய்வ சாட்சியாக சொல்லியிருக்கிறானே, மறுப்பாக தலையாட்டியவன் வராத இருமலை வரவழைத்துக் கொண்டான்.

தன் கண்களை சந்திக்க மறுப்பவன் மீது சந்தேகம் வலுப் பட, கொலை வெறியோடு அவனை நெருங்கி வந்தாள் மித்ரா.

தானாக அவனது கால்கள் பின்னோக்கி சென்றன. வேகமாக அவனை நெருங்கியவள் அவனது தோள்களை இறுக பற்றி, “வேற எவளும் இருக்கான்னு சொல்லி மொத்தமா கொன்னுடாத என்னை” என்றாள்.

“மித்ரா… அப்படியில்லை, இது வேறம்மா” என்றவனுக்கு இப்போது இவள் இருக்கும் நிலையில் எப்படி விளக்கி சொல்வது எனத் தெரியவில்லை.

“வேறன்னா என்ன… என்ன சொல்ல போற? ‘இருக்கா’ இல்லை ‘இருந்தா’ அப்படின்னா?” கோவத்தில் சிவந்த கண்களோடு கேட்டாள்.

கண்டிப்பாக தான் சொல்லப் போகும் விஷயம் இவளை காயப்படுத்தும் என்பதை அறிந்து கொண்டவன் சங்கடமாக பார்த்தான்.

கண்களில் இருந்து வழிந்த கண்ணீரோடு அவனை வேகமாக பிடித்து தள்ளி விட்டாள்.

தரையில் விழுந்தவன், அதை பெரிது செய்யாமல், “பொறுமை மித்ரா” என்றான்.

முகத்தை மூடிக் கொண்டு தேம்பியவளால் இன்னும் அவனது வாய் வார்த்தையாக கேட்டிராத அந்த செய்தியை தாள முடியவில்லை. இவனை போய் காதலித்தோமே என அவள் மீதுதான் அவளுக்கு கோவம் வந்தது.

தைரியசாலிகளுக்கும் அவர்களது கட்டுப்பாட்டில் இல்லாமல் போகும் தருணங்கள் அமையும் அல்லவா? அப்படியான நேரம்தான் மித்ராவுக்கும்.

ஏற்கனவே பெற்றோர் இங்கு அனுப்பி வைத்து விட்டதில் ஆதரவற்றது போல உணர்ந்து கொண்டிருந்தவளுக்கு சர்வாவின் வாழ்வில் இன்னொரு பெண் எனும் செய்தி மொத்தமாக அவளை உடைத்து விட்டது.

தன்னிலை இழந்தவள் நீச்சல் குளத்தில் குதித்து விட்டாள். திடுக்கிட்ட சர்வா அதிர்ச்சியோடு எழுந்தான். நீருக்குள் மூழ்கியிருந்தவள் மேல் எழும்பவே இல்லை எனவும் அவனது இதயம் எகிறி தொண்டைக்கு வந்து விட்டது.

வேகமாக அவனும் நீரில் குதித்தான்.