இருள் வனத்தில் விண்மீன் விதை -10

அத்தியாயம் -10(1)

மகள் மற்றும் மருமகனின் கைப்பேசிகளுக்கு விடாமல் அழைத்துக் கொண்டே இருந்தார் ராஜன். மித்ராவின் பக்கத்தில் தலையணையை அணைவாக வைத்து அவளின் கையை அதை சுற்றிப் போட வைத்தான். விழிக்காமல் உறக்கத்திலேயே இருக்கவும் ராஜனிடமிருந்து அடுத்த அழைப்பு.

‘ஹையோ மாமா, எழுப்பி விட்ராதீங்க உங்க பொண்ண, கொஞ்ச நேரம் எனக்கு ரெஸ்ட் வேணும் இல்லைனா இவளை எப்படி சமாளிக்க?’ மனதில் புலம்பிக் கொண்டே பூனை நடை நடந்தான். ஒரு வழியாக அவரது அழைப்பை ஏற்றுக் கொண்டான் சர்வா.

“ஹலோ ஹலோ…” என ராஜன் பதற்றத்தோடு ஹலோ சொல்லிக் கொண்டிருக்க பால்கனி சென்ற பின்தான், “சொல்லுங்க மாமா” என்றான்.

“மித்ரா எங்க, நல்லாருக்காதானே? முதல்ல அவளை பேச சொல்லுங்க என்கிட்ட” என்றார் ராஜன்.

“ரொம்ப டிஸ்டர்ப்டா இருந்தா மாமா, இப்போ எழுப்பி விட்டா தெளிவில்லாம அப்படியேதான் இருப்பா. ரெண்டு மணி நேரம் கழிச்சு பேச வைக்கிறேன்” என சமாதானமாக சொன்னான் சர்வா.

அவர் கேட்பதாக இல்லை எனவும் நடந்தவற்றை விளக்கி சொல்ல வேண்டியதாகி விட்டது. பொய்யாக ஏதாவது சமாளித்திருந்தால் நம்பாமல் உடனே சென்னைக்கு கிளம்பியிருப்பார், உண்மையை சொல்லவும் மகளின் மனநிலை புரிந்தவராக அமைதியடைந்தார்.

“உங்களுக்கு ஒண்ணும் பெரிய காயம் இல்லையே?” என அக்கறையாக கேட்டார்.

“இல்லை மாமா, நீங்க பதறாம இருங்க, மித்ரா இங்க நல்லாதான் இருப்பா” என சொல்லி பேச்சை முடித்துக் கொண்டான்.

பின் தலைவலி மாத்திரை வரவழைத்து போட்டுக் கொண்டவன் கைப்பேசிகளை அமைதி பயன்பாட்டில் வைத்து மீண்டும் மித்ராவின் அருகில் படுத்துக் கொண்டான்.

மதியத்திற்கு மேல் சர்வா மட்டும் எழுந்து கொண்டான். அடித்து போட்டது போல உறங்கிக் கொண்டிருந்தாள் மித்ரா.

இவன் மட்டும் உணவை முடித்துக் கொண்டான். இருட்ட ஆரம்பித்த பின்னர்தான் விழித்தாள். அவளுக்கு தொந்தரவாக இருக்க வேண்டாம் என நினைத்து மின் விளக்கு போடாமல் விட்டிருந்தான் சர்வா.

மங்கிய ஒளியில் எதுவுமே புரியாமல் “அம்மா…” என தன் அம்மாவை அழைத்தாள்.

பக்கத்திலிருந்த அலுவல் அறையில் இருந்தவன் இவளது சத்தம் கேட்டு வந்தான்.

“ஹையோ எனக்கு என்னாச்சு நான் எங்க இருக்கேன்? அம்மா…” என கத்தினாள்.

மின் விளக்கை போட்டு விட்டவன், “சத்தம் போடாத, என் கூடத்தான் இருக்க. இப்போ எப்படி இருக்க, பெட்டரா?” எனக் கேட்டான்.

அவன் நெற்றியிலிருந்த பிளாஸ்டர் நடந்தவற்றை அவளுக்கு நினைவு படுத்தியது. நல்ல உறக்கத்தால் சற்றே தெளிந்திருந்தவள், “டைம் என்ன இப்போ?” எனக் கேட்டாள்.

ஆறரை என சொன்னவன் அவளது கைப்பேசியை அவளிடம் கொடுத்து, “முதல்ல உன் அப்பாக்கு பேசு, உனக்குத்தான் கோவத்தை காட்ட நான் இருக்கேனே, அவங்கள நிம்மதியா இருக்க விடு” என்றான்.

“சாத்தான் வேதம் ஓதுதா?”

“குட்டிசாத்தான்டி நீ!” செல்லமாக சொன்னவன், “நீ பேசலங்கவும் உன்னை நான்தான் ஏதோ பண்ணிட்டேன்னு எம்மேல டவுட் படுறாங்க போல. நீதான் என்னை வச்சு செய்றேன்னு அவங்ககிட்ட விவரம் சொல்லிடு” என அதையும் சிரித்துக்கொண்டே சொன்னான்.

அவனை முறைத்துக் கொண்டே அப்பாவுக்கு அழைத்து பேசினாள். நலமில்லாத ஒருவர் நடந்து கொண்ட விதத்துக்காக பயப்பட கூடாது, மாப்பிள்ளை நன்றாக பார்த்துக் கொள்வார், நீ சென்று விட்டதால் இங்கே உறவினர்கள் கோவத்தில் இருக்கிறார்கள், மிருதுளாவின் மாமனாருக்கு மிகுந்த வருத்தம், ஒரு வாரத்தில் உன்னை பார்க்க வருகிறேன் என மகளை சமாதானம் செய்தார்.

ஜெயந்தி பேச விரும்புவதாக சொல்ல, “அவங்கதானே விடாப் பிடியா இங்க அனுப்பி வச்சது, நான் பேச மாட்டேன்” என சொல்லி விட்டாள்.

கைப்பேசியை வாங்கிக் கொண்ட சர்வா “கொஞ்ச நாள்ல அவளே பேசுவா அத்தை” என ஜெயந்தியிடம் சொன்னான்.

“அவளை எனக்கு தெரியாதா தம்பி, நீங்களும் கொஞ்ச நாளைக்கு அவகிட்ட பொறுமையா இருக்கணும். அவளே யோசிச்சு பார்த்து எல்லாத்தையும் புரிஞ்சுப்பா” என்றார் ஜெயந்தி.

வார்த்தைக்கு வார்த்தை தான் பார்த்துக் கொள்கிறேன் என அவளின் பெற்றோரிடம் கூறிக் கொண்டிருந்தவனை காண காண அவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது.

 “பசிக்குது எனக்கு, இதான் நீங்க என்னை பார்த்துக்கிற அழகா?” என சீறி விழுந்தாள்.

பின்னர் பேசுவதாக சொல்லி அழைப்பை துண்டித்தவன் என்ன வேண்டும் எனக் கேட்டான்.

வேண்டுமென்றே டிஃபன் வகை கேளாமல், “சூடா சாதம், கம கமன்னு காரக் குழம்பு, புடலங்காய் கூட்டு, வெண்டைக்காய் வறுவல்… ஹஹான்… கூட அப்பளம் வேணும்” என்றாள்.

அவளை வினோதமாக பார்த்துக் கொண்டே,“கொண்டு வர சொல்றேன்” என்றவன் இண்டர்காமில் சமையல் ஆளுக்கு சொல்லிக் கொண்டிருக்க, “சீக்கிரம் வேணும்” என கட்டளை போல சொல்லிக் கொண்டே எழுந்தாள்.

அரை மணி நேரம் ஆகும் என தலைமை சமையல்காரர் சொல்ல, “அவ்ளோ நேரம்லாம் சமாளிக்க முடியாது, எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் ரெடி பண்ணுங்க” என பணித்தான்.

அவள் முறைத்துக் கொண்டிருக்க, “உன்னால பசியை சமாளிக்க முடியாதுன்னு சொன்னேன் மித்ரா” என சமாளித்தான்.

“வாய தொறந்தாலே பொய், பொய் புரட்டோட மொத்த குடவுன்!” என திட்டிக் கொண்டே குளிக்க சென்றாள்.

கண்ணாடியிலான ஸ்லைடு கதவுதான் குளியலறைக்கு இருந்தது. பகலில் இதை பற்றி பெரிதாக யோசித்திருக்கவில்லை அவள். இப்போது உள்ளே தெரிகிறதா என உற்றுப் பார்த்து சோதித்தாள். தெளிவில்லாமல் மிக மிக மங்கலாக தெரிவது போலிருக்கவும் “முதல்ல இங்க ஒரு ஸ்க்ரீன் போடுங்க” என்றாள்.

“அவ்ளோ பயப்பட வேணாம், யாரும் வரணும்னா வெளில இருக்க ஹால் தாண்டிதான் இங்க வரணும், அங்கேயே லாக் பண்ணித்தான் வச்சிருக்கேன், ரூம் டோரும் லாக்ட், அதனால பாத்ரூம் ஃப்ரீயா யூஸ் பண்ணு” என்றான்.

“ரூம் லாக் ஆனா போதுமா, உள்ளதான் இம்மாம் பெரிய உருவத்துல நீங்க இருக்கீங்களே?” என்றாள்.

“நான் உன் ஹஸ்பண்ட் மித்ரா”

“அப்படியா?” இகழ்ச்சியாக கேட்டாள்.

“அந்த டாபிக் அப்புறமா டிஸ்கஸ் பண்ணலாம். என்னை பத்தி என்ன நினைச்சிட்ட நீ, பாத்ரூம் எட்டி பார்க்கிற நாஸ்டி ஃபெலோன்னா?”

“சேச்ச, சும்மா பொண்ணை ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கிற உத்தமர்னு மட்டும்தான் நினைச்சேன்” படு நக்கலாக சொன்னாள்.

அவளது வார்த்தைகள் சுருக் என அவனது உள்ளத்தை குத்ததான் செய்தது. நிதானம் தவறாமல், “பிளைன் கிளாஸ் இல்லை இது, ஃப்ராஸ்டெட் கிளாஸ், உள்ள நடக்கிற எதுவும் வெளில இருக்கவங்களுக்கு தெரியாது. தைரியமா போ” என்றான்.

உள்ளே சென்றாலும் அவனது வார்த்தைகளை நம்பத் தயாராக இல்லாதவள் கதவுக்கு நேராக இல்லாமல் தள்ளி இருந்த பாத் டப்பில் குளிக்கலாம் என முடிவு செய்தாள்.

 டப்பில் வெந்நீரை நிரப்பி குளிக்க ஆரம்பித்து விட்டாள். நேரம் போனதே தெரியவில்லை. பயந்து போனவன் கதவை தட்டி அவளது பெயரை சொல்லி அழைத்தான்.

“நிம்மதியா குளிக்க கூட விட மாட்டீங்களா?” என சத்தம் போட்டாள்.

“நீ இவ்ளோ நேரம் நீராடுவேன்னு தெரிஞ்சு வச்சுக்காம போயிட்டேன், உன் சௌகர்யம் போல வா” என்றான்.

“சௌகர்யமாம் சௌகர்யம்! என்னென்ன பேசி நடிச்சார்? யாருமே இல்லாதவருக்கு வெறும் சுவத்தை வெறிச்சு பார்க்க முடியலையாம், தனிமை கொன்னிச்சாம்… பிளடி லையர், சீட்டர்!” திட்டியவள் ஒரு கையால் தண்ணீரில் அடித்தாள். தண்ணீர் அவளின் முகத்திலேயே பட்டுத் தெறித்தது.

சற்று நேரம் அதையே விளையாட்டாக்கி நேரத்தை போக்கினாள். அந்த சத்தம் அவனுக்கும் கேட்க, மீண்டும் என்னவோ என எழுந்து குளியலறை கதவின் அருகில் போய் நின்றான்.

ஏதும் கேட்டால் மீண்டும் திட்டுவாளோ என தயக்கமாக இருந்தாலும் சத்தம் தொடர்ந்து கொண்டே இருந்ததால், லேசாக கதவை தட்டி “மித்ரா ஆர் யூ ஓகே?” எனக் கேட்டான்.

“என்னங்க உங்க பிரச்சனை?” எரிந்து விழுந்த அவளது குரலில் தன்னையே நொந்து கொண்டவன், “சத்தம் கேட்டுச்சு அதான் உனக்கு என்னவோன்னு நினைச்சிட்டேன், என்னதான் செய்ற உள்ள?” எனக் கேட்டான்.

“ஒரு பொண்ணு குளிக்கிறத ஒட்டு கேட்பீங்களா? வெக்கமா இல்லை”

“குளிக்கிறத ஒட்டு கேட்கிறேனா! தேவைதான் எனக்கு. நான் வெக்க படற அளவுக்கு மட்டும் ஏதாவது செய், வில்லங்கமா ஏதும் செஞ்சிடாத”

 “டிஸ்டர்ப் பண்ணாம தள்ளி போங்க” என்றவள் வேண்டுமென்றே இரண்டு கைகளை கொண்டும் வேகமாக நீரில் அடித்து சத்தம் எழுப்பினாள்.

ஏற்கனவே வெறுப்பிலும் குழப்பத்திலும் இருப்பவள் ஏதேனும் விபரீதமாக செய்கிறாளோ என பயந்து போய் விட்டான்.

அந்த நவீன குளியலறையின் ஸ்லைடு கதவை வெளியிலிருந்தும் திறக்கலாம், சத்தம் நிற்காமல் போகவும் கொஞ்சமும் யோசியாமல் கதவை திறந்து விட்டான்.

தண்ணீரில் அடித்து விளையாடிக் கொண்டிருந்தவள் அவனை கண்டதும் ஸ்தம்பித்துப் போனாள். இருவருக்கும் இடையில் சில அடிகள் இடைவெளி இருந்தது. அவளது முகத்தை தவிர உடல் முழுதும் நீருக்குள் மூழ்கி இருந்தது. டப்பும் அவளை அவனுக்கு காட்டிக் கொடுக்காமல் மறைத்தே வைத்திருந்தது.

சிரிப்பை வாய்க்குள் ஒளிக்க முயன்று முடியாமல் நின்றான் சர்வா.

வேக மூச்சுகளோடு, “வெளில போங்க” என சீறிக் கொண்டே தண்ணீருக்குள் இன்னும் மூழ்கினாள்.

“ஹேய் ஹேய் மூச்சு முட்ட போகுது, அப்படிலாம் செய்யாத. பிராமிஸ்… என் கண்ணுக்கு உன் மூஞ்சு தவிர வேற எதுவும் தெரியலை. நான் கேட்டப்பவே விஷயத்தை சொல்லியிருந்தா நான் ஏன் உள்ள வரப் போறேன்?” என்றான்.

“வக்கணையா பேசுறத பாரு, இங்கேருந்து போங்களேன்” அவள் அதட்டல் போட, தன்னுடைய செய்கையை நினைத்து நெற்றியில் தட்டி சிரித்துக்கொண்டே வெளியேறியவன் கதவையும் மூடினான்.

கோவத்திலும் வெட்கத்திலும் அவளின் முகம் சிவந்து விட்டது. உடனே அவனை எதிர் கொள்ளவும் தயக்கமாக இருக்க நீரிலிருந்து எழுவதாக இல்லை அவள்.