அத்தியாயம் -6(2)

‘செண்பகம் கணக்கரோடு உறவு வைத்திருந்தது உண்மைதான், குட்டு வெளிப்பட்டு விட்டதால் இங்கிருந்து ஓடிப் போய் விட்டாள்’ என சமஸ்தானத்தில் பேசிக் கொள்வதாக அவளது ஆட்கள் பேசிக் கொண்டதை காதில் வாங்கியவள் விரக்தியாக சிரித்தாள். திடீரென வெடித்துச் சிதறி அழுதாள்.

மாளிகையிலிருந்து தான் கொண்டு வந்திருந்த சாமுண்டீஸ்வரி தேவியின் விக்கிரஹத்தை பார்த்து பொங்கி பொங்கி அழுதாள். யாராலும் சமாதானம் செய்யவே முடியவில்லை.

“நீதானே எல்லாத்துக்கும் சாட்சி? ஏன் என்னை இந்த கதிக்கு ஆளாக்கின? எதுக்காக இதெல்லாம்… கேவலம் பதவி அந்தஸ்து சொத்து சுகத்துக்காகவா? அதுக்காக தாய் ஸ்தானத்தில இருக்க என்னை கேவல படுத்திட்டானே? அவனுக்கு புத்தி சொல்ல ஒரு பெரிய மனுஷன் கூட தயாரா இல்லாம உடந்தையா போனாங்களே? என் கையால சாப்பிட்ட அவனும் அவன் அண்ணன் தம்பிகளும் என் கண்ணீரை வேடிக்கை பார்த்து சிரிச்சாங்களே! அவங்களே அந்த சமஸ்தானத்தை ஆளட்டும், அவங்க சொத்து பெருகட்டும்… அள்ள அள்ள குறையாம பெருகட்டும். எந்த சொத்துக்காக என்னை இந்த கதி ஆக்கினாங்களோ அந்த சொத்துக்கு குறைவே இல்லாம போகட்டும்” ஏதோ சக்தி அவளுக்குள் புகுந்தது போல சத்தமாக அரற்றினாள்.

  அந்த தேவி விக்கிரஹத்தை வெறித்துப் பார்த்தவள், “நான் உனக்கு மனசார பூஜை செஞ்சதை நீ ஏத்துகிட்டிருந்தா… நீ கண்ணுள்ள தெய்வமா இருந்தா… அவங்க நிம்மதிய பிடுங்கித் தா என்கிட்ட. நான் பட்ட மன வேதனையை அவங்களையும் அனுபவிக்க வை… அவங்க வம்சத்துக்கே நிம்மதிங்கிறது கிடைக்காமலே போகட்டும்!” என ஆவேச வெறி கொண்டவளாக, தொண்டை கிழிய கத்தினாள்.

அனைவரையும் பொதுவாக பார்த்தவள், “இனி எனக்கு நடந்த கொடுமை நம்ம குலத்துல எந்தப் பொண்ணுக்கும் நடக்க கூடாது!” என கட்டளை போல சொன்னாள்.

“யாருக்கும் அநீதி நடக்க நான் விட மாட்டேன்!” மக்களின் ராணியாக வாக்கு தந்தாள்.

“என் சாமுண்டீஸ்வரி துணை இருப்பா” என செண்பகம் சொன்ன போது அவளது கண்ணீர் தேவியின் விக்கிரஹத்தை அர்ச்சித்தது.

பிறகு ஹோ என சிரித்தாள், அந்த சிரிப்பு சத்தம் அலாதியாக அந்தக் காட்டில் தனித்துக் கேட்டது. சாமுண்டீஸ்வரி தேவியின் விக்கிரஹத்தை நெஞ்சோடு அணைத்துப் பிடித்தவாறு நிலத்தில் சரிந்து விழுந்தாள்.

வயிற்றுக் குழந்தையோடு நடந்த அநியாயத்தை சகிக்க முடியாமல் உயிரை நீத்து விட்ட செண்பகவள்ளியின் உடலைப் பார்த்து சிலர் ஸ்தம்பித்து போயினர், சிலர் நெஞ்சில் அடித்துக் கொண்டு கூக்குரலிட்டு அழுதனர், சிலர் ஒப்பாரி வைத்தனர்.

யாராலும் அவளை மானுட பிரேதமாக பார்க்க முடியவில்லை, தங்கள் குலத்தின் காவல் தெய்வம் என்றுதான் எண்ணினார்கள். கையெடுத்துக் கும்பிட்டார்கள்.

பல தலைமுறைகளுக்கு முந்தைய கதை என்றாலும் கேட்டுக் கொண்டிருந்த மித்ராவின் உள்ளம் நடுங்கியது. மன பாரத்தை தாங்க முடியாமல் அவளது கண்கள் கண்ணீரை கொட்டியது.

வயிற்றில் குழந்தையோடு அவர் இறந்து கிடப்பதை போல கற்பனை செய்து பார்த்தவளுக்கு உடல் தூக்கி வாரிப் போட்டது. இனி கற்பனையாக கூட அந்தக் காட்சியை உருவகம் செய்து பார்க்க கூடாது என எண்ணிக் கொண்டாள்.

“இந்தக் கதையை கேட்டு கேட்டுத்தான் எங்க அப்பாம்மா வளர்ந்தாங்க. அதுக்கப்புறம் நாகரீகம் வளர வளர இந்தக் கதையை யாரும் பெருசா சொல்லிக்கிறது இல்லை. சமூக அந்தஸ்துல கீழ் நிலையில இருந்து ஒரு சமஸ்தானத்துக்கு ராணி ஆனதால எல்லாருக்கும் செண்பகவள்ளி அம்மா மேல அவ்ளோ மரியாதை இருந்ததாம். அவங்க இறப்பு அப்ப இருந்த எல்லாரையும் ஒரு உலுக்கு உலுக்கியிருக்கணும்” என்றார் வைஜெயந்தி.

“அந்த தேனப்பன் அவன் வாழ் நாளோட கடைசி இருபது வருஷத்தை படுக்கையில கழிச்சதா பேசிக்குவாங்க. நோயும் தீராம சாவும் வராம அவன் கண்ணு முன்னாலேயே அவனுக்கு அடுத்தடுத்த தலைமுறை இறந்து போறத பார்த்து மனம் நொந்து போயிதான் இறந்ததா சொல்லிக்குவாங்க. அப்புறம் அவங்கள பத்தி பெருசா கண்டுக்க முடியாத அளவுக்கு இருந்தது நம்ம ஆளுங்களோட வயித்துப்பாடு” என்றார் ராஜன்.

“அந்தம்மா மறைவுக்கு அப்புறம் அவங்கள போல எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாதுன்னு பெண் குழந்தை பொறந்தா பஞ்சலோகத்துல சின்னதா தேவி விக்கிரஹம் செஞ்சு பூஜை செய்வாங்க, கல்யாணம்னு முடிவானதும் படையல் போட்டு முதல் பூஜையே செண்பகவள்ளி அம்மவுக்குதான் செய்யணும். கல்யாணம் முடிஞ்சி அந்த பொண்ணு புகுந்த வீடு போறப்ப அது கூடவே அந்த விக்கிரஹத்தையும் கொடுத்தனுப்புவாங்க. இதையெல்லாம் இப்ப வரை கடை பிடிச்சிட்டு வர்றோம் மா” என்றார் வைஜெயந்தி.

திருமணம் முடிவானதிலிருந்து மித்ராவும் தேவி விக்கிரஹத்தை பூஜித்து வருகிறாளே. மிருதுளா அவளது புகுந்த வீடு சென்ற போது அவளுடனே அவள் பூஜித்த விக்கிரஹமும் சென்றது.

“வறுமை தொத்து நோய் அப்படின்னு சில காரணங்களால அங்கேயே இருக்க முடியாம தேயிலை எஸ்டேட்ஸ்ல வேலை பார்க்க இங்க வந்திட்டாங்க நம்ம முன்னோருங்க. இங்க பொழைப்பு நல்லா ஓட கொஞ்சம் கொஞ்சமா எல்லாருமே இங்கேயே வந்திட்டாங்க. செண்பகவள்ளி அம்மா இறந்தப்போ அவங்க கைல இருந்த சாமுண்டீஸ்வரி விக்கிரஹத்தையும் எடுத்திட்டு வந்திட்டாங்க. நம்ம வழிபாடு செய்ற சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் நம்ம முன்னோர்கள் கட்டினது, செண்பகம் அம்மா வச்சிருந்த விக்கிரஹமும் உற்சவ மூர்த்தியா கோயில்ல இருக்கு” என்றார் ராஜன்.

“செண்பகம் அம்மா இறந்ததுக்கு அப்புறம் நம்ம குல பொண்ணுங்களை வெளில தர்றது இல்லைங்கிறத ரொம்ப தீவிரமா கடை பிடிச்சாங்க. இப்ப வரை அப்படித்தான், பொண்ணுங்கள கண் பார்வையிலேயே வச்சிக்கிறோம்” என்றார் ஜெயந்தி.

இந்தக் கதைக்கும் சர்வாவுக்கும் என்ன சம்பந்தம் எனக் கேட்டாள் மித்ரா. அவளுடைய கணிப்பு படி அந்த தேனப்பனின் வம்சாவழியாக அவன் இருக்க கூடாது என்ற நப்பாசையோடு அவளது அப்பாவை பார்த்தாள்.

“தேனப்பன் வம்சம் பெரியாளா ஆகிட்டாங்க, அவங்க வாசமே இல்லாம நாம தள்ளி இருந்தோம். ஆனா இப்போ…” என்ற ராஜன் பெருமூச்சு விட்டார்.

மித்ரா கலக்கம் கூடிப் போய் தன் தந்தையை பார்த்திருந்தாள். “அந்தக் குடும்பத்து பையனையே நீ கல்யாணம் செய்துக்குற நிலைமை வரும்னு கொஞ்சம் கூட நான் யோசிச்சதில்லைமா” என்ற ராஜன் மகளின் கணிப்பு சரிதான் என்பதை உறுதி செய்தார்.

ஏன் இந்த திருமணம் என்பதை வார்த்தையால் கேட்க முடியாமல் பார்வையால் அப்பாவிடம் கேட்டாள்.

“ஏன் அந்தப் பையன் பொய் சொல்லி உன்னோட சேர்த்து எங்களையும் ஏமாத்தி உன்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டாருன்னு ஒண்ணும் புரியலை” நெற்றிப் பொட்டை அழுத்தி விட்டுக் கொண்டார் ராஜன்.

“அலட்டாம படுங்க. தூங்கி எழுந்து யோசிச்சா அடுத்து என்ன செய்யலாம்னு ஒரு தெளிவு கிடைக்கும்” என்றார் ஜெயந்தி.

“நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன் ப்பா, ஆனா இன்னொரு கல்யாணம் பத்தியெல்லாம் தயவுசெஞ்சு பேசாதீங்க ப்பா. கல்யாணம் மட்டுமே பொண்ணுங்களுக்கு பாதுகாப்பு இல்லையேப்பா, நம்ம சாக்லேட் ஃபேக்டரிய பார்த்துகிட்டு உங்க கூடவே இருந்திடுறேன் ப்பா” கெஞ்சலாக சொன்னாள் மித்ரா.

ராஜன் மகளை பாவமாக பார்க்க, ஜெயந்திதான் அவரை உறங்க சொல்லி விட்டு மகளையும் அவளது அறைக்கு அனுப்பி வைத்தார்.

உறக்கமில்லாமல் வழக்கம் போல நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருந்தான் சர்வா. அறிவுடைநம்பிக்கும் உறக்கம் வரவில்லை போலும், அவனை தேடிக் கொண்டு வந்தார்.

“பிரதீப் எப்படி இருக்கான் பெரியப்பா?” என விசாரித்தான்.

“ம்ம்… இருக்கான், உன்னை காணோம்னு கேட்டுட்டே இருக்கான்” தன் பேரனை பற்றி சொன்னார் நம்பி.

இருவரும் பேசிக் கொள்ளாமல் கால் மணி நேரம் அமைதியாக அங்கேயே நின்றிருந்தனர்.

“தூங்குடா, நாளைக்கு அவங்க வீட்ல போய் பேசலாம். அவங்க சொல்றத வச்சு அடுத்து என்ன செய்யலாம்னு பார்க்கலாம்” என்றார் நம்பி.

“கண்டிப்பா மித்ராவை நம்ம கூட அழைச்சிட்டு போகணும் பெரியப்பா” அவரது கையை பற்றிக் கொண்டு கெஞ்சலாக சொன்னான் சர்வா.

“பெண் பாவம் பொல்லாததுன்னு நம்புறவன்தானே நீ?”

“நான் செஞ்சது தப்புன்னா அவ கால்ல விழக் கூட தயாரா இருக்கேன் பெரியப்பா, நம்ம நிலைமைய அவகிட்ட சொன்னா என்னை மன்னிச்சுடுவா” என்றான்.

“பார்க்கலாம், இப்ப தூங்குடா” என்றவர் சென்று விட்டார்.

அப்போதும் படுக்கைக்கு செல்லவில்லை சர்வா.

பணத்தை கொண்டு எதையும் வாங்கலாம் என யார் சொன்னது? விலையே இல்லாதவையும் இருக்கின்றன. சபிக்கப் பட்டது அவனுடைய வம்சம், விமோசனம் கிடைக்க மித்ராவை தேடி வந்திருக்கிறான். அவள் மனம் வைப்பாளா, அவள் தயவு காட்டினாலும் சாபம் நீங்குமா என்றெல்லாம் அவனுக்கு தெரியவில்லை.

எல்லா வகையிலும் முயன்ற பின் இதுதான் வழி என அவனது பெரிய தாத்தா சதானந்தம் அவனுக்கு வழிகாட்ட அவனும் சரியென இங்கு வந்து விட்டான்.

இருளும் வெளிச்சமும் கலந்த பொழுது. மங்கலாக ஏதோ ஓர் உருவம் தெரிந்தது. கிட்ட நெருங்க அது பெண் என்பது புலப்பட்டது. தலை விரி கோலமாக ஒரு கையில் குழந்தையோடு இன்னொரு கையால் நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதது. பின் சத்தமிட்டு சிரித்தது. அந்தப் பெண்ணின் பார்வையை நேராக காண முடியாமல் பயந்து போன மித்ரா “அம்மா…” என அலறினாள்.

“என்னடி என்னாச்சு?” அவளுடன் படுத்திருந்த மிருதுளா கேட்கவும்தான் கனவென புரிந்து கொண்டாள் மித்ரா.

சத்தம் கேட்டு ஜெயந்தியும் மகளின் அறைக்கு வந்தார். ஏதோ கனவு என மித்ரா சொல்லவும் அவளை பூஜை அறைக்கு அழைத்து சென்று திருநீறு பூசி விட்டார்.

தான் பூஜிக்கும் தேவியின் விக்கிரஹத்தை தொட்டு தடவிப் பார்த்தாள். வேண்டுதல்கள் ஏதுமில்லாமல் கையெடுத்து கும்பிட்டுக் கொண்டவள் மீண்டும் படுக்கையறைக்கு சென்று விட்டாள்.

என்ன முயன்றும் செண்பகவள்ளியின் கதையிலிருந்து அவளால் மீள முடியவில்லை, அதற்கு பின் அவளுக்கு அது உறங்கா இரவுதான்.