அத்தியாயம் -5(2)
நாகாவுக்கும் திட்டுக்கள் விழுந்தன போலும்.
“ஹையோ ஸார், உங்கப்பாவோட பி ஏ கால் பண்ணி பேசினார் ஸார், அவரே சொல்லும் போது சர்வா ஸாருக்கு எப்படி உதவாம இருக்க முடியும்? உங்களுக்கு தெரியாதுன்னு எனக்கு தெரியாதுங்களே ஸார்” மன்றாடுதலாக சொன்னார் நாகா.
பேசி முடித்து விட்டு ஆயாசமாக சர்வாவை பார்த்த நாகா, “இப்படி என்னை கோர்த்து விட்டுட்டீங்களே ஸார், நம்பி ஸார் என்கிட்ட இப்படி கோவப்பட்டு பேசினதே இல்லை” என்றார்.
“உங்களுக்கு எந்த பிராப்லமும் வராது, என் கூடவே ஒட்டிக்கிட்டு திரியாம இங்கேருந்து போங்க, வேற வேலை இருந்தா போய் பாருங்க. பெரியப்பாவை நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்” என எரிந்து விழுந்தான் சர்வா.
நாகா அவனிடமிருந்து தள்ளி சென்றார், ஆனால் வீட்டை விட்டு போகவில்லை.
அறிவுடைநம்பி குன்னூர் வந்து சேர்ந்த போது மாலையாகி விட்டது.
நாகா ஓடி சென்று வரவேற்றார். கைப்பேசியில் கடிந்து கொண்டது போலில்லாமல் சாதாரணமாகவே பேசினார் நம்பி. அதில் நிம்மதி அடைந்தார் நாகா.
தன் தம்பி மகனை கண்டதும் நம்பியின் முகம் இறுக்கமடைந்தது. அவனும் விழிகளை தாழ்த்திக் கொண்டான்.
“படிச்சவன்தானேடா நீ, மூளை குழம்பி போன உன் மூத்த பாட்டனார் ஏதோ சொன்னாருன்னு கிளம்பி வந்திட்டியா இங்க? எம்மேலதான் தப்பு, நீ சொன்ன பொய்ய நம்பினவன் நான்தானே, எங்க இருக்க என்ன பண்றன்னு கண்காணிச்சிருக்கணும். இன்னும் சின்ன பையன் இல்லையே குடும்ப தொழிலை நல்லா நடத்துற திறமைசாலி ஆச்சே, எல்லா நல்லது கெட்டதும் உனக்கு தெரியும்னு நம்பினேன் பாரு நான்தான் முட்டாள்!” சீற்றமாக பேசினார் நம்பி.
நாகா மற்றும் பெரியப்பாவின் உதவியாளர்கள் சூழ்ந்து நிற்க அவர்களின் முன்னிலையில் அவர் அப்படி பேசியதை அவனால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. அதே சமயம் தன் மரியாதைக்குரிய பெரியப்பாவை அவனால் கடியவும் முடியவில்லை.
சிவந்து போன முகத்தோடு கண்களில் கோவத்தை தாங்கி கைகளை கட்டிக் கொண்டு நின்றான் சர்வா. நம்பிக்கே ஒரு மாதிரியாக போய் விட்டது. அவனது மனவோட்டம் புரிந்தவர் போல அவனை தனியாக அழைத்து சென்றார்.
பெருமூச்சு விட்டவர், “நீ இப்படி செஞ்சிருக்கிறத என்னால நம்பவே முடியலைடா. என்னடா இதெல்லாம்?” ஆற்றாமையாக கேட்டார்.
“ரொம்ப யோசிக்காதீங்க அடுத்து என்ன செய்யலாம்னு சொன்னீங்கன்னா அது படி செய்யலாம். இல்லை தலையிட்டுக்க மாட்டேன்னு நீங்க சொன்னா இட்ஸ் ஓகே, நானே பார்த்துக்கிறேன்” என்றவனை முறைத்தார்.
அவன் முறுக்கிக் கொண்டு நின்றான். “நீயே பார்த்துப்பேன்னா நான் ஏன் இவ்ளோ தூரம் ஓடி வர்றேன், எப்போலேருந்து இப்படி பேச கத்துக்கிட்ட?” என ஆதங்கமாக கேட்டார்.
“ஸாரி பெரியப்பா” என உடனே இறங்கி வந்தான்.
“என்ன நிலைமை இப்போ?” என விசாரித்தார்.
அவன் விவரம் சொன்னான்.
“என்னதான் நீ சப்பை கட்டு கட்டினாலும் இது முட்டாள்தனமான செயல்தான் சர்வா. பொண்ணை பெத்தவங்கள நினைச்சு பாரு, அவங்க சொல்றதுக்கு கட்டுப்பட்டுத்தான் ஆகணும் நாம”
“நான் கட்டின தாலிய கழட்டிட்டு நான் உயிரோட இருக்கும் போதே அவளுக்கு வேற கல்யாணம் பண்ண ரெடி ஆகுறாங்கன்னு சொல்றேன், அவங்களுக்கு போய் கட்டுப்படணும்னு சொல்றீங்க!” கோவமாக கேட்டான்.
“வேற என்ன செய்யணும்? அந்த பொண்ணை கிட்னாப் பண்ணிட்டு போவியா? வெளில தெரிஞ்சா என்னாகும்னு யோசிச்சு பாரு. மனசாட்சி இருக்காடா உனக்கு?” அவரும் கோவப்பட்டார்.
“நான் ஏன் கிட்னாப் பண்ணனும்? அவ… மித்ரா என்னை லவ் பண்றா பெரியப்பா. இன்னிக்கு விஷயம் தெரியலைன்னா நாளைக்கு காலைல நம்ம வீட்ல இருந்திருப்பா. நிலைமையை சொன்னா புரிஞ்சுக்கிற பொண்ணுதான் அவ” என நம்பிக்கையாக சொன்னான்.
“நீயும் உன் பெரிய பாட்டனும் சொல்றதை நான் உட்பட மத்த உன் வீட்டு ஆளுங்களே நம்பாதப்போ அந்த பொண்ணு நம்புமா? அப்படியே நம்பினாலும் உன் கூட வாழுமா? எப்டி எப்டி அந்த பொண்ணு உங்களை லவ் பண்ணுதா? ஹ்ம்ம்… ஸார் எப்டி? என்ன ஸார் உங்க நிலைப்பாடு?” நக்கலாக கேட்டார் நம்பி.
“கட்டின மனைவியை நல்ல படியா வச்சு பார்த்துக்கிற அளவுக்கு நானும் நல்லவன்தான் பெரியப்பா” ரோஷமாக சொன்னான்.
நம்பி சலிப்பாக பார்க்க, “யார் யாருக்கோ பயந்து என் மனைவியை விட்டுட்டு போற அளவுக்கு என்னை நீங்க கோழையா வளர்க்கல பெரியப்பா. அவ இல்லாம…” என்றவன் மறுப்பாக தலையாட்டினான்.
நம்பியிடமிருந்து எந்த நம்பிக்கையான சொல்லும் வராமல் போகவும், “என்னை நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டா. அந்த நம்பிக்கையை நான் காப்பாத்தாம போனா காலம் முழுக்க குற்ற உணர்ச்சியிலேயே துடிச்சி போவேன் பெரியப்பா” என்றான்.
சர்வாவுக்கு ஆபத்து ஏற்பட்டு விடாமல் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு விட்டு இவனை இங்கிருந்து அழைத்து செற்றிட வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் வந்திருந்தார் அறிவுடைநம்பி.
ஆனால் இப்போதைய அவனது பேச்சில் என்ன முடிவெடுக்க என தெரியாமல் குழம்பினார்.
அரசியலில் நேக்கு போக்காக நடப்பவர் என்றாலும் யாருக்கும் பாதகம் இல்லாமல் நன்மை பயப்பவைகளை மட்டுமே செய்யும் நல்லவர் அவர். பணம் ஈட்டவென அரசியல்வாதி ஆனவர் அல்ல.
தொழில் சாம்ராஜ்யத்தில் கொடி கட்டி பறந்தது அவர்களின் குடும்பம். தொழில் போட்டிகளை விட அரசியல் ரீதியாக வரும் இக்கட்டுக்களால் கோவம் கொண்டு நம்பியின் அப்பாதான் முதன் முதலில் அரசியலில் ஈடுபட்டவர். பதவியின் மூலம் கிடைக்கும் செல்வாக்கு அவருக்கு அவசியமானது.
அவருக்கு பின் நம்பியும் அதை தொடர்கிறார். இந்த நவீன யுகத்திலும் கூட இவர்களுடைய குடும்பத்தினரை பொது வெளியில் காட்டியதில்லை. பொது வாழ்க்கையையும் குடும்ப வாழ்க்கையையும் ஒன்றோடொன்று தொடர்பு படுத்திக் கொள்ளாமல் கையாள்கிறார்.
சோர்ந்து காணப் பட்ட தன் பெரியப்பாவை சிரமபரிகாரம் செய்து கொள்ளும் படி சொன்ன சர்வா அவர் உபயோகித்துக் கொள்ள ஒரு அறையை காண்பித்தான்.
“அந்த பொண்ணு அது வாயால உன் கூட வர்றேன்னு சொன்னா அப்புறம் எவன் தடுத்தாலும் அதுதான் என் வீட்டு மருமக. ஆனா அது உன்னை வேணாம்னு சொல்லிட்டா…” என நம்பி சொல்லிக் கொண்டிருக்கும் போதே விலுக் என நிமிர்ந்து பார்த்தான்.
“நல்ல ஆம்பளையா லட்சணமா அந்த பொண்ணை அது விருப்ப படற வழில விட்டுட்டு என் கூட கிளம்பி வர்ற. இல்லைனா உன் காலை கையை கட்டியாவது இழுத்திட்டு போவேன்டா ராஸ்கல்!” முடிவாக சொல்லி விட்டே அறைக்குள் சென்றார்.
சர்வாவுக்குள் திகில் பரவியிருந்தது. மித்ரா என்ன செய்து கொண்டிருப்பாள் இப்போது என நினைக்கையில் கூடுதல் இணைப்பாக வேதனையும் அவனை போட்டு அழுத்த தளர்வாக அவனது அறைக்கு சென்றான்.
சௌந்திரராஜன் அறைக்கு மாற்றப் பட்டிருந்தார். வீட்டிலிருந்து மாற்று ஆடை எடுத்து வர செய்து மித்ராவை ஆடை மாற்றிக் கொள்ள வைத்திருந்தாள் மிருதுளா.
ராஜனுக்கு ஓய்வு தேவை என மருத்துவர் அறிவுறுத்தியிருக்க மற்ற சொந்தங்களால் அவரிடம் நலம் விசாரிக்க மட்டுமே முடிந்தது.
“இப்படி எல்லாரும் கூட்டமாவே நின்னுட்டிருந்தா மாமாவுக்கு பிரஷர் குறையவே குறையாது. அவர் நல்லா தெளியட்டும், அப்புறம் என்ன செய்யலாம்னு கலந்து பேசி முடிவு செய்யலாம். மித்ரா இங்கதான் இருக்கா, நம்மள மீறி எதுவும் செய்ய மாட்டா. நான் துணைக்கு இருக்கேன். நீங்கல்லாம் கிளம்புங்க ப்ளீஸ்…” மனைவி சொல்லிக் கொடுத்ததை அப்படியே சொன்னான் இந்திரஜித்.
வைஜெயந்தியிடம் வந்த ஒரு உறவினர், “நாங்க இவ்ளோ கெடுபிடியா இருக்கிறது கவுரவத்துக்காகன்னு நினைச்சிடாதம்மா. அப்படியிருந்தா யாருமில்லாதவனுக்கு மித்ராவை கட்டிக் கொடுக்க சம்மதிச்சிருக்க மாட்டோம். நம்ம பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்கணும்ங்கிற அக்கறைதானே தவிர வேற எந்த கெட்ட எண்ணமும் எங்களுக்கு இல்லை. அதெல்லாம் இந்த காலத்து பசங்களுக்கு என்ன தெரியும்? மித்ரா நல்லா வாழணும், நாம வாழ வைப்போம். ராஜன் வீட்டுக்கு வந்ததும் நாங்க வர்றோம்” என சொல்லி விட்டு கிளம்பினார்.
மித்ரா ஏதோ சூழ்ச்சியில் சிக்கிக் கொண்டதாகவும் அதை சரி செய்யா விட்டால் தங்களுக்கு இழுக்கு என்பது போலவே மற்றவர்களும் பேசினார்கள். இப்படி ஒவ்வொருவராக கிளம்பி சென்றனர். வைஜெயந்தி எதற்கும் வாய் திறக்கவில்லை.
வீங்கிப் போயிருந்த இமைகளை மூடி தன்னை சமாளித்துக் கொண்டாள் மித்ரா. இனியும் அழ தன்னிடம் கண்ணீர் மிச்சமில்லை என்பது போலிருந்தது அவளது சோக வதனம்.
இந்திரஜித் அவனது பெற்றோரையும் அங்கிருந்து போக சொல்லி விட்டான்.
ராஜன் உறங்கிக் கொண்டிருந்தார். மித்ராவிடம் தேவைக்கு மட்டுமே அவளது குடும்பத்தினர் பேசினார்கள்.
அடுத்த நாள் மருந்து மாத்திரைகள் எழுதி கொடுத்து அதிகம் உணர்ச்சி வசப் பட வேண்டாம் எனவும் அறிவுரை சொல்லி ராஜனை டிஸ்சார்ஜ் செய்து விட்டனர்.
பதிவு செய்யப் படாத திருமணத்தை செல்லாது என சொல்லி விடுவோம், சர்வாவை மிரட்டி இங்கிருந்து போக சொல்லி விடுவோம், இன்றிலிருந்து ஏழாவது நாள் நல்ல முகூர்த்த நாள், அன்றே மித்ராவுக்கு அவளது முறைப்பையனோடு திருமணம் என சொந்த பந்தங்கள் கூடி எடுத்த முடிவை ராஜனிடம் சொல்லி விட்டு சென்றார் ஜெயந்தியின் அண்ணன்.
எதையும் மறுக்கும் நிலையில் இல்லை ராஜன். தனக்கு மாத்திரை கொடுக்க வந்த மித்ராவை கூர்ந்து பார்த்திருந்தார். அப்பாவை கவனித்து அவரை படுக்க சொல்லி வெளியேறப் போனவளின் கையை பிடித்துக்கொண்டார்.
தன் வேதனைகளை மறைத்துக் கொண்டு “என்னப்பா?” என இயல்பாக கேட்பது போல கேட்டாள்.
“என்னம்மா ஓடுது உனக்குள்ள, என்ன நினைக்கிற நீ? பிடிச்சிருந்தாலும் என்கிட்ட வந்து சொன்னதான், அப்பாதான் ஒழுங்கா விசாரிக்கலைன்னு எம்மேல கோவமாடா?” எனக் கேட்டார் ராஜன்.
அப்பா திட்டியிருக்கலாம் மற்றவர்களை போல பேசாமல் இருந்திருக்கலாம் ஆனால் இப்படி அவரையே குற்றம் சொல்லிக் கொண்டதும் அவளால் என்ன முயன்றும் தொய்வடையாமல் இருக்க முடியவில்லை.
படுக்கையிலேயே அப்பாவின் கையை பிடித்துக்கொண்டு அமர்ந்து விட்டாள்.
“என்ன நடக்குதுன்னே எனக்கு புரியலைப்பா, சர்வா ஏன் இப்படி செஞ்சார்? நமக்கும் அவருக்கும் என்னப்பா பகை?” என அப்பாவிடமே கேட்டாள்.
உள்ளே எட்டிப் பார்த்த வைஜெயந்தி, “அவரை டென்ஷன் பண்ணாம வா மித்ரா” என்றாள்.
“இருக்கட்டும் ஜெயந்தி, இவளுக்கு விஷயமே தெரியலை, எதுவும் புரியாம என்ன பாடுபட்ருப்பா, நீயும் ஏதும் சொல்லலையா?” மனைவியை கடிந்து கொண்டார்.
“நீங்க பயமுறுத்தி வச்சதுல எனக்கு எதுவுமே புரிபடல” சொல்லிக் கொண்டே உள்ளே வந்தார் வைஜெயந்தி.
“முதல்ல மித்ராவுக்கு விஷயத்தை சொல்லு” என கட்டளை போட்டார்.
ஒரு வித பயத்தோடு அம்மாவை பார்த்தாள் மித்ரா.