இருள் வனத்தில் விண்மீன் விதை -1

அத்தியாயம் -1(1)

குன்னூரில் இருக்கும் அந்த உணவகம் ஓரளவு கூட்டத்தோடு காணப்பட்டது. அங்குதான் ஏதோ சிற்றுண்டி சாப்பிட்ட வண்ணம் யாரையோ எதிர்பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் சங்கமித்ரா.

வாயில் பக்கமாக பார்த்தவள் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் கைப்பேசியை கையில் எடுக்க, அவன் உள்ளே நுழைவது தெரிந்தது.

காலதாமதமாகி விட்டதற்கான எந்த பர பரப்பும் இல்லாமல் நிதானமாக நடை போட்டு அவளை நெருங்கி வந்து கொண்டிருந்தான். அவன் சர்வானந்த், திடகாத்திரமான உடலமைப்போடு நேர்த்தியான ஆடையில் இருந்தான்.

கைக்கடிகாரத்தை பார்த்து விட்டு உடனே அவனையும் பார்த்து நேரமாகி விட்டதாக பார்வையால் சுட்டிக் காட்டியவளுக்கு ஆமாம் நேரமாகி விட்டது என தலையசைத்து ஒத்துக் கொண்டே அவள் எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தான்.

இங்குள்ள பெரிய தேயிலை தோட்டத்தில் மேலாளராக இருக்கும் அவனுக்கு வேலைப் பளு அதிகம் இருக்கும்தானே என எண்ணிக் கொண்டவள் ஏன் தாமதம் என்றெல்லாம் கேட்டுக் கொள்ளவில்லை.

அவனும் காரணம் ஏதும் சொல்லாமல், “என்ன ஆர்டர் செய்யட்டும் மித்ரா?” எனக் கேட்டான்.

“இதுக்கு மேல எதுவும் சாப்பிட என் வயித்துல இடம் இல்லை” என அவள் சொல்ல, அவனுக்கு மட்டும் தேநீர் சொல்லிக் கொண்டான்.

தேநீர் வரட்டும் என அவள் காத்திருக்க, அவன் நேராக விஷயத்திற்கு வந்து விட்டான்.

“ஏன் இப்போ வேணாம் வேணாம்னு சொல்லிட்டு இருக்க? என்ன பிராப்லம் உனக்கு? எது நோ சொல்ல வைக்குது?” தன்னை விரும்பினாலும் திருமணத்தை தள்ளிப் போட சொல்பவளிடம் கேட்டான் சர்வா.

“என் படிப்பு முடிஞ்சு ஒரு வருஷம் கூட ஆகல, அதுக்குள்ள கல்யாணத்துக்கு அவசரம் என்னங்க? இன்னும் என் வீட்லேயே இந்த பேச்சு எடுக்கல” என்றாள் சங்கமித்ரா.

“தனியா இருக்க என்னை நினைச்சு பார்க்க மாட்டியா மித்ரா? இந்த வாரத்துல ஒரு நாள் உன் வீட்ல வந்து பேசத்தான் போறேன்” என தீர்மானமாக சொன்னான் சர்வானந்த்.

அதற்குள் தேநீர் வர, நீ என்ன சொன்னாலும் திருமணம் நடந்தே தீரும் எனும் பார்வையை தாங்கிக் கொண்டே தேநீரை பருக ஆரம்பித்தான்.

காதலிக்க ஆரம்பித்த இந்த நான்கு மாதங்களாக மித்ராவும் இவன் குணத்தை பற்றி அறிந்து வைத்திருக்கிறாள்தான். அமைதியான சுபாவம் உள்ளவன் என்றாலும் அவ்வப்போது பிடிவாதமும் அழுத்தமும் எட்டிப் பார்க்கும். இவை இவன் கூடவே பிறந்து விட்ட குணங்கள் என பல முறை நினைத்தது போலவே இப்போதும் நினைத்தவள் சலிப்பாக அவனை பார்த்தாள்.

“நீ எப்படி பார்த்தாலும் என் முடிவுல மாறுறதா இல்லை மித்ரா. சனிக்கிழமையா ஞாயித்து கிழமையா… நம்ம விஷயத்தை பத்தி பேச உன் வீட்டுக்கு என்னைக்கு நான் வரலாம்னு யோசிச்சு சொல்லு” என்றான்.

“ஏன் இன்னிக்கே வாங்களேன்” என ஆயாசத்தோடு சொன்னாள் அவள்.

“சரி, ஈவ்னிங் அஞ்சு மணிக்கு உன் வீட்ல இருப்பேன்” என சொல்லி தேநீர் கோப்பையை மேசையில் டொங் என வைத்தான்.

அவளின் முறைப்பை பொருள் செய்யாமல் அவள் சாப்பிட்டதற்கும் சேர்த்து பில் செய்தவன் அவ்வளவுதான் என்பது போல கிளம்பி போனான்.

அவனை முணு முணுப்பாக திட்டிக் கொண்டே ஓடி சென்று அவனது கையை பிடித்தாள். பொது இடத்தில் என்ன இது என்பது போல கண்டனமாக பார்த்துக் கொண்டே அவளின் கையை விலக்கி விட்டவன் என்ன என புருவங்களை உயர்த்தினான்.

“நான் போற இடமெல்லாம் ஃபாலோ பண்ணி வந்து, நான் எக்ஸ்பெக்ட் பண்ணாத டைம்ல லவ் பண்றேன்னு சொல்லிட்டு, என்னை ஒத்துக்க வைக்க எத்தனை நாள் என் பின்னாடி வந்தீங்க? கல்யாணத்துக்கும் அப்படித்தான் என் பேரண்ட்ஸை சம்மதிக்க வைக்கணும், இப்படி கோவ படக்கூடாது” என்றாள்.

“என்னோட ஓடி வான்னா உன்னை சொல்லிட்டு இருக்கேன், உன் அப்பாகிட்ட வந்து பேசுறேன்னுதான் சொல்றேன். நீதான் அந்த வாய்ப்ப ஏற்படுத்தி தர மறுக்கிற” குற்றம் சாட்டினான்.

“அதுக்கு முதல்ல கல்யாண லைஃப்க்கு நான் ரெடி ஆகணும். எனக்குன்னு ஆசை லட்சியம் ஏதும் இருக்க கூடாதா? எனக்கான அடையாளத்தை ஏற்படுத்திக்கனும்னு நான் நினைக்கிறது அவ்ளோ பெரிய தப்பா?”

“என்னை பத்தி என் நிலைமையை பத்தி யோசனையே இல்லைல உனக்கு?” கோவப்பட்டான்.

“நாம பேசிட்டுதானே இருக்கோம், ஏன் இவ்ளோ கோவம்?” அதிருப்தியாக கேட்டாள்.

“நான் கோவ படல மித்ரா, என்னை புரிஞ்சுக்க மாட்டேங்கிறியேன்னு இருக்கு. நீ நினைக்கிறது எதுவும் நம்ம கல்யாணத்தால ஸ்டாப் ஆகிடாது. என்னால இனியும் வெறும் சுவத்தை மட்டும் பார்த்துகிட்டு வீட்ல தனியா வாழ முடியாது” என்றான்.

சில நிமிடங்கள் அமைதியாக கழிந்தது. பார்க்க கம்பீரமாக இருப்பவன் முகம் இறுகிக் கிடந்தது. அவனது கண்களில் ஏதோ இனம் புரியாத சோகத்தை கண்டவளுக்கு மேலும் மறுப்பாக பேச நா எழவில்லை.

“என்ன மித்ரா, உன் அப்பாவை பார்க்க வரட்டா?” அழுத்தமாக கேட்டான்.

“சரி, ஆனா இன்னிக்கே வந்திடாதீங்க, முதல்ல நான் அப்பாகிட்ட பேசிடுறேன். நீங்க எப்ப வரலாம்னு நானே சொல்றேன்” என்றாள்.

சட்டென மலர்ந்த புன்னகையோடு, “குட், சீக்கிரம் சொல்லு. இப்ப வா, வீட்ல விட்டிடுறேன்” என்றான்.

“பரவாயில்லை, கல்யாணத்துக்கு முன்னாடி கையை புடிக்க கூடாதுதானே? பைக்ல மட்டும் சேர்ந்து போலாமா? எனக்கு என் ஸ்கூட்டி இருக்கு” என்றாள்.

“கல்யாணம் முன்னாடி கையை புடிக்க கூடாதுன்னு நான் சொல்லவே இல்லை, பப்ளிக் பிளேஸ்ல கூடாதுன்னுதான் சொன்னேன்”

“பைக்ல மட்டும் உங்களுக்கு சொந்தமான தனி ரோட்லயா அழைச்சிட்டு போக போறீங்க, இல்லதானே, கிளம்பறேன்” முறுக்கிக் கொண்டவள் வெளியே சென்று விட்டாள்.

இந்த சண்டை சச்சரவுகள் சமாதானங்கள் இதெல்லாம் அவனுக்கு பிடிப்பதே இல்லை. இப்போதுதான் இறங்கி வருபவளை தன் பக்கமாகவே வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தவன் மனதிற்குள் அலுத்துக் கொண்டே அவளின் பின்னால் சென்றான்.

அவளை சமாதானம் செய்வதற்காக ஏதோ பேச வந்தவனை கண்டு கொள்ளாமல் ஸ்கூட்டரில் அமர்ந்து கொண்டாள்.

“என்ன மித்ரா இது, கோச்சுக்கிட்டு போற மாதிரி போற, உன் கூட வாழணும்னு நான் ஆசை படுறது அதிகமா தெரியுதா உனக்கு? என்னை பார்த்தா பாவமா தெரியலை?” என நயந்த குரலில் பேசினான்.

அவனை கூர்ந்து பார்த்தவளுக்கு அப்படியொன்றும் பாவமாக படவில்லை அவன். சோகத்திற்கு இணையாக போட்டி போட்டுக் கொண்டு திடம் மிளிர்ந்தது அவனது பார்வையில்.

திருமணத்திற்காக அவன் தனக்கு கொடுக்கும் அழுத்தத்தை சுத்தமாக விரும்பாதவள் “உங்ககிட்ட மாட்டிகிட்ட என்னை நினைச்சுதான் எனக்கு பாவமா இருக்கு” என சொல்லி ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு அவ்விடம் விட்டே சென்று விட்டாள்.

இன்னும் கொஞ்சம் பொறுமையாக பேசி அவளிடம் புன்னகையை தோன்ற செய்திருக்க வேண்டுமோ என எழுந்த எண்ணத்தை புறந்தள்ளி விட்டு சர்வாவும் அவன் பணி புரியும் தேயிலை எஸ்டேட் சென்று விட்டான்.

மித்ராவின் அப்பா சௌந்தரராஜன் அவரது அப்பாவின் காலத்திலிருந்து இங்கு பேக்கரி வைத்து நடத்துகிறார். பத்தாண்டுகளுக்கு முன்பு சாக்லேட் ஃபேக்டரி ஒன்றை விலைக்கு வாங்கி அதையும் திறம் பட நடத்துகிறார். மூத்த மகளை சகோதரியின் மகனுக்கே மணம் செய்து கொடுத்து விட்டார்.

இரண்டாவது மகள்தான் மித்ரா, அவளுக்கு அடுத்து மகன் சஞ்சய், கோவையில் உள்ள பொறியியல் கல்லூரியில் இரண்டாவது வருடம் படித்துக் கொண்டிருக்கிறான்.

அவருடைய உறவுகள் எல்லாம் கோத்தகிரி, ஊட்டி என மலைப் பிரதேசங்களில்தான் வசிக்கின்றனர். காதல் திருமணம் என இதுவரை உறவுகளில் நடந்தது இல்லை. உறவில் வரன் இருந்தால் வெளியில் செல்லவும் மாட்டார்கள். சௌந்தரராஜின் மனைவி வைஜெயந்தி கூட அவருக்கு ஒன்றுவிட்ட மாமன் மகள்தான்.

படிப்பு முடித்த பிறகு தந்தையின் சாக்லேட் ஃபேக்டரிக்கு மித்ரா சென்று வருகிறாள். ஏதாவது புதுமை செய்ய வேண்டும் என முயன்று கொண்டிருக்கிறாள். அவளே எதிர் பாராத வகையில் சர்வானந்தோடு காதலில் விழுந்து விட்டாள்.

இப்போது யோசித்தாலும் நான் எப்படி ஒருவனை காதலிக்கிறேன் என மித்ராவுக்கு புரிபடவில்லை. அக்கா மகனோடு சிம்ஸ் பார்க் சென்ற அன்றுதான் சர்வாவை முதன் முதலாக பார்த்தாள். அவனுடைய பார்வை அவளை தொடர்வதை உணர்ந்தாலும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

அதற்கடுத்த நாட்களும் அவளை அவன் பின் தொடர்ந்தான். அவனது வெளிப்புற தோற்றத்தில் தானும் ஈரக்கப் படுகிறோம் என்பதை உணர்ந்து சிரமப்பட்டு மனதை கட்டுக் கோப்பாக வைத்துக் கொண்டாள்.

அவன் விடுவதாக இல்லை, கோவம் கொண்டு எச்சரிக்கை செய்வதாக எண்ணித்தான் அவனிடம் பேச வாய் திறந்தாள்.

அவளை முதலில் பேச விட்டவன், அவளை ஒரு மாதமாகவே தெரியும், யார் என்ன என்றெல்லாம் விசாரித்து அறிந்து கொண்டதாக கூறினான். இன்னும் அவளின் கோவம் கூடித்தான் போனது.

யாருமில்லாதவன் என அவனை அறிமுகம் செய்து கொண்டவன் இதற்கு முன் அஸாமில் வேறொரு எஸ்டேட்டில் வேலை செய்ததாகவும் இப்போது இங்கு வந்திருப்பதாகவும் சொன்னான்.

“உங்களை ஃபர்ஸ்ட் பார்த்ததுமே ரொம்ப பிடிச்சது, பெருசா எடுத்துக்காமதான் விட்டேன். போக போக உங்க நினைவாவே இருந்தது, யாரு என்னன்னு என்னை மீறிதான் விசாரிச்சு தெரிஞ்சுகிட்டேன். கல்யாணம் பண்ணி நல்லா வாழனும்ங்கிற எண்ணத்துலதான் உங்ககிட்ட பேச ட்ரை பண்றேன்” என நிதானமாக சொன்னான்.

கஷ்டம் தெரியாத வீட்டின் செல்ல மகளாக வளர்ந்து அப்போதுதான் கல்லூரி முடித்த பருவப் பெண்ணானவளுக்கு வசீகரமான ஒருவன் இப்படி பேசுவது கர்வத்தை கொடுத்தது.

‘எந்த பழக்கமும் இல்லாமல் இவன்தான் உளறுகிறான் என்றால் நீயும் கேட்டுக் கொண்டு நிற்பாயா?’ என மனசாட்சி கொட்டு வைக்கவும் விழிப்படைந்தாள்.

“இப்படிலாம் பேச வேணாம், எனக்கு யார் மேலேயும் எந்த இன்ட்ரெஸ்ட்டும் இல்லை” பட படப்பாக சொல்லி விட்டு அவனை விட்டு வேகமாக நடந்து சென்று விட்டாள்.