லலிதாவின் வீடு உறவுகளால் நிறைத்திருந்தது. சரவணன் குடும்பத்தோடு பெண் பார்க்க வருவதாக இருக்க, சபைக்குப் பெரியோர்களையும் சில முக்கிய உறவுகளையும் அழைத்திருந்தான் தங்கராசு.
முதலில் சரவணன் நேரடியாக தங்கராசுவிடம் பேசவே இல்லை, தான் கேட்டு, தங்கராசு வீம்புக்கே மறுத்தால் என்ன செய்வது என உஷாராக இருந்தான் சரவணன்.
ஆகையாலே அவன் தந்தை ரத்தினபாண்டியனைத் தான் பேச வைத்திருந்தான். அவர் கேட்கவே தங்கராசுவால் மறுக்க இயலவில்லை.
சரவணன் போன்ற ஒருவனை மாப்பிள்ளையாக முன் நிறுத்த மறுப்பதற்குத் தோண்டி துழாவித் தேடினாலும் காரணம் கிட்டாதே!
பெரியவர் கேட்கிறார், பெண் பார்க்கத்தானே வருகிறார்கள் வரட்டும். பின்னர் எல்லாம் பேசிக்கொள்ளலாம் என்றே நினைத்த தங்கராசு, வருமாறு அழைப்பும் வைத்து விட்டான்.
அவர்கள் வசதிக்கு தங்கள் வீட்டில் பெண் பார்க்க வருகிறார்கள் என்றால் அது சரவணனின் விருப்பத்திற்காகவே என்பதும் புரிந்தே இருந்தது.
முன்பே சரவணனின் போக்கு ஒருவாறு தங்கராசுவிற்கு தெரியும் தான், இப்போது லலிதாவின் மனதை அறிய வேண்டுமே? அவளிடம் இது பற்றிக் கேட்பதற்கு அத்தனை சங்கோஜமாக இருந்தது தங்கராசுவிற்கு.
என்னவோ அவளிடம் இவ்வாறு எல்லாம் பேசியதே இல்லை. அக்கா மகள் தான், அன்பிருக்கிறது தான் இருந்தும் அண்ணன் தங்கை போன்ற அன்யோன்யமோ நெருக்கமோ கிடையாது. மேலும் வயது வித்தியாசம் வேறு பெரிதாய் இருக்க, சின்னப் பெண்ணிடம் எப்படிப் பேசுவது என்ற யோசனையில் கையை பிசைந்து கொண்டிருந்தான் தங்கராசு.
ஒருநாளும் இப்படியொரு நிலை வந்ததுமில்லை, இவனும் இவ்வளவு நிதானமாக யோசித்ததுமில்லை.
கோமதி பாட்டியிடம் கூறிவிடலாம் தான், அவரோ தான் ஒன்றைக் கேட்க, அவளிடம் சென்று வேறு ஒன்றைக் கேட்டு வைத்து விடுவாரே?
இப்போது தான் தனது அன்னையில்லாத வெறுமையும் வீட்டில் அன்னையாக, தங்கையாக, மனைவியாக வேறு பெண்களும் வேண்டுமென அவர்கள் தேவையும் புரிந்தது.
சரவணன் வீட்டில், காலில் கட்டோடு வந்த நாளே, நேராகத் தந்தையிடம் சென்று லலிதாவை விரும்புகிறேன், திருமணம் செய்து வையுங்கள் எனக் கேட்டுவிட்டான்.
இவன் செயலில் அதிர்ந்த அன்னை ராசாத்தி, “என்னங்க இவன் இப்படிச் சொல்றான்?” என்க, “இப்படி வந்து நிப்பான்னு நான் எப்பவோ எதிர்பார்த்தேன்” எல்லாம் அறிந்தவர் போன்றே, சகஜமாக கூறினார்.
“சொல்றதுக்கு ஒன்னுமில்லை சரவணா, உன் வாழ்க்கை உன் விருப்பம் தான். ஒரு நல்லநாள் பார்த்து பொண்ணு பார்க்கப் போகலாம்” ரத்தினபாண்டியன் வெகு எளிதாகக் கூறிவிட, “என்னங்க இவன் தான் எதைப் பத்தியும் யோசிக்காம கேட்குறான்னா நீங்களும் இவனுக்கு இசைஞ்சி போறீங்களே?” ராசாத்தி அதிர்வு தாங்காது படபடத்துக் கொண்டிருந்தார்.
காவ்யா சென்றிருக்க, கதிர்வேலும் சாரதாவும் அங்கே பார்வையாளர்களே.
எழுந்து கொண்ட ரத்தினபாண்டியன், “ஏன் ராசாத்தி உனக்கு அந்தப் பிள்ளை லலிதாவைப் பத்தி தெரியாதா என்ன?” என்க, என்ன குறை கூற முடியும்? அவரோ வாயடைத்துப் போனார்.
“தெரியாதுன்னா இந்த இருக்கானே உன் மகன் அவங்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோ” என்க, “அதுகில்லைங்க.. என்ன இருந்தாலும்..” என்றவர் வார்த்தையை முழுங்கினார்.
இன்னும் அவர் மனம் இவர்கள் அனைவரையும் போல் அத்தனை விசாலப்பட்டிருக்கவில்லை.
அங்கே குளிர் மழையில் நனைந்ததைப் போன்று நின்ற சரவணனிற்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை, அப்படியே ஓடிச் சென்று தந்தையைக் கட்டிக்கொள்ள வேண்டும் போல் இருந்தது. அவர் சென்றிருக்க, அப்படியே அன்னை ராசாத்தியின் கழுத்தைக் கட்டிக் கொண்டான்.
அந்த ஒற்றை அணைப்பே மகனின் சந்தோஷத்தைப் பெற்றவருக்கு கடத்தி, புரிய வைத்திருந்தது.
இரவு உணவிற்குப்பின் சாரதாவின் அறைக்குள் வந்தார் கதிர்வேல். கையிலிருக்கும் பால் டம்ளரையும் அவளிடம் நீட்டியபடி, “அத்தை கொடுத்து விட்டாங்க” என அவள் கட்டிலில் அமர்ந்தார்.
“என்ன அதிசயம்? இன்னைக்கு மட்டும் ஐயாவுக்கு எந்த வேலையும் இல்லையோ?” சற்றே நக்கலாக மனைவி கேட்க, “அதெல்லாம் என் மனைவி மேலையும் பிள்ளை மேலையும் ரொம்பவே பாசமும் அக்கறையும் இருக்கு” என்றபடியே மேலும் நெருங்கி அமர்ந்தார்.
“அஹாஹா.. அதானே இத்தனை நாளா இந்த அக்கறை, சக்கரையில தானே நான் குளிர்ந்து போய் நீந்திக்கிட்டு இருந்தேன்” குத்தலாகக் கூறிய வார்த்தைகள் தான் இறுதியில் அவளையே உடைத்து விட்டது.
இத்தனை நாள் அவள் கொண்ட இறுக்கமும் வேதனையும் இருவருக்குள்ளும் நிகழ்ந்த வாக்குவாதங்களும் நினைவில் வர, சட்டென அணை உடைத்து கண்ணீரும் பெருக்கெடுத்தது.
மனைவியின் தோளில் கைபோட்டு அணைத்துக் கொண்டவர், கண்ணீரைத் துடைத்தபடியே, “அழாத சாரதா, ப்ளீஸ்டி. அதான் மதியம் வந்ததுல இருந்து, உன் கால்ல விழாத குறையா மன்னிப்புக் கேட்குறேனே கொஞ்சம் மனசு இறங்கக்கூடாதா? என் தப்பு எனக்குப் புரியுது மன்னிச்சிடு சாரதா. உன் தப்பும் இருக்கு, காவ்யா விஷயத்தை முதல்லையே எங்கிட்ட சொல்லியிருக்காலம்ல? உன்னை வருத்திக்காதே ப்ளீஸ்” கவலையோடு கெஞ்சினார்.
அவளோ மூக்கை உறிஞ்சியபடி முறைக்க, “நீ மன்னிக்கலைன்னா போ, நான் என் பிள்ளைகிட்ட வாங்கிக்கிடுறேன்” என்றவர் அவள் மேடிட்ட வயிற்றை நோக்கி முகம் பதிக்க, கணவனின் தலை முடிகளை பற்றியபடி முகம் சிவந்து போனாள் சாரதா.
நீர் நிறைந்த விழிகளில் ஆனந்தம் பரவ, இதழிகளில் ஒரு மென்னகை ஒன்றும் அழகாக அரும்பியது.
தங்கை காவ்யா வந்து உண்மையைக் கூறிய நொடி தான், தான் செய்திருக்கும் தவறே கதிர்வேலுக்குப் புரிந்தது. விருப்பம் இல்லாத இருவரை இணைத்து வைக்கவும் இயலாதே! இதற்காக மனைவிக்கு அதிகம் அழுத்தம் கொடுத்திருப்பதும் அவள் இயலாமையும் தன் தவறையும் உணர்ந்திருந்தார் கதிர்வேல்.
அதே வீட்டில் சரவணன் அறையில் அவனும் சந்தோஷ தாண்டவத்தில் தான் இருந்தான்.
அலைபேசியில் லலிதாவிற்கு அழைத்து சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டான்.
அவளோ, “அங்க சரி, இங்க? எங்க வீட்டுல யார் பேசவா?” என்க, “யார் பேச? நானா?” கேட்ட சரவணன் பீதியுற்றான்.
“ம்ம்..” என்றவள் சற்று அதிகாரமாகவே தலையாட்ட, சரவணனோ தங்கராசுவை எண்ணி நொந்தான்.
“அவன் எனக்கு மட்டும் எடக்கு மடக்கான ஆளேச்சே! நான் கேட்டா அவன் வீம்புக்குன்னே மாட்டேன்னு சொல்லுவானே லலிதா” சோகமாகச் சிணுங்க, “அதெல்லாம் எனக்குத் தெரியாது எங்க மாமாகிட்ட இது பத்திலாம் என்னால பேச முடியாது, நீங்க தான் பேசணும்” உறுதியாகக் கூறி விட்டாள்.
“ம்ம்.. சரி சரி..” காதல் மையலில் இசைந்தே தலையாட்டியவன், “பேசினா என்ன தருவியாம்?” எனக் கீழ் குரலில் கொஞ்சலாகக் கேட்க, “என்ன வேணுமாம்?” என்றவளின் குரலிலும் புதிதாக ஒரு நாணம் குடி புகுந்தது.
அதன் பின் காதலர்களின் பேச்சுக்களுக்கு மட்டும் வரைமுறைக்கு விடுமுறை இட்டனர்.
பின் வந்த நாட்களில் நேரில் பார்வையாலும் அலைபேசியில் கவிதையாலும் காதலர்கள் காதல் வளர்த்துக் கொண்டிருக்க, ரத்தின பாண்டியன் அத்தனை வேலைகளையும் மகனுக்காக செய்திருந்தார்.
இப்போது, “காலையில பொண்ணு பார்க்க வரோம்னு தான் பெயர், கண்டிப்பா நிச்சயதார்த்தமே முடிச்சிடுவேன் லலிதா, நீ கொஞ்சம் அழகா, கிரான்ட்டாவே ரெடியாகி இரு” சரவணன் கூற, இவன் வேகம் கண்டு விழி பிதுங்கினாள் லலிதா.
“என்ன?” அவள் மௌனம் கண்டு விசாரிக்க, “நீங்க தான் சொல்றீங்க? எங்க மாமா இன்னும் எங்கிட்ட சொல்லலை” கவலையோடு கூற, தலையில் கை வைத்தான் சரவணன்.
“ஏன்டி நீங்களா இது பத்தி சாதாரணமாக் கூட பேசிக்க மாடீங்களா? உங்க இரண்டு பேருக்கு நடுவுல தூது விட நான் என்ன ஆளா செட் பண்ண முடியும்?” சுள்ளென காய, இவளுக்குச் சுருக்கென குத்தியது.
முகம் சுண்டியவள் ஒன்றும் பேசாது அலைபேசியை வைத்துவிட்டாள்.
உண்மையில் லலிதாவிற்கு சரவணன் பேசியதில் கோபமில்லை. தங்கராசுவை குறித்த கவலை தான் வாடச் செய்தது.
இவளுக்கு இருக்கும் ஒரே உறவும் அவளுக்கு இருக்கும் ஒரே உறவும் இவர்கள் மட்டும் தானே?
என்னவோ தனக்கு மட்டுமே நல்வாழ்க்கை அமைத்துக் கொண்டு அவனைத் தனித்து விட்டுவிட்டதாகக் குற்றவுணர்வு தோன்ற, வருந்தினாள். சொர்ணம் பாட்டி இருந்திருந்தால் கூட இப்படியான எண்ணம் தோன்றி இருக்காது தான், இப்போது, கலவை அதிகம் அவளை அரித்தது.
அறையில் இருந்து வெளியே வர, தங்கராசுவும் கோமதிப்பாட்டியும் தட்டுத்தாம்பூலங்களில் பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்தனர். அமைதியாக லலிதாவும் வந்து அருகில் அமர்ந்து கொண்டாள்.
சில நொடிகள் அவள் முகம் பார்த்துத் தயங்கி இருந்த தங்கராசு பின் மெல்ல, “நாளைக்குப் பெரிய வீட்டுல இருந்து உன்னை பொண்ணு பார்க்க வாரதா கேட்டாங்க, நானும் வரச் சொல்லி இருக்கேன் லலிதா. காலையில ரெடியாகி இரு” என விவரம் கூறினான்.
எந்த வித மகிழ்ச்சியும் வெளிப்படுத்தாது அவள் அப்படியே அமர்ந்திருக்க, “உனக்கு விருப்பம் தானே லலிதா?” தயக்கமும் யோசனையுமாகக் கேட்டான்.
“இல்லை மாமா” மறுப்பாகத் தலையசைக்க, குழப்பமும் கேள்வியுமாகப் பார்த்த தங்கராசு, ஒரு நொடி சரவணன் தான் ஏமாற்றி விட்டானோ என நினைத்து கையை முறுக்கினான்.
“நீங்க மட்டும் எத்தனை நாளைக்கு இப்படியே தனியா இருப்பீங்க மாமா? நீங்களும் கல்யாணம் பண்ணிக்கோங்களேன்” கவலையாக வேண்டினாள்.
“ஸ்ஸ்..” பெருமூச்சு விட்டுக் கொண்டவன், “வாழ்க்கை மேல ஆசையே இல்லைம்மா லலிதா, நீ என் கடமை! அதுக்காக மட்டும் தான் இருக்கேன்” விரக்தியோடு கூறினான்.
“எனக்காகன்னா.. அப்போ எனக்காக நீங்க கல்யாணமும் பண்ணிக்கணும் மாமா” வேண்டியவள், அவன் மௌனம் கண்டு, “கண்டிப்பா எனக்குப் பிறந்த வீடு வேணும். வந்து போக, எனக்கு நல்லது கெட்டது எடுத்துச் செய்ய, என் பிள்ளைகள் வரைக்கு பிடிச்சி நிக்க, எனக்குப் பிறந்த வீட்டுச் சொந்தம் வேணும். நீங்க வேணும். மாமா, அத்தைன்னு உங்க உறவா எல்லாமே எனக்கு வேணும் மாமா”
தனக்காக என்றாவது அவன் மனம் மாறட்டுமே என்ற ஆசை, எதிர்பார்ப்பு இவளிடம் அதிகமிருந்தது.
தங்கராசுவிற்கும் நன்கு புரிந்தது, இவள் கேட்டபடியே, இவளுக்குச் செய்முறைகள் செய்வதற்காகவாவது, தன் வீட்டிற்கு என ஒரு பெண் வேண்டுமென நன்கு புரிந்தது.
மறுநாள் தங்கராசுவும் சற்று தடபுடலாகவே ஏற்பாடு செய்திருந்தான்.
தட்டுத்தாம்பூலம் என அடுக்கிவிட்டு மாப்பிள்ளை வீட்டார் அமர, லலிதாவின் வீட்டார் உபசரித்தனர்.
சரவணனும் பட்டு வேஷ்டி சட்டையில் தூணோரமாக முகில் அருகில் நின்றிருந்தான்.
பெண்ணை அழைத்து வர, பூரணஅழகு தேவதையாக வந்து வணங்கி நின்றாள் லலிதா.
பார்த்த ராசத்திக்கு ஏக திருப்தி, தங்கள் பக்கம், தங்கள் சொந்தத்தில் இத்தனை அழகுள்ள பெண்ணே இல்லை. வரப்போகும் மருமகளைச் சற்று பெருமையாகத்தான் பார்த்தார்.
இருபுறமும் சம்மதமா என்று பெரியவர் கேட்க, நிறைந்த மனதோடுஇருபுறமும் சம்மதம் தெரிவித்தனர்.
“அப்புறம் என்னப்பா..? இரண்டு பக்கமும் தாய்மாமன் முக்கிய உறவுகள் இருக்கீங்களே நேரடியாநிச்சயதார்த்தமே வைத்து விடலாமே?” பெரியவர் ஒருவர் குரல் கொடுக்க, “ரொம்ப சந்தோஷம்” ரத்தின பாண்டியன் கூறிவிட, தங்கராசுவின் பதிலுக்கு எதிர்பார்த்திருந்தனர்.
‘முடிவா தான் வந்திருப்பான் போல?’சரவணன் மீது பார்வை பதித்தபடி தலையாட்டினான் தங்கராசு.
உண்மையில் சரவணன் முடிவாகத் தான் இருந்தான். ஒன்று உடனடியாக திருமணத்தை முடித்து விடுவது இல்லையெனில் சாரதாவின் பிரசவம், லலிதாவின் படிப்பு எனச் சிறிது காலம் தள்ளிப் போடுவது என இரண்டு தேர்வு தான் இருந்தது.
ரத்தின பாண்டியன் சரவணனை வைத்துப் பேசியிருந்தார். தங்கராசு கூட மெல்லச் செய்தால் சரியே என்ற எண்ணத்தில் இருக்க, சரவணன் தான் உடனடியாக திருமணம் வேண்டும் என ஒரே முடிவாக, பிடிவாதம் பிடித்து விட்டான்.
ஏனெனில் லலிதாவை இப்போது படிக்க வைக்கிறேன் என்றால் உரிமையில்லை என மறுக்கவே செய்வாள், அல்லது நகையைக் கழட்டுவாள் இவன் தான் அவளைப் பற்றி நன்கு அறிவானே? ஆகையாலே, முழு உரிமையோடு மனைவியாக, நிறைந்த காதலோடு லலிதாவை தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ளும் உறுதி.
அது மட்டுமின்றி லலிதா தன்னிடம் வந்த பிறகு தான், இந்த வீணாப் போன தங்கராசுவும் கொஞ்சமாவது அவன் வாழ்க்கையைப் பற்றி யோசிப்பான் என்ற எண்ணமும் சரவணனிடம் உறுதியாக இருந்தது.
அவன் எண்ணம் போலே சுபமாக, இருபுறமும் தட்டுத்தாம்பூலம் மாற்றப்பட்டு, நிச்சிய ஓலையும் எழுதி, வாசிக்கப்பட்டது.
லலிதாவும் நிச்சயதார்த்த பட்டாடை அணிந்து, அலங்காரத்துடன் வர, அருகில் சரவணனும் அமர வைக்கப்பட்டான். லலிதாவிற்கு சாரதா மலர் மாலை அணிவிக்க, சரவணனிற்கு தங்கராசுவின் கைகளால் அணிவிக்கப்பட்டது.
மணமக்களாக இருவரையும் ஜோடியாகப் பார்த்தவர்கள் எல்லாம் வியந்து, மகிழ்ந்தனர். அத்தனை பொருத்தம்!
பெரியவர்கள் வரிசையாக நலங்கு வைத்து, நல்வாழ்த்து கூறி ஆசிர்வதிக்க, விருந்தோடு நல்ல முறையில் விழா முடிந்தது.
அங்கிருந்த அனைவரின் சந்தோஷத்தை விடவும் அதிகமாக ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது சரவணன், லலிதாவின் உள்ளம் தான்.
விழா முடிந்து பெரும்பாலான உறவுகள் சென்றிருக்க, தோப்பு பக்கமாகச் சரவணனும் லலிதாவும் மட்டும் தனித்து இருந்தனர்.
அப்போது தான் உண்டு முடித்துக் கைகழுவி வந்திருந்தான்.
“அப்புறம்?” என்றபடியே சரவணன் அவளை நெருங்கி நின்றான்.
உண்மையில் நேற்று தான் கத்தியதற்குச் சினம் கொண்டு இருப்பாள், சமாதானம் செய்ய வேண்டியிருக்குமோ என்றெல்லாம் யோசனையில் வந்திருந்தான். இவள் முகம் பார்த்த பிறகு தான், வேலை மிச்சம் என நிம்மதி உற்றவனுக்கு இப்போது சீண்டிப் பார்க்கும் எண்ணம்.
லலிதாவிற்கு நேற்று தான் பேசியதும் தங்கராசு கேட்டுக் கொண்டது, இன்று சுபமாக முடிந்த நிச்சயதார்த்தம் என மொத்த சந்தோஷத்திற்கும் சொந்தக்காரியாகப் பூரிப்பில் இருந்ததால் இவன் மீது கோபமில்லை.
கை கட்டியபடியே, நெருங்கி நிற்கும் சரவணனின் முகத்தை நேர் பார்வையாக இமைக்காது பார்த்திருந்தாள் லலிதா. “அப்புறம் என்ன?” கருவிழிகளை உருட்டியவள் விளையாடினாள்.
யாருமில்லாத தனிமையை உறுதி செய்தவன் சட்டென அவள் முகம் பற்றி பட்டென பட்டுக் கன்னத்தில் அழுத்த இதழ் ஒற்றி எடுத்தான்.
“ஆயிரம் முத்தம் தரேன்னு சொன்ன?” நினைவூட்ட, திடீர் செயலில் இவன் முகம் பார்க்கவே முடியாது சிவந்து, தடுமாறிப் போன லலிதா. “அப்படியா! அதெல்லாம் எனக்கு ஞாபகமில்லை, ஆளை விடுங்க” என நகர்ந்தாள்.
சட்டென அவள் கரம் பற்றித் தடுத்தவன், “ஆயிரத்தி ஒன்னு, கண்டிப்பா சீக்கிரமே வசூலிப்பான், வசூல் ராஜா!” கண் சிமிட்டியபடி காதலோடு கூற, பேரன்பும் எதிர்பார்ப்புமாக ரசித்து நோக்கினாள் லலிதா.