இனியெல்லாம் சுகம் 1 5832 இனியெல்லாம் சுகம்! – மித்ரா அத்தியாயம் 01 காலை இளங்கதிர் பளிச்சென்று முகத்தில் விழ, மல்லிகைப் பந்தலை நோக்கி வரும் வாய்க்கால் நீரைக் கோதி, முகம், கைகால்களைக் கழுவிக் கொண்டிருந்தாள் லலிதா. கண்ணாடி போன்ற பளிச்சென்று, கலக்காத சுத்தமான கிணற்று நீர், மேனி தொட்ட இடமெல்லாம் சில்லென்று தழுவி அதன் குளுமையை அவளுள் கடத்திக் கொண்டிருக்க, கண் மூடி அனுபவித்து இருந்தாள். “லலிதா.. அடியே லலிதா” என்ற உரத்த குரலுக்கு விழி திறந்தவள், “ஹங்.. என்ன பாட்டி?” நின்ற இடத்தில் இருந்தே குரல் கொடுத்தாள். “அடுப்புல சாம்பார் கொதிக்குது பார்த்துக்கோ.. நான் கடைக்குப் போயிட்டு வாரேன்” என்ற பாட்டி வாசல் தாண்டிச் சென்றிருக்க வேண்டும், குரல் மெல்லத் தேய்ந்து மறைந்தது. ஒரு அடுப்படியும் பெரிய கூடமும் ஒற்றை படுக்கையறைகளும் கொண்ட ஓட்டு வீடு. பின்புறம் குளியலறை, அருகே கிணறும். கிணற்றிலிருந்து வேலி அமைக்கப்பட்ட ஒன்றரை ஏக்கர் வாழைத்தோப்பு. அதில் சிறிது பகுதிக்குள் வீட்டுத் தேவைக்கான காய்கறிகள், முன் முற்றத்து பந்தலில் முல்லை. லலிதாவின் ஆசைக்கு அவளே வேய்ந்து கொண்டது. ஏனெனில், இவள் ஆசைகளை கேட்பதற்கும், நிறைவேற்றித் தருவதற்கும் ஆட்கள் இல்லை. இவளும் யாரையும் எதிர்பார்த்துக் கொண்டு இல்லை. முடிந்த அளவு அவளே முயற்சி செய்து கொள்வாள், அவள் சக்திக்கு மீறிய ஆசைகளும் அவளுக்கு இல்லை. வாழைத்தோப்பு தான் இவர்களுக்கு வாழ்வாதாரம். தோப்போடு கூடிய வீடு என்பதால் ஊருக்குச் சற்று தள்ளி, தனியாக உள்ளது. சாலையின் மீது வீடு, பின்புறம் தோப்புப் பகுதி. வயல் வேலைகளுக்கு, வெளியூர்களுக்குச் செல்பவர்கள் எல்லாம் இவர்கள் வீட்டைக் கடந்து தான் செல்ல வேண்டும். “வீட்டுல யார்?” புதிதான கணீர் குரல், பின் கட்டு வரைக்கும் அதிர்ந்து கேட்டது. முகம் துடைத்தபடியே முன் வாசலுக்கு விரைந்து வந்தாள் லலிதா. வாசலில் நின்றிருந்தது பெரிய வீட்டு வாரிசு, வசூல் ராஜா என பல பட்டங்களை கொண்ட சரவண பாண்டியன். இவன் என்ன இங்கு? சற்றும் புரியாத குழப்பமான பார்வையில் லலிதா நோக்க, நேராக விறுவிறுவென வாசல் முற்றத்துக்கு வந்து நின்றிருந்தான் சரவணன். “எங்கம்மா தங்கராசு? நேத்து ஓட்டச்சத்திரம் மார்கெட்ல என்னைப் பார்த்துட்டு ஒளிச்சிக்கிட்டான்” விரைப்பாகவும் சூடாகவும் விசாரித்தான். “மாமா இல்லையே? என்ன விஷயம்?” நிதானமாக மெல்லிய குரலில் கேட்டாள். “வாங்குன கடனுக்கு வட்டியா கேட்டேன்? முதல்லை முழுங்கப் பார்க்குறான்?கடனும் கொடுத்துட்டு நாங்க தான் நடையா நடைக்குறோம்” என்றவன் ஆதங்கம் குமிழ சத்தமிட்டான். “கடனா? எங்க மாமாவா?” குரல் உள்நோக்கிச் செல்ல, ராகமிழுத்த லலிதா, யோசனையுடன் “எவ்வளவு?” என்றாள். உற்றுப் பார்த்தவன், “ஐம்பது ஆயிரம், கொடுத்து ஐந்து மாசம் ஆச்சு, அசலும் வரலை வட்டியும் வரலை” என்றவன் குரலே உரக்க, கணீரென வர, லலிதாவிற்கு தன்னாலே மேனி நடுநடுங்க உதறல் எடுத்தது. அந்த பக்கமாக செல்பவர்கள் கூட இவர்களை வேடிக்கை பார்த்தபடியே செல்ல, லலிதாவால் தாங்க இயலவில்லை. வேறு எவனும் என்றால் என்னவென்று விசாரித்தபடியே, உதவிக்கு வந்து விடுவார்கள், ஆனால் நிற்பது சரவண பாண்டியன் என்பதாலும் கடன் வசூல் என்பதாலும் ஒருவரும் அருகில் அண்டவில்லை. இன்று புரளி பேச ஒரு விஷயம் கிடைத்த சந்தோஷத்தில் சென்றார்கள் சில பெண்கள். கல்லூரித் தோழிகள் கூறிக் கேட்டிருக்கிறாள், சரியான வசூல் ராஜா, கந்து வட்டி கந்தசாமி, பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவன், வசூலில் கறார் பேர்வழி இவனென்று. அப்பேர்ப்பட்ட சரவணன் தன் வீட்டில் வந்து நிற்க, லலிதாவிற்கு முகமே சுண்டிப் போனது. இப்படியொரு நிலையில் இவள் நின்றதே இல்லை. இவள் பெற்றோர்கள் இறந்த போதும், வறுமையில் வாடிய போதும் யார் தயவையும் எதிர்பார்த்து இருந்ததில்லை. கடனென யாரிடமும் கை நீட்டியதுமில்லை. இருப்பது பழைய கஞ்சியோ பச்சை மிளகாய்யோ அதற்குள்ளாக அவளை முடக்கி தான் பழக்கம். பாட்டியம்மாள் சொர்ணமும் அப்படியே, சில்லறை என்றாலும் சிறுக சிறுக சேமிக்கும் பழக்கம் கொண்டவர். இப்படி வாசலில் வந்து நின்று ஒருவன் கடன் கேட்க தாங்க முடியவில்லை. விழியிரண்டும் தெப்பமாக கண்ணீரில் தேங்கி நின்றது. “குடிகாரப் பையன், ஆத்தாளுக்கு முடியலைன்னு ஏமாத்தி காசு வாங்கிட்டு ஆட்டம் காட்டுறானா? ஊருக்குள்ள தான் பார்க்க முடியலைன்னு வீட்டுக்கு வந்தா இங்கையும் இல்லைன்னு பொய் சொல்றீயா? இதை நான் நம்பணுமா? காலங்காத்தால எங்க போவான்? வீட்டுக்குள்ள மறைச்சி வைச்சிக்கிட்டு களவாணித்தனம் செய்றீயா?” கடுகடுத்தவன், நம்ப இயலாது கத்தினான். “ஏய்.. தங்கராசு.. தங்கராசு.. நீ வெளிய வாரீயா? இல்லை நான் உள்ள வரட்டுமா?” காட்டுக் கத்தலாகக் கத்தி ரகளை செய்தான். உண்மை என்றாலும் அந்நியன் ஒருவன் தாய்மாமனை குறை கூற மங்கைக்கு மனம் தாளவில்லை. கண்ணீர் உடைப்பெடுத்தது. வயல் வேலைக்குச் செல்லும் பக்கத்து ஊர்காரர்கள் வரை வேடிக்கை பார்த்துச் செல்ல, அவமானத்தில் கூசி, கூனி குறுகிப் போனாள் லலிதா. “நிஜமாவே மாமா உள்ள இல்லை” தொண்டை கரகரக்க, குரல் தாழ, இறங்கிய குரலில் இரைஞ்சினாள் பெண். நேராக முகம் பார்த்து பேசுவதில் கலங்கிய விழிகளை கண்டு கொண்டான். இவளை இவ்வாறு காண, சரவணனுக்கு சற்று இளகியது மனம். ஆனால் வசூல் தொழில் சற்றே இரக்கம் காட்டினாலும் இவர்கள் ஊர் ஆட்கள் தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள் என அனுபவஸ்தன் ஆன இவனுக்கு நன்கு தெரியுமே! உருகிய உள்ளத்தை வெளிக்காட்டாது விரைப்பாக நின்றவன், “சரி எப்போ வீட்டுக்கு வருவான்? எந்த நேரம் வீட்டுல இருப்பான்?” அதட்டலாகக் கேட்டான். ‘என்ன?’ மீண்டும் வருவானோ? பாவை மனம் பதறியது. ஒருவித பயவுணர்வு, பிடித்தமின்மை நெருடலாகத் தோன்றியது. ஒரு நொடி கைகளை பிசைந்தபடி, தலை தாழ யோசித்து இருந்தவள், சட்டென கழுத்தில் கிடைக்கும் ஒற்றை மெல்லிய தங்கச் சங்கிலியை கழட்டி நீட்டினாள். “இந்தாங்க இதை ஈடா வைச்சிக்கோங்க, இப்போ வீட்லையும் பணமில்லை” நடுங்கிய கரங்களை நீட்டிய படியே தழுதழுக்க மொழிந்தாள். காரப்பார்வையில் காந்தலாக முறைத்தவன், “இந்தம்மா பெரிய மகாராணி! நகையை கழட்டிக் கொடுத்தா நாங்க வாங்கிட்டுப் போகணுமா?” சிடுசிடுத்துக் கேட்டான். இவள் செயல் தன்னைக் குறைவாக நடத்துவதாக தோன்றியது. இவள் மாமாவிடம் கடன் வசூலிக்க வந்தால், கழுத்தில் கிடக்கும் நகையைக் கழட்டித் தர, ஏற்க முடியவில்லை. இவன் ஒன்றும் இதே தொழில் என அலையும் இரக்கமற்ற, கந்து வட்டிக்காரனோ பணத்தாசை பிடித்தவனோ அல்லவே! இவனுக்கு இவன் முதல் வரவேண்டும் அவ்வளவு தான்! மீண்டும் தங்கராசுவை விசாரிக்க, பதிலின்றி விழித்தாள் பாவை. அவளுக்குமே பதில் தெரிந்தால் தானே கூறுவதற்கு? தங்கராசு எப்போது வீட்டிற்கு வருவானென நேரம், காலம் கணக்கே கிடையாது. எப்போதாவது உணவு நேரத்திற்கோ, இல்லை அழுக்கு படிந்த உடையை மாற்றுவதற்கு மட்டுமே வருவான். கொடுத்த பணமும் வேண்டுமென்கிறான் நகையை கொடுத்தாலும் வாங்க மறுக்கிறான், இவன் எண்ணம் தான் என்னவோ? ஏன் இந்த ரகளையோ? பெரிதும் மனம் சோர்ந்து போனாள் மங்கை. “மாமா வரவும் அவர்கிட்ட தகவல் சொல்லி வைக்கிறேன்” தாழ்ந்த, தன்மையான குரலில் சமாதானம் கூறினாள். அவன் முறைப்பிலோ அனல் கூட, “ஏன்? சுவர் ஏறிக் குதிச்சு தப்பிக்கவா?” வெடுக்கென வினவினான். இப்படி குதற்கமாக கேட்டால், என்னவென்று பதில் கூறுவாள்? மேலும் மனம் விம்ம, கீழ் உதட்டைக் கடித்து, பொங்கிய அழுகையை அடக்கி மௌனமானாள். “ஒழுங்கா என் பணம் வந்து சேரணும்! இல்லை போலீஸ் காம்ளைண்ட் கொடுக்க வேண்டியதா இருக்கும். பார்த்துக்கோ! சொல்லி வைம்மா இல்லை நடக்குறதே வேற?” விரல் நீட்டி எச்சரித்து விட்டு விறுவிறுவென சென்று விட்டான் சரவணன். ஐந்து நிமிடத்தில் புயல் அடித்து ஓய்ந்தது போன்று இருந்தது. இன்னும் மேனி நடுக்கம் குறையாது போக, அடக்கிய அழுகை வெடித்துக் கொண்டு வர கேவினாள் லலிதா. அழுதாள் மடி தாங்க அன்னையில்லை, கண்ணீர் துடைக்க தந்தையில்லை. லலிதா தொடக்க கல்வியில் இருந்த நேரம், இவள் பெற்றோர்கள் விவசாய கூலி வேலை போக, பகுதி நேரத்திற்கு பக்கத்து ஊரில் இருக்கும் கல் குவாரி ஒன்றில் கூலி வேலைக்குச் செல்வர். அப்படியொரு அவல நாளில் வேலைக்குச் சென்ற இடத்தில் பாறைச்சரிவில் சிக்கி, இருவரும் இணை பிரியாது இறைவனடி சேர்ந்து விட்டனர். அதன் பின் சிறுமியான இவளை வளர்க்கவென தாய் வழிப் பாட்டி சொர்ணம் தன் பதினெட்டு வயது மகன் தங்கராசுவுடன் வந்தார். பாட்டி பாசக்காரி தான் ஆனாலும் அதை கொட்டிக்காட்டி வளர்க்கவில்லை, அவர் கைக்குள்ளாக அவர் சொல்லுக்கு தலையாட்டும் பிள்ளையாக தான் வளர்த்திருக்கிறார். தங்கராசு ஊரில் உள்ள தனவான் ஒருவரிடம் ஓட்டுநராக வேலை செய்கிறான். இவன் பொறுப்பில் ஒரு மினி லோட் ஆட்டோ ஒன்றை கொடுத்திருக்க, அவர் விவசாய, விளைச்சல் பொருட்கள், காய்கறிகளை, சொல்லும் நேரம் சந்தைக்கு ஏற்றிச் செல்வது தங்கராசுவின் வேலை. வேலை நேரம் போக, மீதி நேரமெல்லாம் போதையோடு ஊர் பொது சத்திரத்திலோ இல்லை அருகில் மரத்து நிழலில் நிறுத்தி வைத்திருக்கும் வண்டியிலோ தான் படுத்துக் கிடப்பான். விஷேச வீடுகள், ஊர் திருவிழா என்றால் பெறுசுகளுடன் சீட்டு ஆட்டத்திலும் அமர்ந்து விடுவான். அவன் சம்பாத்தியம் மொத்தமும் சரக்கிற்கும் சீட்டாட்டத்திற்குமே சென்றுவிட, வீட்டில் தருவதில்லை. ஆகையாலே சொர்ணத்துக்கு மகனின் செயல் பிடிக்காது, வீட்டில் அண்ட விடாது விரட்டிக் கொண்டே இருப்பார். தங்கராசுவும் அதிகம் வீட்டிற்கு வருவதில்லை. இரவும் ஊர் சத்திரத்திலே உறங்குபவன், மழை அல்லது குளிர் காலங்களில் வீட்டுத் திண்ணையில் வந்து அண்டிக் கொள்வான். மற்ற நாட்களில் கையில் காசு இல்லாத பொழுது உணவு உணவுண்ண வருவான், அவனாக அடுப்படி வரைக்கும் வந்து எடுத்துப்போட்டு உண்டு விட்டுச் செல்வான். ஒரு சில நாட்களில் சுப விசேஷ வீடுகளுக்குச் செல்வது என்றால் வந்து குளித்து, உடை மாற்றிச் செல்வான். எந்த வித கட்டுப்பாடும் இன்றி கோயில் மாடு போலே மனம் போக்கில் சுத்துபவனை, இப்போது எங்கே என்று தேடுவேன்? அழுகையுடனே யோசித்தாள் லலிதா. தங்கராசுவின் எண்ணிற்கு அழைக்க, அழைப்பு சென்றதே தவிர, அவன் ஏற்கவில்லை. மொத்தமாக சோர்ந்து, சுருண்டு போனாள் லலிதா. சரவணன் சத்தமிட்டுச் சென்ற வார்த்தைகளை விட, அவன் குரல் இன்னும் அவளுள் அதிர்ந்து கொண்டே இருக்க, தன்னாலே தளிர் மேனி நடுங்கியது. அதிர்ந்த ஒரு குரலுக்கே பயந்து விடுவாள் லலிதா. அதனை விடவும் மிகுந்த தன்மானம், சுய கௌரவம் பார்ப்பவள். இப்படி வீட்டு வாசலில் வந்து நின்று ஒருவன் கடன் கேட்டதை இவளால் இன்னுமே தாங்கிக் கொள்ள முடியவில்லை. நடந்த நிகழ்வில் இருந்து வெளிவர முடியவில்லை. வெளியில் சென்றிருந்த சொர்ணம் வந்துவிட, அவரிடம் கூறினாள். “கையில காசு இருந்தா கொடுத்துடுவோம் பாட்டி” என்க, “சும்மா இருடி, நம்ம கிட்ட ஏது அவ்வளவு பணம்?” என வாய் பிளந்தார். “இந்த மாசம் சாந்தி அக்காட்ட இருக்கிற சீட்டை, எடுத்து கொடுத்துடுவோம் பாட்டி” இவள் ஒரு யோசனை கூற, வெடித்தார் சொர்ணம். “புத்தி கெட்டவளே! உன் மாமன் கடன் வாங்கி, குடிச்சி சீட்டாடி தொலைப்பான், நாம கடனை கட்டணுமா? இவன் உழைச்சி என்ன என் கையிலையா தர்றான்? ஒரு தடவை செய்தா அப்புறம் அதுவே, இந்த தடிமாட்டுப் பையலுக்குப் பழக்கமா போயிடும்.. அப்புறம் ஊரெல்லாம் கடன் வாங்கி வைப்பான் அப்போ என்ன செய்வியாம் நீ? இன்னைக்கு வரட்டும் இருக்கு அவனுக்கு” சோளப்பொரியாப் பொரிந்தார். லலிதாவோ கப்சிப்பென வாயை மூடிக்கொண்டாள். மனமோ வீடு வரை வந்து கேட்டுவிட்ட சரவணனின் கடனை எப்படியும் கொடுத்துவிட வேண்டுமென தவித்தது. அன்றிரவு லலிதாவிற்கு உறக்கமே வரவில்லை. பாட்டியிடம் வேலைக்கு ஆகவில்லை, இனி மாமாவிடம் பேசியாவது சரவணனின் கடனை முதலில் கொடுத்து விட வேண்டுமென்ற உறுதியில் இருந்தாள்.