விக்ரம், குப்தாவுடன் அலுவலக அறையில் பேசிக் கொண்டிருக்க, இவர்கள் கீழே வந்ததைக் கண்ட குப்தாவின் மனைவி, “ஆவோ பேட்டி, மழே வர்ற போல இருக்கி. டின்னர் ரெடி, சாப்பிட்லாம்?” என்றவர் மகளிடம் விக்ரமை அழைத்து வரச் சொல்லி அலுவலக அறையைக் காட்டினார்.
அங்கே குப்தாவும், விக்ரமும் மது அருந்திக் கொண்டே ஏதேதோ விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் அன்னை சாப்பிட அழைப்பதாய் சொன்னாள் குஷி.
“ஹா, ஆ ரஹேங் ஹே பேட்டி” என குப்தா சொல்ல,
“குஷி, படிப்பு முடிஞ்சது, நெக்ஸ்ட் மேரேஜா?” என விக்ரம் கேட்க,
“ஹா, நீ ஓகே சொல்லு, நாளிக்கே நம்மள் உன்னே கல்யாணம் பண்ணுது” எனவும் திகைத்தவன் முழிக்க, குப்தாவோ சிரித்தார்.
“அரே நான் சும்மா சொல்லியாச்சு, கம், கம்… கானா சாப்பிட்லாம்” என்றவள் விக்ரமின் கை பிடித்து அழைத்தபடி வெளியே வந்தாள்.
தேவி அருகே வந்து நின்றவனின் மீதிருந்து வீசிய மது வாசனையில் அவனைத் திரும்பிப் பார்த்த தேவி விக்ரமை முறைத்தாள்.
அவனோ சட்டென்று புருவத்தை மேலேற்றி, என்னவென்று கேட்டுச் சிரி என்பது போல் இதழில் காட்டி, கண்ணாலேயே மிரட்ட, அதில் அவளது முறைப்பு இன்னும் கூடுவதைக் கண்டவன், கிஸ் பண்ணுவது போல் இதழைக் குவித்துக் காண்பிக்க, சட்டென்று முறைப்பைக் கைவிட்டு இயல்பாய் முகத்தை வைத்தாள் தேவி.
‘தண்ணியப் போட்டுட்டு மப்புல இந்தப் பாண்டியரு, சொன்ன போல கிஸ் பண்ணாலும் பண்ணிருவான். அதெல்லாம் தான் ஐயாக்குக் கை வந்த கலையாச்சே’ என நினைத்து முகத்தைச் சிரித்தபடி வைத்துக் கொண்டாள்.
அனைவரும் டைனிங் ஹாலுக்குச் செல்ல, பெரிய உணவு மேஜை முழுதும் நிறைந்திருந்த பலவித உணவு வாசனைகள் மூக்கைத் துளைத்தன. சட்டென்று அந்த வாசனையில் தேவிக்கு வயிற்றைப் பிரட்டுவது போல் தோன்றியது. கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்தாள்.
குப்தாவின் மனைவியும், சர்வன்ட் ஒருவரும் அனைவருக்கும் உணவைப் பரிமாறினர். தேவிக்கு முதலில் பூசணி ஹல்வாவை வைத்தவர், “பேட்டீ, பஹலே சுவீட் காவோ…” எனவும் அதை எடுத்து வாயில் வைத்தாள் தேவி. அதிக நெய்யுடன் சுவையாக இருந்தது.
அடுத்தடுத்து இதற்கு முன் பார்த்திராத பலவகைப் பதார்த்தங்கள் வரிசையாய் இடம் பிடிக்கக் காணும் போதே மலைப்பாய் இருந்தது.
‘எதற்கு இரண்டு பேரை விருந்துக்கு அழைத்ததற்கு, இத்தனை விதமாய் சமைத்திருக்கிறார்கள்’ என்றுதான் அவளுக்குத் தோன்றியது.
நல்ல வேளையாய் அனைத்தும் வெஜ் வகைகள் தான். பனீர் டிக்கா மசாலாவை பட்டர் நாணுடன் வாயில் வைத்தவளுக்கு, அதன் சுவை சட்டென்று பிடிக்காமல் முகத்தைச் சுளித்தாள்.
குமட்டிக் கொண்டு வந்ததில், வாந்தி எடுத்து விடுமோமோ என பயந்தவள் வாயை மூடியபடி எழுந்து மூலையிலிருந்த வாஷ் ரூமை நோக்கி ஓட அதைக் கண்டு அனைவரும் திகைப்புடன் நோக்கினர்.
“அரே, கியா ஹுவா பேட்டி?” எனப் பதட்டமாய் கேட்ட குப்தாவின் மனைவி அவளிடம் செல்ல, மற்றவர்களும் உண்ணுவதை நிறுத்தி அவளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
‘மஞ்சக்கிளிக்கு என்னாச்சு? புட் எதுவும் பிடிக்கலியோ? அதுக்காக இப்படியா கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாம வாமிட் பண்ண ஓடுறது? சரியான பட்டிக்காடு…’ என மனதுக்குள் விக்ரம் திட்டிக் கொண்டிருக்க, குப்தாவின் மனைவி புன்னகையுடன் அவர்களிடம் திரும்பி வந்தார்.
“பய்படாதே விக்ரம், அல்லாம் ஹாப்பி நியூஸ்தான்…” எனச் சொல்ல, அவர் பின்னேயே தலையைக் குனிந்தபடி சோர்வுடன் வந்தாள் தேவி. வயிற்றைப் பிரட்டிக் குமட்டிக் கொண்டு வந்தாலும் வாந்தி ஏனோ வரவில்லை. ஆனால், தலை சுற்றுவது போல் உணர்ந்தவளை இருக்கையில் அமர வைத்தவர் சர்வன்ட் பெண்ணிடம், “லெமன் போட்டு மின்ட் ஜூஸ் கொண்டு வா…” என்றார்.
குப்தாவின் காதில் அவரது மனைவி எதையோ கிசுகிசுக்க அவரும் புன்னகைத்தார்.
“அரே பாய், நீ செய்றதெல்லாம் செஞ்சுட்டு இப்ப என்ன மேன் முழிச்சிட்டு நிக்குது. கமான், உன் ஒயிஃப் கன்சீவா இர்க்காங்க போலிருக்கி…” என்றதும் அங்கே உள்ள உணவுகளை எல்லாம் ஒன்றாய் தலையில் கொட்டியது போல் அதிர்ந்து போனான் விக்ரம்.
“எ..என்ன ஜி, சொல்லறிங்க?”
“ஹா, என்ன சொல்றேன்? உண்மை சொல்றேன்…” என அவர் நேரம் காலம் புரியாமல் விளையாட அதிர்ச்சியுடன் நின்றவனிடம்,
“ஹேய் விக்ரம், கங்கிராட்ஸ் மேன்… நீ ரொம்பவே ஃபாஸ்ட் தான். மேரேஜ் ஆன கையோட நெக்ஸ்ட் பிரமோஷன் வாங்கிட்டே” எனக் குஷி அவனிடம் சந்தோஷிக்க, அதை எதையும் கவனிக்காமல் தேவியைத் திரும்பிப் பார்த்தான் விக்ரம பாண்டியன்.
அவள் தலையைக் குனிந்து அமர்ந்திருக்க, ‘அ..அப்படின்னா… நான் அன்னைக்கு…’ என்றவனுக்கு மேலே யோசிக்கவே பிடிக்கவில்லை.
அவன் மனமோ, ‘நோ…’ என அலறியது. வரும்போது தேவியை சிரித்த முகமாய் இருக்க வேண்டும் என்று மிரட்டியவனின் முகம் இப்போது சிரிப்பைத் தொலைத்திருக்க, சிலையாய் நின்றான். சட்டென்று குப்தா அவனது தோளில் கை வைக்கவும் தான் சுயத்துக்கு வந்தான்.
“என்ன விக்ரம், எதுக்கு இவ்ளோ ஷாக்?” அவர் புரியாமல் கேட்க,
“நோ… நோ சார்… ப்..ப்ளெஸன்ட் ஷாக்… ஜஸ்ட் பிளெஸன்ட் ஷாக்” எனத் திணறியபடி சொல்ல,
“ஓ… ஓகே மை பாய்… எதுக்கும் நாளிக்கு டாக்டர் பார்த்து கன்ஃபர்ம் பண்ணிடுங்கோ. சரி இப்போ சாப்பிடுங்கோ…” என்றார்.
“நோ சார், போ..போதும்… வயிறு நிறைஞ்ச போல இருக்கு…” என்றவனின் பார்வை தேவியின் மீதே இருக்க, தலை குனிந்தே இருந்தவளைக் கொல்லும் ஆத்திரம் வந்தது அவனுக்கு.
“ஓ! ஹாப்பியான விஷயம் கேட்டு உன்க்கீ மன்ஸோட வயிறும் நிறைஞ்சிருச்சீ…” எனச் சிரித்தவர், எல்லாருக்கும் ஜூஸ் கொடுக்கச் சொன்னார். மின்ட் ஜூஸ் கொண்டு வந்து தேவியிடம் கொடுக்க, வாங்கி மடமடவென்று குடித்தாள். ஏனோ மிகவும் தாகமாய் இருந்தது. சற்றே தன்னை நிதானப்படுத்திக் கொண்டான் விக்ரம்.
ஜூஸை மறுக்காமல் வாங்கி மடமடவென்று குடித்தான்.
“சரி சார், டின்னர் ரொம்ப நல்லாருந்துச்சு. மழை வர்ற போல இருக்கு, நாங்க வீட்டுக்குக் கிளம்பறோம்…” என்றவனைச் சற்றே திகைப்புடன் பார்த்தாலும், இருவரின் முகமும் புன்னகையைத் தொலைத்திருப்பதைக் கண்டு ‘எதுவும் பிரச்சனையாய் இருக்குமோ? அல்லது விக்ரம் டாக்டரிடம் செல்வதற்கு வேண்டி கிளம்ப அவசரப் படுகிறானோ?’ என நினைத்த குப்தாவும் மறுக்கவில்லை.
“டீகே பாய், மழை வர்து. சீக்கிரமே கிளம்புங்க. இன்னொரு நாள் வீட்டுக்கு வர்ணும்…” எனச் சொன்னார் குப்தா.
“ஹேய் விக்ரம், கொஞ்ச நேரம் இருந்திட்டுப் போலாம்ல” குஷி சொன்னாலும் அவன் நிற்கவில்லை.
“ரொம்பத் தேங்க்ஸ் மேடம், வர்றேன் குஷி… சார், வர்றோம்…” எனச் சிரிப்புடனே சொல்லி விட்டுக் கிளம்பினாள் தேவி. இருவரும் காரில் அமர, மழை வேகமாய் பெய்யத் தொடங்கி இருந்தது.
மேகம் தனது பாரத்தை மழையாய் இறக்கிக் கொண்டிருக்க இங்கே இருவரின் மனமோ பழைய நினைவுகளில் பாரமாகி இருந்தது.
காரை கேட்டுக்கு வெளியே எடுத்தவன் வேகமாய் ஸ்டீயரிங்கைத் திருப்பியதிலேயே அவனது மனதின் கொந்தளிப்பு தெரிந்தது. எதுவும் பேசாமல் கோபத்தை அடக்கியபடி அவன் வண்டியை ஓட்ட, அவளும் அமைதியாகவே இருந்தாள். மனம் மட்டும், அவனது சிவந்த கோப முகத்தைக் கொஞ்சம் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது.
காரெங்கும் மௌனமே இசையாய் நிறைந்திருக்க, வெளியிலோ மழை, ‘அடடா மழடா, அட மழ டா…’ எனக் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தது. விக்ரமின் மௌனமும், இறுகிய முகமும் தேவியின் மனதில் அச்சத்தை விதைத்தது.
‘எப்படி? இது எப்படிச் சாத்தியம்? அப்ப அன்னைக்கு நந்தினி சொன்ன போல நான் போதைல நிஜமாலுமே இவளை…’ அதற்குமேல் நினைக்கவே அவனுக்கு அருவருப்பாய் இருந்தது. மனமெங்கும் ஒருவித அவமானத்தில் பொசுங்க, அவனால் அந்த உணர்வைத் தாங்கவே முடியவில்லை.
‘இல்ல, நான் அந்தளவுக்குக் கேடு கெட்டவன் இல்ல. என்னதான் என் மனசுல இவ மேல ஆசையைப் புதைச்சு வச்சிருந்தாலும், போதைல என்னை மறந்து தப்புப் பண்ணுற அளவுக்கு நான் மோசமானவன் இல்ல…’ அவன் மனது உரக்கக் கத்தியது.
‘அப்படின்னா இவ எப்படி கர்ப்பமாக முடியும்? நீ தேவியை எதுவும் பண்ணலைன்னா, தேவி தப்பானவன்னு நினைக்கறியா?’ அவன் மனசாட்சி கேள்வி கேட்க தலை பாரமாகி வெடித்து விடுவது போல் தோன்ற காரை ஒரு ஓரமாய் நிறுத்தினான்.
அவள் சட்டென்று அவனைத் திரும்பிப் பார்க்க அவன் பார்வை வெளியே மழையை வெறித்திருந்தது.
“உண்மையா?”
“எ..என்ன?”
“அந்த ஆன்ட்டி சொன்னது உண்மையா?”
“அது..வந்து…”
“நீ கர்ப்பமா இருக்கியா?” அவனது குரல் அழுத்தத்துடன் ஒலிக்க அவள் மனதில் ஒரு திகில் பரவியது.
“ஆ..ஆமான்னு நினை…க்கறேன்…” தயங்கியபடி அவள் சொல்லவும், சட்டென்று அவளை நோக்கித் திரும்பியவனின் முகத்தில் தெரிந்த இறுக்கமும், விழியில் வழிந்த கோபமும் அவளை நடுங்கச் செய்தது.
“இறங்கு…” என்றான்.
“எ..என்னது?”
“கார்ல இருந்து இறங்குன்னு சொன்னேன்…” அவன் வார்த்தைகளில் மனதில் பயம் பரவ,
“ம..மழை வருது…”
“பரவால்ல, இறங்கு…” எனக் கத்தியவன் ஸ்டீயரிங்கில் ஓங்கிக் குத்த அவளது பயம் இன்னும் கூடி நடுங்கியபடி பார்த்தாள் தேவி. இரவு நேரம், மழையின் இருட்டு, ஒதுக்குப்புறமான பகுதி. தனியே முன்பு செய்தது போல் ரோட்டில் விட்டுச் சென்றிடுவானோ என மனம் தவிக்க, இறங்காமல் தயக்கத்துடன் அவனை ஏறிட்டாள்.
தன்னைக் கொஞ்சம் தைரியப்படுத்திக் கொண்டவள், “எ..எதுக்கு இப்பக் கோபப் படறீங்க? மழைல வம்பு பண்ணாம வீட்டுக்குப் போங்க…” என்றவளை எரித்து விடுவது போல் பார்த்தான்.
“ஏய்ய்ய்… என் கோபத்தைக் கிளப்பாம ஒழுங்கா இறங்குடி. இல்லன்னா, கழுத்தை நெறிச்சுக் கொன்னாலும் கொன்னுடுவேன்…” அவனது ஆத்திரம் அவளை அச்சுறுத்த,
“ம..மழை…”
“உனை இறங்குன்னு சொன்னேன்…” என மீண்டும் அவன் கத்த, காதைப் பொத்திக் கொண்டவள், கண்ணீருடன் இறங்கினாள். அவள் இறங்கிய அடுத்த நிமிடம் கார் கிளம்பிச் சென்றது.
கொட்டும் மழையில், மிரட்டும் இருளில், அம்போவென்று தனியே நின்றாள் மந்தாகினி தேவி. வெளியே பெய்யும் மழையை விடச் சக்தியுடன் புயல் மழை அவள் மனதுக்குள் பெய்து கொண்டிருக்க, அவள் கன்னங்களை நனைத்த கண்ணீரை மழைத்தண்ணீர் துடைத்துச் சென்றது.
கையில் நயாப் பைசா கிடையாது. மொபைலும் எடுத்திருக்கவில்லை. கிளம்பும் போது அவளது மாமியார் பத்மா சொன்னது போலவே, அவள் பெற்ற ஆருயிர் மைந்தன், மீண்டும் இவளை அநாதரவாய் சாலையில் இறக்கிவிட்டுப் போயே போய் விட்டான்.
சடசடவென்று பெய்த மழை அதற்குள் அவளை முழுமையாய் குளிப்பாட்டி இருக்கத் தொப்பலாய் நனைந்திருந்தாள். பயத்துடன் சுற்று முற்றும் பார்த்தவளுக்கு ஆயாசமாய் வந்தது.
‘எப்படி வீட்டுக்குச் செல்வது? நடந்து போவது சாத்தியமில்லை. ஆட்டோவில் செல்லுவதாய் இருந்தாலும் இந்த மழையில் ஆட்டோ கிடைக்குமா என்று கூடத் தெரியவில்லை.’ குழப்பமும், மழையும் அவளை ஆக்கிரமிக்க உடலோடு மனதும் சோர்ந்து போனது.
தூரத்தில் ஏதோ ஒரு கார் வெளிச்சம் தெரிய, அவர்களிடம் லிப்ட் கேட்டுப் பார்க்கவும் பயமாய் இருந்தது.
முந்தானைத் தலைப்பை எடுத்துத் தலையில் முக்காடு போட்டுக் கொண்டவளை நெருங்கிய கார் அவளிடம் வந்து வேகத்தைக் குறைக்க, உள்ளே டிரைவர் சீட்டில் இருந்தவன் கண்ணாடியை இறக்கினான்.
“என்னம்மா, மழையிலயும் கிராக்கி புடிக்கக் கிளம்பிட்டியா? ஒரு நைட்டுக்கு எவ்வளவு?” எனக் கேட்க மெல்லப் புரிந்ததும் அதிர்ந்தாள்.
முகத்தைச் சுளித்தவள், “ச்சீ…” எனச் சொல்லிவிட்டு நடக்கத் தொடங்க, காரை மெதுவாய் உடன் ஓட்டியவன்,
“என்னமா, எதுவும் சொல்லாமல் போற. உன் ரேட் எவ்வளவுன்னு சொல்லு, அதிகமா இருந்தாலும் பரவால்ல… மழைக்கு மஜாவா இருக்கும்.” என்றவன் காரை அவளது அருகே கொண்டு வர அவள் வேகமாய் சற்றுத் தொலைவில் தெரிந்த வெளிச்சப் புள்ளியை நோக்கி ஓடத் தொடங்கினாள்.
“மழை நேரத்துல தானா ஒரு கிளி வந்து சிக்குதே. கொஞ்சம் கிளுகிளுப்பா கில்மா பண்ணலாம்னு பார்த்தா, இந்தக் கிளி இப்படி மூஞ்சியச் சுளிச்சிட்டுப் பறந்து போகுது. ஒருவேளை, வேற யாருக்காச்சும் வெயிட் பண்ணிட்டு இருக்குமோ என்னவோ?” என வாய்விட்டுச் சொன்னபடி அந்தக் கார்காரன் அவளைக் கடந்து செல்லவும் தான் அவளுக்கு மூச்சே வந்தது.
அந்த வெளிச்சப் புள்ளியை நோக்கி வேகமாய் நடந்தாள் தேவி. உடுத்திருந்த சேலை உடலோடு ஒட்டிக் கொண்டு அவள் நெளிவு, வளைவுகளை அப்பட்டமாய் காட்டியது. முந்தானையில் போர்வையாய் உடலை மூடிக் கொண்டு ஒரு கையால் சேலையைத் தடுக்காமல் தூக்கிப் பிடித்தபடி நடந்தவளுக்கு அடக்க மாட்டாமல் அழுகை வந்தது.
‘ச்சீ, கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம ஆள் நடமாட்டமில்லாத இடத்துல என்னை இப்படி இறக்கி விட்டுப் போயிட்டானே… அதும் நான் கர்ப்பமா இருக்கேன்னு சந்தேகமா இருக்குன்னு சொல்லியும், கொஞ்சம் கூட இரக்கம் காட்டாம ராத்திரி நேரத்துல தவிக்க விட்டுட்டானே. இப்பக் கண்டவன்லாம் என்னைக் காசுக்குப் படுக்கக் கூப்பிடற போலப் பண்ணிட்டானே, படுபாவி…’ எனப் பல்லைக் கடிக்க மட்டும் தான் அவளால் முடிந்தது.
மழைத் தண்ணீரோடு கண்ணீரும் முன்னிலுள்ள பார்வையை மறைக்க, கண்ணைத் துடைத்துக் கொண்டு அந்த வெளிச்சப் புள்ளியின் அருகே வந்திருந்தாள் தேவி.
அது ஒரு சின்னப் பெட்டிக் கடை. மழை காரணமாய் நேரத்திலேயே கடையை அடைத்துக் கிளம்பி இருந்தவர்கள் முன்னில் லைட்டை போட்டுவிட்டுச் சென்றிருந்தனர். தலை மட்டும் நனையாத அளவுக்கே அந்தப் பெட்டிக் கடையின் மேல்கூரை இருந்தது. அடித்து ஊற்றிய மழையில் நனைந்து உடலெங்கும் நடுங்கத் தொடங்கியது தேவிக்கு.
சிறிது நேரம் நின்று பார்த்தவளுக்கு அங்கே நின்றால் ஆட்டோ எதுவும் வருமென்று தோன்றவில்லை. நேரம் வேறு நகர்ந்து கொண்டிருக்க மழையும் நின்ற பாடில்லை. பாவம், அவள் மீது இயற்கைக்கும் என்ன கோபமோ?
அடுத்து மழையைக் கிழித்துக் கொண்டு ஒரு காரின் ஹெட்லைட் நெருங்கி வருவது தெரிய, லிப்ட் கேட்கலாமா? வேண்டாமா எனப் பயத்துடன் யோசித்தவள் துணிந்து சற்று முன்னே வந்து நின்றாள்.
கை நீட்டி லிப்ட் கேட்க, காரிலிருந்த ஆணோ இவளைக் கண்டு, என்ன நினைத்தானோ? நிறுத்தாமல் சென்று விட்டான். தேவிக்கு தன் நிலையைக் கண்டு அழுகையாய் வந்தது. சுய கழிவிரக்கத்தில் கரைந்தவள், மெயின் ரோட்டுக்குச் சென்றால் ஆட்டோ கிடைக்கலாம் என நினைத்து மழையைப் பொருட்படுத்தாது நடக்கத் தொடங்கினாள்.
முழுதும் நனைந்த பிறகு முக்காடு எதற்கு? என்று அவள் மனமும் நினைக்க, வேகமாய் நடந்து சிறிது தூரம் வந்திருக்க, மெயின் ரோடு தெரிந்தது. உடம்பெல்லாம் நனைந்து மழையில் ஊறிப் போனதில் சில்லிட்டுக் குளிரத் தொடங்கியது. வேகமாய் நடந்தாள். ஊரே மழைக்கு பயந்து அடங்கிப் போயிருக்க, அந்த ஒதுக்குப்புறமான ஏரியாவில் எந்த நடமாட்டமும் இல்லை.
கடவுளுக்குக் கடுகளவேணும் அவளிடம் கருணை தோன்றியதோ, என்னவோ? ஒரு ஆட்டோ வெளிச்சத்தைப் பரப்பிக் கொண்டு அவளைக் கடந்து செல்வதைக் கண்டவள், உடலில் மிச்சமிருந்த பலத்தைத் திரட்டி, “ஆட்டோ…” எனக் கத்தியபடி ஓடினாள்.
அவளது சத்தத்தைச் சோவென்று கொட்டிக் கொண்டிருந்த மழை விழுங்கி இருந்தாலும், ஆட்டோ டிரைவர் கண்ணாடியில் யாரோ கையசைத்து ஓடி வருவதைக் கண்டவர் வண்டியை நிறுத்தினார்.
வேக வேகமாய் ஆட்டோவை நெருங்கியவள், “அண்..ணே, ஆ..ட்டோ வரும் தானே…” எனப் பலமாய் மூச்செடுத்தபடி தவிப்புடன் கேட்க, அவளது கோலத்தைக் கண்ட சற்றே வயதான அந்த ஆட்டோ டிரைவருக்குச் சற்றே பரிதாபம் தோன்றியது.
“எங்கமா போகணும்?” என்றவரிடம் அவள் ஏரியாவைச் சொல்ல,
“அடடா, நான் வீட்டுக்குக் கிளம்பிட்டனே. போற வழியா இருந்தா இறக்கி விடலாம்னு நினைச்சேன். அந்த ஏரியா ரொம்ப தூரமாச்சே…” என்றார் அவளைச் சவாரிக்கு ஏற்றிக் கொள்ளலாமா? தவிர்த்து விடலாமா? என்ற யோசனையுடன்.
இந்த இரவு நேரத்தில் இப்படி ஒரு இடத்தில் தனிமையில் நிற்கும் பெண்ணைக் கண்டு, அவர் மனதிலும் நல்ல அபிப்ராயம் எதுவும் தோன்றா விட்டாலும், தேவியின் முகத்தைக் காணப் பாவமாய் இருக்கவே எதுவும் கேட்டுச் சங்கடப் படுத்தவில்லை.
“அண்ணே, ப்ளீஸ்ணே… அப்படிச் சொல்லாதீங்க. மழைல எந்த வண்டியும் கிடைக்கல. தனியா நிக்க பயமாருக்கு. தயவு பண்ணி என்னைக் கொஞ்சம் வீட்டுல இறக்கி விட்டிருங்க…” எனக் கெஞ்சலாய் கேட்டவளை அப்படியே விட்டுப் போக மனமின்றி, “சரி ஏறும்மா…” எனவும் ஒரு நிம்மதியுடன் ஏறி அமர்ந்து கொண்டாள் தேவி.
“இந்த நேரத்துல இங்க எப்படி மா வந்த? இங்க பஸ்ரூட் கூட இல்லையே. மழை வந்தா இந்தப் பக்கம் கொஞ்ச நேரத்துல வெள்ளம் தேங்கத் தொடங்கிரும். அதனால யாரும் இந்தப் பக்கம் அதிகமா வர மாட்டாங்க…” என்றவர் கண்ணாடியில் அவளைப் பார்த்தபடி கேட்க,
அவளோ, இத்தனை நேரம் மழையில் நின்றதால் உடலில் ஒரு நடுக்கம் பரவத் தொடங்கியிருக்க கை காலைக் குறுக்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள். வாயைக் குவித்து ஊதி தனக்குள் வெப்பத்தைக் கடத்த முயன்று கொண்டிருந்தாள்.
“ப்… ரொ..ரொம்ப ந..நன்றிண்ணே…” என்றவளுக்குத் தனது கொடுமைக்காரப் புருஷன் வழியில் இறக்கி விட்டுச் சென்றதைச் சொல்ல ஏனோ வாய் வரவில்லை.
“ஒரு வேலையா ஒருத்தங்களைப் பார்க்க வந்தேன். திரும்ப வரும்போது ஆட்டோ பிடிச்சுக்கலாம்னு நினைச்சேன். மழையில மாட்டிகிட்டேன்…” எனப் பொய் சொல்லி அவளுக்குப் பாதகம் செய்தவனைக் காட்டிக் கொடுக்காமல் ஏன் மறைக்கிறோம்? என்று அவளுக்கே புரியவில்லை.
அன்று போலவே இன்றும் விக்ரம் தனியே வீடு திரும்பியிருக்க, பெரியவர்களோ நேரமே உணவருந்தி, மாத்திரை போட்டு உறங்கச் சென்றிருந்தனர். நிகிதாவும் தோழியின் கல்யாணத்துக்குச் சென்றிருக்க என்ன செய்வது எனப் புரியாமல் கலங்கி நின்றார் விஜயா.
விக்ரம் தேவியை இறக்கிவிட்டு நேரே ஒரு பாருக்குச் சென்றவன் ஒரு ஃபுல் குப்பி மதுவை வாங்கிக் கொண்டு தான் வீட்டுக்கே வந்திருந்தான். அவனையே கேவலப்படுத்தும் அவனது மனநிலையைச் சமாளிக்க அவனுக்கும் வேறு வழி தெரியவில்லை. தன்னையே மறந்திருக்க மதுவை விடச் சிறந்த மருந்தை அவன் அறிந்திருக்கவும் இல்லை.
“முட்டை ஆம்லட் செய்து எடுத்திட்டு வாங்க…” என விஜயாவிடம் உத்தரவிட்டு மாடிக்குச் செல்ல, அதைச் செய்து மேலே கொண்டு போய் கொடுக்கும்போதே அவன் பாதிக் குப்பி மதுவைத் தீர்த்திருந்தான்.
விஜயா தயக்கத்துடன் வினவினார்.
“த..தம்பி… தேவிம்மா?” என இழுக்க அவரை முறைத்தவன், “அந்தச் சனி..யனைத் தலை முழுகிட்டேன்…” எனச் சற்றே குழறியபடி கூறினான் விக்ரம். அதைக் கேட்டவர் அதிர்ந்தார்.
‘விடாது பெய்த மழையில் பாவம், அந்தப் பேதைப் பெண் எங்கே மாட்டிக் கொண்டாளோ?’ என நினைத்தவர் மனம் கேளாமல் தேவியின் அலைபேசிக்கு அழைக்க அது வீட்டிலேயே ஒலித்தது. அடுத்து நிகிதாவின் அலைபேசிக்கு அழைக்க அதுவோ நாட் ரீச்சபிள் என்றது.
‘கடவுளே, எந்த ஆபத்தும் இல்லாம அந்தப் பொண்ணை நல்லபடியா வீட்டுக்கு அழைச்சிட்டு வந்திருப்பா…’ என வேண்டுவதைத் தவிர அவருக்கு வேறு வழி தெரியவில்லை.