ஆள வந்தாள் -9

அத்தியாயம் -9

அன்றுதான் திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவின் நிறைவு நாள். கந்தசாமியும் சரவணனும் மாலையில் கோயிலுக்கு செல்கிறோம் என சொல்லி இப்போது அவர்களின் வேலைகளை கவனிக்க சென்று விட்டனர். 

புதிதாக திருமணம் முடிந்திருப்பதால் சேரனும் மதுராவும் தம்பதியராக கோயிலுக்கு சென்று வரலாம் என இருந்தனர். 

காலையிலேயே  குளித்து முதல் நாள் வாங்கியிருந்த சந்தன நிற புடவையை ரெடிமேட் பிளவுஸுடன் அணிந்து தயாராகி விட்ட மதுராவை நேற்றைய இரவின் இனிய நினைவுகளோடு ஆசை தழுவ பார்த்தான் அப்போதுதான் குளித்து வந்த சேரன். 

மதுராவுக்கும் அவனது முகம் காண வெட்கமாக இருக்க, என்ன பேச என தடுமாறி நின்றாள். அவளருகில் வந்தவன் மெல்ல அவளை அணைத்துக் கொள்ள அவனது உடலின் ஈரம் அவளது உடைக்கு மாறியது. 

“கைல இருக்க துண்டுல துவட்டாம என் புடவைய நனைக்காதீங்க” என சொல்லி விலகினாள். 

“கோயிலுக்கு மட்டும் போகலைன்னா இந்நேரம் உன் புடவை இல்ல, நீயே எனக்கு துண்டு ஆகியிருப்ப” என சொல்லி மீண்டும் அவளை அணைத்தான். 

“இன்னும் சாப்பிட வேற செய்யணும், வம்பை விட்டுட்டு சீரியஸா இருங்க” என கண்டிப்போடு அவள் கூற, ஆடை மாற்றி தயாராகி வருகிறேன் என்றவன் சாப்பிடுவதற்கு அவளை மட்டும் செல்ல சொன்னான். 

“எனக்கு நல்ல பசி, உங்களுக்கு முன்னாடி சாப்பிட்டா என்னை பேசுறேன்னு உங்கம்மா எனர்ஜிதான் அரை மணி நேரம் வேஸ்ட் ஆகும்” என்றாள். 

மனைவியை வாஞ்சையாக பார்த்தவன், “உனக்குன்னு ஸ்னாக்ஸ் வாங்கி தர்றேன், ரூம்ல வச்சுக்க. பசிக்கிறப்ப சாப்பிட்டுக்க” என்றவன் வேகமாக வேஷ்டியும் பனியனுமாக அணிந்து கொண்டு அவளோடு கூடம் வந்தான். 

முன்னரே உணவருந்தியிருந்த கனகாம்புசம் பின் பக்கத்தில் மிளகாய், மல்லி காய வைத்துக் கொண்டிருந்தார். 

இவர்கள் சாப்பிட்ட பின் சேரன் தயாராக அறைக்கு சென்று விட, புடவையை சற்று ஏற்றி சொருகிய மதுரா பாத்திரங்களை ஒழித்து போட்டு விட்டு கூடத்தில் வந்தமர்ந்து கொண்டாள். 

கனகாவும் உள்ளே வர பூங்கொடி அவளது பிள்ளைகளோடு  வந்தாள். 

நாத்தனாரை வாங்க என மதுரா அழைக்க பூங்கொடி கண்டு கொள்ளாமல் இருக்கவும் ‘இனிமேல் கூப்பிடவே கூடாது’ என முடிவு செய்து கொண்டாள் மதுரா. 

தாங்களும் குடும்பமாக கோயிலுக்கு செல்லப் போவதாக அம்மாவிடம் மட்டும் சொன்னாள் பூங்கொடி.

 தன்னை தவிர்ப்பவர்கள் மத்தியில் ஏன் இருக்க வேண்டும், இங்கிருந்து சென்று விடுவோம் என நினைத்த மதுரா பின், ‘இதுதான் எனக்கும் வீடு, தினமும்தான் இப்படி செய்வாங்க, நான் ஏன் ஒதுங்கி ஒதுங்கி போகணும்?’ என்றெண்ணி அங்கேயே இருந்து கொண்டாள். 

“மொளவா மல்லி காய வைக்கிறியா ம்மா? எனக்கும் குழம்பு தூள் அரைச்சு வேணும்னு கேட்டேனே?” என்றாள் பூங்கொடி. 

“உனக்கும் தனியா வாங்கி காய வச்சிருக்கேன். காசு கொடுத்திப்புடுடி, மத்ததுன்னா சரி, உப்பு புளி மொளகாயெல்லாம் இங்கேருந்து எடுத்திட்டு போனா என் வூட்டுல லட்சுமி தங்காது” 

“என்னிக்கு நான் ஓசில வாங்கிட்டு போயிருக்கேங்கிறேன்? அவர் இன்னும் கிளம்பிட்டு இருக்கார்மா, இதுங்க அட்டகாசம் தாங்க முடியலை, இதுங்க சத்தத்துல தலைவலி வருதுன்னு என் மாமியா இன்னொரு பக்கம் சத்தம் போடுது, அதான் இங்குட்டு அழைச்சிட்டு வந்திட்டேன், நீ என்னடான்னா காசு கொடுன்னு கட்டன்ரைட்டா பேசுற” என்றாள் பூங்கொடி. 

“ஊரு உலகத்துல காண முடியாத செம்மம்டி உன் மாமியாக்காரி. சின்ன புள்ளைங்கன்னா அப்படிதான் இருக்கும், சரியா கேக்காத காது இப்ப மட்டும் வலிக்குதாமா?” அங்கலாய்த்துக் கொண்டே குளிர்சாதன பெட்டியில் இருந்த மல்லி சரத்தை எடுத்தார் கனகா. 

மருமகளும் அங்கே இருப்பதை உணர்ந்தும் பூச்சரத்தை மூன்றாக நறுக்கி மகள், பேத்தி இருவருக்கும் வைத்து விட்ட கனகா தானும் வைத்துக்கொண்டார். 

மாமியாரின் இத்தகைய புறக்கணிப்பில் மதுராவின் முகம் கூம்பிப் போனாலும் நொடியில் தெளிந்து வீட்டு வாயிலில் போய் நின்று கொண்டாள். 

“என்னம்மா நீ? நமக்கு புடிக்குதோ இல்லியோ அவதான் சேரனோட பொண்டாட்டின்னு ஆகிப் போச்சு, ஒரு துண்டு பூ அவளுக்கும் கொடுக்க வேண்டியதுதானே?” எனக் கேட்டாள் பூங்கொடி. 

“ஆ…ஆன்… பிரிஜ்ல இன்னும் பூ இருக்கு. அவளை பார்த்தாலே பத்திக்கிட்டு வருதுங்கிறேன்,  அவன் கட்டின தாலிய கழட்டி தந்தவளுக்கு என்ன இதுக்கு எங்கையால எதுவும் கொடுக்கணும்ங்கிறேன்? உந்தம்பி வருவான், அவன்கிட்ட சொல்லி எடுத்து கொடுக்க சொல்லு” என்றார் கனகா. 

சரியாக அதே நேரம் சைக்கிளில் பூ விற்றுக் கொண்டு சென்ற தாத்தா மதுராவை கண்டு விட்டு சைக்கிளை நிறுத்தி விட்டார். 

அக்கம் பக்கம் ஊர்களில் எல்லாம்  பல வருடங்களாக பூ விற்பனை செய்பவர் அவர். 

“திருவிசா அதுவுமா பூ வாங்கலைனா எப்படி ஆயி? ஒரு பந்து பூதான் மிச்சம் கெடக்கு, நீயே வாங்கிப்புட்டீனா கெழவியோட நானும் கோயிலுக்கு போவேன்ன?” என உரிமையாக அவர் கேட்க, சிரித்த முகமாக பூவை வாங்கிக் கொண்டவள் “என்னங்க…” என கணவனை அழைத்தாள். 

சட்டை அணிந்து கொண்டிருந்த சேரன், “என்ன இவ்ளோ சவுண்டா கூப்பிடுறா?” என தனக்கு தானே கேட்டுக் கொண்டு அறையிலிருந்து வெளி வந்தான். 

அக்காவை கண்டவன், “வாக்கா, மாமாக்கு இன்னும் சோலி முடியலையோ?” எனக் கேட்டு அக்காவின் ஐந்து வயது மகள் அனுவை கையில் தூக்கிக் கொண்டான். 

குழந்தையின் ஒற்றைக் குடுமியில் சுற்றியிருந்த அதீத பூவை பார்த்து விட்டு “ஏட்டி மினிக்கி! போதுமாடி பூ? சாண் அளவு முடிக்கே உன் உசர நீட்டத்துக்கு பூ’ன்னா இன்னும் முடி வளந்தா என் உசரத்துக்கு பூ வச்சுப்பியளோ?” கிண்டலாக கேட்டுக் கொண்டே வெளியில் வந்தான். 

 பூப்பந்தை கையில் வைத்திருந்த மதுரா கணவனிடம் பணம் கொடுக்க சொன்னாள். 

“என்னடி உன் மருமவளுக்கு போட்டியா?” என மனைவியிடம் கிண்டலாக கேட்டவன் பணத்தை எடுக்க, “அம்மாச்சி அத்தைக்கு பூ கொடுக்கலைல மாமா? அதான் தனியா வாங்குறாங்க” என சொல்லி விட்டாள் அனு. 

பணத்தை கொடுத்து பூக்கார தாத்தாவை அனுப்பி வைத்த சேரனின் முகம் இறுக்கமடைந்தது. குழந்தை சொல்வது உண்மையா என்பது போல மனைவியை பார்த்தான். மதுரா ஒன்றும் சொல்லாமல் பூவோடு உள்ளே செல்ல அவனும் பின் தொடர்ந்து சென்றான். 

மதுரா பூஜை அறையில் எல்லா கடவுள் படங்களுக்கும் பூ வைத்து விட்டு அவளும் அளவாக தலையில் சூடிக் கொண்டாள். கூடத்தில் தன் அம்மாவையும் அக்காவையும் முறைத்துக் கொண்டு நின்றிருந்தான் சேரன். 

சேரன் எதுவும் சொல்லா விட்டாலும் மதுரா பூ வாங்கி வந்ததையும் அவள் அழைத்ததும் சென்றவன் இப்போது கோவமாக இருப்பதையும் கண்டவர்களுக்கு அவனது கோவத்தின் காரணம் பிடிபட்டு போனது. 

“அமுக்கிணி கணக்கா இருந்துகிட்டு இப்படி அடிமுள்ளு வச்சு வுடுறாளே… அடேங்கப்பா என் சர்வீசுல இப்படி ஒருத்திய நான் கண்டதும் இல்ல, இனி காணப் போறதும் இல்ல” என்றார் கனகா. 

“ம்மா செத்த வாய மூடுறியா? அவ எதுவும் சொல்லலை. அப்படியே சொன்னாலும் என்ன தப்புங்கிறேன்? அரை முழம் பூ வச்சுக்க என் பொண்டாட்டிக்கு இந்தூட்டுல உரிமை இல்லாம போச்சுன்ன?” எனக் கோவப்பட்டான் சேரன். 

“ஓஹோன்னானா! புதுப் பொண்டாட்டிக்குள்ள உரிமைய கேட்குறியா நீ? எனக்கு புதுசா வந்தவள நெனப்பு இல்ல. முறையா வந்திருந்தா இன்னாருன்னு ஒறவு எம்மனசுல பதிஞ்சிருக்கும்? எனக்கு வயசாகிட்டுன்ன, அதான் ஓடி வந்தவள நெனப்பு இல்லாம போயிட்டு” என கனகா பேசிக் கொண்டிருக்க, குழந்தை கையில் இருப்பதையும் மறந்து கைக்கு அகப் பட்ட சொம்பை தரையில் விட்டெறிந்தான் சேரன். 

கலங்கிய கண்களோடு நின்றிருந்த மதுரா திகைத்தாலும் தன்னை சமாளித்து, பயந்து போயிருந்த அனுவை கணவனிடமிருந்து வாங்கிக் கொண்டு வெளியில் சென்று விட்டாள். 

உள்ளே கணவன், நாத்தனார், மாமியார் மூவரும் வாக்குவாதம் செய்து கொள்வது காதில் விழ அனுவோடு சேர்த்து பெரியவன் அமுதனையும் அழைத்துக் கொண்டு அவர்களின் பேச்சு காதில் விழாத தூரம் போய் நின்று கொண்டாள் மதுரா. 

அம்மாவை பின்பக்கம் அனுப்பி வைத்த பூங்கொடி விஷயத்தை சொல்லி, “உன் பொண்டாட்டி  உன்கிட்ட தனியா போட்டு கொடுக்கிறாங்கிற கோவத்துல இப்படி பேசுதுடா அம்மா. நீ வேணும்னா ஃபிரிட்ஜ் திறந்து பாரு, அவளுக்கும் பூ இருக்கு” என்றாள். 

தான் அவசரப் பட்டு பேசி விட்டோம் என புரிந்து கோவத்தை தணித்தவன், “அத உனக்கு கொடுக்கும் போதே அவ கைலேயும் கொடுத்திருந்தா இப்படி பிரச்சனை ஆகியிருக்காதுன்ன?” என்றான். 

“ம்ம்… உன் பொண்டாட்டி உங்கிட்ட சொல்லிக் கொடுக்காம இருந்திருந்தா கூடத்தான் பிரச்சனை ஆகியிருக்காது” என்றாள் பூங்கொடி. 

“அக்கா! அவ சொல்லலைங்கிறேன், சும்மா அவள அவள பேசுற நீ” மீண்டும் கோவமடைந்தான் சேரன். 

“போதும்டா தம்பி! பொண்டாட்டி மோகம் புடிச்சு ஆட்டுது உன்னை, அதான் அம்மாவை பேசுனது பத்தாதுன்னு என்னையும் பேசுற” தம்பியின் மீதே குற்றத்தை திருப்பிய பூங்கொடி விடு விடு என வெளியே சென்று விட்டாள்.