சேரனின் பைக் ஊரை கடக்கும் போது வழியில் தென்பட்டவர்கள் அனைவரும் அவர்கள் செய்து கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு இந்த புது மண ஜோடியை ரசனையாகவும் ஆராய்ச்சியாகவும் கிண்டலாகவும் என பல விதமாக பார்த்தனர்.
“இதென்ன காணாதத கண்ட மாதிரி உத்து உத்து பார்க்கிறாங்க எல்லாரும்” எனக் கேட்டாள் மதுரா.
“அவ்வோ என்னமாவது பண்ணிட்டு போவட்டும். நீ என்னைய நெருங்கி உட்காருடி” என அவன் உல்லாசமாக சொல்ல, அவளும் நெருங்கி அமர்ந்து அவன் இடுப்பை சுற்றி கை போட்டுக் கொண்டாள்.
திருத்துறைப்பூண்டி சென்று கைப்பேசி, உடைகள் என வாங்கிக் கொண்டு இரவு உணவுக்காக உணவகம் ஒன்று சென்றனர்.
செழியன் அவனது மனைவி செல்வி ஒரு வயது மகன் அபினவ் ஆகியோரும் அந்த உணவகத்தில்தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
“டேய் மாப்ள, சொல்லவே இல்ல இங்குட்டு வர்றேன்னு… வா வா…” செழியன் வரவேற்பு கொடுக்க, அந்த உணவு மேசையிலேயே இவர்களும் அமர்ந்து கொண்டனர். அவர்களுடையதும் காதல் திருமணம்தான். சேரன்தான் நடத்தி வைத்தது.
மதுராவுடன் செல்வி நட்பாக பேசினாள். மனைவிக்காக சேரன் சில்லி பரோட்டாவுக்கு ஆர்டர் கொடுக்க அது இல்லை என்றான் சர்வர்.
செல்வியும் மதுராவும் அவரவர் கணவன்மார்களை முறைத்த வண்ணம் இருந்தனர்.
இட்லியும் தோசையுமாக ஆர்டர் கொடுத்து சர்வரை அனுப்பி வைத்தாள் மதுரா.
“அட என்ன தங்கச்சி நீ! மாப்ள சொல்லி வாங்கி கொடுத்துருப்பான்ன?” என்றான் செழியன்.
“எப்பவோ ஒரு தடவ வெளில சில்லி பரோட்டா சாப்பிட்டிட்டு இருக்கும் போது போட்டோ எடுத்து இவருக்கு அனுப்பினேன். அவராவே அதுதான் எனக்கு புடிச்சதுன்னு நினைச்சுக்கிட்டார்” என விளக்கம் சொன்னாள் மதுரா.
“போதும் போதும், உங்க பையனுக்கு தூக்கம் வந்திட்டு போல, செத்த தூக்கிட்டு வெளில போய் தட்டி கொடுங்க” என்ற செல்வி மகனை கணவனிடம் கொடுத்தாள்.
சாப்பிட்டு முடித்திருந்த செழியன் கை கழுவ குழந்தையோடே சென்றான். மதுரா தன்னிடம் தர சொல்லி கேட்டும் கை மாறிக் கொண்டே இருந்தால் அழுவான் என சொல்லி சென்றான்.
கை கழுவப் போன இடத்தில் எதிரில் வந்தவன் செழியனை இடித்து விட குழந்தை கையில் இருந்ததால் “பாத்து வர மாட்டீயா?” என கோவமாக கேட்டு விட்டான். பதிலுக்கு அவன் கெட்ட வார்த்தை கொண்டு திட்டி விட பார்த்திருந்த சேரனுக்கு அவன் சிதம்பரத்தின் ஆள் என தெரிய கோவமாக அங்கு வந்தவன் அவனை அறைந்து விட்டான்.
பிரச்சனையாகி மேலாளர் வந்து சமரசம் செய்து வைத்து என சற்று நேரம் அமர்க்களப் பட்டு விட்டது.
ஒரு வழியாக சாப்பிட்டு வெளியே வந்த பின், “எதுக்கு இவ்ளோ கோவம் உங்களுக்கு? பொது இடத்துல இப்படித்தான் நடப்பாங்களா?” என கடிந்தாள் மதுரா.
“என்ன என் பெரியப்பா? என்னிக்காவது அவரை பத்தி பாசமாவோ இல்ல அவருக்கு ஏத்துக்கிட்டோ பேசியிருக்கேனா நான்? நீங்கதான் எல்லாம்னு சொன்னா மட்டும் போதாது, அப்படி நடக்கவும் செய்யணும்” கலங்கிய குரலில் சொன்னவள் சற்று தள்ளி போய் நின்று கொண்டாள்.
“என்ன ண்ணா நீங்க?” கண்டனமாக பார்த்தாள் செல்வி.
“பாத்து சூதானமா பேச தெரியாதாடா உனக்கு? நைட்டு பொண்டாட்டி கூட சண்டை போட்டு பழக்கமில்லைன்ன உனக்கு, அதான் கெடந்து துள்ளுற?” கிண்டலாக செழியன் சொல்லிக் கொண்டிருக்க, அவனை முறைத்து விட்டு மதுராவிடம் சென்றான் சேரன்.
“வெளில வந்த இடத்துல என்னடி இது தனியா போய் நிக்குறது? இனி அந்தாள உன் பெரியப்பன்னு சொல்ல மாட்டேன், போதுமா?” என சமாதானம் செய்தான்.
“ம்ம்ம்… அப்புறம் இப்படி சட்டு சட்டுனு யாரையும் கை நீட்டி அடிக்கிறதையும் விடுங்க”
“ஏதேது! கொஞ்சம் இறங்கி வந்தா ஆயிரத்தெட்டு ரூல்ஸ் போடுற? நேரமாவுதுன்ன, கிளம்பலாம்”
“அப்ப அடிக்கிறத விட மாட்டீங்க?”
“என் எதிர்ல இருக்கவனே அத முடிவு பண்ணிடுவான். சின்ன குழந்தை வச்சுகிட்டு நமக்காக நின்னுட்டு இருக்கான் செழியன், வரப் போறியா இல்லயா இப்போ?” என அவன் அதட்ட அதற்கு மேல் அவளும் பேசாமல் அவனோடு நடந்தாள்.
ஒன்பதரை மணி போலதான் ஊர் வந்தனர்.
ஜவுளிக்கடை பைகள், கைப்பை என மதுராவின் கை நிறைந்த பைகளை பார்த்த கனகா, “ஆம்பளைக்கு என்னத்த தெரியும், போற பொம்பள பொறுப்பில்லாம ஊதாரியா இருந்தா குடும்பம் வெளங்கின மாதிரிதான்” என்றார்.
மதுரா கோவத்தோடு அறைக்கு சென்று விட, “வாங்கினத என்ன ஏதுன்னு என்கிட்ட காட்டினாளாங்கிறேன்? என்னமோ அவ பொறந்த வூட்டு சீர் கணக்கா அத்தனை பையையும் அள்ளிக்கிட்டு டங் டங்கன்னு போறா?” என நொடித்தார்.
“இப்படி பேசிட்டே இருந்தா உன் தொண்டை இன்னும் நோவும், நீ பேசுற பேச்சுக்கு எதுத்து பேசாம போறாவளேன்னு நினைச்சிக்க” என்றான் சரவணன்.
“ரெண்டு நாள்லேயே சலிச்சு வருதுடா. பேசி பிரயோசனமே கிடையாது” எரிச்சலாக சொல்லி சேரனும் அறைக்கு சென்றான்.
“உங்க அம்மாக்கு எதுக்கு காட்டணும் நான்? எம்புருஷன் எனக்கு வாங்கி கொடுக்கிறதுக்கு எல்லாம் யாருக்கும் கணக்கு சொல்லி காட்டிட்டு இருக்க முடியாது போங்க” என்றாள் மதுரா.
“உன்கிட்ட நான் ஒண்ணுமே சொல்லலையேடி”
“சொல்லுவீங்க, அதான் நான் முந்திக்கிட்டு சொல்லிட்டேன். கொஞ்ச நாள் பொறுங்க வீட்டுல சம்மதம் வாங்கிடுறேன்னு நான் சொன்னதை மதிக்காம இப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டது அவங்க மகன்தானே? என் வீட்லேயும் ஒண்ணும் இல்லாம இல்ல, எனக்கு நகை வரையிலும் எங்கம்மா சேத்து வச்சிருந்தது, சீர் வாங்குற பணம் பேங்க்ல கெடக்கு. ஒண்ணும் இல்லாதவன்னு மதியானம் சொன்னாங்க, இப்ப ஊதாரிங்கிறாங்க. ரெண்டு நாளைக்குள்ளேயே இந்த வீட்ல கண்ண கட்டிக்கிட்டு வருது” மதுராவின் ஆதங்க அனத்தல் நீண்டது.
“இந்த பேச்சு என்கிட்ட பேசுறதுக்கு என் அம்மாகிட்டயே பேச வேண்டியதுதானே?”
“மாட்டேன்னு நினைக்காதீங்க”
“தாராளமா பேசு. உங்க மகன்தான் என்னைய மயக்க மருந்து கொடுத்து கடத்திக்கிட்டு வந்தான், அவனை கேளுங்க என்ன கேக்காதீயன்னு சொல்லிப்புடு”
“சரி, இனிமே இப்படியே சொல்றேன். என்னடி இப்படி பேசுறேன்னு கேட்டா உங்க மகன்தான் பேச சொன்னாருன்னும் சொல்லிடுறேன்” என்றாள்.
திகைத்து போன சேரன், தன் மனைவி சிரிப்பை அடக்கிக் கொண்டு நிற்பதை பார்த்து விட்டு அவளருகில் சென்று காதை பிடித்து திருகினான்.
தன் காதிலிருந்து அவனது கையை விலக்கியவள், “நான் போய் எதையும் காட்ட மாட்டேன், காட்டினாலும் மதிக்க மாட்டாங்க உங்கம்மா. வேணும்னா நீங்க போய் காட்டிட்டு வாங்க” என்றாள்.
“அதெல்லாம் வேணாம். உங்களுக்குள்ள சரியாகுறப்போ நீயே பார்த்துக்க” என்றவன் கதவை தாழிட்டு வந்து அவளை அணைத்துக் கொண்டான்.
“சரியாகும்னு நம்பிக்கையே இல்லை” என வருத்தமாக சொன்னாள்.
கட்டிலில் தன் அணைப்பில் வைத்துக்கொண்டே என்னவென அவன் விசாரிக்க, காலையில் அவள் சமைத்ததை மாமியார் சாப்பிடாதது, பூங்கொடி வந்தது, பேசியது என அனைத்தும் சொன்னாள்.
“தயவுசெஞ்சு மூட்டி கொடுக்கிறேன்னு மட்டும் நினைக்காதீங்க. உங்களை விட்டா யார்கிட்ட சொல்லுவேன்?”
“மூட்டி கொடுக்கிறேன்னு நினைப்பேன்னு நினைச்சியா நீ? என்கிட்ட சொல்லாம யார்கிட்ட சொல்லுவ? எதா இருந்தாலும் சொல்லணும்” என உறுதியாக அவன் சொல்ல தலையாட்டிக் கொண்டாள்.
“உனக்கும் இதுதான் வீடு மதுரா. இங்க இதைதான் செய்யணும் இத செய்யக் கூடாதுன்னு உன்னை யாரும் சொன்னா நியாயமா இல்லைனு உனக்கு தெரிஞ்சா அத கண்டுக்காத, அடுப்படிக்குள்ள போக கூடாதுன்னு அக்காவும் அம்மாவும் இனி சொல்ல மாட்டாங்க. உனக்கு பிடிச்சதை சமைச்சுக்க, செஞ்சுக்க” என அவன் சொல்லிக் கொண்டிருக்க திடீரென அவனிடமிருந்து விலகி அமர்ந்தாள்.
என்ன என அவன் கேட்க, “உடும்பு கறிதான் உங்க ஃபேவரிட்டா? முயல் கூட சாப்பிடுவீங்களா?” எனக் கேட்டாள்.
“அந்தப் பய சொன்னான்னு நீயும் கேட்குற. உன் அத்தான் உடும்பு மாதிரி இந்த முயலைதான் பிடிச்சுக்குவான்” என குறும்பாக சொன்னவன் அவளை தன்னிடம் வேகமாக இழுத்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
“உன் நெனப்புலேயே நேரத்துக்கு தூங்காம லேட்டா தூங்கி, காலைல உன் நெனப்போடயே எந்திரிச்சு… என்ன வாழ்க்கைடா இதுன்னு கடுப்பாகி… ம்ம்… மூணு வருஷம் காத்துக் கெடந்து என் கைக்குள்ள வந்திருக்க” என்றவன் அணைப்பின் இறுக்கத்தை தளர்த்தி அவளது முகத்தை நிமிர்த்தி இதழ்களில் முத்தமிட்டான்.
பின்னர் அர்த்தமுள்ள பேச்சுக்களுக்கு இடமில்லாமல் போனது.
நடு இரவை தாண்டிய நேரம் ஒருவர் அணைப்பில் இன்னொருவர் இருக்க சுகமான அயர்வோடு உறங்க ஆரம்பித்தனர்.