செழியனுக்கு சொந்தமான தென்னந்தோப்பில் உள்ள மோட்டார் அறையில் இருந்தனர் சேரனும் மதுராவும்.
அறை நன்றாக சுத்தம் செய்யப் பட்டு தண்ணீர் பானை, உணவு, ஒற்றைப் போர்வை என மிச்சமிருக்கும் அன்றைய நாளை கடக்க ஏதுவாக இருந்தது.
சுவற்றில் சாய்ந்து முழங்காலில் முகம் வைத்து அழுது கொண்டிருந்தாள் மதுரா.
“நானும் அரை மணி நேரமா பார்க்கிறேன், அழுகைய நிறுத்த மாட்டேங்குற, என்னடி ஆகிப் போச்சு இப்ப?” அதட்டல் போட்டான் சேரன்.
வேகமாக நிமிர்ந்தவள், “என்னைய அசிங்க படுத்தறதுக்காக இங்க அழைச்சிட்டு வந்திருக்கீங்களா?” என இரைந்தாள்.
“மெல்லடி, ஆளுங்க இல்லைனாலும் நீ போடுற சத்தம் எட்டூருக்கு கேட்கும் போலயே”
“வாங்க உங்க வீட்டுக்கு போயிடலாம்”
“முடியாது, என் கல்யாணத்தை செல்லாதுன்னு சொன்னானுவோ? நாளைக்கு சொல்ல சொல்லு. நான் எவளையோ ஒண்ணும் கூட்டியாரல, எம்பொண்டாட்டியதான் அழைச்சிட்டு வந்திருக்கேன்”
மதுரா முறைக்க, “என் அம்மாக்கு கூட விருப்பம் இல்லடி மதுரா, திரும்பவும் உன்னை உன் அண்ணன்காரன் பிளாக்மெயில் பண்ணினா உன்னையும் நம்புறதுக்கு இல்ல, இப்பவும் கட்டாயப் படுத்தி கட்டினேன்னு சொன்னாலும் சொல்லுவ. நாளைக்கு போய் நின்னோம்னா உன் அண்ணனே வேற வழி இல்லாம என் கூட அனுப்பி வச்சிடுவான்” என பொறுமையாக சொன்னான்.
“ஊரே கேவலமா பார்க்கும் நம்மள”
“என்னத்த பார்க்கும்? கல்யாணம் முடிஞ்சவங்கள மக்கா நாள் எல்லாரும் அப்படித்தான் பார்ப்பாய்ங்களா? நம்மள பத்தி எல்லாருக்கும் தெரியும்ன? அப்படியே பார்த்தாலும் பார்த்திட்டு போகட்டும்ங்கிறேன்” அலட்சியமாக சொன்னான்.
மதுராவுக்கு மீண்டும் அழுகை பொங்கியது. கடுப்பானவன், “போடி… கதவ தொறந்துகிட்டு போ உன் வீட்டுக்கு. திரும்ப வரக்கூடாது என்கிட்ட சொல்லிப்புட்டேன்” என மிரட்டினான்.
அவனிடமிருந்து முகம் திருப்பிக் கொண்டவளுக்கும் இனி அவள் ஒன்றும் செய்ய இயலாது என்பது புரிய, மெல்ல மெல்ல அவளின் அழுகை மட்டு பட்டு நின்றது.
இருட்ட ஆரம்பித்த பின்னர்தான் மதுரா வீட்டில் இல்லை என்பதே தெரிய வந்தது. வீடு வந்த சரஸ்வதியிடம் மகள் எங்கே என அஞ்சலை கேட்ட போது முன்னரே வந்து விட்டாள், அறையில் இருப்பாள் என சொல்லியிருந்தாள்.
அஞ்சலையும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. தேநீர் அருந்த மகளை தேடவும்தான் விஷயம் வெளிப்பட்டது.
வனராஜன் வீட்டுக்கு வந்து விட்டார் சிதம்பரம். சரஸ்வதியிடம் எங்கு எப்படி சென்றாள் என வனராஜன் விசாரிக்க, “போன்ல ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தா, அப்புறம் வீட்டுக்கு போறேன்னு கிளம்பிட்டா, வேற எதுவும் எனக்கு தெரியாது” என சொல்லி வீட்டிலிருந்த மதுராவின் கைப்பேசியை அணைத்து ஒளித்து வைத்து விட்டாள்.
சேரனின் வீட்டுக்கு சென்று தேடிப் பார்த்த ஆட்கள் அங்கு இல்லை என தெரிவித்தனர். ஊருக்குள் வந்த கார் ஒன்று திருத்துறைப்பூண்டி நோக்கி சென்றதாக தகவல் வர ஆட்கள் அங்கு விரைந்தனர்.
அருகில் இருக்கும் பெரிய ஊர்களின் பேருந்து மற்றும் இரயில் நிலையங்கள் என தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருந்தது.
மகனின் நண்பர்களை அழைத்து விசாரித்தார் கந்தசாமி. எங்களுக்கு எதுவும் தெரியவே தெரியாது என சாதித்தனர் அவர்கள்.
மோட்டார் அறையில் அவர்கள் இருக்க கூடும் என யாருமே கற்பனை கூட செய்திருக்கவில்லை.
எமர்ஜென்சி லைட்டை ஒளிர விட்டான் சேரன். அமர்ந்து அமர்ந்து மதுராவுக்கு முதுகு வலிக்க எழுந்து நின்று நெட்டி முறித்தாள். பானையிலிருந்து தண்ணீர் எடுத்து கொடுத்தான்.
பருகியவள், “எவ்ளோ நேரம் இங்கேயே இருக்கிறது, வெளில போய் நடந்திட்டு வர்றேன்” என்றாள்.
“ஊரே பத்திக்கிட்டு எரியுது, செவனேன்னு இரு” என என்றான்.
சலிப்பாக உச்சு கொட்டியவள் அவளது இடுப்பை அவளே பிடித்துக் கொள்ள, “படுத்துக்க” என்றான்.
“எது இங்கயா?”
“ம்ம்ம்… இங்குட்டுத்தான்” அழுத்தமாக சொன்னவன் போர்வையை எடுத்து விரித்து படுக்க சொன்னான்.
படுத்துக் கொண்டவள் சுடிதார் துப்பட்டாவை கொண்டு போர்த்திக் கொண்டாள்.
அவள் பதில் பேசாமல் இருக்க, அமர்ந்திருந்தவன் கால்களை நீட்டி அவள் கால்களின் மீது போட்டுக் கொண்டான். தன் கால்களை உதறி அவனது கால்களை அப்புற படுத்தினாள். அவன் வேண்டுமென்றே மீண்டும் கால்களை போட இந்த முறையும் உதறியவள் கூடவே உதைத்தும் விட்டாள்.
“அடிக் கழுதை!” செல்லமாக வசை பாடியவன் அவள் கால்களுக்கு அருகில் சென்றமர்ந்து கால்களை அவனது மடியில் போட்டுக் கொண்டான்.
“கோவ படுத்துறீங்க, உள்ளுக்குள்ள அவ்ளோ டென்ஷனா இருக்கு, இதென்ன பச்ச புள்ள மாதிரி விளையாட்டு?” என கடிந்து கொண்டாள்.
சட்டென அவள் கால்களை அகற்றியவன் வேகமாக அவளை தன்னிடம் பிடித்திழுத்தான். அவனது முரட்டுத்தனத்தில் இவள் கடுமையாக பார்க்க சின்ன சிரிப்புடன் அவளது தலையை மடியில் வைத்து படுக்கும் படி செய்தான்.
“நீ கடுப்பாக்குற மாதிரி பேசினா இப்படித்தான் நடக்கும். உன்னைய நான் கட்டி மூணு வருஷம் ஆகுது. இன்னிக்கு வெறும் தாலியத்தான் கட்டினேன், மத்தபடி நாம எப்பவோ புருஷன் பொண்டாட்டி ஆகியாச்சு. கட்டினவன் கூட தனிமையில இருக்க எதுக்கு உனக்கு டென்ஷன்?”
“இன்னும் நம்ம வீட்ல எல்லாம் இதை ஒத்துக்கலதானே?” என அவள் கேட்டதற்கு நன்றாக முறைத்து வைத்தவன் சுவரில் தளர்வாக சாய்ந்து கொண்டான்.
அவள் எழப் போக ஒரு கை கொண்டு தன் மடியிலேயே அவளை அமுக்கி பிடித்தான்.
சில வினாடிகளில் அவனது மடியில் அவள் இயல்பாகி விட்டாள். அவனது கோவமும் குறைந்து நீர்த்துப் போக, “இடுப்பு வலிக்குதுன்னியே… எங்க?” எனக் கேட்டு அவளது இடுப்பில் கை வைத்தான்.
அவனது கையை நாசூக்காக விலக்கி விட்டவள், “என்ன என்னாங்குறேன்… இன்னும் என்ன திட்டம் இருக்கு உங்க மனசுல?” எனக் கேட்டாள்.
முதலில் புரியாதவன் பின் அவளின் கேள்வியை புரிந்து கொண்டு குறும்பாக சிரித்தான்.
அவள் அவனது மடியிலிருந்து எழப் பார்க்க விடாதவன், “கண்ட படி கற்பனை பண்றது நீ. நான்தான் பொல்லாதவங்கிற மாதிரி நடந்துக்காத. எப்டி எப்டி இந்த மோட்டார் ரூமுக்குள்ள மொத ராத்திரியா? போடி கிறுக்கு” என்றான்.
அவளது முகத்தில் நிலைத்திருந்த அவனது பார்வை தடம் மாறி உலா வர மதுராவுக்கு வியர்க்க ஆரம்பித்திருந்தது.
“நீ எத நினைச்சு பயப்படுறியோ அது இன்னிக்குதான் இல்லை, ஆனா நமக்குள்ள நடக்கத்தான் போகுது, எதுக்கு பயம்னு சொல்லு, நான் வேணும்னா தெளிய வைக்கிறேன்”
“அச்சோ பேச்ச பாரு, வேற ஏதாவது பேசுங்க, இல்லைனா நான் தூங்குறேன்” என்றவள் கண்களை மூடிக் கொண்டாள்.
“அட சும்மா சொல்லுடி, இப்பவே பயத்தை போக்கிட்டேன்னா அந்த நேரம் டைம் வேஸ்ட் ஆகாதுன்ன?” என குழைந்த குரலில் அவன் சொல்ல கண்களை மூடிய படியே சத்தமில்லாமல் சிரித்தாள்.
வெளியில்நல்ல இருட்டு, எமர்ஜென்சி லைட் கையில் எடுத்துக் கொண்டு கதவை திறந்து இயற்கை உபாதைகளை தீர்த்துக் கொண்டு தொட்டியில் இருந்த நீரில் கை கால் கழுவிக் கொண்டு வந்தனர்.
நாளை என்னாகுமோ என்ற நினைப்பு மீண்டும் மதுராவுக்கு வந்து விட்டது. உணவை பிரித்து வைக்க சாப்பிடாமல் அவனது புருவத் தழும்பை பார்த்துக் கொண்டே யோசனையானாள். மூன்று வருடங்களுக்கு முன் அண்ணன் மிரட்டியதில் சேரனுக்கு எதுவும் ஆகி விடுமோ என்ற பயம்தான் அதிகமாக இருந்தது. இன்றைய தினம் அப்படி எதுவும் ஆகி விடாது, என் கணவனை எதுவும் செய்யும் அளவுக்கு அண்ணன் துணிய மாட்டார், அப்படி எதுவும் செய்ய துணிந்தாலும் சேரன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை அபரிமிதமாக இருந்தது.
ஆனால் இப்படி இரவில் இவனுடன் இருப்பதை பற்றி நாளைக்கு என்ன விமர்சனம் வருமோ என்ற பயமும் என்ன ரகளை ஆகுமோ, இரு குடும்பத்துக்குள்ளும் சுமூக உறவு என்பதே இல்லாமல் போய் விடுமோ எனவும் பலவித யோசனைகள்.
“வேதாளம் சும்மா சும்மா மரம் ஏறிக்குதா? சாப்பிட்றீ” என அதட்டினான்.
“உங்களுக்கென்ன ஆம்பள, ஈஸியா என்னைதான தப்பு சொல்லுவாங்க? எல்லாரையும் எப்படி ஃபேஸ் பண்ணுவேன்?” கேட்டவளின் கண்கள் கலங்கின.
“எவன் உன்னை என்ன சொல்றான்னு நான் கவனிச்சுக்கிறேன்” என அவன் சொல்லியும் அவளால் சாப்பிட முடியவில்லை. அவனும் சாப்பாட்டை தள்ளி வைக்கவும்தான் அவனுக்காக சாப்பிட்டாள்.
ஊருக்குள் என்ன நடக்கிறது என இருவருக்கும் தெரியவில்லை. மதுராவின் கைப்பேசி அவளது வீட்டில் கிடக்க, சேரன் அவனுடையதை செழியனிடம் கொடுத்து விட்டான். ஏதாவது எக்குத்தப்பாக நடந்தால் யாருக்கும் தெரியாமல் மதன் வந்து தகவல் சொல்வதாக சொல்லியிருந்தான். அவன் வராததால் திடமாகவே இருந்தான் சேரன்.
மேல் சட்டையை களைந்து போர்வையை உதறி விரித்து மல்லாந்து படுத்தவன் அவளது சுடிதார் துப்பட்டாவை கொண்டு போர்த்திக் கொண்டான்.
“சட்டையை கழட்டிட்டு என் துப்பட்டா எடுத்து போர்த்திக்கிறீங்க? சட்டையை போடுங்க, துப்பட்டாவா என்கிட்ட கொடுங்க”
“அட எவடி இவ? முழுக்கை சட்டையை போட்டா வெக்கையா இருக்கு, கழட்டினதும் குளிருது. உன் துப்பட்டாதான் சௌரியமா இருக்கு, போதுமா விளக்கம்? வா வந்து படு” என அவன் சொல்ல அவளோ தயக்கமாக பார்த்தாள்.
“நான் வேணும்னா வெளில போகவா?” எரிச்சலோடு கேட்டான்.
அதிகமாக அவனை கோவப்படுத்துகிறோம் என புரிந்து அவனுக்கு முதுகு காட்டிக் கொண்டு அவனை தீண்டாமல் படுத்தாள்.
“ரொம்பத்தான்…” என சலிப்பாக சொன்னவன் அவளது முதுகை பார்க்கும் படி திரும்பிக் கொண்டான்.
எவ்வளவு நேரம் ஒரே போல படுத்திருக்க முடியும்? அவன் பக்கமாக திரும்பியவள் கைகளை நெஞ்சோடு அணைவாக வைத்து கூச்சமும் சங்கடமுமாக பார்த்தாள்.
“என்னத்துக்கு இப்படி கூனி குறுகிப் போய் படுத்திருக்க? என்னடி இப்போ? இந்தா…” என்றவன் துப்பட்டாவை அவளுக்கே போர்த்தி விட்டான்.
“கோச்சுக்காதீங்க? எனக்கும் ஷையா இருக்கும்தானே?”
“ஆஆன்… அது ஒரு பக்கம் இருக்கட்டும் இருக்கட்டும். என்ன இப்ப கெட்டு போச்சு? சீக்கிரம் அதுக்கெல்லாம் பை பை சொல்லத்தானே போற” என்றவன் நேராக படுத்து கையை நீட்டி வைத்தவன் அவளை தன் கை வளைவில் தலை வைத்துக்கொள்ள செய்தான்.
இனி அவனை தவிர வேறு ஆதரவு இல்லை என்ற நினைவு அவளுக்கு எழ வாகாக படுத்து அவன் மார்பில் கை போட்டுக் கொண்டாள்.
இருவருக்கும் உறக்கம்தான் வருவேனா என்றது. சேரன் கூட இடையிடையில் உறங்கி விழித்து என இருந்தான். மதுராவுக்கு துளி தூக்கம் இல்லை.
இரவு நீளமாக தொடர்ந்து கொண்டே இருப்பது போல பிரம்மையை தந்தது.