அத்தியாயம் -5(2)

அஞ்சலை வாயடைத்து போய் பார்க்க, “அவளை தள்ளி விடணும்னு யாருக்கோ தள்ளி விடல, நல்ல சம்பந்தம் இது. யாரும் ஏதும் சொன்னாலும் இவன் விட மாட்டான், நல்லா பார்த்துக்கிடுவான், ஏதாவது ஒண்ணுன்னா நான் இருக்கேன், பெரியப்பா இருக்காரு. கண்டதையும் நெனக்காம கெட” என்றான்.

மதுராவின் சித்தி அஞ்சலையிடம் பேசி பேசியே சேரனை ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவரது மனதை கரைத்திருந்தார். அவருமே மகளை பார்க்கிறார்தானே? ஆனால் வீம்பாக நிற்கும் மகனை எதிர்க்க முடியவில்லை.

“நான் போய் சம்மதம்னு சொல்லப் போறேன். திருவிழா முடிஞ்சதும் வார மொத முகூர்த்தத்துல கல்யாணம்” என அறிவித்து விட்டு கூடம் வந்தான். ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த சரஸ்வதி திகைத்துப் போனாள்.

பெண் கொடுக்க வனராஜன் சம்மதித்ததில் மகிழ்ச்சியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றனர் சதீஷின் குடும்பத்தினர். பின் புறத்தில் துணி துவைத்துக் கொண்டிருந்த மதுராவுக்கு இது எதுவுமே தெரியவில்லை.

நான்கு நாட்கள் கழித்து அன்றைய தினம் மதுராவின் ஊரில்தான் பீமன் சாமியின் வருகை. மூன்று மணி அளவில் கொட்டு மேளம் முழங்க பூமி அதிர நடந்து வந்து கொண்டிருந்தார் பீமன்.

மதுராவின் வீட்டுக்கு வருவதற்கு முன் வழியில் படுதா விரித்து அதில் காய்ந்து கொண்டிருந்த மிளகாயை கண்டு விட்டு ஆவேசமாக ஓடினார் பீமன். படுதாவை தூக்கி மிளகாயை எல்லாம் விசிறி எறிந்த பீமன் அந்த ஆவேசம் குறையாமல் ஆட கிளம்பி விட்டார்.

“யாருடா அது வழியில மொளவாய காய வச்சு தொலைச்சது? பீமன் ஆட கெளம்பிட்டுதே… இப்ப என்ன செய்றதுங்கிறேன்?” என ஒருவர் கேட்க,

“பீமன் ஆடி பார்த்ததே இல்லையே…” என்ற வாலிப வயது பையன் ஒருவன் அரை நிமிடம் வீடியோ எடுத்து வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்தான். சில நிமிடங்களில் பீமனின் ஆட்டத்தை காண வேண்டி ஊரே அங்கு கூடி விட்டது.

மாடசாமியின் மாட்டுக் கொட்டகையில் அமர்ந்திருந்தாள் மதுரா. ஆமாம் சிறு வயதிலிருந்தே சித்தி வீட்டில் வளர்ந்தவளுக்கு பீமனை காண்பது என்றால் மிகுந்த பயம். வீட்டில் இருந்தால் வற்புறுத்தி வெளியில் அழைத்து வந்து பீமனிடம் திருநீறு வைத்துக்கொள்ள செய்வான் வனராஜன். ஆகவே இது போன்ற சமயத்தில் ஊரில் இருந்தால் இங்கு வந்து விடுவாள்.

மாடுகள் எல்லாம் மேய்ச்சலுக்கு போயிருக்க கொட்டகை காலியாகத்தான் இருந்தது. அவளுடன் அவளை போலவே பீமனுக்கு பயந்த சில நடுத்தர வயது பெண்களும் பிள்ளைகளும் இருந்தனர். அந்த பெண்களுக்கு எல்லாம் கொட்டு சத்தமே பயத்தை தரும், ஆகவே பல காலமாக இப்படி இங்குதான் வந்து விடுவார்கள்.

இலக்கில்லாமல் எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தாள் மதுரா. சற்று தள்ளியிருந்த பண்ணை வீட்டின் முகப்பில் கொட்டகையில் உள்ளவர்களின் பார்வைக்கு படாமல் மறைந்து நின்றிருந்த மதன் தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்தான்.

கொட்டகையில் உள்ளவர்கள் ஊர்க்கதையில் லயித்து போயிருக்க மதன் பக்கம் திரும்பவில்லை. மதுராவை நோக்கி கையசைத்து தன்னிடம் வர சொல்லி அழைத்துக் கொண்டிருந்தான் மதன்.

அவள் திரும்புவேனா என அமர்ந்திருக்க அருகில் இருந்த சரஸ்வதி மதனை பார்த்து விட்டாள்.

நாத்தனாரின் தோளில் தட்டிய சரஸ்வதி, “உன்னைய மதன் கூப்பிடுறத பாரு” என்றாள்.

ஆமாம் சரஸ்வதிக்கும் பீமன் என்றால் பயம். மதனை பார்த்த மதுரா யோசனையோடு அவளது அண்ணியை பார்க்க, அவள் எதிர்பார்க்காத வகையில் “போயிட்டு சீக்கிரம் வா” என அனுமதி கொடுத்தாள் சரஸ்வதி.

“அண்ணன்கிட்ட சொல்லிடாத அண்ணி” என கெஞ்சலாக மதுரா சொல்ல, சரி என தலையாட்டிக் கொண்டாள்.

அங்கிருந்த மற்றவர்களின் கவனத்தை கவராமல் மெல்ல அடியெடுத்து வைத்து நழுவி சென்றாள் மதுரா.

சரஸ்வதியும் அங்கிருப்பதை கவனித்த மதன் குழப்பமடைந்து உடனடியாக சேரனுக்கு அழைத்து விஷயத்தை சொன்னான்.

“ஒண்ணுத்தையும் உருப்படியா பார்க்க மாட்டியாடா நீ?” கடிந்த சேரன் தள்ளி நின்றிருந்த காரிலிருந்து இறங்கி அவ்விடம் வந்து சேர்ந்தான்.

மதுராவை அழைத்து சென்றாலும் அங்கிருப்பவர்கள் அவளை காணாமல் வனராஜனிடம் சொல்லி விடக்கூடும் என்பதால் மதுராவை விட்டே அவளது அண்ணன் பீமனிடம் ஆசி வாங்க அவளை அழைப்பதாகவும் பைக்கோடு முக்கத்தில் காத்திருப்பதாகவும் கூற வைத்து விட்டு பின்னரே கிளம்ப எண்ணியிருந்தனர்.

இப்போது சரஸ்வதியும் உடனிருக்க அப்படி ஏதும் சொல்ல இயலாதே. வேறு வழியில்லை, எதுவும் சொல்லாமல் கையோடு மதுராவை அழைத்து சென்று விடுவோம், இவளை காணவில்லை என வனராஜனுக்கு செய்தி தெரிந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என துணிந்தான் சேரன்.

மதுராவை தன்னுடன் வரும் படி சேரன் அழைக்க “சித்தி நம்ம விஷயமாதான் வீட்ல பேசிட்டு இருக்காங்க, அம்மா கூட முன்ன மாதிரி இல்லாம நமக்கு ஆதரவா யோசிக்கிற மாதிரி சித்தி சொன்னாங்க. எல்லாம் கூடி வர்ற நேரத்துல என்னங்க இது?” எனக் கேட்டு அவனுடன் செல்ல தயங்கினாள்.

“அதெல்லாம் ஆவுறதுக்கு இல்ல, ஒழுங்கு மரியாதையா இந்த அண்ணன் கூடவே கிளம்பி போயிடு” என்ற சரஸ்வதியின் குரலில் மூவரும் திகைத்து திரும்பினார்கள்.

மாட்டுக் கொட்டகை பக்கம் கவனித்து விட்டு தானும் யாரின் கண்ணுக்கும் புலப்படாத வகையில் வீட்டின் முகப்பில் மறைவாக நின்று கொண்ட சரஸ்வதி, சதீஷ் மற்றும் அவனது பெற்றோர் பெண் கேட்டு வந்ததையும் வனராஜன் முடிவையும் பற்றி சொன்னாள்.

வனராஜன் மீது கோவம் எழுந்தாலும் ‘இவளுக்கு என்ன திடீர் அக்கறை?’ என சரஸ்வதியை சந்தேகமாக சேரன் பார்க்க, மதுராவும் ‘இவளை நம்பலாமா?’ எனதான் பார்த்து நின்றாள்.

“உன்னைய சுள்ளு சுள்ளுன்னு பேசி வச்சாலாவது உனக்கு ரோஷம் வந்து நீயே அண்ணன்கிட்ட போக மாட்டியான்னுட்டுதான் அப்படியெல்லாம் பேசினேன்டி. மனசுல வச்சுக்காத, இங்குட்டு நான் பார்த்துக்கிறேன், கெளம்பு மொதல்ல” என்றாள் சரஸ்வதி.

அண்ணி நல்லவள்தான் என்பதில் மகிழ்ந்த மதுரா, “இல்லண்ணி, சித்தி நடத்தி வைப்பாங்க, நான் போகல” என்றாள்.

சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாளே என சரஸ்வதி தர்மசங்கடமாக பார்க்க, இனி பேசி புண்ணியமில்லை என நினைத்த சேரன் அலேக்காக அவளை தூக்கி தோளில் போட்டுக் கொண்டான்.

“ஐயோ என்ன செய்றீங்க?” மதுரா பதற, “வேணும்னா கத்தி கூப்பாடு போட்டு அத்தன பேரையும் இங்குட்டு வரவை” என எரிச்சலாக சொன்னான் சேரன்.

வாயை மூடிக் கொண்டாலும் அவனிடமிருந்து இறங்க திமிறிக் கொண்டிருந்த மதுராவை அனாயாசமாக காருக்குள் விட்டு, அவன் கையோடு வந்திருந்த அவளது சுடிதார் துப்பட்டாவோடு அவனும் ஏறிக் கொள்ள வேகம் எடுத்தது கார்.

மாலை போல அவளது கழுத்தில் துப்பட்டாவை போட்டு விட்டவன் புன்னகை செய்ய, அவள் கலவரமாக பார்க்க, இவன் முகத்தை கடுமையாக்கிக் கொண்டான்.

எதுவும் அசம்பாவிதமாகி விட்டால் சேரனை காக்க உடனடியாக ஆட்களோடு செல்ல வேண்டும் என்பதால் அதை கவனிக்க புறப்பட்டு சென்றான் மதன்.

வனராஜன், சிதம்பரம் உட்பட ஊரே பீமனின் ஆட்டத்தை வேடிக்கை பார்க்க கூடியிருந்தது. மேள சத்ததுக்கு ஈடு கொடுத்து தன் ஆட்டத் திறமையை நிரூபித்துக் கொண்டிருந்தார் அந்தக் கலைஞர். ஆகவே மதுராவை அழைத்துக் கொண்டு சேரன் செல்வது யாருக்கும் தெரியவில்லை.

கொட்டகையில் மதுரா எங்கே என கேட்டவர்களிடம், “பண்ணை வீட்டு முக்குல நின்னுதான் அவ சித்திகிட்ட போன் பேசிக்கிட்டு கெடக்கா” என சொல்லி விட்டாள் சரஸ்வதி.

காரில் இருந்த மதுரா நீங்கள் செய்வது சரியில்லை, இப்படியெல்லாம் வேண்டாம் என சொல்லிக் கொண்டே வர, அவளை கோவமாக பார்த்தவன், “நான் உனக்கு வேணாம்னு சொல்லு, இங்குட்டே இறக்கி விட்டுட்டு போயிக்கிட்டே இருக்கேன், இல்லை நான்தான் உனக்குன்னு நெனப்பு இருந்தா மூச்சு மட்டும்தான் விடணும், வேற பேச்சே இருக்கப்படாது” என அதட்டல் போட்டான்.

கண்களும் மனமும் கலங்கினாலும் பின் வாயே திறக்கவில்லை மதுரா.

இவர்கள் இருவரின் ஊர் இல்லாமல் வேறொரு ஊர்க் கோயிலில் போய் நின்றது கார். ஆள் அரவம் இல்லாத அந்த கோயிலில் பூ மாலைகளோடு தயாராக நின்றான் செழியன்.

மதுராவை முறைப்பாக ஒரு பார்வை பார்த்த சேரன் காரிலிருந்து இறங்க, அவளும் இறங்கி அவன் பின்னால் நடந்து சென்றாள். இருவரின் கைகளிலும் மாலைகளை தந்தான் செழியன்.

“இப்ப கூட ஒண்ணுமில்லடி, வேணாம்னா போயிட்டே…” அடுத்த வார்த்தை சேரன் உதிர்ப்பதற்குள் அவனது கழுத்தில் மாலையை அணிவித்திருந்தாள் மதுரா.

“எந்தங்கச்சி எவ்ளோ ஃபாஸ்ட்டா இருக்கு, போடுறா மாப்ள மாலைய” உற்சாகமாக செழியன் சொல்ல மதுராவின் கழுத்தில் மாலையிட்டான் சேரன்.

பூசாரி யாரும் இல்லாமல் தெய்வத்தின் முன்னிலையில் வேண்டிக் கொண்டு மதுராவுக்கு தாலி கட்டினான் சேரன்.

போகலாம் என செழியன் அவசரப் படுத்த மதுராவின் விருப்பத்தின் பெயரில் கோயிலை சுற்றி வந்து வணங்கி எழுந்தனர்.

இனியாவது கிளம்புவார்களா என செழியன் பார்த்து நிற்க சேரனுக்கு திருநீறு வைத்து விட்டவள், குங்குமத்தை காட்டி, “வகிட்டிலேயும் தாலியிலேயும் வச்சி விடுங்க” என்றாள்.

சேரன் முறைக்க, “மொத தடவ கழட்டி கொடுக்கும் போது என் உசுரே என்கிட்ட இல்ல, இது என் கடைசி மூச்சு வரைக்கும் என்கிட்டேயே நிலைச்சு இருக்கணும், வச்சி விடுங்க” என அவள் அழுத்தி சொல்லி அவ்வாறே செய்தான்.

மீண்டும் சந்நிதியை பார்த்து மதுரா கையெடுத்து கும்பிட்டு நெஞ்சுருகி வேண்டி நிற்க, “அட பக்திமான் தங்கச்சி! அரிவாள தூக்கிட்டு கும்பலா வந்தா சமாளிச்சு நிக்க நாங்க ஒண்ணும் சக்திமான் இல்லமா. கொஞ்ச நாளைக்கப்புறம் என் மாப்ள இங்குட்டு அழைச்சிட்டு வருவான், அப்ப சாவகாசமா நின்னு சாமிய கும்பிடு. இப்ப நேரமில்ல ஆயி, உன் அண்ணுக்கு சேதி புடி பட்டு போறதுக்குள்ள கெளம்பனும்மா” என்றான் செழியன்.

“எங்க போகணும்? இவர் வீட்டுக்குதானே போகணும்?” என மதுரா கேட்க பதில் சொல்லாமல் விழித்தான் செழியன்.

பதிலுக்காக சேரனை பார்த்தாள் மதுரா.

“தாலி கட்டினத செல்லாதுன்னு உன் வீட்ல, பஞ்சாயத்துல எல்லாம் சொன்னாய்ங்கல்ல?”

“ஓ ரெஜிஸ்டர் ஆஃபீஸ் போறோமா?”

“செத்த நேரத்துல உன் பெரியப்பன் வீட்டு ஆளுங்க எல்லாம் அங்குட்டுத்தான் கூடுவானுங்க. இவ்ளோ ஏன் அந்த ரெஜிஸ்டராரே உன் பெரியப்பனோட ஆளுதான்”

நொடிகள் யோசித்தவள், “போலீசுக்கு போறோமா?” எனக் கேட்டாள்.

“அட எவடி இவ? உன் பெரியப்பன் கட்சின்ன ஆட்சில இருக்கு? போலீஸ் எல்லாம் சரியா வராது. பஞ்சாயத்துலேயே என்கூட உன்னை அனுப்பி வைக்க வைக்கிறேன்”

“என்ன செய்ய போறீங்க?”

“சொல்றேன் வா” என மட்டும் சொன்னவன் அவள் கையை பிடித்துக்கொண்டு காருக்கு சென்றான்.