ஆள வந்தாள் -26(final)

அத்தியாயம் -26(1)

வீட்டில் செய்ய வேண்டிய திருமண வேலைகள் எதையுமே கனகாவால் செய்ய இயலவில்லை. வெளிச்சம் பார்த்தால் கண் கூசியது, முகத்தின் காயங்கள் எரிச்சலை கொடுத்தது. படுக்க சொல்லியே உடம்பு படுத்தி வைத்தது.

மலைத்து போகாமல் அனைத்தையும் மதனின் அம்மா, பூங்கொடியின் மாமியார் என மூத்த பெண்மணிகளிடம் கேட்டு கேட்டு பாந்தமாக செய்தாள் மதுரா. பானைகளில் பாலி(நவ தானியங்கள்) வளர செய்தாள். பெண் வீட்டிற்கும் மற்ற முறை செய்ய வேண்டிய உறவுகளுக்கும் ஆடைகள் எடுத்து தனித் தனியாக பெயரிட்டு கவர்களில் வைத்து விட்டாள்.

வீட்டு சாமி கும்பிடுவதை குறையில்லாமல் செய்தாள். அதி காலையில் பந்தக் கால் நடும் பொழுது கூட அக்கம் பக்கத்து சுமங்கலி பெண்களை அழைத்து வந்து அவர்களை நன்றாக கவனித்து அனுப்பினாள்.

வீட்டு விவகாரங்கள் பற்றி ஆயி அது செஞ்சாச்சா? ஆயி இது இருக்கா என மதுராவிடம்தான் கேட்டறிந்து கொண்டார் கந்தசாமி.

பந்தல் போடப் பட்டிருக்க வாழை மரங்கள் வைத்து கட்டிக் கொண்டிருந்தனர் இரண்டு ஆட்கள். மேற்பார்வை செய்து கொண்டிருந்தான் சேரன். அனைவருக்கும் தேநீர் எடுத்து வந்து தந்தாள் மதுரா.

“நல்லா இருக்கீயளா ஆயி? என்னை நெனப்பிருக்கா? ஆயி சடங்கானப்போ வீட்ல பந்த போட்டது நான்தான் ஆயி” என தன்னை அறிமுகம் செய்து கொண்டார் ஒரு நடுத்தர வயது ஆள்.

அவளுக்கு சரியாக நினைவில்லாத போதும் நலன் விசாரித்து ஏதோ பேசிக் கொண்டிருந்தாள்.

“நேத்து நடந்தாப்ல இருக்கு, மெட்ராசுக்கு படிக்க போனீயே… அங்குட்டே கலயாணம்லாம் முடிச்சு இருந்திடுவேன்னு நினைச்சேன். திரும்பவும் கிராமத்துக்கே வந்திப்புட்டியே…” ஏதோ அதில் மிகுந்த வருத்தம் என்பது போல பேசினார்.

சேரன் சுரு சுரு என முறைத்திருக்க, “எண்ணி மூனு வேளை மட்டும் பஸ் ஓடுற ஊருக்கு எதுக்கு ஆயி வந்த நீ? என்னமோ போ” என்றார்.

கணவனை ரகசியமாக பார்த்து சிரித்தவள், “ப்ச்… என்னமோ ண்ணா என் கெரகம் வந்து வசமா மாட்டிகிட்டேன்” என பாவமாக சொல்லி உள்ளே சென்று விட்டாள்.

மதுரா அறைக்குள் வர, அவள் எதிர் பார்த்திருந்தது போலவே அவளை தேடிக் கொண்டு வந்திருந்தான் சேரன்.

அவள் தோரணையாக பார்க்க, “ஏட்டி எங்க திரும்ப சொல்லு… மாட்டிகிட்டியா நீ?” என பொய் கோவத்தோடு கேட்டான்.

“இல்லியா பின்ன?” என அவள் கேட்க, இடையோடு சேர்த்து அவளை கட்டிக் கொண்டவன், “இந்த மாட்டிக்கிறததானே சொன்ன?” எனக் கேட்டான்.

ஆம் என்பதாக மேலும் கீழுமாக அவள் தலையாட்ட, அவளது புடவை முந்தானையை கையில் சுற்றிக் கொண்டவன், “நம்ம மாட்டிக்கிற சங்கதி பத்தி தெரியாம வாழை மரத்தை கட்டினவரு உம்மேல பாவப்பட்டு உச்சு கொட்டிட்டு போறாருடி” என்றான்.

“எந்த மாட்டிக்கிறதுன்னு போயி சொல்லிட்டு வாங்களேன்…”

“ம்ம்… குசும்பு! சொல்லு சந்தோஷமா இருக்கியா என் கூட?” எனக் கேட்டான்.

“இருக்கேன்…” என்றாள்.

“காதுக்கு கேட்டுச்சு, உதட்டுக்குத்தான் கேட்கலையாம்” என்றான்.

“அதெல்லாம் பகல்ல சொல்ற சேதி இல்ல” என மதுரா தீர்மானமாக சொல்ல, அதை அவன் சொல்லி விட்டுத்தான் அவளை விட்டான்.

*****

வீட்டின் முன், தெரு முக்கம், பேருந்து நிறுத்தம் என சரவணன், சுகந்தி படங்கள் தாங்கி பெரிய பெரிய பிளக்ஸுக்கள் அமைக்க பட்டிருந்தன.

முதல் நாள் பெண் அழைப்புக்கு சேரன், மதுரா, மோகன், பூங்கொடி என நான்கு பேரும் சென்றனர். இது போலவெல்லாம் தனக்கு நடக்க வில்லையே என இந்த நேரத்தில் துளி அளவுக்கு கூட மதுராவின் மனதில் குறை இல்லை. பூவாக தாங்கும் கணவன் இருக்க வேறு என்ன ஏக்கம் வந்து விட போகிறது பெண்ணுக்கு.

சுகந்தியை அழைத்துக் கொண்டு மாப்பிள்ளை வீட்டார் மண்டபத்திற்கு வர, “சீவி சினுக்கெடுத்து…

பூவை முடிஞ்சி வந்த புது பொண்ணே…

மாலை எடுத்து வந்து…

சூடி ரசிக்க வந்த மாமன் நான்தானே…” எனும் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

“எங்கடா அவன்… சுகந்தி தங்கச்சிய ரசிக்க வந்த மாமன்… கொண்டாடா அவனை…” சத்தம் போட்டான் செழியன்.

 சரவணனை அவனது நண்பர்கள் இழுத்துக் கொண்டு வர, பெண்ணும் மாப்பிள்ளையும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ள ஒரே கலாட்டாவாக இருந்தது.

சரவணனின் நிச்சயத்தின் போது இடக்காக மதுராவிடம் பேசியவர்கள் கூட வம்பு செய்யாமல் விலகி நின்று கொண்டனர். பின்னே… வாயை மூடி இருக்கவும் வேண்டாம், பக்கம் பக்கமாக பேசவும் வேண்டாம், பார்வை கொண்டே அடுத்தவர்களை தள்ளி நிறுத்தி விடலாம் என்பது மதுராவுக்கும் புரி பட்டு போயிருந்ததே.

ஆனால் கனகாம்புசம் மட்டும் அனைத்திற்கும் அப்பாற்பட்ட ஆத்மா. சுகந்தியை தன் கைக்குள் வைத்துக்கொள்ள நினைத்து அவளிடம், “மதுரா ஒரு மாதிரி, அவளிடம் பார்த்து பழகு” என மூட்டிக் கொடுத்தார்.

அதை தன் அம்மாவிடம் சுகந்தி பகிர்ந்து கொள்ள, அவருக்கு பக் என்றானது. அவள் என்ன சொன்னாள் என விசாரித்தார்.

“அத்த… யாரும் எல்லாருக்கும் நல்லவங்களா இருக்க முடியாது. எனக்கு என் அம்மா நல்லவங்க, ஆனா என் அப்பயிக்கு அம்மாவ பிடிக்காது, ஆயிரம் குறை சொல்லும். நம்ம ரெண்டு பேர் பார்வையும் ஒன்னு கிடையாது, அதனால உங்களுக்கு ஒருத்தவங்க எப்படி தெரியறாங்களோ அப்படித்தான் எனக்கும் அவங்க தெரியணும்னு இல்ல. நானே பழகி பார்த்து யாரு எப்படின்னு தெரிஞ்சிக்கிறேன்னு சொல்லிட்டேன்” என்றாள் சுகந்தி.

இப்போதும் சுகந்தியின் அம்மாவுக்கு பகீர் என்றது. மாப்பிள்ளையின் அம்மாவிடம் இப்படியா பேசி வைப்பாய் என கடிந்து கொண்டார்.

“சொன்ன மேட்டர் இதான். கூட கொஞ்சம் அங்கங்க மானே தேனே போட்டுத்தான் சொன்னேன் மா. கவலை படாத” என சுகந்தி சொல்லவும்தான் அவளின் தாயார் அமைதி அடைந்தார்.

ஆனால் கனகாவுக்குத்தான் சின்ன மருமகளை நினைத்து ‘இத்தனை விவரமாக இருப்பவள் அவரிடம் அடங்கி செல்ல மாட்டாளே’ என பயந்து வந்தது.

திருமண நாள் அன்று சேரன் வாங்கிக் கொடுத்த கிளி பச்சை வண்ண பட்டில் தயாரானாள் மதுரா.

முதல் நாள் இரவு உறங்கவே நடு இரவாகி விட்டது. இப்போதும் அவசரம் அவசரமாக தயாராகிக் கொண்டிருக்க அந்த அவசரத்திலும் மெலிதாக விசில் செய்து மனைவியின் அழகை மெச்சிக் கொள்ள மறக்கவில்லை சேரன்.

கணவன் அருகில் வந்து அவனது விசில் செய்து கொண்டிருந்ததால் குவிந்திருந்த வாயை கிள்ளி முத்தமிட்டாள்.

“அதென்னடி கிள்ளி கொடுக்கிற, எதா இருந்தாலும் அள்ளி கொடுக்கணும்” என்றவன் அவசர முத்தம் பதித்து, அவனது கழுத்தில் பவுடர் போட்டுக் கொண்டிருந்தான்.

“எவளை கவுக்க துரை இவ்ளோ பவுடர் போட்டுக்குறீங்களாம்?” என கிண்டல் செய்தாள்.

“சேரன் யாரையும் கவுக்கனும்னா பவுடர் எதுக்குடி, மீசைய முறுக்கி விட்டு ஒத்த சிரிப்பு சிரிச்சா போதாது?” மீசையை முறுக்கி விட்டவன் சிரித்து குறும்பாக பார்த்தான்.

ரசித்து பார்த்தாலும், “என்னமோ நேரம் சரியில்லாம போச்சு எனக்கு, இல்லைனா என் பின்னால நீங்க சுத்தினப்பவே சுதாரிச்சிருந்திருப்பேன்” என்றாள்.

“உதடு பொய் சொன்னாலும் கண்ணு காட்டி கொடுத்திபுடும்டியோவ்! கஷ்ட பட்டு மடிப்பு எடுத்து புடவையை சுத்தியிருக்கன்னு விடுறேன்” என அவன் செல்லமாக மிரட்டிக் கொண்டிருக்க, பட்டென அவனது வேஷ்டியை பிடித்து இழுத்து விட்டாள்.

 நல்ல வேளையாக வேஷ்டி அவிழ்ந்து விழாமல் இருக்கும் படி இடுப்பில் பிடித்துக்கொண்டவன் பேய் முழி முழித்தான்.

அவள் சிரிக்க, “அடிங்…” என அவன் அவளை பிடிக்க வர, “இனிமே உங்க கை நீண்டது இதான் நடக்கும், சீக்கிரம் மேக்கப்ப முடிச்சுக்கிட்டு வாங்க” என சொல்லி வெளியேறினாள்.

திருமண மண்டபமே மனிதர்களால் நிறைந்து காணப் பட்டது. கட்சித் தலைவர் வருகிறார் என்பதால் போலீஸ் பந்தோபஸ்து வேறு.

“தலைவர் வர்றார் தலைவர் வர்றார்…” என கந்தசாமி தலைகால் புரியாமல் இங்குமங்கும் ஓடிக் கொண்டிருக்க கட்சி தலைவரும் வந்தார். தலைவர் மண மக்களை ஆசீர்வதிக்க கந்தசாமி ஓடி வந்து சால்வை போற்றி தலைவரின் கைகளை பிடித்துக்கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார். இரண்டு நிமிடங்களில் எல்லாம் தலைவர் கிளம்பி விட்டார்.

“இதுக்காய்யா இத்தனை அலப்பறை?” என கிண்டல் செய்தனர் பலர்.

திருமணத்துக்கு வனராஜன் குடும்பத்தோடு வந்திருந்தான். மண மக்களுக்கு வெள்ளியில் குத்து விளக்குகள் பரிசாக கொடுத்தான்.

இன்றைய தினம் வேறு ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் முதல் நாளே மதுராவின் சித்தி குடும்பத்தோடு வந்து விட்டு சென்றிருந்தார்.

தோழியின் திருமணம் என பொய் சொல்லிவிட்டு அர்ச்சனாவும் திருமணத்திற்கு வந்திருந்தாள். மதனும் அவளும் ரகசியமாக பார்த்து சிரித்து பேசி என இருந்தனர்.

ஆனால் அங்கே வனராஜனை எதிர் பார்க்காத அர்ச்சனா பயந்து போனாள். அவனிடமிருந்து தப்ப அர்ச்சனா ஒளிந்து பிடித்து விளையாடிக் கொண்டிருக்க, அவளை கண்டு விட்டவன் மதனை தனியே அழைத்து அவனது கையை முறுக்கினான்.

“ஐயோ அத்தான்… விடு, என்ன இப்போ? எனக்கு முறை இல்லயா? மதுவோட லவ் மேரேஜ்க்கு ஹெல்ப் பண்ணினேன்னுதானே உனக்கு கோவம்? இப்பதான் நீயே சேரன்கிட்ட பல் இளிக்கிறீயே… பொறவென்ன?” எனக் கேட்டான் மதன்.

“எலேய் இந்த சங்கதி சேரனுக்கு தெரியுமா?”

“இன்னுமா தெரியாம இருக்கும்? ஊர கூட்டி கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொல்லியிருக்கான்”

“அவனே சொன்னானா?”

“ஒப்புறானா வலிக்குது கையை வுடு. நம்ப மாட்டியா என்னை?” என மதன் கேட்க, அவனது கையை விட்ட வனராஜன், “திரும்ப அவனை எதிலேயும் இழுத்து வுட்டு தொலையாத” என எச்சரிக்கை செய்து, அர்ச்சனாவை கையோடு அழைத்து சென்று விட்டான்.

மதன் சென்று சேரனிடம் குறை படிக்க, “வனராசனே இவ்ளோ அக்கறையா சொன்னானா? அப்ப கேட்டு நடடா” என சிரிக்காமல் சொல்லி சென்றான்.

கடுப்பான மதன் செழியனிடம் புலம்ப, “உனக்கு புரியலை, சோழ ராசாவ தொல்லை பண்ணாதடா, வனராசன் அலைஸ் சினா தனா வாகிய நானே பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டு போறான்டா” என்றான் செழியன்.

மதன் முறைக்க, “மாப்ள அப்படிலாம் உன்னை விடுவானா… வாடா, பந்திக்கு முந்துவோம்” என அவனை இழுத்துக் கொண்டு சாப்பிட சென்று விட்டான் செழியன்.