அத்தியாயம் -24(2)
“மாமாகிட்ட சொன்ன மாதிரி அத்தைக்கிட்டேயும் உன் சம்மதத்தோடதான் மதுரா அது பொறந்த வூட்டுக்கு போயிருக்குன்னு உள்ளதை சொல்லியிருந்தா…”
“சொல்லியிருந்தா… சொல்லியிருந்தா மட்டும் என்ன அத்தான்? அதுக்கும் ஒரு ஆட்டம் போடாதா? அப்படி மறைச்சது தப்புன்னே வைங்க, இவள வெளில நிறுத்தினத நியாய படுத்துறீயளா அத்தான்?” சீறினான் சேரன்.
“நீதானடா கோவத்துல இந்த புள்ளகிட்ட அங்குட்டு போவ கூடாதுன்னு சொல்லி வச்சிருக்க?” என மோகனும் கோவப்பட்டான்.
“அதெல்லாம் அப்பவே அப்படி சொன்னது தப்புன்னு இவகிட்ட ஒத்துக்கிட்டேன்” என்றான் சேரன்.
“ஹான்… நல்லா இருக்குடா கதை! வையுறது, சண்டை போடுறது, சுருக்குன்னு பேசுறது எல்லாத்தையும் நடுக் கூடத்துல நாலு பேர் முன்னாடி வச்சு செய்வீய. தப்புன்னு ஒத்துக்கிறத மட்டும் ரகசியமா பண்ணுவியளோ? போவக் கூடாதுன்னு உங்கம்மா முன்னாடி வச்சு சொன்ன மாதிரி, போயிக்க அப்படின்னு நீ சொன்னதையும் உங்கம்மா முன்னாடியே சொல்லியிருக்க வேண்டியதுதானே?” எனக் கேட்டான் மோகன்.
“நான் செஞ்சது தப்புதான் அத்தான். இனிமே நாலு பேரு முன்னாடி கோவப்பட்டேன்னா அதே நாலு பேரு முன்னாடி வச்சே மாப்பும் கேட்டுக்கிறேன் போதுமா? ஆனா நான் செஞ்ச ஒரு தப்பால அம்மா செஞ்சது சரின்னு ஆகிடுச்சா?” எனக் கேட்டான் சேரன்.
“கண்டிப்பா அவ்வோ செஞ்சது தப்புதான். ஆனா அவ்வோ குணம் உனக்கு தெரியுங்கிறப்போ கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம், கல்யாணம் பண்ணிகிட்டத சொல்றேன் டா. மாமா செஞ்சு வைக்கிறேன்னு சொல்லியும் அவசர பட்டது நீதானடா? இப்ப அனுபவிக்கிறது என்னவோ வீட்டுக்கு வாழ வந்த புள்ளதான்” என்றான் மோகன்.
“நல்லா சொல்லுங்க மாப்ள. எம்பேச்ச எங்குட்டு கேட்டான்?” அலுப்பாக சொன்னார் கந்தசாமி.
“திரும்ப திரும்ப அதையே சொல்லாதீய. கஷ்ட பட்டவனுக்குத்தான் அது எப்படி பட்ட கஷ்டம்னு புரியும். கட்டினவள பிரிஞ்சிருந்தா உங்களுக்கும் புரிஞ்சிருக்கும்” என்றான் சேரன்.
இனி இவனிடம் பேச முடியாது என்பதால் மதுராவிடம் சில சமாதானங்களும் அறிவுரைகளும் சொல்லி ‘உன் கணவனின் இந்த தனிக் குடித்தன திட்டத்தை கைவிட சொல்’ என கேட்டுக் கொண்டான் மோகன்.
“பொண்ணுங்க நிலைமை எவ்ளோ மோசம் பாருங்க ண்ணா. கல்யாணம் ஆனதும் பொறந்த வீடே விருந்தாளியாதான் எங்கள பாக்குது. இங்க மனுஷியாவே மதிக்கல, வார்த்தையால வதை பண்ணினாங்க, வயித்துல அடிச்சாங்க. இன்னிக்கு இது என் இடமே இல்லைனு ஆணி அடிச்ச மாதிரி செஞ்சு காட்டிட்டாங்க. இதுக்கு மேலேயும் அவமானத்தை பொறுத்து போ, பேசினா காதுல வாங்காதன்னு அட்வைஸ் பண்றீங்க. குடும்பத்தை உடைக்காதன்னு சொல்றீங்க. இந்த குடும்பம் கூட்டு குடும்பமாவே இருக்க எதை நான் விலையா கொடுக்கணும் அண்ணா? என் சுய மரியாதையைதானே? சொல்லுங்கண்ணா. கேவலம் சுய மரியாதைதானே?” கண்கள் கலங்க கேட்டவள், சரி என்பது போல தலையாட்ட யாராலும் அடுத்து பேசவே முடியவில்லை.
“அவளே சொன்னாலும் நான் கேட்கிறதா இல்லை அத்தான். எப்ப சந்தர்ப்பம் அமையும் இவளை அவமான படுத்தன்னு காத்து கெடக்கு அம்மா. நாளைக்கு சரவணன் சம்சாரம் வந்த பொறவும் இதான் தொடர்கதையா நீண்டுக்கிட்டு போவும். என் பொண்டாட்டி நிலைமை எம்புள்ளைங்களுக்கு வராதுன்னு உங்களால சொல்ல முடியுமா?” என சேரன் கேட்க, மாமனாரின் முகத்தை அர்த்தமாக பார்த்தான் மோகன்.
“ஆசையா அன்பா வச்சிக்கிறது மட்டும்தான் புருஷன் செய்யணும், அவன்கிட்ட பொழைக்க வந்த பொம்பளைக்கு மரியாதையெல்லாம் அதிகப்படி, அந்த கருமாந்திரம்லாம் அவளுக்கு தேவையில்லைனு நீங்க உங்க வாயால சொல்லுங்க அத்தான், ஏத்துக்கிட்டு நான் தனியா போவல, இங்குட்டே கெடக்கிறோம்” என சேரன் சொல்ல, வாயடைத்து போனான் மோகன்.
அண்ணியிடம் சமாதானமாக ஏதோ சொல்ல வந்த சரவணனை பேச விடாமல் தடுத்த சேரன், “தயவுசெஞ்சு இன்னும் இன்னும் அவளை யாரும் நோகடிக்காதீய. நீ போடி உள்ள, நாளைக்கே நான் வீடு பாக்கிறேன்” என்றான்.
அண்ணனின் தீர்க்கமான இந்த முடிவு மாறாததில் வருத்தம் கொண்ட சரவணன் ஒடுங்கிப் போய் தரையில் அமர்ந்து விட்டான்.
கந்தசாமியை கவலையாக பார்த்த மோகன், “இவங்க பக்க நியாயத்தை பாருங்க மாமா. இவ்வோ சொல்றது சரின்னாலும் உங்களுக்காகதான் இவ்ளோ தூரம் மெனெக்கெட்டு பேசினேன். இதுக்கு மேல ரெண்டு பேரையும் சமாதானம் செய்ய எங்கிட்டேயும் சரக்கு இல்ல மாமா. ஒரு ஊருக்குள்ளதான இருக்க போறாவோ? அவ்வோ போக்குக்கே வுட்ருங்க மாமா, அதான் நல்லது” என்றான்.
“எல்லாம் கை மீறி போயிட்டு மாப்ள. ரெண்டு பையனும் வளமா வாழணும், பொண்ணு மாப்ளயோட வந்து போயி தங்க வசதியா இருக்கணும்னு பாத்து பாத்து கட்டின வீடு, என்ன பிரயோசனம் சொல்லுங்க?” அங்கலாய்ப்பாக சொன்னார்.
“இழுத்து புடிச்சு நிறுத்ததான் நானும் பாத்தேன் ப்பா. இந்த விஷயத்துல எம்மேல என்ன தப்புன்னு நீங்களே சொல்லுங்க ப்பா?” எனக் கேட்டான் சேரன்.
என்ன சொல்வார் அவர்? நியாயம் புரிந்தாலும் மனசாட்சி படி நடக்க விழைந்தாலும் சேரன் தனியே போகிறேன் என்பது அவருக்கு அவரிடமிருந்து ஒரு உறுப்பை வெட்டி எடுப்பது போலவேதான் பட்டது.
மனதை திடப் படுத்தி நீண்ட மூச்சை எடுத்துக் கொண்ட கந்தசாமி, “நான் நல்லா இருக்கப்பவே யாருக்கு என்னன்னு பிரிச்சு கொடுத்திடுறேன் மாப்ள. எம் புள்ள தனியா போனாலும் வேறு யார்கிட்டேயும் வாடகைக்கு போறதுல இஷ்டம் இல்ல. மாட்டு கொட்டாயி இருக்க இடத்துல சின்னதா ஒரு வீடு போட்டு அங்குட்டு வாழட்டும். இதுக்கு மட்டும் அவனை ஒத்துக்க வச்சிடுங்க மாப்ள” என்றார்.
மோகன் சேரனை பார்க்க, “என் வீட்ட நானே கட்டிப்பேன், அதுக்கான வல்லமை எனக்கு வர்ற வரைக்கும் வாடகைக்கே தங்கிக்கிறோம்” என்றான்.
“டேய் ரோஷக்காரா! ஒரு நாள் ஏதோ தவறிப் போய் கணக்கு பார்த்திட்டார்டா மாமா. அதுக்காக எதுவும் வேணாம்னு நிக்காத, அவரை இன்னும் மன உளைச்சலுக்கு ஆளாக்காத டா” என மோகன் எடுத்து சொல்லிக் கொண்டிருக்க, “நான் வேணும்னா மன்னிப்பு கேட்டுக்கிறேன்னு சொல்லுங்க மாப்ள” என்றார் கந்தசாமி.
“அப்பா!” என பதறிப் போனான் சேரன்.
“பின்ன என்னடா? இவ்ளோ சொல்லியும் உங்கிட்ட எதுவும் எடுபடலையே. உன் அம்மா பண்ணின பாதகத்துக்கு ஆயிகிட்டேயும் நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன் டா” என கந்தசாமி சொல்ல, “ஐயோ மாமா!” என அதிர்ச்சியாக அழைத்தாள் மதுரா.
“மன்னிப்பு அது இதுன்னு செத்த சும்மா இருங்க மாமா” என்ற மோகன், “இருபது நாளைல சரவணன் கல்யாணம் இருக்கையில நீ தனியா போனா நல்லாருக்காதுடா. சம்பந்தி காரவளுக்கு என்னன்னு சொல்வ? அத ரோசனை பண்ணி உன் முடிவ கொஞ்சம் தள்ளிப் போடு, பொறவு எங்குட்டு எப்படி போலாம்னு தீர்மானம் செய்யலாம்” என சேரன் மறுக்க முடியாத படி சொன்னான்.
இப்படியாக ‘தனிக் குடித்தனம் உறுதிதான், ஆனால் சரவணனின் திருமணம் வரை தள்ளி வைக்க படுகிறது’ என பிரச்சனைக்கு தற்காலிகமாக ஒரு தீர்வு காணப் பட்டது.
மதுரா அவளுக்கும் கணவனுக்கும் சமைக்க சென்றவள் மனம் கேளாமல் சரவணனிடம், “சட்னி ஏதும் செஞ்சு தரவா?” எனக் கேட்டாள்.
“கேட்டதே சந்தோஷம் அண்ணி. அம்மாவே தப்பு செஞ்சாலும் தப்பு தப்புதான். நாளைக்கு என்னை நம்பி வாழ வர்றவளுக்காக இத சொல்லலை அண்ணி, உங்களுக்காக சொல்றேன். சாப்பாடு நான் பார்த்துக்கிறேன் அண்ணி” என்றான் சரவணன்.
மதுரா கீற்றாக புன்னகைக்க, “சாப்பாடு வாங்க கடைக்கு போறேன், உங்களுக்கு என்ன வேணும் அண்ணி?” எனக் கேட்டான்.
மதுரா கடை சாப்பாடு வேண்டாம் என மறுத்து விட்டதால் அவர்களுக்கு மட்டும் உணவு வாங்க கடைக்கு சென்றான் சரவணன்.
“சமைக்கிற மூடே இல்லை, வெறும் புளி துவையலும் தோசையும்தான் செய்யலாம்னு இருக்கேன். ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறீங்களா?” என கணவனிடம் கேட்டாள் மதுரா.
அவளை ஆதூரமாக பார்த்த சேரன், “முடியலைனா வுடு” என்றான்.
“மதியமும் கடை சாப்பாடுதானே? இது நல்லாத்தான் இருக்கும்” என்றவள் ஏழு பச்சை மிளகாய்கள், கொஞ்சம் புளி உப்புடன் சேர்த்து அரைத்து இரண்டு நிமிடங்களில் புளி சட்னி தயார் செய்து தோசைக் கல்லை அடுப்பில் போட்டாள்.
அங்கேயே அமர்ந்து சாப்பிட்டான் சேரன். அவளுக்கும் தோசை ஊற்றிக் கொண்டவள் சாப்பிட அமர, அவன் சாப்பிட்டு முடித்தும் அவள் பக்கத்திலேயே அமர்ந்து கொண்டான்.
அவளும் சாப்பிட்டு முடிக்க இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“உன்னை தெருவுல நிறுத்த நினைச்சி கட்டிக்கிட்டு வரலை நான்” என்றான் சேரன்.
அவனை சங்கடமாக பார்த்தவள், “சத்தியமா அப்படி நினைக்கலங்க நான். கோவத்துல ஆத்தாமையில…” என்றவள் அவனது கையை பிடித்து கன்னத்தில் பதித்துக் கொண்டாள்.
“என்னென்ன பேசிட்டடி? இத்தனையும் நெஞ்சுக்குள்ள வச்சுக்கிட்டா என் கூட வாழ்ந்த? உன்னை சரியாவே புரிஞ்சுக்கல மதுரா”
“எதிர்பார்த்த மாதிரி நூறு பெர்சண்ட் யாரும் இருக்க மாட்டாங்க. ஒரு கிராமத்துல பொண்ணுங்களுக்கு அவ்வளவா சுதந்திரம் இல்லாத ஊருல, கட்டுபெட்டி சிந்தனை உள்ள ஒரு அம்மா வளத்த புள்ள இவ்ளோ தூரம் பொண்டாட்டிய புரிஞ்சு, அனுசரனையா நடக்கிறதே ரொம்ப பெருசு, ரொம்ப ரொம்ப பெருசு. உங்கள போல ஒருத்தர் இந்த சுத்து வட்டாரத்திலேயே கிடையாது” என்றவள் அவனது உள்ளங்கையில் முத்தமிட்டாள்.
முள் கீறிய இடத்தில் அவளின் கண்ணீரும் முத்தத்தின் ஈரமுமாக சேர்ந்து நனைக்க அதனால் விளைந்த எரிச்சல் கூட அவனுக்கு இதமாகவே இருந்தது.
“சரவணனோட கல்யாணம் வரைக்கும் இங்குட்டு இருந்துதான் ஆவணும், உனக்கு சம்மதமா? கா பங்கு மனம் ஒப்பலைன்னாலும் சொல்லிடு. சரவணனோட மாமனார்கிட்ட சொல்ல வேண்டிய விதத்துல சொல்லிக்குவேன்” என்றான்.
“அந்த சங்கடத்தை உங்களுக்கு நான் தர மாட்டேன். ஆனா உங்கம்மா கூட இனிமே பேசவே மாட்டேன். பேசு கொள்ளுன்னு மட்டும் சொல்லாதீங்க, என்னால எப்பவும் முடியாது. நீங்க சொன்னாலும் கேட்க மாட்டேன்” என ரோஷமாக சொன்னாள்.
அவள் தலையோடு தலை முட்டியவன், “நானும் உனக்கு அந்த சங்கடத்தை தர மாட்டேன்” என்றான்.
மதுரா அவனது தோளில் சாய்ந்து கொள்ள, மனைவியை அணைத்து பிடித்துக் கொண்டான் சேரன்.