Advertisement

அத்தியாயம் -23(2)

இப்படி அழுகிறாள் என்றால் விபரீதமாக என்ன நடந்ததோ என உள்ளுக்குள் வேறு பதற ஆரம்பித்திருக்க, “கோவத்தை கூட்டாம என்னன்னு சொல்லுடி” என சத்தமாக அதட்டினான்.

“உங்கம்மா வீட்டை பூட்டி வெளியில நிறுத்திட்டாங்க என்னை, போதுமா?” சீற்றமாக கேட்டவளுக்கு மூச்சு வாங்கியது.

“என்ன…” சேரனுக்கு விளங்கிக் கொள்ள முடியவில்லை.

அவள் சொன்னதை இன்னொரு முறை மனதுக்குள் ஓட்டிப் பார்த்தவன், “அம்மா உள்ள வேலையா இருந்திருக்கும், நீ தப்பா நினைச்சுகிட்டு இங்குட்டு வந்து உட்கார்ந்திருக்க போற” இவ்வளவு தரமில்லாத வேலையை தன் அம்மா செய்திருக்க மாட்டார் என இன்னுமே நம்பியவன் சொன்னான்.

ஆவேசத்தோடு எழுந்து நின்றவள், “உன்னைய நம்பி வந்தேன், நல்லா அவமான பட்டு போயிட்டேன். என் அண்ணன் மாறிட்டுன்னா அத நம்ப மாட்ட, ஆனா உன் அம்மா மட்டும் உனக்கு எப்பவும் ராஜமாதாதான். யாரும் என்னை நம்ப வேணாம். போங்க இங்கேருந்து…” என சத்தம் போட்டவள், “தெருவுல நிக்க வச்சிட்டீல என்னை?” என குற்றம் சுமத்துவது போல கேட்டாள்.

தன் மனைவி தவறாக புரிந்து கொள்ளவில்லை, அம்மாதான் கீழிறங்கி நடந்து கொண்டிருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாக அவனுக்கு புரிந்து போனது.

என் மனைவி வெளியில் நிறுத்தப் பட்டாள் எனும் செய்தியை உள் வாங்கிய அவனது உள் கூடு கோவத்தில் கொந்தளித்து போனது.

அவனது கட்டுப்பாடு அவனிடம் இல்லை. தலை தெறிக்க முன் பக்கம் ஓடினான். பயந்து போன மதுரா ஒரு நொடி மூச்சற்று நின்றாள்.

கந்தசாமியும் சரவணனும் கேட்டை திறந்து கொண்டு உள்ளே வர, அவர்கள் கண்டது சாமி வந்தது போல ஓடி வந்த சேரனைத்தான்.

அவர்கள் பதற்றத்தோடு அவனை நெருங்கி வர, உபயோக படுத்தப் படாமல் வீட்டின் பக்கவாட்டில் கிடந்த ஆட்டுக்கல் குழவியை கையில் எடுத்துக் கொண்டான் சேரன்.

“எலேய்… என்னடா என்ன?” கந்தசாமி சத்தமிட, வீட்டுப் படிகளில் தாவி ஏறிய சேரன் கதவோடு இணைந்திருந்த பூட்டை குழவி கொண்டு அடித்தான்.

சரவணன் ஓடி சென்று அண்ணனை தடுக்க முற்பட, சேரன் தள்ளி விட்டதில் தடுமாறி நின்றான்.

 கதவு உடைபடும் சத்தம் கேட்டு அலறி அடித்துக் கொண்டு கதவை திறக்க முற்பட்டார் கனகா. ஆனால் கதவு அதிர்ந்த அதிர்வில் அவரால் கதவில் கை வைக்கவே முடியவில்லை.

மதுராவும் ஓடி வர, அதிர்ந்து நின்றிருந்த கந்தசாமி அவளிடம், “என்ன ஆயி நடந்து போச்சு?” என விசாரித்தார்.

அவளுக்கு என்ன சொல்வதென தெரியவில்லை. அதைவிட தற்சமயம் ஒரு வார்த்தை பேசக்கூட அவளிடம் திராணி இல்லை.

கதவை உடைக்கும் கணவனிடம் சென்று அவனை தடுக்க முயன்றாள். மதுரா ஒரு பக்கமும் சரவணன் இன்னொரு பக்கமுமாக சேரனை பிடித்துக்கொண்டு அவனை இழுத்தனர். ஆனாலும் அவனது வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

கதவின் லாக் உடைப்பட்டு கதவிலும் பெரிய விரிசல் விழுந்தது. பட் என திறந்து கொண்ட கதவு விசைக்கு எதிரான விசையால் மீண்டும் முன்னோக்கி வர, தன் கையால் கதவை பிடித்து வேகமாக பின்னோக்கி தள்ளினான் சேரன்.

ஆட்டம் போட்டது கதவு. காதை பொத்தி கொண்டு பயமும் நடுக்கமுமாக நின்றிருந்தார் கனகா.

அதற்குள் வீட்டுக்கு வெளியில் சிறு கூட்டம் கூடி விட்டது. பக்கத்து வீட்டு அத்தாச்சியின் கணவன், வேடிக்கை பார்த்தவர்களை நோக்கி, “என்ன பயாஸ்கோப்பா காட்டுது, போங்கய்யா உங்க உங்க பொழப்ப பாத்துகிட்டு” என அதட்டி கூட்டத்தினரை அப்புற படுத்தினான்.

கூட்டம் கலையவும், “என்ன சித்தப்பா என்ன நாடவம் வைக்கிறான் சேரன்?” என அவனே கேட்க, “போங்கண்ணன், அத்தாச்சி கூப்பிடுது” என சொல்லி அவனை அனுப்பி வைத்தான் சரவணன்.

கோவம் குறையாமல் மூச்சு வாங்க சேரன் நின்றிருக்க, அவனது கையிலிருந்த குழவியை வாங்கப் போனான் சரவணன். தராத சேரன் திண்ணையில் நின்று கொண்டே கீழே தூக்கிப் போட்டான். சிமெண்ட் தரையை நன்றாக சேதப் படுத்திய குழவி உருண்டு ஓடி இவர்களை வேடிக்கை பார்ப்பது போல மூலையில் ஒதுங்கியது.

“என்ன ண்ணா பண்ணிட்டு இருக்க நீ? மொத உள்ளுக்கு வா” அண்ணனின் கையை பிடித்து இழுத்தான் சரவணன்.

தம்பியின் கையை உதறி விட்ட சேரன், “இனியும் நான் உள்ள வரணுமாடா? இது என் வூடுதாங்கிற எண்ணம் எப்பவோ என்னை விட்டு போயிட்டு” என்றான்.

 மகனது இத்தகைய பேச்சில் நெஞ்சில் கை வைத்து அதிர்ந்தார் கந்தசாமி.

“எதுவும் புரியலை ண்ணா, தெளிவா சொல்லேன்” எனக் கேட்டான் சரவணன்.

“இன்னும் என்னத்தடா நான் சொல்லணும்? என் பொண்டாட்டிய வெளில நிக்க வச்சு வீட்ட பூட்டிபுட்டுடா இந்தூட்டு எசமானியம்மா” என்றான் சேரன்.

சரவணனும் கந்தசாமியும் அதிர்ந்து போய் கனகாவை பார்க்க, “அந்த சிறுக்கி எங்குட்டு போயிட்டு வந்தான்னு விசாரிங்க, பொறவு என்னை முறைக்கலாம், கேள்வி கேக்கலாம்” என்றார்.

அக்கம் பக்கத்து வீட்டு மனிதர்கள் ஏதோ வேலை இருப்பது போல காட்டிக் கொண்டு அவர்களின் வீட்டுக்கு வெளியில் வந்து நின்று கவனத்தையும் காதையும் இங்கேயே வைத்திருந்தனர். ஆனாலும் சரிவர யாருக்கும் எதுவும் விளங்கவில்லை.

சுதாரித்த சரவணன், “வீட்டுக்குள்ள வச்சு பேசலாம்ண்ணா. எல்லாரும் பாக்குறாவோ பாரு” என்றான்.

தம்பியை விரக்தியாக பார்த்தவன், “என் பொண்டாட்டி தெருவுல நின்னத எவன் எவன் பார்த்தான்னு தெரியலையேடா. மொத மொத பொண்ணுன்னு ஆசையா பாத்தது இவளைத்தான். கல்யாணம் பண்ணியும் சேர முடியாம மூனு வருஷம் இவளையே நெனச்சி வாழ்ந்து திரும்பவும் என்னோட இவளை வரவச்சுக்கிட்டேன். எதுக்குடா? இப்படி இவளை தெருவுல நிறுத்தவா? எப்படிடா உள்ள வர சொல்ற?” எனக் கேட்டான்.

சேரனின் குரலில் தெரிந்த கலக்கமும் வேதனையும் கனகா உட்பட அனைவரது உள்ளத்தையும் சென்று தாக்கியது.

அடுத்து மகன் என்ன சொல்ல போகிறானோ என பயத்தோடு கந்தசாமி பார்த்திருக்க, “நாங்க வேறயா போயிக்கிறோம் ப்பா” என்றான் சேரன்.

“எலேய் சேரா? எப்பா… டேய் நான் உசுரோட இருக்கிற வரைக்குமாவது இந்த வார்த்தைய சொல்லாம இருடா. மொத வீட்டுக்குள்ளார வாடா” என கெஞ்சிக் கேட்டு மகனை உள்ளே அழைத்து சென்றார் கந்தசாமி.

“வாங்க அண்ணி…” என சொல்லி மதுராவையும் வீட்டுக்குள் அழைத்து சென்றான் சரவணன்.

கூடத்தில் அமர்ந்திருந்த சேரன் தரையை வெறிக்க பார்த்திருந்தான்.

மதுரா ஓய்வறை உபயோகிக்க பின் பக்கம் விரைய, “எந்த நிலைல அவளை வச்சிருக்கேன் பார்த்தியாடா?” என தம்பியிடம் கேட்ட சேரனின் கண்கள் கலங்கிப் போயின.

“அத்தனையும் நடிப்பு. இந்த பயல மயக்கி சுருட்டி இடுப்புல முடிஞ்சு வச்சிருக்கா அந்த சின்ன சிறுக்கி. காலடி வச்ச மொதலே ஒன்னும் உருப்படல. எம்மூட்டு கதவு போச்சுதே…” நெஞ்சில் வேகமாக ஒரு அடி அடித்துக் கொண்டு சத்தம் வைத்தார் கனகா.

மனைவியை அடிக்க பாய்ந்தார் கந்தசாமி. அப்படி செய்ய விடாமல் அப்பாவை பிடித்துக்கொண்டான் சரவணன்.

மாடுகள் சத்தம் போட, எழுந்த சேரன், “புது ஆள கண்டா உதைச்சு முட்ட வர என் லட்சுமிக்கு கூட என் மனசு தெரிஞ்சிருக்குடா. நான் இல்லாதப்போ அது காட்டின கருணை கூட…” என்றவன் சின்ன மூச்சு விட்டு, “லட்சுமி உசந்து போச்சுடா” என சொல்லிக் கொண்டே மாட்டுக் கொட்டகைக்கு செல்ல நடந்தான்.

“அம்மாவை அடிச்சு கிடிச்சு பெருசா இழுத்து வுடாதீயப்பா” அப்பாவிடம் எச்சரிக்கை செய்த சரவணனும் அண்ணனை பின்பற்றிக் கொண்டு சென்றான்.

படல் இரும்பு சங்கிலி கொண்டு பூட்டப் பட்டிருக்க மீண்டும் ஆவேசம் கொண்ட சேரன் அந்த படலை பெயர்த்து எடுத்து தூக்கி எறிந்தான். கைகளில் ஆங்காங்கே முள் கீறியிருக்க வலி உணர்வே இல்லாமல் மாடுகளுக்கு தண்ணீர் காட்ட ஆரம்பித்தான் சேரன்.

அண்ணனை எப்படி அணுக என பயந்து போன சரவணன் தள்ளியே நிற்க, முகம் கழுவிக் கொண்டு வந்தாள் மதுரா.

“என்னண்ணி நடந்துச்சு?” மெல்லிய குரலில் கேட்ட சரவணனிடம் அதே போல மெல்லிய குரலில் நடந்தவற்றை சொன்ன மதுராவுக்கு மீண்டும் அழுகை வருவது போலிருந்தது.

“அண்ணன் போன் ஆஃப்னா என்ன அண்ணி? எனக்கு கூப்பிட்ருக்கலாம்ல?” எனக் கேட்டான் சரவணன்.

“வந்தேன்னா நாலு அப்பு அப்பி விடுவேன் டா ராஸ்கல்! உன்னைய கூப்பிட்டாலும் வெளில அவளை நிக்க வச்சது இல்லைனு ஆகிடுமா?” என சீறினான் சேரன்.

“ஐயோ அதுக்கில்ல ண்ணா, நானும் அப்பாவும் முத்துப்பேட்டைலதான் இருந்தோம், உடனே ஓடியாந்திருப்போம். அண்ணி வெளில இருந்திருக்க வேணாம்கிறக்காக சொன்னேன்” என்றான் சரவணன்.

“ஓடியாந்து சேரன்கிட்ட மட்டும் சொல்லிடாதன்னு அவ வாய அடைச்சிருக்கலாம்ன்ன? ஏட்டி ஏன் டி அவனுக்கு கூப்பிட்டு சொல்லலை?” சேரன் கேட்ட தொனிக்கு மதுராவால் எதுவுமே பேச முடியவில்லை.

சேரன் எந்த அளவு கோவத்தில் இருக்கிறான் என்பதை சரவணனால் புரிந்து கொள்ள முடிந்தது. இப்போது என்ன பேசினாலும் அவனிடம் எடு பட போவதில்லை என்பதும் புரிய, “அண்ணன் கைல காயம் அண்ணி, நான் இங்குட்டு மாடுவள பாத்துக்கிறேன், அண்ணனை பாருங்க” என்றான்.

பதறிய மதுரா கணவனின் அருகில் சென்று அவனது கைகளை பிடித்துப் பார்க்க முள் கீறி இரத்தம் கசிந்தது.

புடவை முந்தானை வைத்து பிடித்துக்கொண்டவள், “ஏங்க இப்படி, அன்னைக்கு என்னடான்னா சூடு பட்டுச்சு இப்போ… பொறுமையா இருக்க கூடாதா?” என ஆதங்கமாக கேட்டாள்.

“அடி போடி! சின்ன காயம்தான்” என்றவன் தம்பியிடம், “லட்சுமி வயித்த கவனிடா” என சொல்லி விட்டு பின் பக்கம் இருந்த மதுராவின் சமையலறை சென்றான்.

சின்ன இடம், மண் தரை, வீட்டுக்குள் சென்றால் அம்மாவிடம் முகத்தை காண நேரிடும் என்பதால் அங்கேயே படுத்து விட்டான். வெளியில் அலைந்து திரிந்ததிலும் அதீத கோவத்தின் காரணமாகவும் அவனுக்கு தலை வலி எடுக்க ஆரம்பித்திருந்தது.

மதுராவுக்கும் உடலும் மனமும் அயர்ந்துதான் போயிருந்தது. திருமணத்திற்கு பின் முதன் முதலாக பிறந்த வீடு சென்று சீராடிய மகிழ்ச்சி எல்லாம் காற்றில் கரைந்த கற்பூரம் போலானது.

மாடுகளுக்கு தீவனம் வைத்துக்கொண்டிருந்த சரவணனிடம், “ரொம்ப ஓஞ்சு போய் தெரியுறார், பால் எடுத்து தர்றீங்களா, அவருக்கு டீ, காபி ஏதாவது போட்டு தரணும்” என்றாள் மதுரா.

“நீங்களுமே அப்படித்தான் அண்ணி தெரியுறீய, நீங்க போங்க, நான் கொண்டாந்து தர்றேன்” என சொல்லி அவளை அனுப்பி வைத்தான்.

சமையலறை வந்தவள், “ஏன் இப்படி மண்ணு தரையில படுத்துருக்கீங்க? என்னால உங்கம்மா செஞ்சத ஏத்துக்கவும் முடியலை, தாங்கிக்கவும் முடியலை, அந்த கோவத்தை உங்ககிட்ட காட்டிட்டேன். இப்படி படுக்காதீங்க, நான் தப்பா பேசியிருந்தா சாரி, ப்ளீஸ்…” அடுத்து என்ன பேச என தெரியாமல் அவனையே பார்த்திருந்தாள்.

“ஏற்கனவே குற்ற உணர்ச்சில இருக்கேன் டி, நீ இன்னும் என் வேதனைய கூட்டாத. உம்மேல என்ன கோவம் எனக்கு? அது தலைவலி, நீ ரூமுக்கு போ” என சொல்லி கண்களை மூடிக் கொண்டான்.

அவனில்லாமல் அவளுக்கும் வீட்டுக்குள் செல்ல மனம் வரவில்லை. சேரனுக்கே அந்த வீடு அந்நியமாக பட்டது என்றால் அவளுக்கு சொல்லவா வேண்டும்? அவளும் மண் தரையில் கால் நீட்டி அமர்ந்து கொண்டாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement