Advertisement

ஆள வந்தாள் -23(pre final -1)

அத்தியாயம் -23(1)

மதிய உணவையும் முடித்துக் கொண்டுதான் மதுரா பிறந்த வீட்டிலிருந்து புறப்பட்டாள். பேருந்து ஏற நிற்கும் போது மனைவிக்கு அழைத்து பேசி விட்டு வைத்தான் சேரன்.

 கந்தசாமி, சரவணன் இருவரும் மாலையில்தான் வீடு திரும்புகின்றனர். ஆகவே தனக்கு மட்டும் தயிர்சாதம், மாவடு என எளிமையாக தயாரித்த உணவை தட்டில் போட்டுக் கொண்டு மதிய சீரியலை மும்முரமாக பார்த்துக் கொண்டே சாப்பிட்டார் கனகா.

கேட்டை திறந்து கொண்டு காம்பவுண்ட் உள்ளே வந்த மதுரா வீட்டுக்கதவை தட்டினாள். கதவிலிருந்த லென்ஸ் வழியாக மதுராதான் என உறுதி செய்து கொண்ட கனகா வேண்டுமென்றே தொலைக்காட்சியின் சத்தத்தை அதிகப் படுத்திக் கொண்டு சாப்பிடுவதை தொடர்ந்தார்.

அழைப்பு மணிக்கான சுவிச்சை மதுரா அழுத்த, அதையும் கனகா அணைத்து வைத்திருந்த காரணத்தால் சத்தம் எழும்பவே இல்லை.

மீண்டும் வேகமாக கதவை தட்டிப் பார்த்தும் கதவு திறக்க படவே இல்லை. உள்ளே வேலையாக இருக்கிறார் போலும், டிவியின் சத்தத்தில் காதில் விழவில்லை போல என எண்ணிக் கொண்டே வீட்டின் பின் பக்கம் சென்று பார்த்தாள்.

பின்கட்டில் சில பூச்செடிகளும் மரக் கன்றுகளும் இருப்பதால் அவற்றை ஆடு மாடுகளிடமிருந்து பாதுகாக்கும் பொருட்டு மாட்டுக் கொட்டகைக்கு அடுத்து முள் வேலி போட்டு அடைத்திருப்பார்கள். படல்(முள் வேலி கதவு) சாத்தப் பட்டு கயிறு கொண்டு கட்டப் பட்டிருக்கும். அதை இரண்டு பக்கங்களில் இருந்தும் அவிழ்த்துக் கொள்ளலாம்.

இன்று கயிறுக்கு பதிலாக இரும்பு சங்கிலியில் பிணைக்கப் பட்ட பூட்டு ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. திடீரென என்ன இது என குழம்பிப் போன மதுரா அங்கிருந்தவாறே “அத்தை அத்தை…” என கூவி அழைத்தாள்.

பதில் வராமல் போகவும் மீண்டும் முன் பக்கம் வந்து கதவை தட்ட, படாரென கதவை திறந்தவர் வழியை அடைத்துக் கொண்டு நின்றார்.

வழி விடுவாரா என மதுரா பார்த்து நிற்க, “எங்குட்டுடீ போயிட்டு வார? எனக்கு எல்லாம் தெரியும், ‘நான் செத்த அப்புறம்தான் என் பொண்டாட்டி அவ பொறந்த வூட்டுக்கு போவா’ன்னு சேரன் சொல்லியும் அங்குட்டு போயிருக்கேன்னா என்ன நெஞ்சழுத்தம்டி உனக்கு? அதானே… உனக்கென்ன அவனை பத்தின கவலை… நீதான் சுலபமா தாலிய அத்து தர்றவளாச்சே?” என மூச்சு விடாமல் பேசினார்.

‘கணவனுக்கு தெரிந்து அவனது அனுமதியோடுதான் சென்றேன்’ என சொல்லி விட எண்ணி, “இல்லத்த… அவர்…” என மதுரா பேசத் தொடங்கியிருக்க, “போடி… அங்குட்டே போயி தொலைஞ்சிடு. என் வீட்ல இனிமே உனக்கு இடம் கிடையாது” இரக்கமின்றி சொன்னவர் வேகமாக கதவை அடித்து சாத்தினார்.

திகைத்துப் போன மதுராவுக்கு நடப்பதை கிரகிக்கவே நேரம் பிடித்தது. மனம் சோர்வுற்றவளாக திண்ணையில் அப்படியே அமர்ந்து விட்டாள்.

மதிய வேளை என்பதால் தெருவில் மனித நடமாட்டம் இல்லை. யாராவது பார்க்க நேரிட்டால், என்ன ஏது என கேட்டால் என்ன பதில் சொல்வாள்? அவமானத்தில் கன்றி சிவந்தது மதுராவின் முகம்.

அப்படி என்ன செய்து விட்டேன் என இப்படி வீட்டை விட்டு வெளியில் நிறுத்துகிறார்? சாப்பாட்டு விஷயத்திலும் இப்படித்தான் அத்தனை வன்மத்தை காட்டினார். கணவனை மீறியே தான் பிறந்த வீடு சென்றிருந்தாக இருந்தாலும் வீட்டிற்கு வெளியே நிற்க வைப்பதெல்லாம் என்ன மாதிரியான செயல்?

கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டவள் கணவனுக்கு அழைத்தாள். அவனது கைப்பேசி சார்ஜ் தீர்ந்து அணைந்து போயிருந்ததால் இவளால் அவனை தொடர்பு கொள்ள முடியவில்லை. வேறு யாருக்கும் அழைத்து இதை சொல்லவும் பிடிக்கவில்லை.

என்ன செய்வதென ஒரு நொடி குழம்பியவள் மனதில் திடத்தை வரவழைத்துக் கொண்டு யோசித்தாள். அடுத்தவர் காணும் முன் இங்கிருந்து செல்ல வேண்டும் என நினைத்தாலும் எங்கு செல்ல எனதான் தெரியவில்லை.

மீண்டும் பிறந்த வீடு சென்றால் இந்நேரம் வீடு வந்திருக்கும் அண்ணன் குடைந்து குடைந்து கேட்டே உண்மையை வாங்கி விடுவான், அதை விட அம்மாவின் முகத்தை பார்த்து விட்டு துயரத்தை வெளிப்படுத்தி தன்னால் அழாமல் இருக்க முடியுமா எனவும் அவளுக்கு சந்தேகம்தான்.

தற்சமயம்தான் கொஞ்சமாக முன்னேற்றம் காணும் தன் கணவன், அண்ணன் உறவில் மீண்டும் பெரிய விரிசல் விழும் என்பதால் பிறந்த வீடு செல்லும் எண்ணத்தை கைவிட்டாள்.

பூங்கொடியுடன் இன்னும் முழுதாக உறவு சீராகவில்லை என்பதால் அவளது வீடு செல்லவும் தயங்கினாள். அவளின் மாமனார் மாமியார் கீழாக பார்க்க மாட்டார்களா?

அக்கம் பக்கம் வீடுகளுக்கு சென்றால் அதை விட அவமானம் வேறெதுவும் வேண்டுமா? ‘மாமியாரால் வெளியே நிறுத்தப் பட்டவள்தானே?’ என்பதை காலம் முழுக்க நினைவு படுத்தி விடுவார்களே. முதுகுக்கு பின்னாலும் எத்தனை விதமாக கேலி பேசுவார்களோ என்றெல்லாம் வெகுவாக யோசித்தவள் மாட்டுக் கொட்டகைக்கு சென்று விட்டாள்.

கண்ணீர் பெருகிக் கொண்டுதான் வந்தது. கணவன் அவனாகவே வேறு யாரின் கைப்பேசியிலிருந்தாவது தனக்கு அழைத்து விட மாட்டானா என்ற தவிப்போடு மாடுகளை பார்த்தாள்.

ஒரு பசு சாதுவானதுதான். கறவை பசுதான் பழகாத ஆட்களை உதைத்து விடும் அல்லது முட்ட பார்க்கும். அதை தாண்டிக் கொண்டுதான் அவள் செல்ல வேண்டும். எப்போதும் அந்த பசுவை கண்டு பயம் கொள்பவள் இன்று துணிந்து அதை கடக்க பார்த்தாள்.

மதுராவின் தவித்துப் போன உடல் மொழியும் கலங்கிய கண்களும் அந்த பசுவுக்கு என்ன செய்தி உணர்த்தியதோ… அவளை ஒன்றும் செய்யாமல் அவள் செல்ல வழி விட்டு ஒதுங்கி நின்றது.

பசுவின் அந்த செயலில் மதுராவுக்கு ஆறாக கண்ணீர் பெருகியது. மிருகங்களிடம் காணப் படும் நேசம் கூட மனிதர்களிடம் இல்லையே என எண்ணிக் கொண்டே கொட்டகையை தாங்கியிருந்த மூங்கில் ஒன்றில் சாய்ந்த வண்ணம் அமர்ந்து விட்டாள்.

கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்கள் அந்த மாட்டு கொட்டகைதான் அவளுக்கு ஆதரவு தந்தது. தண்ணீர் பருகாமல் இயற்கை உபாதையை பொறுத்துக் கொண்டு சுய இரக்கம், மாமியார் மீதான கோவம், கைப்பேசி அணைக்கும் அளவிற்கு விட்டானே என கணவன் மீதான மனத் தாங்கல் என பலவித உணர்ச்சிகளையும் உள்ளே அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

மதுரா மாட்டுக் கொட்டகையில் அமர்ந்திருப்பதை அறிந்தும் மகன் வந்து திட்டுவான் என கனகாவுக்கு துளியும் பயமில்லை. பிறந்த வீட்டுக்கு அவள் சென்றதை சொல்லி மகனை கொண்டே மதுராவை திட்டி சண்டையிட செய்து முடிந்தால் நிரந்தரமாக பிறந்த வீட்டுக்கே அவளை அனுப்பி வைத்து விடும் திட்டத்தோடு காத்திருந்தார்.

ஐந்து மணி போல வீடு வந்து சேர்ந்தான் சேரன். தொலைக்காட்சி சத்தத்தில் சேரனின் பைக் சத்தம் கனகாவுக்கு கேட்டிருக்கவில்லை.

பால் கறக்க நேரம் ஆகியும் வரவில்லை கனகா. கன்றுக் குட்டியை அவிழ்த்து விட்டு அதனை பசியாற்றிக்கொள்ளும் படி வகை செய்த மதுரா மீண்டும் அமர்ந்து விட்டாள்.

 தண்ணீருக்காக சத்தம் போட்டது பசு.

“தண்ணி வைக்கலையா லட்சுமிக்கு, என்ன பண்ணுது அம்மா? இவளும் இந்நேரம் வந்திருப்பாளே… ஒருத்தருக்கும் பொறுப்பு இல்ல” என முணு முணுத்துக் கொண்டே நேராக மாட்டுக் கொட்டகைக்கு சென்றான் சேரன்.

கன்று பாலருந்தவதை கண்டவன், “ஏட்டி சின்ன லட்சுமி, உன்னைய யாருடி அவுத்து வுட்டா? ரொம்ப பசியோ உனக்கு?” எனக் கேட்டுக் கொண்டே அருகில் வந்து அதன் முதுகில் தடவிக் கொடுத்தான்.

உதடுகள் துடிக்க மதுரா அமர்ந்திருக்க, தண்ணீர் பிடிக்க அங்கிருந்த குடத்தை கையில் எடுத்துக் கொண்டு திரும்பியவன் மதுராவையும் அவள் அமர்ந்திருக்கும் கோலத்தையும் கண்டு திகைத்துப் போனவனாக அப்படியே நின்றான்.

தன்னையே வெறிக்க பார்த்திருந்த மனைவியின் விழிகள் ஏதோ செய்தி சொல்லின. இன்னதென இனம் காண முடியா விட்டாலும் இவனை என்னவோ செய்தது அந்த பார்வை. கையிலிருந்த குடத்தை நழுவ விட்டவன் விரைந்து அவளிடம் ஓடினான்.

“என்னடி ஏன் இங்குட்டு உட்கார்ந்து கெடக்க?” எனக் கேட்டுக் கொண்டே அவளின் தோளை பற்றினான்.

அவனது வலது கையை பிடித்துக்கொண்டவள் அதில் முகத்தை புதைத்துக் கொண்டு தேம்பலானாள்.

பதறிப் போனவன், “என்னன்னு சொல்லாம இப்படி அழுதா என்னன்னு நினைப்பேன் டி, மதியானம் கூட நல்லாத்தானே பேசின? வீட்ல எல்லாரும் நல்லா இருக்காவோ தானே? யாருக்கும் ஏதுமில்லையே?” எனக் கேட்டான்.

இல்லை என்பதாக தலையாட்டியவள் முகத்தை மட்டும் அவனது கையிலிருந்து பிரித்து நிமிர்த்தவில்லை. அத்தனை நேரமாக அடக்கி வைக்க பட்டிருந்த அழுகையை அவன் கையில் கரைத்தாள்.

“பின்ன என்னட… அம்மா ஏதும் சொல்லிட்டா?” எனக் கேட்டவனுக்கு அவள் பதில் தராமல் போக, அதுதான் போல என முடிவு கட்டியவன், “ஏதும் பேசினா உனக்கு வாயில்லையா என்ன? திருப்பி பேசுறத விட்டுட்டு இதென்னடி பால்வாடி புள்ள கணக்கா அழுதிட்டு கெடக்க?” எனக் கேட்டான்.

தலையை நிமிர்த்தி அவனை பார்த்தவள், “என் அம்மா வீட்டுக்கு போயிட்டு வந்தேன்னு இனிமே இந்த வீட்டுக்குள்ள வரக்கூடாதுன்னு…” என்றவள் எச்சில் கூட்டி முழுங்கி தன் அழுகையை கட்டுப்படுத்த பார்க்க அவளால் முடியாத அசாதாரண செயல் ஆகிப் போனது.

விழிகள் இடுங்க பார்த்திருந்தவன், “வரக்கூடாதுன்னு… சொல்லுடி… என்ன?” என அதட்டல் போட்டான்.

நடந்ததை எல்லாம் அவனிடம் சொல்லி விட நினைத்தாலும் வார்த்தைக்கு முன் அழுகைதான் முட்டி மோதி வெளியில் வந்தது. அவனால் அந்த அழுகையை சகிக்க முடியா விட்டாலும் விஷயம் இன்னதென்று தெரியாமல் மண்டை பிளப்பது போலிருந்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement