Advertisement

அத்தியாயம் -22(2)

மூன்று ஆண்களுக்கும் மீன் குழம்பு, வறுவல், மீன் கட்லட் என சூடாக பரிமாறினாள் மதுரா.

“அம்மாக்கு தனியா பாத்திரத்துல போட்டு கொடு” என்றான் சேரன்.

“போதும் டா உன் கரிசனம்? இனியும் அவ கையால சாப்பிடுவேன்னு நினைச்சுககிட்டியா? முடியறப்போ நான் செய்வேன், முடியாதப்போ செய்றதுக்கு ஆள் வரப் போவுது. நீங்களே சாப்பிடுங்க. எனக்கு ரசம் இருக்கு” என நொடிப்பாக சொல்லி சென்று விட்டார்.

மதுரா தன் கணவனை இரகசியமாக முறைக்க, அவன் சிரித்து சமாளித்தான்.

“அவ கெடக்குறா நீ இன்னும் கொஞ்சம் கொழம்பு ஊத்து ஆயி” என்றார் கந்தசாமி.

கட்லட் சாப்பிட்டு பார்த்த சரவணன், “இது என்னண்ணி புது டேஸ்ட்டால இருக்கு?” எனக் கேட்டான்.

“ஃபிஸ் கட்லட்” என பெயர் சொன்ன மதுரா, சரவணனுக்கு இன்னும் கொஞ்சம் பரிமாற போனாள்.

அவளை தடுத்த சேரன், தன் இலையில் இருந்ததை தம்பியின் இலையில் வைத்து, “நெசமாலுமே புடிச்சிருக்காடா உனக்கு? இல்லை அவள சந்தோஷ படுத்தன்னு சொல்றியா?” எனக் கேட்டான்.

“அண்ணனுக்கு பிடிக்கலியாம் அண்ணி, என்னன்னு கவனிச்சு விடுங்க” என்ற சரவணன் விருப்பத்தோடுதான் கட்லட்டை சாப்பிட்டான். சேரனுக்குத்தான் அதன் சுவை பிடிக்கவில்லை.

“அந்த கடலமிட்டாய்ல எனக்கு இன்னொன்னு போடு ஆயி” என கந்தசாமியும் வாங்கி சாப்பிட, “அப்பா கட்லட் ப்பா” என திருத்தினான் சரவணன்.

“ஏன் இப்ப பேர தப்பா சொல்லிப்புட்டதால என் தொண்டையில இறங்காம போயிட்டுதா. என் அம்மா கைபக்குவத்துக்கு சமைக்குதுடா ஆயி” என்றார் கந்தசாமி.

“ஏது அப்பயி கட்லட் போட்டுக் கொடுத்து நீங்க அத சாப்பிட்டீய?” என அப்பாவை கிண்டலாக கேட்டவன், “அண்ணன் வாய அம்மா அது கைப் பக்குவத்துக்கு வளத்து விட்ருக்கு. வித விதமா அண்ணி செய்றாவோ, ஒன்னுத்தையும் ரசிச்சு சாப்பிட மாட்டேங்குது” என்றான்.

அதற்கு பதிலாக கந்தசாமி ஏதோ சொல்லிக் கொண்டிருக்க, சேரனுக்கு மட்டும் அம்மா என்ன சாப்பிடும் என வருத்தமாக இருந்தது.

சாப்பாட்டில் அமர்ந்து கொண்டே அக்காவுக்கு அழைத்து பேசியவன், “அம்மாக்கு மட்டும் குழம்பு கொடுத்தனுப்பு க்கா” என்றான்.

பூங்கொடியும் என்ன ஏது என்றெல்லாம் விசாரிக்கவில்லை. சரி என சொல்லி விட்டாள்.

“தப்புடா சேரா, உன் அக்காவா இருந்தாலும் கொண்டான் கொடுத்தான் வீட்ல போய் இப்படி வச்சுக்க கூடாது. பூங்கொடியோட மாமனா மாமியா என்ன நினைக்க மாட்டாவோ?” என்றார் கந்தசாமி.

“என்னப்பா செய்ய சொல்றீய? நாமெல்லாம் வக்கனையா திங்கும் போது அம்மாவ மட்டும் வெறும் ரசத்த ஊத்தி சாப்பிட சொல்றதா?” எனக் கேட்டான் சேரன்.

“ரசம்தான சாப்பிடுறா, வெஷம் இல்லியே? அவளுக்கெல்லாம் ஈவு இரக்கம் பார்க்காதடா. வேணும்னா ஆயி சாப்பாட்ட சாப்பிடட்டும், இல்லைனா வீம்பு புடிச்ச கழுதை வெறும் வயித்தோட கெடக்கட்டும்ங்கிறேன். இனிமேட்டு பூங்கொடிக்கிட்ட எல்லாம் சாப்பாடு கேட்க கூடாது, கண்டிஷனா சொல்லிப்புட்டேன் ஆமாம்” என முடித்துக் கொண்டார் கந்தசாமி.

பூங்கொடியே நேரில் வந்து மீன் குழம்பு, வறுவல் எல்லாம் கொடுத்து விட்டு, மதுரா கொடுத்த கட்லட்டையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டு சென்றாள்.

அடுத்த நாள் காலையில் கந்தசாமியும் சரவணனும் திருமண பத்திரிக்கை வழங்க சென்று விட, திருத்துறைப்பூண்டி ஆஞ்சநேயர் கோயிலுக்கு செல்வதாக சொல்லி விட்டு சேரனும் மதுராவும் புறப்பட்டனர்.

நேற்றே முத்துப்பேட்டையில் வாங்கி வந்து கார் டிக்கியில் பதுக்கி வைத்திருந்த பழங்கள் நிறைந்த பையை எடுத்துக் கொண்டு மனைவியோடு பைக்கில் புறப்பட்டான் சேரன்.

 பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டவன், “எனக்கு வெளி வேலை நெறைய கெடக்குடி. இல்லன்னா நானே கொண்டாந்து வுடுவேன். திருவாரூர்லேருந்து திரும்பி வர கூட தாமசம் ஆனாலும் ஆவும். மதியம் சமைக்கணும்னு அரக்க பறக்க ஓடியாறாத. நான் வெளில சாப்பிட்டுக்கிறேன். திரும்ப வீட்டுக்கு வாறப்போ எப்படி வந்தேன்னு அம்மா கேட்டா நான்தான் தெரு முக்கத்துல கொண்டாந்து விட்டுட்டு வேற வேலையா போயிட்டேன்னு சொல்லிடு” என சொல்லிக் கொடுத்தான்.

“மாமா கேட்டா என்னங்க சொல்றது? எதுக்கு இப்படி பொய் சொல்லணும்?”

“அப்பாக்கும் சரவணனுக்கும் எல்லாம் தெரியும்டி. அம்மாகிட்ட உண்மையை சொன்னா அத வச்சே உன்னை பேசும். அதுகிட்ட மட்டும்தான் பொய் சொல்றோம். அதனால என்ன நட்டமாகி போச்சு உனக்கு. பெரிய உண்மை விளம்பிதான்டி நீ” என்றவன் அவளின் கையில் பணம் கொடுத்தான்.

“இது எதுக்கு? அதான் ஏற்கனவே கொடுத்திருக்கீங்களே?”

“வச்சுக்கடி, உன் அம்மாவுக்கு கை செலவுக்கு கொடுக்கணும்னா கொடுத்திட்டு வா”

“அதெல்லாம் அம்மா வாங்காது” என்றாள்.

“வாங்காட்டி போறாவோ, நீ கைல வச்சுக்க” என்றவன் பேருந்து வரவும் பழ பைகளை எடுத்துக் கொண்டு பேருந்தில் ஏறினான்.

மனைவியை இருக்கையில் அமர வைத்து, நடத்துனரிடம், “இறக்கி விடும் போது பையை இறக்கி கொடுங்க ண்ணா” என்றான்.

நடத்துனர் சரி என்க, வனராஜன் ஊர்க் காரரான ஓட்டுநர், “ஏ சேரா… ஏதோ ஏரோப்பிளேன்ல ஏத்தி வுடுறது கணக்காகன்ன நாடவம் வைக்கிற. வேணும்னா ஆயி வீட்டடியிலேயே போய் இறக்கி வுடுறேன்” என கிண்டலாக சொன்னார்.

“விடலாம், ரோடு சரியில்லைன்ன? பஸ் கவுந்தா அண்ணன் குடும்பத்துக்கு யாரு பதில் சொல்றது? கான்ட்ராக்ட் காரவோல ரோட்ட நல்லா போட சொல்லுங்க, பொறவு பார்ப்போம்” என்றான் சேரன்.

“அது சரி, உன் மச்சான்தானப்பா அங்குட்டு எல்லாம் நீயே சொல்லிக்க” என ஓட்டுநர் சொல்ல, பதிலுக்கு சிரிக்க மட்டும் செய்தவன் மனைவியிடம் கண்களால் விடைபெற்று இறங்கி, சத்தமாக விசில் அடித்து பேருந்தை எடுக்க வைத்தான்.

“நீயும் காலேஜ் படிக்கையில இருந்து பாக்குறேன், என் பஸ்ல ஏத்தினா தங்கச்சிக்கு பாதுகாப்பு இல்லைனு காலேஜ் பஸ்ல ஏத்தி வுட்டான் உன் அண்ணன். கதை எப்படி போயிட்டு பார்த்தியா? ஆனாலும் முறுக்கிட்டு திரியுற சேரன் உங்கிட்ட மட்டும் பொட்டிப் பாம்பா அடங்கி போயிடுறான் ஆயி. இவ்ளோ சீக்கிரம் உன்னைய பொறந்த ஊருக்கு அனுப்பி வைப்பான்னு எதிர்பார்க்கல, சந்தோஷம் ஆயி” என பேசிக் கொண்டே டிக்கெட்டை கிழித்து மதுராவின் கையில் தந்தார் நடத்துனர்.

நடத்துனரின் நலன் விசாரித்தவள் மதியம் எத்தனை மணிக்கு பேருந்து ஊருக்கு வரும் என நேரத்தை கேட்டறிந்து வைத்து கொண்டாள்.

அவள் இறங்கிய போது தனம் அவளது பிறந்த ஊருக்கு செல்ல காத்திருந்தவள் மதுராவிடம் நலம் விசாரித்து, “பீமன் சாமிய ஆவேஷமாக்கி ஆட வச்சு உனக்கு நல்லது பண்ணினவடி நான். கல்யாணம் ஆன பொறவு ஒத்த வார்த்தை பேசினியா அக்காகிட்ட?” என உரிமையாக கேட்டாள்.

கைப்பேசி மாறி விட்டது, இனி பேசுகிறேன் என சொல்லி கைப்பேசி எண்கள் பரிமாறிக் கொண்ட பின் பிறந்த வீடு நோக்கி சென்றாள் மதுரா.

அஞ்சலைக்கும் சரஸ்வதிக்கும் அத்தனை ஆனந்தம். வனராஜன் வெளியில் சென்றிருப்பதாக சொன்னார்கள். மகளுக்கு பிடித்த உணவாக சமைக்க ஆரம்பித்து விட்டார் அஞ்சலை. புகுந்த வீட்டு நிலவரங்களை நல்ல விதமாகவே சொல்லிக் கொண்டிருந்தாள் மதுரா.

திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடத்த பதினோரு மணி என நேரம் கொடுக்க பட்டிருந்தது. அதற்கென கூட்டத்தினர் காத்திருந்தனர். காவலர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நெல் மூட்டைகள் ஏற்றிக் கொண்டு லோடு லாரி வந்து கொண்டிருக்க அதன் பின்னால் பைக்கில் வந்து கொண்டிருந்தான் சேரன். வழியில் ஆள் அரவமற்ற சாலையில் சிதம்பரத்தின் ஆட்கள் எதிர்பட்டு லாரியை வழி மறித்துக் கொண்டனர்.

 லாரியின் ஓட்டுநர் எட்டிப் பார்க்க அவனருகில் பைக்கிலேயே வந்த சேரன், “இறங்காத நீ, செத்த நேரத்துல பறந்து போயிடுவானுவோ அரை வேக்காட்டு பசங்க” என்றான் சேரன்.

நொடிகளில் டிராக்டர் ஒன்று வெளிப்பட்டது. செழியன் ஓட்டிக் கொண்டிருக்க மதன் பக்கத்தில் இருந்தான். பின்னால் இருந்த ட்ரக்கில் வாட்ட சாட்டமாக நிறைய ஆட்கள் இருந்தனர். அனைவரும் சேரன் மற்றும் செழியனின் தோப்பு மற்றும் வயல்களில் வேலை செய்பவர்கள்.

பைக்கில் வந்து சேர்ந்த மோகனும் இவர்களோடு இணைந்து கொண்டான். செழியனும் மதனும் சேரனின் ஆளுக்கொரு பக்கமாக நின்றனர்.

“எல்லாம் அரை டிக்கெட்டால்ல இருக்கு. இந்த சினா தனா பெனா தனா லாம் எங்குட்டு போயிட்டானுவோடா?” எனக் கேட்டான் செழியன்.

“யாரடா சொல்ற?” புரியாமல் கேட்டான் மோகன்.

“சின்ன தடியன் வனராசன், பெரிய தடியன் சிதம்பரம்” அலட்சியமாக சொன்னான் செழியன்.

மதனுக்கு சிரிப்பு வந்து விட கட்டுப்படுத்திக் கொண்டவன், “ஒருத்தன் சேரன் மச்சான், இன்னொருத்தரு என் மாமனாரு. ஏன் டா இப்படி?” எனக் கேட்டான்.

“சிதம்பரம் வெறும் மாமா இல்லயா உனக்கு, அதெப்போ மாமனாரு ஆனாரு?” மோகன் அதட்டலாக கேட்க, மதன் விழித்தான். அவனது முதுகிலேயே இரண்டு வைத்தான் சேரன்.

“என்னங்கடா?” மோகன் பதற, “பதறாதீய அத்தான், பொறவு சொல்றேன். இவனுங்கள கவனிச்சு அனுப்புவோம் மொத” என்றான் சேரன்.

ஆனால் எதுவும் அடிதடி ரகளை ஆவதற்குள் போலீஸ் ஜீப்போடு வந்து விட்டான் வனராஜன். கலவரம் எதுவும் ஆகாமல் கூட்டம் கலைந்து சென்றது.

“இதென்னடா சின தன நம்ம பக்கம் கோல் போட்டு கொடுத்திட்டு போறான், என்ன சங்கதிடா?” என சேரனின் காதில் ரகசியமாக கேட்டான் செழியன்.

பதில் தராத சேரன், வனராஜனையே கூர்மையாக பார்த்திருக்க, வேறெங்கோ பார்வையை வைத்த வனராஜன், “பாத்து சூதானமா இருக்கணும்னு சேதி சொல்லியும் விளையாட்டு தனமா இருந்தா எப்படி? எனக் கேட்டான்.

மற்றவர்கள் என்னங்கடா நடக்குது எனும் விதமாக வினோதமாக பார்த்திருக்க சேரனின் பதிலை எதிர்பாராமல் சென்று விட்டான் வனராஜன்.

பிறந்த வீடு வந்த தனத்தின் மூலமாக அவளது தோழி பூங்கொடிக்கு மதுரா அவளது பிறந்த வீடு சென்றிருப்பது தெரிய வந்து விட்டது. அம்மாவுக்கு தெரியாமல் நடக்கும் செயல் என்பதை அறியாத பூங்கொடி கனகா எதற்கோ கைப்பேசியில் இவளை தொடர்பு கொண்ட போது சொல்லி விட்டாள்.

இல்லை, சேரனோடு கோயில் சென்றிருக்கிறாள் என மறுத்து பேசினார் கனகா.

“தனம்தான் சொன்னாம்மா. சேரன் திருவாரூர்ல இருக்கான், இவரும் அங்குட்டுத்தான் ஏதோ வேலையா போயிருக்காரு. செத்த முன்னாடி அவருகிட்ட பேசினேன். தம்பி, அவன் கூட்டாளி பயலுவோ எல்லாருமா டீ கடைல நின்னுட்டு இருக்கிறதா சொன்னாரு” என்றாள் பூங்கொடி.

மகளிடம் பிறகு பேசுவதாக சொல்லி அழைப்பை துண்டித்த கனகாவுக்கு முன்பு ஒரு முறை சேரன் கோவத்தில், ‘அங்குட்டு போவா, பேசுவா, உறவ வளத்துக்குவா, எல்லாம் நான் செத்து சுடுகாட்டுக்கு போனதும் செய்வா, இப்ப இல்ல, போதுமா?’ என சொன்னது நினைவுக்கு வந்தது.

மகனின் வார்த்தையை மீறி ஏதோ தகிடு தத்தம் செய்து பிறந்த வீட்டுக்கு சென்றிருக்கிறாள் மதுரா என அவளின் மீது கண் மண் தெரியாத அளவுக்கு ஆத்திரமும் பொங்கிக் கொண்டு வந்தது.

“கள்ள சிறுக்கி! எப்படி எம்மூட்டு வாசப் படிய மிதிக்கிறான்னு பாத்துப்புடுறேன்” என பொருமியவர் வீட்டை உள் பக்கமாக தாழிட்டு விட்டு அறைக்குள் போய் படுத்து விட்டார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement