Advertisement

ஆள வந்தாள் -22

அத்தியாயம் -22(1)

சரவணன் சுகந்தி திருமணத்திற்கு பத்திரிக்கை கொடுக்க ஆரம்பித்திருந்தனர். நான்கு நாட்களாக உறவுகளுக்கு பத்திரிகை கொடுக்க கணவனோடு அலைந்து திரிந்ததில் சோர்ந்து விட்டார் கனகா.

 கிராமப் புறங்களில் முக்கிய உறவுகள், நட்புகளுக்கு ஆண், பெண் இருவரும் சேர்ந்து பத்திரிக்கை வைக்கா விட்டால் மரியாதை குறைவாக நினைப்பார்கள். ஆகவே கனகா சென்றே ஆக வேண்டிய கட்டாயம்.

“என்னாடி நடக்க வச்சா அழைச்சிட்டு போறேன், ஜங்குன்னு வண்டில உட்கார்ந்து வர்றதுக்கு வலிக்குதா உனக்கு?” என சத்தம் போட்டார் கந்தசாமி.

“உங்க டி வி எஸ் உங்களுக்கு மேலன்ன ஆட்டம் போடுது, மொதல்ல வண்டிய மாத்துங்க. என் இடுப்பே செத்து போச்சு” என குறை படித்தார் கனகா.

“ஒன்னு செய்வோம், மிச்சம் உள்ள இடத்துக்கு சேரனும் மதுராவும் போய் பத்திரிக்கை வைக்கட்டும்” என தீர்வு சொன்னார் கந்தசாமி.

அதற்கு ஒத்துக் கொள்ளாத கனகா ‘அதெப்படி அவளை போக சொல்லலாம்?’ என கணவரை பிடித்துக்கொண்டார்.

“ஐயய்யய்ய… ஏன்டி இப்படி தானும் படுக்க மாட்டேன் தள்ளியும் படுக்க மாட்டேன்னு நிலையா நிக்குற?” என வசை பாடினார் கந்தசாமி.

“அப்பா வுடுங்க. நாங்க போவல, அம்மாவே வரட்டும். இப்ப ரெண்டு நாளைக்கு அம்மாக்கு ரெஸ்ட் வுடுங்க. கட்சி ஆளுவோளுக்கு பத்திரிக்கை வைக்க அம்மா தேவையில்லைன்ன? சரவணனோட போயி அத முடிங்க. நம்மூட்டு காரு டிரைவரு ரெண்டு நாளு லீவு சொல்லிட்டு வேற சோலியா போயிருக்கான், அவன் வந்திட்டானா கார்லேயே அம்மாவை அழைச்சிட்டு போங்க” என பெற்றோரின் வாக்குவாதத்தை முடித்து வைத்த சேரன் குளத்துக்கு சென்று விட்டான்.

இன்று மீன் பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அங்கேயே மீன் வாங்கிக் கொண்டால் நல்ல மலிவு விலையில் கிடைக்கும் என்பதால் அக்கம் பக்கத்து கிராமத்தினர் பலர் குழுமியிருந்தனர்.

செழியன், மதன் மற்றும் தன் அக்கா வீடுகளுக்கெல்லாம் சென்று மீன் கொடுத்தவன் பத்து மணி போல தன் வீட்டு வாசலில் பைக்கில் வந்து நின்றான்.

பைக்கிலிருந்து இறங்காமலே மதுராவை கூவி அழைத்தவன் அவள் வரவும் மீன்கள் இருந்த பையை கொடுத்து, “பக்கத்தூட்டு அத்தாச்சிக்கும் பெரியாதாத்தாவுக்கும் பங்கு வச்சு கொடுத்திட்டு மீதிய வீட்டுக்கு ஆக்குடி” என்றான்.

பையை திறந்து பார்த்தவள் பெரிய பெரிய கெண்டை மீன்கள் உயிரோடு மிண்டவும் விழிகள் தெறிக்க கணவனை பார்த்தாள்.

“என்னடி பேய் கணக்கா முழிக்குற?”

“இதென்ன உசுருள்ளத கொண்டாந்திருக்கீங்க? சித்தி வீட்டுல பீஸ் போட்டு வரும் மீனெல்லாம், சின்ன மீன் கூட தலைய ஆஞ்சு சுத்தம் பண்ணித்தான் சித்தப்பா வாங்கிட்டு வருவாங்க” என்றாள்.

“இது வேறயா?” எனக் கேட்டுக் கொண்டே பைக்கின் இஞ்சினை அணைத்து இறங்கியவன் மனைவியிடமிருந்து பையை பெற்றுக் கொண்டான்.

 அக்கம் பக்கத்து வீடுகளுக்கு கொடுக்க சொல்லி தனி தனி பைகளில் மீன்களை போட்டு மனைவியிடம் கொடுத்தனுப்பியவன் பின் கட்டு சென்று அவனே மீன்களை சுத்தம் செய்ய ஆரம்பித்தான்.

கனகா உடல்வலிக்கு மாத்திரை போட்டுக் கொண்டு அறையில் உறங்கிக் கொண்டிருந்தார்.

மதுரா திரும்பி வரவும் பக்கத்து வீட்டு அத்தாச்சி மதில் சுவர் அருகிலிருந்து எட்டிப் பார்த்து, “மாங்கா இருக்கா மதுரா, அத போட்டு வச்சாதான் மீன் கொழம்பு மணமா நல்லா இருக்கும்னு சொல்வாரு உன் அத்தான்” என்றாள்.

மதுராவும் இருக்கிறது என சொல்லி எடுக்க செல்ல, “ஏட்டி மதுரா… அப்படியே ரெண்டு சோம்பு இருந்தா கொடுடி, வாங்க மறந்திட்டேன், நீ கொடுக்கலைனா லொங்கு லொங்குன்னு முனை கடைக்குத்தான் ஓடணும்” என்றார்.

மதுரா தலையாட்டி விட்டு சென்று விட, “ஏன் அத்தாச்சி… கொழம்பு தூளு, உப்பு, எண்ணெய் எல்லாம் இருக்கா? வேணும்னா கொழம்பையும் இங்குட்டே செஞ்சு வாங்கிக்கிக்க” என கிண்டல் செய்தான் சேரன்.

“உன் வாய்க்குத்தான் சலவை வேட்டி கட்டுன உன்னை மீன் கழுவி தர சொல்லியெல்லாம் பெண்டு நிமுத்துறா மதுரா” என்றார் அத்தாச்சி.

“அங்குட்டு மட்டும் என்ன வாழுதாம்? ‘ஏழு ஊருக்கு நீளுற பொண்டாட்டி வாயை அடக்க முடியலை, எனக்கெல்லாம் இது கேடா’ன்னு என் அண்ணன் வெள்ள வேட்டி கட்டுறதை வுட்டுட்டு சாம்ப வேட்டி கட்டுறாரு. சீக்கிரம் காவி வேட்டி கட்டபோறாரு பாரு” என்றான் சேரன்.

“ரொம்ப நல்லது, நீயே நல்ல மடமா பார்த்து அவரை சேர்த்து வுட்ரு. மறக்காம கூட உன் பெரியம்மாவையும் கூட்டிட்டு போ. தாய்கிட்டேருந்து புள்ளைய பிரிச்ச பாவம் எனக்கெதுக்குங்கிறேன்?” என அவரும் விளையாட்டாக சொல்லி மதுரா கொடுத்தவற்றை வாங்கிக் கொண்டு அகன்றார்.

“போதும் தள்ளுங்க, நான் பார்த்துக்கிறேன்” என மதுரா சொல்ல, “ஆச்சு டி, எல்லாருக்கும் சேத்து வை, அம்மாவுக்கும் மேலுக்கு முடியலை, அதால செய்ய முடியாதுன்ன” என்றான்.

“ஆமாம், நான் சமைச்சத உங்க ராஜமாதா மோந்து கூட பாக்க மாட்டாங்க. எதுக்கும் அவங்களுக்கு தனியா மீன் வேணுமான்னு கேட்ருங்க, இல்லனா அதுக்கு வேற குறை பேசுவாங்க” என்றாள்.

“வலின்னு படுத்து கெடக்கு, நீ செய்யு, நான் சாப்பிட வச்சுக்கிறேன். அது செஞ்சத நெனப்பு வச்சுகிட்டு மாட்டேன்னு சொல்லாத டி. யாருக்கும் வயித்துக்கு வஞ்சனை செய்யபடாதுடி” என்றான்.

“என்ன நடந்தாலும் உங்க அம்மா பாசம் இருக்கே… ஒரு சட்டி நிறைய குழம்பு வைக்கிறேன் போதுமா?” என்றாள்.

“பொண்டாட்டி மேல மட்டும் பாசம் கம்மியாவா வச்சிருக்கேன்?”

“வைக்கலைனா யார் விடுவா?” எனக் கேட்டுக் கொண்டே, சுத்தம் செய்த மீனை எடுத்துக் கொண்டு அவளது சமையலறைக்கு சென்றாள்.

கை கால்கள் கழுவிக் கொண்டவன் மீண்டும் குளத்துக்கு சென்று விட்டான்.

சிதம்பரம் சார்ந்திருக்கும் கட்சி நடத்தும் ஆர்ப்பாட்டம் நாளை திருவாரூரில் நடக்க இருந்தது. கந்தசாமி சார்ந்திருக்கும் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் நான்கு நாட்கள் கழித்து திருச்சியில் நடக்க இருக்க இந்த ஆர்ப்பாட்டம் பெரிய அளவில் பேசப்பட வேண்டும் என மாவட்ட தலைமை முடிவெடுத்திருந்தது.

ஆகவே தன் ஊரில் ஆர்ப்பாட்டத்திற்கு ஆள் திரட்டும் வேலையில் முனைப்பாக இருந்தார் சிதம்பரம். திருவாரூருக்குதான் சேரனும் நாளை நெல் லோட் ஏற்றி செல்கிறான். விவரம் எப்படியோ சிதம்பரத்துக்கு தெரிந்து விட்டது.

வனராஜனை அழைத்து, “நல்ல சந்தர்ப்பம்டா, நாம தனியாதான் ஏதும் செய்ய முடியாது. அவன் லோட் வண்டிய வழி மறிச்சு சேத படுத்துறோம், அவனையும் ஒரு வழி செஞ்சு வுடுறோம்” என்றார்.

பெரியப்பாவை தீர்க்கமாக பார்த்த வனராஜன், “எனக்கும் அவனுக்கும் மனஸ்தாபம் இருக்கிறது என்னவோ நெசம்தான் பெரியப்பா. அவன் இப்ப வெறும் சேரன் இல்ல, எந்தங்கச்சி மதுராவோட புருஷன். என்னைய மீறி நீங்களும் அவன்கிட்ட வம்பு தும்பு வச்சுக்கிடாதீய, அவ்ளோதான் சொல்வேன்!” என எச்சரிப்பது போலவே சொன்னான்.

விழிகள் இடுங்க பார்த்த சிதம்பரம், “ஓஹோன்னானா! மூனு வருஷம் முந்தி என் தம்பி சிவ புண்ணியம் செத்து போனது யாராலங்கிறேன்? அது தற்கொலை இல்ல, கொலை. அவன் சாவுறதுக்கு சேரன் பயதான் காரணம்ங்கிறத மறந்துப்புட்டன்ன?” எனக் கேட்டார்.

“என் மூளைய சலவை செய்றத இத்தோட நிறுத்திக்கோங்க பெரியப்பா. அப்பாவை பால்டாயில் குடிக்க சொல்லி தூண்டி விட்டது யாரு? நீங்கதானே?” என வனராஜன் கேட்க, ‘நானா?’ என்பது போல திகைத்த பார்வை பார்த்தார்.

“எனக்கு தெரியும் பெரியப்பா, நம்பகமான ஆளு சொல்லிப்புட்டாவோ. பொறவும் ஏன் உங்கள சும்மா விடுறேன்னு தெரியுமா? நீங்க சொன்னா என் அப்பனுக்கு எங்குட்டு போச்சு புத்தி? அந்தாளு அப்படி செய்யாம இருந்திருந்தா மூனு வருஷம் என் தங்கச்சி வாழ்க்கை வீணா போவாம இருந்திருக்கும். இப்பதான் அவ நல்லா வாழுறா, அதை கெடுக்க பார்த்தீயன்னா வனராஜன் யாருங்கிறத உங்களுக்கு காட்டிப்புடுவேன், ஆமாம்…” சீறிய வனராஜன் அங்கிருந்து சென்று விட்டான்.

நல்ல வேளையாக தான்தான் உண்மையை சொன்னது என தன் பெயரை வெளியிடவில்லை வனராஜன் என நெஞ்சில் கை வைத்து ஆசுவாச மூச்சு விட்டார் சிதம்பரத்தின் மனைவி.

வீட்டுக்கு வந்த வனராஜனுக்கு பெரியப்பா சொன்னது பற்றிய யோசனைதான் ஓடிக் கொண்டிருந்தது. இவனுக்கு தெரியாமல் அவராக கூட எதுவும் செய்வாரோ என சந்தேகம் கொண்டான். ஆகவே மனைவியிடம் விவரம் சொல்லி மதுராவுக்கு தெரியப்படுத்தி சேரனை நாளை திருவாரூர் வர வேண்டாம் என எச்சரிக்கை செய்ய சொன்னான்.

சரஸ்வதியும் உடனே மதுராவிடம் சொல்லி விட்டாள். பயந்து போன மதுரா மதிய உணவுக்கு வந்த கணவனிடம் சொன்னாள்.

“ஏட்டி அந்தாளு நாளைக்கு ஆர்ப்பாட்டத்துக்கு வருவாருன்னு தெரியாமையா இருக்கேன் நான்? ஆனா உன் அண்ணனுக்கு என்னடி திடீர்னு எம்மேல பாசம் பொத்துக்கிட்டு வடியுது?” என கிண்டலாக கேட்டான்.

“அண்ணன் அப்படித்தாங்க. உங்களை எதுவும் செய்யாதுன்னு எனக்கு முன்னாடியே தெரியும். அது எம்மேல உள்ள பாசத்துல உங்க மேலயும் அக்கறை காட்டுது” என்றாள்.

“ஏது? இது எப்போத்லேருந்து? என் மண்டைய உடைச்சு காலை வெட்டினப்போலேர்ந்தா? நான் கட்டின தாலிய கழட்ட வச்சானே அப்பயிலிருந்தா? ஒரு வேளை ‘சீர் கேட்டு தூது அனுப்பிறியே, ஆம்பளையா நீ’ன்னு என்கிட்ட கேட்டு நமக்குள்ள சண்டை வரவச்சானே அப்போலேர்ந்து இருக்குமோ?”

“ஆரம்பத்திலிருந்து நீங்க ரெண்டு பேரும் முட்டி மோதிகிட்டீங்க. ரெண்டு பேருக்குமே முன் கோவம் ஜாஸ்தி, அவசரக்காரங்க வேற. கெடந்து அல்லாடுறது என்னவோ பொம்பளைங்கதான். பழச வுடக் கூடாதாங்க?”

“ஈஸியா சொல்லிப்புட்டடீ! நான்தான் உன்னை உறவாடிக்க சொல்லிப்புட்டேன்ன? என்னைய ஆள விடு”

“ஆமாம் ஆள விடுறதுக்குதான் கட்டியிருக்கேனா?” எனக் கேட்டவள் அவனது கையை பிடித்துக்கொண்டு கெஞ்சலாக, “திருவாரூர் போறத நாளைக்கு ஒரு நாளு தள்ளிப் போட கூடாதாங்க?” எனக் கேட்டாள்.

“அவசியமே இல்லடி. சிதம்பரம்லா ஒரு ஆளுன்னு பயந்துகிட்டு வூட்டுக்குள்ள ஒளிஞ்சிக்க சொல்றியா, போடி” என்றவன் அடுத்து அதை பற்றிய பேச்சை எடுக்கவே விடவில்லை.

“என்னமோ பண்ணுங்க. என் அண்ணி ஆசையா கூப்பிடுது, முன்னாடியே நான் வீட்ல இருந்ததாலதான் அதுக்கு புள்ள உண்டாகலைனு ஒரு நினைப்பு இருந்தது. பாவம் கர்ப்பமா இருக்கிற பொண்ணு கேட்டா மறுக்க கூடாதுதானே? அண்ணனுக்கும் நம்ம கூட சமாதானமா போவதான் ஆசை. ஆனா எப்படி பேசன்னு தயங்குது. நானே நேர்ல பார்த்து அண்ணாகிட்ட பேசினா உங்களையும் கூப்பிட வரும். நாளைக்கு போய் வரட்டுமாங்க?” என நயந்து கேட்டாள்.

“இந்தாருடி, எங்களுக்குள்ள இதுக்கு மேல எல்லாம் ஒட்டாது. நீ இப்ப அங்குட்டு போவணுன்னு முடிவா இருக்க, நீ போயிட்டு வா. ஆனா போனோமா வந்தோமான்னு இருக்கணும். உன் அண்ணனையும் என்னையும் சேர்த்து வைக்கிறேன்னு எதையாவது செஞ்சு வச்சு என்கிட்ட வாங்கி கட்டிக்காத” என்றான்.

“வாங்கி கட்டுறதா? என்ன என்ன செய்வீங்களாம் என்னை?”

“உங்கிட்ட வாய கொடுத்து நான்தான் வாங்கி கட்டிக்கிறேன்” உடனே குரலை தணித்து பின் வாங்கியவன், “வா அப்பாவும் சரவணனும் கூட வந்தாச்சு போல, வந்து சோத்த போடு” எனக் கூறி அறையை விட்டு சென்றான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement