Advertisement

அத்தியாயம் -21(3)

தராத மாமி, “ம்ம்… பொண்டாட்டி இருக்கையில என்னை கவனிக்கிறியான்னு டெஸ்ட் பண்ணி பார்த்தேன், பாஸ் மார்க் வாங்கிப்புட்ட மாப்ள. வீம்புக்கு எடை தூக்கி உன் இடுப்பு புடிச்சுகிட்டுன்னா இன்னிக்கு ராத்திரி என்னையில்ல திட்டி குமிப்பா உன் சம்சாரம்” என்றார்.

குபீர் என சுற்றி உள்ளோர் சிரிக்க, அவன் முறைக்க, “சேச்ச பெரியம்மா, நான் ஏன் உங்களை திட்ட போறேன், அவர் வெயிட் தூக்குவார், வலிச்சாலும் மருந்து போட்டு வுடுறேன்” என்றாள் மதுரா.

“சரிதான் நல்ல வெவரமாதான் இருக்க ஆயி நீ? என் மாப்ள அப்பா ஆன மாதிரிதான்” என அவர் சொல்ல, மீண்டும் அங்கே வெடி சிரிப்பு.

புரியாத மதுரா தன் கணவனை பார்க்க, “கொலையா கொல்லாதடி, போடி முன்னுக்கு” என்ற சேரனின் கன்னங்கள்தான் வெட்கத்தில் பூரித்து போயிருந்தன. அவளுக்கும் அந்த மாமியின் கேலிப் பேச்சு புரிய வர, வழி தவறிப் போன ஆடு போல விழித்துக் கொண்டே முன்னே நடை போட்டாள்.

பத்தாயிரம் வாலா பட்டாசு அதிர அதன் சத்தம் ஓயவும் வான வேடிக்கை வைத்து மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்றார் சுகந்தியின் அப்பா.

“பெரியவனுக்குத்தான் எதுக்கும் கொடுப்பினை இல்ல, சின்னவன் வாழ்க்கையாவது நல்லா இருக்கட்டும்” மதுராவின் காது பட தன் பிறந்த வீட்டு சொந்தங்களிடம் சொன்னார் கனகா.

“அத்த… வெடி வெடிச்சு கல்யாணம் பண்றதெல்லாம் பழைய ஸ்டைலு, என் மாப்ள கலவரம் பண்ணி வீரத்தழும்பு வாங்கி என் தங்கச்சிய கட்டிக்கிட்டான். நாலு தலைமுறைக்கு அவன் காதல் கதைய இந்த ஊரு பேசிட்டு இருக்கும்” என்றான் செழியன்.

“என் பங்கு ஒரு சரித்திர நாயகன் பெரியம்மா. காதலிக்கிறவங்களுக்கு எல்லாம் காதல்ல வின் பண்ண எடுத்துக்காட்டு. அவன் பெருமை புரியாம பொருமாத நீ” என்றான் மதன்.

நொடித்துக் கொண்டு அகன்று சென்றார் கனகா.

கந்தசாமி எத்தனை சொல்லியும் அவர் கொடுத்த தாலி சங்கிலியையும் நகையையும் வாங்க மறுத்து விட்டான் சேரன். தானே கேட்ட போது பணம் இல்லை என்று சொன்னவரிடம் தனக்காக கூட எதுவும் வாங்கலாம், தன் மனைவிக்கென சல்லி பைசா கூட வாங்கி விடக்கூடாது என்பதில் அத்தனை தீர்மானமாக இருந்தான்.

கந்தசாமி மிகவும் மனம் வருந்த, மோகன்தான், “இப்ப விடுங்க மாமா. அவன்தான் வீம்பு புடிஞ்சவன்னு தெரிஞ்ச கதையாச்சே. கொஞ்ச நாள் போனதும் அவனா இறங்கி வருவான்” என சமாதானம் செய்து வைத்தான்.

சேரன் பக்கத்து உறவுகள் எல்லாரும் வந்திருந்தனர். யாரையும் அவ்வளவாக மதுராவுக்கு தெரியவில்லை. அவர்களாக தேடி வந்து இவளிடம் பேச்சு கொடுத்தனர். சேரன் வேலையாக இருக்க யார் என்ன என சொல்லிக் கொடுக்க வேண்டிய கனகாம்புசம் மருமகளை கண்டு கொள்ளாமல் இருந்தார்.

உறவுகளில் சிலர் நன்றாக பேசினாலும் சிலர் எடக்கு முடக்காக மதுராவிடம் பேசினார்கள்.

தான் வெடுக் என ஏதாவது பேசி பிரச்சனை ஆகிப் போகுமோ என நினைத்து பொறுமையாக இருந்தவள் அவ்வப்போது கணவன் தன்னருகில் வர மாட்டானா என பார்த்துக் கொண்டாள். கந்தசாமி கட்சி சம்பந்த பட்டவர்களுக்கும் அழைப்பு கொடுத்திருக்க அவர்களை எல்லாம் சேரன்தான் கவனிக்க வேண்டியதாக இருந்தது.

பார்த்திருந்த மோகன் தன் மனைவியை அழைத்து, “பாவம்டி அந்த புள்ள, உன் உற முறை எல்லாம் அந்த புள்ளயதான் வட்டமடிக்கிறாவோ. கொஞ்சம் என்னன்னு போய் பாரேன் டி” என்றான்.

 சேரனுடன் தனது உறவு நீடிக்க வேண்டும் என்றால் இவளுடன் பகைமை பாராட்டக் கூடாது, அதை விட மனக் கசப்புகள் தங்களுக்குள் இருக்க வேண்டுமே தவிர மற்றவர்களிடம் அவளை விட்டுத் தரக் கூடாது எனும் புரிதல் பூங்கொடிக்கு ஏற்பட்டிருந்தது.

ஆகவே கணவன் சொன்னதற்கு மறுப்பு சொல்லாமல் தன் தம்பி மனைவியின் பக்கத்தில் போய் அமர்ந்து கொண்டாள். அவளுடன் கூடி குழைந்து பேசவெல்லாம் முற்படவில்லை, இடக்காக யாராவது அவளிடம் பேசினால் இவளே முகத்தில் அடித்தது போல பதில் சொல்லி அவர்களை அப்புற படுத்தினாள்.

மேடைக்கு செல்லும் போதும் ஒரு பார்வையால் வா என அழைத்து தன்னுடன் நிறுத்திக் கொண்டாள். மகளின் இந்த செயல் தனக்கு பிடிக்கவில்லை என்பதை தன் முறைப்பால் வெளிப் படுத்தினார் கனகா.

நாத்தனாரிடம் ஏற்பட்ட மாற்றத்தை கொஞ்சம் கொஞ்சமாக கிரகித்துக் கொண்ட மதுரா அவளாக ஓரிரு வார்த்தைகள் பேசினாள். பூங்கொடியும் உதாசீனம் செய்யாமல் பதில் தந்தாள்.

“என்னடா மாப்ள நடக்குது அங்குட்டு? அத்தாச்சி தங்கச்சிக்கிட்டு மூஞ்சு கொடுத்து பேசுது. எப்படிரா?” என மதனிடம் கேட்டான் செழியன்.

“நல்லா இருந்தா சரிதானேடா?” என்றான் மதன்.

“சும்மாவா சொன்னாய்ங்க பொம்பள மனசு ஆழம், என்ன இருக்குன்னு கண்டு பிடிக்க முடியாதுன்னு. நாம ஆம்பளங்கதான்டா பாவம் வெள்ளந்தியா இருக்கோம்”

“செல்விகிட்ட சொல்லு, இதுக்கு சரியான பதில அதுதான் சொல்லும்”

“ஐயையோ பக்கம் பக்கமா பேசுவாடா” என்ற செழியனின் பார்வை புதிதாக உறவு கொண்டாடும் இரண்டு பெண்களின் மீதே இருந்தது.

“அங்குட்டே என்னடா பார்வை? நீ கண்ணு வச்சு தொலைக்காத”

“அப்படிலாம் வுடக் கூடாதுடா. அத்தாச்சி எப்போ அனகோண்டாவா மாறும்னு தெரியாது, எதுக்கும் நம்ம கண்ண அங்குட்டே வைப்போம்” என செழியன் சொல்லிக் கொண்டிருக்க, மதுராவும் பூங்கொடியும் சேர்ந்து நிற்பதையும் பேசிக் கொள்வதையும் புகைப்படம் எடுத்த மதன், “பங்குக்கு அனுப்பி விட்டா ஷாக் ஆகிடுவான்” என சொல்லி சிரித்தான்.

 வழி தெரியாத கட்சி காரருக்கு கைப்பேசியில் எப்படி வர வேண்டும் என விளக்கி அழைப்பை துண்டித்த சேரன், மதன் அனுப்பிய புகைப்படங்களை பார்த்து விட்டு வேகமாக மேடை இருக்கும் திசையை பார்த்தான்.

பெண்ணுக்கு நலங்கு செய்து முடித்தாள் பூங்கொடி. கனகா மூத்த மருமகளை அழைக்காமல் தன் பக்கத்து மற்ற உறவுகளை அழைத்து நலங்கு செய்ய வைத்துக்கொண்டிருந்தார்.

தான் இங்கு இருக்கவே வேண்டாம் என்ற நினைப்போடு மதுரா கீழே இறங்கப் போக, கோவம் கொண்ட சேரன் வேகமாக மேடை நோக்கி விரைந்தான். அதற்குள் பூங்கொடியே மதுராவை சுகந்திக்கு நலங்கு செய்ய அழைத்து சென்று விட்டாள்.

மதுராவுக்கு இதெல்லாம் பழக்கம் இல்லை. ஆகவே சற்று தடுமாற “சும்மா சந்தனத்தை கன்னத்துல தடவி குங்குமத்தை வச்சு விடு. போதும்” என சொல்லி அவளை செய்ய வைத்தாள் பூங்கொடி.

“ஏட்டி பூங்கொடி! என்னடி உன் தம்பி பொண்டாட்டிக்கு நலங்கு செய்ய தெரியாதாடி? எந்த சீமையிலிருந்து வந்து குதிச்சவ?” என்றார் ஒரு உறவுக்கார பெண்மணி.

“ஆமாம் ஆத்தா, இவ மெட்ராஸ்ல பெரிய படிப்பு படிச்ச பொண்ணு. உன்னைய மாதிரி காட்டு மேட்டுல திரிஞ்சவ இல்ல” என்றாள் பூங்கொடி.

“ஆஆன்… நல்லாத்தான் கொடை புடிக்கிறடியோவ்!” என்றார் இன்னொரு பெண்.

“பின்ன… என் தம்பி சம்சாரம்ன்ன?” எனக் கேட்ட பூங்கொடிக்கு அத்தனை பெருமை.

சேரனுக்கு சத்தமாக விசில் அடித்து அந்த தருணத்தை கொண்டாட வேண்டும் போலிருந்தது. மூன்று வருட பிரிவுக்கு பின் மதுராவை அழைத்து வர முடிவு செய்த போதே அம்மாவிடமிருந்து எதிர்ப்பை எதிர் பார்த்தே இருந்தவனுக்கு தன் அக்கா தங்களை ஆதரிப்பாள் என்ற நம்பிக்கை இருந்தது.

ஆகவே பூங்கொடியின் செயலில்தான் அவனுக்கு பெருந்த ஏமாற்றம். இப்போது சொல்ல முடியாத அளவுக்கு மகிழ்ந்து போனான்.

மேடையில் அம்மா பக்கத்தில் நின்றிருந்த அனு, தானும் நலங்கு செய்ய வேண்டும் என அடம் செய்தாள். சுகந்தி பக்கத்து உறவுகள் நீண்ட தொடர் வண்டி போல காத்துக் கொண்டு நிற்க, மகளை அதட்டி மேடையிலிருந்து இறங்க சொன்னாள் பூங்கொடி.

அனுவின் முகம் சுண்டிப் போய் விட்டது. குழந்தையை தூக்கிக் கொண்ட மதுரா, “நான் வச்சிட்டு கீழ இருக்கேன் அண்ணி” என சொல்லி இறங்கி விட்டாள்.

மாமியாரின் பிறந்த வீட்டு ஆட்கள் இல்லாத இடமாக பார்த்து ஓரமாக சென்று அனுவோடு அமர்ந்து கொண்டாள். சேரனும் அவர்களிடம் சென்று அமர, “என்னை மட்டும் சந்தனம் பூச விடல, அம்மாக்கு பிடிக்கல என்னை” என குறை படித்துக் கொண்டிருந்தாள் அனு.

அப்படியெல்லாம் இல்லை என மதுரா சமாதானம் செய்து கொண்டிருக்க, “புது அத்தைக்கு இதெல்லாம் செய்றாங்க, உங்களுக்கு ஏன் அத்தை செய்யல?” என கேள்வி கேட்டாள் அனு.

மதுரா கணவனை பார்க்க, நீயே சமாளி என குறும்பாக அவளை பார்த்திருந்தான்.

“அதுவா… அது… இன்னொரு நாள் இந்த அத்தைக்கும் செய்வாங்க” என்றாள் மதுரா.

அத்தையின் மடியிலிருந்து இறங்கி ஓடினாள் அனு. சேரனும் அவளின் பின்னால் செல்ல, வரவேற்கும் இடத்தில் இருந்த சந்தன பேழாவை ஒரு கையில் எடுத்த குழந்தை இன்னொரு கையில் குங்கும சிமிழை எடுத்துக் கொண்டாள். தழைய தழைய இருந்த பட்டுப் பாவாடையை பிடித்துக்கொள்ள முடியாமல் நடக்க சிரம பட்டாள்.

சேரனுக்கு அடக்க முடியாத சிரிப்பு. அனுவை தூக்கிக் கொண்டவன் மனைவியிடம் அழைத்து சென்று இறக்கி விட்டான்.

பாவாடையை இடுப்பில் மடக்கி விட்டு உயரத்தை சரி செய்து விட்ட மதுரா, “அத்தை உனக்கு சரியான அளவுல பட்டுப் பாவாடை சட்டை வாங்கி தர்றேன்” என்றாள்.

சிரித்த அனு சந்தனத்தை கையில் எடுத்து அவளின் கன்னங்கள் இரண்டிலும் பூசி விட திகைத்து போய் பார்த்தாள். சேரனும் குழந்தையை தடுக்கவில்லை.

குங்குமத்தை எல்லா விரல்களிலும் பிரட்டிக் கொண்டு அனு எடுக்க, “ஏட்டி மினுக்கி! எம் பொண்டாட்டிக்கு காளி வேஷம் போட போறியா? ஒரு விரலால அழகா வச்சு விடு” என்றவன் குழந்தையின் கையை பிடித்து அவனே வைத்து விட்டான்.

“என்னங்க விளையாட்டு இது?” முகத்தை நிமிர்த்த முடியாமல் வெட்கத்தில் தடுமாறினாள் மதுரா.

தன் கைக்குட்டை எடுத்து கொடுத்தவன், “சின்ன புள்ள ஆசையா செய்யுது, நான் என்னடி செய்ய? கன்னத்த மட்டும் துடைசிக்க, நெத்தியில குங்குமம் சரியாத்தான் இருக்கு” என்றான்.

யார் யார் பார்த்தர்களோ என்ற நினைவோடே வேகமாக கன்னங்களை அவள் துடைத்துக் கொள்ள, குறும்புக்கார அனு மீண்டும் அத்தையின் கன்னங்களை வண்ண மயமாக்கி விட்டு மாமனுக்கும் வஞ்சனை பாராமல் அவனது கன்னங்களிலும் சந்தனத்தை பூசி விட்டு அழகாக சிரித்தாள்.

சேரன் திகைக்க, மதுரா சிரிப்பை அடக்க, சற்று தள்ளி பார்த்திருந்த சேரனின் நண்பர்களுக்கும்அத்தனை மகிழ்ச்சி.

 புகைப்படம் எடுக்கும் நபரை கொண்டு அதை அழகாக படம் பிடிக்க வைத்தான் மதன். குறும்புக்கார செழியன் பாடல்களை ஒலிக்க விட்டிருப்பவனிடம் சென்று நின்றான்.

ஓடிக் கொண்டிருந்த பாடல் பாதியிலேயே நிற்க, “இந்த பாட்டு என் மாப்ள சோழ தேசத்து காதல் மன்னன் சேரனுக்கும் மதுரைக்கு போய் பார்த்திடாத என் பாசமலர் மதுராவுக்கும். போட்றா பாட்ட” மைக்கில் பேசினான் செழியன்.

அதீத சத்தத்தோடு “மணக்கும் சந்தனமே குங்குமமே…” பாடல் ஒலி பரப்பானது.

மண்டபத்தில் இருந்த பெரும்பான்மையானோரின் கண்கள் சேரன் மதுரா இருவரையுமே மொய்க்க, எங்கு சென்று ஓடி ஒளிவது என தெரியாமல் வெட்கத்தில் மூழ்கிய மதுரா அனுவை கட்டியணைத்து அவளின் முகத்தை மறைத்துக் கொண்டாள்.

தலையில் தட்டிக் கொண்டே “அடேய்!” என நண்பனை மிரட்டிய சேரனின் முகம் செந்தாமரைக்கு ஈடாக இருந்தது.

“எலேய் சரவணா! நிச்சயம் உனக்குத்தான், ஆனா உன் அண்ணனுக்கும் அண்ணிக்கும்தான் டா சுத்தி போடணும்” என மோகன் சொன்னதில் கொஞ்சமும் மிகை இல்லை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement