Advertisement

அத்தியாயம் -21(2)

பூங்கொடி அமைதியாக இருக்க, அனுவும் அமுதனும் கையில் தட்டோடு வந்தனர்.

“என்னடா இது?” என சரவணன் கேட்டுக் கொண்டிருக்க, மதுரா இன்னோரு தட்டோடு வந்தாள்.

பிரட்டை நெய்யிட்டு வாட்டி மதியம் செய்திருந்த உருளைக்கிழங்கு மசாலாவை ஸ்டஃப்’பாக வைத்து சாண்ட்விச் செய்திருந்தாள் மதுரா.

“பொட்டேடோ சாண்ட்விச்” என சொல்லி சரவணனுக்கு ஒன்று கொடுத்தவள், பூங்கொடி தன் பக்கம் திரும்பாத காரணத்தால் கணவனிடம் தட்டை கொடுத்து அவளுக்கும் கொடுக்கும் படி சாடை காட்டினாள்.

மறுத்து விடுவாளோ என்ற சந்தேகத்தோடே அக்காவிடம் நீட்டினான் சேரன். கொஞ்சமாக பிட்டு வாயில் போட்டுக் கொண்டவள், “போதும் டா, நீ சாப்பிடு” என்றாள்.

“இங்குட்டு கொடு” என அக்காவின் பங்கை தான் வாங்கிக் கொண்டான் சரவணன்.

“அப்பாக்கு சேத்து செய்யலையா நீ?” கடிவது போல மனைவியிடம் கேட்டான் சேரன்.

“தாத்தாக்கு கொடுத்திட்டேன், அம்மாச்சிதான் வேணாம்னு சொல்லிட்டு. தாத்தா நல்லா இருக்குன்னு சொல்லி சாப்பிட்டாங்க” என்ற அமுதன் தங்கையோடு வீட்டுக்குள் சென்று விட்டான்

“சரியான அவசரக்காரன் ண்ணா நீ” என்றான் சரவணன்.

மதுராவும் முகத்தை சுருக்கிக் கொண்டு உள்ளே சென்று விட்டாள். உடனே சேரன் எழ, “இதான் உனக்கு பொழப்பு. ஏதாவது சொல்ல வேண்டியது, அப்புறம் ராமசாமி தாத்தா காட்டுல மழை பெய்ய வச்சிட்டு இங்குட்டு வீட்ல உள்ள சாமிங்களுக்கு பிரமாதமா அண்ணிய வச்சு பூசை பண்ண வேண்டியது” என கிண்டல் செய்தான் சரவணன்.

“என்னடா?” என பூங்கொடி சின்ன தம்பியை விசாரிக்க, சொல்லாதே என கண் காட்டினான் சேரன்.

அண்ணனை வம்பிழுக்க முடிவு செய்து விட்டவன் கற்பனை கலந்து மிகைப் படுத்தி சொல்ல ஆரம்பிக்க, அவனது காதை வலிக்க திருகிய சேரன் உள்ளே ஓடி விட்டான்.

சிரிப்போடு பார்த்திருந்த பூங்கொடி, “பயலுக்கு அத்தன ஆசையாடா அவ மேல?” எனக் கேட்டாள்.

“ரொம்பத்தான் போல. அண்ணிக்கும் அப்படித்தான் க்கா” என்றான் சரவணன்.

பூங்கொடிக்கும் ஒரு நாத்தனார் உண்டு. அவர்களுக்குள் ஏதாவது மன வருத்தம் என்றால் அதை குழந்தைகளிடமும் பிரதிபலித்து முகம் திருப்பிக் கொள்வாள் அவள். பூங்கொடியும் சாதாரணம் அல்ல, அவளை போலவே அவளது பிள்ளைகளிடம் இவளும் முகம் திருப்புவாள்.

ஆனால் தன் பிள்ளைகளிடம் அப்படி ஒரு நாளும் மதுரா நடந்து கொள்ளவில்லை என்பதே பூங்கொடிக்கு அவள் மீதான நல் அபிப்ராயத்தை லேசாக வரவழைத்தது.

அறைக்கு வந்த சேரன், “உனக்குன்னு ஒரு வாய் எடுத்து வச்சுக்காம எல்லாத்தையும் பட்டுவாடா செஞ்சிடுவியாடி?” எனக் கேட்டுக் கொண்டே அவளுக்கு ஊட்டி விட போனான்.

“சுள்ளு சுள்ளுன்னு பேச வேண்டியது, அப்புறம் வந்து குழைய வேண்டியது. இதே பொழப்பா போச்சு உங்களுக்கு? தள்ளிப் போங்க” என்றாள்.

“பிறவிக் குணமா போச்சுடி, இந்தா…” என்றவன் அவளுக்கு வற்புறுத்தி ஊட்டி விட, “சரியான முரட்டுக்காளை! போங்கன்னா… சும்மா…” சலித்துக் கொண்டாள்.

அவனும் ஒரு வாய் சாப்பிட்டவன், “இந்தா நீயே சாப்பிடு பிரட்ட. இத அந்த சரவணன் பய வேற ரசிச்சு ரசிச்சு திங்குறான்” என அவளின் கையிலேயே கொடுத்து விட்டான்.

“சரியான சோத்து மூட்டை!” என கிண்டல் செய்தாள்.

“ஆமாம், நீ தூக்கி சுமக்குற அளவுக்கு உள்ள மூட்டைதான் நான், என்ன சரிதானே?” என குறும்பாக கேட்டான்.

அவனை சீண்டும் பார்வை பார்த்துக் கொண்டே சாண்ட்விச்சை நறுக் என கடித்து சாப்பிட்டாள். வேஷ்டியை மடித்துக் கட்டியவன் சட்டையின் கையையும் ஏற்றி விட்டு அவளை நெருங்கி வந்தான். அருகில் வந்தவனின் இடுப்பில் வலிக்க கிள்ளி விட்டு வெளியே ஓடி சென்று விட்டாள்.

“சும்மா இருந்தவனை சொறிஞ்சு வுட்டுட்டு ஓடுறியாடி வெள்ளச்சி, நைட்டு வச்சு செய்றேன்டி உன்னை” இடுப்பை தடவிக் கொண்டே இவனும் வெளியேறினான்.

வனராஜனின் வீட்டில் அன்று ஒரே மகிழ்ச்சி கொண்டாட்டம்தான். சரஸ்வதி கர்ப்பம் தரித்திருந்தாள்.

 “அண்ணன் புள்ளைய கைல தூக்கிடணும்னு எம்மூட்டு மவளுக்கு கொள்ள ஆசை. சேதி தெரிஞ்சா சந்தோஷத்துல அந்த குதி குதிப்பா. ஹ்ம்ம்… என்னவோ போ. புள்ளை பொறக்குறதுக்குள்ளாற எல்லாம் சரியாவுதுன்னா பாக்குறேன்” என்றார் அஞ்சலை.

காதில் வாங்கியும் அம்மாவை கடிந்து கொள்ளவில்லை வனராஜன்.

“ஏங்க… மதுராவுக்கு சொல்லவா?” என தயங்கி தயங்கி கேட்டாள் சரஸ்வதி.

“நீ சொல்லிக்கிறதுன்னா சொல்லிக்க. என்னைய எதுக்கும் இழுக்காத. வெட்டு குத்துன்னு நிறைய நடந்து போச்சு, எல்லாம் சரியாவும்னு நீயும் அம்மாவ போல நம்பிட்டு இருக்காத” என சொல்லி விட்டான் வனராஜன்.

கோவம் கொள்ளாமல் இந்த அளவில் கணவன் பேசியதே மாற்றதுக்கான அறிகுறிதான் என எடுத்துக் கொண்ட சரஸ்வதி, மதுராவுக்கு அழைத்து பேசினாள். அவளுக்கு அத்தனை மகிழ்ச்சி.

“ஒரு தடவ வீட்டுக்கு வந்திட்டு போ மதுரா, உன் அண்ணன் ஒன்னும் சொல்ல மாட்டாரு” என அழைப்பு விடுத்தாள் சரஸ்வதி.

“அண்ணன் அவரை கூப்பிடாம எப்படி நான் மட்டும் வர முடியும் அண்ணி? கொஞ்ச நாள் போகட்டும்” என சொல்லி விட்டாள் மதுரா.

இருந்தும் இரவில் சேரனிடம் விஷயத்தை சொல்லி அவனது அபிப்ராயம் பற்றி கேட்டாள்.

அவனோ பட்டும் படாமல், “பொது இடத்துல பாரு, இல்லன்னா அவ்வோள இங்குட்டு வர சொல்லுன்னு முன்னாடியே நான் சொன்னதுதானே மதுரா. நேரா அங்குட்டுதான் நீ போகணும்னா உன் இஷ்டம்தான். நான் என்னத்த சொல்ல?” என கூற, கருவுற்ற அண்ணியை பார்ப்பதை தற்போதைக்கு தள்ளிப் போட்டு விட்டாள் மதுரா.

அன்று மாலையில் சரவணனின் நிச்சயதார்த்தம். அதற்காக கனகாவுக்கு உதவ என பூங்கொடியும் பிறந்த வீடு வந்திருந்தாள். வழக்கம் போல மதுராவை கனகா ஒதுக்க அவளும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அமுதன் மற்றும் அனுவுடன் அவளது நேரம் நன்றாகவே சென்றது.

பேச்சு வாக்கில் சேரன் ஏன் உன் கையால் சாப்பிடுவதில்லை என கேட்டாள் பூங்கொடி. மனதில் வைத்துக்கொண்டிருக்க முடியாமல் என் மகள்தானே என கனகாவும் உள்ளதை சொல்லி விட்டார்.

நெஞ்சில் கை வைத்து அதிர்ந்து போன பூங்கொடி, “நீயாம்மா இப்படி செஞ்ச? சேரன் சம்சாரம்மா அவ” என்றாள்.

“நீ மட்டும்தான் எனக்கு ஆதரவு, நீயும் அவளுக்கே ஏத்துக்கிட்டு பேசாதடி. அவனை என்கிட்ட பேசாம இருக்கறதுக்கு சொல்லித் தர்றாடி அவ” என்றார் கனகா.

“அவ என்ன செய்றா சொல்றாங்கிற சங்கதிக்கே நான் போவல, ஆனா சாப்பாட்டுல போய்…” பூங்கொடிக்கு மனமே கேட்கவில்லை.

“அவளா என்கிட்ட கேட்டா கொடுக்கலாம்னு நினைச்சேன் டி, அவ என்னடான்னா…”

“ம்மா!” என்ற பூங்கொடியின் அதட்டலில் அடுத்து பேசாமல் நிறுத்தினார் கனகா.

“தெரியாம செஞ்சிட்டேன்னு ஏதாவது சொன்னா கூட பரவாயில்ல, இப்படி உன் மேல தப்பே இல்லைன்னு பேசுறியேம்மா?”

“அடுப்படிக்குள்ள அவள வுடக் கூடாதுன்னு நீயும்தான் எனக்கு சொல்லித்தரல?”

“அன்னிக்கு கோவத்துல சொன்னேன். அப்பவும் அவ வயித்துக்கு துரோகம் பண்ணுன்னு சொல்லித் தரலையேமா?”

“இல்லாட்டா மட்டும் பட்டினி போட்ருவான் உன் தம்பி? வகை வகையா கடை பலகாரம் வாங்கி தர்றான்ங்குறேன். தின்னே அழிக்க போறா பார்த்துக்க” தன் பிடியிலிருந்து இறங்கி வராத அம்மாவிடம் பேசி புண்ணியமில்லை என விட்டு விட்டாள் பூங்கொடி.

சரவணனின் நிச்சய தார்த்த விழா பெண் வீட்டு சார்பாக சிறப்பாக ஆரம்பித்தது. வேனில் சொந்த பந்தங்களோடு மண்டபத்திலிருந்து இருநூறு மீட்டர் தள்ளி இருந்த பிள்ளையார் கோயிலில் இறங்கினார் கந்தசாமி.

அங்கிருந்து வரிசை எடுத்துக் கொண்டு மண்டபம் செல்வதாக ஏற்பாடு. தாம்பாலம் மற்றும் தட்டுக்களில் தேங்காய், பூ, பழ வகைகள், இனிப்புகள், ஆடைகள் என மகள் மற்றும் சில உறவுகளோடு சேர்ந்து எடுத்து வைத்தார் கனகா.

ஆளுக்கொன்றாக வரிசை தட்டுக்கள் கொடுக்கும் போது மதுராவை மட்டும் கண்டு கொள்ளாமல் மற்றவர்களிடம் கொடுத்துக் கொண்டிருந்தார் கனகா. தெரியாமல் நடப்பது வேறு, வேண்டுமென்றே அவர் அப்படி நடந்து கொள்வதில் அவளுக்கு மனம் வலித்தது.

“வீட்டுக்குள்ள கூட வேற. நாலு பேர் மத்தியில அவள வுட்டுக் கொடுத்தேன்னு வையி… வாய தொறந்து எதுவும் நான் சொல்ல மாட்டேன், செஞ்சு காட்டுறப்போ தானா தெரிய வரும் உனக்கு” சிரித்த முகத்தோடு ஏதோ செய்தி சொல்வது போல அம்மாவின் காதில் அனலை கக்கி விட்டு தள்ளி நின்றான் சேரன்.

நல்ல பெரிது பெரிதாக பதினோரு தேங்காய்கள் இருந்த கனமான தாம்பாலத்தை தூக்கி மதுராவின் கையில் கொடுத்து விட்டார் கனகா. அதை அவளால் சுமக்கவே முடியவில்லை.

அம்மாவை முறைத்தவன, “இந்த வெயிட்ட எந்த பொம்பளையாலும் சுமக்க முடியாது, நான் தூக்கறேன் இதை” என சத்தமாக சொல்லி, கற்கண்டு இருந்த சின்ன தட்டை எடுத்து மனைவியின் கையில் கொடுத்தான்.

“இந்தா சேரா, ஆறு கிலோ அன்னாசி பழத்த தட்டுல வச்சு என் கைல கொடுத்துபுட்டு உன் அம்மா, எனக்கும்தான் இடுப்பு முடியலை, நானெல்லாம் உன் கண்ணுக்கு தெரியலைன்ன?” கிண்டலாக கேட்டார் சேரனின் மாமி.

“நான் கட்டிக்க ஒரு பொண்ணு பெத்து கொடுத்தீயளா மாமி? பொறவு எப்படி நீங்க என் கண்ணுக்கு தெரிவீய?” எனக் கேட்டான்.

“எனக்கும் ஆசைதான், நானென்ன வேணும்னா பெக்கல, உன் மாமன் சுழிக்கு பயலுவோதான் பொறந்தானுவோ” என்றார் மாமி.

“சொன்னாப்ல பனை மரம் கணக்கா நெடு நெடுன்னு ரெண்டு தடியனுங்கள பெத்து வளத்தீயளே… எங்குட்டு போனானுவோ?”

“ஒப்புறானா! இந்தா கொடு மாமின்னு தாம்பாலத்த வாங்காம என்னென்ன பேசுற நீ?”

“நீ புது வீடு குடி போறப்ப என் அம்மா இடுப்பொடிய அண்டா குண்டா தூக்கி சுமக்கல, இப்ப மட்டும் அழுது வடியுற” எனக் கேட்டவன் ஒரு கையில் தேங்காய் தட்டை வைத்துக்கொண்டு இன்னொரு கையால் மாமியிடமிருந்த தட்டை வாங்க போனான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement