Advertisement

ஆள வந்தாள் -21

அத்தியாயம் -21(1)

அக்காவின் பசங்களை பார்க்க வேண்டும் போல இருக்க திண்பண்டங்கள் வாங்கிக் கொண்டு சென்றான் சேரன். பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த பூங்கொடி சரியாக படித்துக் கொள்ளவில்லை என அமுதனை அடித்திருக்க அவன் கண்கள் கலங்க வீட்டுப் பாடம் எழுதிக் கொண்டிருந்தான். அனுவையும் அவள் அடித்திருக்க குழந்தை சத்தம் போட்டு அழ ஆரம்பித்திருந்தது.

சரியாக அந்த நேரத்தில் சேரன் சென்றிருக்க அக்காவை திட்டியவன் பிள்ளைகளை சமாதானம் செய்தான்.

“அன்பா சொல்லிக் கொடுத்தா படிச்சாதானேடா, இதுக வேலைய முடிச்சாதான நைட்டு சாப்பாடு என்னன்னு பார்க்க முடியும்?” என குறை படித்தாள் பூங்கொடி.

“இல்ல மாமா, எடுத்த உடனே கொட்டி கொட்டி வைக்குது அம்மா” என அம்மாவை குறை சொன்னான் அமுதன்.

“ஆமாம்” என ஒத்து ஊதினாள் அனு.

“உனக்கு பொறுமையே கிடையாதுக்கா, புள்ளைங்க அப்படி இப்படித்தான் இருக்கும், எனக்கு மட்டும் யாரையும் கை நீட்டாதன்னு புத்திமதி சொல்லுற, நீ பெரிய அடிதடிகாரியான்ன இருக்க” என்றான் சேரன்.

“ஏன் சொல்ல மாட்ட, நீ ஒரு தவணை இதுகளுக்கு சொல்லிக் கொடுத்து பாரு, அப்பதான் என் கஷ்டம் உனக்கு புரியும்” என்றாள் பூங்கொடி.

“ரெண்டு பேரும் வாரியளா, உங்கத்தைய சொல்லிக் கொடுக்க சொல்றேன்?” என பிள்ளைகளிடம் கேட்டதுதான் தாமதம், இரண்டும் புத்தக பையை கையில் எடுத்துக் கொண்டு தயாராகி விட்டனர்.

“அதெல்லாம் வேணாம்டா, ஆளாளுக்கு மாத்தி மாத்தி சொல்லி கொடுத்தா குழம்பி போயிடுங்க. நானே பார்த்துக்கிறேன்” என்றாள் பூங்கொடி.

“அதுக்கென்ன தினமும் அவளையே சொல்லி கொடுக்க சொல்றேன். அவளுக்கும் பொழுது போகும்ன?” என்றவன் இரண்டு பிள்ளைகளையும் பைக்கில் ஏற்றிக் கொண்டான்.

மாலை நேரங்களில் மதுராவுக்கும் பொழுது ஓடவில்லைதான். அதை விட கற்பித்தல் அவளுக்கு நன்றாக வரும். ஆகவே நாத்தனார் பிள்ளைகளுக்கு டியூஷன் எடுக்கும் பொறுப்பை மறுக்காமல் ஏற்றுக்கொண்டவள் காற்றோட்டாமாக இருந்த திண்ணையில் பிள்ளைகளை அமர சொல்லி அவளும் அமர்ந்து கொண்டாள்.

கனகா வந்து எட்டிப் பார்த்து விட்டு பிள்ளைகளுக்கு தின்பண்டங்கள் எடுத்து வைத்து தந்தார்.

“நான் கேட்டுட்டேன் அத்தை, அங்க சாப்பிட்டுட்டுத்தான் வந்திருக்காங்க, இப்ப படிக்கட்டுமே, அப்புறம் கிளம்பறப்ப கொடுக்கலாம்” என்றாள் மதுரா.

“இந்தா புள்ளைங்களுக்கு கொடுக்கிறதுல எல்லாம் கணக்கு பாக்காத, உன் புருஷன் மட்டும்தான் இங்க சம்பாதிக்கிறானா? எம் புருஷனும் சின்ன மகனும் கூட சம்பாதிக்கிறாங்க” என சுள் என பேசினார் கனகா.

“ஏன் அத்தைய திட்டுற அம்மாச்சி? நாங்கதான் சாப்பிட்டோம்னு அத்தைகிட்ட சொன்னோம்” என்றான் அமுதன்.

“இருக்கட்டுமேடா, வளர்ற புள்ளைங்க நல்லா திங்கணும், சாப்பிடு இதையும்” என பேரனை அதட்டினார் கனகா.

மதுரா எதுவும் சொல்லாமல் எரிச்சலை அடக்கிக் கொண்டு அமர்ந்திருக்க, “வயிறு முட்ட சாப்பிட்டா படிப்பு எப்படிம்மா ஏறும்? படிக்கத்தான் நான் இங்குட்டு அழைச்சிட்டு வந்தேன், அவளை சொல்லித் தர விடு. பொறவு தாராளமா அப்பா சம்பாத்தியத்துல வாங்கி வச்சிருக்க இந்த தீனியெல்லாம் கொடுக்கலாம்” என்றான் சேரன்.

மதுராவும் கனகாவும் பின்னால் திரும்பிப் பார்க்க, கடு கடுத்த முகத்தோடு நின்றிருந்தான் சேரன்.

“என்ன நடந்துச்சுன்னு தெரியாம பேசாதடா, பச்ச புள்ளைங்களுக்கு சாப்பிட கொடுக்கிறத தடுக்கிறா உன் பொண்டாட்டி…” குறையாக கனகா பேச ஆரம்பிக்க கை நீட்டி தடுத்தான்.

கனகா மகனை முறைக்க, “புள்ளைகள படிக்க விடுன்னு சொன்னேன்ன, உள்ள வந்து என்ன சொல்லணுமோ சொல்லு” என சொல்லி கூடம் சென்று விட்டான்.

முந்தானையை உதறி சொருகி கொண்டு கனகாவும் உள்ளே சென்றார்.

“அப்புறம் சாப்பிடலாமா?” என பிள்ளைகளிடம் சிரித்த முகமாக கேட்டு அவர்கள் தலையசைத்த பின் படிப்பு சொல்லித் தர ஆரம்பித்தாள் மதுரா. உள்ளே இட்டு கட்டி மருமகளை குறை சொல்லிக் கொண்டிருந்தார் கனகா.

அம்மாவை பொறுமையாக பேச விட்டவன், “சொல்லியாச்சுன்ன? போ வேலை இருந்தா போய் பாரு” என்றான்.

கனகா திகைத்து பார்க்க, “நல்ல மூட்ல இருக்கேன் மா, போயிடு” என சாதாரண குரலிலேயே சொன்னான்.

“அதானே… உங்கிட்ட சொன்னதுக்கு சொவத்துகிட்ட சொல்லியிருக்கலாம்…” என புலம்பிக் கொண்டேதான் அகன்றார் கனகா.

சற்று நேரத்தில் வீடு வந்த கந்தசாமி, சரவணன் இருவருக்கும் பிள்ளைகளை மதுரா படிப்பிப்பது குறித்து மகிழ்ச்சியாக இருந்தது.

வீட்டு வேலைகள் முடித்து விட்டு பூங்கொடி வந்தாள். மதுரா வாங்க என அழைத்ததற்கு உர் என்ற முகத்தோடு தலையாட்டிக் கொண்டவள் பிள்ளைகளை பார்த்தாள்.

அனு வரைந்து கொண்டிருக்க, அமுதன் எளிதான சுடாகோ(Sudoku) தீர்த்துக் கொண்டிருந்தான்.

“படிக்காம என்னடா பண்றீய?” என பூங்கொடி போட்ட சத்தத்தில் வீட்டுக்குள் இருந்த அனைவரும் வெளியில் வந்து விட்டனர்.

“எதுக்குடி கத்துற?” என இரைந்தார் கனகா.

“வீட்டு பாடம் செய்யாம என்னத்தையோ பண்ணிட்டு இருக்குதுக ம்மா. நேத்துதான் அமுதன் சரியா செய்றது இல்லைனு அவன் மிஸ் கூப்பிட்டு வச்சு சொன்னாங்க. படிக்க அழைச்சிட்டு வர்றேன்னு சேரன் சொன்னான், இன்னிக்காவது சீக்கிரம் தூங்கலாம்னு ஆசையா வந்தா…” அலுப்பாக சொன்னாள் பூங்கொடி.

“ம்க்கும்… வில்லங்கம் புடிச்சவள நம்பியா அனுப்பி விட்ட?” எனக் கேட்டார் கனகா.

“ஏட்டி…” கந்தசாமி மனைவியை அதட்டல் போட, “உன் கையால வாங்கி சாப்பிடலன்னு வருத்த படுறீன்ன? இனி ஒத்த வார்த்தை அவள ஏதாவது சொன்னீன்னா உங்கிட்ட பேசுறதையே நிறுத்திப்புடுவேன் ம்மா” என எச்சரிக்கை போல சொன்னான் சேரன்.

அமுதன் வீட்டு பாடங்களை முடித்து விட்டதாக சொல்லி அம்மாவிடம் நோட்டை காண்பித்தவன், “பாப்பாவும் முடிச்சிட்டா ம்மா. நீ கூப்பிட வர்ற வரைக்கும் இது செய்ய சொன்னாங்க” என விளக்கம் சொன்னான்.

பூங்கொடி யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியாமல் தவிக்க, “ஏன் க்கா ஏழரைய கூட்டுற? அவ்வோளும் உன்னைய மாதிரி பொண்ணுதான? சப்போர்ட்டா இல்லாட்டா கூட பரவாயில்லை, இங்குட்டு நடக்கிற அலும்பு தெரிஞ்சும் உன் பங்குக்கு திரிய கொளுத்தி விடுறீயே” என்றான் சரவணன்.

“உன் அம்மா வயித்துல பொறந்தவகிட்ட வேற என்னத்த எதிர்பாக்க முடியும்?” எரிச்சலாக கந்தசாமி சொல்ல, மளுக் என பூங்கொடியின் கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொண்டது.

“இந்தா வந்திட்டாரு வரிஞ்சு கட்டிகிட்டு, என்ன கொலையா பண்ணிப்புட்டா எம்மூட்டு மவ? அவள விட நேத்து வந்தவ ஒஸ்தியா போயிட்டான்ன? எல்லாம் கால கொடுமை!” புலம்பிக் கொண்டே உள்ளே சென்றார் கனகா.

அம்மா அழுவது பொறுக்க முடியாமல் எழுந்து சென்ற அனு அம்மாவின் கன்னங்களை துடைத்து விட, பார்த்திருந்த சேரனுக்கும் சரவணனுக்கும் கூட உருகிப் போய் விட்டது.

“அழாதீங்க அண்ணி…” தயக்கத்தோடு மதுரா சொல்ல, பூங்கொடிக்கு இன்னும் அழுகை வந்தது.

பூங்கொடியின் இரு பக்கமும் அவளின் சகோதரர்கள் அமர்ந்து கொள்ள, மதுரா இரு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டாள்.

“அக்கா…” என அன்பாக அழைத்தான் சேரன்.

 “உன் அத்தான் கூட என்னைய குறை சொல்றாருடா. மூணு வருஷம் முந்தி நீ படுத்து கெடக்கையில என்னா தவி தவிச்சு போனேன்? ஜுரம் வந்து ரெண்டு நாள் கண்ணு தொறக்க முடியாம கெடந்தடா. பச்ச தண்ணிய கூட குடிக்காம என் ரெண்டு வயசு பொண்ண கூட கவனிக்காம உன் தலைமாட்டுலேயும் கால் மாட்டுலேயுமா அல்லாடிக்கிட்டு கெடந்தேன். பாகம்பிரியா சாமிகிட்ட என் தம்பிய காவந்து பண்ணி கொடுத்திடு, எனக்கு பிடிச்ச மாங்காய சாப்புடுறத விட்டுடுறேன்னு வேண்டுதல் வச்சு இன்னிக்கு வரைக்கும் மாங்காய வாய்ல வச்சது இல்ல. உம்மேல பாசம் இல்லாதவன்னு சொல்லிப்புட்டாருடா உன் அத்தான். அப்படியாடா நான்?” அழுகையும் ஆற்றாமையுமாக கேட்டாள்.

பூங்கொடிக்கு மாங்காய் என்றால் எத்தனை உயிர் என வீட்டினருக்கு நன்றாகவே தெரியும். மனக் கட்டுப்பாட்டோடு அதை சாப்பிடாமல் இருக்கிறாள் என்றால் எத்தனை பிரியம் இருக்க வேண்டும் தம்பி மீது?

“உன்னை பத்தி எனக்கு தெரியாதாக்கா? அத்தான் கோவத்துல பேசியிருப்பாரு. என்னன்னு நான் கேட்குறேன்” என சமாதானமாக சொன்னான் சேரன்.

முந்தானை வைத்து மூக்குறிந்து கொண்ட பூங்கொடி, “உனக்கு ஒரு நல்லது நடக்காதான்னு நான் வேண்டாத சாமி இல்ல. இவ தாலிய கழட்டி கொடுத்தது நெஞ்சுல பதிஞ்சு போயிட்டு, இவளாலதான் உனக்கு அப்படின்னு இவ மேல இப்பவும் கோவம் கொறையல. மனசுல ஒன்னு வச்சு வெளில நடிக்க முடியாது என்னால. அப்பா என்ன சொல்லிப்புட்டாரு…” விட்ட அழுகையை மீண்டும் தொடர்ந்தவள் சின்ன தம்பியின் கையில் அடித்து, “இந்த பய கூட என்னைய கொடுமைக்காரி மாதிரியே பாக்குறான்” என குறை படித்தாள்.

“அப்ப நல்லவளா நீ?” சரவணன் கிண்டலாக கேட்க, பெரிய தம்பியின் முகத்தை பாவமாக பார்த்து உதடுகள் பிதுக்கி தேம்பலானாள்.

“போடா உள்ளுக்கு” என தம்பியிடம் சேரன் கோவப்படவும் அமைதியாகி விட்டான் சரவணன்.

“எனக்கு முடியாம போனதுல உனக்கு எத்தன வருத்தமோ அதேதானக்கா அவளுக்கும். நெனச்சு பாரு, அவ அப்பா செத்து போயிட்டாரு, துக்கத்துக்கு வந்தவய்ங்க பூரா அவதான் அதுக்கு காரணம்னு பேசியிருப்பாவோ. பத்தாததுக்கு அவ அண்ணன் காரன் என்னைய கொன்னுப்புடுவேன்னு மிரட்டயில என்னக்கா செய்வா? சரியான பயந்தாங்குலி புள்ளக்கா அவ. உசுரா நினைக்கிறவன் கட்டின தாலிய கழட்டி கொடுக்கயில அவ என்ன தவி தவிச்சிருப்பா? மூனு வருஷமா அவ வாழ்க்கைய நினைச்சு எவ்ளோ பயந்திருப்பா?” என பொறுமையாக கேட்டான் சேரன்.

மதுராவின் பக்கத்திலிருந்து ஒரு நாளும் பூங்கொடி யோசித்தது கிடையாது. இப்போது தம்பி சொல்வதை புரிந்து கொண்டாலும் அடி நெஞ்சில் அவள் மீது மண்டிக் கிடக்கும் வெறுப்பை சட்டென கலைந்து தூர எறிய முடியவில்லை.

அவளின் மனம் புரிந்தது போல, “அவ கூட நீ நல்ல மாதிரியா இருந்தா ரொம்ப சந்தோஷம் க்கா, இல்லாட்டாலும் அவள வேதனை படுத்தி புடாத, அது போதும் க்கா” என்றான் சேரன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement