அத்தியாயம் -2(2)

“ஏற்கனவே என்னை நிறைய அசிங்க படுத்திட்ட. எம்மேலயும் கொஞ்சம் தப்புங்கிறதாலதான் அமைதியா போறேன். இனியும் அசிங்க படுத்தாத. அவன் யாருடி உனக்கு? நான் பக்கத்துல உட்கார்ந்தா அவனை எதுக்கு பார்க்கிற?” கண்களை மூடிய படியே சின்ன குரலில் உறுமலாக பேசினான்.

அவள் பதில் பேசாமல் இருக்க கண்களை திறந்து பார்த்தான். அவளது பார்வை அவனது புருவத்திலிருந்த தழும்பில் பதிந்திருந்தது.

“காலத்துக்கும் மாறாத தழும்பு இங்க கூட இருக்கு” நெஞ்சை வருடிக் கொண்டு அவன் சொல்ல, “எல்லாம் உங்களாலதான்” என்றாள்.

“ஆமாம் நான்தான் எல்லாத்துக்கும் காரணம், இனியும் அப்படித்தான், என் இஷ்டம்தான், உன்னால முடிஞ்சத பாரு, இப்ப வாய தொறக்கப்படாது நீ” என அழுத்தமாக சொன்னான்.

இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என அவளுக்கு தோன்ற பேச்சை வளர்க்காமல் இருக்கையில் சாய்ந்து கொண்டாள்.

மதுரா பற்றிய விவரங்கள் எல்லாம் சதீஷுக்கு நன்றாகவே தெரியும். நிஜமாகவே அவளை அவனுக்கு பிடித்திருக்க சேரனின் இந்த வருகையில் இப்போது சற்று குழப்பமானான். ஆனாலும் மதுராவின் முகக் கலக்கம் கண்டவன் அவளுக்கு சேரன் மீது விருப்பம் இல்லை போல, இதை வனராஜனிடம் சொல்லி பிரச்சனையாக்க வேண்டாம், விரைவில் அவளுடன் தன்னுடைய திருமணத்தை நடத்திக் கொள்ள வேண்டும் என திட்டமிட்டான்.

மதுராவுக்கு உறக்கம் வருவேனா என்றது. அவனுக்கும் அதே நிலைதான், ஆனால் வேண்டுமென்றே உறங்குவது போல பாவனை செய்தான். எதேச்சையாக நடப்பது போல அவளது தோளில் தலை சாய்த்துக் கொண்டான்.

மெல்ல அவனது தலையை அவள் விலக்கி விட பட்டென கண்களை திறந்தவன் அவளை எரிப்பது போல பார்த்தான்.

“இல்ல… உங்களுக்கு கழுத்து வலிக்குமேன்னுதான்…” சமாளிக்க பார்த்தாள்.

“வலிச்சா சொல்லுவேன்” என்றவன் அவனது உடல் அவள் மீது உரசும் வகையில் அவள் பக்கமாக திரும்பி அவளது கழுத்து வளைவில் முகம் பதித்து உறங்குவது போல பாவனை செய்தான்.

இரண்டு நொடிகளுக்கு மேல் அவனது நெருக்கத்தை தாள முடியாதவள், “என்னவோ போல இருக்குங்க, ப்ளீஸ்…” என மன்றாடுதலாக சொல்ல விலகி அமர்ந்து கொண்டான்.

இருவருக்குமே சரியான உறக்கம் இல்லை. பாண்டிச்சேரியில் ஒரு பெட்ரோல் பங்கில் நின்றது பேருந்து. அவள் இறங்க மறுத்து விட அவன் மட்டும் இறங்கியவன் வரும் போது அவளுக்கு தேநீர் வாங்கி வந்தான்.

“ஏற்கனவே தூக்கம் வரலை, வேணாம்” என்றாள்.

“மூணு வருஷ ராத்திரி நல்லாத்தானே தூங்கியிருப்ப, இன்னிக்கு தூங்கலைனா எவன் குடியும் மூழ்கி போயிடாது” என்றவன் தேநீர் கப்பை அவள் கையில் திணித்தான்.

மீண்டும் பேருந்து புறப்பட்ட போது அவர்கள் கண்களில் தொற்றியிருந்த கொஞ்ச நஞ்ச உறக்கமும் பறந்து சென்றிருந்தது.

நினைவு வந்தவள் போல, “ஹேப்பி பர்த்டே” என்றாள்.

“ரொம்ப சீக்கிரம் சொல்லிட்ட!” என நொடிப்பாக சொன்னான்.

“கவுன்சிலரா நீங்க?” என விசாரித்தாள்.

ஆம் என தலையாட்டியவன், “என்கிட்ட பேசலைனா பரவாயில்லை, என்னை பத்தி கூட கேட்டு தெரிஞ்சுக்க மாட்டியா நீ?” என குற்றம் சுமத்தும் குரலில் கேட்டான்.

“தெரிஞ்சுக்க ஆசைதான், ஆனா யார்கிட்ட கேட்க?” என அவள் கேட்ட விதம் அவனது மனதை பிசைய செய்தது.

சில நிமிடங்கள் கழித்து அவளாகவே, “அப்ப நீங்க என்னை பத்தி எல்லாம் தெரிஞ்சுப்பீங்களா?” எனக் கேட்டாள்.

“என்னடி கேள்வி இது? உன் அத்தை மகன் என் கூட்டாளி, உன் வீட்ல அவன் கூட யாரும் பேசுறது இல்லைனாலும் அவன் அம்மா அக்கா கூட எல்லாம் பேசிகிட்டுதானே இருக்கீங்க? உன் பக்கத்து வீட்டு தனம் அக்கா மதன் அக்காவோட பிரெண்ட், இது போதாதா உன்னை பத்தி நான் தெரிஞ்சுக்க?” எனக் கேட்டான்.

இவனை பற்றி அறிந்து கொள்ள தான் அப்படி முயலவில்லையே என தன்னையே நொந்து கொண்டவள் பெரு மூச்சு விட்டாள். இவனை பற்றி எதுவும் தெரியா விட்டாலும் நிதம் இவனது நினைவோடுதான் இருந்தாள், இருப்பாள்.

காதலித்த காலம் நினைவில் வந்து மனதை நிறைந்தது. மிகுந்த சேட்டைக்காரன், வம்பு செய்து கொண்டே இருப்பான். எப்படி இவனிடம் காதல் வயப்பட்டாள் என இன்னுமே அவளுக்கு தெரியவில்லை.

இருவரும் பேசிக் கொள்ளவில்லை, பழைய நினைவுகளில் ஆழ்ந்து போயிருந்தனர். சென்னையை நெருங்கியது பேருந்து.

ஈ சி ஆர் சாலையில் சதீஷ் இறங்கிக் கொள்ள மதுராவும் சேரனும் கிண்டியில் இறங்கிக் கொண்டனர்.

சித்தியின் வீட்டிற்கு செல்ல கேப் புக் செய்யப் போனவள், “நீங்க எப்படி திரும்ப போவீங்க?” எனக் கேட்டாள்.

“நடந்து போவேன்” என்றவனை அவள் அயர்வாக பார்க்க, “அப்புறம் என்ன கேள்வி இது? இப்படித்தான் ஏதாவது பஸ்லதான் போகணும்” என சொல்லி இரு கைகளையும் விரித்து நெட்டி முறித்தான்.

“எதுக்கு இந்த வீண் அலைச்சல்?” அக்கறையாக கேட்டாள்.

“முட்ட கண்ண வச்சுகிட்டு குறு குறுன்னு என்னைய பார்த்த, சரி கூட வரணும்னு ஆசை படுறேன்னுட்டு ஏறிட்டேன்”

“நான் அப்படி சொன்னேனா? அப்புறம் எப்ப நான் குறு குறுன்னு பார்த்தேன்?”

“நீ இல்லயா? போச்சுடா!” தலையில் கை வைத்து நொந்து கொண்டான்.

“என்ன?”

“அது உன் சீட்டுக்கு முன்னால உள்ள பொண்ணு பார்த்திருக்கும் போல, நீதான்னு நான்தான் தப்பா நினைச்சிட்டேன். சீட் மாறி உட்கார்ந்திட்டேன்” என தீவிரமான முக பாவனையில் சொன்னான்.

“எப்படியோ போங்க, எவ பின்னாடியும் போங்க, எனக்கென்ன வந்தது? இனிமே என்னை பார்க்கவோ பேசவோ ட்ரை பண்ணாதீங்க, சொல்லிட்டேன்” ஒரு விரல் காட்டி எச்சரிக்கை செய்தாள்.

அந்த விரலை பிடித்து கீழே இறக்கியவன், “நீ சொல்றதை கேட்கணும்னு ரொம்ப ஆசை. ஒரு முறையாவது நான் கேட்கிற மாதிரி எதையாவது சொல்லக்கூடாதா நீ?” எனக் கேட்டான்.

“இவ்ளோ நாள் நல்லாத்தான இருந்தீங்க? திடீர்னு என்ன வந்துச்சு உங்களுக்கு? என்ன மாறப் போகுது? பழைய படியே இருங்க” என்றாள்.

ஹச் என தும்மியவன் அவள் பேசியதை பொருள் செய்யாமல் அவளது பேகில் இருந்து தண்ணீர் பாட்டில் எடுத்து சென்று முகம் கழுவி வாய் கொப்புளித்து விட்டு அவளிடம் வந்து தண்ணீர் பாட்டிலை நீட்டினான்.

அவள் வாங்கிக் கொள்ளவும் உரிமையாக அவளது துப்பட்டா எடுத்து முகத்தை துடைத்துக் கொள்ள, அக்கம் பக்கம் பார்த்தவள் அவளது துப்பட்டாவை அவனிடமிருந்து விலக்கினாள்.

“இப்போ உன் பிரச்சனை என்னன்னா நான் உரிமை எடுக்கிறது இல்லை, அத யாரும் பார்த்திடுவாங்களோ அப்படிங்கிறதுதான். இது சென்னை, நம்மள தெரிஞ்சவங்க யாரும் இந்த நேரம் இங்க இல்லை, நெனப்பு வச்சுக்கடி மக்கு” என்றான்.

“நான் மக்குன்னா நீங்க மடசாம்பிராணி” என்றாள்.

“மக்கும் மடசாம்பிராணியும் நல்ல ஜோடிதான், சும்மா எல்லாத்துக்கும் சுத்தி சுத்தி பார்த்துகிட்டு… என்னடி இப்போ?” எனக் கேட்டவன் மீண்டும் அவளது துப்பட்டாவை கையில் எடுத்தான்.

மதுரா பாவமாக பார்த்த பார்வையில் துப்பட்டாவோடு சேர்த்து விளையாட்டையும் கை விட்டவன், “நேத்து உன் வீட்ல உன் அண்ணி என்ன பேசிச்சு?” என விசாரித்தான்.

இவனுக்கு எப்படி தெரியும் என இவள் பார்க்க, “ப்ச், அதான் உன்னை பத்தி தெரிஞ்சிக்க ஆள் வச்சிருக்கேன்னு சொன்னேனே. அது ஏதும் சொன்னா வாய தொறந்து பேச என்னடி? இன்னொரு முறை ஏதாவது பேசினதா கேள்விபட்டேன்… உன் அண்ணிய ஒண்ணும் செய்ய மாட்டேன், பேச விட்டு வேடிக்கை பார்க்கிற உன் நொண்ணனை கண்டமாக்கி விட்ருவேன்” என்றான்.

இதென்ன பேச்சு என்பது போல அவள் பார்க்க, “அந்த கோண வாயன் பேரென்ன?” எனக் கேட்டான்.

யாரை கேட்கிறான் என இவள் புரியாமல் பார்க்க, “ஹான்… சதீசு… அந்த பன்னாடை எல்லாம் உன்னை பொண்ணு கேட்க நீ யாரோ இல்லைனு உனக்கு முதல்ல புரியனும்ன? அதான் உன் கூட வந்தேன்” என்றான்.

“நீங்க கூட வந்தா மட்டும்?”

“நீ படிச்சு முடி, நான் யாருன்னு உனக்கும் சேர்த்து எல்லாருக்கும் காட்டுறேன்” என திமிரான உடல் மொழியோடு சொன்னவன் அவள் கையை பிடிக்க சங்கடமாக நெளிந்தாள் அவள்.

“இப்படி நீ செய்றதுதான் என்னை தூண்டி விடுது” கடுப்பாக அவன் சொல்ல இயல்பாக இருக்க முற்பட்டாள்.

“கார் புக் பண்ணிட்டு கிளம்பு” என அவன் சொல்ல, கசங்கிய ஆடையும் சிவந்த விழிகளுமாக இருப்பவனை கவலையாக பார்த்தாள்.

“என்ன என் நெனப்பா என் அழுக்கு சட்டை வேட்டி ஏதும் வேணுமோ?” குறும்பாக கேட்டான்.

“ப்ச்… தொடர்ந்து டிராவல் பண்றீங்களேன்னு பாவம் பார்த்தா ரொம்ப பேசுறீங்க”

“எனக்கென்னடி… திமு திமுன்னு மாடு மாதிரி வளந்து நிக்கிறேன், என்னை பத்தி கவலை படாத, இப்ப ஏதாவது பஸ் புடிச்சேனா பொழுதுக்குள்ள ஊர் போய் சேர்ந்திடுவேன், நீ கிளம்பு” என்றான்.

அவனிடமிருந்து செல்ல மனமே இல்லை அவளுக்கு. ஆனால் அவனிடம் அப்படி என காட்டிக் கொள்ளாமல் கேப் புக் செய்தாள்.

அவனுக்கும் அவளை விட்டு செல்ல பிடிக்கவில்லை. வார்த்தையில் சொல்லத் தெரியவில்லை.

மகிழ்ச்சி, துக்கம் என இரண்டையும் ஒரு சேர உணர்ந்தார்கள்.

கேப் வரவும் அவள் ஏறிக் கொண்டாள். அவனும் அவனுக்கு தெரிந்த டிராவல்ஸ் இருக்கும் இடத்திற்கு செல்லும் பேருந்தில் ஏறிக் கொண்டான்.