Advertisement

அத்தியாயம் -20(3)

மாலையில் காரோடுதான் வந்தான் சேரன். வாடகைக்கு ஓட்ட டிரைவர் ஒருவனை மதன் ஏற்பாடு செய்து விட்டான். அக்காவுக்கும் அத்தானுக்கும் கூட விவரம் சொல்லி வீட்டுக்கு வர சொன்னான் சேரன்.

முகத்தை தூக்கி வைத்திருந்த கனகா சின்ன மகனிடம், “இந்தா இவன் கார் வாங்கிப்புட்டான்னடா, நீ என்ன இதுக்கு உன் மாமனார்கிட்ட கார் வேணாம்ன? இப்பவும் கெட்டு போவல, பேசி வாங்கிக்க. இருபது மா இடம்னா சும்மா இல்ல, உன் வாழ்க்கை முழுக்க உழைச்சா கூட உன்னால வாங்க முடியாது, வர்ற சீதேவிய மதிக்க கத்துக்க. உன் அண்ணன்காரன் மாதிரி வெவரம் இல்லாம இருக்காத” என்றார்.

“பேசாம இரும்மா” என சொல்லி நகர்ந்து விட்டான் சரவணன்.

தம்பியின் செயல்களில் பூங்கொடிக்கு மன வருத்தம் இருக்கிறதுதான். அவன் தரப்பு நியாயங்களை மனைவியிடம் எடுத்து சொன்ன மோகன், “எல்லாரும் எகிரிகிட்டு முறைச்சுக்கிட்டுன்னு திரிஞ்சீயன்னு வச்சுக்க… நானே அவனை தனிக் குடித்தனம் வச்சி விட்ருவேன், பார்த்துக்க” என மிரட்டலாகவே சொல்லியிருந்தான்.

அனைவர் முன்பும் மதுராவை என்னை ஆள வந்தவள் என அவன் பேசிய பேச்சுதான் அந்த பகுதியில் அன்றைய முக்கிய பேசு பொருளே. அதிலேயே மனைவியை எந்தளவு முக்கியமாக தன் தம்பி நினைக்கிறான் என்பது வேறு பூங்கொடிக்கு புரிந்திருக்க எதிர் மறையாக எதுவும் பேசாமல் தம்பியின் காரை பார்த்து, “நல்லா இருக்குடா” என சொன்னாள்.

சரவணனின் கையில் கார் சாவியை கொடுத்து அக்கா குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு ஒரு சுற்று சுற்றி வர சொன்னான் சேரன்.

பத்து நிமிடங்களில் அவர்களின் பயணம் முடிய, தன் பெற்றோரை அழைத்தான் சேரன். கனகா நொடித்து முகம் திருப்பிக் கொள்ள, தன் அப்பாவை பார்த்தான்.

 அவரின் முகம் இன்னும் தெளிவாகவில்லை. இன்னுமின்னும் பெரிய மகனுடன் விரிசல் ஏற்படுத்திக் கொள்ள விரும்பாமல் அமைதியாக எழுந்து வந்து காரின் முன் இருக்கையில் அமர்ந்து விட்டார். அம்மாவின் அருகில் சென்றவன், “வாம்மா…” என அழைத்தான்.

“என் கையால சாப்பிட மாட்ட, பொறவென்னத்துக்குடா என்னைய கூப்பிடுற?” எனக் கேட்டு சட்டமாக அமர்ந்து கொண்டார் கனகா.

“ஏன் உன் கையால சாப்பிட மாட்டேங்குறேன்னு உனக்கு தெரியலையாம்மா?” என அம்மாவை கூர்மையாக பார்த்துக் கொண்டே கேட்டான்.

கனகா பதில் சொல்லாமல் இருக்க, “என்னடா சங்கதி? அப்படி என்னத்தடா அம்மா செஞ்சிட்டு?” எனக் கேட்டாள் பூங்கொடி.

தன் மருமகனும் இங்கேயே பார்த்துக் கொண்டிருப்பதை கண்ட கனகா எங்கே மகன் சொல்லி விடுவானோ என பதற்றமடைய, ஒரு பெரு மூச்சுடன் ஒன்றும் சொல்லாமல் காருக்கருகில் சென்ற சேரன் மதுராவையும் அழைத்தான். பிள்ளைகளும் மீண்டும் வருவோம் என சொல்லி ஏறிக் கொண்டனர்.

ஒரு சுற்று காரை ஓட்டி வந்து வீட்டில் விட்டான் சேரன்.

“நீ ஆயி கூட கோயிலுக்கு போயிட்டு வாடா” என கந்தசாமி சொல்ல, சேரனுக்கும் மனைவியோடு தனியே பயணிக்க ஆசையாக இருக்க அவளை பார்த்தான்.

மதுராவுக்கு கசக்கவா செய்யும்? சேரன் காரை கிளப்ப, பின் இருக்கையில் இருந்தவளிடம் “அண்ணன் பக்கத்துல போயி உட்காருங்க அண்ணி” என்றான் சரவணன்.

“பரவாயில்லை” என வெட்கத்தோடு மதுரா கூற, “அட போங்கண்ணி, நாங்க வேணா கண்ண மூடிக்கிறோம்” என கிண்டல் செய்த சரவணன், பிள்ளைகளை அழைத்துக் கொண்டு திண்ணைக்கு சென்று விட்டான்.

அப்போதும் மதுரா இறங்காமல் போக, அவளின் மன நிலை புரிந்து காரை எடுத்த சேரன் தெரு முக்கத்தில் காரை நிறுத்தி அவளை பார்த்தான். அவளும் இறங்கி அவனது பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

“காலைல ஊர்க்காரய்ங்க வேடிக்கை பார்க்க என் தோள்ல சாஞ்சிருந்த, நெனப்பிருக்காடி?” என கிண்டலாக கேட்டான்.

அவளுக்கும் அந்த நினைவு வர தலையில் தட்டிக் கொண்டவள், “என்னென்ன பேசியிருப்பாங்க எல்லாரும், போங்க…” என்றாள்.

“நான் வேணும்னா எல்லார்கிட்டேயும் கேட்டு சொல்லவா?” எனக் கேட்டவன், பின் சிரித்துக்கொண்டே, “என்னத்த பெருசா பேசியிருக்க போறாவோ? புருஷன கைக்குள்ள வச்சிருக்கான்னு உன்னை சொல்லியிருப்பாவோ” என்றான்.

“ஆமாம், இந்த கோவக்கார சூரப்புலி பத்தி யாருக்கும் தெரியலை” என்றாள்.

“கோவக்காரனா இருந்தாலும் குணங்கெட்டவன் இல்லடி நான்”

“நீங்களே சொல்லாதீங்க, நான் சொல்லணும்”

“சொல்லு”

“ம்ம்… ரொம்ப குணமானவர்தான்” என்றவள், அவன் காரோட்டும் அழகை ரசித்து பார்த்தாள்.

அவளுக்கு அவன் தாலி கட்டிய கோயிலுக்குத்தான் அழைத்து வந்திருந்தான். அந்த நேரம் அங்கு யாருமே இல்லை.

திருமண நாளை போல அவசரம் அவசரமாக இல்லாமல் நிதானமாக கடவுளை வழிபட்டவர்கள் கோயிலில் இருந்து கிளம்பினார்கள். வழியில் பெரிய ஆல மரம் வர அங்கு காரை நிறுத்திய சேரன், “வா கொஞ்ச நேரம் இங்குட்டு உட்கார்ந்து பேசிட்டு போவோம்” என்றான்.

காதலித்த காலத்தில் எப்போதாவது தனியாக இவளை சந்திக்க ஆசை படுவான். மிக மிக அரிதாகத்தான் சம்மதிப்பாள். அந்த நேரம் மதன் இவளை இங்குதான் கொண்டு வந்து விடுவான்.

அதிகமில்லை பத்து நிமிடங்கள் போல பேசியிருந்து விட்டு கிளம்பி விடுவர். யாரும் பார்த்து விடாமல் சேரனின் நண்பர்கள் காவல் காப்பார்கள். அது போல விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் மட்டுமே நடந்திருக்கிறது.

ஆதலால் இவர்களுக்கு இந்த இடம் சிறப்பு வாய்ந்தது. இன்று யாருக்காகவும் பயம் கொள்ளாமல், தைரியமாக, இதமான மன நிலையோடு ஆல மரத்தடியில் அமர்ந்து கொண்டனர்.

பேசிக் கொண்டிருக்கையில் திடீரென, “ஏங்க… நம்ம கல்யாண நாளை என்னிக்கு கொண்டாடுறது? மொத தாலி கட்டின தேதியிலயா இல்ல இப்ப கட்டின தேதியிலயா?” என சந்தேகம் கேட்டாள்.

அவனுமே இது பற்றி யோசித்திருக்கவில்லை. இப்போது இவள் கேட்கவும், “என்னடி இவ்ளோ கஷ்டமான கேள்விய கேட்டுப்புட்ட?” என்றான்.

“அவசரத்துல ஏதாவது செய்ய வேண்டியது, பாருங்க இப்போ எவ்ளோ பெரிய சிக்கல் ஆவுது?”

“பெரிய சிக்கலு? ஏன் வருஷத்துக்கு ரெண்டு கல்யாண நாள் கொண்டாடினா என்ன குடி முழுக போகுதுங்கிறேன்?” எனக் கேட்டவனை அவள் ஆ என பார்க்க, அவளின் தோளில் தன் தோளால் இடித்தவன், “கல்யாண நாள் கொண்டாடுறது இருக்கட்டும், இன்னிக்கு நைட்டு நல்லா கொண்டாடணும், என்ன?” எனக் கேட்டான்.

“என்ன என்ன கொண்டாடணும்?”

“ஹ்ம்ம்… இன்னிக்குத்தான் நமக்கு கல்யாணம்னு வச்சுக்க, அப்ப நைட் என்ன கொண்டாடணுமா அதைத்தான், ஒரு செட்டப்போட அசத்தறோம்” என்றான்.

அவள் ஒன்றும் சொல்லாமல் எழுந்து நின்று, “என்ன பெரிய செட்டப்? அதே ரூம், அதே ஆட்டம் போடுற கட்டிலு” என அலுத்தாள்.

“கட்டிலு ஆட்டம் போடாம தொட்டிலு எப்படி ஆடும்டி நம்மூட்டுல?” எனக் கேட்டுக் கொண்டே காரின் டிக்கியை திறந்து காட்டினான். ராமசாமி தாத்தாவின் பூக்கூடை நிறைந்த பூக்களோடு வீற்றிருந்தது.

விழிகள் தெறிக்க அவள் பார்க்க, கண்கள் சிமிட்டி குறும்பாக சிரித்தான்.

“நாள பின்ன ராமசாமி தாத்தா மூஞ்ச எப்படிங்க பார்ப்பேன்? என் மானத்தை வாங்கிட்டீங்க” என்றாள்.

“அடி போடி! காரை வாங்கினப்பவே பெரிய மாலைய வாங்கி போட்டுட்டான் மதன் பய. இங்குட்டு ஐய்யனார் கோயில்ல பூசை போட பூ வேணும்னு தாத்தாவ மடக்கி பூ வாங்கினேன். அவர் கூடைல பூ அப்படியே இருக்கவும் நானே வாங்கிப்புட்டேன். அசராம இவ்ளோதான் உன் லெவலாங்கிற மாதிரி ஒரு லுக்க விட்டு, ‘பத்தாது பத்தாது இன்னும் எதிர்பார்க்கிறேன் உன்கிட்டேருந்து’ன்னு என்னை நையாண்டி செய்றாருங்கிறேன் அந்த குசும்பு புடிச்ச கெழவன். கூட இருந்த ரெண்டு பக்கியும் ஓட்டு ஓட்டுன்னு ஓட்டிப்புட்டாய்ங்க என்னைய” என அவன் சொல்ல மதுராவுக்கு சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.

அவளின் சிரிப்பில் மயங்கியவன், “நான் பூவெடுத்து வைக்கணும் பின்னால

அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னால

உன் மச்சான் மச்சான்… தேன் மல்லிய வைச்சான்

ஓ மச்சான் மச்சான் மல்லிய வைச்சான்

உள்ளத்திலே என்னடி உண்டாச்சு…” என அவளை பார்த்துக் கொண்டே பாடினான்.

அவள் இன்னும் சிரிக்க, கூடையிலிருந்து ஒரு சிவப்பு ரோஜாவை எடுத்து அவள் மீது தூக்கிப் போட்டான்.

பூவை கையில் பிடித்துக்கொண்டவள், “கிறுக்கு கூடித்தான் போச்சு உங்களுக்கு” என்றாள்.

“ஒம் முந்தானைய இழுக்கட்டுமா…” என அவன் பாடலை தொடர, “சும்மா இருங்களேன்” என சிணுங்கினாள்.

“அதேதான், ஆனா பேசக்கூடாது. சும்மா இரு… அப்படின்னு பாடணும்” என்றவன், “ஒரு முத்தாரத்த பதிக்கட்டுமா…” என பாடினான்.

அவளின் முகமோ அவளது கையிலிருந்த ரோஜா போல மலர்ந்து அந்தப் பூவின் சிவப்பையும் தத்தெடுத்திருந்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement