Advertisement

அத்தியாயம் -20(2)

செழியனின் அப்பாவுக்கு வாயுத் தொல்லை ஏற்பட்டால், செல்வி ஏதோ கஷாயம் போடுவாள். அதில் என்னென்ன போடுவாள் என சரியாக தெரியாத காரணத்தால் அஞ்சறை பெட்டியில் இருந்த அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சம் போட்டு தண்ணீரை காய்ச்சி இருந்தான் செழியன்.

முகத்தை அஷ்ட கோணலாக்கி நாக்கில் படர்ந்திருந்த வித்தியாசமான சுவையை சகிக்க முற்பட்ட கந்தசாமிக்கு ஏப்பம் வந்தது.

ஏதோ பெரிதாக சாதித்து விட்டது போல புருவங்களை உயர்த்திய செழியன், “சொன்னேன்ல… எப்படி குணமாச்சு பார்த்தீயளா? என்னத்த சாப்பிட்டாருன்னு விசாரிங்க” என்றான்.

“நேத்து வச்ச கருவாட்டு குழம்புதான் சாப்பிட்டாரு” என்றார் கனகா.

“பழங்கொழம்பு ஊத்தி என் பெரியப்பாவை பழி வாங்கியிருக்க நீ” என குற்றம் சுமத்தினான் மதன்.

“நெஞ்செரிச்சதான் போல… ஆனா மாப்ள நெசத்துல மூச்சு அடைச்சிருக்கலாம் எனக்கு” என மோகனை பார்த்து வருத்தமாக சொன்னார் கந்தசாமி.

மகன்கள் இருவரும் அவரை அதட்டினார்கள். அழுத கனகா என்னவென விசாரிக்க அவரிடமும் விஷயம் சொல்லப் பட்டது.

“நான் நெனச்சேன்டா இப்படி ஏதாவது உன்னைய ஏவி விடுவா அந்த சிறுக்கின்னு நெனச்சேன்டா. எட்டி பார்த்தாளா பாரு… அவளை…” என ஆரம்பித்தார் கனகா.

கந்தசாமி தன் தோளில் கிடந்த துண்டை கனகாவின் மீது விசிறி அடித்து அவரை பேச விடாமல் செய்தார்.

“என்னப்பா செய்றீய? செவனேனு இருங்க” சேரன் அப்பாவை கடிந்து கொள்ள, அம்மாவின் கையை ஆதரவாக பிடித்துக்கொண்டன் சரவணன்.

மாப்பிள்ளை மற்றும் மகனின் நண்பர்களின் முன்னிலையில் கனகாவுக்கு அவமானமாகி போக, சின்ன மகனை தள்ளி நிறுத்தி விட்டு மீண்டும் உள்ளே சென்று விட்டார்.

“பாத்தியளாப்பா, எனக்குன்னு தனி வருமானம் இல்லாம போனா சிக்கலாகி போவும் ப்பா. பெருசு பண்ணாம என் போக்குல விடுங்க” என்றான் சேரன்.

மோகனும் மாமனாருக்கு எடுத்து சொல்லிக் கொண்டிருக்க அக்கடா என திண்ணை தூணில் சாய்ந்து அமர்ந்த செழியன், “தங்கச்சி… ஏஏ… தங்கச்சி!” என மதுராவை கூவி அழைத்தான்.

வெளியே பேச்சு குரல்கள் கேட்டாலும் ஆண்கள் அவர்களுக்குள்ளாக ஏதோ பேசிக் கொள்கிறார்கள் என நினைத்துதான் மதுரா வெளியில் வரவில்லை. இப்போது செழியன் அழைக்கவும் வேகமாக வந்தாள்.

“தொண்டை காஞ்சு போச்சு ஆயி. ஒரு லோட்டா தண்ணி கொண்டா” என்றான்.

அவள் திண்ணையிலிருந்த தண்ணீர் பானையை பார்க்க, “அது எங்களுக்கு தெரியாதா? காலை சாப்பாடு கூட சாப்பிடல நான். ஒரு வார்த்தை இருங்கண்ணா டீ போட்டு தாரேன்னு சொல்ல மாட்ட. என் கசினாரி மாமாவுக்கு நல்ல கசினாரி மருமவதான் வாச்சிருக்க, நீ பொழச்சுக்குவ ஆயி” என்றான்.

மதுரா என்ன சொல்ல என விழிக்க, “எலேய், ஏதும் வேணும்னா நேரா கேளு. உன் துடுக்கு தனத்த அவகிட்ட காட்டாத” என அதட்டிய சேரன் மீண்டும் அப்பாவை சமாதானம் செய்ய ஆரம்பித்தான்.

“நெசத்த சொல்லு, கொரட்டூர் கோடாங்கி சாமியாருகிட்ட மை வாங்கி பூசிப்புட்டதானே என் மாப்ளக்கு? அங்குட்டு பேசிட்டு இருக்கும் போதும் ஒப்புறட்டி கவனத்தை உம்மேல வச்சிருக்கான் பய” என மதுராவிடம் கேட்டான் செழியன்.

லேசாக சிரித்த மதுரா, “ஆமாம், ‘மை’தான் போட்டுட்டேன், செல்விதான் சொல்லி தந்துச்சு” என சொல்லிக் கொண்டே உள்ளே சென்றாள்.

மதன் ஓரமாக அமைதியாக அமர்ந்திருந்தான்.

சில நிமிடங்களில் அனைவருக்கும் தேநீர் வழங்கியவள் தனியாக ஒரு கிண்ணத்தை செழியனிடம் கொடுத்து, “சாப்பிடுங்க ண்ணா” என்றாள்.

ஒரு வாய் சாப்பிட்டவன், “நல்லாருக்கே தங்கச்சி, என்ன இது?” என விசாரித்தான்.

“போஹா” என்றாள்.

“ஆஹா! இதான் என் மாப்ளக்கும் சாப்பாடா? அவனை ஒரு சுத்து இளைக்க வைக்காம ஓய மாட்ட போல நீ” என கிண்டல் செய்தான்.

மதனும் அவனருகில் வந்து ஒரு கை அள்ளி வாயில் போட்டுக் கொள்ள, “தங்கச்சியே சட்டிய வறண்டி மிச்ச மீதியை கொண்டாந்திருக்கு, அதிலேயும் பங்காடா உனக்கு?” என திட்டினான் செழியன்.

அண்ணனும் அத்தானும் மாற்றி மாற்றி அப்பாவிடம் சமாதானம் பேசிக் கொண்டிருக்க அலுத்து கொண்ட சரவணனும் அவர்களிடம் வந்து அந்த உணவின் பெயரை கேட்டு விட்டு, “அண்ணி அறிவ பாத்தியளா? அண்ணனுக்கு உப்புமா புடிக்காதுன்னு அவல் உப்புமாவ போஹாங்கிறாவோ. அண்ணனும் ஏதோ புது சாப்பாடுன்னு சாப்பிடுது” என்றான்.

“நல்லாத்தானடா இருக்கு, குறை பேசாத. உன் அண்ணன் வாய்க்கு வக்கனையா ஆக்கி போடத்தான் நாங்க பொண்ணு வளத்து கட்டி கொடுத்தோமா?” என மதுராவுக்கு ஆதரவாக பேசினான் மதன்.

இப்படி இவர்கள் கந்தசாமியின் மன வருத்தத்தை கண்டு கொள்ளாமல் விளையாட்டு பேச்சு பேசலாயினர்.

ஒரு கட்டத்தில் செழியன், “கல்யாணம் முடிச்ச கையோட இவனுவளுக்கு விருந்து வச்சேன் டா. சேரன் ரசம் போட சொல்லவும் பரிமாறிட்டு இருந்த என் பொண்டாட்டிக்கு ஒத்தாசை பன்றேன்னு நானே ஊத்தி, ‘பாத்தியா மாப்ள இவ வச்ச ரசத்துல கூட கறிக்கொழம்பு வாசம் வருது’ன்னேன். ஆமாம்டா ரசத்துல ஈரல் கூட மிதக்குதுன்னு மாப்ளயும் நக்கலா சிரிச்சுகிட்டே சொன்னான். பாவி சிறுக்கி குழம்பையே ரசம் மாதிரி வச்சிருக்கான்னு பொறவுதான் தெரிஞ்சுது. அன்னிக்கு அவகிட்ட வாங்கி கட்டிகிட்டதுல பொறவு அவ மொட்ட தண்ணிய வச்சு ஊதினாலும் பாயாசம் கம கமன்னு மணக்குது செல்வின்னு சொல்லிபுடுவேன்” என சொல்லவும் அனைவரும் கொல் என சிரித்து விட்டனர்.

“ஓடிப் போங்கடா இங்குட்டிருந்து…” பற்களை கடித்துக் கொண்டு சேரன் அதட்டவும் மதுரா உள்ளே சென்று விட்டாள். மோகனும் முறைத்துக் கொண்டிருக்க மற்ற மூவரும் அமைதியாகி விட்டனர்.

“இன்னும் என்ன மாமா ரோசனை? சேரன் உங்கள விட்டு தனியா ஒன்னும் போயிடல, அத்தைகிட்ட அவன் சம்சாரம் பொழைக்கணும்னா அவனுக்குன்னு வரும்படி வந்தாதான் சரி. இங்குட்டும் பார்த்துப்பான், அவன் வேலையவும் பார்த்துப்பான். நீங்க வேற வேலை இருந்தா கிளம்பி போங்க” என பேச்சை முடித்து வைத்தான் மோகன்.

என்ன இருந்தாலும் தன் மகன் தன்னை விட்டு விலகித்தான் போய் விட்டான் என நொந்து கொண்ட கந்தசாமி வெளியே கிளம்பாமல் வீட்டுக்குள் சென்று விட்டார்.

 சேரன் வருத்தமாக தந்தை செல்லும் திசையை பார்க்க, “பாறாங்கல்ல முழுங்க வச்சிருக்க, செமிக்க வேணாமாடா அவருக்கு? வுடு. கார் வாங்கணும்ன? எப்ப போறது?” என்றான் செழியன்.

“சரி நீங்க பாருங்கடா, நான் வர்றேன்” என சொல்லி புறப்பட்டு விட்டான் மோகன்.

 கார் வாங்க போவது பற்றி மற்றவர்கள் பேசிக் கொள்ள, மதன் மட்டும் பேசாமல் இருந்தான்.

“என்னடா பிரச்சனை?” எனக் கேட்டான் சேரன்.

மதனின் காதலி அர்ச்சனா படிக்கும் கல்லூரியில் ஒருவன் அவளிடம் காதல் சொல்லி சீண்டிக் கொண்டே இருக்கிறானாம். அவன் சுகந்தியின் பெரியப்பா மகனாம். விவரம் சொன்னான் செழியன்.

“இதெல்லாம் பிரச்சனையா?” எனக் கேட்ட சேரன் தன் தம்பியை பார்த்தான்.

“சுகந்தி அப்பாகிட்ட சொல்லி கண்டிக்க சொல்றேன் ண்ணா” என்றான் சரவணன்.

“கையோட செய், சாயந்தரம் அந்த பய அர்ச்சனாகிட்ட வந்து சாரி கேட்ருக்கணும்” என சேரன் சொல்ல, “எல்லாம் சரி ண்ணா, அந்த புள்ளைக்கு பிரச்சனைனா அது வூட்ல சொல்லாம மதன் அண்ணா கிட்ட ஏன் சொல்லுது? அவ்வோ வூட்லதான் அண்ணன் கூட பேச மாட்டாவோதானே?” என விசாரணை செய்தான் சரவணன்.

“என்னடா ரொம்ப குடையுற? அந்த புள்ள இவன் மாமன் மவ, இவனுக்கு அக்கறை இருக்காதா? போடா சொன்னதை செய்” என்றான் சேரன்.

நம்பாத பார்வை பார்த்த சரவணன், “ஒருத்தர் கூட வூட்ல பாக்குற பொண்ண கட்டிக்க மாட்டீங்கன்ன?” எனக் கேட்டான்.

“உனக்கும் லவ் மேரேஜ் பண்ணிக்க ஆசைன்னா சொல்லு. தகராறு பண்ணி சோலிய முடிச்சு விட்டிடுறோம்” என்ற செழியனின் பிடரியில் அடித்தான் சேரன்.

“அட பொறவு அந்த பொண்ணையே இந்த பய லவ்வட்டும். நாம தூக்கிட்டு வந்து சேத்து வைப்போம். லவ் மேரேஜ் இல்லையேன்னு இவனும் அழுது வடியுறான்ன?” என செழியன் சொல்ல,

கையெடுத்து கும்பிடு போட்ட சரவணன், “இன்னொரு கலவரத்தை இந்த பூமி தாங்காது. என்னைய ஆள வுட்ருங்க. நீங்க பார்த்து நடங்க” என சொல்லி அகன்றான்.

மதனின் முதுகில் அடித்த சேரன், “சாயந்தரம் சால்வ் ஆகிடும், இல்லன்னா நேர்ல போய் தட்டிடுவோம். மொகர கட்டைய ஒழுங்கா வை, விளங்கித் தொலையல” என்றான்.

“அவ ஃபீல் பண்ணி அழுதிட்டாடா” கவலையாக சொன்னான் மதன்.

“உன் மாமன் மவளுங்க ரெண்டுக்கும் நல்லா தெரிஞ்சது அது மட்டும்தானடா? கெளம்பு” என்ற செழியன் தன் சாப்பிட்ட கையை வேஷ்டியில் துடைத்துக் கொண்டு பைக்கை நோக்கி சென்றான்.

“நீ சுத்தமா கையை கழுவு, அதுக்குள்ள அவகிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்திடுறேன்” என்ற சேரன் உள்ளே செல்ல திரும்பினான்.

“சுருக்கமா சொல்லிட்டு வாடா, ராத்திரிக்கு நல்ல வெவரமா பேசலாம்” என சத்தமிட்டான் செழியன்.

சற்று முன் சேரனின் அப்பா சுருட்டி தூக்கி போட்ட துண்டு திண்ணையில் கிடக்க அதை கையில் எடுத்து நண்பன் மீது விட்டெறிந்து விட்டு சிறு சிரிப்போடு ஓடிச் சென்றான் சேரன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement