Advertisement

ஆள வந்தாள் -20

அத்தியாயம் -20 (1)

மதுராவின் அழுகையை அமத்த அவளை வீட்டுக்குள் அழைத்து சென்று விட்டான் சேரன்.

கந்தசாமி, சரவணன் இருவரையும் பொதுவாக பார்த்த சுகந்தியின் தந்தை, “ஒத்த பொண்ணுக்கு சிறப்பா செய்யணும்னு நினைச்சு இங்குட்டு பிரிவினைய கொண்டு வர இருந்தேன். எம் பொண்ணுக்குன்னு உள்ளத வேற விதத்துல சேத்து வச்சிடுறேன். மாப்ள சொன்னது போல காரெல்லாம் வாங்கல நான்” என்றார்.

“நீங்க இவ்ளோ புரிஞ்சு நடப்பீயன்னு நினைக்கவே இல்ல. நெறைஞ்ச சந்தோஷம் சம்பந்தி!” என்றார் கந்தசாமி.

“இருபத்தி நாலு வருஷத்துக்கு முன்னாடி என் நிலையும் சேரன் மாப்ள நிலைதான். நானும் காதல் கல்யாணம் பண்ணிகிட்டவன்தான். தப்பான அர்த்தத்துல எடுத்துக்க மாட்டியன்னு நம்பி சொல்றேன். உங்களுக்கே தெரியும் மொதல்ல சேரன் மாப்ளதான் எனக்கு உறவாகணும்னு ஆசை பட்டது. இல்லன்னு ஆவவும் சேரன் மாப்ளயோட தம்பிங்கிற ஒன்னு போதுமா இருந்தது சரவணன் மாப்ளய நல்ல விதமா நான் பார்க்க. எத்தன அழகா சொல்லிட்டாரு பொண்டாட்டி புருஷனை ஆள வந்தவன்னு. என் பொண்ணும் அப்படி சரவணன் மாப்ளய ஆள வந்தவளா இருந்தா அத விட சந்தோஷம் வேறென்ன சொல்லுங்க?” எனக் கேட்டார் சுகந்தியின் தந்தை.

“அதுல உங்களுக்கு சந்தேகமே வேணாம் மாமா” என்றான் சரவணன்.

புன்னகைத்த சுகந்தியின் அப்பா, “காரு இடம்தான் தனியா தர மாட்டேன். மத்தது செய்ய வேண்டிய சீர் எல்லாம் செய்யாம இருக்க முடியாது. இல்லாட்டி ஊரு உறமுறை எல்லாம் தப்பா பேசுவாவோ. அதுக்கு மறுப்பு சொல்லப்படாது” என்றார்.

கந்தசாமியும் அதையெல்லாம் தாராளமாக செய்யுங்கள் என சொல்ல, விடைபெற்று கிளம்பி விட்டார்.

“அவ்வோ செய்ய நினைச்சதையும் தடுத்துப்புட்டீயளே! நாளைக்கு அவசரத்துக்கு பொண்டாட்டியோட நகை நட்டுத்தான் கை கொடுக்கும். இவளோட அண்ணன்காரனும்தான் அம்பது பவுன் எடுத்திட்டு வாந்தான்தான? சேரன் வேணாம்னாலும் நீங்கல்ல எடுத்து சொல்லணும்? ஒப்புறானா ஒப்பந்தன்னானா… இந்தூட்டு அப்பன் புள்ளைக்கு எல்லாம் புத்தி பெசகி போச்சுதாங்குறேன்?” என அரற்றினார் கனகா.

“பொம்பளய அடிக்க கூடாதுன்னு சொல்லி வளத்துப்புட்டாவோடி என்னைய, இல்லாட்டி ஒப்புறட்டி இந்நேரத்துக்கு உன் வாய ஒடச்சி வுட்ருப்பேன்” என இரைந்தார் கந்தசாமி.

“நல்லா வளத்து வுட்ருக்காவோ மாமா உங்கள. பெரியாத்தாவுக்கு அது மருமவளோட வாய் வத்லகுண்டு வரை நீட்டம்னு தெரிஞ்சுமா உங்க வளப்ப மாத்தாமலே பரலோகம் போனிச்சு?” எனக் கேட்டான் செழியன்.

“செத்த சும்மா இருங்க ண்ணன்” என சரவணன் அவனை அடக்க, “போடா போயி நாலு வரட்டி இருந்தா எடுத்திட்டு வந்து பெரியம்மா வாய்ல வச்சு அத அடைச்சு வுடுடா” என்றான் மதன்.

சரவணன் முறைக்க, “ஐயோ தம்பி… வரிக்கியதான் வரட்டின்னு சொல்லிப்புட்டேன். பேசி பேசி பெரியம்மாளுக்கும் பசிக்கும்ன?” என சமாளித்தான் மதன்.

“எந்த விஷயமா வந்திட்டு வாயாடிகிட்டு நிக்கிறீய? குத்தகை காரனுக்கு பணம் கொடுக்க வேணாமா? சேரனை அழைச்சிட்டு கெளம்புங்கடா டைம் ஆவுது” செழியனிடம் சின்ன குரலில் சொன்னான் மோகன்.

 “இருங்க அத்தான், அவனும் மதுவ ஆப்பாட்டிட்டு வரணும்ன?” என்றான் மதன்.

“ஆமாம், உங்க மதுவ தோப்புல நின்னாவது அழுவ சொல்லுடா, தென்னம்புள்ளைக்கு தண்ணீ பாச்சி வுட்ட மாதிரி ஆவும். இஸ்க்குன்னா ங்ங்கே ம்மேன்னு கண்ண கசக்கி என் மாப்ளய கடுப்பாக்கிக்கிட்டு…” என்றான் செழியன்.

“வாய கொறங்கடா!” என அதட்டிய கந்தசாமிக்கு மகனை எங்கேயே அழைத்து செல்ல இருக்கிறார்கள் என்பது புரிய, “இன்னிக்கு இங்குட்டு தீக்க வேண்டிய பிரச்சனையே தீந்த பாடில்ல. அவன் எங்குட்டும் வர மாட்டான். உங்க சோலி கழுதைய போயி பாருங்கடா” என்றார்.

“அத பாக்கத்தான் வந்திருக்கோம் மாமா. எலேய் சேரா!” செழியன் சத்தமிட்டு அழைத்தும் சேரன் வெளி வராமல் போனதால், “இவன் ஒருத்தன் ஆள வந்தா சோளவந்தான்னு கொஞ்சிக்கிட்டு கெடப்பான். அப்புறம் நேரமாகிட்டுன்னு ஓணான் வேட்டியில பூந்த மாதிரி ஹ்ஹான்ம்ஹான்னு நம்மகிட்ட கெடந்து ஆடுவான்” சலித்துக் கொண்டே வீட்டுக்குள் செல்ல நடந்தான்.

குத்தகைதாரர் அவரது உறவினர் ஒருவரோடு டி வி எஸ் பைக்கில் இறங்கியவர், “என்னப்பா இப்படி பண்ணுது சேரன் தம்பி. திருத்துறைப்பூண்டி ரெஜிஸ்டர் ஆஃபீஸ்ல இன்னிக்கு எம்மூட்டு மவ பேர்ல இடம் பத்திரம் பண்றேன். சொச்ச தொகைய கொடுத்தாதான் ஆச்சுன்னு நிக்கிறான் இடத்தோட ஓனர். இதோ வந்து தர்றேன்னு சேரன் போன் பண்ணி ரெண்டு மணி நேரமாவது. இப்படி தாமசம் பண்ணினா எப்படியப்பா?” என சல சலத்துக் கொண்டே கந்தசாமியின் முன் வந்து நின்றார்.

ஒன்றும் புரியாமல் குழம்பிப் போன கந்தசாமி, “என்னய்யா சேரன்கிட்ட ஏதும் கடன் கிடன் கேட்ருக்கீயளா?” என விசாரித்தார்.

குத்தகைதாரர் குழம்பிப் போய் பார்க்க, “மாமா… அதெல்லாம் இல்ல” என்ற மோகன், இதற்கு மேலும் சொல்லாமல் இருக்க கூடாது என கருதி சொல்லி விட்டான்.

கந்தசாமி அதிர்ந்து போய் நிற்க, “சேரன் தம்பி எங்குட்டு? அர்ஜண்ட்டா பணம் வேணும் தம்பி” என அடம் பிடித்தார் குத்தகைதாரர்.

“நீ மொத இவரை ஆப்பாட்டுடா” மதனிடம் கடுப்பாக சொன்ன செழியன் வேகமாக வீட்டுக்குள் சென்றான்.

அறையில் கட்டிலில் அமர்ந்திருந்த மதுரா, நின்றிருந்த சேரனை அணைத்து பிடித்துக்கொண்டிருந்தாள்.

“செழியன் கூப்பிட்டுகிட்டே இருக்கான் பாரு, செத்த படுத்து எழும்பு நீ, சீக்கிரம் வந்திடுறேன்” என்ற சேரன் வெளியே வர, “காதவிஞ்ச பயலே, அங்குட்டு உன் பொழப்பு சிரிப்பா சிரிக்குது, வாடா” என திட்டி அவனை இழுத்துக் கொண்டு வீட்டுக்கு வெளியே வந்தான் செழியன்.

அதற்குள் குத்தகை தாரருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை மோகன் முன்னிலையில் மதன் கொடுத்திருக்க அவர் கிளம்பினார். அவரை கண்டதும் திகைத்த சேரன் செழியனை பார்க்க, “எவ்ளோ நேரமா கூப்பிட்டேன். வந்தியாடா, மாமாவுக்கு தெரிஞ்சு போயிட்டு” என்றான்.

சரவணன் அதிராமல் இருப்பதை கண்ட கந்தசாமி, “எல்லாருக்கும் தெரிஞ்சிருக்குன்ன? ஒரேயடியா என்னை கொன்னுபுட்டீயளே… அந்த கடங்காரி பேச்ச கேட்டு ஒரு நா நான் நடந்துகிட்ட முறைக்கு எனக்கு கிடைச்ச வினையா இது?” என அரற்றிக் கொண்டே நெஞ்சில் கை வைத்து திண்ணை வாசலில் அமர்ந்து விட்டார்.

பதறிப் போன சேரனும் சரவணனும் அவரின் அருகில் சென்று பார்க்க, “பருத்தி வெடிச்சா பஞ்சு பறக்கத்தான் செய்யும், செய்றதெல்லாம் செஞ்சிட்டு, வார்த்தை பாக்கியில்லாம பேசிப்புட்டு இப்ப நெஞ்ச புடிச்சா ஆச்சா மாமா?” எனக் கேட்டான் செழியன்.

“நல்லா கேளுடா, லட்ச லட்சமா பணம் சம்பாதிச்சு பூதம் மாதிரி காக்கிறாருங்கிறேன். என் பங்காளி தேவைன்னு ஆயிரம் ரெண்டாயிரம் கேட்டா கசினாரித்தனம் செஞ்சா… அவன் பாத்தான் டாட்டா பாய் பாய் காட்டிபுட்டான்” என்றான் மதன்.

“எலேய்!” நண்பர்களை சேரன் அதட்ட, “செத்த வாய மூடிட்டு அந்தாண்ட போங்கடா” என்ற மோகன், மாமனாரிடம் “ஆஸ்பத்திரி போலாமா மாமா?” என பரிவாக கேட்டான்.

“ஆஸ்பத்திரி எதுக்கு ண்ணா? எல்லாம் கேஸ் ட்ரபிள். ஏவ் ஏவ்னு ரெண்டு ஏப்பம் வெளில வந்தா சப்சாடா எல்லாம் கிளியர் ஆகிப் போவும்” என்ற செழியன் வீட்டுக்குள் விரைந்தான். மதனும் அவனின் பின்னால் ஓடி சென்றான்.

கனகாவும் மதுராவும் அவரவர் அறைகளில் இருக்க, “ஒரு மனுஷன் நெஞ்ச புடிச்சுகிட்டு கெடக்காரு. வீட்டு பொம்பளைங்க ரெண்டும் ரூமுக்குள்ள என்னடா செய்றாவோ?” கடுப்பாக கேட்டான் செழியன்.

“எனக்கென்னடா தெரியும்? அவருக்கு ஏதாவது வைத்தியத்த செய்யுடா” என மதன் ஏவ, “அந்த பெரிய வட்ட டப்பிக்குள்ளார சின்ன சின்ன வட்டமா டப்பியோ இருக்கும்ன, கழுதை அது பேரென்ன?”

“அஞ்சல டப்பாவாடா?” மதன் கேட்க, “ஹான்… அதான் எட்ரா அதை” என்றான் செழியன்.

சமையலறையில் சத்தம் கேட்டு என்னவென வந்து பார்த்தார் கனகா. கையில் குவளையோடு இருந்த செழியன், “மாமனுக்கு நெஞ்சு வலி வந்து மல்லாந்து கெடக்காரு. நீ உள்ளுக்குள்ள யாருக்கத்த பேன் பாத்துகிட்டு இருந்த?” எனக் கேட்டுக் கொண்டே திண்ணைக்கு சென்றான்.

பயந்து போன கனகாவும் வெளியே ஓடி வந்தார். செழியன் தான் தயாரித்த நீரை கந்தசாமிக்கு கொடுக்க ஒரு வாய் பருகியவர், “அட கொல கார பாவி! கொல்ல பாக்குறியாடா என்னை?” என சத்தமிட்டார். பின்னே கொதிக்க கொதிக்க இருந்தது அந்த நீர்.

முறைத்த சேரன் திண்ணையில் இருக்கும் தண்ணீர் பானை மீது வைக்க பட்டிருந்த டம்ளர் கொண்டு சுடு தண்ணீரை ஆற்றி அப்பாவிடம் கொடுத்தான்.

“என்னத்தடா காச்சு வச்சிருக்க, ஒரே நாத்தமா நாறுது” என சொல்லி குடிக்க மறுத்தார் கந்தசாமி.

வெடுக் என தன் கையில் பிடுங்கிய செழியன் “மூக்க பொத்திக்கிட்டு கப்புன்னு குடிங்க” என சொல்லி மல்லுகட்டி அவரை குடிக்க வைத்தான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement