Advertisement

 இரண்டு அடிகள் முன்னெடுத்து வைத்த சேரன் வனராஜனை கண்டு கொள்ளாமல் பின்னால் நின்றிருந்த இரு பெண்மணிகளையும் பார்த்து, “வாங்க” என்றான்.

அந்த அழைப்பில் அஞ்சலைக்கு உயிர் வந்தது போல இருந்தது. நெஞ்சில் கை வைத்து ஆசுவாச மூச்சு விட்டவர் “நல்லா இருக்கீயளா தம்பி?” என மலர்ந்த முகத்தோடு நலம் விசாரித்தார்.

ஆம் என தலையசைத்துக் கொண்ட சேரன் டெம்போவை அளவிடுவது போல பார்த்தான்.

 அஞ்சலை சங்கடமாக பார்க்க, “பெரியவங்க பேசி வச்சு நல்ல முறையில கல்யாணம் ஆகியிருந்தா உங்க பொண்ணுக்கு நீங்க செய்றதை சத்தியமா நான் மறுத்திருக்க மாட்டேன். முந்தாநேத்து நடந்தது வரை உங்களுக்கு நல்லா தெரிஞ்சிருக்கும். என்னை புரிஞ்சுப்பீயன்னு நம்புறேன்” என்றான்.

“ம்மா அங்குட்டு என்ன பேச்சு? மதுராவுக்கு கொடுக்கிறதை கொடுத்திட்டு நடைய கட்டுறோம்னு சொல்லு. அவளுக்கு நாம இருக்கோம்னு இங்குட்டு எல்லாருக்கும் புரியனும்” என்றான் வனராஜன்.

அதற்குள் வீட்டுக்குள் இருந்த மதுரா, கந்தசாமி, சரவணன், கனகா, சுகந்தியின் தந்தை என அனைவரும் வெளியில் வந்து விட்டனர்.

கட்டில் இறக்க வந்த ஆட்கள் திரும்பி செல்லும் போதுதான் வனராஜன் வந்திறங்கினான். அந்த ஆட்கள் மூலமாக மோகன், செழியன், மதன் மூவருக்கும் விஷயம் தெரிய அவர்களும் வந்து கொண்டிருந்தனர்.

வனராஜன் வாக்குவாதம் செய்யாமல் கந்தசாமியின் முன் நின்று, “இன்னொரு பையனுக்கு கல்யாணம் பண்ண போறீய. அந்த பொண்ணுக்கு எங்க பொண்ணு எந்த விதத்திலேயும் குறைஞ்சிட கூடாது. காதல் கல்யாணம்னா மனக் கசப்பு இருக்கத்தான் செய்யும், இன்னும் எனக்கு கோவம் இருக்கு.. அதுக்குன்னு என் கூட பொறந்தவளை யாரோன்னு விட முடியாது. என் தங்கச்சிக்குன்னு செஞ்சு வச்சிருக்க அம்பது பவுன் நகையும் சீரும் கொண்டு வந்திருக்கேன். முறை செய்றதை ஏத்துக்கணும் நீங்க” என்றான்.

இப்படி நயந்து பேசுபவனிடம் கராறாக என்ன பேசுவது என யோசித்த கந்தசாமிக்கு இந்த வீட்டில் சுகந்திக்கு இணையான நிலைக்கு மதுராவையும் கொண்டு வர இதை ஏற்றுக்கொண்டால்தான் என்ன என தோன்றியது. ஆனாலும் அவராக எதுவும் சொல்லி விடாமல் பெரிய மகனின் முகத்தை பார்த்தார்.

“வேணாம்னா வேணாம். நீ யாரு என்னன்னு எனக்கு தெரியும், பிரச்சனை பண்ணாம கிளம்பு” என வனராஜனிடம் சீற்றமாகவே சொன்னான் சேரன்.

“வீடு தேடி வந்தவங்களுக்கு உங்க மகன் நல்லா தர்ராறே மரியாதி!” கந்தசாமியை பார்த்து கேலியாக சொன்னான் வனராஜன்.

சேரன் கோவமாக எதுவும் சொல்வதற்கு முன் அவனை கை காட்டி அமைதியாக்கிய கந்தசாமி, சற்று தள்ளி நின்றிருந்த மதுராவை பார்த்து, “நீ வா ஆயி, நீ சொல்றதுதான். உன் முடிவுதான், வா இங்குட்டு” என அவளை அழைத்தார்.

மாமனாரின் சொல்லுக்கு பணிந்து வந்த மதுரா கணவனின் அருகில் போய் நின்று கொண்டாள்.

தங்கையின் கண்களை சந்தித்த வனராஜன், “புடிக்காத கல்யாணம் செஞ்சா யாரும் தலையில தூக்கி வச்சு கொண்டாட மாட்டாங்க. உன் பொறந்த வூட்டு சீர் கொண்டு வந்திருக்கேன் உன் அண்ணன். எதையும் மனசுல வச்சு வேணாம்னு சொல்லிடாம ஏத்துக்க. இந்தூட்டுல உனக்கான மரியாதி, எனக்கான மரியாதி எல்லாமே இந்த சீரை நீ வாங்கிக்க போறதுலதான் இருக்கு. இது வேணாம்னா காலத்துக்கும் என்னைய வேணாம்னு சொன்ன மாதிரிதான் மதுரா, ரோசிச்சு சொல்லு” என பேசி சீரை ஏற்றுக்கொள்ள மறைமுகமாக அழுத்தம் கொடுத்தான்.

சேரன் மனைவியிடம் எதுவும் பேசவில்லை. அவள் என்ன செய்ய போகிறாள் என அவனுக்குமே தெரிந்து கொள்ள வேண்டும். மதுரா கணவனின் பக்கம் பார்வையை வைக்க அவளையே பார்த்திருந்த சேரன் எந்த செய்தியையும் அவளுக்கு கடத்தவில்லை. ஆனால் அழுத்தமாக பார்த்தான்.

வனராஜனை தைரியமாக பார்த்தவள், “சித்திகிட்ட ரெண்டு குடும்பத்தையும் சமாதானம் ஆக்கத்தான் கேட்டுகிட்டேன். முந்தாநேத்து இவர்கிட்ட என்ன பேசின நீன்னு தெரியலை. ஆனா தப்பா ஏதோ பேசியிருக்க. இப்ப இந்த சீர் வாங்கிக்கிட்டா என் புருஷனுக்கு தலையிறக்கம். அத ஒரு நாளும் என்னால செய்ய முடியாது ண்ணா” என்றாள்.

சேரன் கொஞ்சம் நெஞ்சை நிமிர்த்தி, தலையையும் உயர்த்தி, கால்களை தரையில் அழுந்த பதித்து நின்றான்.

சேரனின் அத்தானும் அவனது நண்பர்களும் வந்து சேர்ந்தனர். அவர்களிடம் மெல்லிய குரலில் விவரத்தை சுருக்கமாக சொல்லிக் கொண்டிருந்தான் சரவணன்.

“ஒன்னும் கொண்டு வராதவன்னு இந்த ராஜாவை பெத்த மகராஜி உன்னை சொல்றாங்கன்னு கேள்வி பட்டேன். உன் புருஷனுக்கு பயந்துகிட்டு வேணாம்னு சொல்லாத. வெறுங்கையோட வந்தவங்கிற பேரை காலத்துக்கும் சுமக்க ரெடியா இருக்கியா நீ?” என தங்கையிடம் சீறினான் வனராஜன்.

கந்தசாமி தன் மனைவியை முறைக்க, கனகா முகத்தை திருப்பிக் கொண்டார். சுகந்தியின் தந்தை இருந்த காரணத்தால் அவரால் தன் ஆவேச முகத்தை வனராஜனிடம் காட்ட முடியாமல் போய் விட்டது.

சுகந்தியின் தந்தைக்கு சேரனின் திருமண விவகாரம் ஏற்கனவே தெரிந்த கதைதானே, ஆகவே வியப்பு கொள்ளாமல் வேடிக்கை போல பார்த்திருந்தார்.

தன் மாமியாரின் நடத்தை எல்லாம் மனதிற்குள் ஓட, அண்ணனின் கேள்விக்கு சட்டென பதில் சொல்ல இயலாமல் இரு உதடுகளையும் மடித்து அழுகையை அடக்கி வேக மூச்சுகளோடு கலக்கமாக கணவனை பார்த்தாள் மதுரா.

“என்னடி… உன் அண்ணனுக்கு என்ன பதில் சொல்றதுன்னு ரோசனையா? நான் ராஜாதான், அப்போ என் பொண்டாட்டி நீ யாரு? உன்னை யாரும் வெறுங்கையோட வந்தவன்னு சொன்னா… யாரா இருந்தாலும் எவரா இருந்தாலும் நிமிந்து நின்னு தைரியமா அவங்ககிட்ட, ‘நான் வெறும் கையோட வரலை, என் கைக்குள்ள என் புருஷன் சேரனோட கை இருந்தது, எப்பவும் இருக்கும். அதை கெட்டியா புடிச்சுக்கிட்டுத்தான் புகுந்த வீட்டுக்குள்ள வந்தேன்’னு கத்தி சொல்லு”

 “சீர் செனத்தி பண்டம் பாத்திரம் கொண்டு வரலைன்னு யாராவது சொன்னா இது எதுக்கும் ஈடாகாத அளவுக்கு எம் புருஷன் மேல நேசத்தை சுமந்துகிட்டு வந்தேன்னு சொல்லு. சாதாரண ஆள் இல்லடி நீ, இந்த ராஜாவை, இந்த சேரனை ஆள வந்தவடி நீ!” என சேரன் சொன்னது அக்கம் பக்கத்திலிருந்து எட்டி நின்று வேடிக்கை பார்த்தவர்களின் காதுகளில் கூட தெள்ளத் தெளிவாக விழுந்தது.

உணர்ச்சி மிகுதியில் பேச்சு வராமல் கணவனையே மதுரா பார்த்திருக்க, வனராஜனை கூர்மையாக பார்த்த சேரன், “வெவரம் இல்லாதவோ ஆயிரம் சொல்வாவோ. இவளை கட்டினவன் நான் கல்லு மாதிரி இருக்கையில என் அம்மா பேசுது ஊரு பேசுதுன்னு யாரும் எவரும் கவலை பட வேணாம்” என்றான்.

வனராஜன் மொழி மறந்து போய் நின்றிருக்க, மனைவியை நோக்கிய சேரன், “என்னிக்கு உனக்கு இந்த பொன்னு பொருளுங்கிற சீர் வச்சுத்தான் உன் புருஷன் உன்னைய நல்லா நடத்துவான் இல்லைனா மதிக்க மாட்டான்னு தோணுதோ அப்ப வாங்கிக்கிறேன்னு சொல்லுடி உன் அண்ணன்கிட்ட” என்றான்.

மதுராவின் முகம் மலர்ந்து போனாலும் உடன் சேர்ந்து கொண்டு அழுகையும் வந்தது.

இரண்டு கன்னங்களையும் துடைத்துக் கொண்டவள் அண்ணனை பார்த்து, “இத வாங்கிக்கிற நிலைமை எனக்கு எப்பவுமே வராது ண்ணா. எனக்கு வேணாம் எதுவும்” என சொல்லி சேரனின் கையை பிடித்துக் கொண்டு அவனது தோளில் முகம் புதைத்துக் கொண்டு தேம்பினாள்.

அவளது தலையை அழுத்திக் கொடுத்த சேரன், “ஏட்டி சும்மா அழுவாத” என்றான்.

அஞ்சலையின் வயிறும் மனமும் குளிர்ந்து விட்டது. சரஸ்வதியும் தன் நாத்தனாரும் தோழியுமான மதுராவை கண்கள் கலங்க நிறைவாக பார்த்திருந்தாள்.

“எலேய் வனராசா! தயவுசெஞ்சு கெளம்புடா. நாள் ஓட ஓட எம்மூட்டு மகளோட நம்ம உறவும் சரியாவும். சீர் கொடுக்கிறேன்னு அவ வாழ்க்கைய கெடுத்துபுடாதய்யா. தங்கமா மாப்ள இருக்கையில உன் தங்கச்சி பத்தின கவலைய இங்குட்டே வுட்டுட்டு கெளம்புடாங்கிறேன்” என்றார் அஞ்சலை.

ஏதோ மந்திரத்துக்கு கட்டு பட்டது போல அம்மாவின் வார்த்தைக்கு அடங்கி அங்கிருந்து தன் குடும்பத்தினரோடு அமைதியாக புறப்பட்டான் வனராஜன். சீர் ஏற்றி வந்திருந்த டெம்போவும் திரும்பி சென்றது.

மதுராவின் அழுகையின் சத்தம் கூட, “மதுரா!” என அதட்டல் போட்டு அவளை அடக்க பார்த்தான் சேரன். நிறுத்த நினைத்தாலும் அவளால் முடியவில்லை.

“சரி சரி…” என கனிவும் ஆறுதலுமாக சொல்லிக் கொண்டே தன்னை ஆள வந்தவளின் தோளில் தடவிக் கொடுத்து அவளை ஆற்றுப் படுத்த முயன்றான் சேரன்.

Advertisement