Advertisement

சட்டென  தலையாட்டி விட்டவள், அவனது பேச்சு புரிந்து திகைத்து பின் தெளிந்து, “அவ்ளோ சீக்கிரம் இறங்கி வந்தா உங்களுக்கு பயமில்லாம போயிடும். ஒரு மாசம் என் வாய் பட்டினியாவே கெடக்கட்டும். அப்பதான் உங்க வாய்க்கொழுப்பு, கோவம் எல்லாம் அடங்கி வரும்” என முறுக்காக சொன்னாள்.

“பதமா சொன்னா கேக்க மாட்டியே நீ!” என்றவன் வெடுக் என அவளை தன்னிடம் இழுத்துக் கொண்டான்.

“அச்சோ காஞ்ச மாடு கம்பங்கொல்லையில பூந்த மாதிரி ச்சே விடுங்க…” என திமிறினாள்.

“மாடா! ருசி கண்ட பூனைன்னு வச்சுக்க” என்றவன் வேகத்தை குறைத்து பக்குவமாக நடந்து கொள்ள ஆரம்பித்தான்.

“நேத்து கண்டுக்கலதானே?” என சிணுங்கினாள்.

“எப்பவும் புருஷனே கிட்ட வரணும்னு நினைக்க கூடாது. ஆம்பள பொம்பள சமம்னு பேசுறீய, இதுல இல்லையா அந்த சமத்துவம்லாம்?”

“ஆஆன்… நல்லா சொல்வீங்க, நான்தான் என் பொறந்த வீட்ட விட்டுட்டு இங்க வந்து லோல் படுறேன்”

“நீயா எங்கடி வந்த? என்னை முந்திக்கிட்டு நீயே என்னை கடத்திட்டு போய் கல்யாணம் செஞ்சிருந்தா  நான் லோல் பட்ருக்க போறேன். ஏன் செய்யாம போன?”

அவனது பிடரி முடியை பிடித்திழுத்து தன் கழுத்தில் புதைந்திருந்த அவனது முகத்தை விலக்கியவள், “எப்டி எப்டி நீங்க என் வீட்டுல வந்து வாக்கபட்ருப்பீங்க? பொருந்துற மாதிரி உளறுங்க” என்றாள்.

“விடுடி, என் மூச்சு காத்து படாம உன் மேனியெல்லாம் வாடிக் கெடக்கு. என்ன ஏதுன்னு கவனிக்கணும், என்னை தடுக்காம என் போக்குல வுடு” என்றவன் அவளது தோள் வளைவில் முகம் பதித்தான்.

அதிகாலை நேரம் வலித்த உடல் இரவில் நடந்ததை மறக்க முடியாமல் நினைவு படுத்தி, இப்போதும் மதுராவின் முகத்தை சிவக்க செய்து உள்ளத்தை மலர வைத்தது.

சேரனின் இடது நெற்றியில் ஒட்டியிருந்த தன் ஸ்டிக்கர் பொட்டை எடுத்து நெற்றியில் சரியாக ஒட்டிக் கொண்டவள் அவனை அணைத்து முத்தமிட்டு விட்டு எழுந்து சென்றாள்.

காலை உணவு முடிந்த சமயம் அனைவரும் வீட்டில்தான் இருந்தனர். கோர்க்க படாத கட்டில் வந்து இறங்கியது.

சேரனின் அறையை கந்தசாமி காண்பிக்க, “இன்னொரு ரூம் சும்மா கிடக்குதுன்ன ப்பா, அங்குட்டு போட்டு வைங்க” என தீர்மானமாக கூறினான் சேரன்.

முதலில் முறைத்த கந்தசாமி சேரனின் இறுக்கத்தில் கெஞ்சலாக பார்த்தார்.

“வர வர இந்தூட்டுல வெளக்கமாறு கணக்கா ஆகிட்டேன் நான். ஒரு எழவும் தெரிஞ்சு தொலைய மாட்டேங்குது. ஊர் உலகத்துல மருமவ வீட்லேருந்துதான் கட்டில் பீரோன்னு வரும், இங்குட்டு தலைகீழா மாமனார் சீர் செய்றார். ரெண்டு மவன் இருக்கையில இப்படி செஞ்சா சரியா வருமான்னு ரோசனை வேணாம், நான் சொல்லி என்ன ஆவ போவுது? எனக்கு கலக காரின்னு பட்டம்தான் கொடுப்பாவோ…” மூச்சு விடாமல் பேசிய கனகா சமையலறையில் பாத்திரங்களை உருட்ட ஆரம்பித்து விட்டார்.

“நானும் என் பொண்டாட்டியும் நிம்மதியா இருக்கிறது உங்களுக்கு புடிக்கலியாப்பா? உங்ககிட்ட கேட்டேனா நான்?” என அப்பாவிடம் கோவப்பட்டான் சேரன்.

“பொறுமையா பேசுங்க ப்ளீஸ்…” கணவனிடம் மெலிதாக சொன்னாள் மதுரா.

“போடி உள்ள, வேற வேலை இருந்தா போய் பாரு” என அவளை விரட்டாத குறையாக பின் பக்கம் அனுப்பி விட்டான்.

“உன் அம்மா பேசுறத பெருசா எடுக்காதடா. வர போற மருமகளுங்களுக்கு செஞ்ச தாலி செயின் இருக்குன்ன? லாக்கர்லேருந்து எடுத்திடுறேன், சுகந்திக்கும் மதுராவுக்கும் ஒன்னு போல ஆரம் செய்ய ஆர்டர் கொடுத்திருக்கேன். சரவணன் கல்யாண செலவு உனக்கு எதுவும் செய்யல, அந்த பணத்துல இந்த கட்டில் வாங்கினதா இருக்கட்டும். மிச்ச பணத்தையும் உன் கைல கொடுத்திடுறேன், இன்னும் தேவையானது வாங்கிக்க” என மகன் சம்மதித்து விட வேண்டுமே என பொறுமையாக தண்மையாக சொல்லிக் கொண்டிருந்தார் கந்தசாமி.

“வேணாம் ப்பா, இது கூட்டு குடும்பம், சேர்த்து வச்சு செலவு செஞ்சா குடும்பத்தை எப்படி ஓட்டுறது? நான் கூட வரப் போற சரவணன் சம்சாரத்துக்கு இணையா எல்லாத்தையும் என் சம்சாரத்துக்கும் செஞ்சிட்டா இவளுக்கு மரியாதை கிடைச்சிடும்னு நினைச்சுகிட்டேன், அதனாலதான் உங்ககிட்ட பணம் கேட்டேன். அது அப்படி இல்லைனு நான் புரிஞ்சுக்கிட்டேன் ப்பா” என சேரனும் பொறுமையாகவே சொன்னான்.

மகனை எப்படி மசிய வைப்பது என கந்தசாமி யோசனையாக நிற்க, “வாங்க… வாங்க மாமா…” என தன் வருங்கால மாமனாரை வரவேற்றான் சரவணன்.

சுகந்தியின் தந்தை வருகை தர அவரின் முன் கந்தசாமியால் எதுவும் பேச இயலாமல் போனது. ஆகவே சேரன் சொன்ன அறைக்கே கட்டில் சென்றது. அதை பார்த்திருந்தாலும் என்ன ஏதென்று கேட்டுக் கொள்ளவில்லை சுகந்தியின் தந்தை.

சம்பிரதாய வரவேற்பு முடிந்ததும் காபி பருகிக் கொண்டே, கார் வாங்கித் தர நினைத்திருக்கும் தன் எண்ணத்தை பகிரந்தார் சுகந்தியின் தந்தை.

“நாங்க கூட்டு குடும்பமா இருக்கோம் மாமா. எனக்குன்னு புதுசா ஏதாவது செஞ்சு என்னைய என் அண்ணன்கிட்டேருந்து வித்தியாச படுத்திடாதீங்க மாமா” என அப்பாவுக்கும் முன் முந்திக் கொண்டு சொன்னான் சரவணன்.

“சரவணா!” அதட்டலாக அழைத்தான் சேரன்.

“நீ எதுவும் சொல்லாத ண்ணா. இப்ப வரைக்கும் நீ செய்றது எல்லாத்தையும் வேடிக்கைத்தான் பார்க்கிறேன், எதிலேயாவது தலையிட்டுக்கிட்டேனா?” என சரவணன் கேட்க, “நீங்க பேசிக்கிட்டு இருங்க, எனக்கு முக்கிய சோலி கெடக்கு” என சுகந்தியின் அப்பாவிடம் சொல்லிவிட்டு எழுந்து சென்றான் சேரன்.

தன் குடும்பம் பிளவு பட போகிறதோ என நினைத்து கந்தசாமியின் மனம் அடித்துக் கொள்ள ஆரம்பித்திருக்க அந்த தாக்கத்தில் அமைதியாக இருந்தார்.

“இதுல பிரிவினை எல்லாம் வராது மாப்ள, ஒரே பொண்ணு, என்கிட்ட இருக்கிறத நான் செய்ய ஆசை படுறதுல தப்பென்ன மாப்ள? பெரிய காராதான் வாங்க நினைச்சிருக்கேன். நீங்க எல்லாரும்… எல்லாரும்னா பெரிய மாப்ள, பெரிய பொண்ணு எல்லாரையும்தான் சொல்றேன். அட ஒரு நாள் குல சாமி கோயிலுக்கே போறீயன்னு வச்சுக்கோங்க, ஒரு கார் இருந்தா வசதிபடும்ன? மறுக்காதீய மாப்ள” என்றார் சுகந்தியின் அப்பா.

வந்தவரை மரியாதை நிமித்தமாக அழைத்ததோடு சரி, அங்கில்லாமல் உள்ளே சென்று விட்டாள் மதுரா. ஆதலால் இங்கு நடக்கும் பேச்சுவார்த்தை பற்றி அவளுக்கு தெரியவில்லை.

தன் கணவர் வாய் திறக்காத காரணத்தால், “இவனுக்கு என்ன வெவரம் தெரியும் அண்ணா? எதையும் நாங்க வற்புறுத்த மாட்டோம், நீங்க செய்ய நினைக்கிறத கொறையில்லாம செஞ்சிடுங்க. எம்மூட்டு மவளுக்கு கூட பத்து வருஷம் முந்தியே வண்டி, நாப்பது பவுனுன்னு கொடுத்து ஒரு இடம் கூட எழுதி வச்சோம்” என்றார் கனகா.

“சுகந்தி பேர்ல கூட இருபது மா இடம் கெடக்கு தங்கச்சி” என்றார் சுகந்தியின் தந்தை.

எதுவும் வாய் திறக்க மாட்டாரா என தன் அப்பாவை பார்த்த சரவணன் அவரது அமைதியில் கடுப்பாகி, “அப்பா…” என அழைத்தான்.

மோனநிலை கலைந்த கந்தசாமி மகனை என்னவென பார்க்க, “நீங்கதான் ஏதாவது சொல்லணும் ப்பா. சுகந்தி பேர்ல இருபது மா இடம் வேற இருக்காம், கார் வாங்கி தர போறாவ்வோளாம்” என்றான்.

சாதாரணமாக இருந்தால் பெண் வீட்டினர் அவர்களாக செய்யும் எதையும் வேண்டாம் என மறுத்திருக்க மாட்டார் கந்தசாமி. ஆனால் இப்போது மருமகள்களுக்குள் ஏற்றத் தாழ்வு வருமே, சம்பந்திக்கு இந்த சிக்கலை எப்படி புரிய வைப்பது என தடுமாற்றமாக பார்த்தார்.

குத்தகை தாரரிடம் கைப்பேசியில் பேசிய சேரன் பணத்தோடு வருவதாக சொன்னான். பின் நண்பர்களிடம் பணம் தயாராக இருப்பதை உறுதி செய்தவன் அவர்கள் வழக்கமாக சந்திக்கும் இடத்துக்கு வரும் படி சொல்லி பைக்கில் ஏறி அமர்ந்தான்.

அதே நேரம் டெம்போ ஒன்று வெளிக் கேட்டின் முன் வந்து நின்றது. பைக்கை விட்டிறங்கியவன் யாரென பார்க்க போக டெம்போவுக்கும் பின்னால் பெரியப்பாவின் காரில் குடும்பத்தோடு இறங்கினான் வனராஜன். நல்ல வேளையாக சிதம்பரம் வரவில்லை.

வீட்டுப் பெண்களை அழைத்துக் கொண்டு வரும் வனராஜனிடம் கடுமையை காட்ட இயலாமல் அதே சமயம் இணக்கத்தையும் காட்டாமல் பின்னால் கைகளை கட்டிக் கொண்டு நின்றான் சேரன்.

அஞ்சலையும் சரஸ்வதியும் தயக்கமாக தேங்கி நிற்க, கேட்டை தானே திறந்தான் வனராஜன்.

Advertisement