Advertisement

அத்தியாயம் -19

பைக் திரும்ப வந்து விட்டதை சரவணன் மூலமாக அறிந்திருந்த மதுராவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. சமையல் வேலையெல்லாம் முடித்தவள் முகம் கழுவி தலை வாரி தெளிவாக இருந்தாள். அழுததால் ஏற்பட்டிருந்த கண்களின் வீக்கம்தான் முழுதுமாக சரியாகியிருக்கவில்லை.

மூங்கில் தட்டில் பூவோடு வந்த அண்ணனை பார்த்த சரவணன், “என்ன ண்ணா இது?” எனக் கேட்டான்.

“ம்ம்ம்… புடலங்காய்… போடா…” என்ற சேரனின் முகத்தில் அடக்க பட்ட சிரிப்பு.

சரவணனும் சிரித்துக்கொண்டே மீண்டும் வாரமலரில் மூழ்கி விட்டான்.

அறைக்கு வந்தவன் மூங்கில் தட்டை மனைவியிடம் கொடுத்து ராமசாமி தாத்தா கொடுத்து விட்டார் என விவரம் சொன்னான்.

“எதுக்காம்?”

“ம்ம்… சாமிக்கு போட” என்றான்.

உடனே வெளியேறியவள் அனைத்து சாமி படங்களுக்கும் மாலை மாலையாக பூவை போட்டு விட்டவள் இன்னும் கொஞ்சம் பூவோடு பூஜையறையிலிருந்து வெளியே வந்தாள். இவன் வேடிக்கை போல பார்த்திருக்க, கூடம் மற்றும் திண்ணையில்  மாட்டியிருந்த காலண்டர் மஹாலட்சுமி, பிள்ளையாருக்கு அந்த பூவையும் வைத்து விட்டாள்.

இவன் இடுப்பில் கை வைத்து முறைக்க, அவளும் பார்வையால் வெட்டினாள்.

“நல்லதுதான் சாமி மனசெல்லாம் குளுந்து போயிருக்கும். என்னன்னு வேண்டிகிட்ட?” எனக் கேட்டான்.

“ம்ம்… தாத்தாவோட பூ வியாபாரம் அமோகமா நடக்கணும்னு வேண்டிகிட்டேன்” என்றவள் மிதப்பான பார்வையோடு அறைக்கு சென்றாள்.

அவளின் பின்னாலேயே வந்தவன், “ஒரு புள்ள கிள்ள வேணும்னு வேண்டிக்க மாட்டியாடி? காசு கொடுத்து பூ வாங்கினது நானு, பல் இல்லாத கிழவன் பிஸ்னஸ் மேக்னட் ஆவணும்னு வேண்டிக்கிவியோ?” என சிடு சிடுப்பாக கேட்டான்.

“அவர்தான என்னை நினைப்பு வச்சு பூ கொடுத்து விட்டாரு”

“நான் ஒரு முழம் வாங்க போயிதான் என்கிட்டேயே வித்திட்டு கெழவி கூட டூயட் பாட கெளம்பிட்டாரு. கெழவி கொண்டைக்கே பூ எடுத்திட்டு போனாரு, என் புதுப் பொண்டாட்டியோட நீண்ட ஜடை வெத்தா கெடக்கு. என்னடி நீ? என்ன கோவம்னாலும் இப்படியா செய்வ?”

இரண்டு நாட்களாக அவன் வார்த்தைகளால் வதைத்தது அனைத்தையும் அவள் பட்டியல் போட ஆரம்பிக்க விழித்தவன், “சரி சரி வா, சாப்பிட்டிட்டு பொறுமையா பேசலாம். உன் லிஸ்ட் ரொம்ப நீட்டமா இருக்கு” என்றான்.

“அப்படியே விடுவேன்னு மட்டும் பகல் கனவு  காணாதீங்க”

“இப்ப எல்லாம் அடல்ட்ஸ் ஒன்லி கனவுதான், வயித்த கவனிச்சிட்டு பொறவு என்ன மாதிரி கனவுன்னு விளக்குறேன், வா” என்றவன் அவளின் கை பிடித்து அழைத்து செல்ல, தலையில் அடித்துக் கொண்டே அவனின் பின்னால் சென்றாள்.

மதுரா தான் சமைத்த உணவை கூடத்தில் கொண்டு வந்து வைக்க சரவணனும் கந்தசாமியும் கூட சாப்பிட வந்து விட்டனர். அவர்களுக்கு கருவாட்டு குழம்பு அவித்த முட்டை என பரிமாறினார் கனகா.

இரண்டு சமையல் நடந்திருப்பதில் கந்தசாமிக்கு சுணக்கம் ஏற்பட்டாலும் இதை வைத்து குடும்பமும் பிரிவாகி விடக்கூடாது என நினைத்தவர், “பொரிச்ச குழம்பா ஆயி? எங்க எனக்கு கொஞ்சம் போடு” என மருமகளிடம் கேட்டார்.

ஆங்கார பார்வையோடு நின்றிருந்த மாமியாரை ஓரக் கண்ணால் பார்த்த மதுரா மாமனாரை சங்கடமாக பார்க்க, “ஏட்டி கேட்குறாருன்ன?” என அதட்டல் போட்டான் சேரன்.

“அட ஏன் ண்ணா நீ வேற சும்மா உலக்கை உரல்ல இடிக்கிற மாதிரி சத்தம் போட்டுக்கிட்டு” என்ற சரவணன் மதுரா செய்த குழம்பு இருந்த பாத்திரத்தை எடுத்து அப்பாவுக்கு கொஞ்சமாக ஊற்றியவன் அவனுக்கும் போட்டுக் கொண்டான்.

அத்தோடு நிறுத்தாமல் கருவாட்டு குழம்பை அண்ணியிடம் தள்ளி வைத்தவன், “அண்ணனுக்கு ரொம்ப புடிக்கும், அதுக்கும் போடுங்க அண்ணி” என்றான்.

மறுக்க இயலாமல் மதுராவும் கரண்டியில் குழம்பு எடுத்து கணவனின் தட்டில் ஊற்ற போக, கை காட்டி தடுத்தவன், “நான் சொன்னா சொன்னதுதான். நான் சாப்பிட்டுக்கிறேன், உனக்கு போய் சாப்பாடு எடுத்திட்டு வா” என சொல்லி அவளை அனுப்பி வைத்து விட்டான்.

கலங்கிப் போன கனகா அங்கே நிற்க முடியாமல் அறைக்கு சென்று விட்டார்.

சரவணன் அண்ணனை முறைக்க கந்தசாமியோ, “இப்படியே எத்தன நாளைக்குடா இருக்க போற?” எனக் கேட்டார்.

“சாப்பிடுங்க ப்பா” என்றவனிடம் மேலும் ஏதும் பேச முடியவில்லை.

இரவு உறங்க வந்த பின் பாயை தேடிய மதுராவுக்கு அது கண்களில் சிக்கவில்லை. அவளது இடுப்பில் சொருகியிருந்த புடவை முந்தானையை கையில் எடுத்துக் கொண்டவன், “வெக்கையா இல்ல உனக்கு?” எனக் கேட்டான்.

“இல்ல…” நறுக் என பதில் சொல்லி வெடுக் என அவன் கையிலிருந்த முந்தானையை பறித்துக் கொண்டாள்.

“புருஷன் வயித்த பட்டினி போடாம இருக்கிறதா பெருசு, படுக்கையிலேயும் அவனை பட்டினி போடக்கூடாதுடி” என்றவன் அவளது புடவையின் முன் கொசுவத்தை விடுவித்தான்.

அவனது கையிலேயே சுள் சுள் என அடி வைத்தவள் கொசுவத்தை பிடுங்கி அள்ளி மீண்டும் சொருகி கொண்டாள்.

அவளின் நேர் எதிரே நின்றிருந்தவன் அவளை நெருங்கி தன் மார்பால் இடித்துக் கொண்டே அவளை பின்னோக்கி நகர செய்து படுக்கையில் தள்ளினான். குறும்பு சிரிப்போடு அவனும் அவள் மேல் படுக்க போக சட்டென தள்ளிப் படுத்து விட்டாள். வெறும் படுக்கையில் குப்புற விழுந்தவன் ஏமாற்றத்தோடு நேராக படுத்து, எழுந்து நின்றிருக்கும் மனைவியை தாபமாக பார்த்தான்.

“குடு குடுப்பக் காரன் கையில இருக்க குடு குடுப்ப மாதிரியே கோவத்துல ஆடினதெல்லாம் மறந்து போச்சா? அட்லீஸ்ட் ஒரு சாரி கேட்டீங்களா?”

“கோவ படுற மாதிரி நீ நடந்துகிட்டு சாரி வேற கேட்கணுமா நான்?”

அவனருகில் அமர்ந்து கொண்டவள், “தப்பா போவும்னு நினைச்சு செய்யலங்க” என்றாள்.

“இமை மூடி தொறக்கிற நேரத்துல எல்லாத்தையும் மாத்த முடியாது, ஆனா உன் சௌகரிய குறைச்சல அப்படியே விட்ருவேன்னு உனக்குள்ள நினைப்பு வர போயிதான் நடக்கிறத சரி செய்வேன்னு என்னை நம்பாம உன் பொறந்த வீட்டு சப்போர்ட் வேணும்னு யோசிச்சிட்ட”

“இனி ஒரு முறை உங்க மேல எனக்கு நம்பிக்கை இல்லைன்னு மட்டும் சொல்லாதீங்க. தினம் வெளியிலேயும் உழைச்சிட்டு வீடு வந்தும் நிம்மதியா இருக்க முடியலை உங்களால, செல்வி அது கதையை சொல்லவும் அது போலவே நம்ம பொறந்த வீட்டோட ராசியாகிட்டா உங்க அப்பாம்மா நல்ல விதமா இருப்பாங்க, உங்களுக்கும் வேற வழில பணம் சம்பாதிக்கிற நிலை வராதுன்னு நினைச்சிட்டேன். நாலையும் யோசிச்சுதான்… நம்ம நிம்மதியான வாழ்க்கைகாகத்தான்…”

அவள் பேசிக் கொண்டிருக்க, “அப்படியா நம்ம நிம்மதியா? உன் நிம்மதி தனின்னு சொல்லல நீ?” என இடையிட்டான்.

“சொல்ல வந்தத முழுசா கேட்காம பாதியில வெட்டிக்கிட்டு ஓடினா நான் என்ன செய்வேன்?” என்றவள் அன்று என்ன சொல்ல வந்தாளோ அதை கூறினாள்.

விழித்தவன், “உன் நிம்மதிக்காகங்கவும் சுள்ளுன்னு ஏறிப் போச்சுடி. இவளுக்காக பாத்து பாத்து நாம செய்யயில இப்படி என்னை அவகிட்டருந்து பிரிச்சுப்புட்டாளேன்னு…” முடிக்காமல் அசடு வழிய சிரித்தான்.

“உங்க கோவத்தினாலேயும் அவசர புத்தியாலயும் ரெண்டு நாள் நான் அழுது கரைஞ்சதுதான் மிச்சம்” என சலித்தாள்.

“சரி வுடு, உன் அம்மா அண்ணி சித்தியோடு பேசு கொள்ளு. பாக்கணும்னா கூட பொது இடத்துல வர சொல்லி பாரு. அவ்வோளுக்கு பிரச்சனை இல்லன்னா நம்மூட்டுக்கு கூட வர சொல்லு. அவ்வோ வர்றப்போ என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டீனா நான் வூட்ல இருந்துப்பேன், அம்மா பேசும்னு நினைக்காத. ஆனா அங்குட்டு அதான் உன் பொறந்த வூட்டுல நீ எதுவும் கேட்க கூடாது. உனக்கு வேண்டியது எல்லாம் நான் செய்வேன்” என்றான்.

“செஞ்ச வரைக்கும் போதும். இனியும் கஷ்ட படாதீங்க”

“யாருக்காக செய்றோம்ங்கிறதுலதான் கஷ்டம் கஷ்டமா தெரியும். உனக்காக செய்றது கஷ்டமா எனக்கு? ஒரு வருஷம் போனா பணக் கஷ்டமெல்லாம் நமக்கு இருக்காது மதுரா. அத நினைச்சு நீ வருந்த கூடாது” என்றான்.

“ம்ம்…” என்றாள்.

“அவ்ளோதான். இனிமே சீர் பத்தியெல்லாம் பேசக்கூடாது” என அவன் அழுத்தமாக சொல்ல, சரி என தலையாட்டிக் கொண்டாள்.

“எதுக்கெடுத்தாலும் கண்ண கசக்க கூடாது” என அவன் சொன்னதற்கும் தலையாட்டிக் கொண்டாள்.

“சரி வா, உன் வாயிக்கு பசிக்குதாம், நீ மென்னு திங்க என் உதடு ரெடியா இருக்கு” பேச்சோடு பேச்சாக சாதாரணம் போல கூறினான்.

Advertisement