Advertisement

அத்தியாயம் -18(2)

“ம்ம்…நல்லா வருவடா நீ! மேகொண்டு பணம் தேவைப்படுதுன்னு பைக்க விக்கலாம்னு நினைச்சிட்ட, யாருமில்லாதவனா போயிட்டன்ன நீ?” எனக் கேட்டான் மோகன்.

“சரவணன் பைக் கெடக்கு, செழியன், மதன் ஏன் உங்ககிட்ட கூட பைக் இருக்குன்ன? அவசரத்துக்கு கேட்டா தராம போய்டுவியளா அத்தான்?” சின்ன சிரிப்போடு கேட்டான் சேரன்.

“அதெல்லாம் தர்றதில்லன்னு முடிவு பண்ணித்தான் உன் பைக்கையே கொண்டாந்து போட்டுட்டேன். ஒரு வார்த்த என்கிட்ட சொல்ல மாட்டியாடா? வித்தது தெரிஞ்சு உம்மேல செமத்தியா கோவம். சரவணன் பயலுக்கு கூப்பிட்டு கேட்டா தெரியலைங்கிறான்”

“அவனுக்கு தெரிஞ்சாதானே சொல்லுவான். உங்ககிட்ட கேட்டா செய்வீயன்னு தெரியும் அத்தான், ஆனா…”

“என்னடா ஆன்னா ஆவன்னா? அக்கா புருஷன்கிட்ட கேட்டா கௌரத கொறைஞ்சு போயிடும்ன்ன?” என கோவப்பட்டவனிடம் பதில் பேசவில்லை சேரன்.

“ம்ம்… பொண்டாட்டிக்கு வசதி பண்ண உன் வசதிய குறைச்சுக்க துணிஞ்சிட்டன்ன?” எனக் கேட்டான் மோகன்.

“என் வசதி அவ வசதின்னு தனித் தனியா எதுவும் இல்ல அத்தான். இதெல்லாம் எங்க வசத்திக்காக. கொஞ்ச நாள் ஆனா புது பைக் வாங்கிக்கலாம்னு இருந்தேன்” என்றான்.

“சந்தோஷம் டா மாப்ள. சின்னதிலிருந்து உன் அக்காவை பார்த்த குடும்பம் என்னோடது. அப்படியும் கல்யாணம் பண்ணி மருமவளா அவ வரும் போது ஆயிரெத்தெட்டு பிரச்சனை. புது இடத்துக்கு பொண்ணுதான் வர்றா. அவளுக்கும் புகுந்த வீட்டு உறவுக்கும் பாலம் புருஷன்கிற உறவுதான் டா. காலைல எழுந்திருக்க நேரத்திலேருந்து சாப்பாடு துணிமணி நல்லது கெட்டதுன்னு எல்லாத்திலேயும் புகுந்த வூட்டுல வித்தியாசம் இருக்கும்”

“என்ன அத்தான், ஏன் திடீர்னு இதெல்லாம் சொல்றீய? யாரு என்ன சொன்னா?”

“நீ பொறந்ததிலிருந்து உன்னை பத்தி எனக்கு தெரியும் மாப்ள. நேத்து வனராஜன் கூட நடந்த சண்டை எதுக்குன்னு தெரியும். காளியப்பன் கடைல வச்சே மதுராவுக்கு நீ போன் போட்டு பேசினது தெரியும். அதுக்கு பொறவு வீடு வந்தவன் நேரா தோப்பு போயிருக்க. ராத்திரி லேட்டாதான் வீடு போன. நாலும் மூணும் ஏழுன்னு தெரிஞ்சுக்கிறது கம்ப சூத்திர கதை ஒன்னும் இல்லடா. என் கோவக்கார மாப்ள என்ன ஆட்டம் போட்ருக்க மாட்டன்னு தெரியாதவன் இல்லடா நான்” என மோகன் சொல்லிக் கொண்டிருக்க தூரமாக எங்கேயோ பார்வையை வைத்திருந்தான் சேரன்.

“கண்ண கட்டி காட்டுல வுட்டாப்ல இருக்கும்டா அந்த புள்ளைக்கு. நீ மட்டும்தான் ஆதரவு, காலம் நிறைய கெடக்கு நீ அந்த புள்ள கூட சண்டை போட்டு ஊடல் கூடல் விளையாட்டெல்லாம் விளையாட. வயல்ல நட்ட இளம் நாத்தோட நிலைடா அதுக்கு இப்போ, உன் சூறாவளி கோவத்துக்கு எல்லாம் தாக்குபிடிக்காதுடா. மரியாதிக்கு உன் கோவம், வீம்பு, வீராப்பு, எல்லா மண்ணாங்கட்டியையும் தூக்கி பரணையில போட்டு வை” என மோகன் பேச பேச மிகவும் அவளை வருத்தி விட்டோமோ என நினைத்த சேரனை அழுது வீங்கிய மனைவியின் கண்கள் இம்சை செய்தன.

“தப்பு சரி யாருங்கிறதுக்கு எல்லாம் நான் போவலடா. உன் பொண்டாட்டி மேலயே தப்பு இருக்கட்டுமே, நீயே இறங்கி போனா என்னடா கெட்டு போச்சு? ஆசை பட்டு காத்திருந்து கலவரம் பண்ணி கட்டிகிட்டதாடா பெருசு? அதுக்குன்னு பார்த்து பார்த்து செய்ற நீ அது மனசை மட்டும் பாக்க மாட்டியாடா?” என மோகன் கேட்க, சேரனிடமிருந்து பெருமூச்சு புறப்பட்டது.

“கொஞ்சம் அந்த புள்ளகிட்ட விட்டுக் கொடுத்து போவணும் மாப்ள நீ. நம்மள வச்சுத்தான் நம்ம பொண்டாட்டிக்கு மதிப்பும் மரியாதையும். உனக்கு ரொம்ப சொல்ல தேவையில்லை, சூதானமா இரு” என மோகன் அறிவுறுத்த சம்மதமாக தலையாட்டிக் கொண்டான் சேரன்.

“பைக் நான்தான திரும்ப எடுத்தேன்னு நம்ம மூணு பேரை தவிர வேற யாருக்கும் தெரிய வேணாம். உன் அக்காவை கட்டுறதுக்கு முன்னாடியே சேரன் எனக்கு பழக்கம், அதை நெனப்பு வச்சு இனிமே தேவைன்னா என்கிட்ட வா” என்றான்.

சேரன் நிறைந்த புன்னகையோடு “தேங்க்ஸ் அத்தான்” என்றான்.

“போடா! நீ கிளம்பு, இங்க பக்கத்துல வேலை இருக்கு. நான் போயிக்குவேன்” என சொல்லி கிளம்பி சென்று விட்டான் மோகன்.

போதாத காலம் வந்து ஆளை சாய்க்க பார்க்கையில் எந்த பக்கம் சாய்ந்தாலும் தாங்கிப் பிடித்துக்கொள்ளும் உறவுகளும் நண்பர்களும் வாய்க்க பெற்ற சேரன் கொடுத்து வைத்தவன்தான்.

மனைவியை பற்றி யோசித்துக் கொண்டு குளக் கரையிலேயே அமர்ந்து விட்டான். காதலிக்கும் காலத்திலேயே இவனது கோவம் என்றால் அவளுக்கு ஒவ்வாமைதான். அவனாக பேசாத வரை பரிதவிப்பவள் இவன் சமாதானமாக செல்கையில் கண்களாலேயே சண்டை பிடிப்பாள்.

இப்போதும் தான் சமாதானமாக பேசினால் கண்டிப்பாக முறுக்கிக் கொள்வாள் என தெரியும், அவளின் அந்த அதிக ஆயுள் இல்லாத கோவத்தையும் முறுக்கையும் எதிர் கொள்ள ஆவல் பிறக்க, தன்னால் கண்களை மூடிக் கொண்டவன் அந்த கற்பனையில் லயித்தான்.

காலையில் பைக் விற்றதில் பெருத்த மன வாட்டத்தில் இருந்தவனுக்கு இப்போது மனம் இதமாக இருந்தது.

முந்தைய தினம் சேரனோடு ஏற்பட்ட தகராறு பற்றி வனராஜனின் வீட்டினருக்கும் சிதம்பரத்துக்கும் தெரிந்து விட்டது. அஞ்சலையும் சரஸ்வதியும் அவனை காய்ச்சி எடுத்து விட்டனர். எது செய்தாலும் பாதிக்க படப் போவது மதுராதான் என அவர்கள் அழுத்தி சொன்னதில் அவனுக்குமே தேவையில்லாமல் பேசியிருக்க வேண்டாம் எனதான் தோன்றியது.

ஆனால் சிதம்பரம் அவ்வளவு நல்ல உள்ளம் கொண்டவர் இல்லையே. இந்த நேரம் சீர் கொண்டு சென்றால் சேரனோடு தகராறு முற்றிப்போகும் என தெரிந்தே இருந்தவர், “என்ன இருந்தாலும் நம்ம பொண்ணுக்கு செய்றத செஞ்சிடணும். அவளுக்கு ஒன்னுன்னா நாம இருக்கோம்னு அந்தூட்டு மனுஷாளுவோளுக்கும் தெரியணும்ன்ன? நாளைக்கே போய் சீர் செஞ்சிட்டு வந்திடுடா” என வனராஜனுக்கு அறிவுறுத்தி இருந்தார்.

நாளை தங்கை வீடு சென்று அவளுக்கு சீர் செய்து விட உறுதியாக முடிவு கட்டி விட்டான் வனராஜன்.

 இப்போதே அம்மா மற்றும் மனைவியிடம் சொன்னால் புலம்பி சண்டையிட ஆரம்பிப்பார்கள், ஆகவே அனைத்தையும் ஏற்பாடு செய்து விட்டு இறுதி நேரத்தில் உடன் அழைத்துக் கொள்ளலாம் என எண்ணி அமைதியாக இருந்து விட்டான்.

கணவன் வருவதற்குள் அவனுக்கு பிடித்ததாக சமைக்க வேண்டும் என அவரைக்காய், முருங்கைக்காய் போட்டு பொரித்த குழம்பும் கத்திரிக்காய் வறுவலும் என மும்முரமாக சமைத்துக் கொண்டிருந்தாள் மதுரா.

கனகாவும் இரவு சமையல் செய்து கொண்டிருக்க அவரது உள்ளமோ அடுப்புக்கு இணையாக எரிந்து கொண்டிருந்தது. மகனின் நடத்தைக்கு தான்தான் காரணம் என்பதை புரிந்து கொள்ளாமல் மதுராவின் மேல் இன்னும் இன்னும் வன்மத்தை கூட்டிக் கொண்டிருந்தார்.

ஆர்டர் கொடுத்திருந்த கட்டில் தயாராகி விட்டதாக கடையில் சொல்ல முழு பணத்தையும் கொடுத்த கந்தசாமி, “நாளைக்கு காலைல நல்ல நேரம் பார்த்து வூட்டுல இறங்கிடுங்க” என சொல்லி விட்டார்.

“மாப்ள வூட்ல கார் இல்லன்ன? அது ஒன்னு வாங்கி கொடுக்கலாம்னு இருக்கேன். நிச்சயத்துக்கு செஞ்சா எனக்கு கௌரதியா இருக்கும். அவருக்கு என்ன மாடல் வேணும்னு கேட்டு சொல்லு ஆயி” மகளிடம் சொன்னார் சுகந்தியின் தந்தை.

“அவருக்கு இதெல்லாம் பிடிக்காதுப்பா, நான் எப்படி கேட்க?” என தயங்கினாள் சுகந்தி.

“அப்படிங்குற, சரி வுடு, நாளைக்கு நானே நேர்ல ஒரு எட்டு போய் கேட்டுக்கிறேன். மாப்ளையையும் பார்த்த மாதிரி ஆச்சு” என சரவணனின் வீடு செல்ல தீர்மானித்து விட்டார் சுகந்தியின் தந்தை.

முகத்தில் மோதும் தென்றல் காற்றை அனுபவித்துக் கொண்டே பைக்கில் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தான் சேரன். வழியில் எதிர் பட்டார் பூ விற்கும் தாத்தா.

அவரை நிறுத்தியவன் ஒரு முழம் பூ கேட்க, “செவ்வா வெள்ளி இல்லைன்னா பூவே விக்க மாட்டேங்குது. ஆயிகிட்ட சொன்னா அப்படியே வாங்கிப்புடும். நீ வாங்கிட்டுப் போய் ஆயிகிட்ட கொடு” என்றார் தாத்தா.

“ஏது என் பொண்டாட்டி பேரை சொல்லி அரை கூடை பூவை என் தலையில கட்ட பாக்குறியளா தாத்தா, சீக்கிரமே நம்ம ஊரை வாங்க போறீயன்னு சொல்லுங்க” என கேலியாக சொன்னான் சேரன்.

“உன் தலையில யாரு வச்சுக்க சொன்னதுங்கிறேன்? போய் உன் சம்சாரம் தலையில வச்சு வுடு. உங்கிட்ட பூ வித்த காசுல பக்கத்தூரையும் சேர்த்து விலை பேசிப்புடுறேன்”

“அது சரி! ஆனா இவ்ளோ வெயிட் தாங்க மாட்டாளே எம் பொண்டாட்டி” தொடர்ந்து வம்பு பேசினான்.

“அட வாங்கிக்கய்யா, கதம்பத்தையும் சேர்த்து வாங்கு, ஆயி சாமிக்கெல்லாம் போட்டு விடும்” என தாத்தா கூற, பூவுக்குரிய பணத்தை கொடுத்தான் சேரன்.

கால் முழம் மல்லிப் பூவை நறுக்கி தனியே அவரது கூடையிலேயே வைத்துக்கொண்டவர் மீதமிருந்த மல்லியையும் கதம்ப பூப்பந்தையும் கையில் எடுத்தார்.

வைத்து தர பாலீதீன் கவர் இல்லாமல் போனதால் அவரிடமிருந்த மூங்கில் தட்டில் அப்படியே பூவை வைத்து அவனது பைக்கில் அவனுக்கு முன்னால் வைத்தார்.

“என்ன செய்றீய?”

“எப்படி எடுத்திட்டு போவ தம்பி? மூங்கி தட்ட நாளைக்கு ஆயிக்கு பூ கொடுக்கும் போது வாங்கிக்கிறேன்”

“விவகாரம் புடிச்சவருய்யா, இப்படியே நான் போனா பாக்குறவிங்க என்ன பேச மாட்டாய்ங்க? இந்தூர்ல என் கதை என்னாகிறதுங்கிறேன்?” எனக் கேட்டான் சேரன்.

“கவுன்சிலர் தம்பி ராமசாமி தாத்தாகிட்ட பூ வாங்கி பூ வாங்கியே பொண்டாட்டிய மயக்கி சட்டு புட்டுன்னு அப்பா ஆகிட்டான்னு சீக்கிரத்திலேயே சேதி பரவாது? பொறவு ராமசாமி தாத்தா விக்கிற பூவுக்கு கிராக்கி ஏறிப் போவுமன்ன? எல்லாம் ஒரு யாவார உத்திதான்” என்றார்.

லேசாக வாய் பிளந்து தலையாட்டிக் கொண்டவன், “கூடைல இருக்க பூ யாருக்கு… ஆத்தாவோட வெளுத்து போன கொண்டைக்கா?” எனக் கேட்டான்.

“கல்யாணம் முடிச்ச நாளிலேருந்து அவ தலையில பூ இல்லாம விட்டது இல்ல நான், சும்மா ஒன்னும் கெழவி என்கிட்ட மயங்கி கெடக்கல” ஓட்டைப் பல் தெரிய தெரிய சிரித்தவர், ஆவாரம் பூவு ஆறேழு நாளா என்ற பாடலில் வரும் “பார்வையிலே கெளிச்சாலே

புளியம் கொம்பா பிடிச்சாளே

வேரோடதான் மனசப் பறிச்சாளே…” வரிகளை கட்டைக் குரலில் பாட்டிசைத்துக் கொண்டே சைக்கிளை மிதித்து கொண்டு சென்று விட்டார்.

தாத்தா சென்ற திசையை முதலில் திகைப்பாக பார்த்திருந்த சேரனின் முகத்தில் சில நொடிகளில் ஒரு கள்ளச் சிரிப்பு.

அருகிலிருந்த வரப்பிலிருந்து மேட்டுக்கு ஏறப் போன இரண்டு பெண்கள் தங்கள் தலையில் சுமந்திருந்த புல் கட்டுகள் நிறைந்த கூடையை மேட்டில் வைத்து பின் அவர்களும் ஏறினார்கள்.

ஏறிய பின் ஒரு பெண் மற்றொரு பெண்ணின் தலையில் கூடையை வைத்து விட்டு சுற்றிலும் பார்க்க அவளின் கண்களில் சேரன் தென்பட்டான்.

“தம்பி… செத்த கூடையை தலையில ஏத்தி வுடுங்க” என கேட்டாள்.

சேரனும் பைக்கிலிருந்து இறங்கி வந்து கூடையை அவளின் தலையில் ஏற்றி விட, “வெவரம் இல்லாத தம்பிக்கு எதுக்கு கதம்ப பூ, இந்த ரோசா பூ கீசா பூ கிடைக்கலியா? இல்ல எந்தங்கச்சிக்கு மரிக் கொழுந்து வாசம்தான் பிடிச்சிருக்கா?” என கேலி பேசினாள்.

“சாமிக்குன்னு சொன்னா நம்பவா போற அத்தாச்சி?”

“சூடம் ஏத்தி சத்தியம் அடிச்சாலும் நம்ப மாட்டோம்ன” என்றாள் இன்னொரு பெண்.

“பொறவு எதுக்கு மெனெகெட்டு உங்களுக்கு விளக்கம் சொல்லணும்?” எனக் கேட்டான்.

“நாங்கெல்லாம் மொகரைய வச்சே மூளைய படிச்சிடுவோம்ன, எந்தங்கச்சி பூ மேனிக்காரி, கொழுந்து வெத்தலையும் அவளும் ஒன்னு, பாத்து பக்குவமா பதமா நடங்க” என முதலில் பேசிய பெண் சொல்ல, “புல்லுக்கட்டு கணக்கா பூக்கட்டு போவுது, நீ சொல்றதா தம்பி புத்தியில ஏற போவுது? ஆயி காத்து கெடக்க போவுது, கெளம்புங்க தம்பி” என்றாள் இன்னொருத்தி.

“என் ஆச மச்சான் வாங்கி தந்த மல்லியப்பூ…” என கிண்டலாக பாடிக் கொண்டே அத்தாச்சி முறையுள்ள பெண் நடந்து செல்ல, இன்னொரு பெண் வாயை மூடி களுக் என சிரித்து, “மாமன் ஒரு நா மல்லியப்பூ கொடுத்தான்” என எசப் பாட்டு பாடிக் கொண்டே நடந்தாள்.

அந்த பெண்களின் பேச்சிலும் பாட்டிலும் சேரனின் விழிகள் இரண்டும் வியப்பில் விரிந்திருக்க மோவாயில் கை வைத்து அவர்களை பார்த்திருந்தவன், “சேரனையே வெக்க பட வைக்கிறாவோளே!” என வாய் விட்டு சொல்லி சிரித்துக்கொண்டான்.

 மீண்டும் பைக்கில் ஏறிக் கொண்டவனின் நாசியை மலர்களின் மணம் துளைத்தது. அரும்பு மீசையை உல்லாசமாக முறுக்கிக் கொண்டவனின் பைக் காற்றை கிழித்துக் கொண்டு வீட்டிற்கு ஓடியது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement