Advertisement

ஆள வந்தாள் -18

அத்தியாயம் -18(1)

சேரன் வெளியில் சென்ற சிறிது நேரதுக்கெல்லாம் சித்திக்கு அழைத்த மதுரா சீர் என எதுவும் கொண்டு வந்து விட வேண்டாம், பிறகு பேசுகிறேன் என சொல்லி வைத்து விட்டாள்.

அவளுடைய சித்திக்கும் மதுராவை நினைத்து கவலையாகத்தான் இருந்தது. மீண்டும் அவளுக்கு அழைத்து தொந்தரவு செய்ய விரும்பாமல் தன் அக்காவுக்கு அழைத்தவர் மதுரா சொன்னதை பகிர்ந்து கொண்டார்.

என்னவோ ஏதோ என்று அஞ்சலை அழுது புலம்ப, “பயப்பட ஏதுமில்லக்கா. வனராஜன் முன்கோவம் பத்தி எதுவும் சொல்றதுக்கு இல்ல. இவருக்கு ஃப்ரீ ஆனதும் நான் நேர்ல வர்றேன். நாம சேர்ந்து போய் மதுராவோட புகுந்த வீட்ல பேசலாம். அதுவரைக்கும் ராஜனையும் பொறுமையா இருக்க சொல்லு” என சொல்லி விட்டார்.

திருத்துறைப்பூண்டியில் பழைய பைக்குகளை வாங்கி அதை சீர் செய்து வேறு ஒருவருக்கு விற்பனை செய்யும் கடையில் இருந்தான் சேரன்.

ஆண்களுக்கு அவர்களின் வாகனங்களுடன் இருக்கும் மோகம் அலாதியானதுதானே.

கல்லூரி படிக்கும் காலத்தில் செகண்ட் ஹேண்ட் பைக் ஒன்றுதான் உபயோகத்திற்கு வாங்கி தந்திருந்தார் கந்தசாமி. அதையே பளிச் என அப்படி வைத்துக்கொள்வான். இது இவனுடைய இருபத்தி ஐந்தாவது வயதில் அவனே ஆசைப்பட்டு வாங்கியது.

வண்டியின் முகப்பில் சேரன் என பெயர் எழுதி கிரீடம் போல வரைய பட்டிருக்கும்.

உள்ளூரில் மட்டுமல்ல அக்கம் பக்கத்து ஊர்களில் கூட இவனுடைய பைக் நிற்பதை வைத்தே, இவனுடைய இருப்பை தெரிந்து கொள்பவர்கள் அனேகம் பேர்.

இப்போதிருக்கும் பணத்தேவைக்கு நண்பர்களை தொந்தரவு செய்ய மனமில்லை, பெரிய தொகையாக கடன் வாங்கினாலும் பரவாயில்லை. சின்ன தொகைக்கு போய் யாரிடம் கடன் கேட்பது, விவரம் வெளியில் கசிந்தால் அவனது அப்பாவுக்குத்தான் அவமானமாக போகும்.

 பைக் பற்றி கேட்டால் கூட நல்ல கண்டிஷனில் இல்லை, விற்று விட்டேன் என சமாளித்துக் கொள்ளலாம் எனதான் இந்த முடிவுக்கு வந்திருந்தான்.

 நாற்பதினாயிரம் பணத்தை பெற்றுக் கொண்டு இறுதியாக ஒரு முறை பைக்கை தொட்டுப் பார்த்தவனுக்கு மனம் வலித்ததுதான். முகத்தில் காட்டிக் கொள்ளாமல் வெளியேறினான்.

மாலையில் சேரன் அமைத்துக் கொடுத்த கொட்டகையில் புது அடுப்பும் பண்ட பாத்திரங்களும் மளிகை சாமான்களும் காய்கறிகளுமாக குடியேறியிருக்க, அது சமையலறைக்கான அனைத்து லட்சணங்களையும் பெற்று விட்டது.

இன்னும் இவன் பைக் விற்றது பற்றி மதுராவுக்கு தெரியவில்லை. பொருட்கள் அதிகம் என்பதால் ஆட்டோவில் வந்திருக்கிறான் என்பதாகத்தான் நினைத்திருந்தாள்.

ஆனாலும் உள்ளுக்குள் பணம் எப்படி தயார் செய்திருப்பான் என்ற கேள்வி முரண்டாமல் இல்லை. கேட்கத்தான் பயமாக இருந்தது.

வீட்டிலிருந்த இரண்டாவது கேஸ் சிலிண்டரை எடுத்து வந்து இணைப்பு கொடுத்தவன், மனைவியை பார்த்து “மிக்சிக்கு ப்ளக் பாயிண்ட் இல்லாததால நம்ம ரூம்ல இருக்கு, அங்குட்டு வச்சே யூஸ் பண்ணு, பொறவு என்ன செய்யலாம் பார்க்கிறேன். இது உன் இடம், நீ நினைச்ச நேரம் என்ன செய்யணுமோ செய்” என்றான்.

அவளின் பார்வை அவனது வலது கையிலேயே இருக்க, “சின்ன காயத்துக்கு ஓவரா ஃபீல் பண்ணாத. இதுக்கு மேல எல்லாம் பார்த்தவன் நான்” என்றான்.

“பணம் எப்படி…”

“எப்படியோடி, உனக்கென்னத்துக்கு அது?” அவளை முடிக்க விடாமல் சீறினான்.

அவளின் முகம் சுண்டிப் போயிருக்க, “சும்மா கோவ படுத்திகிட்டு… எனக்கு கொடுத்து உதவ ஆளுங்க இல்லாம இல்ல” என அவன் சொல்ல நண்பர்களிடம் வாங்கியிருக்கிறான் போலும் என விட்டு விட்டாள்.

“ஸ்டராங்கா ஒரு டீ போட்டு எடுத்திட்டு வா” என மதுராவிடம் சொன்னவன் கைப்பேசியில் யாரையோ “உடனே வா” என சொல்லிக் கொண்டே சென்றான்.

எல்லா பொருட்களோடும் மகன் வந்திறங்கிய போதே அறைக்குள் சென்று படுத்து விட்டார் கனகா. இன்னும் மாலை பால் கறக்கப் படவில்லை. இவளுக்கு பால் கறக்கவெல்லாம் தெரியாது. தேநீர் போட பால் வேண்டாமா?

வீட்டில் ஏதோ சத்தம் கேட்க இவளும் உள்ளே சென்றாள். அவர்களின் அறையில் டிரில் போட்டு தொலைக்காட்சி பெட்டியை மாட்டிக் கொண்டிருந்தான் ஒருவன். ‘இது ஏன் இப்போது? அனாவசிய செலவு’ என நினைத்தவள் அடுத்தவர் முன் கேட்க வேண்டாமே என அமைதியாக இருந்தாள்.

அந்த ஊரின் எலக்ட்ரிஷியன் அந்த பையன். அவனை மனைவிக்கு அறிமுக படுத்திய சேரன் அவளையும் அவனுக்கு அறிமுகம் செய்ய போக, “அண்ணிய யாருன்னு மூணு வருஷம் முன்னாடியே தெரியாதாண்ணா? சொல்லப் போனா எனக்கு அதுக்கு முன்னாடியே தெரியும். நான் ஸ்கூல் போறப்ப அண்ணி காலேஜ் பஸ் ஏற வந்து நிக்கையில நீங்களும் அங்குட்டுத்தான் இருப்பீய” என பழைய கதை பேசினான் அந்த பையன்.

“ஸ்கூல் போகையில இதென்னடா வேடிக்கை உனக்கு?” எனக் கேட்டான் சேரன்.

“சின்ன பசங்க இருக்கையில நீங்க செஞ்சது மட்டும் சரியா?” எனக் கேட்டான் அவன்.

“நான் என்னத்தடா செஞ்சேன், பாக்க மட்டும்தானடா செஞ்சேன்”

“ஆர் டி ஓ ஆஃபிஸர்கிட்ட லைசன்ஸ் வாங்க எட்டு போட்டு காட்டுறது மாதிரி வண்டியை அங்குட்டே வளைச்சு வளைச்சுல்ல ஓட்டுவீய, எட்டோட நிக்காம ஒம்பது பத்து பதினொன்னுன்னு நீங்க காட்டின சர்க்கஸ வேடிக்கை பாக்காம எப்படிண்ணா நாங்க போவ முடியும்?” என அந்த பையன் கேட்க, நொடி நேரம் முகம் மாறி உடனே புன்னகையை வரவழைத்துக் கொண்டான் சேரன்.

கணவனையே பார்த்திருந்தவளுக்கு பக் என்றானது. அந்த பையனுக்கு பணம் கொடுத்து அனுப்பி வைத்த சேரன், “இன்னிக்கு வைஃபை கனெக்ட் பண்ணி பாரு, நாளைக்கு கேபிள் கனெக்ஷன் கொடுத்திடலாம்” என்றான்.

“உங்க பைக் எங்க?” எனக் கேட்டாள்.

“நான் கேட்ட டீ எங்கடி?” என பதில் கேள்வி கேட்டான்.

“ஏங்க இப்படி செய்றீங்க? டிவி வேணும்னு நான் கேட்டேனா?”

“ரூமுக்குள்ள சும்மாவே எப்படி அடைஞ்சு கெடப்ப? உனக்கு பொழுது போவ வேணாமா? தலை வலிக்குது மொத டீய கொண்டா” என்றான்.

மதுராவின் மனம் கவலை அடைந்திருக்க சின்ன குரலில், “பால் இல்ல” என்றாள்.

சேரன் விளக்கமெல்லாம் கேட்கவில்லை. ஒரு கவரை எடுத்து அவளின் கையில் தந்தான். இதென்ன என்ற கேள்வியோடு அவள் பார்க்க, “பிரிச்சு பாத்தா தெரிய போவுது” என்றான்.

இரண்டு பட்டுப் புடவைகள் இருந்தன. “என்னங்க இதெல்லாம்?” ஆற்றாமையாக கேட்டாள்.

“சரவணனோட நிச்சயம் அன்னிக்கு கட்டிக்க, இன்னொன்னு சும்மா வச்சுக்க. அவன் கல்யாணத்துக்கு நல்ல விலையுள்ளதா எடுக்கலாம்” என்றான்.

“உங்க பைக்க வித்து அந்த காசுல பட்டு கேக்குதா எனக்கு? என்னை கஷ்ட பட வைக்குறீங்க”

“சமயம் பாத்து உன் சித்திக்கிட்ட ‘கட்டிக்க புடவை கூட இல்ல, என் அண்ணன்கிட்ட கேட்டு வாங்கி தாங்க’ன்னு சொல்லி என்னை இன்னும் அசிங்க படுத்தறதுக்கு பணக் கஷ்டம் ஒன்னும் எனக்கு பெரிசில்ல, நீயும் கஷ்ட பட்டுக்க” என சூடாக சொன்னான்.

புடவைகளை கட்டிலின் மீது வைத்தவள், “நீங்க பேசுறதுல மனசு குளு குளுன்னு இருக்கு. பாலுக்கு ஏற்பாடு பண்ணுங்க சூடா ஏதாவது குடிக்கலாம்” என சொல்லி வெளியேறினாள்.

“இவ கலருக்கு எடுப்பா இருக்கணும்னு பாத்து பாத்து எடுத்திட்டு வந்தா நல்லாருக்கு புடிச்சிருக்குன்னு ஒத்த வார்த்த சொல்லாம கஷ்டமா இருக்காம், செய்றதெல்லாம் செஞ்சிட்டு கஷ்டமா வேற இருக்கும்தான்…” அங்கலாய்த்துக் கொண்டே புடவைகளை பீரோவில் பத்திர படுத்தியவன் பால் கறக்க தயாராகி விட்டான்.

இவனிடம் எதையும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்திருக்க வேண்டுமோ? பைக் விற்றதை ஏற்றுக்கொள்ள முடியாதவளுக்கு இன்னும் என்னவெல்லாம் பிரச்சனைகள் நடக்க போகிறதோ என அச்சமாக இருந்தது.

“வா வந்து கன்னுகுட்டிய புடிச்சுக்க, நான் பால் கறந்து பல காலம் ஆச்சு, எட்டி உதைச்சா என் பல்லு கழண்டு போவும்” என்றான்.

“என்னாலதான் செய்ய முடியல, அதாவது செய்யட்டும்” என்றவளை அவன் முறைக்க, “அரை கிலோ பச்ச மிளகாயை எடுத்து அரைச்சு உன் எஜமான் மூஞ்சுல பூசி மேக்கப் போட்டு விடுறேனா இல்லையான்னு மட்டும் பாரு நீ” என கன்று குட்டியிடம் பேசிக் கொண்டிருந்தாள் மதுரா.

“லவ் பண்ணும் போது அதென்ன பிரமாதம் இதென்ன பிரமாதம் நான் எப்படி வச்சிக்கிறேன் பாரு உன்னையன்னு ஈன்னு இளிக்க வேண்டியது, கட்டிக்கிட்ட அப்புறம் சொன்ன வார்த்தைத்தான் இஈன்னு பல்லு இளிக்குது” கன்றிடம் சாடை பேசினாள்.

 கொஞ்சமாக கறந்திருந்த பாலை அவளிடம் தந்து, “இதுல டீய போடு, , நீ பேசுற பேச்சுக்கு என் லட்சுமிகிட்ட உதை வாங்கினாலும் பரவாயில்லைனு நானும் முடிவு செஞ்சிட்டேன், கன்னுகுட்டிக்கும் காது வலிக்குதாம்” என சொல்லி மீண்டும் பால் கறப்பதை தொடர்ந்தான்.

“அது வந்து சொல்லிச்சா உங்ககிட்ட? கட்டி ரெண்டு வாரத்துல நான் பேசுறது சலிச்சு வருதுல்ல உங்களுக்கு?”

அவளை கண்டு கொள்ளாதவன் ஆடிய பசுவிடம், “இந்தா சுச்சூச்சூ… சேரன் பொறுமைய சீண்டாம நில்லு. இல்ல அடி வெளுத்துப்புடுவேன்” என அதட்டல் போட்டான்.

தன்னைத்தான் சொல்கிறான் என புரிந்து, “புரண்டு ஓடுற வெள்ளம் ஒரு நாள் வடிஞ்சுதான் ஆவணும், வச்சிக்கிறேன் அன்னிக்கு” என சொல்லிக் கொண்டே நகர்ந்தாள்.

கறந்த பாலை குளிர்சாதன பெட்டியில் வைத்தவன் மதுராவின் ‘ஏன் பைக்கை விற்றாய்?’ என கேட்கும் பார்வையை தவிர்க்க தேநீரை பருகிக் கொண்டே திண்ணைக்கு வந்து விட்டான்.

அவனுடைய பைக்கை சரவணன் ஓட்டிக் கொண்டு வர பின்னால் மோகன் அமர்ந்திருந்தான்.

திகைத்த சேரன் எழுந்து நின்று பார்த்திருக்க அண்ணனின் பைக்கை எப்போதும் நிறுத்துமிடத்தில் நிறுத்திய சரவணன் அடக்கப்பட்ட கோவத்துடன் அண்ணனை பார்த்தான்.

 சேரன் தன் தம்பியின் பார்வையை தவிர்த்து முகத்தை திருப்ப, அண்ணனிடம் வந்தவன் அவனது கையில் பைக் சாவியை கொடுத்து விட்டு வேகமாக உள்ளே சென்று விட்டான்.

பைக் அருகிலேயே நின்றிருந்த மோகன், “சேரா ஒரு சட்டையை எடுத்து மாட்டிட்டு உடனே வா, என்னைய கொண்டு போய் விடு” என அழைத்தான்.

பத்து நிமிடங்களில் குளக் கரையில் இருந்தனர் சேரனும் மோகனும்.

சேரன் மீன் பிடிக்க குத்தகைக்கு எடுத்திருக்கும் குளம்தான். குறிப்பிட்ட கால இடைவெளியில் மீன் பிடித்து விற்பனை செய்வார்கள். இன்று அமைதியாக காணப் பட்டது.

அண்ணி மூலமாக அண்ணன் தோப்பு குத்தகைக்கு எடுக்க போகும் விஷயத்தை அறிந்திருந்தாலும் தெரிந்தது போல காட்டிக் கொள்ளவே இல்லை சரவணன். அவன் வெளியிட்டால் மதுரா மூலமாக வெளி வந்ததாக ஆகி விடுமே. ஆனால் அந்த குத்தகைதாரர் மூலமாகவே மோகனுக்கு தெரிந்து விட்டது.

சுற்றி வளைக்காமல் தான் அறிந்த விஷயத்தை பற்றி கேட்டான் மோகன். தந்தையை விட்டுக் கொடுத்து விடாமல் தன் பக்க நியாயத்தை கூறினான் சேரன். கந்தசாமி பண விஷயத்தில் நடந்து கொண்ட விதம் பற்றி தெரிந்தவனுக்கு சேரனின் செயலை தவறாக எடுக்க முடியவில்லை.

ஆதரவாக சேரனின் தோளில் தட்டிக் கொடுத்தவன், “வேற யார் சொல்லியும் மாமாவுக்கு தெரிஞ்சா நல்லா இருக்காது. நீயே சொல்லிடு” என்றான்.

“குத்தகை எடுத்திட்டு சொல்லிடுவேன் அத்தான்” என்றான்.

“வீட்ல சமைக்க வேற இடம் போட்ருக்கேன்னு கேள்வி பட்டேன்”

“ஏன் அத்தான் உங்கூட்டுல தனியா அப்படி இல்லியா?”

“வீட்ல விஷேஷம்னா நிறைய பேருக்கு சமைக்க தேவை படும்னு வச்சிருக்க இடம்டா. பொழுதுக்கும் ரெண்டு அடுப்பு எரியல அங்குட்டு”

அம்மாவை குறையாக சொல்ல மனம் வராமல் அமைதியாக நின்றான் சேரன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement