Advertisement

அத்தியாயம் -17(2)

என்னவோ என பயந்து போன மதுரா கணவனின் பின்னால் ஓட, கந்தசாமியும் பதற்றத்தோடு ஓடி சென்றார். சேரனின் கையில் ஈட்டி இருக்க பின் பக்கம் வீட்டை ஒட்டினார் போன்ற இடத்தில் குழி தோண்ட ஆரம்பித்தான்.

“எலேய், என்னடா என்ன செய்ற நீ?” என கத்தினார் கந்தசாமி.

பதிலே சொல்லாதவன் அவனது காரியத்தில் கண்ணாக இருந்தான்.

தயங்கி தயங்கி அங்கே வந்த கனகாவும் வேடிக்கை பார்த்திருக்க, கணவனின் அருகில் சென்று மதுரா, “என்னங்க செய்றீங்க, வாங்க உள்ள” என்றாள்.

யாரையும் கண்டு கொள்ளாமல் வீட்டின் பக்கவாட்டில் கிடந்த மூங்கில்களை அளவாக வெட்டி எடுத்து வந்தவன் குழிகளில் வைத்து மண்ணை கொண்டு நிலை நிறுத்தி வைக்க அது சாய பார்த்தது.

மனைவியின் கையை எடுத்து மூங்கிலை பிடித்துக்கொள்ளும் படி செய்தவன் “புடிச்சுக்க” என மட்டும் சொன்னான்.

நான்கு பக்கமும் மூங்கில் நட்டு கயிறு கொண்டு கட்டினான்.

இங்கு தனியாக மனைவிக்கு சமைக்குமிடம் உருவாக்குகிறான் என புரிந்து கொண்ட கந்தசாமி அதற்கு காரணமான தன் மனைவியை விரக்தியாக பார்த்தார்.

 கனகாம்புசத்துக்கும் விளங்கி இருக்க “ஐயோ ஐயோ… காலடி வச்சு மாசம் ஒன்னு ஆவங்காட்டிலும் ரெண்டு அடுப்பு வைக்க பாக்குறாளே வூட்டுல” என சத்தம் போட்டார்.

அருகில் இருந்த வீடுகளிலிருந்து எட்டிப் பார்க்க, “ஒரு ஊசி வுழுந்தா கூட சத்தம் கேக்குற அளவுக்கு இங்குட்டு அமைதி இருக்கணும். இல்லைன்னா இதுதான் நான் இந்தூட்டுல இருக்கிற கடைசி நாளா போயிடும், சொல்லிட்டேன்” என அழுத்தமாக சொன்னான் சேரன்.

மனைவியின் கையை பற்றி இழுத்து சென்று தள்ளாத குறையாக அறைக்குள் விட்ட கந்தசாமி, “உன் சத்தம் கேட்டுதுன்னா மென்னிய நெறிச்சிப்புடுவேன், செவனேனு கெடடி!” என சொல்லி விட்டு மகனிடம் வந்தார்.

மாங்கு மாங்கு என வேலை பார்த்துக் கொண்டிருந்த சேரனிடம், “ஐயா சேரா, வேணாம்யா, நான் எடுத்து சொல்றேன் அவகிட்ட. இனிமே இப்படி ஆவாது, உள்ள வாய்யா தம்பி” என கெஞ்சலாக கூறினார்.

மதுராவுக்கு என்ன சொல்ல என்றே தெரியவில்லை. கலக்கமாக இருந்தது அவளின் மனது. கணவனின் உடல் மொழியும் பார்வையும் எது சொல்லவும் அவளை அச்சுருத்த அவளால் அமைதியாக மட்டுமே நிற்க முடிந்தது.

அப்பாவை தீர்க்கமாக பார்த்தவன், “இருபத்தி நாலு மணி நேரமும் இங்குட்டே இருந்து கண்காணிப்பீயளாப்பா நீங்க? உங்களுக்கு தெரியாம நிறைய நடந்து போயிட்டுது. அக்கா வூட்ல கூட இப்படி தனியா சமைக்கிற இடம் இருக்குதுன்ன? அப்படி நினைச்சுக்கோங்க. இத அப்படியே விடாம அலம்பல் பண்ணி நம்மூட்டு சண்டையை நாலு வூட்டுக்கு காட்சி பண்ணாம போங்கப்பா” என்றான்.

இனி மகனை தடுக்க இயலாது என புரிந்து தோளில் கிடந்த துண்டை தளர்வாக கையில் எடுத்து உதறியவர் வெளியில் சென்று விட்டார்.

ஏணி, கயிறு, தென்னம்பாளை நார், தென்னை ஓலையில் வேய்ந்த கீற்றுகள் என எல்லாம் தயாராக எடுத்து வந்தவன் மனைவிக்கான சமையலறையை உருவாக்க ஆரம்பித்தான்.

வீட்டின் மதில் சுவர் அருகில் நின்று எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு பெண்ணை பார்த்தவன், “என்ன அத்தாச்சி… இங்குட்டு என்ன சினிமாவா காட்டுறோம்? அண்ணனை வெறும் வயித்ததோட அனுப்பிடாம கஞ்சி கிஞ்சி காச்சுறது” என்றான்.

“அதெல்லாம் எப்பவோ ஆகிட்டு, இதென்ன சேரா… புதுசா வந்த சம்சாரத்துக்கு தாஸுமகால் எதுவும் கட்டுறியா என்ன? உன் அண்ணனும்தான் இருக்காரே… என் மாமியாகாரி கால புடிச்சுகிட்டு… ஹ்ம்ம்… என்ன இருந்தாலும் அசலூர்காரி கொடுத்து வச்சவன்தான்யா ” என கேலி பேசினார்.

“அங்குட்டு போ அத்தாச்சி, கண்ணு வைக்காத, ஆவாம போவ போவுது எம்பொண்டாட்டிக்கு. போ போயி என் அண்ணனை நல்லா கவனி, பொறவு அவரும் உன்னைய குறையில்லாம கவனிப்பாருன்ன?” என இவனும் கேலி பேசினான்.

“ம்ம்… அப்ப அசலூர்காரி உன்னைய நல்லா கவனிக்கிறான்னு சொல்லு. அவகிட்டயே நானும் பாடம் படிச்சுக்கிறேன்” விஷமமாக சொல்லி அங்கிருந்து சென்று மறைந்தாள் அந்த பெண்.

தலையில் அடித்துக் கொண்ட மதுரா கணவனை வெட்கமாக பார்க்க, அவன் இவளை கண்டு கொண்டால்தானே?

இருப்பினும் பக்கத்து வீட்டு அக்காவிடம் கணவன் கேலி பேசியதால் சரியாகி விட்டான் போலும் என நம்பிய மதுரா, “என்னங்க…” மெல்லிய குரலில் அழைத்தாள்.

“ம்ம்ம்…” என உறுமினான்.

“ரொம்பத்தான்…” முணு முணுப்பாக சொன்னவள் துணிந்து அவனது வியர்த்த உடம்பை புடவை முந்தானை வைத்து துடைத்து விட்டாள். கை வேலையை அப்படியே நிறுத்தியவன் அவளை பார்த்த பார்வையில் தானாக ஓரடி பின்னால் தள்ளி சென்றாள் மதுரா.

சேரன் மீண்டும் வேலையில் முனைப்பாகி விட அவனாக கோவம் தணிந்து வரட்டும், அப்போது வைத்துக் கொள்கிறேன் என நினைத்து மின்சார அடுப்பில் காபி தயாரித்து பிஸ்கட்களோடு அவனிடம் வந்தாள்.

கைகள் சுத்தம் செய்யாமல் காபிக் குவளையை எடுத்துக் கொண்டவன் பிஸ்கட்டையும் எடுக்க போக பட் என தட்டை தள்ளி பிடித்தாள். அவன் எரிச்சலாக பார்க்க கைகளை சுத்தம் செய்ய சொல்லி தண்ணீர் டேப்பை கண்களால் காட்டினாள்.

‘போடி!’ என்பது போல பார்த்தவன் பிஸ்கட்டை எடுக்காமல் வெறும் காபியை பருக, அவன் முன் வந்து நின்றவள் அவளே பிஸ்கட் எடுத்து காபியில் நனைத்து அவனிடம் நீட்டினாள். அவன் முகம் திருப்பிக் கொள்ள, மீண்டும் அவனது முகத்தின் முன் பிரசன்னம் ஆனாள்.

வீராப்போடு முழுதுமாக திரும்பி நின்றான் சேரன். விடாமல் மதுராவும் அவனுக்கு முன் வந்து பிஸ்கட்டை நீட்டினாள்.

அவளின் பாவமான முகத்தை கண்டவன் அவனை மீறி பிஸ்கட் சாப்பிட போக, ஊறிப் போயிருந்த பிஸ்கட் உடைந்து தரையில் விழுந்தது.

அவன் அவளை முறைக்க, “காலத்தோட சமாதானம் ஆகலைன்னா இப்படித்தான் வீணா போவும்” என அவனது முகம் பாராமல் கூறி மீண்டும் பிஸ்கட்டை காபியில் நனைத்து அவனுக்கு கொடுத்தாள்.

வாயில் வாங்கிக் கொண்டானே தவிர பேசவில்லை. சூடான காபி பருகியதில் சுறு சுறுப்பாக வேலையை செய்தான் சேரன்.

 சிறிது நேரத்தில் சின்ன மகனும் கணவனும் வந்து விடுவார்களே என நினைத்து எழுந்து சமையலறை வந்தார் கனகா. மதுரா மின்சார அடுப்பில் சேமியா கிச்சடி செய்து கொண்டிருக்க, அவளை வெறுப்பாக நோக்கியவர் பின் பக்கம் சென்று பார்த்தார்.

வீட்டின் சுவர் ஒரு பக்கம் இருக்க, மற்ற இரு புறமும் மேலேயும் தென்னை ஓலைகளால் அடைத்து வைக்க ஏதுவாக மூங்கில்கள் வைத்து கட்டி முடித்திருந்தான் சேரன்.

‘வெறும் அறை உருவாக்கி விட்டால் ஆகிற்றா? சமையல் செய்ய இடம் மட்டும் போதுமா? வேறெந்த வசதியும் இல்லாமல் இவனது வாய்க்கு ருசியாக என்ன சமைக்கிறாள் பார்க்கிறேன்’ என நினைத்தவர் சமைக்க சென்று விட்டார்.

சரவணனும் கந்தசாமியும் காலை உணவுக்கு வரும் போது முக்கால் வாசி வேலையை முடித்து விட்டான் சேரன். வரும் வழியிலேயே விஷயத்தை சின்ன மகனிடம் கந்தசாமி சொல்லியிருக்க, வந்து பார்த்த சரவணன் வியப்படையவில்லை.

முன்னர் வீட்டுக்கு வெளியில் இருந்த வாயிலுக்கு மரத் தட்டியால் செய்த கதவுதான் இருந்தது. மகன்கள் கல்லூரி படிப்பை முடித்த பின்னர்தான் நான்கு படுக்கை அறை வைத்து விசாலமாக வீடு கட்டினார் கந்தசாமி. அப்போதுதான் வீட்டை சுற்றி மதில் எழுப்பி இரும்பு கேட்டும் வைத்தார். ஆகவே அந்த பழைய மரத் தட்டி கதவு மாட்டு கொட்டகையில் சும்மாதான் சாத்தி வைக்க பட்டிருந்தது.

அதை எடுத்து வந்த சேரன் புதிய சமையல் அறைக்கு கதவாக்கிக் கொண்டிருக்க, சரவணனும் உதவினான். பின் தன் அறையில் கிடந்த மேசையை தம்பியின் உதவியோடு தூக்கி வந்து போட்டான்.

மின்சார அடுப்பு வைத்து உபயோகிக்க மின்சார இணைப்பு வேண்டும், மேலும் அதற்கான பிரத்யேக பாத்திரங்களும் வேண்டும். இந்த ஊரில் எப்போது மின்தடை ஆகுமென தெரியாது. வீட்டில் உள்ள பாத்திரங்களை எடுத்தாலும் கனகா விடுவாரா என்பது சந்தேகமே.

அனைத்தையும் யோசித்தவன் தம்பியிடம், “எனக்கு இன்னிக்கு வெளி வேலை இருக்குடா. தோப்பு வேலைய மட்டும் செழியன்கிட்ட பார்க்க சொல்றேன். மத்தது நீயே பார்த்துக்கடா” என்றான்.

“வேற என்ன செய்யணும் ண்ணா. உர மூட்டை வாங்கன்னு அப்பா கொடுத்த பணம் என் கைலதான் இருக்கு, உனக்கு வேணும்னா கொடுக்க சொன்னார்” என்றான்.

தானே கொடுத்தால் இப்போதிருக்கும் சூட்டில் வாங்க மாட்டான் என்பதால் சின்ன மகன் மூலமாக பெரிய மகனுக்கு பணம் கொடுக்க நினைத்தார் கந்தசாமி.

தம்பியை பார்த்து வலி நிறைந்த புன்னகை சிந்தியவன், “வேணாம் டா” என உறுதியாக சொல்லி விட்டான்.

அண்ணனை பற்றி நன்கறிந்திருந்த சரவணன் ஒரு ஆதங்க பார்வையோடு சாப்பிட சென்று விட்டான். சேரனும் குளித்து உண்ண வர மதுரா பரிமாறினாள்.

“நீயும் சாப்பிடு” என அவளின் முகம் பாராமல் சொன்னான்.

“அப்புறம் சாப்பிட்டுக்கிறேன்” என்றாள்.

சாப்பிடாமல் இருந்து விடுவாளோ என கவலை கொண்டவன், “சாப்பிடுன்னு சொன்னேன்” என அழுத்தமாக சொன்னான். மீற இயலாமல் மதுராவும் அவனுடனே சாப்பிட்ட ஆரம்பித்தாள்.

மற்ற நேரமாக இருந்தால் கனகாவின் வாய் பட படக்க ஆரம்பித்திருக்கும். சேரனின் நடத்தை அவரை பேச விடாமல் செய்திருந்தது.

உணவு முடித்து விட்டு அறைக்கு வந்தவன் சட்டை போட ஆரம்பிக்க அப்போதுதான் முந்தைய தினம் கணவனின் கையில் சூடு பட்டது அவளின் நினைவுக்கு வந்தது. வேகமாக அவனிடம் வந்தவள் அதி வேகமாக அவனது கையை பிடித்து பார்க்க சூடு பட்ட இடம் கன்றிப் போயிருந்தது.

இந்த கையை வைத்துக்கொண்டா சமையல் கொட்டகை அமைத்தான் என நினைத்தவளின் கண்கள் கலங்க, மனமும் பதறிப் போனது. தவிப்போடு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

‘வெடுக்’ என தன் கையை அவளிடமிருந்து பறித்துக் கொண்டவன் விடு விடு என அங்கிருந்து வெளியேறியிருந்தான்.

சுவரில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டவளின் கன்னமெல்லாம் கண்ணீரின் தடம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement