Advertisement

ஆள வந்தாள் -17

அத்தியாயம் -17(1)

வீட்டின் கதவை அடைத்து விட்டு சேரன் உள்ளே வர, அறையில் கட்டிலில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள் மதுரா. இவனை கண்டவள் வேகமாக முகத்தை அழுந்த துடைத்து விட்டு அப்போதும் அழுகையை அடக்க முடியாமல் வேறெதுவும் திட்டுவானோ என எண்ணி திரும்பி அமர்ந்து கொண்டாள். அவள் எத்தனை முயன்றும் அழுகை நின்ற பாடாக இல்லை.

துளி கூட அவளின் அழுகையை சகிக்க முடியா விட்டாலும் ‘என்னை பற்றி நினைக்காமல் எப்படி அவளின் சித்தியிடம் பேசினாள்? இங்கு நடப்பவற்றை நான் சரி செய்ய மாட்டேன் என எப்படி நினைத்தாள்?’ என்பதை தாண்டி இறங்க மறுத்தது அவனது கோவம்.

தன்னை நோக்கி ஒரு அடி கூட எடுத்து வைத்திராதவன் மீது இவளுக்கும் கோவம் கோவமாக வர அழுதே கரைந்தாள்.

இடுப்பில் கை வைத்து முறைத்து ஒரே இடத்தில் நின்றிருந்தவனுக்கு மெல்ல மனம் இளக ஆரம்பித்தது.

“பசிக்குது சாப்பாடு எடுத்து வைக்கிறியா என்ன?” என தணிந்த குரலில் கேட்டான்.

தன்னை சமாதானம் செய்யாமல் போனவனை சூடாக பார்த்தவள் அதே கோவத்தோடு எழுந்து சென்றாள்.

இவன் குளியலறை சென்று விட்டு வந்தான். அடுப்பில் இருந்த குழம்பு சூடாகியிருக்க தீயை அணைத்தவள் தட்டு, சாப்பாடு எல்லாம் கூடத்தில் வைக்க ஆரம்பித்தாள்.

குழம்பு இருந்த பாத்திரம் சூடாக இருப்பதை அறியாதவன் பொறுப்பாக வலது கையால் அதை தூக்கினான். நொடியில் சூடு தாளாமல் “ஆ…” என சத்தமிட்டுக் கொண்டே மீண்டும் அடுப்பிலேயே வைத்து விட்டான்.

“ஆக்க பொறுத்தவன் ஆற பொறுக்க மாட்டானாம். எனக்கு வாச்சதுக்கு எதுக்குமே பொறுமை கிடையாது” வசை பாடிக் கொண்டே அவனது கையை பிடித்து பார்த்தாள்.

வலது கை விரல்கள் கோடு போட்டது போல சிவந்து கிடந்தன. “உங்கள யாரு செய்ய சொன்னது?” எனக் கேட்டுக் கொண்டே வாஷ் பேசின் டேப்’பை திறந்து விட்டு அவனது கையை தண்ணீரில் காட்டினாள்.

“அடி போடி, வந்திட்டா நெருப்பு காயத்துக்கு தண்ணி வுட. உள்ளுக்குள்ள அவியுதே என்ன செய்ய நான்?” காயம் தந்த எரிச்சலின் காரணமாக இவனும் எரிந்து விழுந்தான்.

“வார்த்தையால வதைக்குறதுக்கு ரெண்டு அடி அடிச்சிடலாம்” என இவளும் கோவப்பட்டாள்.

“சேரன் கை நீட்டம்தான். அதுக்குன்னு பொம்பள புள்ளய அதுவும் கட்டினவள அடிக்கிற அளவுக்கு தரம் கெட்டவன் கிடையாது” என்றவனின் இடது மார்பில் சுள் என அடி வைத்தாள்.

“இன்னும் கூட வேகமா அடி, உள்ள இருக்க மனசு எப்பவோ மறத்து போச்சு” என அவன் சொல்ல, அவளின் கண்களில் மீண்டும் நீர் கோர்த்தது.

“ஏன் அழுதிட்டே இருக்க, வேண்டுதல் வச்சிருக்கியா, நான் என்னடி சொன்னேன் உன்கிட்ட? அழுவணும்னா…” சட்டென அவனது வாயை தன் கையால் பொத்தியவள், “அப்படி ஒரு நிலைமை எனக்கொன்னும் வர போறது இல்ல. நீங்க பேசுற பேச்சுக்கு நீங்கதான் பொண்டாட்டி இல்லாம…” என சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளின் தாடையை இடது கையால் அழுந்தப் பிடித்து அவளையும் பேச விடாமல் செய்தான்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்வையால் சுட்டு பொசுக்கிக் கொண்டிருந்தனர். அரை நிமிடம் கழிந்ததும் சேரனின் நெடிய மூச்சில் அவனது மார்புக் கூடு ஏறி இறங்கியது.

“ஒன்னும் இல்ல விடு விடு. சிறு குடல பெருங்குட திங்குது. சோத்த போடு” என சொல்லி தன் கையை தண்ணீரிலிருந்து விலக்க போனான்.

“ரெண்டு நிமிஷம் குடலும் குடலும் தின்னுகிட்டும். தரையில போட்ட கெளுத்தி மீனு கணக்கா துள்ளாம சும்மா நில்லுங்க” என அதட்டியவள் நீருக்கடியிலேயே அவனது கையை வைத்து கெட்டியாக பிடித்துக்கொண்டாள்.

ஐந்து நிமிடங்களில் கையை விடுவித்துக் கொண்டு கூடம் சென்று விட்டான். அவனுக்கு சாப்பாடு பரிமாறியவள் சரவணன் அவளுக்கு ஊற்றி வைத்திருந்த தோசையை சாப்பிட ஆரம்பித்தாள். பொதுவாக நல்ல கார சாரமாகத்தான் இருக்கும் கனகாவின் சமையல்.

சேரனின் கையில் நல்ல காயம் இல்லை என்ற போதிலும் காரமான சாப்பாட்டை அள்ளி எடுத்து சாப்பிட சிரம பட்டான். திகு திகு என எரிந்தன விரல்கள். அப்படியும் அவளிடம் உதவி கேளாமல் கையை உதறி உதறி அவனே சாப்பிட்டான்.

பார்த்திருந்தவள் அவளே பிசைந்து அவனுக்கு ஊட்ட போக, வாய் திறவாமல் முகம் திருப்பிக் கொண்டான்.

“கை எரியுதுதான, எப்படி சாப்பிடுவீங்க? இப்ப ஊட்டிகிட்டு அப்புறமா முறைச்சுக்கோங்க” என்றாள்.

விருட் என எழுந்து சமையலறை சென்றவன் ஸ்பூன் எடுத்து வந்து அதைக் கொண்டே சாப்பிட்டான். இறுகிய முகத்தோடு பார்த்திருந்தவள் அவளது உணவுத் தட்டை தள்ளி வைத்து விட்டாள். இவனும் அவனது சாப்பாட்டு தட்டை தள்ளி வைத்தான்.

ஒரு நிமிடம் ஆகியும் அவள் சாப்பாட்டை கையில் எடுக்காமல் போக அவன் எழப் போனான். எரிச்சல் கொண்டாலும் அவள்தான் இறங்கி வர வேண்டியிருந்தது. மீண்டும் அவள் சாப்பிட ஆரம்பிக்கவும்தான் அவனும் சாப்பிட்டான்.

உறங்க அறைக்கு வரவும் தன்னை விட்டு தள்ளியே படுக்க கூடாது என அவன் சொன்னது நினைவில் வர வேண்டுமென்றே நாற்காலியில் ஏறி நின்று பீரோ மேலே கிடந்த பாயை எடுத்து தரையில் விரித்தாள். பார்த்திருந்தாலும் வாயே திறக்கவில்லை அவன்.

அவனது இந்த கண்டு கொள்ளாமையில் ஆத்திரமும் அழுகையும் போட்டி போட்டுக் கொண்டு வந்தாலும் “இனி நாமும் பேசக்கூடாது, முக்கியமாக அழவே கூடாது” என தீர்மானம் கட்டியவளாக பாயில் படுத்து விட்டாள்.

இருவருக்கும் உறக்கம்தான் வருவேனா என்றது. அவளாவது முதுகு காண்பித்து படுத்திருந்தாள். இவன் புரண்டு கொண்டிருந்தான். வா என ஒரு வார்த்தை சொன்னால் கூட அவனிடம் சென்று விடும் எண்ணத்திலதான் அவள் இருந்தாள். வீணாய் போன சேரனின் ஈகோ தன்னுடன் வந்து படுக்கும் படி அவளை அழைக்க மறுத்து விட்டது.

இப்படியாக பிணக்கு தீர்க்கப் படாமலே போக நடு இரவில் உறங்கி விட்டனர். விடிந்த பின்னர் கூட அவளிடம் முகம் கொடுத்து பேச மறுத்தான் வீம்பு பிடித்தவன். இரவில் வீம்பு பிடித்தவளுக்கு இப்போது தாள முடியவில்லை, சுணங்கிய மனதுடன் நடமாடிக் கொண்டிருந்தாள்.

கனகா காபி தயாரித்து சேரனுக்கு தர, “மதுரா…” என வீடு அதிர கூவி அழைத்தான்.

பின் பக்கம் கூட்டிக் கொண்டிருந்தவள் வேகமாக வந்து நிற்க, “பச்ச தண்ணியா இருந்தாலும் உன் கையால கொடு. இல்லன்னா இந்தூட்டுல சாப்பிட மாட்டேன்” என அம்மாவுக்கும் சேர்த்து அறிவித்தான்.

பதறிப் போன கனகா வார்த்தை வராமல் விக்கித்து போய் மகனை பார்க்க, மதுராவும் அதிர்ச்சியாகத்தான் கணவனை பார்த்திருந்தாள்.

தன் மனைவி சாப்பிட அளந்து கொடுக்கும் அன்னைக்கு தானும் தன் மனைவியும் வேறல்ல என்பதை புரிய வைக்க அவனுக்கு வேறு வழி தெரியவில்லை.

“என்னடி காது அவுட் ஆகிட்டா?” என அப்படியே நின்றிருந்த மனைவியிடம் சீற்றமாக கேட்டான்.

மதுரா வேகமாக தண்ணீர் எடுத்து கொடுக்க, வாங்கிக் கொண்டவன், “காபி போடு” என சொல்லி தண்ணீரை குடித்து விட்டு மாட்டுக் கொட்டிலுக்கு சென்று விட்டான்.

“பாவி சிறுக்கி! என்னன்னு சொல்லி எம்மூட்டு மவன என் கையால சாப்பிட கூடாதுன்னு சொல்ல வச்ச? உன் மூடு மந்திரத்த காட்டிபுட்டீன்ன?” என ஆரம்பித்தார் கனகா.

இனி இவர் பேசுவதை எல்லாம் பொருள் செய்யவே கூடாது என எண்ணியவள் காபி தயாரிக்க போக, வெடுக் என அடுப்பை அணைத்தவர், “ஏது உன் பொறந்த வீட்லேருந்து கொண்டாந்த அடுப்பா இது? இங்குட்டு உன் அரசாக்கினை செல்லாதுடி” என்றார்.

சரவணன் எப்போதோ வெளியில் சென்றிருக்க, கந்தசாமி அப்போதுதான் வெளி செல்ல தயாரானவர் சமையலறையில் மனைவியின் சத்தம் கேட்டு என்னவென வந்து பார்த்தார்.

கணவனை கண்ட கனகா, “அவன் என் கையால சாப்பிட மாட்டானாம், என்னன்னு கேளுங்க செத்த” என தவிப்பாக சொன்னார்.

“எங்க ஆயி அவனை? கூட்டிட்டு வா” என மருமகளிடம் கந்தசாமி சொல்ல, அவளும் கணவனிடம் சென்று சொன்னாள்.

“உங்கிட்ட காபி கேட்டேன்னடி? எங்க அது?” சாணத்தை அள்ளி கொட்டி கொண்டே கேட்டான்.

“போட விட்டாத்தானே இந்த வீட்டு ராஜமாதா? அடுப்பு அவங்களோடதாம், நான் தொடக் கூடாதாம். நீங்க முதல்ல மாமாகிட்ட என்னன்னு வந்து கேளுங்க, நான் கரண்ட் அடுப்புல போட்டு தர்றேன்” என்றாள்.

கையில் இருந்த கூடையை ஆவேசம் பறக்க தூக்கி போட்டவன் கைகளை சுத்தம் செய்து தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து தோளில் போட்டுக் கொண்டே அப்பாவிடம் சென்றான்.

“என்னடா நடக்குது இங்குட்டு? நேத்து வனராசன் கூட எதுக்கு சண்டை, இப்ப உன் அம்மாகிட்ட எதுக்கு சண்டை?” என பொறுமையாக கேட்டார் கந்தசாமி.

அப்பாவிடம் பேசாமல் மனைவியை பார்த்தவன், “ஏட்டி போ போயி காபி போடு” என்றான்.

கணவனை மனதிற்குள் கடிந்து கொண்டே மின்சார அடுப்பின் அருகில் சென்றாள் மதுரா.

“அடுப்புக்கு போடி!” என கட்டளை இட்டான்.

மாமனார் முன்னிலையிலேயே கணவனை பகிரங்கமாக முறைத்தவள் ‘செல்ல மாட்டேன்’ என்பதாக நின்ற இடத்திலேயே நின்று கொண்டாள்.

“என்னடா செஞ்சிட்டு இருக்கீய?” ஒன்றும் புரியாமல் கேட்டார் கந்தசாமி.

“ஹான்… உங்க சம்சாரம் என் சம்சாரத்துக்கு அடுப்பு விடாதாம், அங்குட்டு கேளுங்க என்னன்னு” என்றவன் அம்மாவின் பக்கம் கூட திரும்பவில்லை.

கனகாவை பார்த்தார் கந்தசாமி. மகனின் புறக்கணிப்பை தாங்க முடியாத கனகா, “நான் கேட்டத கேளுங்கன்னா என்னைய என்ன பாக்குறீய? இது என் வூடு, இது என் சமைய கொட்டா. நான் எவளுக்கும் வுட்டுத் தர மாட்டேன்” என ஆங்காரமாக கூறினார்.

“அடி அறிவு கெட்டவளே! இருக்கிற அரை குறை புத்தியையும் வித்து தின்னிட்டியாங்குறேன்?” என நாக்கை மடித்துக் கொண்டு மிரட்டலாக கேட்டார் கந்தசாமி.

“அடி மகமாயி! முப்பத்தாறு வருஷம் குடும்பம் பண்ணின என் புருஷனையே எனக்கெதிரா மாத்திட்டாவோளே… இது அடுக்குமா?” நெஞ்சில் அடித்துக் கொண்டு அலறினார் கனகா.

“இந்தா ச்சீ! வாய மூடுடி, என் தலையில இடியா வுழுந்திட்டு? வூட்டு மானம் சிரிப்பா சிரிக்க போவுது” என கந்தசாமி அதட்டல் போட்டு மனைவியை அடக்க பார்க்க, விரைந்து பின் பக்கம் சென்றான் சேரன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement