Advertisement

அத்தியாயம் -16(2)

பசி மறத்து போயிருக்க சாப்பாடு என்பதை மறந்தே போயிருந்தான் சேரன். தென்னந்தோப்பில் போர் செட்டில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்க அங்கிருந்து எல்லா தென்னை மரங்களுக்கும் நீர் செல்ல வசதியாக வகை செய்ய பட்டிருந்தது.

நாடா கட்டில் ஒன்று தோப்பின் மத்தியில் கிடக்க அதில்தான் படுத்திருந்தான் சேரன். மதுராவின் தரப்பிலிருக்கும் நியாயத்தை புரிந்து கொள்ள முடியவில்லை அவனால். அவளுக்காக அப்பாவிடமிருந்தே விலக துணிந்து விட்டான். அவளோ அவன் மீதான நம்பிக்கையை துறந்து விட்டாள்.

அவளுக்கு என்னென்ன செய்ய வேண்டும், எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கற்பனைகள் எல்லாம் தள்ளி நின்று அவனை கேலி பேசியது போலிருந்தது.

அறையில் தரையில் அமர்ந்திருந்தவள் அப்படியே கட்டிலில் தலை சாய்த்து உறங்கிப் போயிருந்தாள். கழுத்தில் வலி எடுக்கவும் தானாக விழிப்பு வர கணவனைத்தான் கண்கள் தேடின.

சேரனின் கைப்பேசிக்கு அழைப்பு விடுத்து அழைப்பு விடுத்து சோர்ந்துதான் போனாள். மதுராவும் இன்னும் மதிய உணவு சாப்பிட்டிருக்கவில்லை. அதனால் லேசாக கண்களை சுழற்றியது. அறையிலிருந்த தண்ணீரை பருகிக் கொண்டவள் மீண்டும் சேரனுக்கு அழைத்தாள்.

அழைப்பை ஏற்றவன், “உன் நிம்மதி என் கைல இல்லன்னு சொல்லிட்டீன்ன, வார்த்தை செமிக்க டைம் வேணாமா எனக்கு? எதுக்குடி இப்படி நொய் நொய்யுங்கிற?” என சீற்றம் குறையாமல் கேட்டான்.

வேறெந்த விளக்கம் கொடுக்கும் அளவுக்கு அவளிடம் சக்தியில்லாத காரணத்தால், “சாப்பிட்டீங்களா?” என மட்டும் கேட்டாள்.

“என்னைய கொஞ்ச நேரம் தனிமையில விடு மதுரா” என்றவன் அழைப்பை துண்டித்து விட்டான்.

மதுராவும் அண்ணனும் சாப்பிட்டிருக்கவில்லை என கனகாவை தவிர யாருக்கும் தெரியவில்லை. சரவணனும் கந்தசாமியும் மீண்டும் வெளியில் சென்று விட்டனர்.

அறையை விட்டு வெளியில் வந்த மதுராவுக்கு சாப்பிடவே பிடிக்கவில்லை. எப்பொழுதும் போல அவளுக்காக பத்து பாத்திரங்களும் பெருக்காத வீடும் காத்து கிடந்தன.

வந்த கோவத்தில் அப்படியே போட்டு விட்டு மீண்டும் அறைக்கு சென்று விட்டாள்.

“யாருடி செய்றது இதையெல்லாம்? நானா உன்னை சாப்பிடாதன்னு சொன்னேன்? ஏன் இத வச்சு அவன்கிட்ட இன்னும் மூட்டி கொடுக்கலாம்னு வெறும் வயித்தோட கெடக்கியா? அதான் எம்மூட்டு மகன பட்டினி போட்டு அனுப்பி வச்சிட்டீன்ன? வா வந்து வக்கனையா தின்னுட்டு பாத்திரத்தை துலக்கி போடு” என கனகா சத்தமிட, பட்டென கதவை அடித்து சாத்தி விட்டாள்.

தன் முகத்தில் அறை விழுந்தது போல உணர்ந்த கனகா உடனடியாக சேரனுக்கு அழைத்து விட்டார்.

ஏற்க வேண்டாம் என முதலில் நினைத்தவன் இரண்டாவது முறையாக அழைப்பு வரவும் ஏற்று கைப்பேசியை காதில் வைத்தான்.

“மரியாதை தெரியாத சிறுக்கி, கதவ அடிச்சு சாத்துறாங்குறேன்” என ஆரம்பித்தார் கனகா.

எரிச்சலடைந்தவன், “ஆரம்பிச்சிட்டியா நீ? உன்னாலதான்… உன்னாலதான் எல்லாமே, இனி ஒரு வார்த்தை என்கிட்ட பேசக் கூடாது நீ சொல்லிப்புட்டேன்” என இரைந்து கைப்பேசியை அணைத்தும் வைத்து விட்டான்.

இப்போது மதுரா மீண்டும் கணவனுக்கு அழைப்பு விடுக்க, அணைத்து வைக்க பட்டிருப்பதாக தெரிய வர தன்னை தவிர்க்கதான் இப்படி செய்கிறான் என நினைத்து இன்னும் அழுதாள்.

காளியப்பனின் கடையில் என்ன சண்டை என விளக்கமாக தெரிந்து கொண்ட கந்தசாமிக்கு மனம் சரியில்லை. ஆறு மணிக்கெல்லாம் வீடு வந்து விட்டவர் தலைவலிக்கிறது என சொல்லி அப்போதே பெயருக்கு ஏதோ சாப்பிட்டு விட்டு உறங்க சென்று விட்டார்.

சரவணன் வீடு திரும்பிய பின்னர் அவனுக்கு சாப்பாடு போட்டு விட்டு மருமகளை கண்டு கொள்ளாமல் கனகாவும் உறங்க சென்று விட்டார்.

நல்ல பசியில் இருந்தவன் சாப்பிட்டு முடித்த பின்னர்தான் அண்ணியின் நடமாட்டம் இல்லாததை உணர்ந்தான்.

அண்ணன் வீட்டில் இல்லை என்பது அவனது பைக் வெளியில் இல்லாத போதே தெரியும். பல சமயங்களில் இப்படி பின்னேரமாக சேரன் வீட்டுக்கு வருவது வாடிக்கைத்தான் என்பதால் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டான்.

ஆனால் இப்போது அப்படி விட முடியவில்லை. வனராஜனுடன் பிரச்சனை ஆனது வைத்து அண்ணன் அண்ணிக்குள் சண்டை போல என நினைத்தவன் மதுரா இருந்த அறைக் கதவை தட்டினான்.

கணவன்தானோ என நினைத்து வேகமாக கதவை திறந்தவள் ஏமாற்றத்தோடு சரவணனை பார்த்தாள்.

அவளின் முகமே அழுதிருக்கிறாள், வெகுவாக சோர்ந்து போயிருக்கிறாள் என அவனுக்கு உணர்த்த, வேறு எதுவும் கேளாமல், “சாப்பிட வாங்க அண்ணி” என்றான்.

“அவர் வரட்டும்” என மெல்லிய குரலில் சொன்னாள்.

“அண்ணன் தென்னந்தோப்புல இருக்கிறதா சாயங்காலம் சேதி தெரிஞ்சது அண்ணி. இப்பவும் அங்குட்டுத்தான் இருப்பாரா இருக்கும். வீட்டுல எதுவும் சண்டைன்னா அப்படித்தான் செய்யும் அண்ணன்” என்றான்.

“தூங்க இங்க வர மாட்டாரா?” என கேட்டவளுக்கு என்ன பதில் சொல்வதென அவனுக்கு தெரியவில்லை. இது போன்ற மனஸ்தாபங்கள் ஏற்படும் சமயங்களில் நாள் கணக்கில் வீட்டுக்கு வராமல் இருப்பவன் சேரன்.

அதை அண்ணியிடம் சொல்லி இன்னும் கலவர படுத்த விரும்பாதவனுக்கு பரிதவிப்போடு நிற்பவளைப் பார்க்க இரக்கமாக இருந்தது.

“மொதல்ல சாப்பிடுவியளாம். வாங்க” என வற்புறுத்தி அழைத்து சென்றான்.

அவனே தோசைகள் ஊற்றி தட்டில் வைத்து கொடுக்க, அவளின் கவனத்தில் எதுவுமே பதியவில்லை. நினைவெல்லாம் கணவனை சுற்றியே வந்தது.

“சாப்பிட்டுட்டே ரோசிங்க அண்ணி” என்றான்.

ஒரு வில்லை தோசையை கிள்ளி எடுத்தவள் வாயில் வைக்க, தொண்டை அடைப்பட்டது போலிருந்தது.

பார்த்திருந்தவன் தட்டை வாங்கி சமையல் மேடையில் வைத்து இன்னொரு தட்டு போட்டு மூடினான்.

“மனசு கனத்து கெடந்தா சாப்பாடு செல்லாதுதான் அண்ணி. என்னன்னு என்கிட்ட சொல்லுங்க அண்ணி” என்றான்.

யாரிடமாவது சொன்னால் தேவலாம் போலதான் அவளுக்கும் இருந்தது. ஏற்கனவே சித்தியிடம் இப்படி சொல்லப் போய்தான் பிரச்சனை எங்கோ வந்து நிற்கிறது என எண்ணி பயந்து வாய் திறக்க மறுத்தாள்.

“உங்க வீட்டுக்காரரோட தம்பியா பார்க்காதீய அண்ணி. உங்க ஃப்ரெண்ட்டா நினைச்சு சொல்லுங்க. கேட்டுக்க மட்டும்தான் செய்வேன், ஒரு வார்த்தை வெளில விட மாட்டேன்” என தீர்க்கமான குரலில் சொன்னான் சரவணன்.

செல்வி மூலமாக தெரிந்த கந்தசாமி சேரனிடம் நடந்து கொண்ட விஷயத்தையும் தோப்பு குத்தகைக்கு எடுக்க போவது, கார் வாங்க போவது, நண்பர்கள் உதவ போவது, சேரனிடம் பணமில்லாமல் நகை கொடுத்தது என அனைத்தையும் சொல்லி விட்டாள்.

சரவணனுக்கு நாக்கு உலர்ந்து விட்டது. அண்ணனை நினைத்து கவலையாகிப் போனது.

தொடர்ந்து சித்தியிடம் பேசியதை சொன்னவள், “சத்தியமா அவருக்கு தலைக்குனிவு ஏற்படுத்த சொல்லலை நான். எனக்காகதான் அவர் கஷ்ட படுறார். அவரோட ஃப்ரெண்ட்ஸ் ஹெல்ப் பன்றாங்க. என்னால அவருக்கு என்ன செய்ய முடியும், அதனாலதான் என்னால முடிஞ்ச எனக்கு தெரிஞ்ச வகையில ஏதோ செய்ய போய்… ப்ச்… என் அண்ணன் அவரை ஏதோ தப்பா பேசிட்டு போல. எனக்கும் அவருக்கு புரியுற மாதிரி இதையெல்லாம் சொல்ல தெரியலை. அவரை நான் நம்பலன்னு என்னென்னவோ பேசிட்டார்” என்றவளின் கண்களில் கண்ணீர் கொட்டியது.

யாரை தவறு சொல்ல என சரவணனுக்கும் தெரியவில்லை. ஆனால் நடந்த விஷயங்கள் அவனுக்குள் பீதியை தருவித்திருந்தது. அவனுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் நேராக அண்ணனிடம் போய்தான் நிற்பான். அலட்சியமாக ‘இதெல்லாம் ஒரு விஷயமா? நான் பார்த்துக்கிறேன்’ என சொல்லும் சேரன் கண்களுக்குள் வந்து போனான்.

மதுராவின் கண்ணீர் நிற்காமல் வழிய, “அழாதீய அண்ணி. அண்ணனுக்கு நீங்கன்னா… எப்படி சொல்ல அண்ணி. அவர் மனசுல நீங்க…” ஆறுதலாக ஏதோ அவன் சொல்லப்போனான்.

“எனக்கும் அவர் அப்படித்தான். சொல்லப் போனா அவர் என்னை எந்த இடத்துல நினைக்கிறாரோ அத விட மேலதான் எனக்கு அவர்” என்றாள்.

சரவணனுக்கு நெக்குருகிப் போய் விட்டது. இத்தனை அன்பிருக்கும் இருவரை ஏன் இப்படி நிம்மதியாக வாழ விடாமல் அனைவரும் படுத்தி எடுக்கிறார்கள் என ஆதங்கமாக நினைத்துக்கொண்டவன், “கவலை படாதீய அண்ணி. நான் சொல்றேன், நல்லா இருப்பீய ரெண்டு பேரும்” என்றான்.

புடவை முந்தானை வைத்து கண்களை துடைத்துக் கொண்டவள், “என்னை அவர்கிட்ட அழைச்சிட்டு போறீங்களா?” எனக் கேட்டாள்.

அவன் சாப்பாட்டை பார்க்க, “அவரோட சேர்ந்து சாப்பிட்டுக்கிறேன். அவர் இல்லாம…” மீண்டும் வெடித்த அழுகையை மூக்குறிந்து அடக்கியவள், “எனக்கு பார்க்கணும் அவரை” என கர கரத்த குரலில் சொன்னாள்.

அதற்கு பின் சரவணன் யோசிக்கவில்லை. கிளம்ப சொல்லி விட்டான். சரவணன் பைக் சாவி எடுக்க செல்ல, வாயிலில் வந்து நின்றாள் மதுரா.

சேரனின் பைக் கேட்டிற்கு வெளியில் வந்து நின்றது. அவன் கேட் திறக்க இறங்குவதற்குள் வேகமாக ஓடி சென்று கேட்டை திறந்து விட்டவள் வெளியில் வந்து அவன் பக்கத்தில் வந்து அவனை பார்த்தாள்.

இன்னுமே கடு கடு என்றே இருந்தவன் அவளை கண்டு கொள்ளாமல் பைக்கை உள்ளே விட்டான்.

அவள் அங்கேயே தேங்கி நிற்க, வெளியில் வந்த சரவணன் அண்ணனை கண்டு முதலில் நிம்மதி மூச்சு விட்டு பின் கோவமாக, “நீ தனியாளு இல்ல ண்ணா. அண்ணி படுற பாட்ட கண் கொண்டு சகிக்க முடியலை. நீயும் உன் கோவமும்… போ ண்ணா” என சொல்லி உள்ளே சென்று விட்டான்.

இன்னும் தன் மனைவி கேட்டை தாண்டி வரவில்லை என்பதை பார்த்தவன் திண்ணையின் மாடத்தில் இருந்த பூட்டு சாவியோடு சென்றான்.

கேட்டிற்கு வெளியில் நின்றவளை கை பிடித்து உள்ளே இழுத்து விட்டவன் கேட்டை பூட்டி ஒரு அடி எடுத்து வைத்தான்.

அவள் சட்டமாக அங்கேயே நிற்க, சலிப்பாக அவளை பார்த்தவன், “உனக்கு வேணும்னா எம்மேல நம்பிக்கை இல்லாம இருக்கலாம். என்னை நம்பி வந்தவன்னுதான் என் மனசுல பதிஞ்சு கெடக்கு. அதனாலதான் கோவத்தையும் ரோஷத்தையும் வுட்டு தொலைச்சிட்டு திரும்பவும் உன்னைய தேடி வந்திருக்கேன்” என்றான்.

நன்றாக பதில் தர அவளின் நாக்கு துடித்தாலும் உணர்ச்சி மிகுதியில் பேச்சு வருவேனா என்றது.

“மத்தவய்ங்க சொல்ற மாதிரி உன் கையை புடிச்சு கடத்திக்கிட்டு வந்து, நீ சொல்ற மாதிரி பொறுமை இல்லாம உன்னை கட்டாய படுத்தி நான்தானே கட்டாய தாலி கட்டினேன்? உனக்கு பொறந்த வூடு இல்லாம ஆக்கிட்டேன். புகுந்த வூட்டுல மரியாதை இல்லாம செஞ்சிட்டேன்? எல்லாமே நான்தானே செஞ்சேன்? இதுக்கு பொறவும் நான் சொல்றதுதான். போடி உள்ள…” அடித் தொண்டையில் உறுமினான்.

கண்ணீர் திரள அவள் முறைக்க, முஷ்டியை இறுக்கிக் கொண்டவன், “ஒப்புறானா சத்தியமா சொல்றேன் இனிமே அழுவணும்னா என் பாடையில வுழுந்து அழுது தொலடி” என சூடான வார்த்தைகளை பிரயோகித்தான்.

நெஞ்சில் கை வைத்து அதிர்ந்தவள் துளியும் இளக்கம் இல்லாத அவனது கோவ பார்வையில் இன்னும் மனதொடிந்து வீட்டுக்குள் ஓடிச் சென்றாள்.

Advertisement